பரிதியின் பவித்ரமே -08
பவித்ரா காலையில் எழுந்ததுமே பரபரப்பாகி விட்டாள். இன்று அவளின் காதலன் சந்திக்கலாம் என்று கூறி இருந்தான். இம்முறை தென்காசி போகலாம் என்று கேட்க,பவித்ராவோ பக்கத்தில் ஏதேனும் இருந்தால் பரவாயில்லை என்று கூறவும் தெரிந்த நண்பனின் ஹோட்டல் இருக்கிறது உணவருந்தி விட்டு வந்து விடலாம் என்று சொல்லி இருந்தான்.
சரியென்று சம்மதித்தவள் அதற்காக தான் இப்போது கிளம்பிக் கொண்டிருந்தாள்.
"ஏன் பவி இன்னைக்கு கூடவா சீக்கிரம் போகணும். நான் இன்னைக்கு உங்க ரெண்டு பேர் கூடவும் பொள்ளாச்சி போயிட்டு வரலாம் னு நினைச்சேன்"என்றார் மாதவி சங்கடமாக.
"ம்மா கணேஷுக்கு இன்னும் பத்து நாளைக்கு லீவ் தானே நாம நாளைக்கு போகலாம் மா"என்று தாயை கெஞ்சிக் கொஞ்சி சமாதானம் செய்து விட்டு கிளம்பினாள் பவித்ரா.
"என்னவோ போ"என்று சலித்துக் கொண்டவர் "நானும் கணேஷும் மளிகை சாமான் வாங்க போறோம். சாவி எடுத்துட்டு போ நீ சீக்கிரம் வந்துட்டா தேவைப்படும் "என்றார்.
"சரிம்மா. கவனமா போயிட்டு வாங்க. அப்படியே எனக்கு ஏதாச்சும் ஸ்நாக்ஸ் வாங்கிட்டு வாங்க"என்று பணத்தைக் கொடுத்து விட்டு வெளியேறி இருக்க மாதவி கதவை சாத்திக் கொண்டு உள்ளே சென்றார்.
"ம்மா அக்கா எங்க போறாங்க?"என்று கணேஷ் கேட்க
"அவங்க ஓனரோட இன்னொரு கடைக்கு போக சொன்னாங்களாம் அதான் சீக்கிரம் போறா"என்றவர் "நீ வா சாப்பிடலாம்"என்று உணவை எடுத்து வைத்தார்.
"ம்மா"என்று தயக்கமாக அழைத்தவனோ "ஹ்ம்ம் ஒரு ஆம்லேட் மட்டும் போடுங்க"என சட்டென்று பேச வந்ததை பேசாமல் விட்டு விட்டான்.
பவித்ராவின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்டான் கணேஷ். போன வாரமும் குடோனுக்கு சரக்கு வந்திருப்பதாகவும் அதை கணக்கு எடுக்க வேண்டும் என்று தான் கிளம்பினாள். ஆனால் நெல்லையப்பர் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டுக் கொண்டு இருந்தாள். கணேஷ் எங்கே இருக்கிறாய் என்று கேட்டதற்கும் கடையில் தான் இருக்கிறேன் சொல்லி விட்டு தானே வந்தேன் என்று சுள்ளென்று விழுந்து இணைப்பைத் துண்டிக்க அதே நேரத்தில் அவளை மறைந்திருந்து பார்த்த கணேஷிற்கு அவள் நெஞ்சில் கை வைத்து ஆசுவாசம் அடைவது தெரிந்தது. எதற்காக பொய் சொல்லி விட்டு இப்படி கோவிலுக்கு வர வேண்டும் என்ற சந்தேகம் அவனில் துளிர்த்தது.
அன்றைய நாளில் பவித்ரா தன் காதலனோடு தான் நெல்லையப்பர் கோவிலுக்கு வந்திருந்தாள். அவன் பிரசாதம் வாங்க சென்ற அதே நேரத்தில் தான் கணேஷ் அழைத்தது. அதனால் அவனிடம் காதலனோடு மாட்டிக் கொள்ளாமல் தப்பித்திருந்தாள் பவித்ரா.
இந்த வாரமும் வேலை என்று சொல்லிக் கொண்டு கிளம்புகிறாள். இப்போதும் வேலைக்குத் தான் செல்கிறாளா இல்லை வேறெங்கும் செல்கிறாளா என்ற சந்தேகம் அவனுக்கு.
' தன் அன்னையிடம் இதைக் கூறலாம் என்றால் தேவை இல்லாத மன அழுத்தம் அவருக்கு எதற்கு?' என்று சொல்லாமல் மறைத்திருந்தான்.
ஆனாலும் மனதினுள் ஒரு குறுகுறுப்பு இருந்துகொண்டே இருந்தது அவனுக்கு.
************
பரிதி தன் வேலையை முடித்துக் கொண்டு கடைக்கு புறப்பட, அருளிடம் இருந்து அழைப்பு வந்தது அவனுக்கு.
"சொல்லுல என்ன திடீர்னு ஃபோன போட்டு இருக்க... என்னவாம்"என்றான் கிண்டலாக சிரித்தபடியே.
"அண்ணா. என் பெரிய மாமனாருக்கு என்ன மந்திரம் போட்ட நீ."என்று அவன் சிரிப்புடன் கேட்க பரிதிக்கும் புன்னகை தான்.
"என்ன சேதில எதுவும் சொல்லாம பகடி பேசுத"என்று வம்பளக்க
"உன் கடை எங்கருக்குனு கேட்டவரு புது காருக்கு அக்ஸஸரீஸ் மாத்த சொல்லுனு சொல்றாரு."என்றான் அருள் ஆச்சரியமாக
"பார்றா... "என்றவன் "பெரிய கடைக்கே எடுத்துக்கிட்டு வா தரமா செய்ய சொல்றேன்"என்றான்.
"சரி சொல்றேன்"என்ற அருள் சற்று தயக்கமாக "ண்ணா ஒரு விஷயம்"என இழுத்தான்.
"என்னடா"என்றவனுக்கு செலவிற்கு பணம் எதுவும் தேவைப்படுகிறதோ என்ற யோசனை.
"ஒரு பொண்ணு இருக்கு அவங்களை உனக்கு பேசலாம் னு அப்பா சொன்னார்"என்றவனுக்கு இன்னுமே தயக்கம் கூடியது.
சந்தோஷமாக சொல்ல வேண்டிய விஷயத்தை ஏன் இவ்வளவு தயக்கமாக கூறுகிறான் என்ற எண்ணம் எழ அதைக் கேட்டும் விட்டான் பரிதி.
"பொண்ணு இருக்கு தான் ஆனா கல்யாணம் ஆகி புருஷன் போய் சேர்ந்துட்டான் கையில் ஒரு பொம்பளைப் பிள்ளை இருக்கு. அவங்க அப்பா அந்த பொண்ணுக்கு ஒரு நல்ல வழி காட்டிட்டா போதும் னு நினைக்கிறாரு."என்று அதற்கு மேல் பேச முடியாமல் அருள் தவிப்பாய் நிறுத்தி விட்டான்.
பரிதிக்கு இதில் கோபத்திற்கு பதிலாக புன்னகையே வந்தது.
"இதுக்கு ஏன் டா இவ்வளவு தயங்கற நீ. முப்பத்தி ஏழு வயசு முடிஞ்சு 38 ஆரம்பிக்கிறது. இதுக்கு மேல ஃப்ரெஷாவா கிடைக்கும்"என்று சிரித்தவன் "சித்தப்பாக்கு சரின்னா பேசச் சொல்லு"என்றான் உடனேயே.
"அண்ணா?!"என்று அதிர்ந்தவன் "நெசமா தானா...? ஒரு புள்ளைக்கு அம்மா அந்த பொண்ணு"என்று இன்னுமே அருளுக்கு தயக்கம் தான் இந்த வரனைப் பற்றி பேசுகையில்
"எனக்கு என்ன வயசு கொஞ்சமாவாடா ஆகுது...அதனால என்ன நீ பார்க்க சொல்லு"என்றான்.
அருள் தயங்கினாலும் இப்போதாவது வரன் அமையட்டுமே என்று நினைத்து சரியென்று இணைப்பைத் துண்டித்தான்.
சொன்னபடியே அருள் கடைக்கு காரை எடுத்துக் கொண்டு வந்திருக்க, பவித்ரா தான் அதனை மேற்பார்வை செய்து தேவைகளை பூர்த்தி செய்தாள்.
"என்ன அருளு வேலை எப்படி?"என்றபடி வந்து நின்றான் பரிதி.
"க்ளாஸு போ..."என்று சிலாகித்த அருள் "யார் ண்ணா இந்த பொண்ணு. சரியான சுறுசுறுப்பு. பேசிக்கிட்டே லாவகமா வேலை வாங்குது. தெரிஞ்ச பிள்ளையா??"என்று வினவ
"அது எதுக்கு டா உனக்கு?"என்று சிரித்தான் பரிதி.
"எங்கேயோ பாத்த மாதிரி இருக்குண்ணா. மொக சாடை யாரையோ பார்த்த மாதிரி இருக்கு அதான் கேட்டேன். நம்ம வளசல்ல தான் யாரையோ பாத்த மாதிரி இருக்கு"என்று கூர்ந்தவனை நோக்கி பவித்ரா வர அருள் சட்டென பார்வையை காரில் பதித்தான்.
"பவித்ரா வேலை முடிஞ்சதா"என்று பரிதி கேட்க
"பின்னாடி பம்பர் மட்டும் மாட்டணும் சார்.இந்த காரோடது இல்லை சிவா வாங்க போயிருக்கான் சார்"என்றவள் தேநீரைக் கொடுத்தாள்.
"சீக்கிரம் வேலை முடிச்சு தந்துட்டீங்களாம். என் தம்பி பாராட்டறார்"என்று அவளிடமே கூறவும் சிரித்தவள் "அதானே சார் என் வேலை"என்றாள்.
அருளுக்கு இன்னும் இன்னும் அவளை எங்கேயோ பார்த்தது போல பிரம்மை வலுத்தது.
"எந்த ஊர் பாப்பா நீ?"என்று கேட்க
"பக்கத்தில் தான் சார். "என்று தான் வசிக்கும் இருப்பிடத்தை கூறினாள்.
"சரிம்மா சரிம்மா"என்றவன் அதற்கு மேல் தோண்டி துருவவில்லை. எதற்காக வயதுப் பெண்ணிடம் தேவை இல்லாத பேச்சு என்று விட்டு விட்டான்.
***************
அன்று மாலையே ரப்பென்ற சத்தம் அந்த அறை முழுவதும் நிறைய பவித்ரா சுருண்டு கீழே விழுந்திருந்தாள். வேலை முடித்துக் கொண்டு வீட்டிற்கு திரும்பி இருந்தவளை வந்ததும் வராததுமாய் ஓங்கி அறைந்திருந்தார் உலகநாதன்.
"என்னங்க?"என்று பதறிக் கொண்டு ஓடி வந்த மாதவியை அனல் பார்வை பார்த்த உலகநாதன் "ஒம்மவள வளத்த லட்சணம் இதுதானாடி?"என்று கேட்க மாதவி மகளை திடுக்கிட்டு பார்த்தபடி "ஏன் ங்க என்னாச்சு??"என்று கேட்டார் எச்சில் விழுங்கியபடி.
"என்ன ஆச்சா?"என்று ஆங்காரமாய் திரும்பியவர் கணேஷைக் கண்டு சட்டென்று நிதானித்து "வேலைக்கு அனுப்ப வேணாம் னு சொன்னேனே கேட்டியா... நெல்லையப்பர் கோவில்ல அன்னைக்கு சாமி கும்பிட்டு நிற்கிறா. உன்னை கேட்டா வேலைக்கு போயிருக்கான்னு சொல்ற"என்று சமாளிப்பாய் கேட்க
"அது ஏதோ கூட வேலை செய்ற பொண்ணு கூப்பிட்டுச்சாம். என் கிட்ட கேட்டா அனுப்ப மாட்டேன் னு சொல்லாம போயிருக்கா வந்ததும் என் கிட்ட சொல்லிட்டாளே"என்று மாதவியும் சமாதானம் கூற
உலகநாதன் மகளை இன்னும் அனல் பார்வை பார்த்து விட்டு "இனிமே வேலைக்கும் போக வேணாம் ஒண்ணுக்கும் போக வேணாம். வீட்டோட வை"என்றார்.
"ஏன் நான் போகக் கூடாது நான் போவேன்"என்ற பவித்ராவை மீண்டும் அடிக்க கை ஓங்கியவர் "மாதவி அவளுக்கு நான் மாப்பிள்ளை பார்த்தாச்சு. அடுத்த முகூர்த்தத்தில் கல்யாணம். மூணு பேரும் எங்கூட ஊருக்கு கிளம்புங்க"என்றதில் மாதவி வியப்பாக பார்த்தார் என்றால் பவித்ரா அதிர்வாய் நோக்கினாள் தந்தையை.
கணேஷிற்கு ஆச்சரியம் தாளவில்லை.
"நிஜமாவாப்பா சொல்றீங்க"என்று வியப்பாக கேட்டவனிடம் "ஆமாம் நான் அங்கே உன் பெரியம்மா கிட்ட பேசியாச்சு. அவ சொந்தத்தில் தான் மாப்ளை கெடைச்சுருக்காரு"என்றவர் கிளம்ப சொல்லி அவசரம் காட்டினார்.
"இந்த கல்யாணத்துக்கு நான் சம்மதிக்கவே மாட்டேன்"என்ற பவித்ராவை கணேஷும், மாதவியும் திடுக்கிட்டு பார்க்க
"எனக்கு தெரியும் நீங்க ஏன் இந்த அவசரக் கல்யாணம் பண்றீங்க"என்று திமிராய் நின்றவளை இன்னுமே திடுக்கிடல் குறையாமல் தான் பார்த்தனர் இருவரும்.
"அக்கா நீ என்ன அப்பாவை எதிர்த்து எதிர்த்து பேசற...? அவர் உனக்கு நல்லது தானே செய்றாரு"என்று கணேஷ் குழப்பமாக கேட்க
"இந்தாள் எனக்கு நல்லது செய்யலை கணேஷ். நீ இவரை நம்பாத"என்றவள் "நான் யார் கூட கோவிலுக்குப் போனேன்னு உங்களுக்கு தெரியும் தானே... அவனைத் தான் நான் கல்யாணம் பண்ணிக்குவேன்"என்றாள் உலகநாதனிடம் ஆவேசமாய்.
"அதுக்கு நீ உயிரோடு இருந்தா தானே..!?"என்ற உலகநாதனிடம் மாதவி"ஏன் இப்படி பேசுறீங்க?"என்றார் அழுகையுடன்.
"அவன் யார் னு தெரியுமா உனக்கு?"என்று மகளிடம் மீண்டும் கேட்க
"தெரியும் நல்லா தெரியும் அதனால தான் கல்யாணம் பண்ணிக்க போறேன். நீங்க உங்க குடும்பத்தைப் பாருங்க எனக்கு என் வாழ்க்கையைப் பார்க்கத் தெரியும்"என்றவளை மீண்டும் அடித்திருந்தார் உலகநாதன்.
"டேய் கணேஷா! இன்னும் ரெண்டு மணி நேரத்தில் மூணு பேரும் கிளம்பி நிக்கிறீங்க ஊருக்கு போறோம் அங்க உன் அக்காளுக்கு கல்யாணம்"என்றவர் வண்டிக்கு அழைத்தார்.
"நான் வர மாட்டேன்"என்று பிடிவாதமாக சொல்லிய பவித்ரா அழுகையோடு தன் அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்டாள்.
மாதவியோ உலகநாதன் அருகில் சென்றவர் "அவளுக்கு அந்த பையனைப் பிடிச்சு இருந்தா அவங்க வீட்டில் பேசிப் பார்க்கலாம்ங்க"என்று தன்மையாக கூற
"பேசாம போயிரு மாதவி. இதுக்கு தான் அவளை வேலைக்கு அனுப்ப வேணாம் னு சொன்னேன் கேட்டீயா நீ. உன் வளர்ப்போட லட்சணம் உன்னை மாதிரி வந்து நிக்குது அதுசரி விதை ஒண்ணு போட்டா சொரை ஒண்ணா முளைக்கும்"என்றதும் கண்ணில் நீர் ததும்ப பார்த்த மாதவியை கோபமாய் பார்த்து விட்டு "உன் மகளும் உன்னை மாதிரி"என்று சொல்லி முடிப்பதற்குள் மாதவி கையெடுத்துக் கும்பிட்டு விட்டு "உங்க இஷ்டம் போல செய்ங்க. என் பொண்ணு நான் வாழ்ந்த வாழ்க்கையை வாழ வேணாம்"என்று அழுதுகொண்டே சமையலறைப் பக்கம் சென்று விட்டார்.
நல்ல வேளையாக கணேஷ் அங்கில்லை. இருந்திருந்தால் தந்தை கூறிய வார்த்தைக்கு இருவருக்கும் வாக்குவாதம் ஆகிப் போயிருக்கும்.
உலகநாதன் கடும் கோபத்தில் இருந்தவர் யார் பேச்சையும் கேட்க மறுத்தார். இத்தனை பாதுகாப்பிற்கு பிறகும் மகள் காதலில் விழுந்திருக்கிறாளே என்ற கோபம் அதை விட ஆத்திரம் மேலிட காரணம் மகளின் காதலன் பற்றிய விஷயம் தான். யார் என்னவென்று தெரியாமல் காதலித்து வந்தது மட்டும் இல்லாமல் பெற்றவளின் நம்பிக்கையை உடைத்து விட்டாளே என்ற ஆற்றாமை இருந்தது உலகநாதனிடம்.
மாதவிக்கும் அதே ஆதங்கம் இருந்தாலும் அவள் விரும்பிய வாழ்வாவது அமையட்டும் என்று தான் தன் மனதை தேற்றிக் கொண்டார்.
கணேஷிற்கு இரண்டுங்கெட்டான் நிலை. அக்காவின் காதலை தவறென்பதா இல்லை அப்பாவின் கோபத்தை சரியென்று நினைப்பதா என புரியாமல் தவித்தவன் அக்காவின் விருப்பம் நிறைவேற வேண்டுதல் வைத்தான்.
உலகநாதன் தன் நிலையில் இருந்து மாறவில்லை. மகளை வீட்டுச் சிறையில் வைத்தார்.ஊருக்குச் செல்லாமல் மாதவியின் வீட்டிலேயே தங்கிக் கொண்டவரை நினைத்துப் பவித்ராவிற்கு இன்னும் இன்னும் ஆத்திரம் தான் பொங்கியது.
இதற்காகவே தன் காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறுவது என்று தீர்மானித்துக் கொண்டவள் தன் அம்மாவிடம் இருந்த கைபேசியில் தன் காதலனுக்கு அழைத்தவள் விஷயத்தை சுருக்கமாக கூறி விட்டு தன்னை எப்படியாவது அங்கிருந்து அழைத்துச் செல்லுமாறு மன்றாடினாள்.
அவனுமே தயாராக இருக்கும்படி சொல்லி விட்டான்.
......... தொடரும்
***********