பரிதியின் பவித்ரமே -10
உலகநாதனுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் தான் பவித்ராவின் திருமணம் ஏற்பாடாகியிருந்தது.
கோதாவரி அவ்வப்போது முணுமுணுத்தாலும் திருமண வேலைகளை கணவனுக்கு பயந்து கொண்டு செய்தார். மகள்களின் குடும்பத்தினரோ உலகநாதனிற்கு பயந்து வந்து கலந்து கொண்டனர். வசுதாரணியின் தந்தை பாண்டித்துரை காவேரியிடம் பேசியதோடு சரி மாமனாரிடம் பம்மி பம்மியே பேசினான். இதற்கெல்லாம் எதிர்வினை காட்டினால் பிறகு உள்ளதிற்கும் பங்கம் வந்து விடுமே. பிறகு எங்கே மாமனார் வீட்டு சீதனமும் சலுகையும் கிடைக்க. அதிலும் வசுதாரணியை திருமணம் செய்து கொடுக்கும் பொறுப்பை வேறு உலகநாதன் தான் ஏற்று இருக்கிறார். அதிலும் உலகநாதன் இப்படி ஊரறிய இதனை செய்கிறார் என்றால் காரணம் இல்லாமல் இருக்காது என்றும் அவனுக்குத் தோன்றியது.
**********
"டேய் அருளு ஆனாலும் அந்த மனுசனுக்கு இவ்வளவு ஆணவம் இருக்கக் கூடாது டா. யாரைப் பத்தியும் கவலைப்படாம இன்னொரு குடும்பத்தை உருவாக்கி அந்த பொண்ணுக்கு மொத பொண்டாட்டி வச்சே சொந்த ஊரில் கல்யாணம் பண்ணி வைக்கிறாரு பாரேன்"என்று உலகநாதனைப் பற்றி பேசியபடியே வந்தான் பரிதி.
"என்னவோ பிரச்சினை போலண்ணா... என் பொண்டாட்டி கிட்ட விசாரிச்சா மென்று முழுங்கி பேசுனா...ஆனா ஏதோ பெருசா நடந்திருக்கு அதான் மானம் மரியாதை பத்தி கவலைப்படாம இங்கே கல்யாணத்தை வைக்கிறாரு"என்று அருள் கூற
"ஏதோ ஒண்ணு பாவம் அந்த குடும்பத்துக்கு இது மூலமா ஒரு விமோசனம் கிடைச்சிருக்கும்"என்றான் இவன்.
"நீ சொல்றதும் உண்மை தான் ண்ணா. அந்த பொண்ணுக்கு ஒரு மரியாதை கிடைக்கும் இனி. எவ்வளவு பிரச்சினை இதனால ஃபேஸ் பண்ணுச்சோ"என்ற அருள் தனக்குத் தெரிந்த தகவல்களை எல்லாம் சொல்லி விட்டு "அண்ணா இன்னைக்கு உங்களுக்கு பார்த்த பொண்ணும் கல்யாணத்துக்கு வரும். பார்த்து பேசுங்க"என்றான்.
"சரிடா பேசுறேன்"என்றவனுக்குள் ஏகப்பட்ட தயக்கம் உருவானது. கொஞ்சம் வெட்கமாகவும் இருந்தது.
**************
பவித்ரா அடமாய் தயார் ஆக மாட்டேன் என்று அமர்ந்திருக்க கோதாவரிக்கே கோபம் வந்துவிட்டது.
"தெருவுல கெடந்ததை கோபுரத்தில் வைக்க நெனைச்சா அது மறுவடி தெருவுக்கே போவேன்னு நிக்குது பாரு. ஏய் மரியாதையா பொடவைய மாத்து இல்ல நடக்கிறதே வேற"என்று கத்த
"நானா வைக்க சொன்னேன். இந்த கல்யாணத்தை நான் கேட்டேனா...?மொதல்ல நீங்க யாரு என்னை மிரட்டறதுக்கு"என்று பதிலுக்கு இவள் எகிற, பாவம் மாதவியின் நிலைமை தான் பரிதாபமாக இருந்தது.
அதற்குள் உலகநாதன் உள்ளே வந்தவர் "மாதவி கணேஷை போய் வரச் சொல்லு"என்று மாதவியை அனுப்பி வைத்தவர் இரண்டாவது மகள் யமுனாவிடம் திரும்பி"யமுனா போய் உன் சித்தியை மேற்கால ரூமில் வச்சு பூட்டிட்டு வா."என்றார் வேகமாக
யமுனா அதிர்ந்து போய் "அப்பா அது நெலவறை"என்றாள் கலவரமாக
"இருக்கட்டும் ஒண்ணு இவ இந்த கல்யாணத்துக்கு தயார் ஆகணும் இல்லை அவ ஆத்தா எழவுக்கு தயார் ஆகணும். ஏற்கனவே அவளுக்கு ஆஸ்துமா இருக்கு மூச்சடைச்சு போய் சேரட்டும். கணேசனை எப்படி வழிக்கு கொண்டு வரணும்னு எனக்குத் தெரியும்"என்றார் மிதப்பாக
"நீங்க எல்லாம் மனுசனே கிடையாது"என்று கத்திய பவித்ராவை நக்கல் பார்வை பார்த்து விட்டு "எனக்கு முதலில் என் கௌரவம் முக்கியம் அப்புறம் தான் ஏதா இருந்தாலும்"என்றவர் "பேசிட்டே இருக்காம கெளப்பற வழிய பாரு கோதாவரி"என்று சொல்லி விட்டு போக அங்கிருந்த பெண்கள் அனைவருக்குமே அத்தனை ஆத்திரம்.
"ஏய் ரெடி ஆகுடி"என்று பவித்ராவை அதட்டியவர் வெடுக் வெடுக்கென்று தலையை அவிழ்த்து விட வலி பொறுக்காமல் "நானே எடுத்துக்கிறேன்"என்று கண்கள் கலங்க பின்களை கழற்றினாள் பவித்ரா.
' இப்படி மிரட்டி கல்யாணம் பண்ணி வைக்கிற அளவுக்கா இருப்பா பொட்டப்புள்ள 'என்று ஆற்றாமையில் அவளைப் பார்த்தார் கோதாவரி.
ஒரு வழியாக தயார் ஆகி வந்தவளை மணமேடையில் அமர்த்த வந்த உறவினர்கள் கூட்டம் ஆளாளுக்கு ஒன்றை முணுமுணுத்தது.
'இந்த மனுசனுக்கு இம்புட்டுக்கு தைரியம் ஆவாது. பாவம் கோதாவரி'என்றனர் சிலர்.
"வைப்பாட்டியா வச்சுக்கிட்டாலும் அவ பெத்த பிள்ளைக்கு ஊரறிய கல்யாணம் பண்ணி வைக்கிறாரே பெரிய மனுஷன் தான்"என்று சிலரும் சொல்ல மணமகன் யார் என்று பார்க்கும் ஆவலில் சிலர் இருந்தனர்.
காவேரியோ"எங்க கலியாணம் எல்லாம் கூட இம்புட்டு வவுசா நடக்கலம்மோவ். இவளுக்கு இவ்வளவு செலவு பண்றாரு அப்பா"என்றாள் பொடுபொடுத்து
"அக்கா பேசாம இருக்க மாட்ட"என்று யமுனா அம்மாவை கண் காட்டி அடக்கினாள். கோதாவரிக்கு இயலாமையாக இருந்தது. ஊர் பெண்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லி முடியவில்லை.
ஆறுதல் சொல்கிறேன் என்ற பெயரில் கோதாவரியின் கோபத்தையும் இயலாமையும் தூண்டி விட்டுக் கொண்டிருந்தனர் அவ்வப்போது கொடுத்தாலும் கணவனின் மிரட்டலுக்கு பயந்து அமைதியாக இருந்தார் கோதாவரி.
இதோ அதோவென மணமேடைக்கு வந்து விட்டாள் பவித்ரா. மாதவிக்கு அவள் மணமேடை வந்த அமர்ந்ததுமே பெருத்த நிம்மதியாய் இருந்தது.
மற்றவர்கள் பார்க்கும் பார்வை எல்லாவற்றையும் பிள்ளைகளுக்காக தவிர்த்தவர் கண்களில் நீருடன் நிற்க கணேஷும் அவரோடு தான் நின்றிருந்தான். அவனை தன்னோடு அழைத்த உலகநாதன் வாசலில் நின்று அனைவரையும் வரவேற்றார்.
இளம்பரிதி அருளோடு மண்டபத்திற்கு வர உலகநாதன் புன்னகையுடன் வரவேற்றார்.
"வாங்க மாப்ள... ரொம்ப சந்தோஷம் நீங்க வந்ததில்"என்று அவன் கையைப் பிடித்துக் குலுக்கிக் கொண்டே கணேஷை மகன் என்று அறிமுகம் செய்து வைத்தார். அவனிடமும் பரிதி யார் என்று கூற இதழ் விரியா புன்னகையுடன் தலையசைத்து கொண்டான் கணேஷ்.
"பொண்ணைப் பெத்தவா வாங்கோ. பொண்ணு பாதபூஜை பண்ணனும்"என்று ஐயர் அழைக்க உலகநாதனோ அருள் பரிதி இருவரையுமே தன்னோடு அழைத்துச் சென்றார். மாதவியை தன்னோடு அழைத்து பூஜையில் கலந்து கொள்ள அழைக்க அவரோ கோதாவரியை எச்சில் கூட்டி விழுங்கியபடி பார்த்துக் கொண்டே மேடைக்கு நகர்ந்தார்.
அருள் விழி விரிய "அண்ணா பொண்ணு யார் னு பாருங்க"என்று மணமேடையை அந்த பெரிய டிவியில் பார்க்க பவித்ராவின் முகம் க்ளோஸப்பில் தெரிந்தது.
"பவித்ரா"என்று அதிர்ந்த பரிதி "இவரோட பொண்ணா பவித்ரா...யாரையோ லவ் பண்ணதா சொன்னாங்க டா"என்றான் அதிர்ச்சி மறையாமல்.
"வாசவி கூட இந்த விஷயத்தை சொன்னா ண்ணா. நான் தான் இவர் ஏன் இவ்வளவு ரூடா இருக்கார்னு திட்டிட்டு இந்த கல்யாணத்துக்கு வரலைன்னு சொன்னேன். அவ பெரியப்பா கோச்சுப்பாங்க னு சொல்லவும் தான் புடிக்காம கிளம்பினேன் பார்த்தா உங்களுக்கு பார்த்த பொண்ணும் கல்யாணத்துக்கு வர்றதா சொல்லவும் சரி நீங்க வருவீங்களேனு நினைச்சேன் உங்க கிட்ட இருந்து ஃபோன் வருது. சரின்னு தான் வந்தேன்.ரைட்டு ஏதோ நல்லது நடந்தா சரி"என்றான் அருள்.
"பவித்ரா தான் உலகநாதன் மகளா"என்று முணுமுணுத்தவன்"இந்த பொண்ணு நம்ம கடையில் இருந்து தான் இந்த வேலையை பண்ணுச்சுனு தெரிஞ்சா என்ன ஆகும்"என்று யாரும் அறியாமல் சொல்லிக் கொண்டவன் மனதில் நாமளா போய் லவ் பண்ண சொன்னோம் என்று எண்ணிக் கொண்டான்.
எல்லாம் நன்றாக சென்று கொண்டிருந்த வேளையில்
மணமகன் ஆவேசமாக நடு ஹாலில் வந்து நின்றவன் "ஏன்யா பெரிய மனுசன் னு நீ சொன்ன சொல்லை நம்பி உன்னோட கூத்தியா மகளை கட்டிக்க நான் சம்மதிச்சா, எவனோடவோ ஊர் மேஞ்சவளை எனக்கு கட்டி வைக்க பாக்குறியா?"என்று உலகநாதனிடம் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு எகிறினான்.
"டேய்?!"என்று உலகநாதன் ஆத்திரமாக அவன் சட்டையைக் கோர்த்துப் பிடிக்க அசட்டையாக அவரை உதறித் தள்ளியவன், "இவளை என்னால கட்டிக்க முடியாது."என்றான் திமிராக.
பவித்ரா திருப்தியாக உலகநாதனைப் பார்த்துச்
சிரித்தாள்.
உலகநாதன் தன் மகளின் வேலையாக இருக்க வேண்டும் என்று உணர்ந்து "உன் கிட்ட கடைசியா கேட்கிறேன் என் மகள் கழுத்தில் தாலி கட்ட முடியுமா முடியாதா?"என்றார் நிதானமாக.
"இங்கே என்ன கதையா சொல்லிட்டு இருக்கேன். அப்படி கட்டிக்கணும்னா இன்னும் ஒரு ஐம்பது பவுன் சேர்த்து வேணும்"என்றவன் "செஞ்சா இவளைக் கட்டிக்கிறேன்"என்றான்.
"கூட ஐம்பது பவுன் தந்தா உங்க பார்வையில் நான் களங்கம் இல்லாதவளா ஆகிடுவேனா மிஸ்டர்"என்று நக்கலாய் தைரியமாக கேள்வி கேட்டு நின்றவளை கோதாவரியும் அவரது மகள்களும் வியப்பாக பார்த்தனர்.
இவளுக்கு தான் எவ்வளவு தைரியம் என்று நினைத்துக் கொண்டனர் அனைவருமே.
"சொல்லுங்க. ஐம்பது பவுன் ல என் காதல் நீங்க சொன்னீங்களே அந்த ஊர் மேஞ்ச"எனும் போதே மாதவி அழுகையுடன் "பவி"என்று அழைக்க
"இரும்மா...வை*** மகள் ன்ற பேரை விட இது ஒண்ணும் பெரிய அசிங்கம் இல்லை"என்றவள் "நீங்க சொல்லுங்க"என்றாள் மணமகனிடம் திரும்பி.
"அடச்சீ போடி. யோவ் உன் ஊர்பொறுக்கி மகளை வச்சு நீயே ஊறுகா போடு எனக்கென்ன பொண்ணா கிடைக்காது. ஏதோ என் வீட்டில் பவுன் கேட்டாங்க னு உன் கிட்ட டீல் பேசினேன் இதுக்கு மேல இவளைக் கட்டிக்க எனக்கென்ன லூசா"என்றவன் தன் சொந்தங்களோடு அங்கிருந்து வெளியேறினான்.
ஆளாளுக்கு ஒன்றை முணுமுணுக்க உலகநாதன் முகமெல்லாம் வியர்த்து வழிய பவித்ரா தன் தந்தையை கர்வமாய் பார்க்க
மாதவியோ மகளைப் பிடித்தபடி "இனிமே யார் டி உன்னைக் கல்யாணம் பண்ணுவா... என் மகள் வாழ்க்கை போச்சே"என்று அழவும் கணேஷிற்கு என்ன செய்வது என்று புரியாத நிலை.
உலகநாதன் வியர்த்து வழிந்து அங்கேயே சரியப் போக அவரை பரிதியும் அருளும் தாங்கிப் பிடித்தனர்.
என்னவோ ஏதோ என்று கூட்டம் கூட கோதாவரி ஒப்பாரி வைத்து நெஞ்சில் அடித்துக் கொண்டு அழத் துவங்கி விட்டார் கூடவே அவரது மகள்களும்.
"ப்பா"என்று அவரது இளைய மகள் அமராவதி வந்து உலகநாதன் கையைப் பிடித்துக் கொள்ள
பரிதியோ"அருள் டாக்டரை கூப்பிடு. மாமா உங்களுக்கு எதுவும் இல்லை"என்று வியர்வையை துடைத்து விட்டான். அப்போது தான் பரிதியை கவனித்தாள் பவித்ரா.
'சார் இவருக்கு சொந்தமா...அதான் இவர் கடையில் வேலை பார்க்க அப்பா விட்டாரா...அப்போ என்னைக் கண்காணிக்க தான் இந்த அனுமதியா...எல்லாம் கூட்டுக்களவாணிகளா'என்று பரிதியை தவறாக புரிந்து கொண்ட பவித்ரா இங்கிருந்து எப்படியாவது வெளியேறி தன் காதலன் நவீனை சந்திக்க வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டாள்.
ஆனால் உலகநாதனின் நிலை கண்டு மற்றவர்கள் தவித்த நிலையில் பரிதியின் கரம் பிடித்துக் கொண்ட உலகநாதன் "என் பொண்ணை நீங்க கல்யாணம் பண்ணிக்குவீங்களா தம்பி?"என்று கேட்டிருந்தார் திணறலுடன்.
...... தொடரும்