பாவை 23

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 94

Active member
Staff member
May 5, 2026
42
141
33
chennai
ரிஷி ஹார்பருக்குள் செல்லும் போதே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்திருந்தான். பெரிய கப்பலை நோக்கி சென்று கொண்டிருந்த படகின் மீது அவனுக்கு சந்தேகம் வலுத்தது. கப்பல் பாதுகாப்புதுறை அதிகாரியிடமிருந்து துப்பாக்கியை பறித்து கொண்டு கடலில் குதித்திருந்தான். அலைகளுக்கு நடுவே நீச்சலடித்து அவன் படகை நெருங்கும் வேளையில் தான் அந்த டிரைவர் நிருஷிகாவின் தலையை இரும்பு படகின் மீது மோதி கன்னத்தில் அறைந்திருந்தான். சற்றும் யோசிக்காமல் ரிஷி அவனுடைய வலதுபக்க மார்பில் துப்பாக்கியால் சுட்டான். அதில் படகு குடைய சாய, நிருஷிகாவும் தலையில் அடிப்பட்டதால் கடல்நீரிலேயே மயங்கி விழுந்திருந்தாள்.

நிரு என்று கத்தியவன் அவளை கடலுக்குள் தேடினான். நீச்சல் தெரியாதவளோ கடல்நீரில் முழ்க ஆரம்பிக்க, தன் மொத்த சக்தியையும் திரட்டி, அவளோடு கரைசேர முயற்சிப்போம் இல்லை அவளுடனே கடலில் கரைந்துவிடுவோம் என்ற முடிவுடன் அவளை தேடினான். கைகளுக்கு அகப்பட்டவளின் கூந்தலை பிடித்து இழுத்து அவளை தன்னோடு சேர்த்துக் கொண்டு பெரிய கப்பலின் இரும்பு கம்பியை பிடித்துக் கொண்டு நின்றான்.

துறைமுக காவலர்கள் உடனடியாக இருவரையும் காப்பாற்றி தாங்கள் கொண்டு வந்திருந்த படகில் ஏற்றி முதலுதவி செய்தார்கள். மற்றவர்கள் டிரைவர் அண்ணாமலை மற்றும் அவன் கூட்டாளிகளை பிடித்து மற்றொரு படகில் ஏற்றி காவல்துறைக்கு தகவல் அளித்தார்கள்.

நிருஷி அதிகப்படியான தண்ணீரை குடித்திருந்ததாலும் தலையில் அடிப்பட்டதாலும் மயக்கம் தெளியாமல் இருந்தாள். எனவே உடனடியாக அவளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியெங்கும், “நிருஷி, என்னை விட்டு போகமாட்டேன்னு நீ எனக்கு வாக்கு கொடுத்திருக்க, மறந்துடாதே. you are my life niru, I can’t handle another loss, I cant leave you anymore” என்று மந்திரம் போல ஜபித்துக் கொண்டே இருந்தான்.

சிகிச்சைக்காக மருத்தவர்கள் அவளை உள்ளே கொண்டு சென்றபோது ரிஷியை வெளியே நிறுத்தி வைக்க போராட வேண்டியிருந்தது.

“மிஸ்டர் ரிஷி, அவங்க உயிருக்கு பெரிசா ஆபத்திருக்காது, தலையில அடிப்பட்டிருக்கறதாலயும் அதிர்ச்சியிலயும் மயங்கியிருக்காங்க. ஸ்டிச் போட்டு இன்ஜெக்ஷன் பண்ணாலே சரியாகிடும். நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க ப்ளீஸ்”

“இல்ல, என் நிருவ விட்டு நான் தனியா இருக்க மாட்டேன். அவ என்னை ஏமாத்திட்டு போயிட்டா நான் என்ன பண்ணுவேன்? நானும் கூடவே தான் இருப்பேன். என்னை மீறி அவள போக விடமாட்டேன்” என்று மனநிலை பாதிக்கப்பட்டவன் போல உரக்க கத்தினான்.

வேறுவழியில்லாமல் அவனையும் உடன் வைத்துக் கொண்டே மருத்துவர் நிருஷிகாவிற்கு சிகிச்சை அளித்தனர். “டிரிப்ஸ் ஏறட்டும், கொஞ்ச நேரத்துல கண் முழிச்சிடுவாங்க. எமோஷனலா பேசாம பொறுமையா பேசுங்க” என்று சொல்லிவிட்டு சென்றார் மருத்துவர்.

ரிஷிவர்மனும் நிருஷிகாவின் பக்கத்தில் அமர்ந்து கொண்டு அவள் நெஞ்சுகூடு லேசாக ஏறி இறங்குவதை பார்த்து கொண்டே இருந்தான். அவளின் மணிக்கட்டை லேசாக அழுத்தி பிடித்திருந்தவன் அதன் துடிப்பை உணர்ந்தாலும், கையை விட்டால் அவள் உயிர் பிரிந்துவிடுமோ என்று அஞ்சினான். அவனின் கைச்சிறையில் அவள் உயிரை பிடித்துவைக்க முனைந்தான் போலும்.

“நிரு, என்னை மீறி நீ எங்கேயும் போக முடியாது. அப்பா அம்மா கதிரை இழந்த மாதிரி உன்னையும் இழக்க மாட்டேன்” என்று அவளுக்கும் காலனுக்கும் சவால் விட்டான். அவனை சவாலில் வெற்றி பெற வைக்க நினைத்தாளோ என்னவோ நிருஷிகா சீக்கிரமாக கண்களை திறந்தாள்.

கண்கொட்டாமல் அவளையே அழுத்தமாக பார்த்திருந்தவன் அவளை எழுப்பி சாய்வாக அமர வைத்தான். அவன் முகம் சோர்வாக இருப்பதை கண்டவள், “ரிஷி ஏன் முகம் வாடியிருக்கு?”

“உனக்கென்ன சொன்னேன்?”

“என்ன சொன்னீங்க?” புருவம் சுருக்கினாள்

“பத்திரமா தானே இருக்க சொன்னேன்”

“நல்லா தானே இருக்கேன்”

“நான் வர்றதுக்கு கொஞ்சம் லேட்டாயிருந்தாலும் என்னாகியிருக்கும்?”

“அதான் எதுவும் ஆகலயே ரிஷி. அப்பா கூடவே வலதுகை மாதிரி இருந்த டிரைவர் தான் குற்றவாளியா இருப்பான்னு நான் கொஞ்சமும் எதிர்பார்க்கல. என்னை பாத்ததும் ஆசையா ஓடி வந்தது பாசம் இல்ல வேசம்னு எனக்கெப்படி தெரியும்?”

“எனக்கு ராசி மேல பெரிசா நம்பிக்கை இருந்ததில்ல. என்மேல பாசம் காட்றவங்களுக்கெல்லாம் தொடர்ந்து உயிருக்கு ஆபத்து வர்றத பாக்கும் போது எனக்கு ராசி சரியில்லனு தோணுது நிரு. நான் மறுபடியும் யுஎஸ் போயிடறேன், நீ அந்த அஸ்வினையே கல்யாணம் பண்ணிக்கோ” என்றவனின் வாயை பொத்தினாள்.

அவளின் கரத்தை விலக்கியவன், “நிரு, நீ என்கூட சேர்ந்து வாழறத விட உயிரோட இருக்கறது தான் எனக்கு முக்கியம். நான் இதுக்கு மேல ரிஸ்க் எடுக்க விரும்பல. எனக்கு உன் வாழ்க்கை நல்லாயிருந்தா போதும். உன் மாலினி ஆன்ட்டி பணம் சொத்து மேல பேராசை இருக்கறவங்களா இருந்தாலும் அஸ்வின் நல்ல மாதிரி தான் தோணுது. நீ அவனையே கல்யாணம் பண்ணிக்கோ” என்றான் உணர்ச்சியற்ற குரலில்

“ஆரம்பிச்சிட்டீங்களா? அவ்ளோ தானா? இன்னும் இருக்கா பூமர் மாமா?” என்றாள் கிண்டலாக

“பரவால்ல நான் பூமராவே இருந்துட்டு போறேன். நான் சொல்றத செய், உன் அப்பா முடிவு தான் சரியா இருக்கும். நீயும் அவர் வாக்கை காப்பாத்தினதா இருக்கட்டும்”

“இத கேப் கிடைக்கறப்போலாம் கிஸ் அடிக்கறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும்”

“நிரு, எனக்கு அப்போ” என்ன சொல்வது என்று தடுமாறினான்.

நிருஷிகா எட்டி அவன் காலரை பிடித்து தன்னருகே இழுத்தாள். அவன் கண்களை உற்று பார்த்தாள். கலங்கிய பச்சை நிற கண்களில் பச்சை பிள்ளையாய் ரிஷி மட்டுமே தெரிய துணிந்து அவன் இதழ்களில் தன் இதழ்களை பொருத்தினாள்.

“நிரு” என்று விலக எத்தனித்தவனை விடாமல் அவள் தன் இதழ்களுக்குள் அவன் இதழ்களை அழுத்தமாக சிறை செய்திருக்க வியப்புடன் இமைகளை விரித்து அவளை பார்த்தான்.

“ரிஷி, நீங்க சொன்னது தான், you are my life, I cant leave you anymore, இதுவரைக்கும் நீங்க இழந்த அம்மா அப்பா, கதிர் இவங்க மூணு பேரோட இடத்தை என்னால நிரப்ப முடியாட்டாலும், உங்களுக்கு அம்மாவா, தோழனா, மனைவியா சில சமயம் பிடிவாதம் பிடிக்கிற குழந்தையா கூட இருப்பேன். என்னை சமாளிப்பீங்களா?”

அவள் கேள்விக்கு பதிலாக அவளின் இதழணைப்பை அவன் தனதாக்கி தன் சம்மத்தை தெரிவித்திருந்தான். ரிஷிவர்மனின் இதழ்கள் ரவிவர்மனின் தூரிகைகளாக அவளின் கன்னங்களில் வடிவமில்லா ஓவியத்தை வரைய தொடங்கியிருந்தது.

“ம்க்கும்” மருத்துவரின் கனைப்பு சத்தத்தில் இருவரும் விலகி அமர்ந்தனர்.

“நிருஷிகா, உங்க ஹஸ்பெண்ட் ரொம்பவே ஆர்பாட்டம் பண்ணிட்டாரு. சாதாரண மயக்கத்துல இருந்த உங்களுக்கு என்னமோ உயிருக்கு ஆபத்து வந்துட்ட மாதிரி அவர் பண்ணின அலப்பற இருக்கே, ஷப்பா முடியல. டிரிப்ஸ் முடிஞ்சிருச்சு, உங்களவரை அழைச்சிட்டு தயவுசெஞ்சு கிளம்புங்க” என்றார்.

நிருஷி ரிஷியை செல்லமாக முறைக்க, அவனோ தொண்டையை செருமிக் கொண்டு “சாரி டாக்டர்” என்று எழுந்து நின்றான்.

நிருஷிகா எழுந்து நின்றபோது தள்ளாடவும் அவளை தன்னோடு அணைத்து பிடித்தபடி வெளியே கூட்டி சென்றான்.

“ரிஷி, இப்போ எங்கே போக போறாம்? போலீஸ் ஸ்டேஷனுக்கா?”

“எதுவா இருந்தாலும் காலைல பாத்துக்கலாம் நீ ரெஸ்ட் எடு. நீ இல்லனு புவன்புவனிகா அழுதுட்டு இருந்தாங்க”

அவள் சம்மதமாக தலைசாய்த்துவிட்டு அவனுடன் காரில் ஏறிக் கொண்டாள். ரிஷியின் தோளில் சாய்ந்து கொண்டு நிம்மதியாக உறங்கினாள்.

ரிஷி வீட்டை அடைந்த போது வராண்டாவிலேயே மாலினி அஸ்வின் மற்றும் பணிப்பெண் அனைவரும் அமர்ந்திருந்தார்கள்.

காரிலிருந்து ரிஷி நிருஷிகாவுடன் இறங்கவும் மாலினி அவர்கள் அருகே சென்றார். “நீ பாட்டுக்கு எங்கேனா சொல்லாம கொள்ளாம போயிடு. எல்லாரும் எங்க மேல திருட்டுபழி, கொலைபழி போடட்டும். வெளியே போனா சொல்லிட்டு போற பழக்கமில்லயா?” என்றார் கோபமும் எரிச்சலுமாக

“என்னை கடத்திட்டு போனவன் என்கிட்ட முன்னாடியே கடத்த போறேன்னு சொல்லியிருந்தா தானே நான் உங்க கிட்ட சொல்லிட்டு போறதுக்கு” என்றாள் நிருஷி வெடுக்கென்று

“கடத்துனாங்களா? யார் கடத்துனா?” மாலினியும் அஸ்வினும் திகைப்புடன் கேட்டனர்

“இந்த வீட்டு டிரைவர் அண்ணாமலை”

“அவனுக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல, நாங்க தான் கடத்த சொன்னோம்னு அவன் சொன்னானா?”

“இல்ல”

“பாத்தியாப்பா ரிஷி? உண்மை என்னனு தெரியாம எங்க கிட்ட குதிக்கறீயே. என் தம்பி சாகறதுக்கு நானே விஷம் கொடுத்தேனு சொல்றே. நீயும் நிருஷிகாவும் காதலிக்கறதா அஸ்வின் சொன்னான். அதுக்காக தான் உன்னை சும்மா விடறேன். இல்லனா அவதூறு வழக்குல உன்னை உள்ளே தள்ளியிருப்பேன்”

“நீங்க நேரடி காரணம் இல்லனாலும், என் அப்பாவோட இந்த நிலமைக்கு நீங்களும் ஒரு காரணம் தான் ஆன்ட்டி” என்றாள் நிருஷிகா அடக்கப்பட்ட கோபத்துடன்

“நானா? எப்படி சொல்றே?”

“நீங்க உங்க பரம்பரை சொத்துக்காக அப்பாவுக்கு அழுத்தம் கொடுத்திருக்கீங்க. உங்களுக்கு தெரியாம சொத்து வாங்க நினைச்சு டிரைவர் பேர்ல வாங்கியிருக்காரு. டிரைவருக்கு சொத்து மேல பேராசை வந்து அப்பாவுக்கு விஷம் கொடுத்திருக்கான். நீங்க அவருக்கு மனஅழுத்தத்தை கொடுத்திருக்கீங்க. எனக்கும் அஸ்வினுக்கும் நீங்க ஏற்பாடு பண்ண கல்யாணம் கூட சொத்துக்கான செட்டில்மென்ட் தானே ஆன்ட்டி?”

மாலினி கையும் களவுமாக அகப்பட்டதால் பதில் சொல்லமுடியாமல் விழிக்க அஸ்வின் தன் அன்னையை உறுத்து விழித்தான்.

“அம்மா, நிருஷிகா சொல்றதெல்லாம் உண்மையா? மாமாவோட சொத்துக்காக தான் எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடக்கணும்னு நினைச்சீங்களா? நான் கூட மாமா உயிர காப்பாத்தறதுக்காக துடிக்கறீங்கனு இல்ல நினைச்சேன்?”

“அஸ்வின் பரம்பரை சொத்து வெளியே போககூடாதுனு நினைச்சேன். மத்தபடி என் தம்பிக்காக நான் துடிச்சத நடிப்புனு மட்டும் சொல்லிடாதே” என்றார் படபடப்புடன்

“நிறுத்துங்கம்மா, மாமா கோமால இருக்காரு, அத்தை ஜெயில்ல இருக்காங்க. அப்பவும் எனக்கும் நிருஷிக்கும் கல்யாணம் பண்ணிடணும்னு சொன்னீங்க, அதுக்கு மாமாவோட கடைசி ஆசைனு ஒரு சாக்கு வேற. இது எல்லாத்துக்கும் பின்னாடி சொத்து தான் இருக்கு. அப்படித்தானே?”

மாலினி குற்றஉணர்ச்சியுடன் தலையை குனிந்து கொள்ள, “இதுமட்டும் தானா? இல்ல டிரைவர் அண்ணாமலை கூட கூட்டு சேர்ந்துட்டு நீங்களும் மாமாவுக்கு விஷம் வச்சீங்களா?” கர்ஜித்தான்.

“ஐயோ, டிரைவருக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல அஸ்வின். ராஜ் உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ண ஒத்துக்கலனாலும் நான் கோபத்தோட இருந்திருப்பேனே தவிர, உயிர எடுக்கற அளவுக்கு போயிருக்க மாட்டேன். நான் அந்தளவுக்கு மோசமானவ இல்லடா. பரம்பரை சொத்து சம்மந்தமே இல்லாம யார் யாருக்கோ போகுதேனு தான்”

“நீங்க சொல்ல வர்றது புரியுது ஆன்ட்டி இதுக்கு மேல என் அப்பா அம்மா பத்தி எதுவும் பேசாதீங்க. நானோ என் அம்மாவோ அவரோட சொத்தை எதிர்பார்த்ததில்ல, இனி எதிர்பார்க்க போறதுமில்ல. அப்பா கண்விழிச்சதும் உங்க பரம்பரை சொத்தை உங்க பேருக்கே மாத்திட சொல்றேன். என் சொந்த காலுல நின்னு அவங்கள நான் பாத்துப்பேன்” என்றாள் நிருஷிகா ரோஷத்துடன்

“சாரி நிருஷிகா, என் அம்மாவோட சுயரூபத்தை நானே இப்போ தான் பாக்கறேன். ரியலி சாரி” என்ற அஸ்வின் அங்கிருந்து விடுவிடுவென்று வெளியேற, “அஸ்வின்” என்றபடி மாலினி பின்னாலேயே ஓடினார்.

(தொடரும்)
 
Last edited:

Author: STN - 94
Article Title: பாவை 23
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.