பாவை 01

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 94

Active member
Staff member
May 5, 2026
42
141
33
chennai
காலை ஒன்பது மணிக்கே ஆதவனின் ஆக்ரமிப்பினால், உடலுக்குள் உஷ்ணம் கிளப்ப, கோயம்பத்தூர் காந்திபுரம் பஸ்நிலையத்தின் இரைச்சலில் நின்றிருந்தவளை “நிகா” என்று யாரோ அழைக்கவும் திரும்பினாள்.

அஞ்சலி விரிந்த புன்னகையுடன் கைகாட்டி அழைக்கவும் நிகாவும் கைகாட்டிவிட்டு அஞ்சலி இருந்த இடத்திற்கு செல்ல இருவரும் பேருந்தில் ஏறினார்கள்.

“புத்தம் புது காலை, பொன்னிற வேளை” என்ற பாட்டு பேருந்தில் ஒலிக்க, அந்த இனிய கீதமும் பாடல் வரிகளும் மனதிற்கு புத்துணர்ச்சியை கொடுத்தது. புத்தம் புது காலை மட்டுமல்ல, புது இடம், புது வேலை, புது வாழ்க்கை என அனைத்துமே புதிது தான்.

சென்னைவாசியாக ஆடம்பர சூழ்நிலையில் வாழ்ந்தவள் இப்போது தன் சுயத்தை மறைத்து கோயம்பத்தூரில் மிக எளிமையாக வாழும் இந்த தனிமையான வாழ்க்கையும் மிகவும் புதிது. கசக்கும் பழைய நினைவுகளிலிருந்து மீண்டு எழ கடவுளாக தந்த இடமாற்றம், இவ்வளவு சீக்கிரம் தன்னை மீட்டெடுத்து விடும் என்று அவள் கனவிலும் எதிர்பார்த்திருக்கவில்லை. இதோ அவளால் பாடலை ரசிக்கவும் முடிகிறதே!

“ஹலோ சார், இது லேடிஸ் சீட் கொஞ்சம் எந்திரிக்கறீங்களா?” அஞ்சலியின் குரலில் கலைந்தாள்

“காலியா இருந்துச்சேனு உட்கார்ந்தேன். ஏன் உட்கார கூடாதா?”

“இங்க உட்காரவும் கூடாது, நிக்கவும் கூடாது, போய் பின்னாடி நில்லுங்க” மிரட்டினாள்

அந்த நபர் அஞ்சலியோடு வாக்குவாதம் செய்ய தொடங்கவும் கண்டக்டர் குரல் கொடுத்தார்.

“யோவ், ஊருக்கு புதுசா? இந்த ஊரு பஸ்ல லேடிஸ் முன்னாடியும் ஆம்பளைங்க பின்னாடி தான் உட்காரணும், நிக்கணும். சீட் இருந்தா கூட முன்னாடி வரக்கூடாது. போய்யா பின்னாடி” என்று அதட்ட, அவர் முனகி கொண்டே பின்னால் சொன்றார்.

நிகாவுக்கு கோயம்பத்தூர் பிடித்து போனதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று. முதன்முறை தன்னந்தனியாக கோயம்பத்தூர் வந்த போது எப்படி தனியாக சமாளிக்க போகிறோம் என்று கவலையாக இருந்தது. பேருந்திலேயே பயணம் செய்யாதிருந்தவளுக்கு பேருந்தில் பெண்கள் படும் இடிபாடுகளை அறிந்தே வைத்திருந்தாள். ஆனால் அதற்கு இடமே இல்லாமல் பேருந்தில் ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக அமர வைத்தனர். கூட்டம் அதிகமாக இருந்தபோதும் பெண்களுக்கு எந்த தொல்லையும் இல்லை.

அத்தோடு அவளுக்கு பிடித்த டப்பிங் ஆர்டிஸ்ட் வேலை. பெயரோடு, குரலையும் மாற்றியிருந்தாள். மேனேஜர் இளங்கோ நல்ல மனிதர் எந்த வித முகாந்திரமும் சான்றிதழும் இல்லாமல் அவளின் தீர்க்கமான தோற்றத்தையும் குரலையும் வைத்து வேலை கொடுத்து விட்டார். வேலையில் சேர்ந்த ஒரே வருடத்தில் அஞ்சலி நெருங்கிய தோழியாகி விட்டாள்.

“என்ன நிகா? வந்ததுல இருந்து எதுவுமே பேசாம யோசிச்சிட்டே இருக்கே?” என்றாள் அஞ்சலி. எப்போதும் போல நிகா புன்னகையையே பதிலாக அளிக்க, “அதுசரி நீ ரெக்கார்டிங் ரூம்ல மட்டுந்தானே வாய தொறப்ப” என்ற அஞ்சலி வழக்கம் போல கதையளக்க ஆரம்பித்து விட்டாள். நிகாவும் புன்னகையுடன் அவள் பேச்சை கேட்டுக் கொண்டிருந்தாள். சரவணம்பட்டி நிறுத்தம் வந்ததும் இருவரும் இறங்கி கொண்டார்கள்.

இருவரும் அங்கே வர்மன் ஸ்டுடியோ என்று இருந்த பெரிய கட்டிடத்திற்குள் நுழைந்தார்கள். இருவரையும் மேனேஜர் இளங்கோ அழைப்பதாக பணிப்பெண் வந்து சொல்லவும், அவரின் அறைக்குள் நுழைந்தார்கள்.

“நிகா, அஞ்சலி உங்க ரெண்டு பேருக்கும் ஒரு குட் நியூஸ். இது வரைக்கும் யூடியூப் சேனல், விளம்பரம்னு வாய்ஸ் ஓவர் கொடுத்துட்டு இருந்த உங்களுக்கு இந்தி சீரியல், கார்டூன், வேற லேங்க்வேஜ் படம் இதுக்கெல்லாம் டப்பிங் கொடுக்கறதுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைச்சிருக்கு”

“நிஜமாவா சார் சொல்றீங்க?” என்றாள் அஞ்சலி கண்களில் ஆர்வம் மின்ன

“ஆமா, நம்ம எம்டி வர்மன் யுஎஸ்ல இருந்து மொத்தமா இந்தியாவுலயே செட்டில் ஆக போறாராம். ஹாலிவுட், பாலிவுட்னு இந்தியாவுல இருக்கற நிறைய மொழியில வந்த நல்ல படங்கள், கார்ட்டூன் எல்லாத்துக்கும் டப்பிங் செய்யறதுக்கு முழு உரிமையை வாங்கியிருக்காராம். அதனால நம்ம கிட்ட இருக்கற ஆர்ட்டிஸ்ட் வாய்ஸ் எல்லாம் ரெக்கார்ட் பண்ணி அனுப்ப சொல்லியிருக்காரு. சோ சீக்கிரம் போய் உங்க பெஸ்ட் கொடுங்க. ஆல் த பெஸ்ட்” என்றான் இளங்கோ

நிகாவும் அஞ்சலியும் அவனுக்கு நன்றி சொல்லிவிட்டு ரெக்கார்டிங் அறைக்கு சென்றனர். தனித்தனியாக தங்கள் குரலை மாற்றி பேசினர். சவுண்ட் இன்ஜினியர் அவர்களின் குரலை பதிவிறக்கம் செய்து இளங்கோவிற்கு அனுப்ப, அவன் அதை தன் எம்டிக்கு அனுப்பினான்.

மாலை இருவரும் கிளம்பும் போது, “எம்டி, உங்க ரெண்டு பேர் குரலும் நல்லாயிருக்குனு செலக்ட் பண்ணிட்டாரு. மூணு வருஷத்துக்கு அக்ரிமென்ட் போட சொல்லியிருக்காரு. நீங்க ரெண்டு பேரும் கையெழுத்து போட்டீங்கனா நாளைலருந்து டப்பிங் வேலைய தொடங்கிடலாம்”

“கையெழுத்து போடணுமா? எதுக்கு?” அஞ்சலி கேட்க, நிகாவும் கேள்வியாக பார்த்தாள்.

“ஆமா, தீடிர்னு நீங்க வரலனா யார வச்சு டப்பிங்க முடிக்கறது? சீரியல் நடுவுல குரல் மாறிடுச்சுனா நல்லாயிருக்காதில்ல?”

இருவரும் யோசனையோடு நின்றிருந்தனர்.

“இதுல யோசிக்க எதுவுமில்ல. நல்ல வாய்ப்பு. உங்களுக்கு சம்பளம் இப்போ இருக்கறத விட டபுள் ஆகும். வேற எந்த டார்ச்சரும் இருக்காது. நீங்க வந்து பேசிட்டு போயிட்டே இருக்க வேண்டியது தான்”

“ஓகே சார், வீட்ல கேட்டுட்டு நாளைக்கு கையெழுத்து போடறேன்” என்று அஞ்சலி கூறவும் நிகாவும், ‘நானும் நாளைக்கு கையெழுத்து போடறேன்’ என்று கண்களால் சொல்லிவிட்டு அவளுடன் கிளம்பினாள். அவர்கள் கிளம்பும் போது சவுண்ட் இன்ஜினியர் ரவீந்தர் உள்ளே வரவும்

“இந்த பொண்ணு நிகா எப்பவும் வாயே தொறக்க மாட்டேங்குதே, ரெக்கார்டிங் ரூம்ல பேசுதா ரவி?”

“அதெல்லாம் பிச்சு உதறாங்க சார். சும்மா வெளியே பேசினா எனர்ஜி போயிடும்னு அமைதியா இருக்காங்க போல. ரெக்கார்டிங் ரூம் வந்துட்டா வேற நிகாவ பாக்கலாம். ஸ்கிரிப்ட்ல இருக்கறத டெவலப் பண்ணி, சீனுக்கு ஏத்த மாதிரி மூடை கொண்டு வந்து மடை திறந்த வெள்ளம் போல பேசறாங்க. எப்பவும் ஒரே டேக் தான். ரீ டேக்குக்கு எல்லாம் அவசியமே இல்ல. இந்த அஞ்சலி பொண்ணுகிட்ட தான் போராடணும். நிகா மேம் சீன் பேப்பர படிச்சதும் கற்பூரம் மாதிரி பிடிச்சுக்குவாங்க” என்றார் ரவி

சவுண்ட் இன்ஜினியர் ரவி சுலபத்தில் யாரையும் பாராட்டி பேச மாட்டார். எப்போதும் குறை தான் சொல்லுவார். அப்படி பட்டவரிடம் ஒரே வருடத்தில் நல்ல பெயர் எடுத்திருக்கிறாள் இந்த பெண் என்று நினைத்து கொண்டான் இளங்கோ.

பெண்கள் இருவரும் வீடு திரும்பும் போது பேருந்து பயணத்தில் ஒப்பந்தத்தின் சாதக பாதகங்களை அலசி ஆராய்ந்தபடி சென்றனர். அதாவது அஞ்சலி, “என் புருஷன் ஒத்துக்க மாட்டாரு நிகா? அவருக்கு திடீர்னு டிரான்ஸ்பர் ஆயிட்டா என்ன பண்றது? அக்ரிமென்ட்னாலே ஏதோ வில்லங்கமா தான் இருக்கும்” என்று பேசிக் கொண்டு வர, நிகா அமைதியாக கேட்டபடி வந்தாள்.

அன்றிரவு, தான் தங்கியிருக்கும் பெண்கள் விடுதியில் தூங்காமல் படுத்தவாறு யோசித்தாள். நடுத்தர விடுதியான அங்கே மிக குறைந்த வசதியே இருந்தது. நான்கைந்து பேர் ஒரே கழிப்பறையை பயன்படுத்துவது அவளுக்கு உவப்பானதாக இல்லை. உணவும் சரியில்லை. இவற்றையெல்லாம் கூட சமாளித்து கொள்ளலாம். வேலை செய்யும் பெண்களுக்கு மட்டுமே அங்கே தங்க அனுமதி. அவளுடன் யாரும் தங்கி கொள்ள அனுமதியில்லை. தனியாக வீடு எடுத்தால் அவளின் குறை தீர்ந்து விடும். ஆனால் அதற்கு இன்னும் செலவு அதிகமாகும். மேனேஜர் சொன்னபடி அக்ரிமென்ட்டில் கையெழுத்திட்டால் இப்போது வரும் சம்பளத்தை விட இருமடங்காகும். அத்தோடு புவன் புவனிகாவையும் அவளோடு அழைத்து வந்து விடலாம்.

இருவரின் நினைவு வந்ததும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுவது என்ற முடிவிற்கே வந்து விட்டாள். மறுநாள் அலுவலகம் சென்றதும் இளங்கோவிடம் தன் சம்மதத்தை தெரிவித்து ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டாள். இளங்கோவிற்கு மிகுந்த ஆச்சர்யம், மூன்று வருடமாக பணிபுரியும் அஞ்சலியே கையெழுத்து போட தயங்கி மறுத்தும் விட, நிகா கையெழுத்து போடுவது கடினம் என்றே நினைத்திருந்தான். அஞ்சலியும் நிகாவை தான் அதிர்ச்சியாக பார்த்திருந்தாள்.

பேருந்து பயணத்தின் போது அமைதியாக தான் பேசுவதை கேட்டு கொண்டு வந்தவள், தன் முடிவை தான் பின்பற்றுவாள் என்று அஞ்சலி நினைத்திருக்க, நிகா இப்போது புரியாத புதிராக தோன்றினாள். யோசித்து பார்க்கையில் அஞ்சலி தன்னை பற்றியும் தன் குடும்ப விவரம் முதல் மாமியார், நாத்தனார் கொடுமை வரை பாடி தீர்த்திருந்தாள். ஆனால் நிகா இதுவரையில் எதுவுமே பேசியதில்லை. அஞ்சலி பேசுவதை மட்டும் சிரத்தையாக கவனிப்பாள்.

நிகா தன்னிடம் உண்மையான நட்பை பாராட்டவில்லை என்று தோன்ற அவளிடம் எதுவும் பேசாமல் ரெக்கார்டிங் அறைக்கு சென்றாள். நிகாவுக்கு அஞ்சலியின் கோபம் புரிந்தது. இன்று மாலை பேருந்தில் செல்லும் போது அவளிடம் தன் நிலையை விளக்கி சமாதானம் செய்து கொள்ளலாம் என்று நினைத்து கொண்டு தனக்கான ரெக்கார்டிங் அறைக்குள் சென்றாள்.

அங்கே அவளுக்கு புது ஸ்க்ரிப்ட் பேப்பர் கொடுக்கப்பட்டது. அவள் தன் காதில் ஹெட்போனை மாட்டிக் கொண்டதும் “இது குழந்தைங்களுக்கான காமெடி கார்டூன். நல்லா ஜாலியா பேசுங்க” என்று ரவி தன் மைக்கில் டாக் பேக் பட்டனை அழுத்தி இன்ஸ்ரக்ஷன் கொடுக்க, நிகா பேச ஆரம்பித்தாள்.

அடிக்கடி கண்ணாடி திரைவழியே அவள் பேசுவது சரியா என்று ரவியை பார்க்க, அவர் கட்டை விரலை நீட்டி, மேலே தொடர்ந்து பேசுமாறு கையாட்டினார். பின்பு நிகா தன்னை மறந்தவளாய் குரலை மாற்றி காட்டு மைனாக்கள் பேசுவது போல கீச்சுக்குரலில் பேசி, அதற்கு குழந்தைகள் பதில் சொல்வது போல லயத்துடன் பேசிக் கொண்டே இருக்க, திடீரென்று கதவை திறந்து கொண்டு யாரோ வரவும், ரவி “கட்” என்று சொல்லி கையை உயர்த்தி, உள்ளே வந்தவர்களை உபசரித்தார்.

மேனேஜர் இளங்கோவுடன் வந்திருக்கும் இன்னொரு நபர் யார்? என்று நிகா அசுவாரசியமாய் பார்வையை செலுத்த அங்கே ரவிக்கு அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்தவனை பார்த்ததும் காலடியில் பூமி நழுவுவது போல உணர்ந்தாள்.

தன் கண்களையே நம்ப முடியாது, நன்றாக தேய்த்துவிட்டுக் கொண்டு பார்த்தாள். அங்கே இருந்த சவுண்ட் சிஸ்டத்தை பார்வையிட்ட படி ஏதோ ரவியிடம் அவன் கேள்வி கேட்டுக் கொண்டிருக்க, ரவி மிகுந்த மரியாதையுடன் பதிலளிப்பது கண்ணாடி திரையின் வழியே தெரிந்தது.

அவன் தானா? அவனாகவே இருந்தாலும் இது எப்படி சாத்தியம்? ஆச்சர்யமும், திகைப்பும், வெறுப்பும், வெறுமையும், இயலாமையும் என பலவிதமான உணர்வுகள் உள்ளுக்குள் கொந்தளிக்கவும், அவன் பார்க்கும் முன் இங்கிருந்து சென்றுவிடவேண்டும், இல்லையென்றால் எப்படி எதிர்வினையாற்ற போகிறோம் என்று அவளுக்கே புரியாத புதிராக இருந்தது.

அவள் சுதாரித்து காதில் மாட்டியிருந்த ஹெட்போனை நீக்குவதற்குள், ரவியின் குரல் அவள் காதில் ஒலித்தது.

“நீங்க விட்ட இடத்துல இருந்து கன்டினியூ பண்ணுங்க” என்று கூற, அவனருகே இருந்தவன் கூலிங்கிளாஸை கழற்றி விட்டு கண்ணாடி திரை வழியே தன் பச்சை நிற கண்களால் கூரிய பார்வையில் நிகாவை நோக்கினான். அந்த பார்வையில் அவளுக்கு சர்வமும் ஒடுங்கி கைகால்கள் நடுங்க ஆரம்பித்து விட்டது.

நான் ஏன் இப்படி நடுங்கறேன்? நான் என்ன தப்பு பண்ணேன்? நியாயமா பார்த்தா எனக்கு கோவமும் ஆத்திரமும் தானே வரணும்? தப்பு பண்ணவனே தைரியமா வந்து, அவன் மேல தான் தப்புனு எப்படி சொல்ல முடியும்? என்று இதுவரையில் வந்திராத சந்தேகம் வர கண்களை விரித்து அவனை பார்க்க, அவன் முகத்திலோ அதிருப்தி.

ரவியிடம் திரும்பி, கையை விரித்து என்ன என்பது போல பார்த்தான்.

“மேடம், ஏன் ஃப்ரீஸ் ஆகி நிக்கறீங்க? டயலாக் பேசுங்க. எம்டி உங்க வாய்ஸ் ரெக்கார்டிங் நேர்ல கேக்கறதுக்காக வந்திருக்காரு. சீக்கிரம் பேசுங்க” என்று சொல்ல

“என்னது? இவன் எம்டியா?” பூமியே தட்டாமாலை சுற்றியது.

“பேசுங்க” என்று ரவியுடன் சேர்ந்து இளங்கோவும் பேச, வேறுவழியின்றி அவள் ஸ்கிரிப்ட் பேப்பரை எடுத்து வீடியோவை பார்த்தபடி பேச ஆரம்பித்தாள். அவள் பார்வை கணிணி திரையில் இருந்தாலும் நினைவுகள் பின்னோக்கி செல்லவும் தன்னை மறந்து குரல் தழுதழுத்தது. கண்களில் கண்ணீர் உடைப்பெடுக்க தயாராகவும்,

“ஹலோ என்ன பண்ணிட்டு இருக்கீங்க? குழந்தைங்களோட கார்டூன் டிராமாவ பேசறதுக்கு எதுக்கு இவ்ளோ எமோஷன்?” என்றவனின் கம்பீர குரல் வெகுநாளைக்கு பிறகு காதில் கேட்கவும் இனி தாங்காது என்பது போல மயங்கி சரிந்தாள்.

“வாட் இஸ் திஸ் இளங்கோ?” என்று அவன் அதிர்ச்சியுடன் கேட்க

“சாரி சார், நல்லா பேசுவாங்க. இன்னைக்கு ஏதோ உடம்பு சரியில்லனு நினைக்கிறேன்.

“சரி, யாராச்சும் டாக்டர வரச்சொல்லி என்னாச்சுனு பாருங்க. மத்த டிபார்ட்மென்ட் எல்லாம் பார்த்துட்டு வரேன்” என்று எழுந்து சென்றான்.

விஷயம் கேள்விப்பட்ட அஞ்சலி நிகாவை தேடிவந்து அவளுக்கு முதலுதவி செய்ய, மருத்துவரும் வந்து பரிசோதித்துவிட்டு, அதிர்ச்சியில் அவள் மயங்கியிருக்கலாம் என்று சொல்லிவிட்டு மருந்துகளை கொடுத்து விட்டு சென்றார்.

ரவி அவளிடம் வந்து, “நிகா நீங்க இன்னைக்கு ரெஸ்ட் எடுத்துக்கோங்க, நாளைக்கு ரெக்கார்டிங் பாத்துக்கலாம்” தலையை மட்டும் அவள் அசைத்து அவசரமாக வெளியே வந்தாள். மேனேஜர் அறையை கடக்கும் போது, ‘இனி வேலைக்கு வரப்போவதில்லை, ஒப்பந்தத்தை கிழித்துவிடும்படி சொல்லிவிடலாம்’ என்று நினைத்தவளாய் இளங்கோவின் அறைக்கதவை தட்டினாள். எப்போதும் அறைக்கதவை தட்டாமலே எல்லோரும் உள்ளே செல்வது வழக்கம். இன்று புதிதாக கதவு தட்டப்படவும், யோசனையுடன் “யெஸ் கம் இன்” என்றான் இளங்கோ.

இளங்கோவின் குரலை கேட்டதும் ஆசுவாசம் அடைந்தவளாய் உள்ளே நுழைந்தவளுக்கு ஏசி அறையிலும் வியர்த்து வழிந்தது. இளங்கோவின் இருக்கையில் பச்சை விழிகளுடன் தன்னை கூர்ந்து பார்ப்பவனை கண்டதும் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது.

“நிகா, ஆர் யு ஓகே நவ்?” என்ற இளங்கோவின் கேள்வியில் அவள் அதிர்ந்து விழிக்க, பச்சை நிற விழிக்காரனின் புருவங்கள் இடுங்கியது.

உடனடியாக தன் பதட்டத்தை குறைத்து தலையை மட்டும் ஆட்டினாள்.

“ஹாய், ஐயம் வர்மன், ரிஷிவர்மன்” என்று கையை நீட்டினான்

நிகாவுக்கு அவன் தன்னை அறிமுகம் செய்து கொண்டதோ அவளை நோக்கி கை நீட்டியதோ எதுவுமே உறைக்கவில்லை. அவன் கண்களையே தான் உற்று நோக்கினாள்.

ரிஷிவர்மன் புருவ முடிச்சுடன் எழுந்து அவள் முன்னே தன் உயரத்திற்கு நிமிர்ந்து நின்றான். அப்போதும் நிகாவின் பார்வை அவன் கண்களை விட்டு அகலவில்லை.

அவள் உயரத்திற்கு குனிந்து, அவளை உற்று நோக்கினான். மிக அருகில் தெரிந்த அவன் முகமும் பச்சை நிற விழிகளும் அவள் உடலை நடுங்க செய்தது.

“Did you know me?” ஆழ்ந்து ஒலித்த அவன் குரலில் உறைந்து போனவளின் தலை வேகமாக இல்லையென இடவலமாக அசைந்தது.

அவன் அவளை கூர்ந்து நோக்கவும், கால்கள் தடுமாறி மீண்டும் மயங்கி தரையில் சரிந்தாள்.


(தொடரும்)
 

Attachments

  • பாவையின்றி பார்வையில்லை!.jpg
    பாவையின்றி பார்வையில்லை!.jpg
    238.8 KB · Views: 1
Last edited:

Author: STN - 94
Article Title: பாவை 01
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
370
83
Chennai
ஏண்டா இப்படி பிள்ளைய பயம் காட்டற🤣🤣🤣🤣🤣
பாவம் நிகா பயந்துட்டா......
Interesting start ❤️
 
  • Love
Reactions: STN - 94