புனர்ஜென்ம பந்தமடி நீ எனக்கு - 27

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,634
6,876
113
புனர்ஜென்மம் 27

அடுத்த வாரம் அவர்கள் சொன்னது போல சந்தித்துக் கொள்ளவில்லை. கடைசி நொடியில் அதை நிராகரித்ததும் அனன்யாதான். வீட்டிற்கு விருந்தாளிகள் வருகிறார்கள் என்று சொன்னாள்.

ஆனால் அந்த ஞாயிற்றுக்கிழமை தமக்கை குடும்பத்தோடு அவன் வீட்டிற்கு வந்திருந்தாள். மதிய உணவை முடித்தபிறகு அவனிடம் பேச ஆரம்பித்தார்கள்.

“உனக்கு ஒரு பொண்ணு பார்த்திருக்கோம்” என்று ஆரம்பித்தது ஆராதனாதான்.

“என்ன விளையாடுறீங்களா? திடீர்னு இப்படி வந்து சொல்றீங்க? நான் தான் எனக்கு கல்யாணம் வேணாம்னு சொல்லி இருந்தேன்ல?” என்றான்.

“சொன்னதான். ஆனா அதுக்காக அப்படியே இருக்க முடியுமா? எங்க முயற்சியை நாங்க பண்ணிட்டுத்தானே இருக்கணும்? ஏழு கழுதை வயசாகுதுல்ல?” என்று நிறுத்தினாள்.

“யாருக்கு? எனக்கா, உனக்கா? விளையாடாதக்கா. எனக்கு இப்ப பொண்ணு பார்க்க வேண்டாம்” என்று அழுத்தமாக உச்சரித்தான் அர்ஜுன்.

“ஐயோ தம்பி, இன்னைக்கு பொண்ணு பார்க்க வரதா உங்க அப்பா அவங்ககிட்ட சொல்லிட்டாரே?. அவங்களுக்கும் உன்னை ரொம்ப புடிச்சிருந்தது. எங்களுக்குமே பொண்ண ரொம்ப புடிச்சிருந்தது. குடும்பம் கூட நல்லபடியாத்தான் தெரிஞ்சது. அப்பாதான் வரன் பார்த்தாரு. அவருக்கும் புடிச்சிருக்குறதுனால ஓகே, நேர்ல வந்து பார்க்கிறோம்னு சொல்லிட்டாரு. இன்னிக்குத்தான் டேட் பிக்ஸ் பண்ணி இருக்கு. அதனாலதான் உங்க அக்கா, மாமா எல்லாரும் வந்துருக்காங்க” என்று படபடத்தார் லீலா.

“என்ன விளையாடுறீங்களா? பொண்ணு பாக்கவே போறீங்களா? உங்க இஷ்டத்துக்கு முடிவு பண்ணா எப்படி? கல்யாணம் நான் தானே பண்ணிக்கணும்? அப்ப என்னை கேட்கணும் இல்லையா?” அவன் கோபமாகப் பேசினான்.

“எதுக்குடா இவ்வளவு ரியாக்ட் பண்ற? நாங்க ஜஸ்ட் போய் பாத்துட்டு வரப்போறோம். உனக்கு பிடிச்சிருந்தா மட்டும் தான் கல்யாணம். அப்படி ஒண்ணும் உன்னை ஃபோர்ஸ் பண்ணி கல்யாணம் செய்ய மாட்டோம். நீ ஒண்ணும் சின்ன பிள்ளையில்லை. கண்ணைக் கட்டி, கையைக் கட்டி உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறதுக்கு” ஆராதனாதான் பேசினாள்.

ஆனால் அவனால் அந்த ஏற்பாட்டையே ஒத்துக்கொள்ள முடியவில்லை. என்ன செய்வான் அவன்? மனதிற்குள் ஏதோ பாரம் ஏறிய உணர்வு. சம்பந்தமே இல்லாமல் அனன்யாவின் முகம் வேறு வந்து சென்றது.

இதற்கெல்லாம் என்ன அர்த்தம்? ஏன் வருகிறது என்றெல்லாம் அவனுக்கு பிரித்து ஆராயத் தெரியவில்லை. ஆராயவும் அவன் விரும்பவில்லை. இப்போது இந்த திடீர் திருமணப் பேச்சு தேவையில்லாதது என்று மட்டும்தான் தோன்றியது.

இந்த அளவுக்கு அவர்களும் அவன் பேச்சை மீறி நடந்து கொள்பவர்கள் இல்லை. இந்த முறை என்ன ஆயிற்று அவர்களுக்கு? பற்களைக் கடித்தபடியிருப்பது மூவருக்குமே தெரிந்தது.

அவன் தோள்களில் கையைப் போட்டார் ராகேஷ்.

“ரிலாக்ஸ் அர்ஜுன். இவங்க யாரும் எதுவும் முடிவு பண்ணல. மாமாதான் முடிவு பண்ணியிருக்காரு. அதனால இவங்களும் பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டாங்க. இன்னைக்கு பார்க்கத்தான் போறாங்க. ஜஸ்ட் போய் பாத்துட்டு வந்துடுறோம். அதுக்கப்புறம் நாம ஏதாவது ரீசன் சொல்லிக்கலாம்” என்று கூறினான் ராகேஷ்.

“மாமா, நம்ம வீட்ல எதுவுமே அரேஞ்ச் மேரேஜ் இல்ல. அப்பா, அம்மாவுக்கும் சரி, உங்களுக்கும் சரி, எல்லாமே லவ் மேரேஜ்தான். சோ அந்த பெயின் தெரியாது. ஒரு பொண்ணைப் போய் பாத்துட்டு ரீசனே இல்லாம பிடிக்கலைன்னு சொல்றது எவ்வளவு மோசமான செயல் தெரியுமா? அதை என் குடும்பம் செய்யணுமா? எனக்கு இது பிடிக்கல” என்றான்.

“நீ சொல்ல வரது எனக்கு புரியுது. பட் மாமா வாக்கு கொடுத்துட்டாரு. என்ன பண்றது? உனக்கு ஏதாவது இன்ட்ரஸ்ட் இருந்ததுனா சொல்லு. நாம அதை ரீசனா சொல்லலாம். பட் உனக்கும் அதுபோல எதுவும் இல்ல. காலம் முழுக்க இப்படியே சாமியாரா இருக்க முடியாது. அதையும் தப்பாத்தான் பேசுவாங்க. ஒரு பொண்ணு பண்ண தப்புக்கு, எல்லா பொண்ணையும் தப்பா நினைக்கிறது அபத்தமா தோணலையா அர்ஜுன்? உன் பேரண்ட்ஸ் பார்த்திருக்க பொண்ணு ஏன் உன்னோட பெட்டர் ஹாஃபா இருக்கக் கூடாது? அந்த கோணத்துல நீ பாக்கலாம் இல்லையா?” என்றான் ராகேஷ்.

தன் தாயிடமும், தமக்கையிடமும் பேசுவது போல தன் மாமனிடம் அவனால் பேச முடியாது. உரிமையாக பேசுவான் தான். ஆனால் மனம் நோகும்படி அவனால் எப்படி பேச முடியும்? தந்தையிடம் அதிகமான மரியாதை உண்டு. அவரிடமும் அவனால் எதிர்த்துப் பேச முடியாது.

“நீங்க சொல்றது எனக்கு புரியுது மாமா. ஆனா என்னை கேக்காம இப்படி எல்லாத்தையும் முடிவு பண்ணிட்டு, கடைசி நிமிஷத்துல சொன்னா என்ன அர்த்தம்?” அவன் மீண்டும் அதே கேள்வியில் வந்து நின்றான்.

“என்ன இங்க பிரச்சனை?” என்று கேட்டபடி வந்து நின்றார் ராஜ்குமார்.

“அப்பா, அவனை கேக்காம இன்னைக்கு ஏன் பொண்ணு பார்க்க போறீங்கன்னு கேட்கிறான்?” ஆராதனா போட்டுக் கொடுத்தாள். பற்களைக் கடித்தபடி தமக்கையை முறைத்தான் அர்ஜுன்.

“இங்க பாருங்க, முறைக்கிறான். நீங்க வாக்கு கொடுத்திருக்கீங்க. நாங்க போய் பாத்துட்டு வந்துடுறோம்னு சொன்னா கேட்கல. கோபப்படுறான் போடுறான்” சிறுபிள்ளையாய் கோள்மூட்டினாள்.

இப்பொழுது திரும்பி அவன் மாமனை முறைத்தான். ராகேஷ் தோள்களைக் குலுக்கினான்.

“உனக்கு என்ன அர்ஜுன் பிரச்சனை? இந்த வரன் பிடிச்சிருந்தது, தெரிஞ்சவங்க வேற, அதனால அவாய்ட் பண்ண முடியல. நாங்க ஜஸ்ட் போய் பாத்துட்டு வரோம். பிடிச்சிருந்தா ஓகே சொல்லு. இல்லனா மாப்பிள்ளைக்கு பிடிக்கலைன்னு சொல்லிக்கிறோம்” என்றார் ராஜ்குமார்.

“அப்பா, அப்படி பார்த்துட்டு வேணாம்னு சொல்றது தப்பு இல்லையாப்பா?”.

தந்தையிடம் தனிப்பட்ட டோன்தான்.

இதேபோல அவரும் ஒரு காலத்தில் பேசியிருக்கிறார். அதனால் புன்னகைத்தார்.

“யூ ஆர் ரைட், ஆனா எனக்கு தெரிஞ்சவங்கதான். நான் சொல்லி சமாளிச்சுக்கிறேன். வாக்கு கொடுத்தாச்சு. போகாம இருந்து சமாளிக்கிறதை விட, போய் வந்து சமாளிக்கிறது ஈஸியா இருக்கும். என்னால வேணாம்னு முகத்துக்கு நேரா சொல்ல முடியாது. ஆனா உனக்கு பிடிக்கலைன்னு சொல்ல முடியும். அப்ப அவங்களால எதுவும் சொல்ல முடியாது இல்லையா?” அவர் சமாதானம் பேசினார்.

முதல்முறையாக அவன் தந்தையின் பேச்சு அவனுக்கு அசௌகரியத்தை கொடுத்தது. ஆனால் அதற்கு மேல் அவனால் வாதிடவும் முடியவில்லை.

“எப்படியோ போங்க” என்று கூறியவன். தன்னறைக்கு சென்று விட்டான். மனம் காரணம் இல்லாமல் பதைபதைத்தது.

அவர்கள் சொல்வது நியாயம் புரிந்தாலும், ஏனோ ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

விளையாட்டில் கவனம் செலுத்தினான். டிவி போட்டுக்கொண்டு அமர்ந்தான். எதிலுமே மனம் ஈடுபடவில்லை.

நண்பர்களிடம் அழைப்பு விடுத்துப் பேசினான். அவர்களும் பெற்றவர்கள் கூறிய அதே வாக்கியத்தைத்தான் கூறினார்கள்.

சளிப்புடன் அலைபேசியைத் தூக்கிப் போட்டான். அவர்களிடம் சொல்வதற்கு அவனிடம் காரணங்கள் இருந்திருக்கவில்லை. அவனுக்கே குழப்பங்கள்தான். இதுவரை தடுமாறாத மனம் ஏன் தடுமாறுகிறது என்று தவிப்பாக இருந்தது.

வரவேற்பில் அமர்ந்தபடி வெற்றிடத்தை எவ்வளவு நேரம் பார்த்தானோ? அலைபேசியின் ஒலியில் துணுக்குற்றுத் தேடிச் சென்று அதை எடுத்தான். அனன்யாவிடம் இருந்து வந்திருந்தது. அழைப்பை எடுத்தான்.

“உங்களுக்கு ஒரு குட் நியூஸ் சொல்லவா?” என்றாள் துள்ளலுடன்.

அந்த துள்ளல் அவனுக்கு வர மறுத்தது.

“சொல்லு?” என்றான்.

“உங்க குரல் சரியா இல்லையே? ஏதும் பிரச்சனையா?”.

“பிரச்சனை எல்லாம் ஏதும் இல்லை. நீ சொல்ல வந்ததை சொல்லு” என்றான்.

“நான் ரொம்ப ஹாப்பியா இருக்கேன். அந்த குட் நியூஸை உங்ககிட்டதான் முதல்ல சொல்லணும்னு போன் பண்ணேன். சரி விடுங்க, நான் அப்புறமா நேர்ல மீட் பண்ணும் போது சொல்றேன்” என்று கட் செய்துவிட்டாள்.

‘இவளை?’ என்று பற்களை நறநறத்தவன். அவளுக்கு அழைப்பு விடுத்தான்.

“என்னாச்சு? மூடு சரியாயிடுச்சா?”.

“எதுக்கு போன் பண்ண? ஹலோ கூட சொல்லாம பேசின. சந்தோஷமான விஷயம்னு வேற சொன்ன? அதை சொல்றதுக்காக எனக்கு கால் பண்ணி இருக்க. நான் இப்படி எல்லாம் பேசி இருக்கக் கூடாது. சொல்லு. நான் இப்போ ஓகேவாத்தான் இருக்கேன்” என்றான்.

“வந்து, வந்து... என்னை இன்னைக்கு பொண்ணு பார்க்க வந்திருந்தாங்க” என்றாள்.

அவன் மனதில் திக்கென்றானது.

“வாட்? ரிலேடிவ் வரதா தானே சொன்ன? பொண்ணு பார்க்க வந்திருந்தாங்களா?”.

“அது பேரண்ட்ஸ் அப்படித்தான் சொன்னாங்க” இழுத்தாள்.

“இதுதான் நீ சொன்ன சந்தோஷமான விஷயமா?” கோபமாகக் கேட்டான்.

“ஆமா, அர்ஜுன் சார். ஃபர்ஸ்ட் டைம் என்ன பொண்ணு பார்க்க வந்திருக்காங்க. முதல் வாட்டி வந்தவங்களுக்கு என்னை ரொம்ப பிடிச்சிருச்சு. உடனே சம்மதம் சொல்லிட்டாங்க. ஆனா மாப்பிள்ளைகிட்டதான் கேட்கணுமாம். மாப்பிள்ளை ஓகே சொன்னாத்தான் ஓகேவாம். இல்லனா இல்லையாம்” பாவம் போலக் கூறினாள்.

“சொல்லிட்டல்ல, போனைவை” என்றான் அழுத்தமாகக்.

“அது எப்படி வைக்க முடியும்? இன்னும் நான் சொல்லி முடிக்கலையே?”.

“அனன்யா, எனக்கு மூடு சரியில்ல. ஏதோ நீ சொல்ல வந்தியேன்னு கேட்டேன். நாம இன்னொரு நாள் பேசலாம்”.

“ஓகே. தேங்க்யூ. டேக் யுவர் ஓன் டைம். எதுவா இருந்தாலும் சரியாயிடும். ஐ ஆல்வேஸ் வித் யூ” என்று அழைப்பை துண்டித்தாள்.

‘எப்படி உன்னால் என்னுடன் எப்பொழுதும் இருக்க முடியும்?’ என்று கேட்க நினைத்த மனதை கட்டுப்படுத்தினான்.

அவள் பேச்சே அப்படித்தான் என்று புரிந்து வைத்திருந்தான்.

‘எல்லாவற்றிற்கும் வியக்காணம் பார்க்காதே’ என்று மூளை கூறியது.

‘அவளுக்கு பெண் பார்த்து இருக்கிறார்கள். அவள் சந்தோஷமாக சொல்கிறாள். அப்படினா அன்று தன்னை பார்த்ததற்கு என்ன அர்த்தம்?’ மனது கேள்வி கேட்டது.

‘பொல்லாத அர்த்தம்?. அவள் சாதாரணமாக பார்த்துப் பேசியிருப்பாள். நீ புதுசா ஒரு அர்த்தத்தை கண்டுபிடிக்காத, உன் மனசுல சலனமிருக்கு. அதனாலதான் அவள் பார்வைக்கு அர்த்தம் தேடுது. இத்தனை வருஷம் இல்லாம இப்ப ஏன் உன் மனசு சலனப்படுது?’ என்று மூளை கேள்வி கேட்டது.

‘நான் சலனப்படவில்லை. அவள்தான் சலனப்படுத்தினாள்’ என்று அனன்யாவின் மீது குற்றம் சாட்டினான்.

‘அர்ஜுன் என்ற பெயருக்கு அவள் கொடுத்த விளக்கம் எதற்காக? அதை கூறும்போது அவள் முகத்தில் படிந்த ரசனையின் காரணம்தான் என்ன?’ என்று மீண்டும் அவன் மனது கேள்வி கேட்டது.

தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான். எத்தனை நேரம் அமர்ந்திருந்தானோ? பேச்சுச் சத்தம் கேட்டு தான் தன் உணர்வுக்கு வந்தான்.

வீட்டினுள்ளே சிரித்தபடி பேசிக் கொண்டு வந்தது அவனுடைய குடும்பத்தார்தான்.

ஏனோ எல்லோரையும் அப்படிப் பார்க்க கடுப்பாக இருந்தது. அலைபேசியை எடுத்துக்கொண்டு வேகமாக படிகளில் ஏறினான்.

தங்களுக்குள் பார்வையை பரிமாறிக் கொண்டனர் மற்றவர்கள்.

“அர்ஜுன்!” என்று ஓங்கி அழைத்தார் ராஜ்குமார். அவன் பாதங்கள் அப்படியே நின்றது. அங்கிருந்தபடியே திரும்பிப் பார்த்தான்.

“பொண்ணை எங்க எல்லாருக்கும் ரொம்ப புடிச்சிருக்கு. ரொம்ப நல்லா பேசுறாள். நம்ம வீட்டுக்கேத்த பொண்ணு. அவங்க வீட்டு மனுஷங்களையும் எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நல்ல குடும்பமா தெரியுது. நீ ஒருவாட்டி அவள்கிட்ட தனியா பேசுனா நல்லா இருக்கும். அவளோட போட்டோவை உன் வாட்ஸப்புக்கு அனுப்பி இருக்கேன். டீடைல்ஸ் எல்லாம் கூட அனுப்பி இருக்கேன். ஒருவாட்டி மீட் பண்ணி பேசிட்டு முடிவு பண்ணு. எதையும் எடுத்தோம், கவிழ்த்தோம்னு வேணாம் சொல்லக்கூடாது. அலசி ஆராய்ந்துதான் சொல்லணும்” என்று கூறினார்.

என்ன நினைத்தானோ,

“உங்களுக்கெல்லாம் பிடிச்சிருந்தா ஓகே சொல்லிடுங்கப்பா. பெண்ணைப் பார்த்து பேச வேண்டிய அவசியம் இல்லை” என்று கூறிவிட்டு படிகளில் ஏறிவிட்டான்.

‘தான் ஏன் முதலில் வேண்டாம் என்று சொன்னேன்? இப்பொழுது ஏன் சரி என்று சொன்னேன்?’ என்று அவனுக்கே புரியவில்லை. ஆனால் மனது பாரமாக இருந்தது. தலை விண் விண் என்று வலித்தது.

“அர்ஜுன், சாப்பிடலையே?” அவளுடைய தாயார் ஓங்கிக் குரல் கொடுத்தார்.

“எனக்கு வேண்டாம். முடிஞ்சா ஒரு காபி மட்டும் கொடுங்க. தலை வலிக்குது” என்று கூறிவிட்டு அறையின் கதவை ஓங்கிச் சாத்தினான்.

அனைவரும் கக்கடைப் போட்டு சிரித்தனர்.




 

Author: Vishakini
Article Title: புனர்ஜென்ம பந்தமடி நீ எனக்கு - 27
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,290
384
83
Chennai
ஹே....அர்ஜுன் பொறுமை ரொம்ப முக்கியம் டா.....
அவ சொன்னதையும் சரியா கவனிக்கலை.....
இப்ப குமார் அனுப்பி இருக்கறத்தையும் பார்க்க மாட்டா இல்ல