அன்று காலையும் நிருஷிகா அனைவருடனும் சேர்ந்து சாப்பிட்டு விட்டு வேலைக்கு தயாராகி சென்றாள்.
செல்லும் வழியிலேயே ரிஷிக்கு போன் செய்து, “ரிஷி நீங்க சொன்ன மாதிரி நடந்துக்கிட்டேன். அம்மாவும் அவரும் ஹாப்பியா இருக்குற மாதிரி தெரியுது. ஆனா அவங்க கிட்ட நான் எதுவும் பேசல”
“கொஞ்சம் கொஞ்சமா பேச முயற்சி செய் நிரு”
“ஓகே ட்ரை பண்றேன்” என்று உடனே அவன் கட்டளை ஏற்றுக் கொண்டாள். தன்னையும் தன் பேச்சையும் கண்மூடித்தனமாக நம்புகிறாளே என்று ரிஷிக்கு மலைப்பாக இருந்தது.
“ரிஷி மீட் பண்ணலாம்னு சொன்னீங்களே, எப்போ மீட் பண்ணலாம்?” என்றாள்
“கதிர்கிட்ட பேசிட்டு சொல்றேன்” என்று போனை வைத்திருந்தான்
இன்று வேலை எப்போது முடியும் என்று நேரத்தை நெட்டி தள்ளியவள் மாலை ஆனதும் குயிலோசை எப்எம் அலுவலகத்திற்கு சென்றாள். கதிர் அவளுக்காக காத்திருந்தான் போலும். நிருஷிகாவை கண்டதும் அவளிடம் வந்தான்.
“என்ன கதிர்? எப்போ வந்தாலும் நீங்க ஆபீஸ்ல இருக்கீங்க. ரிஷி ஆபீஸ்ல பார்க்கவே முடியல?”
“அவன் ரெக்கார்டிங்க்கு வருவான், முடிஞ்சதும் உடனே கிளம்பிருவான். அவனோட சம்பளம் முதல் எல்லாத்தையும் நான் தான் பாத்துப்பேன்”
“சார் அவ்வளவு பிசியா?”
“நிருஷிகா நான் ரிஷிய மீட் பண்றதுக்கு உன்னை கூட்டிட்டு போறேன்”
“வாவ்” துள்ளி குதித்தாள்
“பட் ஒன் கண்டிஷன். அவன நேர்ல பாக்கும் போது ஒருவேளை உனக்கு பிடிக்காம கூட போகலாம். அது உன் பேச்சுலயோ செயல்லயோ தெரியக்கூடாது. இந்த மீட்டிங் அப்புறம் ரிஷி உன்னை சந்திக்க விரும்பலனா நீ அவன தொல்ல செய்யக்கூடாது”
“ஒரு பையன் கிட்ட பொண்ணுக்காக இப்படி எச்சரிக்கை பண்ணா பரவால்ல. என்கிட்ட உங்க பிரெண்டுக்காக வார்ன் பண்றீங்களே. அட வாங்க பாஸ் நான் ஒண்ணும் உங்க பிரெண்ட் ரிஷிய கடத்திட்டு போயிர மாட்டேன்” என்றாள் முகத்தை சுருக்கி அழகு காட்டி.
கதிர்மாறன் சிரித்துக் கொண்டே நிருஷிகாவுடனே சென்று அவளது ஸ்கூட்டியின் பின்னால் அமர்ந்தான். ரிஷியின் அப்பார்ட்மெண்ட் இருக்கும் இடத்திற்கான வழியை சொன்னான்.
இருவரும் ஒரு பெரிய அப்பார்ட்மெண்ட் இருக்கும் வளாகத்திற்குள் நுழைந்தனர். அங்கே இருந்த பூங்காவில் அமர சொன்னான்.
“ஏன் அவர் அப்பார்ட்மெண்ட்க்குள்ள போகலாமில்ல” கேட்டாள் நிருஷிகா
“ரிஷி இங்க தான் வெயிட் பண்ண சொன்னான்” என்றபடி கதிர் ரிஷிக்கு போன் செய்தான்
நிருஷிகா அந்த அப்பார்ட்மெண்ட் கட்டிடத்தில் முதன்மை வாயிலையே விழி எடுக்காமல் பார்த்து கொண்டிருந்தாள். அவளுக்குள் அவன் உருவத்தைப் பற்றிய ஆயிரம் கற்பனைகள். கதிர் சொன்னது போல ரிஷி குட்டையாகவோ கருப்பாகவோ ஏன் சொட்டையாக இருந்தாலும் முகத்தில் எந்த ஒரு சின்ன மாறுதலையும் காட்டக்கூடாது. அவள் காதலித்தது ரிஷி என்ற நல்ல மனிதனை, அவனின் உருவத்தையல்ல என்று தனக்குள் உருபோட்டுக் கொண்டாள்.
வெளிர் நீல நிற சர்ட், பிளாக் பேன்ட், கண்களில் கூலிங் கிளாஸ் தலையில் தொப்பியுடன் நெடுநெடுவென்று வளர்ந்த ஒருவன் அவள் முன்னாள் வந்து நின்றதை கவனிக்காமல் அவள் எட்டி முதன்மை வாசலையே பார்த்திருந்தாள்.
“இன்னும் வேற யாராச்சும் வரணுமா நிரு?” என்று சமீபத்தில் கேட்ட ரிஷியின் குரலில் அதிர்ந்து எழுந்து விட்டாள். அவன் முகத்தை அண்ணாந்து தான் பார்க்க வேண்டும் போல.
என்னவோ போனில் தயக்கமே இல்லாமல் பேசிவிட்டு இப்போது கண்முன்னே நிற்பவனிடம் பேச வாய் வராமல் உறைந்து நின்றாள். அவன் குரல் மட்டுமல்ல தோற்றமும் கம்பீரமாக இருந்தது.
“கதிர் என்னை பாக்கணும்னு யாரோ சொன்னாங்களே, அவங்க வரலையா? என்றான் ரிஷி கிண்டலாக
“ரிஷி! உங்கள நேர்ல பார்த்ததும் படப்படனு வருது!” என்று மெல்லிய குரலில் சிணுங்கினாள்.
“மீட் பண்ற வரைக்கும் விடப் போறதில்லனு ஆபிஸ்ல அழிச்சாட்டியம் பண்ணியிருக்க, உனக்கா படபடனு வருது?” என்றான் கிண்டலாக
“சரிசரி உட்கார்ந்து இந்த ஜூஸ குடிங்க, ரிலாக்ஸ் ஆகுங்க, அப்புறம் பேசலாம்” என்று கையில் இருந்த கண்ணாடி பாட்டிலை நீட்டினான். அதை வாங்கி பருகியவள் “பிரஷ் ஜூஸா?” கேட்டாள்
“ஆமா மேடம்! நீங்க வர்றீங்கனு நானே ஜூஸ் போட்டு எடுத்துட்டு வந்தேன்”
“உங்களுக்கு?”
“நான் வீட்டில குடிச்சு டேஸ்ட் பாத்துட்டு தான் எடுத்துட்டு வந்தேன். கதிருக்கு வேணும்னா கொடு”
சரி என்றவள் கதிருக்கு கொடுத்து தானும் பருகினாள். இருவரும் ஒரு இரும்பு இருக்கையில் அமர்ந்ததும் ரிஷி எதிர்பக்கமாக இருந்த இருக்கையில் அமர்ந்தான். நிருஷிகா ரிஷியை மேலிருந்து கீழாக பார்த்தாள். ட்ரிம் செய்யப்பட்ட தாடி, மீசை, கண்களில் கூலிங் கிளாஸ் என்று எடுப்பான தோற்றத்துடன் கம்பீரமாக இருந்தான். தலையில் தொப்பி இருக்கிறது. ஒருவேளை நடுமண்டையில் சொட்டையாக இருக்குமோ?” என்று ஆழ்ந்த சிந்தனையில் இருந்தாள்
“என்ன நிரு? சந்திக்கணும் பேசணும்னு சொல்லிட்டே இருந்தே? எதுவும் பேச மாட்டேன்ற” கேட்டான் ரிஷி
“ரிஷி நீங்க எப்படி இருந்தாலும் எனக்கு ஓகே தான். தொப்பி போடணும்னு அவசியமில்லை”
“என்ன சொல்ல வர? புரியல!” புருவம் சுருக்கினான்
“இப்போ ஹேர் பிளான்டேஷன் எல்லாம் சக்சஸ் புல்லா பண்றாங்க”
“சோ”
“நாம அங்க போய் ட்ரீட்மென்ட் பார்த்துக்கலாம்”
“யாருக்கு?”
“உங்களுக்கு தான்”
“எனக்கு எதுக்கு?”
“நீங்க தான தொப்பி போட்டு மறைச்சிருக்கீங்க”
“எத?”
“சொட்டைய”
ரிஷியும் கதிரும் விழுந்து விழுந்து சிரித்தனர். “இப்போ எதுக்கு சிரிக்கறீங்க ரெண்டு பேரும்?” காரணம் புரியாமல் விழித்தாள்.
ரிஷி தன் தலையிலிருந்த தொப்பியை எடுத்து அவனின் கேசத்தை கலைத்து விட்டான். அலையலையாய் காற்றில் அலைந்த கேசம் அவர்களின் சிரிப்புக்கு காரணத்தை சொல்ல கதிரை முறைத்தாள்.
“உண்மையிலேயே இந்த கதிர் உங்க பிரெண்ட் தானா?”
“ஏன் அப்படி கேக்கற?”
“நான் உங்களபத்தி விசாரிச்சதும் ரிஷிய பத்தி உனக்கென்ன தெரியும்? அவன் கருப்பா குள்ளமா சொட்டையாக கூட இருக்கலாம்னு சொன்னாரு. நானும் அதை நம்பி கலகலப்பு படத்துல வர்ற சிரிப்பு போலீஸ் உருவத்துல உங்கள் உருவகம் பண்ணி வச்சிருந்தேன். உங்கள பத்தி இப்படி சொல்றவரு எப்படி உண்மையான பிரண்டா இருக்க முடியும்?” என்று அவள் சொன்னதும் ரிஷி தன்னை மறந்து சத்தமாக சிரித்தான். சிரிக்கும்போது அவனின் அழகான பல்வரிசை பார்த்தபடி அவள் இருக்க கதிர் நண்பனின் உள்ளார்ந்த சிரிப்பை கலங்கிய கண்களுடன் பார்த்திருந்தான்.
“சாரி ருஷி, உன்னுடைய எதிர்பார்ப்ப என்னால பூர்த்தி பண்ண முடியல” என்றவன் மீண்டும் சிரித்தான்.
“ரிஷி நீங்க சிரிக்கும்போது ரொம்ப அழகா இருக்கீங்க. செம ஹாட் அண்ட் ஹேன்சம்”
ரிஷி தொண்டை செருமி தன்னை நிலைப்படுத்திக் கொண்டான். சிரிப்பு மறைந்திருந்தது
“நான் எப்படி இருக்கேன் ரிஷி? உங்களுக்கு மேட்ச் ஆவேனா? என் டிரஸ் உங்களுக்கு பிடிச்சிருக்கா? எப்எம்ல பேசும்போது ஒருமுறை நீங்க பேபி பிங்க் கலர் பிடிக்கும்னு சொன்னீங்க இல்ல? உங்களுக்காகவே இந்த பேபி பிங்க் கலர் சுடிதார் புதுசா வாங்கி போட்டுட்டு வந்தேன்”
ரிஷிடம் பதில் இல்லை. கதிர் நண்பனை பதற்றத்துடன் பார்த்தபடி நின்றிருந்தான்.
“கதிர் நாங்க கொஞ்சம் தனியா பேசணும், ப்ளீஸ் அன்டர்ஸ்டான்ட்” என்று கைநீட்டி அவள் கதிரை வேறு பக்கம் போக சொல்லி கை காட்டினாள். அப்போதும் கதிர் அசையாமல் அங்கேயே நின்றிருந்தான்.
“ரிஷி நான் எப்படி இருக்கேன்? உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா?”
“எனக்கு உன்ன பிடிச்சு என்ன ஆகப்போகுது நிருஷிகா? இது எல்லாம் நீ உன்ன கட்டிக்க போறவர் கிட்ட கேட்கணும்”
“அதான் உங்ககிட்ட கேட்கறேன்”
“கதிர்! வாட் இஸ் திஸ்?” என்றான் கோபமாக
“ரிஷி ஐ வில் எக்ஸ்பிளைன்”
“ரப்பிஷ். ஆல்ரெடி இந்த பொண்ணு மைண்ட்ல வேற ஓடுது, மீட் பண்றது சரியா வராதுனு சொன்னேன். கேட்டியா? நீதான் அவ ஏதோ ஃபேன் கேர்ள் மூமென்ட்ல உன் கிட்ட பேசிட்டா. மத்தபடி ஒன்னும் இல்ல. ஜஸ்ட் அவள ஒரு முறை மீட் பண்ணி பேசிட்டா போதும். அத ஸ்வீட் மெமரியா எடுத்துக்கிட்டு அவ போய்டுவா. வேணாம்னு விரட்ட விரட்ட வந்துட்டே இருப்பானு சொன்னே. லாஸ்ட்டா ஒரு ஃப்ரெண்ட்லி மீட்டிங் வச்சுக்கலாம்ன்னு சொன்னே.
நீதான் இவகூட போன்ல பேச வச்சே, நேர்ல மீட் பண்றதுக்கும் நீதான் இவளுக்கு சப்போர்ட் பண்ணே. இப்ப பாத்தியா இவ பாடின பாட்ட தான் பாடிட்டு இருக்கா?” என்று அவன் கதிரை கிழிகிழி என்று கிழித்து கொண்டிருந்தான்.
கதிர் நிருஷிகாவை பாவமாக பார்த்து, “அவன் கிட்ட இது மாதிரி உளறாதன்னு அப்பவே சொன்னேன் இல்ல?” உதட்டுக்குள் முனகினான்
“ரிஷி! நான் என்ன கேட்டுட்டேன்னு நீங்க இவ்ளோ டென்ஷன் ஆகுறீங்க? நான் கேட்டது தப்பா?”
“நீ கேட்டதுல தப்பில்ல. உன் மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சும் உன்னை சந்திக்க சொல்லி என்கிட்ட இவன் ரெக்கமண்ட் பண்ணதும் அதுக்கு நான் ஒத்துக்கிட்டதும் தான் தப்பு” என்றான் ஆழ்ந்த குரலில்
“அதனால என்ன இப்போ?”
“தேவையில்லாம உன் மனசுல ஆசையோ நம்பிக்கை வந்து அது பொய்யா போகும்போது உனக்கு வலிக்காதா? அந்த வலியை நான் உனக்கு கொடுக்க விரும்பல”
“என் ஆசை ஏன் பொய்யா போக போகுது? நான் அழகா இல்லையா? என்னை உங்களுக்கு பிடிக்கலையா?”
ரிஷி இடம் பதில் இல்லை. விறுவிறுவென்று தன் அப்பார்ட்மெண்ட்டை நோக்கி நடந்தான். நிருஷிகா அவன் பின்னால் ஓடி அவன் கரம் பற்றி நிறுத்தினாள்
“நிரு தேவை இல்லாம இங்க சீன் கிரியேட் பண்ண வேணாம். நீ வீட்டுக்கு கிளம்பு. நீ கேட்டுகிட்ட மாதிரி நாம மீட் பண்ணிட்டோம். இனி உன் வாழ்க்கையை பாரு”
“நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிட்டு போங்க” என்றாள் பிடிவாதமாக
“என்ன பதில் சொல்லணும்?”
“என்ன புடிக்கலன்னா ஏன் புடிக்கல? அதுக்கு ரீசன் என்ன சொல்லிட்டு போங்க”
“அதெல்லாம் சொல்ல முடியாது நிருஷிகா, நீ கெளம்பு”
“நீங்க சொன்னா தான் நான் போவேன்”
“கதிர்! இவள அழைச்சிட்டு போ” என்றவன் அப்பார்ட்மெண்டின் முதன்மை வாயிலுக்குள் நுழைந்து சென்று விட்டான். நிருஷிகா சிறிது நேரம் திகைத்து நின்றவள் அவன் சென்ற திசையை நோக்கி வேகமாக சென்றாள். கதிர் என்ன செய்வது என்று புரியாமல் நின்றிருந்தான்.
ரிஷி தரைதளத்திலிருந்த லிஃப்டுக்குள் சென்று நிற்க, நிருஷிகா லிஃப்ட்டின் வெளியே அவனுக்கு நேர் எதிராக சென்று நின்றாள். தரைதளத்திலும் லிப்ட்டுக்குள்ளும் அவனை தவிர வேறு யாருமில்லை. அவளை ஏன் ஏற்க மறுக்கிறான் என்று அவளுக்கு தெரிந்தாக வேண்டும். அவன் அவளை போக சொல்லி திட்டுவான் என்று எதிர்பார்த்தாள். அவன் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கவும் லிப்டிற்குள் அவளும் நுழைந்தாள். அவன் நாலாவது மாடி எண்ணை அழுத்திவிட்டு நிற்க நிருஷிகா அவனை பின்னால் இருந்து கட்டிக் கொண்டாள்.
“ஏய் யாரு!” அதிர்ச்சியுடன் அவனின் வயிற்றை சுற்றி இருந்த கரத்தை விலக்கி கையை வேகமாக ஓங்க அது அவளின் கன்னத்தில் அடியாக விழுந்திருந்தது
“ரிஷி ஏன் அடிச்சீங்க? என்றாள் கன்னத்தை தேய்த்துக்கொண்டு
“ஏய் நீ எப்ப லிப்ட்டுக்குள்ள வந்தே? கதிர் கூட போகலையா நீ?” என்றான் பதட்டத்தை அடக்கிக்கொண்டு
“தெரியாத மாதிரி கேக்குறீங்க, நான் லிஃப்டுக்குள்ள வந்தத நீங்களும் தானே பாத்தீங்க?”
ரிஷி நெற்றியை தேய்த்துக் கொண்டான்.
“உங்க மனசுக்கு என்னை பிடிக்குது. வெளியே சொல்ல ஏன் தயங்குறீங்க?”
“ரியலி சாரி நிருஷிகா. நீ லிப்ட்டுக்குள்ள வந்தத நான் கவனிக்கல. தயவு செஞ்சு கிளம்பு”
“நம்பிட்டேன், ஏன் நீங்க கூலிங்கிளாஸ் போட்டிருக்கீங்கனு இப்போ புரியுது. பாத்தத பாக்கலனு சொல்லி தப்பிச்சுக்க தானே” என்றாள் கிண்டல் தொணியில்
“நான் உன்னை கவனிக்கலன்னு சொன்னேன். பாக்கலன்னு சொல்லல”
“ரெண்டும் ஒண்ணுதானே”
“இல்ல ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கு. பாக்கலன்னு சொல்றது பார்வை இருக்கிறவங்க எதிர்ல இருக்குறவங்கள பாக்கலன்னா பாக்கலன்னு சொல்லுவாங்க. எப்பவும் பார்க்க முடியாத நான் பாக்கலன்னு சொல்ல முடியாது. ஏதோ யோசனையில உன் அசைவ நான் கவனிக்கல”
“புரியல ரிஷி!” என்றாள் திகைப்புடன்
“நீ எப்படி இருப்ப, எந்த கலர் டிரஸ்ல வந்திருக்க, இது எதுவும் எனக்கு தெரியாது. ஏன்னா எனக்கு பார்வையில்லை! போதுமா? இப்போ புரிஞ்சுதா?” என்றவன் நான்காவது மாடி வந்ததும் திறந்த லிப்டின் கதவின் வழியாக வெளியேறினான்.
அவன் தன் அப்பார்ட்மெண்ட்டை நோக்கி எவ்வித தங்கு தடையும் இன்றி வேகமாக கம்பீர நடையுடன் செல்வதை பார்த்தவளுக்கு தன் கண்களை நம்புவதா? காதுகளை நம்புவதா? என்றே புரியவில்லை.
(தொடரும்)