• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

புனர்ஜென்ம பந்தமடி நீ எனக்கு - 10

Vishakini

Moderator
Staff member
புனர்ஜென்மம் 10

அன்று வீட்டிற்கு திரும்பியவன். தன் பேகை தூக்கி சோபாவில் தொப்பென்று போட்டான். அஷ்டலட்சுமி தயக்கமாக வந்து நின்றார்.

“இன்னைக்கு எனக்கு எவ்வளவு அசிங்கமாப் போச்சு தெரியுமா?? அந்த மனுஷன் என்னை என்ன நினைச்சாருனே தெரியல? ஆனா ரொம்ப பொறுமையா பேசிட்டிருந்தாரு? உங்களுக்கு மறதி இருக்கு ஒத்துக்குறேன். ஆனா என்னைப் போய் அவர் கூடக் கோத்துவிட்டிருக்கீங்க?? அவரை எனக்கு தெரியாதில்லையா, ஜஸ்ட் இன்பார்மாவது பண்ணி இருக்கலாம்ல?” என்று பொரிந்து தள்ளினான் ராஜ்.

“என்னாச்சுப்பா?? அவர் உன்னைத் தப்பா நினைச்சுட்டாரா? பாதூரமாகக் கேட்டார்.

“தெரியலமா ஆனா ரொம்ப கில்டியா ஃபீல் பண்ணேன். நீங்க முதல்ல அந்தப் பொண்ணோட குடும்ப போட்டோவைக் காட்டுங்க” என்றான் ராஜ்.


“ஏன்டா, குடும்ப போட்டோ எல்லாம் என்கிட்ட எப்படி டா இருக்கும்??. பொண்ணு போட்டோ மட்டும் தான் கொடுத்தாங்க. யாராவது வரன் பாக்குறதுக்கு குடும்ப போட்டோவை குடுப்பாங்களா?? அதுக்கு தான் பொண்ணு பார்க்க வான்னு சொல்லும்போதே வரணும். அதை விட்டுட்டு இப்ப வந்து குடும்ப போட்டோ கேட்குற?? அட்லீஸ்ட் புடவை எடுக்க வந்திருக்கலாம். இப்ப அவர் வீடு கூட உனக்குத் தெரியாது. இல்ல மாப்பிள்ளை அப்படியே வீட்டுக்குக் கூட்டிட்டு போயிடுங்கன்னு சொன்னா என்ன பண்ணியிருப்ப?? பேய்வழி விளிச்சிருப்ப” என்று கூறினார் அஷ்டலட்சுமி.


‘அதுவும் உண்மை தானே?’ என்று மனம் எடுத்துக் கூறியது. நல்லவேளை அவர் தன்னை தர்ம சங்கட படுத்தவில்லை.

ஆனால் தான் அவரைப் படுத்தி விட்டேன் என்பது மட்டும் தெளிவாகப் புரிந்தது அவனுக்கு.

“அவங்க அம்மாகிட்ட போன்ல மணிக்கணக்கா பேசுறீங்க, அவங்களோட போட்டோ கூடவா இல்ல?” என்று அவன் கேட்க.

“போன்ல போட்டோ எல்லாம் வருமாடா?” என்று அப்பாவியாகக் கேட்டார்.

“உங்கள வச்சுக்கிட்டு” என்று பற்களைக் கடித்தவன்.

“அவங்க நம்பர் குடுங்க. அவங்க வாட்ஸப்ல இருக்காங்களான்னு பார்க்கிறேன். மே பீஈ அதுல போட்டோ இருக்கலாம்” என்றான்.

“ஏன்டா, நாங்க எங்கடா அதெல்லாம் உபயோகிக்க போறோம்?. அவங்க போட்டோவ வச்சு நீ என்னடா பண்ண போற?” என்றார் அஷ்டலஷ்மி.


“ஒருவேளை அவங்க என்னைப் பார்க்க வந்துட்டு. இன்னைக்கு
மாதிரி விளிக்கக் கூடாதுல்ல?”.


“நீ முதல்ல பொண்ணு போட்டோவே பாத்தியானு தெரியல?. அப்படி ஒருவேளை பார்த்திருந்தனா போதும். அவள் ஜாடையில தான் அவங்க அம்மாவும் இருந்தாங்க. அதனால பார்த்தவுடனே தெரியும்” என்றார் அஷ்டலட்சுமி

“அப்பப் பொண்ணு போட்டோவயாவது குடுங்க” என்று கேட்டான்.

“நான் கொடுத்த பொண்ணு போட்டோவை உண்மையிலேயே நீ பாக்கலையா?. அப்பப் பொண்ண கூட்டிக்கிட்டு வந்து உன் பக்கத்துல நிறுத்தினா? இதுதான் பொண்ணுன்னு உனக்குத் தெரியாதுல்ல?” என்று அவர் நக்கலாகக் கேட்க.


“ரொம்ப பேசாதிங்க. எல்லாம் உங்களால தான். முதல்ல கல்யாணத்துக்கு கேட்கும்போது கெஞ்சி, கூத்தாடி, அழுது, கரைஞ்சு என்கிட்ட சம்மதம் கேட்டுட்டு. இப்ப கல்யாணம் முடிவான பிறகு என்னமா கெத்தா பேசுறீங்க?? இதுல நையாண்டி நக்கல் வேற? சரி முடிஞ்சதை பத்தி பேசாம, முதல்ல போட்டோவைக் குடுங்க” என்று கைகளை நீட்டிக் கேட்டான் தன் தாயிடம்.


“அன்னைக்கு உன் ரூமுக்கு வந்து உன்கிட்ட பேசிட்டு, உன் கையில தானே அந்த போட்டோவைக் கொடுத்தேன்” என்றார்.


“என் கையில கொடுத்தீங்களா?? அப்ப என் ரூம்ல இருக்கா போட்டோ?? ஆனா நான் எதுவும் அப்படி பாக்கலையே?? எங்க வச்சீங்க அதையாவது சொல்லுங்க. நான் பார்க்கிறேன்” என்றான்.

“உன்னோட டிராவில தான் இருக்கும் போய்ப் பாரு. அவளை எங்கயாவது ரோட்ல பாத்துட்டு தெரியாம நிக்க போற?” என்று கூறி. மகனின் முறைப்பை பெற்றுக் கொண்டு அமைதியானார்.

அவன் வேகமாகப் படிகளில் ஏறினான். அவர் சொன்னது போலத் தான் அமர்ந்து வேலை பார்க்கும் டேபிளின் அருகில் இருந்த டிராவுகளை திறந்து பார்த்தான். அதில் பழுப்பு நிறத்தில் இருக்கும் கவரை எடுத்தான். அதில் மேலே ஸ்ரீ என்று போட்டிருந்தது. ‘ஆமா இது போலத் தான் ஏதோ ஒரு பேரை சொன்னாரு. நான் ஆம்பள பேருன்னு நினைச்சுட்டேன். இது என்ன பேரு?? வெறும் ஸ்ரீன்னு யாராவது வைப்பாங்களா??” இரு பக்கமும் தலையாட்டிக் கொண்டே, அந்தப் புகைப்படத்தை வெளியில் எடுத்துப் பார்த்தான்.



பார்த்தவன் அதிர்ந்து உறைந்து போனான்.

‘இவளா?? இவள்?? இந்தப் பொண்ணு என்னைத் திருமணம் பண்ணிக்க ஒத்துக்கிட்டாளா?? இல்ல அம்மா என்னைப் போர்ஸ் பண்ண மாதிரி, அவங்க அப்பா அந்தப் பொண்ண போர்ஸ் பண்ணி இருக்காரா?? இல்லையே, இன்னைக்கு அந்த மனுசனை பார்த்தா அப்படி எல்லாம் தப்பா தெரியலையே?? அப்போ உங்க அம்மா மட்டும் தப்பா??’ என்று மீண்டும் தலையை உலுக்கி கொண்டான்.


‘இப்ப என்ன பண்றது?? இந்தப் பொண்ண நான் எப்படி கல்யாணம் பண்ணிக்கிறது??’ என்று அவன் மனது கேள்வி கேட்டது.

‘ஆனா திருமண ஏற்பாடாயிடுச்சு. பத்திரிக்கை வெச்சாச்சு. எல்லாருமே இந்தத் திருமணத்தை ஆவலா எதிர்பார்க்கிறாங்க. இப்ப கல்யாணத்தை நிறுத்த முடியாது’ என்று அவன் மூளை எடுத்துக் கூறியது.

‘ஆனா என்னைக் கல்யாணம் பண்ணிக்க இந்தப் பொண்ணு எப்படி ஒத்துக்கிட்டானே தெரியலையே?? இப்ப என்ன பண்றது??’ அவன் அந்த போட்டோவோடு அமர்ந்து விட்டான்.

அலைபேசியின் ஒலியில் சுயநினைவுக்கு வந்தவன். அலைபேசியை எடுத்தான். அவனுடைய தாய் தான் அழைத்துக்கொண்டிருந்தார். “சாப்பிட வாடா, பசிக்குது” என்றார்.

“அம்மா டீயும், காப்பியும் குடிச்சு குடிச்சு வயிறு ஃபுல்லா இருக்கு. எனக்குச் சாப்பாடு வேண்டாம். நீங்கச் சாப்பிடுங்க” என்றான்.


“வெறும் வயிரா படுக்கக் கூடாது டா?” என்று அஷ்டலட்சுமி கூற.

“வயிறு ஃபுல்லா இருக்கு. இப்ப சாப்பிட்டா தான் எனக்கு ஒத்துக்காது” என்றான்.

“சரி பொண்ணோட போட்டோவ பார்த்தியா?? ரொம்ப லட்சணமா, அழகா இருக்கால்ல?” என்று அஷ்டலட்சுமி கேட்க.

“உங்ககிட்ட பொண்ணோட போன் நம்பர் இருக்கா?” என்று கேட்டான்.


“அய்யய்யோ இல்லையேடா?? அதை வாங்க மறந்துட்டேனே? அவங்க அப்பா போன் நம்பர் தான் இருக்கு?” என்று கூறினார்.


அவன் புகைப்படத்தைத் திருப்பி பார்த்தான். அதில் பெயரைத் தவிர எதுவும் இல்லை. அந்தக் கவறையும் எடுத்துப் பார்த்தான். அதிலும் எதுவுமே இல்லை.

“ஊப்ப்” என்று ஆழ்ந்த பெருமூச்சை வெளியிட்டவன்.

“பயோடேட்டா வாங்கும்போது போன் நம்பர் இல்லையா??” என்று கேட்டான்.

“இல்லடா, நான் மேட்ரிமோனியில் தான் பார்த்தேன். அதுல அவங்க அப்பா போன் நம்பர் தான் இருந்துச்சு. நேர்ல பாக்கும்போது அவங்க அப்பா பயோடேட்டாவ கொடுத்தாரு. அதுலயும் அவரோட போன் நம்பர் தான் இருந்துச்சு. நான் அதுக்கப்புறம் தான் அவங்க அம்மா போன் நம்பரை கேட்டு வாங்கினேன். அவங்க கிட்ட பேசச் சுலபமா இருக்கும்னு தோணுச்சு” என்று முடித்தார்.

“நல்லா என்ன வச்சு செய்யுறீங்க மா” என்றான் அவன்.

“என்னடா ஆச்சு?” என்று பரிதவிப்பாகக் கேட்டவர். அடுத்த ஐந்து நிமிடங்களில் அவன் அறையில் அவன் முன்னால் நின்றார்.

“இப்ப பொண்ணுகிட்ட நான் பேசணும். எப்படி பேசுறது?” என்று கேட்டான்.

“என்ன பிரச்சனை டா?” அவருக்குப் படபடப்பு கூடிக் கொண்டே சென்றது.

“அதெல்லாம் சொல்ல முடியாது. பொண்ணுக்கு இந்தக் கல்யாணத்துல முழு சம்மதமான்னு பொண்ணு கிட்ட நான் கேட்கணும்” என்றான்.

“அதெல்லாம் பொண்ணு பார்க்கப் போகும்போது நானே கேட்டுட்டேன்டா. அதுக்கப்புறம் தான் கல்யாணம் வேலையையே ஆரம்பிச்சேன்” என்றார்.

“நீங்க என்ன லட்சணத்துல கேட்டிருப்பீங்கன்னு எனக்குத் தெரியும். நான் இப்ப பேசணும். எனக்குப் போன் நம்பர் வேணும்” என்றான் பிடிவாதமாக.

“கல்யாணத்துக்கு ரெண்டு வாரம் கூட முழுசா இல்லடா பத்து நாள் தான் இருக்கு. இப்ப போய்ப் பொண்ணு கிட்ட பேசுறேன்னா என்ன அர்த்தம்?? ஏதாவது ஏடாகூடம் பண்ணி வைக்காதடா. இந்தக் கல்யாணம் மட்டும் நின்னுச்சுனா அப்புறம் நான் உயிரோடவே இருக்க மாட்டேன்” என்று சிறு விசும்பலோடு முடித்தார்.

அவன் எழுந்து தன் தாயின் தோள்களைப் பற்றினான். “என்னம்மா இப்படி எல்லாம் உளறுறீங்க?? நான் வாக்கு கொடுத்தா தவற மாட்டேன்னு உங்களுக்குத் தெரியாதா?? கல்யாணத்தை நிறுத்துறேன்னு நான் எப்ப சொன்னேன்?? அந்தப் பொண்ணுக்கு இந்தக் கல்யாணத்துல சம்மதமான்னு தானே கேட்கிறேன்னு சொன்னேன்?” என்றான்.


“இல்ல, நீ இப்படி படபடப்பா போன் நம்பர் கேட்கிறத பார்த்தாலே, எனக்குப் பயமாவும் பதட்டமாவும் இருக்கு. அந்தப் பொண்ணு நல்லா லட்சணமா தானடா இருக்காள். நானும் உங்க அக்காவும் நல்லா விசாரிச்சு பாத்துட்டோம். அந்தப் பொண்ணுக்கு எந்தக் காதலும் இல்ல. திரும்பவும் காதலால் உன் வாழ்க்கை சிதைஞ்சிட கூடாதுன்னு நான் ரொம்ப கவனமா தான் இருக்கேன். நாங்க ரெண்டு பேரும் அவள் கிட்ட நல்லா தான் பேசினோம். அவளும் எங்களிடம் நல்லா தான் பேசினாள்” என்றவர்.

ஏதோ ஞாபகம் வந்தவனாய், “ஹான், உங்க அக்கா கிட்ட அவளோட போன் நம்பர் இருக்கும். இரண்டு பேரும் பேசிக்கிறாங்கன்னு நினைக்கிறேன். ஆனா நீ அவள் கிட்ட பேசாதடா, ப்ளீஸ் டா, எதையும் சொதப்பி வைக்காத” என்று அவர் கெஞ்சி கொண்டிருந்தார்.

“சரி நான் பண்ணல நீங்கச் சாப்பிட்டு படுங்க” என்றான் இறங்கிய குரலில்.

“பால் மட்டுமாவது எடுத்துட்டு வரவா?” என்று தவிப்பாகக் கேட்டார்.


“வேண்டாம்” என்றான் அழுத்தமாக.

“வாழைப்பழம்?”.

“எதுவும் வேண்டாம்மா. ஒரு நாள் சாப்பிடலைன்னா ஒன்னும் ஆயிட மாட்டேன். வயிறு ஃபுல்லா இருக்கு. நீங்க போய்ச் சாப்பிட்டு படுங்க. தயவு செஞ்சு சாப்பிடாம படுக்காதீங்க” என்று கத்தியவன் தாயின் முகச்சோர்வை பார்த்து. சற்று இறங்கிய குரலில் பேசி அவரை அனுப்பி வைத்துவிட்டு கதவைச் சாத்தியவன். மீண்டும் அந்தப் புகைப்படத்தோடு அமர்ந்தான்.

‘இப்பொழுது அந்தப் பெண்ணிடம் பேசுவதா வேண்டாமா?’ என்று அவனுக்கே குழப்பம் ஏற்பட்டது.

இரவெல்லாம் யோசித்து ஒரு முடிவை எடுத்துத் தன் தமக்கைக்கு காலையில் அழைத்து அவளிடமிருந்து அலைபேசி எண்ணையும் வாங்கி விட்டான்.

அழைப்பும் விடுத்து விட்டான். ஆனால் அடுத்த நொடி கட் செய்துவிட்டான்.

‘என்னத்தடா பேசுவ?? ஒரு வேலை அந்தப் பொண்ணுக்கு என்னை ஞாபகம் இல்லையோ?? அதனால தான் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லி இருப்பாளோ?? இப்ப நீயே பேசி அவளுக்கு ஞாபகப்படுத்துவியா?? அம்மா வேற, கல்யாணம் நின்னுச்சுன்னா அவ்வளவுதான்னு சொல்றாங்க. இதுக்கு உண்மையிலேயே அவங்க பொண்ணு பார்க்கக் கூப்பிடும் போதே போய்த் தொலைச்சிருந்திருக்கலாம், அப்பவே அவளைப் பார்த்திருந்தால், சந்தேகத்தையும் கேட்டுத் தெளிவு படுத்தியிருக்கலாம். இந்தக் குழப்பம் எல்லாம் அன்னைக்கே முடிஞ்சிருக்கும். ஒருவேளை கல்யாணத்துக்கப்புறம் என்னை நியாபகம் வந்துச்சுன்னா என்ன பண்றது??’ இப்படி பல குழப்பங்கள் அவனைச் சூழ்ந்து கொண்டது.

‘பேசாம மெசேஜ் போடலாமா??’.

‘இல்ல வேண்டாம்’.

‘நான் கால் பண்ணியும், திரும்ப அவள் கால் பண்ணலையே?? மிஸ்டு காலுக்குப் பண்ண மாட்டாளோ?? சரி அதுவும் நல்லதுக்கு தான். அமைதியா இரு. இன்னும் ரெண்டு நாள் யோசிச்சுட்டு முடிவு பண்ணலாம்’ அவனுக்கு அவனேப் பேசி ஒரு முடிவு எடுத்தான்.

……..

குளித்துக் கொண்டிருக்கும்போது ரிங்டோன் ஒலித்தது. குளித்து முடித்து விட்டு வந்தவள் டிஸ்ப்ளேயில் பெயரைப் பார்த்ததும் மனதில் ஒரு துள்ளல் ஏற்பட்டது. அதே குதூகலத்துடன் அலைபேசியை எடுத்தபடி அமர்ந்து விட்டாள்.

கீழ் உதட்டை மடித்து கடித்தபடி வெட்கப்பட்டாள். திரும்பவும் அழைப்பு வருகிறதா என்று காத்திருந்தாள். வரவே இல்லை, தாமாக அழைத்து விடலாம என்று யோசித்தாள்??.

அதற்குள் அவனுடைய தமக்கையிடமிருந்து அழைப்பு வந்திருந்தது.

“அண்ணி சொல்லுங்க?” என்று அவள் கேட்க.

“என் தம்பி உனக்குப் போன் பண்ணானா?” என்று கேட்டார்.

‘இப்ப பண்ணாருன்னு சொல்றதா, பண்ணலன்னு சொல்றதா?? இல்ல பண்ணிட்டு கட் பண்ணிட்டாருன்னு சொல்றதா?? மனதிற்குள் யோசித்தவள்.

“இல்ல அண்ணி” என்று கூறினாள்.

“சரி, நீயாவது அவனுக்குப் போன் பண்ணி பேசுனியா?” என்று கேட்க.

அதற்கும் இல்லை என்று தான் பதில் கூறினாள்.

அவர் ஆழ்ந்த பெருமூச்சை விடுவது இவளுக்கு எதிர் முனையில் கேட்டது.

“எதுவும் பிரச்சனையா அண்ணி??” ஒன்றுமே தெரியாதது போலக் கேள்வி எழுப்பினாள் ஸ்ரீ.

“அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா. ஒருவேளை என் தம்பி கால் பண்ணா மட்டும் எனக்கு இன்பார்ம் பண்ணு. அவன் ஏதாவது பேசி உனக்குத் தெளிவு தேவைப்பட்டால் எனக்குப் போன் போடு. வேற ஒண்ணுமே கிடையாது” என்று கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்து விட்டாள்.


அவளுக்கா தெரியாது அவர்களின் பதட்டம் எதனால் என்று. அதை நன்றாகத் தெரிந்து வைத்திருப்பவள் தானே?? உதடு விரிக்காமல் குவித்து புன்னகைத்தவள். மென்னகை சிந்திவிட்டு அமைதியாக அலைபேசியை வைத்துவிட்டாள்.

அவரிடமிருந்து வந்தால் பேசலாம், அல்லது அமைதியாக இருக்கலாம். ஒருவேளை தன்னிடம் பேசித் திருமணத்தை நீயே நிறுத்து என்று அவர் கூறிவிட்டால் என்ன செய்வது??. தன்னால் அதை மீறவும் முடியாது? அதே சமயத்தில் செயல்படுத்தவும் முடியாது. இதற்குத் திருமணம் வரை அமைதியாக இருப்பதே சால சிறந்தது” என்று முடிவோடு இருந்துவிட்டாள்.

அவளுக்குத் திருமணம் முடிவாகிய உடனேயே, தந்தையிடமிருந்து அவனுடைய அலைபேசி எண்ணை வாங்கி வைத்துக் கொண்டாள்.

பாவம் அவன் தான் அன்று அலைபேசி எண்ணை வாங்கிவிட்டு, அழைப்பு விடுக்கலாமா வேண்டாமா என்று துடித்துக் கொண்டிருக்கிறான்.

தினமும் யோசித்து யோசித்து குழம்பி கடைசி வரையில் அவன் அவளுக்கு அழைப்பு விடுக்கவே இல்லை.

அவளே மறந்திருக்கும் ஒரு விஷயத்தைத் தான் ஞாபகப்படுத்தக் கூடாது. திருமணம் நின்றால் தன் தாய் வருத்தப்படுவார். ஆசை காட்டி அவரை மோசம் செய்து விட்டது போல் ஆகிவிடும். தன் தந்தை செய்தது போலத் தான் செய்யக் கூடாது. அவருக்காகத் தான் இந்தத் திருமணம். ஆனால் மனைவி என்று ஒருத்தி வந்தபிறகு அவளுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைத்தான்.

அந்தப் பெண்ணிடமிருந்து மறைப்பதும் தவறு தானே?? இப்படி இரண்டு சிந்தனைகளும் சேர்ந்து அவனைக் குழப்பியது. முடிவெடுக்க முடியாமல் தடுமாறினான்.


 
Top Bottom