பாவை 04

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 94

Active member
Staff member
May 5, 2026
42
141
33
chennai
மறுநாள் காலையிலேயே ரிஷிக்கு போன் செய்து, “இன்னைக்கு தான் வேலையில புதுசா ஐாயின் பண்ண போறேன், எனக்கு விஷ் பண்ணுங்க” என்றாள்.

அவனும் வாழ்த்து சொல்ல, அன்று மாலை போன் செய்து முதல் நாள் ஆபிசின் அனுபவம் குறித்து அவனுக்கு விவரித்தாள். முதலில் ரிஷிக்கு எரிச்சலாக இருந்தாலும், அவள் காதல், திருமணம் என்று உளராமல் இருந்ததால் அவள் பேச்சை ஏனோ தானோவென்று கேட்க ஆரம்பித்தான்.

பின்பு அவள் வேலையில் ஏதோ சந்தேகம் என்பதில் ஆரம்பித்து அனைத்திற்கும் அவனுடைய ஆலோசனை கேட்க, அதில் தோழமை மட்டுமே தெரிய அவளுக்கு பட்டும் படாமல் பதில் சொன்னான். ஆனால் நிருஷிகா நாள் தவறாமல் போன் செய்வதோடு ஒருநாள் அவன் போனை எடுக்கவில்லை என்றால் மீண்டும் மீண்டும் போன் செய்யவும், அவளின் எண்ணை பிளாக் செய்தான். ரிஷியை தொடர்பு கொள்ள முடியாமல் போகவே மீண்டும் குயிலோசை அலுவலகத்திற்கு சென்று .கதிர்மாறனை சந்தித்தாள்.

“மிஸ் நிருஷிகா, நீங்க பாக்கறதுக்கு பெரிய இடத்து பொண்ணா தெரியறீங்க. ரிஷி அப்பார்ட்மென்டல இருக்கற லோயர் மிடில் கிளாஸ் இளைஞன். தேவையில்லாம அவன் மனசுல குழப்பத்தை உண்டு பண்ணாதீங்க. உங்கள கெஞ்சி கேட்டுக்கறேன்” என்றான் கதிர்மாறன்

“ஆல்ரெடி நான் தான் குழம்பி போயிருக்கேன் கதிர். முதல்ல ரிஷியோட குரல எப்எம்ல கேக்கலனா அந்த நாளே எனக்கு சூன்யமா தோணும். இப்போ அவர்கிட்ட பேசலனா எனக்குனு யாருமே இல்லனு வாழ்க்கையே வெறுமையா தோணுது”

“இதுக்கு என்ன அர்த்தம்?” என்றான் கதிர் திகைப்புடன்

“காலம்பூரா அவர் குரல கேட்டுட்டு அவரோடவே இருக்கணும்னு ஆசப்படறேன். இதுக்கு அர்த்தம், அன்பா, பாசமா ஏன் காதலா கூட இருக்கலாம்”

“ஆர் யூ கிரேசி?”

“யெஸ், கிரேசி ஆன் ரிஷி”

“மிஸ்.நிருஷிகா. உங்க படிப்புல வேலைல கவனம் செலுத்துங்க,. கொஞ்ச நாள்ல இதெல்லாம் மறந்துடும். இந்த வயசுல ஒரு கம்பீரமான ஆண் குரல் மேல வந்த ஈர்ப்பு உங்களுக்கு காதலா தெரியலாம். ஆனா இந்த நிலமை மாறும்”

“என்ன பத்தி உங்களுக்கு தெரியாது கதிர். என்னோட காதல் என்னைக்கும் மாறாது. ரிஷி வெட்ஸ் ருஷினு நீங்க பாக்கத்தான் போறீங்க” என்றாள் உறுதியான குரலில்

கதிர்மாறன் அதிர்ச்சியாக அவளை பார்த்தான். “நீங்க ரிஷியோட குரல வச்சு அவன் ஹேண்டசம்மா இருப்பான்னு நினைக்காதீங்க. அவன் குள்ளமா, கருப்பா இருப்பான். தலைல சொட்டை வேற. நேர்ல பாக்காம எப்படி உங்க லைஃப்ல இவ்வளவு பெரிய முடிவ எடுக்கறீங்க?”

“ரிஷி எப்படி இருந்தாலும் எனக்கு அவர் தான் வேணும். அவர தவிர நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்”

ரிஷியின் தோற்றம் குறித்து சொல்லியும் நிருஷிகாவின் முகத்தில் இருந்த உறுதியில் ஒரு மாற்றமும் இல்லை என்றதும், “நான் ரிஷிகிட்ட பேசி உங்கள ஒருமுறை சந்திக்க ஏற்பாடு செய்யறேன்” என்றான்

“ரியலி? தேங்க் யூ சோ மச் கதிர்” என்று அவன் கைகளை குலுக்கினாள்.

“ஆனா காதல் கல்யாணம்னு என்கிட்ட உளர்ன மாதிரி அவன்கிட்ட உளராதீங்க”

“ஹலோ நான் ஒண்ணும் உளரல. உண்மைய தான் சொன்னேன்”

“நீங்க ரிஷிய நேர்ல மீட் பண்ண பிறகும் இதே மாதிரி என்கிட்ட சொன்னீங்கனா, உங்க காதலுக்கு நான் உதவி செய்யறேன்”

நிருஷிகாவுக்கு துள்ளிக்குதிக்காத குறைதான். “தேங்க்யூ சோ மச் கதிர். நீங்களாவது என்னோட காதல புரிஞ்சுக்கிட்டீங்களே”

“நான் சொன்னது நினைவிருக்கட்டும் நிருஷிகா, நீங்க ஒரு ரசிகையா மட்டும் தான் அவன்கிட்ட பேசணும், காதல் கல்யாணம்னு எதுவும் அவன்கிட்ட பேசக்கூடாது” என்றான் எச்சரிக்கயாக

முகம் கொள்ளா சிரிப்புடன் “ஓகே கதிர்” என்றவள் துள்ளி குதித்துக் கொண்டு வெளியேறினாள். ‘ரிஷி சொன்னது போல இவ குழந்தையாவே இருக்கா, இன்னும் வளரல’ என்று நினைத்துக் கொண்டான் கதிர்மாறன்.

மறுநாள் ரிஷியின் எண்ணிற்கு போன் செய்து பார்த்தாள். கதிர்மாறன் என்ன சொன்னானோ தெரியாது. ரிஷி அவளின் எண்ணை அன்பிளாக் செய்திருந்தான். அழைப்பையும் ஏற்று பேசினான்.

கதிர் எச்சரிக்கையின்படி காதல் திருமணம் என்பவற்றை தவிர்த்து அவனிடம் பொதுவான விசயங்களை பேசி நல்லபிள்ளையாக நடந்து கொண்டாள்.

“ரிஷி என்ன பண்ணிட்டு இருக்கீங்க?”

“பைக்ல போயிட்டு இருக்கேன்”

“சாரி, டிரைவிங்ல போன் பேச வேணாம், அப்பறம் போன் பண்றேன்” என்று போனை வைத்தாள்.

மீண்டும் இரவில் போன் செய்தாள். “ரிஷி சாப்டீங்களா?”

“இப்போ தான் சமைச்சுட்டு இருக்கேன்”

“ஏன் வீட்ல அம்மா இல்லயா?”

சிறிது நேர மெளனத்திற்கு பிறகு, “அவங்க ஒரு ஆக்சிடென்ட்ல போயிட்டாங்க நிருஷிகா” என்றான் உணர்ச்சி துடைத்த குரலில்

“உங்களோட இழப்ப என்னால புரிஞ்சுக்க முடியுது ரிஷி. எனக்கும் அப்பா அம்மா இல்ல”

“உங்க அப்பா அம்மாவும் இறந்துட்டாங்களா?”

“அப்பா மட்டும் இறந்துட்டாரு, அம்மா உயிரோட தான் இருக்காங்க”

“அப்புறம் ஏன் அப்பா அம்மா இல்லனு ரெண்டு பேரையும் சேர்த்து சொல்றே”

“அம்மா இருந்தும் இல்லாத மாதிரி. அதான் அப்படி சொன்னேன்”

“புரியல”

அவளின் கதையை சுருக்கமாக சொன்னாள்.

“சோ, உன் அம்மா இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டது உனக்கு பிடிக்கல. அதுக்காக அம்மா இல்லாத மாதிரினு சொல்றது தப்பு நிருஷிகா”

“என் அப்பா இருந்த இடத்துல என்னால இன்னொருத்தர நினைச்சு கூட பாக்க முடியல. அது எனக்கு புத்தி தெரியாத வயசுல நடந்திருந்தாலும் பரவாயில்ல. அவங்க பழக ஆரம்பிச்சப்போ நான் பத்தாவது படிச்சிட்டு இருந்தேன். வயசுக்கு வந்த பொண்ணு இருக்கறப்போ அவங்களுக்கு இதெல்லாம் தேவையா?” என்றாள் அசூசையாக

“தப்பா பேசக்கூடாது நிருஷிகா. அன்னைக்கு அவங்களோட சூழ்நிலை என்னனு யாருக்கு தெரியும்?”

“என்ன பொல்லாத சூழ்நிலை? பத்தாவது வரைக்கும் படிக்க வச்சவங்க, இன்னும் ஒரு நாலு வருஷம் பொறுத்துட்டு இருந்தா என்ன? நான் பெரியவளாகி வேலைக்கு போயி அவங்கள பாத்துக்க மாட்டேனா? பணக்காரனா ஒருத்தன் கிடைச்சதும்”

“வாயை மூடு, சின்ன புள்ள மாதிரி விளையாட்டு தனமா இருக்கறனு நினைச்சேன். உன்ன மாதிரி மனசுல அழுக்க வச்சிட்டு இருக்கறவகிட்ட எனக்கு பேசவே பிடிக்கல” என்று போனை கட் செய்திருந்தான்.

அவனுக்கு மீண்டும் பலமுறை போன் செய்து அவனை பேச வைத்தாள்.

“ரிஷி, எனக்குனு இருக்கறது நீங்க தான். நீங்களும் என்கிட்ட பேசலனா நான் என்ன பண்ணுவேன்? எங்கே போவேன்?” என்று தேம்பினாள்

“உனக்குனு இருக்கறது நானா? என்னை எவ்ளோ நாளா உனக்கு தெரியும்னு இப்படியெல்லாம் பேசிட்டு இருக்கே? சினிமா ரேடியோ மாதிரி சோசியல் மீடியாவுல ஹீரோவா தெரியறவன் நிஜத்துலயும் அப்படித்தான் இருப்பான்னு நினைக்காத. எப்எம்ல நான் பேசினதெல்லாம் ஸ்கிரிப்ட்”

“தயவுசெஞ்சு என்னை பிரபலமா இருக்கறவங்க பின்னாடி சுத்தறவளா நினைக்காதீங்க ரிஷி. எனக்குனு யாருமே இல்லனு நான் நினைச்சு அழும்போதெல்லாம் ஏனோ நான் உங்கள தான் நினைச்சுப்பேன். என் கூட படிச்ச பிரெண்ட்ஸ் எல்லாரும் என் அம்மா பத்தியும் புதுசா வந்திருக்கற அப்பாவ பத்தியும் கேலி பண்ணி பேசுவாங்க. அதனால அவங்க கிட்ட பேசறத விட்டுட்டேன். புதுசா யாரையாவது சந்திச்சா, அவங்க என் அப்பா அம்மாவ பத்தி விசாரிப்பாங்கனு நான் யார்கிட்டயும் பேசவே மாட்டேன். எப்பவும் தனியா தான் இருப்பேன், எனக்குள்ளவே பேசிப்பேன். எல்லாரும் என்னை ஒரு மாதிரி பாக்க ஆரம்பிச்சுட்டாங்க.

தனிமை ரொம்ப கொடுமை ரிஷி, என் தனிமையை போக்கினது உங்களோட குரல் தான். முதல்ல உங்களோட கம்பீரமான குரல கேட்டு உங்க பேச்சை கவனிக்க ஆரம்பிச்சேன். நீங்க சொல்ற ஒவ்வொரு வாசகமும் என்னோட சூழ்நிலைக்கு சமாதானம் செய்யற மாதிரி இருந்துச்சு, உங்க காமெடி என்னை சிரிக்க வச்சது. ஹெட்போனை போட்டுக்கிட்டு எப்பவும் உங்களோட பேச்சை கேட்டுட்டே இருப்பேன். மனசுக்குள்ள உங்களோட பேசிட்டு இருப்பேன். அது உங்களுக்கு தெரிய வாய்ப்பில்ல. சோ நீங்க என்னை அந்நியமா பாக்கறீங்க. ஆனா என்னை பொறுத்தவரைக்கும் நீங்க தான் எனக்கு எல்லாம். அதனால தான் யார்கிட்டயும், ஏன் என் அம்மாகிட்ட ஷேர் பண்ணாத விஷயங்கள கூட உங்க கிட்ட ஷேர் பண்றேன்.

ரிஷி, என் நிலைமையில இருந்து யோசிச்சு பாருங்க. என் அம்மா நான் பன்னென்டாவது படிக்கும் போது ஒருத்தர கல்யாணம் பண்ணிக்கிட்டு கர்ப்பமா வந்து நின்னாங்க. எனக்கு எவ்வளவு அவமானமா இருந்துச்சு தெரியுமா?” அவனிடம் உடைந்து அழுதாள்.

ரிஷிக்கு நிருஷிகாவின் நிலை புரிந்தது. இளம் வயதில் அவளுக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் மனஅழுத்தத்திலேயே தனிமையில் வளர்ந்திருக்கிறாள். இதற்கிடையில் அவளுடைய அம்மாவும் சமாதானம் செய்யாததால் பிடிவாத குணத்துடன் இருந்திருக்கிறாள். நேரில் சந்திக்காவிட்டாலும் அவளுக்கு தெரிந்த ரிஷியிடம் உரிமை எடுத்துக் கொண்டு அதே பிடிவாதத்தை காட்டுகிறாள். இப்படிப்பட்ட சூழ்நிலையிலிருப்பவளை அவனும் உதாசீனப்படுத்தினால், அவளின் நிலை மோசமாககூடும் என்பதை உணர்ந்தான். சிறு பிள்ளையாய் போனில் விசும்பிக் கொண்டிருப்பவளின் அழுகையில் அவன் மனம் லேசாக கரைய ஆரம்பித்தது.

“அழாதே நிருஷிகா”

“சின்ன வயசுல அப்பா இறந்துட்டாரு. அவர் முகம் கூட எனக்கு நினைவில்லை. அம்மா வேலைக்கு போய் தான் என்னை வளர்த்தாங்க. எங்களுக்குன்னு வேற யாரும் கிடையாது. எனக்கு அம்மா, அம்மாக்கு நான்னு இருந்தோம். திடீர்னு ஒருத்தர கூட்டிட்டு வந்தா எனக்கு எப்படி இருக்கும் சொல்லுங்க? அவங்க கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்தப்போ என்னோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் எப்படி கிண்டல் பண்ணாங்க தெரியுமா? என்னோட பீலிங்ஸ்ஸ யார் கிட்டயும் ஷேர் பண்ண முடியாம எவ்வளவு லோன்லியா இருந்தேன் தெரியுமா? இதுல அம்மாவுக்கு ரெட்ட குழந்தைங்க. அவங்கள கவனிக்கவே அவங்களுக்கு நேரம் பத்தல. அவங்க மட்டும் குடும்பமா ஒன்னா வெளிய போயிட்டு வருவாங்க. நான் மட்டும் வேண்டாதவளா ஆயிட்டேன். அவங்க கூட இருக்கவும் முடியாம வெளியே போகவும் முடியாம இருக்கேன் ரிஷி!” என்றாள் அழுது கொண்டே

ரிஷியின் பாறை மனது அவளின் தேம்பலில் கரைந்து பாகாய் உருகியது. இளம்வயதில் இந்த மாதிரி வேதனையை அனுபவித்திருக்கிறாளே.‌ அவள் நிலையிலிருந்து பார்த்தால் அன்னையின் திருமணம் அவளுக்கு ஏமாற்றம்தான்.

“நிரு அழாதடா!” என்றான் ஆறுதலாக. அவனின் செல்ல அழைப்பில் மீண்டும் கதறி அழுதாள்.‌ என்னவோ அந்த நிமிடம் அச்சிறு பெண்ணின் தலையை தன் தோளில் சாய்த்து ஆறுதல் படுத்த வேண்டும் என்று தோன்றியது.‌ அவளின் அழுகையை நிறுத்த இயலாதவனாய். “நிரு நீ அழாம நான் சொல்ற மாதிரி நடந்துக்கிட்டா நீ என்னை சந்திக்க சம்மதிப்பேன்” என்றான். பட்டென்று அழுகையை நிறுத்தியவள் “நிஜமாவா சொல்றீங்க?” என கேட்டாள்.

“ஆமா! உன்னோட நிலைமை எனக்கு நல்லாவே புரியுது. வளர்ந்த பொண்ணான உன்னால புதுசா ஒரு உறவு, அதுவும் அப்பாங்கற ஸ்தானத்தை ஏத்துக்க முடியாது தான். அத நான் ஒத்துக்குறேன்.‌ ஆனா அவங்களோட சூழ்நிலை என்னன்னு நீயும் புரிஞ்சு நடந்திருக்கணும்.‌ உனக்கு புரியலனாலும் ஏன் திடீர்னு கல்யாணம் பண்ணிக்கிட்டிங்கன்னு கேட்டிருக்கலாம். அத கேட்க சங்கடமா இருந்தாலும் அவங்களா பேச வரும்போது அவங்க பேச்சை கவனிச்சு இருக்கணும். இத்தனை வருஷமா நீ அதே வெறுப்போடு இருக்கிறனா இதுவரைக்கும் நீ அவங்களோட மனசு விட்டு பேசுனது இல்லைன்னு நல்லாவே தெரியுது, கரெக்டா?”

“ஆமா, நான் உங்க கூட சரியா பேச மாட்டேன்.‌ அவங்க பேச வந்தாலும் ஹெட்போனை காதுல போட்டுப்பேன்”

“தப்பு நிருஷிகா! அம்மான்னா தியாகம் மட்டும் தான் செய்யணுமா? அவங்களும் நகமும் சதையுமா எல்லா உணர்ச்சிகளையும் உள்ளடக்கிய பெண். உன் சின்ன வயசுலயே அப்பா இறந்துட்டாருன்னு சொல்றே. அவங்க தனி மனுஷியா உன்னை வளர்த்து ஆளாக்கி இருக்காங்க. ஏதோ ஒரு கட்டத்துல அவங்கள புரிஞ்சவங்களா ஒருத்தர் கிடைச்சதும் கல்யாணம் பண்ண நினைச்சிருக்காங்க.‌ இதுல என்ன தப்பு?

தனியா இருக்கற பொண்ணுங்களுக்கு சமுதாயத்துல எவ்வளவு பாலியல் பிரச்சனை வருதுன்னு உனக்கு தெரியுமா? தினந்தினம் அவங்க அனல்ல வெந்து சாகுறத விட கல்யாணம் பண்ணிக்கிட்டு அவங்களுக்கும் உனக்கும் பாதுகாப்பு ஏற்படுத்திக்கிட்டாங்கன்னு தான் எனக்கு தோணுது.‌

உன் அம்மாவுக்கு நீ சொல்ற மாதிரி பணமோ உணர்வுகளோ தான் முக்கியம்னா, அதுக்கு கல்யாணம் பண்ணித்தான் ஆகணும்னு அவசியமில்லை நிருஷிகா.‌ உனக்கு தெரியாம அவங்க தப்பான உறவுல இருந்தா மட்டும் அது சரியா? உன்னோட டீன் ஏஜ்ல அவங்க துணிஞ்சு இந்த முடிவை ஏதோ ஒரு காரணத்துக்காக எடுத்து இருக்காங்க. இதுக்கு நீ பாராட்டலனா கூட பரவாயில்லை. கொச்சைப்படுத்தி பேசாத. நாளைக்கு நீ கல்யாணம் ஆகி போயிட்டா அவங்க தனியா தானே இருந்திருப்பாங்க? அவங்களோட உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுக்கணும்ம்மா. கல்யாணம் பண்ணிக்கிட்டு உன்னை மொத்தமா வேணாம்னு ஹாஸ்டலுக்கு அனுப்பலயே.‌ கூடவே தானே வெச்சிட்டு இருக்காங்க. லைன்ல இருக்கியா?”

“ம்”

“இனிமே அவங்கள எடுத்தெரிஞ்சு பேசக் கூடாது சரியா? அவங்க ஏதாச்சும் கேட்டா முகத்தை திருப்பிட்டு போகாம பொறுமையா பதில் சொல்லணும்”

“ம் ஒகே”

“குட் கேர்ள்.‌ முடிஞ்சா அவங்களோட சூழ்நிலையை கேட்டு தெரிஞ்சுக்க. நான் சொன்னது நியாயம்னு புரியும்”

“ம், நாம எப்போ மீட் பண்ணலாம்?”

“நான் சொன்னது எதுவும் உன் மரமண்டையில ஏறவே இல்லை அப்படித்தானே?” என்றான் லேசான கோபத்துடன்

“எல்லாம் நல்லாவே ஏறுச்சு.‌ உடனே எப்படி மாறிட முடியும்? கொஞ்சம் கொஞ்சமா ட்ரை பண்றேன். இப்போதைக்கு முகத்தை திருப்பிட்டு போகாம இருக்க முயற்சி பண்றேன்

முன்னாடியெல்லாம் உங்க பேச்சு என் சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி அமைஞ்சிருக்கும். அப்பவே நான் உங்க பேச்சை தட்டாம கேப்பேன். இப்போ நீங்க என்ன பத்தி தெரிஞ்சுக்கிட்டு, எனக்காக அறிவுரை சொல்றீங்க.‌ அத கேட்காம இருப்பேனா? ஏன் முன்னாடியே உங்க கிட்ட பேச முயற்சிக்கலன்னு தான் எனக்கு தோணுது.‌ எனக்குன்னு யாருமே இல்லனு நினைச்சு தனிமையில அழுதுட்டு இருப்பேன். யார் கூடவும் பேச பிடிக்காது. நான் பேச விரும்பினது உங்க கிட்ட மட்டும்தான். ரியலி ஐ வாண்ட் டு மீட் யு ரிஷி” என்றாள் தழுதழுத்த குரலில்

இந்த முறை ரிஷியால் அவளை மறுத்து பேச முடியவில்லை.‌ அதே சமயம் சம்மதிக்கவும் முடியாமல் திணறினான்.

“ரிஷி” சிணுங்கினாள்

“ஓகே, நேரம் கிடைக்கும்போது சொல்றேன்” சமாளித்தான்

“தேங்க்யூ ரிஷி உம்மா” என்று கைபேசியில் முத்த மழை பொழிந்து அவள் தன் மகிழ்ச்சியை தெரிவிக்க ரிஷியின் இதயம் நின்று துடித்தது.‌ பட்டென அலைபேசியின் இணைப்பைத் துண்டித்தவன் நீண்ட பெருமூச்சுகளை எடுத்து விட்டபடி வெகு நேரம் ஏதோ யோசனையில் நின்றிருந்தான்.‌

ரிஷி எத்தனையோ பெண்களிடம் பேசியிருக்கிறான், அதெல்லாம் எப்எம் வழியாக மட்டுமே. தனிப்பட்ட எண்ணிலிருந்து இதுவரை யாரிடமும் சொந்த விஷயமாக கலந்துரையாடியதில்லை. யாரென்று முகம் தெரியாதவனிடம் தன் மொத்த சோகத்தையும் கொட்டுகிறாள். அவன் சொல்வதெல்லாம் சரியென்று உடனே ஏற்றுக் கொள்கிறாள்.

“ரிஷி” என்றபடி கதிர்மாறன் உள்ளே வந்தான்.

“உன் கிட்ட ஒரு விஷயம் பேசணும்” என்றவனும் நிருஷிகாவை பற்றியே பேசவும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான் ரிஷி.

*********

அன்றிரவு பணிப்பெண் நிருஷிகாவின் அறைக்கதவை தட்டி விட்டு உள்ளே வந்தாள்.

டைனிங் டேபிளில் அனைவருடனும் சேர்ந்து உண்ண பிடிக்காமல் எப்போதும் அவளது அறையில் தனியே உண்பது அவளின் வழக்கம் என்பதால் “சின்னம்மா சாப்பாடு ரெடி ஆயிடுச்சு, எடுத்துட்டு வரட்டுமா?” என கேட்டாள்.

“டைனிங் டேபிள்ள வைச்சுடுங்க, நானே வந்து சாப்பிட்டுக்கிறேன்” என்றாள். பணிப்பெண் அவளை ஆச்சரியமாக பார்த்துவிட்டு வெளியேறினாள்.‌ விஷயம் கேள்விப்பட்ட மைதிலிக்கு தலைகால் புரியவில்லை.‌ ராஜுக்கு போன் செய்து விஷயத்தை சொல்ல அவர் உடனே வீட்டிற்கு கிளம்பி வந்து விட்டார்.

நிருஷிகா தயக்கத்துடன் ஹாலுக்கு வந்து சமையல் அறையை ஒட்டிய டைனிங் டேபிளில் அமர்ந்தாள். அவளை கண்டதும் புவனும் புவனிகாவும் ஓடி வந்து அவளின் இரு பக்கத்திலும் அமர்ந்து கொண்டனர்.‌

“மம்மி! நாங்களும் அக்கா கூட சாப்பிடறோம்” என்றனர் கோரசாக

மைதிலி மகளைப் பார்வையால் தழுவிக் கொண்டே மூவருக்கும் உணவை பரிமாறினார். நிருஷிகா இருவருடனும் பேசிக்கொண்டே சகஜமாக சாப்பிட தொடங்கி இருந்தாள்.‌ தேவ்ராஜ் உள்ளே நுழைந்ததும் “ராஜ் நீங்களும் உட்கார்ந்து பசங்களோட சாப்பிடுங்க” என்றதும் நிருஷி ராஜ்ஜை பார்க்க அவரும் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார்.‌ எங்கே தான் வந்து அமர்ந்தால் எழுந்து சென்று விடுவாளோ? என்ற பயத்துடன் அவளை பார்த்தார்.‌ அவள் கண்டு கொள்ளாமல் மீண்டும் தம்பி தங்கைகளுடன் அரட்டை அடித்துக் கொண்டே சாப்பிட ஆரம்பிக்கவும் சற்று தயக்கத்துடன் வந்து அமர்ந்தார்.

அவர் வீட்டில் அவர் சம்பாத்தியத்தில் செய்த உணவை கூட அவள் முன்னால் சாப்பிட தயங்குகிறார் என்றால் அது தன்னால்தான் என்று நிருஷிக்கு புரிந்தது. எனவே முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள்.

“நிருஷி புது வேலை எப்படி போகுது?” தேவ்ராஜ் விசாரிக்க,

“நாட் பேட்” என்று சுருக்கமாக அவள் அளித்த பதிலே ராஜ் மற்றும் மைதிலியின் முகத்தில் நிம்மதியை வர வைத்திருந்தது.‌ நிருஷிகா ஓர கண்ணால் அதை கண்டும் காணாதது போல இருந்து கொண்டாள். சாப்பிட்டு முடித்ததும் அவளுடன் சென்ற புவனும் புவனிகாகவும் அவளின் அறையின் வாசலிலேயே தயங்கி நின்றனர்.‌

எப்போதும் அவர்களுக்கு அந்த அறைக்குள் அனுமதி இருந்ததில்லை என்பது வாண்டுகளுக்கு நன்கு புரிந்து இருந்தது. அதை உணர்ந்தவள் முதல் முறையாக அவர்களை தன் கூட்டுக்குள் அனுமதித்தாள். குதூகலத்துடன் ஓடி வந்த இருவரும் அவளின் கட்டிலில் ஏறி குதித்து அவருடைய கூலிங் கிளாஸ் மற்றும் ஹெட்போனை அணிந்து அவளைப் போலவே செய்து காட்டினார்கள்.‌ ஹெட்போனை மாட்டிக்கொண்டு நிருஷி தனியாக சிரிப்பதை போலவே புவனிகா செய்து காட்ட, “நான் தனியா சிரிக்கும் போது இப்படித்தான் லூசு மாதிரி தெரிவேனா?” ‌ என்று கேட்டாள்.

இருவரும் ஆமாம் என்று வேகமாக தலையை ஆட்டினார்கள்.‌ அவர்களை அடிக்கும் பாவனையோடு அவள் துரத்த, கையில் சிக்காமல் வாண்டுகள் ஓட்டம் பிடிக்க என அவளது அறையில் ஆர்ப்பாட்டச் சத்தம் ஹாலில் இருந்த மைதிலிக்கும் ராஜுக்கும் கேட்டது. நிருஷியும் பிள்ளைகளும் ஓடிக் களைத்து அதே அறையில் உறங்கி இருந்தனர்.

மைதிலி மகிழ்ச்சியில் கதறி அழ, ராஜ் மனைவியை தோளில் சாய்த்துக் கொண்டார். நிருஷித் தன்னை புரிந்து கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று அவருக்கும் ஆனந்த கண்ணீர் கண்களை நிறைத்திருந்தது.

“நிருகிட்ட உண்மைய சொல்லிடலாமா?” இருவருமே ஒருவரை ஒருவர் பார்த்து கேட்டு, பின்பு ஒருவருக்காக மற்றவர் யோசித்து வேண்டாம் என்று பதில் கூறிக்கொண்டனர்.

(தொடரும்)
 

Attachments

  • பாவையின்றி பார்வையில்லை! (2).jpg
    பாவையின்றி பார்வையில்லை! (2).jpg
    211.5 KB · Views: 1
Last edited:

Author: STN - 94
Article Title: பாவை 04
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
370
83
Chennai
ரிஷி ரொம்ப பிராக்டிகல்❤️❤️❤️❤️
நிரு இப்பாவது அவங்க பக்கத்தை கேட்கணும்னு தோணுச்சே.....
 
  • Love
Reactions: STN - 94