• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

பரிதியின் பவித்ரமே - 7

Vishakini

Moderator
Staff member

பரிதியின் பவித்ரமே -07

பவித்ரா வழக்கமாய் வேலை முடிந்து வரும் நேரத்திற்கே வீட்டிற்கு வந்து விட்டிருந்தாள். மனதில் ஒரு குறுகுறுப்பு இருந்து கொண்டே இருந்தது அவளுக்கு.


"பவி டீ தரவா?"என்று மாதவி கேட்கவும் கண்கலங்கும் போல் இருக்க, கரகரத்த குரலில் "ஹ்ம்ம் போடு மா"என்றவள் விறுவிறுவென அறைக்குள் சென்று விட்டாள்.

மாதவியிடம் மனதில் அத்தனை மன்னிப்பு கேட்டு விட்டாலும் மனம் ஆறவில்லை அவளுக்கு.


முகத்தை கழுவி விட்டு வெளியே வரவும், மாதவி தேநீரும், தட்டில் அவளுக்கு பிடித்த பிஸ்கெட்டும் வைத்திருக்க, இன்னும் மனதளவில் குறுகினாள் பெண்.

"ஏன் பவி தலை வலிக்குதா ரொம்ப வேலையா?"என்று மகளை ஆதூரமாய் கேட்க


"ஹ்ம்ம்"என்றவளின் கண்கள் கலங்கி குளம் கட்டி நிற்க, "ஆமாம் மா"என்றாள் தன்னை சமாளித்துக் கொண்டு.


"ப்ப்ச், உன்னை வேலைக்கு அனுப்பவே எனக்கு பிடிக்கலை தான். ஆனாலும் வேறு வழி இல்லாம தான் அனுப்புறேன் பவி. எப்படியாவது கணேஷ் படிப்பு முடிந்ததும் அவன் வேலைக்குப் போயிட்டா உன்னை அனுப்பவே மாட்டேன் பவி"என்றவர், "அதுக்குள்ள உனக்கு ஒரு மாப்ளை பார்த்துடணும் உங்க அப்பா வரட்டும் பேசறேன்"என்றார்.


'அப்பா 'என்றதும் கோபமடைந்தவள் "மாப்ளையும் பார்க்க வேண்டாம், ஒரு மண்ணும் பார்க்க வேண்டாம் அப்பா அது இதுன்னு சொன்னீங்க நான் பொல்லாதவளாயிடுவேன்" என்று கத்தி விட்டு அறைக்குள் சென்று விட்டாள்.

"இப்படியே பேசாத பவி, என்ன இருந்தாலும் உன்னைப் பெத்தவரு அவரு"என ஆதங்கமாய் மாதவி கூறிவிட


"ஓஓஓ பெத்தவரு...! ஹ்ம்ம் சரி"என்று தலையாட்டியவள்,"அப்போ அந்த பெத்தவரை என்னையும் என் தம்பியையும் ஊருக்கும், உறவுக்கும்,' இவங்க என் ரத்தம் என் பிள்ளைங்கனு' சொல்ல சொல்லுங்க அப்போ ஒத்துக்கிறேன் அவர் தான் என்னைப் பெத்தார்னு. அதுவரைக்கும்"என்று கோபமாய் தலையாட்டி பேசக் கூடாது என்று சமிக்ஞை செய்தாள்.


மாதவிக்கு ஆயாசமாக இருந்தது. உலகநாதன் இதெல்லாம் செய்வாரா என்ன நிச்சயம் கிடையாது. 'எல்லாம் என் தவறு' என்று நினைத்து நொந்தபடி மகளிடம் அதற்கு மேல் வாதாட விரும்பாமல் அங்கிருந்து நகர்ந்தார்.

பவித்ராவிற்கும் தன் அன்னையின் நிலை புரிந்தது தான் ஆனால் தன்னை மீறி கோபம் வருகையில் வேறு வழியின்றி கத்தி விடுகிறாள்.

பவித்ரா உள்ளே சென்றவள் படுத்து விட மனதிலோ அவனின் நினைவுகள் வரிசை கட்டி நின்றது.

"சீக்கிரம் அவரை கல்யாணம் பத்தி வீட்டில் பேச சொல்லணும்"என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.

டிங் என்று கைபேசி ஒலி எழுப்ப எடுத்துப் பார்த்தவளுக்கு முகம் சூரியனைக் கண்ட தாமரையாய் மலர்ந்தது.

'வீட்டுக்குப் போயாச்சா பவி. ஒரு மெசேஜ் போடுமா!'என்று செய்தி அனுப்பி இருந்தான் அவன்.

அவனுக்கான பதிலை அனுப்பி வைத்தவள் சிறிது நேரம் அவனிடம் குறுஞ்செய்தியில் பேசி விட்டு வைத்தாள்.

*********

திருவிழா சிறப்பாக நடந்தேறியிருக்க, ஊரில் வந்திருந்த சொந்தங்கள் எல்லாம் அவரவர் ஊரைப் பார்த்து கிளம்பியிருந்தது. பரிதியின் வீடு வெறிச்சோடி கிடக்க, மாடியில் இருந்தவன் தனக்கான காஃபியை கலந்து கொண்டு வந்து பால்கனியில் போடப்பட்டிருந்த ஊஞ்சல் குடிலில் அமர்ந்து கொண்டான்.


நான்கு பக்கங்களிலும் தூண் போல் எழுப்பி மேலே கூரை வேய்ந்திருந்தான். வெயிலுக்கு இதமாய் அமர்ந்து கொள்ளலாம் அங்கே. யாரையும் மேலே அவ்வளவு சீக்கிரம் அழைத்துச் செல்ல மாட்டான். அவனைப் பார்க்க வந்தாலும் பேச்சுக் கொடுத்தபடியே கீழே அவர்களோடு இறங்கி வந்து விடுவானே தவிர அவர்களோடு அங்கே அமர மாட்டான். அங்கே அமர அவனின் துணை எப்போதும் தனிமை மட்டுமே.

சித்திரையின் வெம்மை பகல் நேரத்தில் தாக்கினாலும் இரவுப் பொழுது அன்று ஏனோ குளிர்ந்த காற்று வீசி இதம் பரப்பிக் கொண்டிருந்தது.


மிடறு மிடறாய் காஃபியை உறிஞ்சியதில் கசப்பும் இனிப்பும் கலந்து அக்மார்க் கும்பகோணம் டிகிரி காஃபியின் சுவையை மணத்தை உணர்ந்ததில் விழிகள் தன்னால் மூடியது பரிதிக்கு.

வந்திருந்தவர்களில் சிலர் 'ஒரு கல்யாணத்தை பண்ணிக்க தம்பி'என்று சிலபல அறிவுரைகள் சில இடங்களில் பெண் இருப்பதாக தகவல்கள் என்று ஒலிபரப்பு செய்து விட்டு செல்ல ஏன் கோதாவரி கூட,"எங்க பக்கம் பொண்ணு இருந்தா சொல்றேன் தம்பி அடுத்த திருவிழாவில் உங்க பொண்டாட்டி கூட தான் எங்களுக்கு நீங்க விருந்து வைப்பீங்க"என மனதார சொல்லி விட்டுச் சென்றிருந்தார்.


உலகநாதனின் மூத்த மகள் பார்வையில் 'நீ ஏன் எனக்கு முன்பே பிறந்து தொலைக்கவில்லை'என்ற ஆதங்கம் தொக்கி இருந்தது. அதனை அநாயசமாக கடந்தவன் வழக்கம் போல தன் இயல்பு வாழ்விற்கு திரும்பிக் கொண்டான்.


இதோ தன் வீட்டில் யாருமற்ற தனிமையில் நடந்ததை அசை போட்டு சிலவற்றிற்கு சிரித்து சிலவற்றிற்கு முகம் சுருக்கி என்று சிந்தையை அலைய விட்டதில் மொத்தம் தீர்ந்து காஃபியும் காலி ஆகியிருந்தது.


*************

நாட்கள் இறக்கைக் கட்டிப் பறக்க இயல்பு போல கடந்து சென்றது வாழ்க்கை.

பவித்ராவின் காதல் வளர்ந்து கொண்டு செல்ல, இங்கே பரிதியின் வாழ்வு இயல்பு போல நகர்ந்தது.


"என்ன பவி இப்போ எல்லாம் லேட் லேட்டா வர்ற என்ன விஷயம்?"என்று விளையாட்டு போல கேட்டாலும்,' நீ முன்பு போல சரியாக இல்லை' என்று அறிவுறுத்தினார் சீதாலட்சுமி.

"பஸ் இப்போ எல்லாம் சீக்கிரம் வந்திடுதுக்கா. நான் ஓடி வர்றதுக்குள்ள போயிடுது"என்றவளுக்கு பொய் கூறுகிறோமே என்று உறுத்தினாலும் காதலின் மயக்கத்தில் அது பெரிதாக தெரியவில்லை.


"பார்த்துக்கோ பவி. சார் வர்ற அன்னைக்கு லேட் பண்ணிடாத"என்று எச்சரிக்கை விடுத்த சீதா தன் வேலையில் கவனம் வைத்தார்.

"ஏன் மா இன்னோவா காருக்கு வீல் கார்ட் போட்டது யாரு மா? ஒரே தட்டுல கீழ விழுந்திடுச்சு. உடைஞ்சும் போச்சு. கொஞ்சமும் குவாலிட்டி இல்லை. லட்சணத்துக்கு நூறு ஃபோன் பண்ணி கடைக்கு கூப்பிடுறீங்க. ஒழுங்கா இல்லாத பொருளை எதுக்கு விற்கறீங்க வீணாப் போன பொருளை என் தலையில் கட்டிட்டீங்க"என்று கத்தி தீர்த்தார் வந்தவர்.

"சார்! சார்!! இருங்க ஏன் டென்ஷன் ஆகறீங்க. நான் வந்து பார்க்கிறேன். அண்ணா, சாருக்கு ஒரு ஜூஸ் சொல்லுங்க"என்று படபடத்தவாறு அவரை அழைத்துக் கொண்டு வெளியே வந்தாள் பவித்ரா.

"ஒரு சில நேரத்தில் சைஸ் சரியா செட் ஆகாம இருக்கும் சார். இதோ சேஞ்ச் பண்ணி தருவாங்க. மிஸ்டேக் சொன்னா சரி செஞ்சு தந்திடுவோம் உங்களோட பணத்தை அப்படி எல்லாம் வீணாக்க மாட்டோம் சார்"தன்மையாக பேசி அவர் மனதை குளிர்வித்துக் கொண்டே வந்தவள், அதனை சரி செய்ய வேண்டி ஒரு பையனை அழைத்து அந்த வேலையை கொடுத்தாள்‌. அதற்குள் ரோஸ்மில்க்கும் வந்துவிட "அக்கா அங்கே இதுதான் இருந்துச்சு க்கா"என்று கடைப்பையன் நீட்ட அதனை வாங்கி பவ்யமாக கஷ்டமரிடம் கொடுக்க வந்த பையன் துரிதமாக வேலையை துவங்கி விட்டதாலோ என்னவோ அவர் சற்று சமாதானம் ஆகி ரோஸ்மில்க்கை வாங்கிக் கொண்டார்.


அதனைக் குடித்தவாறே"புது வண்டி மா. ஏற்கனவே நான் வண்டி வாங்குனத பார்த்து என் பங்காளி பகையாளி எல்லாம் வயித்தெரிச்சல்ல கெடக்கானுவ. எங்கேயோ செகண்ட்ஸுல வாங்கி இருப்பேன்னு நக்கலடிச்சு பேசுறானுக அதுக்கு தகுந்த மாதிரி வீல்கேப் கழண்டு அவனுக முன்னால விழவும் ஒரே அவமானமா போச்சு அதான்"என்று விளக்கம் கொடுக்க

"விடுங்க சார் அவங்களால பொறாமைதான் பட முடியும். அதை தவிர்த்து என்ன செஞ்சுட முடியும். நல்லா தரமா பண்ணி தர்றோம் சார். இனிமே பாருங்க உங்க காரு ஜெட் வேகத்தில் போகும் அவங்களை பேச முடியாதபடி செய்யும் பாருங்க"என்று பேச்சுக் கொடுத்துக் கொண்டே வேலையை முடிக்கும் வரை நிற்க வைத்து விட்டாள்.

சரி செய்ததும் அந்த வண்டிக்காரர் கிளம்ப, அடுத்த கஸ்டமரை கவனிக்கச் சென்றவள் சிறிது நேரம் ஓய்வில் அமர்ந்தாள்.




"பலே கில்லாடி பவி நீ. காலையில் அக்னியை கக்கின அந்த மனுசனை ரோஸ் மில்க் தந்து சரி பண்ணதும் இல்லாம கத்தினதுக்கு ரிவெஞ்ச் எடுத்த மாதிரி நிக்க வச்சுட்டீயே நீ"என்று சீதாலட்சுமி சிரித்தார்.


"பேசாம இருங்க க்கா யார் காதிலாவது விழப் போகுது"என்று சுற்றும் முற்றும் பார்த்தவள், "பின்ன அந்த வீல் கேப்பை அவரே ஒரு தட்டு தட்டி அழுத்தி இருந்தா ஃபிட் ஆகியிருக்கும். அதுக்கு போய் வால் வால்னு கத்தினா...மத்த கஸ்டமர் என்ன நினைப்பாங்க. ஆனாலும் சொந்தக்காரன் முன்னாடி கழண்டு விழுந்த கோபத்தில் தான் கத்தி இருக்கார் மனுஷன். அதுக்கு தான் அந்த ரோஸ்மில்க்"என்றாள் புன்னகையுடன்.

"ரைட் பவி கிட்ட இனி ஜாக்கிரதையாக தான் இருக்கணும்"என்று அன்பழகன் கூட சிரிக்க


"சார் நீங்களுமா?"என்றவள் அடுத்த வேலையை கவனிக்க சென்று விட்டாள்.


************

"இப்போ என்ன தான் சொல்ல வர்ற மாதவி?"என்று கடுகடுப்பாய் அமர்ந்திருந்தார் உலகநாதன்.


"உங்க மகளுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைங்க அதான் என் ஆசை"என்றார் மாதவி தீர்க்கமாக.

"அதெல்லாம் சாதாரண விஷயமா?"என்று உலகநாதன் அதிருப்தியை காட்ட

"ஏன் ஏன் என் பொண்ணுக்கு என்ன குறை?"என்று ஆற்றாமையுடன் கேட்க உலகநாதன் பார்வை மாறியது.


"ஏன் வப்பாட்டி பொண்ணுக்கு எதுக்கு கல்யாணம் செய்யணும் னு யோசனையோ?"சுள்ளென்று கேட்டு விட்டார் மாதவி.

"மாதவி!?"என்று உலகநாதன் கத்த

"ஷ்ஷ்ஷ் சும்மா கத்தாதீங்க. என்னை மாதிரி வாழ்க்கை என் பொண்ணுக்கு அமைஞ்சிடக் கூடாது. அதுக்கு அவளுக்கு சீக்கிரம் ஒரு கல்யாணத்தை நான் செய்யணும் அதுக்கு நீங்க தான் மாப்பிள்ளை பார்க்கணும் முடியுமா முடியாதா?"என்றவர், "முடியாதுன்னா தாராளமாக சொல்லுங்க. அதுக்கு அப்புறம் நீங்க சுத்தமாகவே இங்க வர வேண்டாம்"என்று அழுத்தமாக கூற உலகநாதன் மாதவியை அதிர்ந்து பார்த்தார்.


"என்ன பார்க்கறீங்க. என் பிள்ளைங்க வாழ்க்கையை விட வேறெதுவும் எனக்கு பெருசு இல்லை. என்ன என்ன மிஞ்சி மிஞ்சி போனா நான் சரியில்லாதவன்னு ஊருக்குள்ள பொரளியை கிளப்பி விடுவீங்க இல்லை என்னையோ என் பிள்ளைகளையோ ஏதாவது செய்வீங்க அதானே. இப்படி வாழறதுக்கு நான் செத்தே போறேன்"என்றார் சுள்ளென்று.


"ஏய் என்னடி இப்படி எல்லாம் பேசிட்டு இருக்க?"என்று பதறியவர் "சீக்கிரம் ஏற்பாடு செய்றேன்"என்றார்.

என்ன தான் ஊருக்கு தெரியாமல் மாதவியோடு குடும்பம் நடத்தினாலும், தன் தேவைகளை நிறைவேற்றும் மாதவி மீது சிறிது அன்பும் அவருக்கு இருக்கத் தான் செய்தது. அது மாதவிக்காக மட்டும் அல்ல மகன் மகளுக்கானதும் கூட. முதல் மனைவியின் மூலம் வந்த பிள்ளைகள் போல இல்லாமல் தன் ரத்தம் தன்னை எதிர்த்து நிற்பது கூட அவருக்கு பெருமிதமாக தான் இருந்தது.

விரைந்து பவித்ராவிற்கு வரன் தேட வேண்டும் என்று எண்ணிக் கொண்டார் உலகநாதன்.


....... தொடரும்


















 
Top Bottom