பரிதியின் பவித்ரமே -09
பரிதி அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தான். பவித்ரா வேலை செய்து கொண்டிருக்கும் கிளைக்கு தான் கிளம்பியிருந்தான். அன்பழகன் சில வேலையாட்களை அமர்த்த அனுமதி கேட்டிருக்க அவர்களை பரிசோதித்து வேலைக்கு எடுக்கவே கிளம்பி இருந்தான். அங்கே முடித்து விட்டு தனபால் பார்த்து வைத்திருக்கும் பெண்ணை நேரில் சந்திக்கச் செல்ல வேண்டும்.
அதோடு திருநெல்வேலியில் வாகைக்குளம் அருகில் ஒரு கிளை நிறுவ வேறு வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான். அதையும் மேற்பார்வையிட செல்ல வேண்டும் என்று வேலைகள் வரிசைகட்டி நின்றன பரிதிக்கு.
"அண்ணா பதினோரு மணிக்கு தான் அவங்க வர்றாங்களாம் கரெக்டா போயிடுங்க"என்று அருள் வேறு சற்று முன் தகவல் தந்திருக்க இன்னும் வேகமாக கிளம்பி விட்டான்.
சன் ஃபிலிம் காருக்கான எக்ஸ்ட்ரா ஹாரன், டிஸ்ப்ளே மேட்கள் காருக்குள் பொருத்தப்படும் அழகு பொருட்கள் சாமி சிலைகள் என்று ஏகப்பட்டதை ஆர்டர் போட்டு இருந்தார் அன்பழகன். அனைத்திற்கும் பணத்தை வங்கியில் கட்டி விட்டு ஆடிட்டரிடம் அந்த வருடத்திற்கான கணக்கு வழக்குகளை ஒப்படைத்து முடிக்கும் போது மணி பத்தே முக்கால் ஆகியிருந்தது.
"இதுக்கு மேல பார்த்துக்கோங்க அன்பழகன். பவித்ரா கிட்ட இன்னும் வேறெதுவும் ஆர்டர் செய்யணுமானு கேட்டுக்கோங்க"என்றவன் "சீதாலட்சுமி மேடம் நீங்க அந்த சாமி சிலைகளை வேறெது வாங்கி வைக்கலாம் னு பார்த்து சொல்லுங்க"என்றான்.
"சார் பவித்ரா இனிமே வேலைக்கு வரமாட்டாங்கனு அவங்க தம்பி வந்து சொல்லிட்டு போனார்"என்றார் அன்பழகன் தயக்கமாக
"ஏனாம்?"என்று கேட்டவன் "முன்னாடியே சொல்ல மாட்டீங்களா நீங்க?"என்று கண்டித்தான்.
"காலையில் தான் சார் நேரா வந்து சொல்லிட்டு போறான் அந்த பையன். "என்றவர் மீண்டும் தயக்கமாக, "அந்த பொண்ணுக்கு கல்யாணம் போல சார்"என சொல்லவும் இன்னுமே அதிர்வு பரிதிக்கு.
"என்ன அன்பழகன் இது. இங்கே வேலை பார்த்த பொண்ணு கல்யாணம் அதை முன்னாடியே சொல்ல மாட்டாங்களா??"என்று புருவம் முடிச்சிட கேட்க
"சார் அது வந்து...."என்று இழுத்த சீதாலட்சுமி "பவி யாரையோ லவ் பண்ணி இருப்பா போல, அது வீட்டில் தெரிஞ்சு அவசரமா அவங்கப்பா வேறொரு இடத்தில் மாப்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்க போறார்னு அவ தம்பி சொன்னான்"என்றார்.
பரிதி அதற்கு மேல் எதுவும் விசாரிக்கவில்லை.
"சரி விடுங்க"என்றவன், "அப்போ அந்த இடத்துக்கும் வேறாளை செலக்ட் பண்ணிடுங்க அன்பழகன்"என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டான்.
அதற்குள் மீண்டும் அருள் அழைக்க
"டேய் கெளம்பிட்டேன்டா எத்தனை ஃபோன்?"என்று அலுத்துக் கொள்ள
"வேணாம் ண்ணா. அந்த பொண்ணோட குழந்தைக்கு திடீர் னு உடம்பு சரியில்லை போல அதான் இன்னொரு நாள் பார்க்கலாம்னு சொன்னாங்க"என்றான் அருள்.
"ஓஓஓ?!"என்ற பரிதி "வேறெதுவும் இல்லையே அருளு?"என்று தவிப்பாய் கேட்க
"அண்ணா அப்படி இருந்தால் நான் சொல்ல மாட்டேனா நெஜமாவே உடம்பு சரியில்லை போலண்ணா. சரி அதை விடு. புதுக்கடை ஆரம்பிக்கறது எப்போனு சொல்லு வாகைக்குளம் பக்கம் னு சொல்ற என் பெரிய மாமனார் ஏரியா அவர் வந்து தெறந்து வச்சா உனக்கு நல்ல பேர் கிடைக்கும்"என்றான்.
"டேய் !நான் என்ன அவரை நம்பியா கடை போடுறேன்?"என்று கடுப்பாக கேட்டுவிட்டான்.
"அட அதுக்கு சொல்லலண்ணா. சரி விடு அது உன் விருப்பம் தான்"என்று முடிக்க
"உனக்காக வேணும்னா கூப்பிடுறேன்"என்று சொல்ல அருளுக்கு அதில் மகிழ்ச்சியே
"அவர் ஊருக்குள்ள கொஞ்சம் பெரிய ஆள்ண்ணா. அவரை மதிச்சு நாம சொன்னா அதை கடைசி வரைக்கும் மறக்காம ஏதாவது அவசரம் னா கூட வந்து நிற்பாரு"என்றதும் சிறிது சமாதானம் ஆனான் பரிதி.
"சரிடா கூப்பிடுறேன்"என்றவன் "உனக்கு தெரிஞ்ச நம்பிக்கையான ஆள் யாராவது இருந்தால் சொல்லு அருள் வேலைக்கு வைக்கலாம். தொழிலுக்கு ஏத்த படிப்பாளியா இருந்தா கூடுதல் சிறப்பு"என்று கூற
"அதுக்கென்ன ண்ணா சொல்றேன்"என்ற அருள் சிறிது நேரம் பேசிவிட்டு இணைப்பைத் துண்டித்தான்.
மேலும் மேலும் தொழிலை யாருக்காக வளர்க்கிறோம் என்று அவனுக்கே புரியவில்லை ஆனாலும் மனதில் திருமணம் தள்ளிப் போகும் கவலை அடைத்து விடாமல் இருக்க வெறித்தனமாக உழைக்க துவங்கி இருந்தான்.
*************
பவித்ரா முகமெல்லாம் வீங்கிப் போய் மாதவி அருகில் அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்தாள்.
உலகநாதன் அவளை அடித்து துவைத்திருந்தார். அவள் காதலனை வரவழைத்து ஓடிப் போக முயற்சி செய்ய உலகநாதனின் ஆட்கள் அவளைப் பிடித்து விட்டனர்.
தடுக்க வந்த மாதவிக்கும் இரண்டு அடி விழ அதிலேயே அஞ்சி இருந்தவள் இப்போது தந்தையின் ஊருக்கு அம்மா தம்பியோடு பயணித்துக் கொண்டிருந்தாள்.
இன்னும் இரண்டு நாட்களில் திருமணம் எனச் சொல்லி விட கையறு நிலையில் தவித்துக் கொண்டிருந்தாள்.
கடைசி ஆயுதமாக மணமகனிடம் பேசிப் பார்ப்பது இல்லையேல் உயிரை விட்டு விடுவது என்ற எண்ணத்தில் தான் அவர்களோடு கிளம்பி இருந்தாள்.
மாதவிக்கும் மகளை இப்படி திருமணம் செய்து கொடுப்பதில் விருப்பம் இல்லை தான் ஆனால் வேறு வழியில்லையே... பவித்ரா முன்பே தன் காதலைப் பற்றிக் கூறி இருந்தால் ஏதேனும் முயற்சி செய்து இருப்பாரோ என்னவோ இப்போது கை மீறி போன நிலையில் உலகநாதனை எதிர்த்து எதுவும் செய்ய இயலவில்லை அவருக்கு. உலகநாதன் அவ்வளவு இலகுவாக இதனை விடுபவர் இல்லையே.
ஊர் வந்து விட்டது மாதவியையும் பிள்ளைகளையும் பண்ணை வீட்டில் இறக்கி விட்டவர் "டேய் தாசு. ஆளைப் போட்டு பாத்துக்க கூடவே மேல் வேலைக்கு ரெடி பண்ணு என்ன வசதி வேணுமோ செஞ்சு குடு. இடத்தை விட்டு நவரக் கூடாது புரிஞ்சுதால"என்று அதட்டி சொல்லிய உலகநாதன் ஜீப்பிலேயே கிளம்பி விட்டார்.
"ம்மா இங்கிருந்து போயிடலாம் மா"என்று பவித்ரா அழவும் மாதவி அவளை தீயென முறைத்தார்.
"டேய் கணேஷ் உங்கக்காவை மரியாதையா உள்ள வரச் சொல்லு"என்று முறைப்பாய் சொல்லி விட்டு அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு தான் சென்றார் மாதவி.
***********
உலகநாதன் வீட்டில் பெரிய பூகம்பமே வெடித்திருந்தது. கோதாவரி அழுகையும் ஒப்பாரியுமாக இருக்க மகள்கள் வேறு அவருக்கு ஒத்தூதிக் கொண்டிருந்தனர்.
"அவர் வரட்டும் மா நான் கேட்கிறேன் எல்லாம் அவர் இஷ்டமா?"என்று மூத்த மகள் காவேரி எரிச்சலாக பேச
"உள்ளதையும் புடுங்கிட்டு நம்மளை நடுத்தெருவுல விட்ருவான்டி அந்தாளு"என்று அதற்கும் அழுதார் கோதாவரி.
"அதுக்காக இந்த அநியாயத்தை எல்லாம் கண்டும் காணாம போக முடியுமா?"என்று இரண்டாவது மகள் யமுனா வெடித்தாள்.
"மூணு பொட்டைப்பிள்ளைகளை பெத்து வச்சிருக்கேனே... நான் என்ன செய்வேன்...கூத்தியாளா இருந்தாலும் சொத்துக்கு வாரிசையில்ல பெத்து போட்டு இருக்கா"என்று மீண்டும் அழுகையை கூட்ட
"அத்தை அப்படி எல்லாம் நாங்க விட்டுடுவோமா சட்டம் தெரியாம கதறாதீங்க. பொம்பளைப் பிள்ளைகளுக்கும் சொத்துல பங்கு உண்டு. அதுவும் முறையான வாரிசு உங்க மகளுக தான். பொடக்கால வந்தவ பெத்தது எல்லாம் வாரிசு ஆவுமா .....ஏதோ மாமனார் ஆச்சேனு அமைதியா போனா நட்டமா நிமுத்திட்டு அலையிறாரு"மதுரை மைந்தன் காவேரியின் கணவன் பாண்டித்துரை எகிறினான்.
இளையவள் அமராவதி ஏதோ யோசனையிலேயே அமர்ந்திருக்க
"எக்கோவ் மாமேன் வர்றதாட்டம் தெரியுது கம்முனு இரு"என்று அருளின் மாமியார் ஜானகி ஓடி வந்து எச்சரிக்கை செய்தார்.
"கோட்டிக்கார மனுசன் என்ன ஏதுனு கேட்காம குறுக்குல மிதிப்பானே?!"என்று அவசரமாக கொண்டையை அள்ளி முடிந்த கோதாவரி சமையலறைப் பக்கம் செல்ல பாண்டித்துரை அமைதியாக காவேரியின் அறைக்குள் தஞ்சம் புகுந்தான்
"வாய்ச் சவடால் தான் இந்தா பம்மிட்டியான்ல"கணவனை திட்டிக் கொண்டே அமராவதியின் அருகில் அமர்ந்தாள்.
"ஏலே மதுரக்காரி எங்கடே இருக்க?"என்று மூத்த பேத்தியை அழைத்துக் கொண்டே உள்ளே வந்தார் உலகநாதன்.
"வந்துட்டேன் அப்புச்சி"என்றபடி தண்ணீர் சொம்போடு வந்தாள் வசுதாரணி.
"எங்கத்தா உங்க அம்மைய காணல?"என்றபடி வாங்கிக் குடித்தார் உலகநாதன்.
மூத்த பேத்தி மீது எப்போதும் அவருக்கு ஒரு தனி பிரியம் தான். தன்னைப் பெற்றவளை உரித்து வைத்தாற் போல இருப்பதால் பெயர் சொல்லி கூட அழைக்க மாட்டார். எப்போதும் ஆத்தா மட்டுமே அழைப்பில் இருக்கும்.
"அம்மத்தா கூட போனாக"என்றவள் "ஒங்க மேல எனக்கு வருத்தம்"என்றாள் மெல்லிய குரலில்.
"ஏனாத்தா ஐயன் என்ன செஞ்சேனாம்?"சலுகையான குரல் தான் அவளிடத்தில் எப்போதுமே.
"யாரையோ கூட்டிட்டு வர்றீங்களாம் அம்மத்தா அழுதுகிட்டே இருக்குது"என்று வருத்தமாய் கூற
"ஒங்க சின்னம்மத்தாளும் சித்தி மாமனையும் கூட்டி வந்தேன்."என்றார் திடமாக
உள்ளிருந்த கோதாவரிக்கு பற்றிக் கொண்டு வந்தது.
'எம்புட்டு நெஞ்சழுத்தம் இந்தாளுக்கு?' ஆதங்கம் பொங்கியது அவருக்கு.
"நீங்க எம்புட்டு நல்லவக தாத்தா அப்பறம் ஏன்?"என்று சட்டென்று வாயை மூடிக் கொண்ட பேத்தியைக் கண்டு சிரித்தவர் "அப்புச்சிக்கு கூறு இல்லாம போச்சு னு ஓ அம்மை சொன்னாளோ"என்று இன்னும் இலகுவாய் சிரித்தார்.
"அது தப்புத்தான அப்புச்சி"என்று தைரியமாக சொல்லி விட
"தப்புத்தேன்.. அப்புச்சிக்கு அப்போ புத்தி பேதலிச்சு போச்சு"என்றவர் "ரெண்டு நாள் ல சித்திக்கு கல்யாணம் பேசி இருக்கேன். நீயி என்ன பண்ற தின்னவேலி போய் நல்ல பட்டுச்சீலை வாங்கி கட்டிக்கிற"என்றார் ஆசையுடன்.
வசுதாரணிக்கு மனதே ஆறவில்லை.
"போங்க அப்புச்சி எல்லாரும் வருத்தமா கெடக்கையில"என்னவளின் கேசம் வருடியவர் "போய் படித்தா"என்று அனுப்பி விட்டு "கோதாவரி"என அழைக்க
கோதாவரி வெளியே வந்தவர் "மேசையில எடுத்து வச்சுட்டேன்"என்றார் அழுது முடித்த குரலில்
"ஹ்ம்ம் ஹ்ம்ம்"என்றவர் "சின்னவளே"என்று அழைத்ததும் அமராவதி வந்து நின்றாள்.
"என்னத்துக்கு இன்னமும் கண்ணைக் கசக்குற அப்பன் நானிருக்கேன்"என்றார் அதட்டலாக. தலையை மட்டும் ஆட்டினாள் அவள்.
"வந்த புள்ளையளுக்கு என்னத்தடி ஆக்குன?"என்று கேட்டவாறு அறைக்குள் நுழைய
"சாப்புடுத மாதிரியா எல்லாம் நடக்குது"என்று எவ்வளவு கட்டுப்படுத்தியும் வாயை விட்டார் கோதாவரி.
"போய் கஞ்சிய வையில போல"என்று அதட்டி விட்டு வெள்ளைச்சட்டையை கழற்றி ஹேங்கரில் மாட்டினார்
"ஒண்ணும் சொல்லக்கூடாது"என்று நொடித்துக் கொண்டு போனவர் மனமெல்லாம் ஊரார் கேலி பேசுவார்களே என்றதில் தான் இருந்தது.
இத்தனை நாளும் ஊருக்குள் உலகநாதனின் வசதி வாய்ப்பை மனதில் கொண்டு வெளியே தெரியாமல் பேசியவர்கள் இன்று மாதவியை ஊருக்கே அழைத்து வந்ததில் வெளிப்படையாக பேசுவார்களே என்று எண்ணும் போதே எட்டிக்காய் கசப்பாக இறங்கியது எதிர்காலம் அவருள்.
பேரன் பேத்தி எடுத்து விட்டாலும் இந்த களங்கம் வந்தது வந்தது தானே... இதனால் பாதிக்கப்படுவது தன் பிள்ளைகள் தானே என்ற வேதனை அவருக்கு
கோதாவரி எதிர்காலம் நினைத்து கவலை கொள்ள உலகநாதன் கல்லை விழுங்கியது போல பவித்ராவின் திருமணத்தை ஏற்பாடு செய்திருந்தவர் அனைவருக்குமே அழைப்பு விடுத்திருந்தார். பவித்ராவிற்கு தான் திருமணம் என்பது தெரியாமலேயே உலகநாதன் அழைப்பின் பெயரில் வந்திருந்தான் இளம்பரிதி.
..... தொடரும்.