• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

புனர்ஜென்ம பந்தமடி நீ எனக்கு - 23

Vishakini

Moderator
Staff member
புனர் ஜென்மம் 23

இப்படியே இரண்டு நாள் சென்றிருக்கும். அவளிடம் விசிட்டிங் கார்டைக் கொடுத்தானே தவிர, அவள் நம்பரை வாங்கவில்லை. அவளாக அழைப்பாள் என்று எதிர்பார்த்தான். ஆனால் அவளும் அழைக்கவில்லை.

‘அன்னைக்கு நல்லாத்தானே பேசினாள். அப்புறம் ஏன் போன் பண்ணல??’ அவள் எண்ணமாகவே இருந்தது. அவனும் அவளை ஒதுக்கி நிறுத்தத்தான் பார்த்தான். ஆனால், அவளுடைய பேச்சு, பார்வை, பாவனை என்று எல்லாம் அவளை மறக்க முடியாமல் அவன் நினைவலைகளில் நிறுத்திக் கொண்டே இருந்தது.

ஊப்ப், என்று ஆழ்ந்த பெருமூச்சை இழுத்து விட்டவன், தலையை உலுக்கிக் கொண்டான்.
“போதும்டா சாமி. இந்தப் பொண்ணுங்களுக்கும் நமக்கும் செட்டாகாது. ஆரம்பிக்கும்போது எல்லாம் நல்லாத்தான் ஆரம்பிக்கும். அப்புறம் ஊத்திக் கவுத்திடும். இவ்வளவு நாள் கெத்தா தெரிஞ்சுட்ட. இப்ப எதுக்கு மனசை அலைபாய விடுற?” வாய்விட்டே புலம்பினான். இரவு உணவை முடித்துக் கொண்டு தன்னறைக்கு வந்து விட்டான். ஏனோ சம்மந்தம் இல்லாமல் அவள் நினைவலைகளும் சேர்ந்தே வந்தது. தன்னை நிலைப்படுத்திக் கொள்ள, கட்டிலில் அமர்ந்தபடி போனில் விளையாட ஆரம்பித்து விட்டான்.

நேரம், இரவு ஒன்பது மணியைக் கடந்து கொண்டிருக்க, அவன் அலைபேசிக்கு மெசேஜ் வந்தது. அதுவும் அன்நோன் நம்பரிலிருந்து. அதை அசட்டை செய்தவன், விளையாட்டில் மும்முரமாக இருந்தான்.

மீண்டும் மீண்டும் அதே நம்பரிலிருந்து மெசேஜ்கள் வருவது தெரிய, விளையாட்டை பாஸ் செய்துவிட்டுச் சென்று வாட்ஸப்பைக் கவனித்தான்.

“ஹலோ சார்”
“எப்படி இருக்கீங்க??” “நான் அனன்யா. மறந்துட்டீங்களா?? காக்களூரில் மீட் பண்ணோமே?? ரெண்டு நாள் முன்னாடி கூட பொக்கே ஷாப்ல மீட் பண்ணி இருக்கோம்”.

தான் ரிப்ளை கொடுக்காததால் அவள் அடுத்தடுத்த மெசேஜ்களை அனுப்பிக் கொண்டிருக்கிறாள் என்று புரிந்தது.

வேண்டுமென்றே அவளிடம் விளையாடிப் பார்க்க நினைத்தான். இரண்டு நாட்களாக அழைக்காமல் இப்போது அழைக்கிறாளே, அந்தத் கோபம் அவனுக்குள்ளும் இருந்தது.

“எந்த காக்களூர்?? எந்த அனன்யா?? எனக்கு எந்தப் அனன்யாவையும் தெரியாது” ஒரே போடாகப் போட்டபடி மெசேஜ் அனுப்பினான்.

அடுத்த நொடியே அழைத்துவிட்டாள். அவள் ஹலோ கூட சொல்லவில்லை, படபடவென்று பொறிந்து தள்ள ஆரம்பித்து விட்டாள்.

“என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க?? எங்க அக்கா நிரோஷாவையும் மறந்துட்டீங்களா? இல்ல அவங்களுடைய பையனுக்கு அர்ஜுன்னு உங்க பேரை வச்சதையும் மறந்துட்டீங்களா?? அவங்க கன்னத்துல அடிச்சதை மறந்துட்டீங்களா?? இல்ல அதை நான் இன்னும் ஞாபகம் வச்சிருக்கறதை மறந்துட்டீங்களா?? நாம ரெண்டு பேரும் பொக்கே ஷாப்புல பேசினதை மறந்துட்டீங்களா?? இல்ல திரும்பவும் மீட் பண்ணலாம்னு பேசிக்கிட்டதை மறந்துட்டீங்களா??” என்று கேள்விகளை அடுக்கி அவனைத் திக்குமுக்காடச் செய்து விட்டாள்.

“அம்மா தாயே நான் எதையும் மறக்கல. தயவுசெஞ்சு சும்மா சும்மா உன் அக்கா பேரை இழுக்காத. அவங்களுக்குக் கல்யாணம் ஆயிடுச்சு. நீ பேசுறதை யாராவது கேட்டா அவங்க வாழ்க்கையில பிரச்சனை வர்றதுக்கு வாய்ப்பிருக்கு” என்றான்.

“இதுதான் சார் நீங்க. உங்க பேருக்கேத்த மாதிரி எவ்வளவு நல்லவரா இருக்கீங்க பாருங்க?? உங்களுக்குப் பிடிக்காமல் கோபம் வந்து அடிச்ச பொண்ணுக்காகப் பார்க்குறீங்க. ரியலி யூ ஆர் கிரேட் அர்ஜுன் சார்” என்றாள் அனன்யா.

“போதும், இப்ப எதுக்கு கால் பண்ண, அதைச் சொல்லு??” என்றான்.

“அதுதான் மீட் பண்ணலாம்னு சொன்னீங்களே?? அதை ஃபிக்ஸ் பண்றதுக்காக கால் பண்ணேன். ஆக்சுவலி மெசேஜ்தான் பண்ணேன். நீங்க ரிப்ளை பண்ணல. தூங்கிட்டீங்களா இல்லையான்னு தெரியல அதான்??” தயக்கத்தோடு இழுத்தாள்.

‘ஹோ, உனக்குத் தயக்கமா எல்லாம் பேச வருமா?’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.
“அன்னைக்கே கூப்பிட்டு இருந்தா நல்லா இருந்திருக்கும். நான் அப்ப ஃப்ரீயா இருந்தேன். பட் இப்ப பிஸியாகிட்டேன்” என்று கெத்தாகக் கூறினான்.

“அய்யய்யோ!! எதிர்பார்த்தீங்களா என்ன?? உங்களுக்குத் தொல்லை கொடுக்கக் கூடாதுன்னுதான் வீக்கெண்டுல கூப்பிடலாம்னு நினைச்சேன். மத்தபடி நான் உங்களை மறக்கவே இல்லை. நினைச்சுக்கிட்டேதான் இருந்தேன்” என்றாள் படபடப்பாக.

“மிட்நைட்ல கூப்பிட்டு நினைச்சுக்கிட்டே இருந்தேன்னு சொல்ற??”.

“ஹலோ சார், இது மிட்நைட் இல்ல. நைட்டு ஸ்டார்ட்டாயிருக்கு அவ்வளவுதான். இன்னைக்கு முகூர்த்த நாள் இல்லையா?? பொக்கே ஷாப் ரொம்ப பிஸியா இருந்தது. முடிச்சிட்டு இப்பதான் வீட்டுக்கு வந்தேன். சாப்பிடக்கூட இல்லை. உங்களுக்குத்தான் போன் பண்றேன். எங்க அம்மா வேற சாப்பிடவான்னு கத்திக்கிட்டே இருக்காங்க. உங்களுக்குக் கேட்குதுதானே??” அலைபேசியைக் கதவருகில் வைத்துக் கதவைச் சிறிதாகத் திறந்திருப்பாள் போல, அவ்வளவு நேரம் கேட்காதது இப்போது கேட்டது அவனுக்கு.

“அம்மா பைவ் மினிட்ஸ், ரெப்ரெஷ் ஆகிட்டு வந்துடுறேன்” என்று இவளும் அதேபோலக் கத்தினாள். அவன் காதில் ‘கோயிங்’ என்று சத்தம் கொடுத்தது.

‘ராட்சசி, பேசிப் பேசி காதைச் செவிடாக்கிடுவா போல’ அவனையும் அறியாமல் உதடுகள் முணுமுணுத்தது. அவன் உதிர்த்த வார்த்தையை எண்ணித் தன்னையே கடிந்து கொண்டான்.

“பார்த்தீங்களா அர்ஜுன் சார். கொஞ்சம் உங்ககூட பேசலாம்னு யோசிச்சேன். ஷாப்ல அதுபோல ஃப்ரீயா பேச முடியாது. டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டே இருப்பாங்க. அதுதான் வீட்டுக்கு வந்து பேசலாம்னு யோசிச்சேன். நாளைக்கு வீக்கெண்ட் இல்லையா?? நீங்களும் ஃப்ரீயா இருப்பீங்க. அதிகமா தொல்லை கொடுத்தா, என்னை எங்க உங்களுக்குப் பிடிக்காம போயிடப் போகுதுன்னுதான், பயந்து உங்களுக்குத் தினமும் பேசல” பாவம் போலப் கூறினாள். குரலில் அத்தனை வருத்தம் தெரிந்தது.

“நான் தூங்குறதுக்கு இன்னும் கொஞ்சம் நேரம் ஆகும். ஆன்லைன் கேம்தான் விளையாடிட்டிருக்கேன். நீ ரெப்ரெஷ் ஆயிட்டுச் சாப்பிட்டுட்டு வா. அதுக்கப்புறம் பொறுமையா பேசலாம்” என்றான்.

“நோ நோ எங்க அம்மா ரொம்ப ஸ்ட்ரிக்ட். இன்னைக்கு லேட்டா வந்ததுக்குக் கத்திட்டு இருக்காங்க. நான் நைட்டுல யார்கிட்டயாவது போன் பேசுறேனான்னு ஒட்டுக் கேட்பாங்களாக்கும். பிரெண்டுகிட்ட பேசினா கூட கரெக்டா கதவைத் திறந்து வந்து திட்டிட்டுப் போவாங்க. அதனால ஆற அமர பேசுறது எல்லாம் நாளைக்குப் பேசலாம். நீங்க டைமிங் மட்டும் சொல்லுங்க. ஹான், அப்புறம் பிளேஸும் சொல்லுங்க” என்றாள்.

“நாளைக்கு என்னன்னு சொல்லிட்டு வருவ?? அதுக்கு உங்க அம்மா திட்ட மாட்டாங்களா??”.

“ஐயோ அர்ஜுன் சார், யாராவது உண்மையைச் சொல்லிட்டு வருவாங்களா?? பொய்தான் சொல்லிட்டு வரணும். சீக்கிரம் டைம் அண்ட் பிளேஸ் சொல்லுங்க?” அனன்யா பரபரத்தாள்.

‘இதுபோல எத்தனை பேரைப் பொய் சொல்லிப் பார்க்கச் சென்றிருக்கிறாய்??’ என்று அவன் மூளை தேவையில்லாத சிந்தனையைக் கிளப்பியது. அதை அடக்கிக் கொண்டவன், இடத்தையும் நேரத்தையும் சொல்லிவிட்டு அலைபேசியைத் துண்டித்தான். விளையாட்டில் மனம் செல்லாமல், மீண்டும் மனதில் அனன்யா குடிகொண்டாள்.

பத்து நிமிடம் சென்றிருக்கும், அவளிடமிருந்து மெசேஜ் மட்டும் வந்தது.
“கோவிச்சுக்கிட்டீங்களா? சாரி” என்று.

“இல்லை” என்று ஒற்றை வார்த்தையில் முடித்தான்.

“கண்டிப்பா நாளைக்கு வந்துடுவீங்கதானே?? உண்மையிலேயே எங்க வீட்டுல ரொம்ப ஸ்ட்ரிக்ட். டைம்குள்ள சாப்பிடணும், டைம்க்குள்ள தூங்கிடணும். அன்டைம்ல போன் பேசக்கூடாது. வெளியே பிரண்ட்ஸோட சுத்தக்கூடாது. கடையே நேரத்துக்கு மூடுவேன்னு பிராமிஸ் பண்ணித்தான் கடையையே திறந்தேன்” என்று டைப் செய்தவள், கடைசியாக சேட் ஸ்மைலியைப் போட்டிருந்தாள்.

“ஓகே என்கிட்ட பேசித் தேவையில்லாம உன் அம்மாகிட்ட திட்டு வாங்காத. நாளைக்கு நேர்ல மீட் பண்ணிக்கலாம். நான் வேணாம்னு முடிவு பண்ணா என்னைக் காம்ப்ரமைஸ் பண்ண முடியாது. வாக்கு கொடுத்தா சரியா அதைப் ஃபாலோ பண்ணுவேன்”.

அவள் கேட்ட கேள்விக்குத்தான் அவன் பதில் அளிக்கிறான் என்று தோன்றியது.

மீண்டும் அவள் ‘சாரி’ கேட்க, அவன் அதற்குப் பதில் அளிக்காமல் ‘குட் நைட்டோடு’ முடித்துக் கொண்டான். ஆன்லைனையும் ஆஃப் செய்திருந்தான்.

ம்ப்ச், என்று உதட்டைச் சுளித்தபடி டிஸ்ப்ளேயில் மலர்ந்துகொண்டிருந்த அவன் புகைப்படத்தையும், நம்பரையும் பார்த்தபடியே சலித்துக் கொண்டாள்.
“ரொம்பத்தான் பண்றான்” என்று வாய்விட்டே புலம்பினாள்.

“என்னடி இன்னும் தூங்கலையா?” என்று அவள் தாயின் குரல் கேட்க,

“இதோ தூங்கிட்டேன்மா” என்றவள், ஆன்லைனை ஆஃப் செய்துவிட்டுத் தூங்கச் சென்று விட்டாள்.

இங்கு வேண்டுமென்றே ஆன்லைனைக் கட் செய்தவன், பதினைந்து நிமிடங்கள் கழித்துப் பொறுக்க முடியாமல், அலைபேசியை எடுத்து மீண்டும் அவளுடைய ஆன்லைனைச் செக் செய்தான். அது அப்போதே டெட்டாகி இருந்தது. ‘உண்மையைத்தான் சொல்றாள் போல?’ என்று நினைத்துக் கொண்டவன், மீண்டும் அடுத்தடுத்த பத்து நிமிடங்களில் எடுத்துப் பார்த்துக் கொண்டே இருந்தான். ஆனால் அவனைப் போல அது மீண்டும் வரவே இல்லை.

………

அடுத்த நாள் குறிப்பிட்ட நேரத்திற்குக் கண்ணாடியின் முன்பு தன்னைச் சரி பார்த்துக் கொண்டிருந்தான். சட்டையை நான்கு முறை மாற்றிவிட்டான். தலையை மூன்று முறை கலைத்து, மாற்றி அமைத்துவிட்டான். மீசையை இரண்டு முறை மாற்றி முறுக்கி வைத்தான். பிறகு போதும் என்ற முடிவோடு அறையிலிருந்து புறப்பட்டு வெளியில் வந்தான்.

எதிரில் எதிர்ப்பட்ட தாயிடம், “அம்மா, நான் வர கொஞ்சம் லேட் ஆகும் பிரண்டைப் பார்க்கப் போறேன். எனக்காக வெயிட் பண்ணாதீங்க. நீங்களும் அப்பாவும் சாப்பிடுங்க” என்று கூறிவிட்டுச் சென்றான்.

“என்னம்மா உன் பையனோட போக்கே சரியில்ல?? அவன் முகத்துல ஒரு பொலிவு தெரியுதே அதைக் கவனிச்சியா?” என்று கேட்டார் பிரசாத்.

“உங்களைப் போல அழகுங்க. அவனை எப்படிப் பார்த்தாலும் பொலிவாதான் தெரிவான்” என்று அவர் கூற,

“உன் கண்ணுக்கு நான் எப்பயும் அழகாத்தான் தெரிவேன். அதனால உன் பையனும் அப்படியே தெரியுறான். ஆனால் நான் சொல்ல வந்தது அது இல்ல. அவன் நடையில ஒரு துள்ளல், முகத்துல ஒரு தேஜஸ் தெரியுது. பார்க்கப் போறது பாய் ஃப்ரெண்டா, இல்ல கேர்ள் ஃப்ரெண்டான்னு தெரியல?” என்றார்.

“அப்படி எல்லாம் இல்லைங்க. அவன் என்கிட்ட நிறைய புலம்பி இருக்கான். ஒரு காதலே போதும், அதுல பட்டுட்டேன் அப்படி இப்படின்னு. நீங்க கூட அவனுக்கு வரன் பார்க்கலாமான்னு கேட்கும்போது, வேண்டவே வேண்டாம்னு சொல்லிட்டான்” என்றார் லீலா.

“நான் எல்லாம் இதுபோல எத்தனை சொல்லியிருக்கேன் தெரியுமா?? அப்புறம் உன்னைப் பார்த்ததும் பிளாட் ஆயிட்டேன். அப்படி யாராவது ஒருத்தி அவன் வாழ்க்கையிலும் வருவாள். அப்போ உன் பையனும் பிளாட்டாகிதான் ஆகணும்” என்றார்.

“ஆனா, எனக்கும் சந்தோஷம்தாங்க. அவனுக்கும் ஒரு கல்யாணம் பண்ணி வச்சுட்டா, நம்ம கடமை முடிஞ்சிடும். அவன் சந்தோஷமா இருக்கிறதைப் பாக்கணும்னு நானும் ஆசைப்படுறேன். உங்க வாய் முகூர்த்தம் பலிச்சா கண்டிப்பா உங்களுக்குப் பிடிச்ச ஸ்வீட் செஞ்சு போடுறேன்” என்றார் லீலா.

“கத்தரிக்காய் முத்துனா கடைவீதிக்கு வந்துதானே ஆகணும்?” என்றார் பிரசாத். அவரும் சிரித்துக் கொண்டார்.

மகனின் மாறுதலுக்காக அவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். பார்க்கலாம், அவனைப் பிளாட்டாக்கல் யாராவது வருகிறார்களா என்று.

 
Top Bottom