பாவை 06

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 94

Active member
Staff member
May 5, 2026
42
142
33
chennai
நிருஷிகா அசையாமல் லிப்ட்டுக்குள் ரிஷியை பார்த்தபடி நின்று கொண்டிருக்க லிப்ட் மூடிக்கொண்டு தன் கடமையை ஆற்றும் விதமாக தரைத்தளத்தில் இறங்கியது. கதிர் வாசலிலேயே நின்றிருந்தான். நிருஷிகாவின் முகத்தை வைத்து அவளுக்கு விஷயம் தெரிந்து விட்டது என உணர்ந்தான்.

நிருஷிகா விட்டு சென்ற கைப்பையில் அவளுடைய ஸ்கூட்டி சாவியை எடுத்துக்கொண்டு பையை அவளிடம் நீட்டினான்.

“கதிர்! ரிஷி சொல்றது உண்மையா?” என்றாள் தட்டு தடுமாறி

ஆமாம் என்று தலையாட்டியவன் முன்னாள் நடக்க அவளுக்குள் ஆயிரம் கேள்வி இருந்தாலும் அமைதியாக அவன் பின்னால் சென்றாள்.

கதிர் ஸ்கூட்டியை ஓட்ட நிருஷிகா பின்னால் அமர்ந்து வந்தாள். எப்எம் அலுவலகத்திற்குள் சென்றவன், ரிஷியின் தனிப்பட்ட அறைக்கு அவளை அழைத்துச் சென்றான்.

“நிருஷிகா உங்களுக்கு ரிஷிய பத்தி எல்லாம் தெரிஞ்சுடுச்சு தானே? உங்ககிட்ட ஒரு விஷயத்த மட்டும் கெஞ்சி கேட்டுக்குறேன். எனக்காக அத மட்டும் செய்றீங்களா?”

“என்ன கதிர்?”

“அவன் நிலைமை தெரிஞ்ச பின்னாடி உங்களோட காதல் மறைஞ்சு போய் இருக்கும்னு எனக்கு நல்லாவே தெரியும். இன்னொரு முறை நீங்க அவன பாக்குற சூழ்நிலை வந்துச்சுன்னா அவனுக்கு பரிதாபத்தை மட்டும் காட்டிடாதீங்க. அது அவனுக்கு சுத்தமா பிடிக்காது”

“நான் ரிஷிய மறந்துடுவேன்னு நீங்களா எப்படி முடிவு பண்ணலாம்?” என்றாள் கோபத்துடன் கைகளை கட்டிக்கொண்டு

கதிர் அவளை வியப்புடன் பார்க்க, “பதில் சொல்லுங்க கதிர்! நீங்க எப்படி என்னை அன்டர்எஸ்ட்டிமேட் பண்ணலாம்?”

“அப்போ நீங்க ரிஷியா இன்னும் லவ் பண்றீங்களா?”

“இது என்ன கேள்வி? அவருக்கு பார்வை இல்லைன்னு தெரிஞ்சதும் ஒரு மணி நேரத்துல என் காதல் போயிருமா?”

“நிருஷி ஆர் யூ சீரியஸ்?” கதிர் நம்பாமல் கேட்டான்.

“200% சீரியஸா சொல்றேன். ஐ லவ் ரிஷி. அவர மட்டும் தான் கல்யாணம் பண்ணிப்பேன்” என்றாள் அழுத்தம் திருத்தமாக

கதிர் நம்ப முடியாமல் அவளை பார்த்தான். அவளின் பால் வண்ண நிறத்திற்கு அவள் அணிந்திருந்த பேபிபிங்க் நிற உடை தேவதையின் தோற்றத்தை அளித்திருந்தது. ரிஷிக்காகவே வந்த தேவதை இவள் தானா என்று பார்த்திருந்தான்.

“கதிர், நான் ஒரு விஷயம் உங்ககிட்ட கேட்கலாமா?”

“கேளுங்க”

“நான் ரிஷிய பத்தி உங்ககிட்ட விசாரிக்க வந்தப்போ முன்னாடியே அவர் நிலைமையை என்கிட்ட சொல்லி இருந்தா நான் இன்னும் பெட்டரா அவர் கிட்ட பிஹேவ் பண்ணி இருப்பேன்ல. இப்போ அவரோட காயத்தை கீறி விட்டுட்டேனோனு கவலையா இருக்கு”

“அவனோட நிலைமையா? என்ன அவனோட நிலைமை? அவனுக்கு என்ன குறை நிருஷிகா? நான் ஏன் அதை சொல்லணும்? எல்லாருக்கும் ஏதோ ஒரு குறை இருக்கும்” என்றவன் கண்ணாடி திரை வழியே வெளியே செல்லும் நபர்களை காட்டினான். “அதோ கண்ணாடி போட்டு இருக்காரு அவருக்கு தூர பார்வை, எங்க மேனேஜருக்கு ரத்தம் அழுத்தம் அதிகம். அது அங்க இருக்காரே அவருக்கு சுகர் பிராப்ளம். அதோ அவனுக்கு கிட்னியில கல். இப்படி எல்லாருக்கும் அவங்களோட உடம்புல ஏதோ ஒரு பிரச்சனை இருந்துட்டு தான் இருக்கு. உடம்புல எந்த பிரச்சினையும் இல்லாத ஏதாவது ஒரு மனுஷன் இருக்கானா? அவங்க எல்லாம் யார்கிட்டயாவது பேச ஆரம்பிக்கும் போதே எனக்கு பிளட் பிரஷர் இருக்கு சுகர் இருக்கு கிட்னியில் கல் இருக்குன்னு சொல்றாங்களா? அது போல தான் ரிஷிக்கும். அதை ஏன் நான் குறையா சொல்லணும்?

உனக்கு ஒரு விஷயம் தெரியுமா இந்த ஆபீஸ்ல என்னை தவிர ஓனருக்கும் மேனேஜருக்கும் தான் ரிஷிய பத்தி தெரியும். மத்தவங்க யாருக்கும் எதுவும் தெரியாது. அவன் எந்த தடுமாற்றமும் இல்லாமல் வருவான் ரெக்கார்டிங் முடிச்சுட்டு போயிட்டே இருப்பான்”

“யாருக்கும் தெரிய கூடாதுன்னு ஏன் அவரு நினைக்கிறாரு?”

“அப்படி இல்ல, தெரிஞ்சு என்ன பண்ண போறாங்க? ஐயோ பாவம்னு பரிதாபப்படுவாங்க. அவனுக்கு ஓடி வந்து ஹெல்ப் பண்ணுவாங்க. அது அவனுக்கு பிடிக்காது. எல்லாரையும் போல நார்மல் லைஃப் வாழ நினைக்கிறான்.‌ யாரோடு அனுதாபத்திலயும் தன் வாழ்க்கை இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறான்”

“அதான் எனக்கு ஆச்சரியமா இருக்கு கதிர், கொஞ்சம் கூட தடுமாற்றம் இல்லாம கம்பீரமா நடந்து வர்றாரே எப்படி?”

“அவன் எங்க போறதா இருந்தாலும் அந்த இடத்துக்கு முன்னாடியே போயி எது எது எங்கு இருக்குன்னு நான் ஒரு மேப் உருவாக்கி அவன் கிட்ட சொல்லிடுவேன். எத்தன அடி நடக்கணும், எந்த பக்கம் திரும்பனும், எங்க நிக்கணும், எங்க உட்காரனும் எல்லாத்தையும் அவன் கிட்ட சொல்லிடுவேன். அவன் கரெக்டா ஃபாலோவ் பண்ணுவான். ஒருமுறை கூட தடுமாறினது இல்ல. புதுசா யாரையும் மீட் பண்ண மாட்டான்”

“வாவ் சூப்பர் கதிர். இந்த மாதிரி ஒரு பிரெண்ட் கிடைக்க ரிஷி கொடுத்து வச்சிருக்கணும். யூ ஆர் கிரேட்”

“இல்ல நான் கிரேட் இல்லை” என்றான் கதிர் சத்தமாக. நிருஷிகா அதிர்ந்து விழித்தபடி சுற்றும் முற்றும் பார்த்தாள். கண்ணாடி திரைக் கொண்ட அறை என்பதால் அவனுடைய சத்தம் வெளியே கேட்டிருக்கவில்லை. கதிர் குரலை தழைத்து பேச ஆரம்பித்தான்.

“என்னால நடந்த தப்பை சரி பண்ண முடியாம சின்ன சின்னதா அவனுக்கு உதவி பண்ணிட்டு இருக்கேன். ரிஷிக்கு முன்னாடி நான் எல்லாம் ஒண்ணுமே இல்ல”

“உங்களால நடந்த தப்பா? என்னது?”

“ரிஷியோட பார்வை போனதுக்கு நான் தான் காரணம்” என்றவனின் கண்கள் குளம் கட்டியிருந்தது

“கதிர்! கண்ட்ரோல் யுவர் செல்ப். என்ன நடந்ததுன்னு பொறுமையா சொல்லுங்க”

“நான் அனாதை ஆசிரமத்துல வளர்ந்தவன். அடிக்கடி கிரிக்கெட் மேட்ச்ல கலந்துப்பேன். அப்போ தான் ரிஷிய முதன் முதலா பார்த்தேன். வசீகரமான தோற்றத்துல இருப்பான். அவன் பேட்டிங் செய்றதும் எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. ஆப்போசிட் டீமா இருந்தாலும் நானா தான் அவன் கிட்ட போய் பேசுவேன். அதுக்கப்புறம் நாங்க அடிக்கடி மீட் பண்ணோம். ரிஷி ஃப்ரண்ட்லியா பழகுறதுனால சட்டுனு நாங்க ரெண்டு பேரும் ஃபிரண்ட் ஆயிட்டோம். என்னை அவன் வீட்டுக்கு கூட்டிட்டு போயி சாப்பிட வைப்பான்.

அவன் அப்பா ஹெட் மாஸ்டர் அம்மா டீச்சர் அவங்களுக்கு சொந்த வீடு காருனு ஓரளவுக்கு வசதியான குடும்பம் தான்.‌ ரிஷி அவங்களுக்கு ஒரே பையன். படிப்புலயும் சரி விளையாட்டுலயும் சரி அவன் ஃபர்ஸ்ட்டா இருந்தான். பேசும்போது பேட்டிங்கில என்ன அடிச்சுக்க ஆள் இல்லைன்னு அப்பப்போ பெருமையா சொல்லுவான்.‌ அது எனக்குள்ள ஒரு ஈகோவை கிரியேட் பண்ணிடுச்சு. எப்படியாவது அவனை ஜெயிக்கணும்னு பெட் கட்டினேன்.

நான் எப்படி பால் போட்டாலும் அவன் சரியாக அடிச்சிட்டு இருந்தான். நான் அவன்கிட்ட, பால் அடிச்சா மட்டும் போதாது, நான் ஒரு கல்லை வீசுவேன் அதையும் சரியா அடிப்பியான்னு பார்க்கலாமானு கேட்டேன்

அவனும் அதையும் பாத்துடலாம்னு சொன்னான்

நான் கல்லை எடுத்து ரிஷி பக்கமா வீசினேன், அவன் அதை பேட்டால தடுத்தான். அது வந்த வேகத்துல கல் உடைஞ்சு ஒரு துண்டு வேகமாக ரிஷியோட கண்ணுல விழுந்துருச்சு. அவன் உடனே கண்ணை மூடிக்கிட்டான், இருந்தாலும் கண்ணுல வீக்கம் இருந்துச்சு”

“சத்தியமா நான் வேணும்னு எதுவும் செய்யல” என்று கதறி அழுதான்

அதிர்ச்சியில் இருந்தவள் அவனை சமாதானம் செய்யவும் மறந்து அப்படியே அமர்ந்திருந்தாள். கதிர் தொடர்ந்து பேசினான்

“முதல்ல ரிஷிக்கு பார்வை மங்கலா தெரியுதுன்னு சொன்னான். உடனே ஹாஸ்பிடல் போனோம். கண்ணுக்குள்ள இருக்குற கடைசி லேயரான ரெட்டினா டேமேஜ் ஆகியிருக்குன்னு சொன்னாங்க. பார்வை வர சான்சே இல்லன்னும் சொல்லிட்டாங்க. இனி இருக்கிற இன்னொரு கண்ணை வைச்சு தான் வாழ்க்கையை வாழனும்னு சொன்னாங்க. நான் குற்ற உணர்ச்சியில் உடைஞ்சு போய் அழுதேன். ரிஷியும் அவன் அப்பா அம்மாவும் வருத்தப்பட்டாங்களே தவிர என்னை ஒரு வார்த்தை கூட கேக்கல. இது ஒரு விபத்துன்னு என்னை தான் சமாதானம் செஞ்சாங்க. அன்னையிலிருந்து அவங்க வீட்டிலயே தங்கி அவங்களுக்கு தேவையானதை செஞ்சு கொடுத்து என் பாவத்தை தீர்க்க நெனச்சேன். ஆனா என் பாவம் கூடிப்போச்சே தவிர குறையல” என்றவன் மீண்டும் உடைந்து அழுதான். சில நிமிடங்கள் அழுதவன் சுதாரித்துக்கொண்டு மீண்டும் தொடர்ந்தான்

“கொடைக்கானலுக்கு வெளிநாட்டில இருந்து ஒரு டாக்டர் வராரு அவர் கிட்ட ரிஷிய காட்டலாம் சர்ஜரி பண்ண முடியுமானு கேட்டு பார்வை வர ட்ரை பண்ணலாம்னு சொன்னாங்க. உடனே கிளம்பி போனோம். ரிஷியோட அப்பா அம்மா கார்ல பின்னாடி உட்கார்ந்து இருந்தாங்க. ரிஷி முன்சீட்ல இருந்தான். நான் தான் டிரைவ் பண்ணேன். ஹாஸ்பிடல்ல இருந்து சீக்கிரம் வாங்க, கேம்ப் முடிஞ்சு டாக்டர் கிளம்ப போறாருன்னு போன் மேல போன் வந்துட்டே இருந்துச்சு. நான் காரை வேகமா ஓட்ட எதிர்ல வேகமா வந்த லாரியை கவனிக்காம போயிட்டேன். எதிர்பாராத விதமா அந்த லாரியில் மோதி பின்னாடி பக்கமும் வந்த இன்னொரு லாரியில இடிச்சு ஒரு பெரிய ஆக்சிடென்ட் நடந்திருச்சு. ரிஷியோட குடும்பத்துக்கு நான் எமனா இருந்திருக்கேன். அவனோட அம்மா அப்பா இறந்துட்டாங்க. முன் சீட்ல நாங்க ரெண்டு பேரும் சீட் பெல்ட் போட்டு இருந்ததால உயிருக்கு ஆபத்து இல்ல. ஆனா கண்ணாடி உடைஞ்சு ரிஷியோட இன்னொரு கண்ணுல பட்டுடுச்சு. இந்த முறை கார்னியா டேமேஜ் ஆகியிருக்குனு சொல்லிட்டாங்க. அவனோட ரெண்டு பார்வையையும் பறிச்சு அவன அனாதையாக்குன பாவி நான்” என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதான்.

“நான் கண்விழிச்சதும் நிலைமைய தெரிஞ்சு சுதாரிச்சு ரிஷியோட அப்பா அம்மாவோட கண்ணை எடுத்து அவங்க மகனான ரிஷிக்கு வையுங்கனு கேட்டேன். அவங்க உயிரோட இருக்கும் போது கண்தானம் செஞ்சிருந்தா தான் எடுக்க முடியும்னு சொல்லிட்டாங்க. ரிஷியும் மயக்கத்துல இருந்தான். யார்யாரையோ பிடிச்சு எவ்வளவோ முயற்சி பண்ணி பாத்துட்டேன். அதுக்குள்ள ரெண்டு பேரும் இறந்து ஆறு மணிநேரம் ஆயிடுச்சு. கண்ல கார்னியா எடுக்கறதுக்கான நேரம் முடிஞ்சிருச்சுனு சொல்லிட்டாங்க. என் கண்ணுல இருக்கறத எடுத்துக்கோங்கனு எவ்வளவோ கெஞ்சினேன். உயிரோட இருக்கறவங்ககிட்ட எடுக்க முடியாதுனு சொன்னாங்க. நான் அங்கேயே சாகறதுக்கு முயற்சி பண்ணேன். என்னை கண்ட்ரோல் பண்ண முடியாம டாக்டர்ஸ் ரிஷிய என்கிட்ட கூட்டிட்டு வந்தாங்க, அப்போ ரிஷி என்ன சொன்னான் தெரியுமா?

“கதிர் நீ எதையும் வேணும்னு பண்ணல, நடந்தது ஆக்சிடென்ட்டா, தீதும் நன்றும் பிறர் தர வாரானு கேள்வி பட்டதில்லயா? எனக்கு இதெல்லாம் நடக்கணும்னு இருந்திருக்கு, நடந்திருச்சு. இதை ஏத்துக்கிட்டு இனி எப்படி வாழணும்னு தான் நான் யோசிச்சுட்டு இருக்கேன். நல்லா கவனி, வாழணும்னு யோசிச்சுட்டு இருக்கேன். நீ இந்த மாதிரி எதாவது பைத்தியக்காரத்தனம் பண்ணினா நானும் உன்கூடவே செத்துடுவேன். இப்போதைக்கு எனக்குனு இருக்கறது நீ மட்டும் தான். புரிஞ்சுக்கோடா” என்றவனின் காலை கட்டிக் கொண்டு கதிர்மாறன் கதறி அழ, ரிஷி அவனை எழுப்பி, அவன் கரத்தை தன் தலையில் வைத்து, “இனிமே சாக முயற்சி பண்ண மாட்டேன்னு சத்தியம் பண்ணுடா” என்றான்

தன் நிலையை விட ரிஷியின் வாழ்க்கை எத்தனை துயரமானது. அப்படி இருந்தும் அவன் அனைவருக்கும் ஊக்கம் தரும் விதமாகவே பேசுவானே. கண்மூடித்தனமாக அவன் மீதிருந்த காதலையும் தாண்டி ரிஷி நிருஷிகாவின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொண்டான்.

“ரிஷி என் சட்டைய பிடிச்சு உன்னால தான்டா என் வாழ்க்கையே போச்சுனு நாலு அடி அடிச்சிருந்தா கூட என் மனசு ஆறியிருக்கும். இது ஒரு ஆக்சிடென்ட் டா நீ என்ன பண்ணுவனு என்னை சமாதானம் செஞ்சது தான் என்னால தாங்கிக்கவே முடியல. அவனோட ரெண்டு கண்ணா வாழ்க்கை பூரா அவன் கூடவே இருக்கணும்னு அன்னைக்கு முடிவு செஞ்சேன். இவ்வளவு நடந்தும் அவன் தன் வலிய என்கிட்ட எப்பவும் காட்ட மாட்டான். அவன் உடைஞ்சா நான் குற்ற உணர்ச்சியில எதாவது பண்ணிப்பேனோனு அவனோட மொத்த வலியையும் அவனுக்குள்ளவே அடக்கிக்கிட்டான். ஆனா வேற யாராச்சும் அவன பார்த்து பரிதாபப்பட்டா மட்டும் அன்னைக்கு பூரா டல்லாயிருப்பான்.

அப்படிப்பட்டவன் நான் சம்பாதிச்சு கொடுத்தா அத வாங்குவானா? எப்படியோ எப்எம்ல ஆர்ஜே வேலைக்கு நான் தான் அவனை ஜாயின் பண்ண வச்சேன். முழு நேரமும் அவனுக்கு பதிலா நான் ஆபீஸ்ல இருப்பேன். யார் யார் வராங்க, போறாங்க, எப்படி இருப்பாங்க எல்லாத்தையும் அவனுக்கு சொல்லுவேன். எத்தனை அடி கால் வைக்கணும், வேகமா நடந்தா எத்தனை அடி, மெதுவா நடந்தா எத்தனை அடி, ரெக்கார்டிங் ரூம் எங்க இருக்கு? அவன் சீட் பொசிஷன் எப்படி இருக்கும்? எல்லாத்தையும் அப்டேட் பண்ணுவேன். அவனும் கொஞ்சமும் தடுமாறாம வந்து ரெக்கார்டிங் முடிச்சுட்டு போயிருவான்”

“வண்டி எப்படி ஓட்டுவாரு?” இடையிட்டாள் நிருஷிகா

“நான் தான் வண்டி ஓட்டுவேன், அவன் பின்னாடி உட்கார்ந்திருப்பான்”

“ஒரு நாள் நான் போன் பண்ணப்போ, டிரைவிங்ல இருக்கிறதா சொன்னாரே”

“கண்டிப்பா அவன் வண்டில போயிட்டு இருக்கேன் சொல்லி இருப்பானே தவிர, வண்டி ஓட்டிட்டு இருக்கேன்னு சொல்லி இருக்க மாட்டான். நல்லா யோசிச்சு பாரு”

நிருஷிகா சற்று யோசித்தாள். கதிர் சொல்வது உண்மைதான். “ரிஷி வண்டியில் போயிட்டு இருக்கேன்னு தான் சொன்னாரு”

“அவன் மக்களோட பேசுற விஷயங்கள் எல்லாமே அவங்களுக்கு மட்டும் சொல்றதில்ல, அவனுக்கு அவனே தன்னை மோட்டிவேட் பண்ணுற விதமா தான் அவனோட பேச்சு இருக்கும். கொஞ்ச நாள்லேயே அவனுக்கு நல்ல பேரு கிடைச்சது. எல்லாரும் அவன்கிட்ட பாசமா பேச ஆரம்பிக்கவும் இந்த வேலையை விரும்பி செஞ்சான். சில சமயம் யாராச்சும் உன்ன மாதிரி வருவாங்க. அவன பத்தி தெரிஞ்சதும் மறுநாள் இருந்து வர மாட்டாங்க.‌ அப்படியே வந்தாலும் அவனுக்கு சேவை செய்றேன் உதவி செய்யறேன்னு வந்து நிப்பாங்க. அது அவனுக்கு புடிக்கல. சோ அவன் யாரையும் சந்திக்கிறது இல்ல. உன்னையும் ஆரம்பத்தில் இருந்து அவாய்ட் பண்ணான். உன் கண்ணுல தெரிஞ்ச பிடிவாதத்தையும் உறுதியையும் பாத்து நான்தான் அவன்கிட்ட என்னென்னமோ சொல்லி சமாதானம் செஞ்சேன். ஒருமுறை நீங்க மீட் பண்ணிட்டா நீ போயிடுவேன்னு, அப்புறம் தொல்ல பண்ண மாட்டேனு அவன்கிட்ட சொல்லி சம்மதிக்க வச்சேன்.‌

ரெண்டுல ஒன்னு நடக்கும். ஒன்னு நீ அவனோட நிலைமையை தெரிஞ்சுகிட்டு திரும்பி வரமாட்டே.‌ ஒருவேளை நீ திரும்பி வந்தா உன்னோட காதலுக்கு உதவி செஞ்சு என் நண்பனுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சுக் கொடுக்க நினைச்சேன். ஆனா ரிஷி கோபப்படறத பாத்தா அதுக்கு வாய்ப்பு இல்லன்னு தோணுது”

“நோ கதிர்! அப்படி சொல்லாதீங்க. நீங்கதான் எனக்கு ஹெல்ப் பண்ணனும்” என்றாள் அவசரமாக

“பாக்கலாம், இப்போ ரொம்ப நேரம் ஆயிடுச்சு. நீங்க வீட்டுக்கு கிளம்புங்க” என்றான் கதிர்

நிருஷிகா அவனிடம் விடை பெற்றுக் கொண்டு வீட்டை அடைந்தபோது மணி பத்தாகியிருந்தது.

அவள் உள்ளே நுழையும் போதே மைதிலி அவளை நிறுத்தி, “நிருஷி ஏன் இவ்வளவு லேட்டா வர்ற? போன் பண்ணி எங்க இருக்கன்னு கூட சொல்ல மாட்டியா? நான் போன் பண்ணாலும் எடுக்கலைன்னா எப்படி? நாங்க இங்கே பதறிட்டு இருக்கோம்” அதட்டினார்

வழக்கம்போல அன்னையை உறுத்துவிழித்தாள். நொடியில் ரிஷியின் கட்டளையை நினைவு கூர்ந்து, “பிரெண்ட பாக்க போயிருந்தேன், லேட் ஆயிடுச்சு” என்று பதில் சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்.

மைதிலியின் கோபம் உடனே தணிந்திருந்தது. சாதாரணமாக பதில் சொல்பவளா அவள்? ‘நான் எங்க போனா என்ன? உங்க ரெண்டு பசங்களும் வீட்லதான் இருக்காங்க?’ என்ற பதிலை தான் அவர் எதிர்பார்த்திருந்தார். இப்போது மகள் வருத்தம் தெரிவிக்கவில்லை என்றாலும் காரணம் சொன்னது மனநிறைவை தந்தது

அன்று இரவு சாப்பாடு வேண்டாம் வெளியே சாப்பிட்டேன் என்று சொல்லி படுக்கையில் விழுந்தாள்

ஆண்டுகளை கணக்கிட்டு பார்த்தால் அவள் அன்னையின் திருமணத்தில் மனமொடிந்து தனிமையை உணர்ந்த வேலையில் ரிஷி தன் பார்வையை தொலைத்து பெற்றோரையும் இழந்திருக்கிறான்.‌ அந்த இழப்பிலிருந்து தன்னை மீட்டுக் கொண்டதும் இல்லாமல் தனக்கான வேலையைத் தேடி அனைவருக்கும் ஊக்கம் தரும் வகையில் சிரித்துப் பேசிக் கொண்டே இருந்திருக்கிறான்.‌ உள்ளே எவ்வளவு வலி இருந்தாலும் மற்றவர்களை உயர்த்திப் பார்க்கும் அவன் எவ்வளவு உயர்வானவன்? கதிரிடம் உன்னால் தான் எனக்கு இந்த நிலைமை என்று ஒரு வார்த்தை கூட சொன்னதில்லையாமே! இப்படிப்பட்ட ரிஷியை தன் வாழ்க்கையிலிருந்து ஒரு போதும் தவறவிட்டு விடக்கூடாது.

அவன் என்ன சொன்னாலும் சரி, அவனை தன்னில் சரி பாதி ஆக்கிக் கொள்ள வேண்டும். அவனை ஒருபோதும் இழந்து விடக்கூடாது. இனி கதிருக்கு பதிலாக அவள் அவனை தன் கண்ணுக்கு கண்ணாக உயிருக்கு உயிராக அவன் உணர்வுகளுக்குள் கலந்திருக்க வேண்டும் என்று தீர்க்கமான முடிவை எடுத்தாள்.

(தொடரும்)
 

Attachments

  • பாவையின்றி பார்வையில்லை! (2).jpg
    பாவையின்றி பார்வையில்லை! (2).jpg
    211.5 KB · Views: 2
Last edited:

Author: STN - 94
Article Title: பாவை 06
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,290
384
83
Chennai
Aww எவளோ கஷ்டம்😔😔😔😔😔
பட் ரிஷி❤️❤️❤️❤️
ஆமா மிஸ் பண்ணிராத நிரு....ஆன இப்ப ஏதோ மிஸ் understanding la தான் பிரிஞ்சி வந்துட்டியோ
 
  • Love
Reactions: STN - 94