• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

பாவை 13

STN - 94

Member
Staff member

“என்னாச்சு நிகா? ஏன் ரிஷிவர்மன் சாரை பாத்து பயந்து நடுங்கறே? உனக்கு அவரை முன்னாடியே தெரியுமா?” என்றாள் அஞ்சலி

“அஞ்சலி, எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியா?”

“சொல்லு நிகா”

“உன் ஹஸ்பெண்ட்க்கு டிரான்ஸ்பர் ஆக வாய்ப்பிருக்குனு சொன்னியே, எப்போ? எங்கே?”

அவளை ஆச்சரியமாக பார்த்த அஞ்சலி, “நான் சொல்றத காதுல வாங்கறீயா இல்லையானு எனக்கு எப்பவும் சந்தேகம், இருந்தாலும் என் பாட்டுக்கு பேசிட்டே வருவேன். நான் சொன்னத ஞாபகம் வச்சு, இப்போ விசாரிக்கறேன்னா நான் சொல்றத நீ நல்லாவே கவனிச்சிருக்கனு தெரியுது. அதுசரி எதுக்கு இப்போ என் புருஷனோட டிரான்ஸ்பர் பத்தி கேக்கறே”

“எனக்கு இங்கே இருக்க பிடிக்கல. உன் வீட்டுக்காரர் டிரான்ஸ்பர் ஆனா நீயும் தானே போவே, நானும் உன் கூடவே வந்து அந்த ஊர்ல எதாச்சும் வேலை தேடிக்கட்டுமா?”

“ஆனா நீ தான் அக்ரிமென்ட்ல கையெழுத்து போட்டுட்டியே?”

“ஜஸ்ட் இன்னைக்கு தானே கையெழுத்து போட்டேன். எப்படியாவது இளங்கோ சார்கிட்ட பேசி அதை கேன்சல் பண்ண சொல்லிடறேன். நீ எனக்கு உதவி செய்வியா? அத மட்டும் சொல்லு”

“ஏன் இந்த திடீர் முடிவு நிகா? இதுக்கு காரணம் ரிஷிவர்மன் சாரா?” என்று அஞ்சலி மிகச்சரியாக கேட்க, பதிலளிக்க முடியாமல் நின்றிருந்தாள் நிருஷிகா

“எனக்கு ஆரம்பத்துல இருந்தே சந்தேகம், நீ அவர பார்த்து பதட்டபடறதும் அவர் உன்னை வச்ச கண்ணு வாங்காம பாக்கறதும் ஏதோ சரியில்லனு தோணுச்சு. போதாக்குறைக்கு உன்னை ஆஸ்பிட்டல்ல இருந்து கூட்டிட்டு வரப்போ ராஜராஜசோழன் பாட்டு வேற. உன்கிட்ட அந்தாளு எதாச்சும் தப்பா நடந்துக்க முயற்சி பண்றானா? பயப்படாம சொல்லு நிகா”

“சேச்சே, அப்படியெல்லாம் இல்ல”

“என்கிட்ட கூட சேர்ந்தாப்புல நாலு வார்தை பேச மாட்டே. இன்னைக்கு தான் பேசறே, என்கூடவே வரேன்னு சொல்ற, இதுக்கெல்லாம் என்ன காரணம் நிகா?”

“அஞ்சலி கேள்வி கேக்காம எனக்கு உதவி செய்ய முடிஞ்சா செய், இல்லனா வேற வழிய நான் பாத்துக்கறேன்”

“சரி டென்ஷனாகாத, என் புருஷன்கிட்ட பேசிட்டு உனக்கு தகவல் சொல்றேன்” என்ற அஞ்சலி சிறிது நேரம் நிருஷிகாவுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு கிளம்பி சென்றாள்.

நிருஷிகாவுக்கு தான் என்ன மாதிரியான மனநிலையில் இருக்கிறோம் என்றே தெரியவில்லை. ரிஷியை கண்டதும் மறந்துவிட்டதாக நினைத்த காதல் மீண்டும் எங்கனம் துளிர் விட தொடங்கியது? அதன் ஆணிவேர் அவளின் ஆழ்மனதில் வேரூன்றி இருப்பதாக தானே அதற்கு அர்த்தம்? இன்னும் இங்கேயே இருந்தால் அவளையும் அவள் மனதையும் அவன் கண்டிப்பாக உணர்ந்து கொள்வான். அதற்கு முன் இங்கிருந்து கிளம்பியாக வேண்டும்.

இந்த வேலையில் நல்ல சம்பளம் கிடைக்க போகிறது, இதை வைத்து புவன் புவனிகாவை தன்னுடன் அழைத்து வந்து விடலாம். வக்கீலுக்கு கொடுக்க முடியாமல் இருந்த பணத்தை கொடுத்து வழக்கை நடத்த சொல்லாம் என்று இருந்தாளே. இப்போது மீண்டும் வேறு இடத்தை தேடி புதிதாக வேலையில் சேர்ந்து, பணம் சேர்த்து நினைக்கும் போதே தலைவலித்தது.

அஞ்சலி போன் செய்து “நிகா என் ஹஸ்பண்ட் கிட்ட பேசினேன். இப்போதைக்கு டிரான்ஸ்பர் கிடைக்காதாம். அடுத்த வருஷம் தான்னு சொல்றாரு. என் பிரெண்ட் ஒருத்தி பெங்களூர்ல வேலை செய்யறா, நீ அங்கே போறதா இருந்தா உனக்கு வேலைக்கு டிரை பண்ண சொல்றேன். ஆனா அவ வேலை செய்யறது ஐடி கம்பெனி. அதான் யோசிக்கறேன்”

“பரவால்ல அஞ்சலி, நான் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் தான் படிச்சிருக்கேன், ஐடி கம்பெனியில வொர்க் பண்ண எக்ஸ்பீரியன்ஸ்ம் இருக்கு”

“அப்படியா? கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்கா படிச்சிருக்கே? அப்புறம் ஏன் இந்த சின்ன ரெக்கார்டிங் கம்பெனியில வாய்ஸ் ஓவர் பண்ணிட்டு இருந்தே?”

“அது, வாய்ஸ் ஓவர் பண்றது எனக்கு பிடிச்ச வேலை. அதான்” என்றாள் நிருஷிகா தடுமாற்றத்துடன். சான்றிதழ்கள் எதுவும் அவளிடம் இல்லை என்பதும் இன்னொரு காரணம், அதைப்பற்றி அஞ்சலியிடம் சொல்லமுடியாமல் அமைதி காத்தாள்.

“அப்படி பிடிச்ச வேலைய எதுக்கு விட்டுட்டு போகணும்? ரிஷிவர்மன பாக்கறதுக்கு அவ்ளோ மோசமானவரா தெரியல. அப்படியே இருந்தாலும் அவர உன்னால பேஸ் பண்ண முடியாதா?”

இந்த கேள்விக்கு அவளிடம் தான் பதில் இல்லையே, அமைதியாக இருந்தாள்.

“சரி, உன்னோட இஷ்டம், உன் பையோடேட்டாவ எனக்கு அனுப்பு, நான் என் பிரெண்டுக்கு அனுப்பி உனக்கு வேலைக்கு டிரை பண்றேன்”

பயோடேட்டாவை பற்றி அவள் யோசிக்கவே இல்லையே, தலையை பிடித்து கொண்டவள், “அஞ்சலி நான் அப்பறம் பேசறேன், டயர்டா இருக்கு” என்று சொல்லி படுக்கையில் விழுந்தவளின் கண்களில் கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது.

அடுத்த இரண்டு நாட்களும் படுக்கையை விட்டு எந்திரிக்கவில்லை. யோசித்து பார்த்தவளுக்கு ரிஷிவர்மனை எதிர்கொள்வதை தவிர வேறு வழி தெரியவில்லை. வழக்கம் போல அலுவலகத்திற்கு தயாராகி காந்திபுரம் பஸ் நிறுத்தத்தில் நின்றாள், அஞ்சலியும் அவளோடு இணைந்து கொள்ள, இருவரும் அலுவலகத்திற்கு சென்றனர்.

ரிஷிவர்மன் யாரிடமோ பேசிக் கொண்டிருக்க, நிருஷிகா அவனை கடந்து ரெக்கார்டிங் அறைக்குள் சென்றாள். ரவீந்தர், “நிகா மேடம் ஒகே தானே, ஆரம்பிக்கலாமா?” என்று கேட்க, அவள் சம்மதமாக கட்டை விரலை உயர்த்தி காட்ட, திரையில் படம் ஓடியது. அதை பார்த்துக் கொண்டே வசனத்தை அவள் வாசித்து கொண்டிருக்க, ரிஷி உள்ளே நுழைந்தான்.

அவனை கண்டதும் ஒருகணம் தடுமாறியவள் தன்னை சில விநாடிகளில் நிலைப்படுத்திக் கொண்டு மீண்டும் பேச தொடங்கினாள். ரவீந்தரனின் அருகில் அமர்ந்த ரிஷி, டாக் பட்டனை அழுத்தி, “நிகா வேற குரல்ல டிரை பண்ணுங்க” என்றான்.

அவள் குரலை மாற்றி பேச, “நீங்க பேசறது ரியலா இல்ல, வேற ஒருத்தர் வாய்ஸ்ல பேசறது போல இருக்கு. இந்த கதைக்கு உள்ளே இருந்து ஆத்மார்த்தமா பேசணும், கமான் டிரை பண்ணுங்க” என்று பலமுறை அவளை பேச வைக்க, நிருஷிகா தன்னை மறந்து சொந்த குரலில் பேச தொடங்கியிருந்தாள்.

ரிஷிவர்மன் எழுந்து நின்று விட்டான். “நிகா இந்த குரல்லயே பேசுங்க, நல்லா இருக்கு” என்று ரவீந்தர் கூறினான். “ரவி, என்னோட கார்ல செக்புக் மறந்து வச்சுட்டேன், அதை எடுத்துட்டு பேங்க்குக்கு போய் பணம் எடுத்துட்டு வர்றீங்களா?” என்றான் நிருஷிகாவை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே

“சார், ரெக்கார்டிங்?”

“நான் பாத்துக்கறேன்” ரிஷி சொன்னதும் ரவீந்தரன் எழுந்து வெளியே சென்றான். அவன் சென்றதும் அறைக் கதவை தாழிட்ட ரிஷிவர்மன் கன்ட்ரோல் அறையை கடந்து ரெக்கார்டிங் அறைக்குள் நுழைந்தான். அவன் உள்ளே நுழைந்ததை கவனியாத நிருஷிகா ஸ்கிரிப்ட் பேப்பர் மற்றும் திரையில் ஓடும் படத்தில் கவனமாக இருக்க, ரிஷி அவளை தன்னை நோக்கி வேகமாக இழுத்தான்.

அவள் என்னவென்று சுதாரிக்கும் முன் அவன் விரல்கள் அவளின் நெற்றி, புருவம், இமை, நாசி கன்னம் என அனைத்தையும் அவசரமாக அளவெடுத்தது. அதை உணர்ந்தவள் அவனிடமிருந்து திமிற முயல, “I caught you நிருஷி” என்றவன் வன்மையாக அவளின் இதழ்களை சிறைசெய்திருந்தான்.

முழு சக்தியை பயன்படுத்தி அவன் கரங்களிலிருந்து விடுபட திமிறினாள். அவள் திமிற திமிற, அவனின் அணைப்பு மேலும் இறுகியது. அவன் கரங்களுக்குள் அசையமுடியாதபடி அவளை நிறுத்தியவன், இதழ்களை வன்மையுடன் ஆட்கொள்ள, இருகரங்களால் அவன் நெஞ்சில் குத்தினாள். அவளின் கண்களில் கண்ணீர் கரைபுரண்டு ஓடுவதை இதழ்நீரோடு கலந்த உவர்ப்பு நீரில் உணர்ந்தாலும் அவன் தன் பிடியை தளர்த்துவதாக இல்லை. அவளும் அவன் நெஞ்சில் குத்துவதை நிறுத்தியிருக்கவில்லை.

நீண்ட கால பிரிவின் தாகத்தை இதழணைப்பில் தீர்த்து கொள்ள நினைத்தான் போலும், அவளிடம் அடிவாங்கி கொண்டே தன் பணியை தொடர்ந்தான். அவள் மூச்சுக்காக திணறவும் அவளுக்கு ஓய்வு கொடுத்தவன், “இப்படியே நெஞ்சுல குத்திட்டு இருந்தா இதயதுடிப்பு நின்னுடும் நிரு, நான் உன்கிட்ட சொல்லாம ஓடினதுக்கு தண்டனையா உன் கையால சாகறத மனசார ஏத்துக்கறேன்” என்றான்.

அவன் அப்படி சொன்னதும் அடிப்பதை நிறுத்தியவள் அவனிமிருந்து விலக முயற்சிக்கவும் அவளின் கன்னத்தை இருகரங்களால் அழுத்தி பிடித்தவன் அவளின் கண்களை ஆழ்ந்து நோக்கினான். அவளோ அவனை பார்க்காமல் கண்களை இறுக மூடிக் கொண்டாள்.

“நிரு, உன்கிட்ட சொல்லாம போனதுக்கு காரணம் இருக்கு, இருந்தாலும் நான் செஞ்சது மன்னிக்கமுடியாத தப்பு தான். என்னை மன்னிச்சிடுடா” என்றான் இறைஞ்சலுடன்

நிருஷிகா பதில் சொல்லவில்லை, மூடிய கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது.

““நிரு, நானும் உன்னை காதலிச்சேன், நீ கடைசியா என்கிட்ட பேசிட்டு போன அன்னைக்கு கல்யாணம் பண்ணிக்கலாம்னு உறுதியா இருந்தேன். ஆனா நமக்குள்ள குழந்தை குட்டினு வந்தா நீ எப்படி சமாளிப்பேனு எனக்குள்ள ஒரு குழப்பம் வந்துச்சு. என்னோட முடிவு சரியா தப்பா? என்னோட சுயநலத்துக்காக ஒரு பொண்ணோட வாழ்க்கைய கெடுக்கறோமாேனு தடுமாறிட்டு இருந்தேன்.

அன்றைய தினத்தின் நிகழ்வை விளக்கினான். கதிர் அன்று மாலை சீக்கிரமே வீட்டிற்கு வந்து, “என்னடா ரிஷி, கடைசியில நிருகிட்ட கவுந்துட்ட போலிருக்கு?”

“நான் கவுந்துட்டேன்னு யார்டா சொன்னா?”

“நிருஷி தான் போன் பண்ணி சொன்னா. ஆபிஸ்ல எல்லாருக்கும் டிரிட் கொடுத்துட்டு இருக்காளாம்”

“எல்லாத்துலயும் அவளுக்கு அவசரம்டா. இன்னும் அவங்க வீட்ல ஓகே சொல்லல. அவங்க ஒத்துக்காம கல்யாணம் பண்ணா சரிவராதுனு சொன்னாலும் கேக்கமாட்டேங்கிறா” என்றான் அலுப்புடன்

“நிரு உன் விஷயத்துல தெளிவா இருக்கா, ஒத்துக்கிட்டாலும் இல்லனாலும் சீக்கிரம் கல்யாணத்தை முடிச்சுட்டு ஜூனியர் ரிஷிய என்கிட்ட கொடுத்துடுங்க”

“அத நினைச்சு தான்டா குழப்பமா இருக்கு. அவ சின்ன பொண்ணு, பின்னாடி என்னென்ன சந்திக்கவேண்டி வரும்னு யோசிக்காம பேசறா. நானும் அத யோசிக்காம என் மனச அவளுக்கு காட்டிட்டேன். இப்போ சரினு சொல்லி ஏத்துக்கவும் முடியாம, இல்லனு சொல்லி அவளை ஒதுக்கி வைக்கவும் முடியாம திணறிட்டு இருக்கேன்”

“ரொம்ப யோசிக்காதடா”

“நீ இன்னைக்கு சமைச்சிடுறீயா கதிர்? நான் கேட் கிட்ட இருக்கற பார்க்ல இருக்கேன்”

“எப்பவும் குழப்பமா இருக்கறப்போ அங்கே உட்கார்ந்துட்டு தானே குழந்தைங்க சிரிச்சு விளையாடறத கேட்டுட்டு இருப்பே. உன் குழப்பம் தீரட்டும் நண்பா” என்றவன் ரிஷியின் கண்களில் கூலிங்கிளாஸை மாட்டிவிட்டான்

சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்திருந்தவனின் அருகே வந்த ஒருவர் “தம்பி, இங்கே ஆர்ஜே ரிஷி எந்த அபார்ட்மென்ட்ல தங்கியிருக்காரு” என கேட்டார்

“நீங்க யாருங்க?”

“என் பேரு தேவ்ராஜ், இது என் மனைவி மைதிலி”

“என்ன விஷயம்?” அதிர்ச்சியை மறைத்தபடி கேட்டான்

“சொல்லலாமானு தெரியல, என் பொண்ணு நிருஷிகா இந்த அபார்ட்மென்ட்க்கு அடிக்கடி வர்றதாவும் ரிஷிய சந்திக்கறதாவும் செக்ரட்டரி சொன்னாரு, அவர் எங்க ஆபீஸ் ஸ்டாஃப் தான். எங்க பொண்ணும் ஆர்ஜே ரிஷி எப்எம்ல பேசறத அடிக்கடி கேட்டுட்டே இருப்பா. ரெண்டு பேரும் லவ் பண்றாங்கனு நினைக்கிறோம். அதான் அவரை பாத்து பேசிட்டு போகலாம்னு நானும் என் மனைவியும் வந்தோம்”

“இவ்ளோ விவரம் சொன்ன செக்ரட்டரி ரிஷியோட வீட்டுநம்பர், போட்டோ மற்ற விவரம் எதும் சொல்லலியா?”

“இல்லங்க, நேர்ல பாத்து தெரிஞ்சுக்கோங்கனு சொன்னாரு. அதான் விசாரிச்சுட்டு போகலாம்னு வந்தேன்.

“ஓ, ரிஷிகிட்ட உங்க பொண்ணை மறந்துடணும், இந்த கல்யாணம் நடக்காதுனு சொல்லி மிரட்ட வந்தீங்களா?”

“சேச்சே, அப்படியெல்லாம் இல்ல. எங்க பொண்ணுக்கு எது பிடிக்குமோ அதை அவ கேக்கறதுக்கு முன்னாடி நிறைவேத்தி வைக்கிறது என்னோட வழக்கம். அவளா கேக்கறதுக்கு முன்னாடி ரிஷிய சந்திச்சு அவ கண்ணு முன்னாடி அவரை நிறுத்தி சர்ப்ரைஸ் கொடுக்கறது என்னோட பிளான்”

“வித்தியாசமான அப்பாவா இருக்கீங்களே? அந்த ரிஷி ஏழையா பணக்காரனா? உங்க ஸ்டேட்டஸ்க்கு ஒத்துவருவானா? நல்லவனா, எந்த குறையும் இல்லையா? இப்படி எதையும் தெரிஞ்சுக்க வேணாமா?”

“எங்க பொண்ணுக்கு பிடிச்சிருக்குன்னா அவரு நல்லவரா தான் இருப்பாரு. ஏழையோ பணக்காரனோ அவர் எப்படி இருந்தாலும் என் வீட்டு மருமகன் தான். ஆனா எந்த குறையும் அவருக்கு இருக்க கூடாது”

“ஒருவேளை அவர் குறையோட இருந்தா என்ன பண்ணுவீங்க?”

“அப்படி அவருக்கு எந்த குறையும் இருக்கக்கூடாதுனு கடவுளை வேண்டிக்கறேன்.

“தப்பா எடுத்துக்காதீங்க, பேச்சுக்காக கேக்கறேன், ஒருவேளை உங்க பொண்ணு ஒரு பார்வையில்லாதவர விரும்பினா என்ன பண்ணுவீங்க?”

“பார்வையில்லாதவருக்கு என் பொண்ணு உதவி செஞ்சா நான் சந்தோசப்படுவேன், ஆனா அவரை கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொன்னா என்னால எப்படிங்க ஒத்துக்க முடியும்? ஒரு பொண்ணுக்கு கணவன் தாங்க பாதுகாப்பு. எவனாச்சும் அவகிட்ட தப்பா நடக்க முயற்சி பண்ணா அவரால அதை தடுக்க முடியுமா? அவங்களுக்கு குழந்தை பொறந்தா அதோட எதிர்காலம் என்னாகும்?

என்னோட சொத்துக்கும் தொழிலுக்கும் முதல் வாரிசு என் பொண்ணு தான். அவளை அன்பா பாத்துக்கிட்டு தொழிலையும் நிர்வாகம் பண்றவனா இருந்தா மட்டும் போதும், அவர் எந்த ஜாதி மதத்தை சேர்ந்தவரு, பணக்காரனா? ஏழையா? இது எதபத்தியும் நான் கவலப்படமாட்டேன். பணம், படிப்பு வேலை இதுல எது குறையா இருந்தாலும் அதை என்னால சரிபண்ண முடியும். ஆனா அவர் உடலளவுல எந்த குறையும் இல்லாம இருக்கணும்”

“ஒரு தகப்பனா நீங்க சொல்றது கரெக்ட், ஆனா உங்க பொண்ணு பார்வையில்லாதவர தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு பிடிவாதம் பிடிச்சா என்ன பண்ணுவீங்க?”

“அட என்ன சார் நீங்க? நானும் பார்த்துட்டே இருக்கேன், அபசகுனமாவே பேசிட்டு இருக்கீங்க. எங்க பொண்ணு அந்த முடிவ எடுத்தா கட்டாயம் நான் ஒத்துக்க மாட்டேன். அவளோட அப்பா இறந்து, நான் தனியா வாழ்ந்தப்போ பலபேர் என்கிட்ட தப்பா நடந்துக்க பாத்தாங்க. என் கணவர் ராஜ் பாதுகாப்புல தான் நான் இப்பாே நிம்மதியா இருக்கேன். நான் கணவர் இல்லாம வாழ்ந்ததும், என் பொண்ணு பார்வையில்லாதவர கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழ்றதும் ஒன்னு தான். எந்த பேரண்ட்ஸாவது ஒத்துப்பாங்களா? ராஜ் கிளம்புங்க போகலாம்”

“கொஞ்சம் பொறு மைதிலி! சார் நீங்க அனுமானத்துல ஒரு கேள்வி கேட்டீங்க, அதுக்கு பதிலை சொல்லிடறேன். என் பொண்ணுக்கு நான் ஸ்டெப் பாதர், இதுவரைக்கும் அவ என்கிட்ட வந்து இது எனக்கு வேணும்னு கேட்டதில்ல. ஒருவேளை நீங்க சொல்ற மாதிரி ஒரு பார்வையில்லாதவரை கூட்டிட்டு வந்து அவரை தான் கட்டிப்பேன்னு சொன்னா, நான் அவளோட விருப்பத்துக்கு மறுப்பு சொல்ல மாட்டேன். கட்டாயம் கல்யாணம் பண்ணி வச்சிடுவேன். ஆனா நானும் என் மனைவியும் மனபூர்வமா இதை செய்யமுடியாது. நான் இருக்கறவரைக்கும் அவங்க ரெண்டு பேரையும் சேர்த்தே பாத்துப்பேன். ஆனா எனக்கு பிறகு என் மகளோட நிலைமை என்னங்கிற கேள்வியே எங்களை நடைபிணமாக்கிடும்”

“கவலைப்படாதீங்க சார், கட்டாயம் உங்களுக்கு அந்த நிலைமை வராது”

“தேங்க்ஸ், உங்க பேரை தெரிஞ்சுக்கலாமா?”

“வர்மன்”

“வர்மன், ரிஷிய எங்கே பாக்கலாம்?”

“ராஜ் எனக்கென்னமோ மனசே சரியில்ல. நிருஷியோட கல்யாணத்த பத்தி பேச வந்தப்போ ஏதோ அபசகுனமா தோணுது. நாளைக்கு பேசிக்கலாமா?” என்றார் மைதிலி

“மிஸ்டர் வர்மன், நீங்க தப்பா எடுத்துக்கலனா இந்த கார்டை ரிஷிகிட்ட கொடுத்து எனக்கு போன் பண்ண சொல்றீங்களா?”

“சொல்றேன் சார்” என்று அவர் கொடுத்த கார்டை வாங்கி கொண்டான்

“பைதிவே, உங்க கூலிங்கிளாஸ் நல்லாயிருக்கு. உங்களுக்கும் எந்த உதவி தேவைனாலும் எனக்கு கூப்பிடுங்க” என்று இன்னாெரு கார்டை அவனிடம் கொடுத்துவிட்டு சென்றார்.

இருட்ட தொடங்கியும் நண்பன் வராததால் கதிர்மாறன் கீழே வந்தான். துரத்திலிருந்து யாரோ ரிஷியுடன் பேசிவிட்டு செல்வதை பார்த்தபடி வந்தான்.

“ரிஷி, யார்டா அவங்க?”

“நிருஷியோட பேரண்ட்ஸ்”

“என்னடா சொல்றே? அதுக்குள்ள நிருஷி வீட்ல சொல்லிட்டாளா? நைட் தான் சொல்ல போறேன்னு சொன்னாளே. என்னடா சொன்னாங்க? அவங்களை வீட்டுக்குள்ள கூப்பிட்டு பேசாம இப்படியா வெளியவே பேசி அனுப்புவ? என்கிட்ட ஒருவார்த்தை சொல்லியிருக்க கூடாதா?” அங்கலாய்த்தான் கதிர்.

“நிருஷியோட பேரண்ட்ஸ்க்கு பார்வையில்லாதவரை கல்யாணம் பண்ணி வைக்க விருப்பமில்லடா. பார்வையில்லாதவனால எப்படி அவங்க பொண்ணுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியும்னு கேக்கறாங்க. சோ இது சரிவராது”

“இத சொல்ல தான் அவங்க வந்தாங்களா? ரிஷி ரொம்ப யோசிக்காதடா. காதல் கல்யாணம்னாலே பெத்தவங்க சைட்ல எதிர்ப்பு இருக்க தான் செய்யும். நாம முன்னாடியே யோசிச்சது தானே. நிருஷி சொன்ன மாதிரி ரிஜிஸ்டர் மேரஜ் பண்ணிக்கோங்க. நாளைக்கே அதுக்கான ஏற்பாட்டை பண்ணிடறேன்”

“இல்ல கதிர், இது சரி வராது. என்னால நிருஷிக்கு எந்தளவுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியும் சொல்லு? அன்னைக்கு அந்த செக்ரட்டரி நிருவ கேவலமா பேசினதுக்கு கூட என்னால அவனை எதுவுமே பண்ண முடியலயே, அந்த இடத்துல நீ வராம போயிருந்தா என்னாகியிருக்கும்?

என் வேலைய நானே பாத்துக்கணும்னு நினைக்கிறவன், என் மனைவியையும் குழந்தையையும் நான் தானே பாத்துக்கணும். என்னால பாத்துக்கமுடியும்னு அவங்ககிட்ட அடிச்சு சொல்ல முடியலயே கதிர்”

அதே சமயம் “நிரு காலிங்” என்று ரிஷியின் அலைப்பேசி ஒலிக்க, அந்த அழைப்பை துண்டித்தான். பலமுறை அவனுக்கு அழைத்து பார்த்துவிட்டு கதிருக்கு அழைத்திருந்தாள்.

அவளாக தான் இருக்கும் என்று உணர்ந்தவன் “வேலையா இருக்கேன்னு சொல்லி போனை வச்சுடு” என்றான் ரிஷி கட்டளையாக

நண்பனின் கட்டளையை ஏற்று ரிஷி ரெக்கார்டிங்கில் இருப்பதாக பொய் சொல்லி போனை வைத்தான்.

“ரிஷி நீ பண்றது எதுவும் சரியில்ல, நிருவோட பேரண்ட்ஸ் ஒத்துக்கலனாலும் ரிஜிஸ்டர் மேரஜ் பண்ணிக்கலாம்னு தானே ரெண்டு பேரும் முடிவு பண்ணியிருந்தீங்க. இதெல்லாம் எதிர்பார்த்து தானேடா, கடந்து தான் வரணும்”

“கதிர், நிருவோட ஒரு வாரம் சந்திப்பு முடிஞ்சதும் நான் சொல்ற மாதிரி கேக்கறேன்னு நீ எனக்கு வாக்கு கொடுத்திருக்க நினைவிருக்கா?” என்றான் ரிஷி கடுமையான குரலில்

“சரிடா, இப்போ என்ன முடிவெடுத்திருக்க?” என்றான் கதிர் சலிப்புடன்

“நிருஷி மேல காதல் இல்லாதப்பவே அவளை என்னால விலக்கி வைக்க முடியல. அவ ரொம்ப உரிமையோட பழகி அவளோட காதல எனக்குள்ள வரவச்சுட்டா. என் மனசும் அவளுக்கு தெரிஞ்சு போச்சு. நான் மறுபடியும் அவளுக்கு எவ்வளவு புத்திமதி சொன்னாலும் அவ கேட்கமாட்டா. அவ முகத்துக்கு நேரா நான் அவள காதலிக்கலனு பொய் சொன்னாலும் என்னை கன்வின்ஸ் பண்ண தான் பார்ப்பா. அவளோட பிடிவாத குணத்துக்கு அவ சொல்றத தான் கேக்கறமாதிரி ஆயிடும்”

“அதுக்கு”

“அவகிட்ட சொல்லாம இப்பவே இந்த வீட்ட காலி பண்ணிட்டு ஊர விட்டே போயிருவோம்”

“ரிஷி உனக்கென்ன பைத்தியமா? நாம எதுக்கு கடங்காரன் மாதிரி ஊரவிட்டு போகணும்?”

“ஆமா கதிர், நான் கடங்காரன் தான். நிருவோட காதலை வாங்கிட்டு அவளுக்கு அதை திருப்பி கொடுக்காம போக போறேன். அப்போ நான் கடங்காரன் தானே”

“ரிஷி, நீயும் நிருஷியும் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா வாழ போறீங்கனு கனவு கண்டுட்டு இருந்தேன்டா”

“என் வாழ்க்கையில சந்தோஷமா? அது எப்பவும் கனவுல தான்டா நடக்கும்” என்றான் ரிஷி விரக்தியுடன்

“ஒருவேளை நிருவோட மனசு மாறி வேற யாரையாச்சும் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா வாழ்ந்தா அதுவே எனக்கு போதும்”

“நிரு உன்னை மறந்துடுவான்னு நினைக்கறீயா ரிஷி?”

“நிச்சயமா இல்லடா. எந்த எதிர்பார்ப்பும் இல்லாம என்னை முழுமனசா காதலிக்கிறா, அவளோட காதல நான் சந்தேகப்படல. என்னோட சுயநலத்துக்காக அவளுக்கு கிடைக்க வேண்டிய நல்ல வாழ்க்கைய நான் கெடுக்க விரும்பல. எல்லாருடைய காதலும் கல்யாணத்துல முடியுதா என்ன? அது போல எங்களோட காதல் துளிர்விட்ட கொஞ்ச நாள்லயே முடிஞ்சிருச்சுனு நினைச்சுக்கறேன்”

“ரிஷி, நாம நிருஷிகாகிட்ட எதுக்கும் ஒரு முறை பேசிட்டு முடிவெடுக்காலம்டா, அவள நீ ஏமாத்திட்டதா நினைச்சுக்க போறா” என்று கதிர் இழுக்க

“எதுவும் பேச வேணாம், எனக்கு தெரியாம நீ அவகிட்ட பேச முயற்சி செய்யக்கூடாது, இது என்மேல சத்தியம். அவள நான் ஏமாத்திட்டதா நினைச்சு என்னை வெறுக்கட்டும், அப்போ தான் அவ வேற ஒரு வாழ்க்கைய ஏத்துப்பா” என்றவன் இருவரின் அலைப்பேசியில் இருந்த சிம்கார்டை எடுத்து வீச சொன்னான்.

நண்பனின் வாழ்க்கையில் இனியாவது வசந்தம் வரும் என்று காத்திருந்த கதிருக்கு ஏமாற்றமாக இருந்தாலும் அவன் முடிவுக்கு கட்டுப்படுவது தான் அவனது வழக்கம் என்பதால் ரிஷி சொன்னபடி செய்தான்.

நிருஷி அன்றைய நாளின் கோபத்துடன் தன்னை பிடித்திருந்த ரிஷியின் கரங்களை உதறிவிட்டு திரும்பி நின்றாள்.

(தொடரும்)
 
Last edited:
Top Bottom