பாவை 16

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 94

Active member
Staff member
May 5, 2026
42
141
33
chennai
ரிஷி சொல்லிக் கொள்ளாமல் ஊரை விட்டு சென்றதிலிருந்து நிருஷிகா மிகுந்த மனஅழுத்தத்திற்கு ஆளாகியிருந்தாள். ராஜ் மற்றும் மைதிலியால் அவளை நெருங்க கூட முடியவில்லை. தினமும் ரிஷி வேலை செய்த எப்எம் அலுவலகத்துக்கும் அபார்ட்மென்ட்டிற்கும் சென்று வந்தாள். தினமும் அவன் எண்ணிற்கு அழைத்து பார்ப்பாள், அவனை எங்கே சென்று தேடுவது என்று அவளுக்கு தெரியவில்லை.

தன் மேல் உண்மையான காதல் இருந்திருந்தால் இப்படி சொல்லாமல் போயிருப்பானா என்ற கோபம், வருத்தம் அதைவிட அவனை காணமுடியாமல் போன ஏக்கம், அவன் மீதான காதல் என கலவையான உணர்ச்சிகளில் இருந்தவள் மீண்டும் யாருடனும் பேசாமல் தன் அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தாள். அவளை எப்போதும் சாந்தப்படுத்தும் ரிஷியின் குரலும் அவளுக்கு கேட்காததால் கிட்டத்தட்ட மனநிலை பாதிக்கப்பட்டவள் போல இருந்தாள். இறுதியாக அவன் அவளை அணைத்து இதழ்பதித்த நினைவு மட்டும் மனதிற்குள் தித்திப்பாய் அவளை உயிர்ப்புடன் வைத்திருந்தது.

காதல் தோல்வியில் சிறிது நாட்கள் அப்படியிருப்பாள் என்று நினைத்த மைதிலியும் ராஜ்ஜும் அவள் இதை கடந்து வரட்டும் என்று காத்திருந்தார்கள். ஆனால் ஒரு வருடமாகியும் நிருஷிகா மாற்றமேயில்லாமல் எதையோ பறிகொடுத்தது போலிருக்கவும் மைதிலிக்கு பொறுக்கவில்லை. எத்தனையோ முறை மகளிடம் பேச முயற்சித்தார், அவள் யாரிடமும் பேச விருப்பமில்லாமல் கதவை சாத்திக் கொண்டாள்.

ஒருநாள் தேவ்ராஜ் மயங்கி விழுந்து விட்டதாக கம்பெனியிலிருந்து போன் வந்தது. “நிருஷி கதவ திற, ராஜ்க்கு என்ன ஆச்சுனு தெரியல, மயங்கி கீழே விழுந்துட்டாராம்” என்று மைதிலி பதட்டத்துடன் கத்தவும் கதவை திறந்தாள்.

இருவரும் பதறிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றபோது தான் முதன்முறையாக அஸ்வினை சந்தித்தாள். மைதிலிக்கு அவனை ஏற்கனவே தெரிந்திருக்கும் போல, “அஸ்வின், ராஜ்க்கு என்னாச்சு?” என்று பதட்டத்துடன் விசாரிக்க

“பேசிட்டே இருந்தாரு ஆன்ட்டி திடீர்னு மயங்கிட்டாரு. டாக்டர்ஸ் செக் பண்ணிட்டு இருக்காங்க” என்றபடி நிருஷிகாவை பார்த்தான்.

இருவரும் ஐசியுவிற்கு சென்று ராஜ்ஜை பார்த்தனர். மைதிலி கணவனை அந்த நிலையில் பார்த்ததும் கதறி அழ தொடங்கினார். நிருஷிக்கு அவரை நினைத்து வருத்தமாக இருந்தாலும் அமைதியாகவே இருந்தாள்.

மருத்துவ பரிசோதனைக்கு பிறகு, “பேஷன்ட்டோட இதயம் ரொம்ப பலவீனா இருக்கு, அதுல இருக்கற ரத்தகட்டி மூளைக்கு போனதால ஸ்ட்ரோக் வந்திருக்கு. அவர்கிட்ட அவரோட வேலைய பத்தியும் குடும்பத்த பத்தியும் விசாரிச்சோம். கொஞ்ச வருஷமா பிசினஸ்ஸ தனியா அவரால ஹேண்டில் பண்ண முடியாம தவிச்சிட்டு இருந்திருக்காரு, இதுல குடும்பத்துல கொஞ்சம் பிரச்சனை, அதுல ரொம்ப ஸ்ட்ரெஸ்ல இருந்ததா சொல்றாரு. அதுல ஸ்ட்ரெஸ் மாத்திரை எடுத்துக்கறதா வேற சொல்றாரு, அதிகமான மனஅழுத்தத்துனால கூட ஸ்ட்ரோக் வந்திருக்கலாம், ரெண்டு நாள் அப்ஷர்வேஷன்ல இருக்கட்டும் அப்புறம் வீட்டுக்கு அழைச்சுட்டு போகலாம். ஆனா கண்டிப்பா வேலையிலருந்து ரெஸ்ட் எடுத்துக்கணும். ஸ்ட்ரஸ் ஆகாம பாத்துக்கோங்க” என்று சொல்லிவிட்டு சென்றார்.

வீட்டில் புவனும் புவனிகாவும் தனியாக இருப்பதால் மைதிலி நிருஷிகாவை வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு மருத்துவமனையில் இருந்து கொண்டார். நிருஷிகாவும் நிலைமையை உணர்ந்து அவர்களை கவனித்துக் கொண்டாள். இரண்டு நாளில் ராஜ் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு வந்தார். அவரை காண அவருடைய சொந்தங்கள் தொழில்முறை நட்புகள் என பலர் வந்து சென்றனர். அவள் ஒரு பார்வையாளராக மட்டும் இருந்தாள். ஓரளவு வீட்டின் நிலைமை பழைய நிலைக்கு வந்ததும் மைதிலி நிருஷிகாவிடம் வந்து, “நிருஷி, ராஜ் உன்கிட்ட பேசணும்னு சொல்றாரு. இப்போ தான் ஆஸ்பிட்டல்ல இருந்து வந்திருக்காரு, எடுத்தெறிஞ்சு பேசாம அவர் சொல்றத கேட்டுக்கோ”

“எதுக்கு என்கிட்ட பேசணும், அப்புறம் நான் எடுத்தெறிஞ்சு பேசறேன்னு சொல்லணும்?” என்றாள் கடுப்புடன்

“ப்ளீஸ் நிரு, வந்து பேசினா தானே என்னனு தெரியும்?”

சலிப்புடன் எழுந்து ராஜ்ஜின் அறைக்கு சென்றாள். கம்பீரமான உடற்கட்டுடன் இருந்தவர் இந்த மூன்று நாளில் உடல் மெலிந்து மிகவும் சோர்வாக காட்சி அளிக்கவும், “உடம்பு எப்படி இருக்கு?” பட்டும் படாமல் விசாரித்தாள்

“நல்லா இருக்கேன்டா, இப்படி உட்காரு உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றார் நலிந்த குரலில். அவர் படுக்கைக்கு அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்ததும் பேச ஆரம்பித்தார்.

“நிரு, நான் ஆரோக்கியமா இருக்கேன்னு நினைச்சுட்டு இருந்தேன். திடீர்னு உடம்புக்கு முடியாம போனதும், நான் நல்லாயிருக்கும் போதே உனக்கு ஒரு நல்லது பண்ணிடனும்னு தோணுது”

அவள் புரியாமல் பார்க்கவும், “நீ கல்யாணம் பண்ணிக்கணும்” என்றார்

“எனக்கு கல்யாணமே வேணாம். நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்” என்று எழுந்து கொண்டாள்.

“நீ காதலிச்ச ரிஷி காணாம போயிட்டதால நீ அவரை தேடிட்டு இருக்கனு எனக்கு தெரியும். நாம வேணும்னா எதாச்சும் நியூஸ் பேப்பர்ல விளம்பரம் கொடுத்து பார்க்கலாமா?”

“நியூஸ் பேப்பர்ல விளம்பரம் கொடுத்து தேடறதுக்கு அவர் ஒண்ணும் தொலைஞ்சு போகல, வேணும்னே கிளம்பி போயிருக்காரு. நான் வேணும்னா தேடி வரட்டும், இல்லனா பரவாயில்ல, இப்படியே இருந்துக்கறேன்”

“இப்படி சொன்னா எப்படிம்மா? உன்னை ஒருத்தன் கையில பிடிச்சு கொடுக்காம எனக்கு எதாச்சும் ஆயிட்டா, அப்புறம் உனக்கும் அம்மாவுக்கும் யார் பாதுகாப்பு?”

“எனக்கு யாரோட பாதுகாப்பும் தேவையில்ல, என்னை பாத்துக்க எனக்கு தெரியும்” ரிஷியில்லாததால் அவளின் பிடிவாதம் மேலும் கூடியிருந்தது. அவன் மேலிருந்த கோபமும் ஆற்றாமையும் உள்ளுக்குள் எரிமலையாய் கனன்று கொண்டிருக்க, அவளின் திருமணம் பற்றி பேசியதால் அது இப்போது வெடிக்க தயாராகி விட்டது. இவர்கள் யார் என் திருமணம் பற்றி பேச? என்ற கேள்வி எழுந்தது.

“நிருஷி” அதட்டினார் மைதிலி

நிருஷிகா அங்கே நிற்காமல் தன்னறைக்கு சென்றுவிட்டாள். அவள் பின்னாலே வந்த மைதிலி, “அப்பா சொல்றத கேளு நிருஷி, அவர் உன்னோட நல்லதுக்காக தானே சொல்றாரு?”

“யார் எனக்கு அப்பா? அவரா? அவர் ஒன்னும் என் அப்பா இல்ல. உன் கழுத்துல தாலிகட்டி நான் பொறக்க காரணமா இருந்தவரு தான் என் அப்பா. உன் கூட ப”

“நிருஷி” மைதிலி கத்திவிட்டார்

“உன் கூட இருக்கறவர் எல்லாம் எனக்கு அப்பா ஆயிட முடியாது”

“என்னடி சொன்னே?” மகளின் கன்னத்தில் அறைந்திருந்தார் மைதிலி

“நான் அவர்கூட இருந்தத நீ பாத்தியா?”

நிருஷிகா கன்னத்தில் கைவைத்தபடி மைதிலியை உறுத்து விழிக்க, இதுநாள் வரை தாயும் மகளும் தங்களுக்குள் பேச அஞ்சி விலகி நின்ற விஷயங்கள் தன் கட்டுக்களை மீறி மனதிற்குள் இருந்த குப்பையெல்லாம் வெளியே கொட்ட தொடங்கியிருந்தன. நிருஷிகாவின் மனதை ஆரம்பத்திலிருந்து அரித்த கேள்விகள் இப்போது வெளிவந்திருக்க, மைதிலி பெற்ற மகளிடம் சந்திக்க கூடாத கேள்விகளை சந்தித்ததில் உடைந்து அழுதார்.

“நீ சின்ன பொண்ணு, உன்கிட்ட சில விஷயங்கள வெளிப்படையா சொன்னா, அது உன்னையும் உன் படிப்பையும் எப்படி பாதிக்குமோனு நினைச்சு தான் உன்கிட்ட நான் இதுவரைக்கும் எந்த விஷயத்தையும் சொல்லல. உனக்காக பாத்து எல்லாத்தையும் செய்யற ராஜ்ஜை ஒரு நாள் நீ கட்டாயம் புரிஞ்சுப்பேனு நினைச்சேன். ஆனா நீ புரிஞ்சிக்கவும் முயற்சி செய்யல, புரிய வைக்கறதுக்கான அவகாசமும் எங்களுக்கு தரல. எங்க ரெண்டு பேரையும் பாத்தாலே முகத்தை திருப்பிட்டு ரூமுக்குள்ள போய் கதவ சாத்திக்கிட்டு போறவ கிட்ட என்ன சொல்றது? எப்படி புரிய வைக்கறதுனு தெரியாம முழிச்சிட்டு இருந்தேன்.

கொஞ்ச நாளா நீ முகத்தை பாத்து பேசறதும் ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடறதயும் பார்த்து உனக்கு பக்குவம் வந்துடுச்சு, இனிமே நீ புரிஞ்சுப்பேனு நினைச்சேன். ஆனா உன் உடம்புல ஓடறது உன் அப்பா குடும்பத்து ரத்தம் தானே, அதான் நீயும் அவங்கள மாதிரியே இவ்வளவு கேவலமா பேசறே” என்றார்

“இப்போ எதுக்கு அவங்கள இழுக்கறே”

“பெத்த பொண்ணே என்னை அசிங்கமா நினைக்கற இந்த நிலைமைக்கு அவங்க தானே காரணம்?”

நிருஷிகா கேள்வியாக பார்க்கவும், “தாயும் மகளும் பேசிக்க கூடாத விஷயங்கள்னு நினைச்சு இத்தனை நாளா உன்கிட்ட நான் எதையும் சொன்னதில்ல. எல்லாரும் என்னை கேவலமா பேசறத நான் பெரிசா எடுத்துக்கிட்டதில்ல, ஆனா நீயும் என்னை பத்தி கேவலமா தான் நினைச்சிட்டு இருக்கேனு இப்போ தான் புரியுது. இத்தனை நாளா அம்மாவ பங்கு போட்டுக்க புதுசா சொந்தம் வந்துடுச்சுனு நீ கோபப்படறதா தான் நினைச்சேன். ஆனா உன் மனசுக்குள்ள என்னை பத்தி இப்படி நினைச்சிருப்பேனு நான் சத்தியமா நினைக்கல. என்னோட மானத்தை காக்கறதுக்காக ராஜ்ஜும் அவரோட மானத்தை காக்கறதுக்காக நானும் இதுவரைக்கும் சொல்லாத உண்மைய சொல்றேன் கேட்டுக்கோ

நான் கல்யாணமானதுல இருந்து உன் அப்பா என்னை நல்லா பாத்துக்கிட்டாரு, அவர் இருக்கறவரைக்கும் எனக்கு எந்த குறையும் இல்லாம தான் இருந்துச்சு. திடீர்னு அவர் போனப்பின்னாடி வயசான என் அப்பா அம்மாவ பாத்துக்கறதே என் அண்ணனுக்கு பெரிய சுமையா இருந்துச்சு. நானும் குழந்தையோட வந்துட போறேனோனு புகுந்த வீட்லயே இருக்க சொல்லிட்டாங்க.

உன் அப்பா இருக்கறவரைக்கும் மரியாதையா கூப்பிட்டுட்டு இருந்த நாய் எல்லாம் என்னை வேற மாதிரி கூப்பிட ஆரம்பிச்சாங்க. வெளிலனா கூட பரவாயில்ல, வீட்ல இருக்கறவங்களே என்னை இடிச்சிட்டு போறதும், பொடிவச்சு பேசறதும் ஆளில்லாத சமயங்கள்ல வம்பு பண்றதுமா இருந்தாங்க. வீட்டு பொம்பளைங்க கிட்ட சொன்னா என்ன சொன்னாங்க தெரியுமா? என் புருஷன் அப்படிப்பட்டவன் இல்ல, நீ தான் புருஷன் இறந்துட்டதால அவரை ஒரு மாதிரியா பாக்கறீயாமே, சீவி சிங்காரிச்சிட்டு திரிஞ்சா இப்படி தான்னு பேசனாங்க. அதுமட்டுமில்ல, எங்கே அவங்க புருஷன நான் மயக்கிடுவேனோனு நான் எங்கே இருந்தாலும் என்னை கண்காணிச்சாங்க. ஒருத்தியும் தன் புருஷன கேள்வி கேக்கல. எதுக்கு அங்கே இருக்கணும்னு உன்னை கூட்டிட்டு தனியா வந்துட்டேன்.

ராஜ் கம்பெனியில வேலைக்கு சேர்ந்து ஒரு வீட்டையும் வாடகைக்கு எடுத்தேன். நீ சின்ன புள்ளையா இருக்கும் போதே சனிக்கிழமை நேரத்துல அங்கே உன்னை கூட்டிட்டு போயிருக்கேன். நீ ராஜ் கூட நல்லா விளையாடுவே, அவருக்கும் உன்னை ரொம்ப பிடிக்கும்.

எல்லாம் கொஞ்ச நாள் தான், நான் புருஷன் இல்லாம பட்ட மரமா நிக்கறது தெரிஞ்சதும் ஆபீஸ்லயும் தொல்லை ஆரம்பிச்சது. வீட்டுக்கு போனா வீட்டு ஓனரும் வேற மாதிரி பேசுனான். ஒருத்தனும் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு கேக்கல, வேற அர்த்தத்துல பேசினாங்க. நானும் கண்டும் காணாம போயிட்டு இருந்தேன்.

நீ வயசுக்கு வந்தப்போ எல்லாரையும் அழைச்சு சின்னதா பங்ஷன் பண்ணேன். சொந்த பந்தம்னு யாரையும் கூப்பிடல. ரெண்டு பேரும் தனியா இருக்கறோம், கேக்கறதுக்கு ஆளில்லனு தெரிஞ்சுக்கிட்ட ஆம்பளைங்க தைரியமா வந்து வம்பிழுக்க ஆரம்பிச்சாங்க. முக்கியமா ஹவுஸ் ஓனர் ராத்திரியில வீட்டுக் கதவ தட்றது, தெரியாம மோதினது போல வேகமா வந்து இடிக்கறது இப்படி பல நடந்துட்டே இருக்கவும் மனசு உடைஞ்சு போயிட்டேன்.

மனஉளைச்சல்ல வேலைல நிறைய தப்பு செஞ்சேன், அப்போ தான் ராஜ் என்னை கூப்பிட்டு பேசினாரு, “என்னாச்சு மைதிலி, எப்பவும் வேலைல எந்த தப்பும் வராது. கொஞ்ச நாளா நிறைய மிஸ்டேக் பண்றீங்க? வீட்ல எதாச்சும் பிரச்சனையா?” என்று புதிதாக அக்கறையான கேள்வி வரவும் அவர் முன்னால் உடைந்து அழ தொடங்கினார் மைதிலி

“மைதிலி, ஏன் அழறீங்க? என்ன நடந்துச்சுனு சொல்லுங்க. என்னால முடிஞ்ச உதவிய நான் பண்றேன்” என்று அவர் சமாதானம் செய்ய, மைதிலி தன் நிலைமையை கூறி அழுதார்.

“மைதிலி, வேலியில்லாத பயிர, எல்லாரும் திருட்டுதனமா மேய பாக்கறாங்க. நீங்க ஏன் நல்லவரா பாத்து கல்யாணம் பண்ணிக்க கூடாது?”

“நல்லவரா? அவர் யார் சார்? அவர நான் எப்படி அடையாளம் கண்டுபிடிக்கறது? நான் தனியா இல்ல, வயசு பொண்ணை வச்சிட்டு இருக்கேன், வர்றவன் எந்தளவுக்கு நல்லவனா இருப்பான்னு தெரியாது. முக்கியமா என் புருஷன் இருந்த இடத்துல என்னால யாரையும் வச்சு பாக்க முடியாது”

“நீங்க தப்பா எடுக்கலனா, இதுக்கு ஒரு தீர்வ நான் சொல்றேன்”

“என்ன அது?”

“நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம்”

“அதானே நீங்களும் ஆம்பிளை தான்னு நிருபிச்சிட்டீங்க” என்று கோபத்துடன் எழுந்தார் மைதிலி

“மைதிலி, நான் சொல்றத முழுசா கேட்டுட்டு எனக்கு உன் முடிவ சொல்லு போதும். என் கல்யாணத்துக்கு முதல்நாள் எனக்கு மனைவியா வரப்போற பொண்ணுக்கிட்ட உணர்வு பூர்வமா பேசிட்டு இருந்தப்போ திடீர்னு கடுமையான ஸ்ட்ரோக் வந்துச்சு, ஆஸ்பிட்டல சேர்த்து டிரிட்மென்ட் பாத்தப்போ என்னோட நரம்புகள் பலவீனாமாயிருக்கு. குடும்ப வாழ்க்கையில ஈடுப்பட்டா நிறைய வலியிருக்கும் உயிருக்கும் ஆபத்தா முடியும்னு சொன்னாங்க. என்னால ஒரு பொண்ணோட வாழ்க்கை கெட வேணாம்னு கல்யாணத்தை நிறுத்திட்டேன். அப்போ இருந்து நான் தனியா தான் வாழ்ந்துட்டு இருக்கேன்.

நான் ஏன் கல்யாணத்தை நிறுத்தினேன், திரும்பவும் ஏன் கல்யாணம் பண்ணிக்கலங்கறது என் பெரியப்பா பொண்ணு மாலினி அக்காவ தவிர வேற யாருக்கும் தெரியாது. என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி வற்புறுத்திட்டு இருந்த என்னை பெத்தவங்க கூட உண்மை தெரியாமலே போய் சேர்ந்துட்டாங்க. எல்லாரையும் பாக்கும் போது எனக்கும் மனைவி குழந்தைங்கனு வாழணும்னு ஆசையா இருக்கும். அந்த ஆசை எப்பவும் நிறைவேறாதுனு என்னோட கவனத்தை தொழில்ல திருப்பினேன். நிறைய சம்பாரிச்சிட்டும் இருக்கேன்.

நாப்பத்தஞ்சு வயசுக்கு மேலாகியும் நான் ஒத்தையா இருக்கறத பாத்து புதுசா வேலைக்கு சேர்ந்தவங்க டைவர்ஸ் ஆனவன்னு நினைச்சிக்கிட்டாங்க. விசுவாசமான பழைய வேலைக்காரங்கள தவிர யாருக்கும் என்விஷயம் தெரியாது. என்னோட நிலைமை வெளியில தெரியறத நான் விரும்பல. என்னால ஒரு பிசினஸ் மேனா தலைநிமிர்ந்து தொழில் பண்ண முடியாது. அதுக்கு எனக்கு ஒரு குடும்பம் வேணும், அதே சமயம் என்னால கணவனா அந்த விஷயத்தை மட்டும் கொடுக்க முடியாது. இதுக்கு சம்மதிக்கிற மாதிரி யாராச்சும் வேணும்னு யோசிச்சுட்டு இருந்தேன்.

உன்னையும் நிருஷிகாவையும் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு. நிருஷிய பாக்கும் போதெல்லாம் எனக்கு கல்யாணமாகியிருந்தா அவ வயசுல ஒரு பொண்ணு இருந்திருப்பானு தோணும். இது விஷயமா உன்கிட்ட எப்படி பேசறதுனு தயங்கிட்டே இருந்தேன். இன்னைக்கு வெளிப்படையா கேட்டுட்டேன். உனக்கு சம்மதமில்லனா கூட பரவாயில்ல, உன்னை நம்பி சொன்ன என்னோட ரகசியத்தை நீ யார்கிட்டயும் சொல்லக்கூடாது”

“எனக்கு சம்மதம்” என்றார் மைதிலி பட்டென்று

“குட், என்னால உனக்கு பாதுகாப்பு கொடுக்க முடியும், மனைவிங்கிற அந்தஸ்த கொடுக்க முடியும். நிருஷிகாவை நல்லா படிக்க வச்சு கல்யாணம் பண்ணி கொடுக்க முடியும். ஆனா கணவனா உன்கிட்ட என்னால நடந்துக்க முடியாது. பரவால்லயா?”

“பரவால்ல, எனக்கும் என் மகளுக்கும் பாதுகாப்பு கிடைச்சா போதும். ஆனா இந்த கல்யாணத்த நிருஷி எப்படி எடுத்துப்பானு தெரியலயே?”

“அவ எப்போ என்னை ஏத்துக்கறாளோ அப்போ கல்யாணம் பண்ணிக்குவோம். அதுவரைக்கும் நான் உன்வீட்டுக்கு வந்து நிருஷிகாவோட க்ளோஸ் ஆக பாக்கறேன்” என்று சொன்னார்

ஆனால் பக்குவமில்லாத பதினைந்து வயது நிருஷிகாவுக்கு அம்மாவுடன் ஒரு ஆணை பார்க்கவும் பிடிக்காமல் போனது. ராஜ் நிருஷியின் மனதை வெல்ல அடிக்கடி வீட்டிற்கு வந்ததை அவள் வேறு விதமாக நினைத்து அவர்களிடம் வெறுப்பை உமிழ்ந்தாள். அங்கே இருக்க பிடிக்கவில்லை, ஹாஸ்டலில் படிக்கிறேன் என்று அடம்பிடித்தாள். பத்தாவது படித்து கொண்டிருப்பவளின் ஆரோக்கியமான மனநிலையை கெடுக்க விரும்பாமல் அவளின் படிப்பு மட்டுமே முக்கியம் என்று அவர்களின் திருமணமுடிவை நிறுத்தியிருந்தார்கள்.

புவன் புவனிகா இருவரும் மைதிலியை தேடிக் கொண்டு, “மம்மி” என்றபடி வந்தனர். “ரெண்டு பேரும் டாடி கூட இருங்க” என்று மைதிலி அவர்களை அனுப்பி வைக்க, நிருஷிகா கேள்வியுடன் அன்னையை பார்த்தாள். அவள் பார்வையின் பொருள் உணர்ந்த மைதிலி கதவை சாத்தி விட்டு தரையில் அமர்ந்து முழங்காலில் முகத்தை புதைத்து அழத்தொடங்கினார்.

(தொடரும்)
 
Last edited:

Author: STN - 94
Article Title: பாவை 16
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.