• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

புனர்ஜென்ம பந்தமடி நீ எனக்கு - 26

Vishakini

Moderator
Staff member
புனர்ஜென்மம் 26

கல்லூரி வளாகத்தில் இருக்கும் சிறு பிள்ளையார் கோயில்.

அங்கு கண்களை மூடி வேண்டிக் கொண்டிருந்தாள் ஸ்ரீ. அவளைக் கடந்து செல்லும்போது புருவம் சுளித்துப் பார்த்தான் ராஜ்.

இதுவரை எந்தப் பெண்ணும் அங்கு நின்று கும்பிட்டு அவன் பார்த்ததில்லை. அவளுடைய யெல்லோ சுடிதார் அவளைத் தனித்துக் காட்டியது.

அப்போது சரியாக அவனுடைய காதலி பிரேமா வந்து அவன் கையைப் பற்றிக்கொள்ள, அவன் சிந்தனை கலைந்தது.

இப்போதும் கண்மூடி நின்றிருந்தவளைத்தான் பார்த்திருந்தான். சிந்தனையைப் பிரேமாவிடமிருந்து கொண்டு வந்து ஸ்ரீ லீலாவிடம் நிறுத்தினான்.

அவள் கண்களைத் திறந்தாள்.

“இங்கதான் கூட்டிட்டு வரப் போறீங்கன்னு தெரிஞ்சிருந்தா கண்டிப்பா சந்தோஷப்பட்டிருப்பேன். சுடிதார் மாத்திட்டு வந்திருப்பேன். நான் கூட ரொம்ப நாளா இங்க வரணும்னு ஆசைப்பட்டிருக்கேன். உங்களோட வந்தது அவ்வளவு ஹாப்பியா இருக்கு” என்றாள் ஸ்ரீ.

“இந்த காலேஜ் கேம்பஸ்குள்ள நான் வருவேன்னு நானே எதிர்பார்க்கல. உனக்காகத்தான் வந்திருக்கேன்” என்றான் ராஜ்.

“எனக்காகவா?”.

“ஆமா, உனக்காக. நமக்காக. எனக்கு வலிகளையும், வேதனையையும், கசப்பான உண்மைகளையும் கொடுத்த இதே கல்லூரி, எனக்கே எனக்குன்னு ஒரு தேவதையையும் கொடுத்திருக்கு. இங்க உன் கிட்ட மனசு விட்டுப் பேசணும்னு நினைச்சேன்” என்று கூறினான்.

அவள் கண்கள் ஒளிர அவனைப் பார்த்திருந்தாள்.

‘நீ சொல்லாத காதலை இப்ப சொல்லு’ என்று மனதினுள் நினைத்தான்.

எத்தனையோ முறை அவனிடம் காதலைச் சொல்ல மனம் தவித்தாலும், பயத்துடன் தயங்கி நின்றது. பிறகு அவனுடைய காதல் அறிந்து தடுமாறி நின்றது. அவனை ரசித்த அதே பார்வையால் அவன் வேதனையை வலிக்க வலிக்க உணர்ந்தது. அவன் ஏமாறப் போகிறான் என்று தெரிந்தும் அவனிடம் சொல்ல முடியாமல் தவித்தது. அவன் ஏமாந்து விட்டான் என்று தெரிந்த பிறகும் அவனிடம் தன் காதலைச் சொல்ல முடியாமல் வேதனைப்பட்டது என்று பல நினைவுகள்.

ஆனால் இன்று, எல்லாம் மறந்து அவளை சந்தோஷக் கடலில் ஆழ்த்தியது.

அவளைப் பார்த்தபடியே கோயிலின் அருகில் அமர்வதற்காக மரத்தைச் சுற்றி வட்ட வடிவமாகக் கட்டப்பட்டிருந்த இடத்தில் சென்று அமர்ந்தான்.

தன்னைப் பார்த்துக் கொண்டிருந்தவனை நோக்கி மெல்ல அடி எடுத்து நடந்து வந்தாள் ஸ்ரீலிலா.

“எனக்கு ரொம்ப கசப்பான அனுபவங்களை இந்தக் கல்லூரி கொடுத்திருக்கு. உனக்கு?” என்று நிறுத்தினான்.

“எனக்கு ரெண்டுத்தையுமே கொடுத்திருக்கு. முக்கியமா உங்கள கொடுத்திருக்கு. அதனால சந்தோஷம்தான்” என்றாள்.

“சோ, நீ என்னை நல்லா ஞாபகம் வச்சிருக்க. என்னை மறக்கல. அப்படித்தானே?” என்று கேட்டான்.

‘இல்லை’ என்று தலையாட்டினாள்.

“அப்பவே என்னை உனக்கு ரொம்ப பிடிக்குமா?” என்று கேட்டான்.

அவனை நேர்பார்வை பார்த்தாள் ஸ்ரீ லீலா.
“ம்ம்ம், பிடிக்கும்” என்றாள்.

“பிடிக்குமா? இல்ல ரொம்ப பிடிக்குமா? இல்ல ரொம்ப ரொம்ப பிடிக்குமா?” என்று கேட்டான்.

அவன் கண்களை ஆழமாகப் பார்த்துக் கொண்டு, “ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்.” ஆரம்பிக்கும்போது மெதுவாக ஆரம்பித்தவள், வேகமாக முடித்தாள்.

“அப்ப ஏன் சொல்லல?”

“சொல்ல பயமா இருந்தது, சீனியர்.”

“பயமா, பதட்டமா?”

“ரெண்டுமே, சீனியர்.”

“என்னோட விஷயம் எப்ப தெரிஞ்சது?”

“ஆறு மாசம் கழிச்சு நானே பார்த்தேன். அப்புறம் மத்தவங்க கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கிட்டேன்.”

“அதுக்கப்புறம் பைத்தியக்காரன் மாதிரி திரிஞ்சேனே? அப்பயாவது சொல்லி இருக்கலாமில்ல?”

“எப்படி, சீனியர் சொல்ல முடியும்?”.

“ஆமா, எப்படி சொல்ல முடியும்? கண்டிப்பா நீ சொல்லி இருந்தாலும் நான் அக்சப்ட் பண்ணியிருக்க மாட்டேன். உன்னை ஹர்ட் பண்ணியிருப்பேன். அந்த அளவுக்கு பெண்கள் மேல வெறுப்பு இருந்தது. அந்த வெறுப்பை நான் வீட்ல கூட காட்டினேன். அந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருந்தேன்”.

“ஆனா உங்களுடைய வலி என்னுடையதா தோணுச்சு. அதனால எனக்கும் வலிச்சது. கோவமா, சோகமா பார்க்கும்போதெல்லாம் என் மனசு சுக்கு நூறா உடைஞ்சுது” வருத்தமாக கூறினாள்.

அந்த நாட்களின் வலி அவள் முகத்தில் இந்த நாட்களிலும் தெரிந்தது.

“அதுக்கப்புறம் மறக்கணும்னு தோணலையா?” இம்முறை அவன் தடுமாற்றத்தோடு கேட்டான்.

“தோணுச்சு, சீனியர். ஆனா முடியல. வருடக்கணக்கா முயற்சி பண்ணிட்டே இருக்கேன். ஆனா இப்ப பண்ண வேண்டிய அவசியம் இல்லல்ல சீனியர்?” என்று அவனை பார்த்தாள்.

முகத்தில் லேசான மலர்வோடு இல்லை என்று அவன் தலையாட்டினான்.

“தேங்க் காட். கடவுள் எனக்கு அந்த வலியைக் குறைச்சுட்டாரு” என்றாள்.

“குறைச்சது கடவுளா? இல்ல உங்க அப்பாவா?” என்று கேட்டான்.

“ரெண்டு பேரும்தான்” என்றாள்.

“ம்ம்ம்ம்ம், பேரன்ட்ஸ் கிடைக்கிறது எல்லாம் வரம், இல்லயா லீலா? முக்கியமா அப்பா. உன் அப்பாவை போல எனக்கு ஒரு அப்பா கிடைச்சிருந்தா நல்லா இருந்திருக்கும்” வருத்தத்தோடு கூறினான்.

“இப்பயும் உங்களுக்கு அவரு அப்பாதானே சீனியர். உங்கம்மா எனக்கு அம்மானா, என் அப்பாவும் உங்களுக்கு அப்பாதானே? மாமனார் மாமியாரா இருந்தாலும், அவங்கள அம்மா அப்பாவா ஏத்துக்கலாமில்லையா?”

பொதுவாக எல்லோரும் இருக்கும் போது மற்றவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவள் ம்ம் என்று பதிலளிப்பாள் அல்லது தலையசைப்பாள்.

அதுபோல தன்னிடமும் பேசக்கூடாது என்பதால்தான் அவன் முதல் நாளிலேயே, அதுவும் முதல் இரவிலேயே கூறிவிட்டான்.

“எங்க அம்மா மட்டும் லக்கி இல்ல, நானும் லக்கிதான். என்னை விரும்புற ஒரு பொண்ணு கிடைச்சதுக்கு” உணர்ந்து கூறினான்.

“உங்களுக்கு கோபம் வரலையா சீனியர்?” என்று அவனை ஆழமாகப் பார்த்தபடி கேட்டாள்.

“நீ என்னை விரும்புவதற்கு நான் கோபப்படணுமா? அப்ப நான் உன்னை விரும்புவதற்கு நீ என் மேல கோபப்படுவியா?” புன்னகையுடன் கேட்டான்.

“நீங்க என்னை விரும்புறீங்களா? ஐ மீன், விரும்பப் போறீங்களா?” அவள் கண்களில் அத்தனை பொலிவு.

“நேத்தே விரும்ப ஆரம்பிச்சுட்டேனே? உன்னை விரும்பாம இருந்தாத்தான் அதிசயம். உன்னோட பேச்சு, உன் குணம், என்னை அப்படியே ஏத்துக்கிட்டது, உன்னோட ஒவ்வொரு செயலும் எனக்கு பிடிச்சது. அதனாலதான் என்னையும் மீறி முதலிலேயே உன்னை பார்த்திருக்கலாம், லவ் பண்ணி இருக்கலாம்னு சொல்ல வந்து கடைசி வார்த்தையை விழுங்கிட்டேன். என்ன இருந்தாலும் உன்னை அது ஹர்ட் பண்ணும்னு தோணுச்சு.”

“உண்மையாவா சீனியர்?”

“உண்மையாதான்” என்றான்.

அவள் அவனை கட்டிக் கொண்டாள். முதல் முறையாக அவனும் தனக்குள் புதைந்தவளை இறுக்கிக் கொண்டான்.

காற்றுக்கும் இடைவெளி இல்லாமல் உருவாக்கினான்.

சில நொடிகள் அப்படியே நின்றனர். நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

“உங்களுக்கு அப்பவே தெரியுமா, சீனியர்?” என்று கேட்டாள்.

“இல்ல, இன்னைக்குத்தான் தெரிஞ்சுகிட்டேன். முதல்ல தெரிஞ்சிருந்தா கண்டிப்பா அப்போ எனக்கு இருந்த மனநிலையில் நான் என்ன பண்ணியிருப்பேன்னு எனக்கே தெரியாது. ஆனா இன்னைக்கு தெரிஞ்சுக்கும்போது ரொம்ப சந்தோஷமா ஃபீல் பண்ணேன். ஆனா அதுக்கு முன்னாடி நேத்து உன்கிட்ட பேசும்போதே உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சது. நல்லவேளை அம்மா சொன்ன இந்தப் பொண்ணை மிஸ் பண்ணலைன்னு தோணுச்சு” அவள் கண்களைப் பார்த்துக்கொண்டே கூறினான்.

இன்னுமே இருவரும் விலகி இருக்கவில்லை.

“இன்னைக்கா?”.

“நேத்து உன் பார்வையிலேயே எனக்கு ஏதோ தெரிஞ்சது. ஆனால் சரியா யோசிக்க முடியல. இன்னைக்கு நீ உங்க அப்பா கிட்ட பேசிட்டிருந்த ஒரு சில வார்த்தைகளைக் கேட்டேன். அதுக்கு அப்புறம் டிஸ்டர்ப் பண்ணாம வந்துட்டேன்” என்றதும்,

அவனை விட்டு விலகி வாயைப் பொத்திக் கொண்டாள்.

“எல்லாமே கேட்டுட்டீங்களா?” என்று அதிர்ச்சியாகக் கேட்டாள்.

“ம்ப்ச்” என்று அவன் உதட்டைச் சுளித்து இல்லை என்றான்.

“எ, ஏ, என்ன கேட்டீங்க?” தடுமாற்றத்தோடு கேட்டாள்.

“ரொம்ப எல்லாம் கேக்கல. பதட்டப்படாதே. உன் அப்பா உன் கிட்ட என்ன பேசினாருன்னு எனக்குத் தெரியாது. நீ ஏன்மா இன்னும் உன் புருஷன் கிட்ட உன்னோட காதலை சொல்லலைன்னு கேட்டாரு. நான் கூட உனக்கும் என்னைப் போலவே ஒரு காதல் இருக்கும்னு பயந்துட்டேன். அப்புறம் என்னை நானே சமாதானப்படுத்திக்கிட்டேன். எனக்கே இருக்கும்போது என்னை விட அழகா இருக்கிற என் மனைவிக்கு இருக்கக் கூடாதான்னு?? அப்புறம் அந்தக் காதலே நான்தான்னு தெரிஞ்சதுக்கப்புறம், இறக்கையே இல்லாம வானத்துல பறந்தேன். நேர்ல உன் முகத்தைப் பார்த்து கேட்கணும்னு தோணுச்சு. முதல்ல வீட்டுக்கு வந்து கேட்கலாம்னுதான் நினைச்சேன். ஆனா, எங்க நீ சொல்லாம மிஸ் பண்ணியோ, அதே இடத்துல உன்னைச் சொல்ல வைக்கணும்னு தோணுச்சு” என்று அவன் கூறும்போது அவளும் வானத்திற்கு பறந்து விட்டாள்.

“காலேஜ் முடிஞ்சதுக்கப்புறம் நான் இந்தப் பக்கம் எட்டிக்கூட பாக்கல. இன்ஃபெக்ட், காலேஜ் விட்டு டிராப் அவுட் ஆயிடலாம்னு கூட நினைச்சேன். ஆனா என்னை நம்பியிருக்க அம்மாவைப் பாத்துக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருந்துச்சு. என் அக்காவுக்கு கல்யாணம் பண்ண வேண்டிய கடமை. எல்லாம் என்னைத் தடுத்தது. கஷ்டப்பட்டு கல்லூரியை முடிச்சுட்டு அக்கடான்னு வெளியே வந்துட்டேன். அப்பயும் கிட்டத்தட்ட ஒரு நாலு மாசம் காலேஜுக்கு வராமத்தான் இருந்தேன்.”

“எனக்கு தெரியும், சீனியர். நான் உங்கள அப்ப ரொம்ப தேடினேன். யார் கிட்ட கேட்கிறது, எப்படி கேட்கிறது? நீங்க நல்லா இருக்கீங்களா, இல்ல உங்களுக்கு ஏதாவது ஆயிடுச்சானு ரொம்ப பதட்டமா இருந்த நாட்கள் அது. அப்புறம் என் பிரண்டோட சேர்ந்து உங்க பிரண்டு கிட்ட கேட்டு தெரிஞ்சுகிட்டேன். அவர்தான் வீட்ல நீங்க நல்லபடியா இருக்கிறதா சொன்னாரு. அப்பதான் எனக்கும் நிம்மதியா இருந்துச்சு” என்றாள் ஸ்ரீ.

அவன் புருவத்தைச் சுருக்கினான்.

“யாரு, ஸ்ரீதரா?” என்று கேட்டான்.

“இல்லல்ல, அவர் இல்ல. வேற ஒருத்தர். அவர் பேர் எல்லாம் எனக்கு தெரியல” என்றாள்.

விஷயம் தெரிந்தும், அவன் முதுகில் குத்திய நிறைய பேரை வாழ்க்கையில் இருந்தே ஒதுக்கியிருந்தான்.
அவன் முதுகில் குத்தியதும் அவன் தோழன்தானே? அதனால் நட்பு வட்டத்தை விட்டே அவன் வெளியில் வந்துவிட்டான்.

அவளையும் அவனையும் கொன்று போடும் ஆத்திரம் கூட வந்தது. ஆனால் தனக்குப் பயந்து அவர்கள் இருவரும் டிராப்பவுட்டாகி ஓடி விட்டார்கள். தேடிச் சென்று கொல்லும் ஆத்திரம் எல்லாம் இல்லை. தன் வாழ்க்கையைப் பார்க்க ஆரம்பித்து விட்டான். ஆனால் மனிதர்களை மட்டும் துறக்க ஆரம்பித்து விட்டான்.

அவன் மீது அவளுக்கு எப்போது காதல் வந்தது, எப்படி வந்தது? எப்படி எல்லாம் அவள் சொல்வதற்கு பரிதவித்தாள். அவன் விஷயத்தைக் கேள்விப்பட்டு எப்படி துடி துடித்தாள் என்று ஒவ்வொன்றையும் அவள் விளக்கிக் கூறிக் கொண்டிருக்க, அவனும் அதைக் கேட்டு உள்வாங்கிக் கொண்டிருந்தான்.

முதல் நாள் தங்களை மறந்து பேசியவர்கள், மறுநாள் தங்கள் காதலைப் பகிர்ந்து கொண்டார்கள். அதன் பிறகு கட்டிலைப் பகிர்ந்து கொள்ள தயக்கம் இருந்திருக்கவில்லை.




 
Top Bottom