அத்தியாயம் 3
நித்திக் சரணின் உச்சமான காலையே பார்த்துக்கொண்டிருந்த வெண்ணிலா, தன்னை மறந்து குனிந்து அவன் பாதத்தை தடவி குடுக்க கையை நீட்டிவிட்டாள்..
"ஏய்ய்ய் நோ!!"
மற்ற பெண்கள் விரல் கூட தன்னை தீண்டாமல் ஒதுங்கிருப்பவன், அவள் தன்னை தொட வருகிறாள் என்று தெரிந்ததும் தன் காலை மீண்டும் ஷூவிற்குள் அடைத்துக்கொண்டான்..
"அது சாரி.."
"இட்ஸ் ஓகே!!"
"இல்ல!! இந்த கால வச்சுட்டு நீங்க எவ்ளோ கஷ்டப்பட்டு படிச்சு இந்த பொசிஷனுக்கு வந்து இருப்பீங்க.. எப்போதும் ஷூ போட்டுட்டு உங்களுக்கு எவ்ளோ கஷ்டமா இருந்திருக்கும்.. ஆனா உங்கள இவ்ளோ நாள் நான் திமிரு பிடிச்சவருன்னு நினைச்சுகிட்டு இருந்தேன்.."
"ஹே வெயிட்!! என்னது இந்த கால வச்சுக்கிட்டா?? ஏன் இந்த காலுக்கும் நான் படிச்ச படிப்புக்கும் என்ன சம்பந்தம்?? இந்த ஷூ போட்டா என்னால இயல்பா நடக்க முடியும் அவ்ளோதான்.. அது போக ஷூ போடுறதுனால எனக்கு எந்த கஷ்டமும் இல்ல.. உங்க கரிசனை எனக்கு தேவையில்லை.. அண்ட் அனுதாப படுற அளவு இது ஒரு குறையும் இல்லை.. " சற்று நிமிர்ந்துவாகவே கூறினான்..
"அகைன் சாரி!! சரி அப்புறம் என்னாச்சு??"
அவன் கோபத்தை மாற்ற பிளாஷ்பேக் கேட்டாள்.. 'நான் என்ன இங்க கதையா சொல்லிட்டு இருக்கேன்' என்பது போல அவளை பார்த்து வைத்தவன் மீண்டும் தன் குழந்தை பருவத்தை கூற ஆரம்பித்தான்..
தாத்தாவின் தயவால் தன்னுடைய கால் நிலை தன் குடும்பத்தை தவிர தன் வீட்டில் வேலை பார்க்கும் வேலைக்காரர்கள் கூட தெரியாமல் பார்த்துக் கொண்டார்.. ஆனால் பிறந்தது ஒற்றை மகன் அதுவும் இப்படி ஆகிவிட்டது என்று அழுது தீர்ப்பாள் நித்திக் அன்னை யசோதா..
இதனால் முழு நேரமும் மகனையே கவனிக்க வேண்டியதால் வீட்டில் நடப்பதை கவனிக்காமல் போனாள்.. அப்பொழுது தான் யசோதாவின் தம்பி சந்திரமோகன் படிக்க சென்ற இடத்தில் லாவண்யா என்ற பெண்ணை காதலித்து வந்தான்..
அவனுக்கு பெரும்பாலும் ஜாதிய அந்தஸ்து பணம் காசு இதில் எல்லாம் மதிப்பு இருந்தது கிடையாது.. தன் வீட்டில் இந்த காதலை எப்படியும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்று திருமணம் செய்துகொண்டு தான் அரண்மனை வீட்டு வாசலில் வந்து நின்றான்..
"நில்லுடா!! இந்த அரண்மனைக்குள்ள வேல செய்ய கூட வேறு ஜாதி ஆளுக்கு அனுமதி இல்ல.. நீ மட்டும் உள்ள வராதா இருந்தா உள்ள போ.."
"அப்பா நாங்க கல்யாணம் பண்ணிகிட்டோம் ப்பா.. அவளுக்கு என்ன விட்டா யாரும் இல்லப்பா.."
"அதுக்குன்னு இந்த அசிங்கத்த உள்ள விட சொல்றியா?? ஜமீன் குடும்பத்துக்கு இதெல்லாம் சாதாரண விஷயம் தானே அவள வேணுனா ஊருக்கு ஒதுக்கால உன் விருப்பத்துக்கு வச்சுக்க.. இந்த சொத்தை காப்பாற்றவும் இந்த அரண்மனைக்கு வாரிசு கொடுக்கறதுக்கும் நம்ம ஜமீனுல ஒரு பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணிக்கோ."
பதில் பேசவில்லை சந்திரமோகன் மாடியில் உயரமாக நிற்கும் தந்தையை பார்த்து மெலிதாக சிரித்தவன், தன் பக்கத்தில் கலக்கமாக நின்றிருக்கும் லாவண்யாவையும் பார்த்துவிட்டு கையில் வம்படியாக என்றோ ஒருநாள் அப்பா மாட்டிவிட்ட பரம்பரை காப்பை கழட்டி வாசலில் போட்டவன் லாவண்யா கையைப் பிடித்துக் கொண்டு திரும்பியும் பார்க்காமல் கிளம்பி விட்டான்..
இந்த வீட்டை விட்டுப் போகிறது எல்லாம் அவனுக்கு வருத்தமே இல்லை.. சாப்டியா என்று கூட கேட்க ஆள் இல்லாத அரண்மனையில் அவனுக்கு ஓட்டுதல் இல்லை.. ஆனால் தாய்க்குத் தாயாக தமக்கையாக இருந்த அக்காவை அதுவும் அவள் இப்பொழுது கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாள் என்பதை தெரிந்தும் விட்டு செல்வதுதான் அவனுக்கு மனது பாரமாக இருந்தது..
அரண்மனையில் எல்லோரும் அவரவர் வேலையில் இருக்க தோட்டக்காரர் மட்டும் ஓடி வந்து,
"தம்பி!! யசோதா பாப்பா கோயில்லருந்து வந்து கேட்டா நான் என்ன தம்பி பதில் சொல்வேன்??" என்று கலக்கமாக நின்றவரை புன்முறுவலுடன் பார்த்த சந்திர மோகன்..
"அக்கா வந்ததும் இந்த நம்பர கொடுங்க நான் பேசிக்கிறேன்.." என்று சென்று விட்டான்..
மன அமைதிக்காக தினமும் மகனை தூக்கிக்கொண்டு கோயில் செல்லும் யசோதா இன்று வீட்டில் நடந்த நிகழ்வு தெரியாமல் கோயிலில் தன்னுடைய மகனை மடியில் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தாள் தன் தலை எழுத்தை எண்ணி..
மீண்டும் வீட்டுக்கு வர அனைவரும் விஷயத்தை கூற அவள் நேராக சென்றது அந்த தோட்டக்காரரிடம் தான்.. தம்பி கொடுத்த எண்னை வாங்கிக் கொண்டு அவனுக்கு அழைத்து விலாசிவிட்டாள்.. அவள் பேசிய பேச்சில் ஜாதி மாற்றி மணம் செய்ததை பற்றி இல்லை..
'காதலாம் காதல்!! பொல்லாத காதல்!! காதல் சுத்த பேத்தல்.. வயது வேகத்தில் காதலித்து ஒரு பிள்ளை வந்தால் காதல் காணாமல் போகிவிடும்.. காதலித்தவனை மணந்த என் வாழ்க்கை எப்படி இருக்கிறது? ஒரு வருடத்தில் ஒரு குழந்தைக்கு தாயாகி விட்டேன் அந்த குழந்தை குறையா பிறந்தது என் குற்றமா அனைத்து வெறுப்பையும் என் மீது காட்டிய காதல் கணவன் அடுத்த பெண்ணை தேடுகிறானே... கஷ்டத்தை மனம் விட்டு பேசக்கூட ஆள் இல்லாமல் ஒதுங்கி நிற்கிறோமே!' என்ற ஆதங்கம் தான் யசோதாவிற்கு முழுதாக காதலின் மேலே வெறுப்பு வந்துவிட்டது என்றே சொல்லலாம்..
'நமக்கு யாருமே வேண்டாம் உனக்கு பிடித்த மாதிரி இன்னொரு பெண்ணை நான் பார்த்து திருமணம் செய்து வைக்கிறேன்.. இந்த காதல் கன்றாவியெல்லாம் வேண்டாம்!' என்றுதான் தன் தம்பிக்கு போன் போட்டு அழுது தீர்த்தாள்.. அவனும் தன்னால் முடிந்த மட்டும் சமாதானம் கூறி வைத்து விட்டான்..
நாட்கள் அதன் போக்கில் சென்றது.. இருந்த ஒரே மகனும் தனக்கு காதல் தான் முக்கியம் நீ முக்கியமில்லை என்று கூறும் விதமாக தன்னை விட்டு சென்றதில் வெகுவாக அடிபட்டு போனார் நித்திக் சரணின் தாத்தா.. அதனாலயே நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக இருந்தவர் சொத்துக்கள் அத்தனையும் மகன் தவிர அனைவருக்கும் பிரித்து வைத்தார்..
இதில் இன்னும் பெரிய கூத்து என்னவென்றால் சந்திரமோகனுக்கு யசோதா உதவி செய்வார் உங்களை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய சந்திரமோகனுக்கு இந்த சொத்தில் இருந்து சல்லி காசு கூட போகக்கூடாது அதனால் சொத்து அனைத்தையும் என் பேருக்கு எழுதி வையுங்கள் அதை அனுபவிக்கும் பங்கு மட்டுமே யசோதாவை சேரும் என்று யசோதாவின் கணவன் நயமாக பேச அவரோ அதன்படியே சொத்தை பிரித்து வைத்தார்..
கொஞ்ச நாட்களில் நித்திக் சரண் தாத்தாவும் இறந்து விட அதுவரை திருட்டுதனமாக பண்ணிய அத்தனையும் பகிரங்கமாக பண்ண ஆரம்பித்தான் யசோதாவின் கணவன்.. வீட்டு வேலை செய்யும் பெண்களிலிருந்து ஒருவரையும் விட்டு வைக்காமல் உல்லாசமாக இருக்க ஆரம்பித்தார்.. பணத்தை வாரி வழங்கி, இருக்கும் அத்தனை கேடு கெட்ட வேலையும் செய்தார்..
இதில் யசோதாவின் மாமியாரின் குத்தல் பேச்சு வேறு.. "அசலுல ஒரு ஆரோக்கியமான பெண்ணை திருமணம் செய்து ஜமீன் வாரிசாக பிள்ளை பெத்துக்கோ டா.. இந்த நொண்டி மகனையும், சீக்கு பொண்டாட்டியையும் வச்சுக்கிட்டு நீ என்ன சுகத்தை அனுபவிக்க போற??"
இதுபோன்ற குத்தல் பேச்சிலும், வாய் ஓயாது குறை பேசும் சொந்தங்களிடம் இன்னும் கொஞ்ச நாள் இருந்தால் கூட தன்னிலை இழந்து உயிரை மாயித்துக்கொள்ள கூடுமோ?!? என்று பயந்த யசோதா அடித்துப் பிடித்து தன் தம்பிக்கு அழைப்பு விடுக்க, அவனும் 'நீயும் மகனும் இங்கே கிளம்பி வந்து விடுங்கள் நான் பார்த்துக்கொள்கிறேன்.. ஆனால் அதற்கு பிறகு அரண்மனை வீட்டிற்கும் உனக்கும் எந்த உறவும் இருக்க கூடாது'.. என்று கூறி விட யசோதாவும் இதற்கு மேல் இங்கு இருந்து மட்டும் என்ன பிரயோஜனம் தந்தையும் இல்லை என்பதால் மகனை கூட்டிக்கொண்டு தம்பியுடன் சென்று விட்டாள்..
"வாங்க அண்ணி!! டேய்ய் மருமகனே.. உள்ள வாடா.." என்னதான் தன் தம்பி வீடு என்றாலும் இந்த பெண்ணை வேண்டாம் என்று தானே தான் கூறினேன் எப்படி அவர்கள் வீட்டிற்கு சென்று தஞ்சம் புகுவது என்று பலத்த யோசனையில் வாசலில் நின்று கொண்டிருந்தவளை லாவண்யா தான் இன்முகமாக வரவேற்றாள்..
"நல்லாருக்கியா மா??"
"நல்லாருக்கோம் அண்ணி.." யசோதாவின் பார்வை தம்பி மனைவியை தாண்டி பின்னே ஆவலாக யாரையோ தேட அதை புரிந்து கொண்ட சந்திர மோகனோ..
"இல்லக்கா இன்னும் குழந்தை பெத்துக்கல. அவளும் வேலைக்கு போயிட்டு இருக்கா கொஞ்சம் செட்டில் ஆகிடலாம்னு.. "
அக்கா கேள்விக்கு இன்றளவும் பதில் பேச தயங்கியது அந்த வளர்ந்த பிள்ளை.. தன் அக்காளிடம் பயமும், மரியாதையும் என்றுமே இருக்கும்..
"புரியுது டா!! அதுக்குன்னு நாலு வருஷம் ஆகுதே டா.. அதான் பாத்துக்க நான் இருக்கேன்ல பெத்துக்கோங்க.." என்ற யசோதா அந்த வீட்டில் இயல்பாக ஒன்றி போக மிக முக்கிய காரணம் லாவண்யாவின் குணம் மட்டும்தான்..
சொந்தம் இல்லாமல் தனிமையிலே இருந்தவர்களுக்கு தங்களுக்கென்று பக்க பலமாக ஒரு பெரிய துணையாக அக்கா இருக்கிறாள் என்ற நம்பிக்கையோ எதுவோ ஒன்று யசோதா அந்த வீட்டிற்கு சென்று வெகு சில மாதங்களிலேயே லாவண்யா கரு உண்டானாள்..
சந்திரமோகன் என்னதான் வேலை என்று ஓடினாலும் லாவண்யாவை செக்கப்புக்கு அழைத்துச் செல்ல சரியாக வந்துவிடுவான்.. 'இதெல்லாம் பெண்களின் சின்ன சின்ன எதிர்பார்ப்புகள் டா' என்று ஒரு அன்னையாக யசோதா எடுத்துச் செல்ல அதன் பெயரிலேயே சந்திரமோகனம் லாவண்யாவை பார்த்துக் கொண்டான்.. அதையும் தாண்டி சில நாட்கள் வரமுடியாத சமயத்தில் லாவண்யாவை யசோதா தான் அழைத்துச் செல்வாள்..
அப்படி ஒரு நாள் இவர்கள் சென்ற அதே மருத்துவமனைக்கு தான் யசோதாவின் கணவன் அவன் புது பொண்டாட்டியுடன் வந்திருந்தான்.. அந்த பெண்ணோ நிறை மாதம்..
"அய்ய்ய் அப்பா!!" என்று நித்திக் சரண் அன்னை கையிருந்து நழுவி தந்தையிடம் தன் முடியாத காலுடன் ஓடினான்..
"ப்ச்!!" என்று தன் கையை ஆசையாக வந்து பிடிக்கும் பிள்ளையின் கையை உதறிவிட்டு திரும்பியும் பார்க்காமல், தான் சாயிந்த தோளில் இன்னொரு பெண்ணை சாயித்து அழைத்து சென்ற கணவனையே வெறித்துப் பார்த்தாள் யசோதா கீழே விழுந்து கிடக்கும் மகனை கூட கவனிக்காமல்..
தாங்கள் சிறுவயதில் இருந்து செய்த காதலுக்கு அர்த்தம் என்ன?? அப்போது காதல் என்றால் தான் என்ன?? என்னுடன் வாழ்ந்த வாழ்க்கையை உன்னால் இன்னொரு பெண்ணுடன் வாழ முடிகிறது என்றால் அப்போ நான் யாரு உன் மனதில்?? ஆசையாக பெற்ற பிள்ளையை குறை சொல்லி, பொறுப்பை தட்டி கழித்து உன் பாரத்தை இறக்கி வைக்க உன்னால் முடிகிறது.. ஆனால் ஈரைந்து மாதங்கள் கருவில் சுமந்த என்னால் அவனின் குறையை காரணம் காட்டி ஒதுக்கி வைக்க முடியவில்லையே..
"அம்ம்மா!!" நித்திக் மீண்டும் அழுதுக்கொண்டே தந்தை தள்ளிவிட்ட அதே இடத்தில் எழும்ப முடியாமல் படுத்திருந்தான். நிறைமாத வயிற்றோடு லாவண்யா தான் ஓடிச் சென்று பிள்ளையை தூக்கி கால் எதுவும் அடிபட்டிருக்கிறதா என்று பார்த்தாள்..
ரொம்பவே நொந்து போயிருந்த யசோதா மனம் இன்னும் ரணப்பட்டு போனது.. மருத்துவமனைக்கு வந்திருந்த லாவண்யாவிற்கு பிரசவ வலி ஏற்படவே சந்திரமோகனுக்கும் அழைப்பு விடுத்து அந்த மருத்துவமனையிலேயே அட்மிட் செய்தார்கள்..
சந்திரமோகன் லாவண்யா தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது..
"அய்ய்ய் பாப்பா ரொம்ப அழகா இருக்கா.. மாமா இவ என்னோட பப்பூ யாருக்கும் கிடையாது..??" நித்திக் தன் நெஞ்சோடு அணைத்தான் மொட்டு பூவை..
"ஆமாடா மருமகனே.. உனக்கு தான் என் பொண்ணு.. நீ தான் இவள பாத்துக்கணும்.. பெரியவ ஆனதும் உனக்கே கட்டி வச்சுடறேன்.."
குழந்தையை கையில் வைத்துக்கொண்டு சந்திரமோகனும் நித்திக்கும் பேசிக்கொண்டிருக்க கடைசி வார்த்தையில் கொந்தளித்து கத்தி விட்டாள் யசோதா..
"அவ உன்னோட பொண்ணு அவ்ளோதான்.. அவளுக்கு இவன் தாய் மாமா மட்டும்தான் வேற எந்த எண்ணமும் பிள்ளைங்க மனசுலையும் விதைக்க கூடாது இங்கே யார் மனசிலும் இருக்க கூடாது.. காதல் கன்றாவி குடும்பம் பாசம் அதற்கெல்லாம் பலியானது நான் ஒரு ஆளா மட்டும் இருக்கட்டும்.."
என்ற யசோதா கண்கள் கோபத்தில் சிவந்திருக்க, சரி அக்கா கோபத்தில் பேசுகிறாள் போல என்று அப்போது அந்த பேச்சை விட்டவர்களுக்கு அது அக்காவின் நிதான பேச்சு தான் என்று தற்போது தான் புரிந்தது..
Last edited: