பாவை 24

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 94

Active member
Staff member
May 5, 2026
42
141
33
chennai
நிருஷியின் பேச்சிலேயே நடந்ததை புரிந்து கொண்ட ரிஷி, இன்ஸ்பெக்டருக்கு போன் செய்து, டிரைவர் அண்ணாமலையும், செக்ரட்டரி சேகரும் தான் முதன்மை குற்றவாளிகள் என்றும் அவர்கள் மருத்துவமனையில் இருந்தாலும் வாக்குமூலம் வாங்கி கோர்ட்டில் உடனடியாக ஒப்படைக்க சொல்லி கேட்டுக் கொண்டான். மேலும் மைதிலியை வெளியே கொண்டு வர உதவி செய்ய வேண்டும் என்றான்.

வக்கீலுக்கும் போன் செய்து விவரம் கூறி, காவல்நிலையத்திற்கு சென்று உண்மை நிலவரத்தை பார்க்க சொன்னான்.

“சின்னம்மா பசங்க நீங்க இல்லாம அழுதுட்டே தூங்கிட்டாங்க. மாலினி மேடமும் அஸ்வின் சாரும் இருந்ததாலயும் நீங்க வர்றதுக்காகவும் தான் காத்திருந்தேன். நான் கிளம்பட்டுமா?” என்று பணிப்பெண் கேட்க, அவளை கிளம்ப சொல்லிவிட்டு வீட்டிக்குள் சென்றாள்.

உள்ளே வந்த ரிஷி “நிரு, நான் கிளம்பட்டுமா?”

“கிளம்பறீங்களா?”

“இவ்வளவு பிரச்சனை நடந்திருக்கு, ராத்திரியில உன்னை தனியா விட்டுட்டு போறதுக்கு மனசில்லதான், ஆனா”

“அப்போ இங்கேயே இருங்க”

“வீட்ல வேற யாருமில்ல, நான் வெளியே வராண்டாவுல படுத்துக்கறேன்”

“ரொமான்ஸ் சாமியாரே பிகு பண்ணாம வீட்டுக்குள்ள படுங்க. புவன் புவனிகானு ரெண்டு ஜீவன் இருக்காங்க, அம்மா இல்லனு அடிக்கடி எழுந்து அழுவாங்க. அவங்கள மீறி உங்களால எதுவும் செய்ய முடியாது” என்றாள் சீண்டலாக

“ரொமான்ஸ் சாமியாரா?”

“சாமியார் மாதிரி இருக்கறது, நேரம் கிடைக்கும் போது ரொமான்ஸ் பண்றது, அப்ப நீங்க ரொமான்ஸ் சாமியார் தானே”

“என் பழைய நிரு கம்பேக் கொடுக்கறா போலருக்கே. சரிங்க மேடம், நான் புவனோட உங்கப்பா ரூம்ல படுத்துக்கறேன், நீங்க புவனிகாவோட உங்க ரூம்ல தூங்குங்க, அதுதான் சேப்”

ரிஷியை முறைக்க முயன்று தோற்றவள் கலகலவென்று சிரிக்க ரிஷியும் அவளுடன் சேர்ந்து சிரித்ததில் உறங்கி கொண்டிருந்த புவன் புவனிகா இருவரும் கண்களை கசக்கி கொண்டு அழுதபடி வெளியே வந்தனர்.

இருவரும் ஆளுக்கொரு பிள்ளையை தூக்கி வைத்து சமாதானம் செய்ய ரிஷிவர்மனின் பச்சைநிற கண்கள் பாவையை பார்வையால் துளைத்துக் கொண்டிருந்தது.

மறுநாள் காலை இருவரும் கோர்ட்க்கு சென்றனர்.

டிரைவர் அண்ணாமலையின் வலதுபக்க மார்பில் குண்டை நீக்கியிருந்ததால் அவன் பேசும் வாக்குமூலம் வீடியோவாக நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. டிரைவர் குற்றத்தை ஒப்புகொண்டதாலும் கைப்பேசியை போலீசார் பறிமுதல் செய்திருந்ததாலும் செக்கரட்டரி சேகரால் குற்றத்தை மறுத்து பேச முடியவில்லை.

கோர்ட்க்கு கொண்டுவரப்பட்ட மைதிலிக்கு உண்மை தெரிந்ததும் அதிர்ச்சியாக இருந்தது. செக்ரட்டரியின் குணம் சரியில்லை என்று அவருக்கு நன்றாகவே தெரியும், ஆனால் டிரைவர் இந்த வேலையை செய்திருப்பான் என்று அவரால் நம்பவே முடியவில்லை. ராஜ்ஜின் நம்பிக்கைக்குரியவனாக இருந்தவனாயிற்றே. ராஜ்ஜூடன் இருந்த இத்தனை வருடங்களில் டிரைவர் பணவிஷயத்தில் மிகவும் நம்பிக்கைக்குரியவனாக நடந்து கொண்டதை அவரே பார்த்திருக்கிறார்.

ராஜ் சொத்தை டிரைவரின் பேரில் வாங்கியிருக்க கூடாது. அந்த சொத்து தான் பேராசையை உண்டு பண்ணியிருக்கிறது. தன்னிடம் பணிபுரிபவர்களை முழுதாக நம்பலாம், அதற்காக இது மாதிரியான சந்தர்ப்பங்களை ஒருபோதும் ஏற்படுத்தி தரக்கூடாது. ஏனெனில் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் அனைவருமே நூறுசதவீதம் உத்தமர்களாக இருப்பது அபூர்வம்.

சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் மனிதர்களின் மனநிலையை மாற்றும். அதில் நிலைதவறாமல் இருப்பவர்கள் நல்லவர்களாகவும், பேராசையால் தடுமாறுபவர்கள் தங்களை அறியாமலே குற்றவாளிகளாக மாறிவிடுகிறார்கள். டிரைவரை பற்றிய உண்மை தெரிந்தால் ராஜ் மிகவும் வருத்தப்படுவாரே என்று மைதிலி கவலையடைந்தார்.

குற்றவாளிகள் குணமானதும் கோர்ட்டில் ஆஜர் படுத்த ஆணையிட்ட ஐட்ஜ், மைதிலியை நிரபராதி என்று அறிவித்து விடுதலை செய்தார்.

நிருஷிகா ஓடிச்சென்று மைதிலியை கட்டிக் கொண்டு “அம்மா உங்களுக்கு நடந்த கொடுமைய புரிஞ்சுக்காம நான் உங்கள நோகடிச்சது பத்தாதுனு, கொலைமுயற்சி பழி வேற உங்க மேல போட்டுட்டாங்களேனு நான் அழாத நாளில்ல. இன்னைக்காவது இந்த உலகத்துக்கு உண்மை தெரிஞ்சதே” என்று அழுதாள்.

“இதெல்லாம் நான் அனுபவிக்கணும்னு இருந்திருக்கு” என்றார் மைதிலி பெருமூச்சுடன்

ரிஷிக்கும் மைதிலி அனுபவித்த கொடுமைகளை நினைத்து அவர் மீது கழிவிரக்கம் தோன்றியது. நிருஷிகா மைதிலியிடம் நடந்தவைகளை விளக்கினாள்.

“யாரோட வாழ்க்கை நல்லாயிருக்கணும்னு விட்டுட்டு போனீங்களோ அவளோட வாழ்க்கைய நீங்களே திரும்பி வந்து காப்பாத்தணும்னு இருந்திருக்கு போல. உங்களால தான் இன்னைக்கு என் மக உயிரோட இருக்கா, நானும் நிரபராதினு நிருபணமாகி வெளியே வந்திருக்கேன். காலம் பூரா எங்க குடும்பம் உங்களுக்கு கடமை பட்டிருக்கு” என்று மைதிலி கண்ணீருடன் இருகரம் கூப்பினார்

“நான் உங்க குடும்பத்துல ஒருத்தன், கடமைபட்டிருக்கோம்னு பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதீங்கம்மா”

“ரிஷி, நீங்க யார்னே தெரியாம நானும் ராஜ்ஜும் பேசினத கேட்டுட்டு நிருஷியோட வாழ்க்கை நல்லாயிருக்கணும்னு அவகிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம கிளம்பி போயிருக்கீங்களே. உங்க மனசு முன்னாடியே தெரிஞ்சிருந்தா கண்டிப்பா நான் உங்களுக்கு எம்மகள கட்டிக் கொடுக்க மனபூர்வமா சம்மதிச்சிருப்பேன்.

விரும்பாத பொண்ண நாசமாக்கறவங்க இருக்கற சமூகத்துல, உங்களை விரும்பி நீங்கதான் வேணும்னு இருந்தவ வாழ்க்கை நல்லாயிருக்கணும்னு விட்டுட்டு போயிருக்கீங்கனு தெரிஞ்ச அந்த விநாடியே நீங்கதான் நிருஷிக்கு தகுந்த கணவனா இருப்பீங்கனு முடிவு பண்ணிட்டேன். ராஜ் கண்முழிச்சார்னா, நான் சொன்னத தான் சொல்லுவாரு. எனக்கு உடனே அவரை பாக்கணும்” என்று சொல்ல

மூவரும் தேவ்ராஜ் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு சென்றார்கள். ரிஷி இன்ஸ்பெக்டரின் உதவியுடன் ஸ்லோபாய்ஸனுக்காக செக்கரட்டரி பயன்படுத்திய தனிமத்தை கேட்டறிந்து அதை மருத்துவரிடம் சொன்னான்.

“மிஸ்டர் ரிஷி, இது உண்மையிலேயே ரொம்ப அவசியமான தகவல். என்ன கொடுத்தாங்கனு தெரியாம ஜெனரல் மெடிசனை கொடுத்திட்டு இருந்தோம். இனிமே நீங்க சொன்ன விஷத்தை எதிர்த்து போராடுற சக்தி கொண்ட மருந்துகளை ராஜ்க்கு கொடுக்க போறோம். பலவீனமான நரம்புகள் பலமடைஞ்சாலே அவரோட பிரச்சனைங்க சரியாயிடும். கோமாவுல இருந்து வெளியே வரதுக்கும் வாய்ப்பு இருக்கும்” என்று நம்பிக்கையோடு பேசினார்.

“டாக்டர் நாங்க அவரை வீட்டுக்கு அழைச்சிட்டு போய் பாத்துக்கலாமா?” என்றார் மைதிலி

“தேவையான மெடிக்கல் சப்போர்ட்டோட வீட்லயும் பாத்துக்கலாம், ஆனா தினம் அவரை சுத்தப்படுத்தனும், மானிட்டர் பண்ணிட்டே இருக்கணுமே”

“அதவிட எனக்கு வேற என்ன வேலையிருக்க போகுது டாக்டர். எல்லாத்தையும் நான் பாத்துப்பேன். அதோட வீட்ல பசங்களோட சத்தத்துல இருந்தா அவர் சீக்கிரம் குணமாயிடுவார்னு எனக்கு தோணுது”

“ஓகே, உங்க விருப்பம், பார்மாலிட்டீஸ் முடிச்சிட்டு கூட்டிட்டு போங்க” என்று மருத்துவர் சம்மதம் சொன்னதும் தேவ்ராஜ்ஜை டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்து சென்றார்கள்.

ரிஷி சென்று புவன் புவனிகாவை பள்ளியிலிருந்து அழைத்து வந்ததும் வீட்டின் பழைய நிலை சற்றே திரும்பியிருந்ததை உணர்ந்தாள் நிருஷிகா.

“நிரு, நம்ம ஸ்டுடியோல இருந்து இளங்கோ போன் பண்ணாரு, நான் உன்னோட குரலுக்கு பதிலா வேற யாராச்சும் பாக்க சொல்லியிருக்கேன். அப்புறம் நமக்கு கல்யாணம் பேசியிருக்கறதா மட்டும் சொன்னேன். கல்யாணத்துக்கு இன்வைட் பண்ணுங்க, கண்டிப்பா நாங்க எல்லாரும் வரோம்னு சொன்னாரு, நீயும் கால் பண்ணி பேசேன்”

அச்சோ என்று நெற்றியை தேய்த்து கொண்டு, “வந்ததுல இருந்து அஞ்சலிகிட்ட கூட எந்த தகவலும் சொல்லல ரிஷி, அவளும் எனக்கு கால் பண்ணல. கோபமா இருக்கானு நினைக்கிறேன்” என்றவள் உடனே அஞ்சலிக்கு போன் செய்தாள்.

“என்ன நிகா மேடம் எனக்கு போன்லாம் பண்ணியிருக்கீங்க?” அஞ்சலியின் குரலில் கோபம் தெரியவே, “சாரி அஞ்சலி” என்று தொடங்கியவள் தங்கள் இருவரின் கதையை சுருக்கமாக கூறியிருந்தாள்.

“அப்படியா விஷயம்? நீயும், ரிஷிவர்மன் சாரும் வாழ்க்கையில ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கீங்க. உங்களோட காதல் பல போராட்டங்களை தாண்டி சேர்ந்ததுல ரொம்ப சந்தோஷமா இருக்கு. எப்போ கல்யாணம்?”

நிருஷிகா ரிஷிவர்மனை கேள்வியாக பார்த்தாள், அவனும் அவளின் பதிலை ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தான்

“அப்பா எந்திரிச்சு அவர் முன்னிலையில எங்க கல்யாணம் நடந்தா திருப்தியா இருக்கும்” என்றாள் ரிஷியை பார்த்துக் கொண்டே

“கோமாவுல இருக்கறவரு எழற வரைக்கும் உன் மாமா சும்மாயிருப்பாரா? ராஜராஜ சோழன் நான்னு உன்னை சிறையெடுக்காம இருக்கணுமே” என்றாள் அஞ்சலி கிண்டலாக

நிருஷிகா குழப்பத்துடன் ரிஷியை பார்க்க, “நீ ஆசப்பட்டது நடக்கும் நிரு. உன் அப்பா தலைமையில நமக்கு கல்யாணம் நடக்கும், அதுவரைக்கும் நான் காத்திருப்பேன்” என்று அவள் நெற்றியில் இதழ்பதித்து விட்டு வெளியேறினான்.

ஆறுமாதங்களுக்கு பிறகு, தேவ்ராஜ் கண்விழித்திருந்தார். அதற்கு தீவிரசிகிச்சையோ, மைதிலியின் கவனிப்போ மட்டும் காரணமல்ல, எப்போதும் அவரின் அறையில் நிருஷிகா, புவன் மற்றும் புவனிகாவின் குரல் கேட்டுக் கொண்டே இருந்தது.

வாண்டுகள் தங்களுக்குள் சண்டைப்போட்டு கொண்டு ராஜ்ஜிடம் புகார் பத்திரம் வாசித்தனர், டாடி என்று அவர் மேல் சாய்ந்து கொண்டனர். நிருஷிகா தினமும் தேவ்ராஜ் இன்டஸ்ட்ரீஸ்க்கு சென்று கம்பெனியின் முக்கிய வேலைகளையும் கணக்கு வழக்குகளை பார்த்து விட்டு மாலை வீட்டிற்கு வந்ததும் ராஜ் தன் பேச்சை கேட்பதாகவே பாவித்து அன்றைய நிகழ்வுகளை அவரிடம் பேசுவாள். பேசும்போதெல்லாம் அடிக்கடி அவள் சொல்லும் அப்பா என்ற வார்த்தை ராஜ்ஜின் காதுகளின் நரம்புகள் வழியாக சென்று மூளையை தாக்கியது.

அப்பா என்று அழைக்காமல் அடம்பிடித்த மகளின் பிடிவாதமும், கோபமும் நினைவிற்கு வந்தது. எப்போதும் அவளின் பிடிவாத்தை பொறுத்து தந்தை என்று அழைக்கும் ஒற்றை சொல்லுக்காக அவர் காத்திருந்தார்.

அதன்பின் அவள் அப்பா என்று முதல்முதலாக அழைத்த நினைவும் வர, இப்போது தந்தைக்கும் தாய் அமுதம் கண்களில் சுரந்தது. இதை அறியாமல் நிருஷிகா வார்த்தைக்கு வார்த்தை அப்பா என்று அழைக்கும் போதெல்லாம் தகப்பனுக்கு கண்களில் கண்ணீர் சுரந்தது.

பிள்ளையை பேறு இங்கே ஆண் பெண் இருவருக்கும் பொது. அது இல்லையெனில் தன் வருத்தத்தை, இயலாமையை பெண்களால் வெளிப்படுத்திக் கொள்ளமுடிகிறது. ஆனால் ஆண்களால் அது முடிவதில்லை. பெற்றால் தான் பிள்ளையா? நெஞ்சில் சுமந்தால் போதாதா?

தந்தையின் கண்களில் கண்ணீரை கண்ட மகளுக்கு ஆனந்த கண்ணீர்!


(தொடரும்)
 
Last edited:

Author: STN - 94
Article Title: பாவை 24
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.