புனர்ஜென்ம பந்தமடி நீ எனக்கு - 8

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,210
16,607
113
Germany
புனர்ஜென்மம் 8


அஷ்டலட்சுமி ஆட்டோ மொபைல் கம்பெனி நன்றாகவே சென்று கொண்டிருந்தது. அவன் தொட்டது துலங்கியது. தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. எதன் காரணமாக அவன் காதல் நிராகரிக்கப்பட்டதோ, அதில் இன்று அவன் வெற்றியடைந்து விட்டான். ஆனால் காதலை முற்றிலுமாகத் துறந்துவிட்டான்.

ராஜுவின் காதல் தோல்வியில் முடிந்த பிறகு, தன் அன்னையை நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அது மட்டுமே தன் வாழ்க்கையின் குறிக்கோள் என்று நினைத்தவன். அதற்காக தன்னை மேம்படுத்திக்கொண்டான்.

அவர்களின் பூர்வீக வீட்டில் தான் அவர்கள் வசித்துவந்தார்கள். அது தாத்தா வழி சொந்தமாக அவர்களுக்கு வந்தது. அதை விட்டுக்கொடுத்து செல்லக்கூடாது என்பதில் அவன் உறுதியாக இருந்தான். மற்றபடி தந்தையுடைய சொத்தை அவன் ஏற்கவே இல்லை.


வேண்டுமென்றால் மகளுக்கு கொடுங்கள், ஆனால் எனக்குத் தேவையில்லை என்று கூறிவிட்டான். அவனுக்கும், அவன் தாய்க்குமானதை அவனே சம்பாதிக்க நினைத்தான்.


தந்தையின் இன்னொரு வாழ்க்கை அதுதான் அவனின் இந்த முடிவிற்குத் காரணமாக இருந்தது. கல்லூரி படிக்கும் போது அவனுக்கு விழுந்த இரண்டு மிகப்பெரிய அடிகளில் இதுவும் ஒன்று.



தாய்க்கு முன்பே தெரியும் போல, அவன் தெரிந்து கொண்டு கேட்கும் போது, அழுது கரைந்தார். அதற்கு மேல் எதையும் செய்ய அவருக்கு தெரியவில்லை. அவருக்கும் சேர்த்து அந்த பொறுப்பையும் கையில் எடுத்துக்கொண்டவன்.


“இனிமே இந்த வீட்டுக்கு வராதீங்க. இது தாத்தா பேர்ல இருக்குற சொத்து. பேரனுக்கு தான் சேரனும். இதுல நானும் எங்க அம்மாவும் வாழ்றோம். நீங்க தயவு செஞ்சு உங்க இரண்டாவது வாழ்க்கையோட போயிடுங்க. இனிமே உங்களுக்கும் இந்த குடும்பத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று திடமாக கூறிவிட்டான். அன்றிலிருந்து இன்று வரை அதை கடைப்பிடித்து வருகிறான்.

மகனின் இந்த செயல் அவருக்கு அதிர்ச்சிதான். அவர் இன்னொரு வீட்டையே சம்பாதித்து அவர்களுக்கு கொடுத்திருந்தார். அதனால் அமைதியாக அங்கிருந்து சென்றுவிட்டார். அவருக்கென்று தனி கம்பெனியும் இருந்தது. அதில் ராஜுக்கு உரிமையும் இருந்தது. ஆனால் அவன் வேண்டாம் என்று எழுதி கையெழுத்து போட்டுக் கொடுத்துவிட்டான். இந்த ஆட்டோ மொபைல் கம்பெனி என்பது, கல்லூரி முடித்ததும் அவன் சிறிதாக உருவாக்கியது. முன்னேற வேண்டும் என்ற முனைப்போடு உருவாக்கியது.



மகன் இல்லாதபோது, அவர் மனைவியை வந்து பார்த்துவிட்டு செல்வார். அதற்குமேல் அவர்களுக்குள் எந்த தொடர்பும் இல்லை. குற்ற உணர்வு அவருக்கு இருந்ததா இல்லையா என்பதெல்லாம் தெரியாது. மனைவியின் நலனை மட்டும் அறிந்து கொண்டு மகனைப் பற்றி தெரிந்துகொண்டு சென்று விடுவார்.



இப்பொழுதும் மகனுக்கு திருமண ஏற்பாடுகள் நடப்பது தெரிந்து அஷ்டலட்சுமி தான் அந்த விஷயத்தை அவரிடம் பகிர்ந்துகொண்டார். ஆனால் அவர் இதில் ஈடுபடுவதில் மகன் விரும்பவில்லை என்பதையும் பொறுமையாக அவருக்கு எடுத்துரைத்தார்.



அவரைப் பொறுத்தவரையில் தன்னால் தான் திருமணமே வேண்டாம் என்று இருப்பவன். இப்பொழுது திருமணம் செய்து கொள்வதே மேல். இதற்கு மேல் தன் தலையீடு இருந்தால், அவன் அதையும் நிறுத்திவிடுவான் என்று ஒதுங்கி இருந்தார்.



ஆனால் அவ்வப்போது திருமண வேலைகள் ஏதாவது இருக்கிறதா என்று கேட்கத் தவற மாட்டார். எந்த அளவு வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது என்றும் கேட்டு தெரிந்து கொண்டார். மகன்தான் கோபத்தை இழுத்துப் பிடித்து நிறுத்தி இருந்தானே தவிர, மகள் தந்தையிடம் பேசிக் கொண்டுதான் இருந்தாள்.



ஆனால் இதெல்லாம் ராஜுக்கு தெரியாது. தெரிந்தால் மீண்டும் வீட்டில் ஒரு பிரளயம் உருவாகும். மனைவி கணவனிடம் பேசுவதிலோ, அல்லது மகள் தந்தையிடம் பேசுவதிலோ, அவன் தலையிட விரும்பவில்லை. ஆனால் அவன் விஷயத்தில் அவரை ஒதுக்கி நிறுத்தி வைத்து விட்டான். யாருக்கும் தெரியாமல் அவர் வீட்டிற்கு வந்து செல்வது அவனுக்கு தெரியும். ஆனால் கண்டும் காணாமல் இருந்துவிட்டான். தான் இருக்கும்போது அவர் வரவில்லை அதுவே அவனுக்கு போதுமானதாக இருந்தது.



அன்று அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது.



அலுவலக உதவியாளர் அவன் முன்பு வந்து நின்றார். அவன் என்னவென்று பார்த்தான்.



“உங்களைப் பார்ப்பதற்கு ஒருத்தர் வந்திருக்காரு சார். அவர் பேரு சுந்தரம்னு சொன்னாரு” என்றார்.



“அப்படியா?? என்ன விஷயமா வந்திருக்காரு?” என்று கேட்டான்.



என்னதான் பேசினாலும், பைலில் தான் கவனமாக இருந்தான் ராஜ். தூரத்தில் நின்றபடி சுந்தரமும் அதை கவனித்துக் கொண்டுதான் இருந்தார்.



“ஏதோ பர்சனல் விஷயம்னு சொன்னாரு சார்” என்று கூற.



அவன் புருவம் இடுங்க அவரை நிமிர்ந்து பார்த்தான். கண்ணாடி கதவுக்கு வெளியே நின்றிருந்தவரை அவனுக்கு அடையாளம் தெரியவில்லை.



பிறகு?? பெண் பார்க்க சென்றால் தானே தெரியும்??



“சரி உள்ள வர சொல்லுங்க” என்று கூறிவிட்டு மீண்டும் பைலை பார்க்க ஆரம்பித்து விட்டான். அவர் வந்து தயங்கி நின்றார்.



“உக்காருங்க சார்” என்று அவரைப் பார்த்து கூறியவன்.



பைலை மூடிவிட்டு நிமிர்ந்து அவரை பார்த்தான்..

“சொல்லுங்க சார். நான் உங்களுக்கு என்ன உதவி பண்ணனும்?? பர்சனல்னு சொல்லி இருக்கீங்க? என்னை உங்களுக்கு தெரியுமா?” என்று கேட்டான்.



அவர் எச்சிலை விழுங்கிக் கொண்டே, “நான் சுந்தரம்” என்றார்.



“ஓகே!” என்றவன் ஒற்றை வார்த்தையில் அவரை புரியாமல் பார்த்தான்.



“நான் ஸ்ரீயோட அப்பா” என்று அவர் மெல்ல தன்னை அறிமுகப்படுத்த விளைந்தார்.



“ஸ்ரீயா?? ஸ்ரீன்ற பெயர்ல எனக்கு யாரும் நண்பன் இல்லைங்களே??. ஆர் யூ சூயர்?? நீங்க என்னை தான் பார்க்க வந்தீங்களா?? என் பேரு ராஜ்குமார்” என்று கூறினான்.



“தம்பி உங்களுக்கு திருமணத்திற்கு பார்த்திருக்கிற ஸ்ரீயோட அப்பா நான். ஐ மீன் நீங்க கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணோட அப்பா” என்று அவர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட அந்த நொடி அதிர்ந்து விழித்தவன். அந்த அதிர்ச்சியில் எழுந்தே நின்று விட்டான்.



அவன் எழுந்து நிற்பதால் அவரும் எழுந்து நின்றார்.





“ச சாரி, சாரி சார், சாரி அங்கிள். நான் கவனிக்கல. ஐ மீண் எனக்கு சரியா உங்களைத் தெரியல. ஐ அம் ரியலி சாரி. வீட்டுக்கு வந்து இருந்தீங்கனா கண்டிப்பா குழப்பம் வந்திருக்காது. நீங்க இங்க அலுவலகத்திற்கு வந்ததுனால கொஞ்சம் கன்ஃபியூஷன் ஆயிட்டேன். இவ்வளவு தூரம் வந்து இருக்கீங்கனா, ஏதாவது முக்கியமான வேலையா வந்தீங்களா?? இல்ல என்னை பத்தி விசாரிக்க வந்தீங்களா??” தடுமாற்றத்தில் என்ன கேட்கிறோம் என்று புரியாமலேயே கேட்டு வைத்தான்.



திருமணம் முடிவாகி, இரண்டு வாரத்தில் திருமணம் நடக்க இருக்கிறது. பத்திரிகைகள் எல்லாம் கொடுத்தாகிவிட்டது. இதற்கு மேல்,ஒருவர் விசாரிப்பாரா??முன்பே அல்லவா விசாரித்திருப்பார்??’ கேட்டுவிட்ட பிறகு தான் அவன் கேள்வியின் தவறு புரிந்தது.



ஆனால் அதை திருப்பிக் மாற்றிக்கொள்ளவில்லை. அதற்குள் அவர் பதில் கூறினார்.



“இல்ல தம்பி உங்க சொந்தக்காரங்களுக்கு முறைப்படி பொண்ணு வீட்டு சார்பா நாங்களும் பத்திரிகை வைக்கணும். அதேபோல எங்க வீட்டு சைட்லையும் உங்க வீட்டு சார்பா பத்திரிகை வைக்கணும். அதை பத்தி அம்மா கிட்ட கேட்கும் போது, உங்களை கூட்டிட்டு போயி இன்விடேஷன் வைக்க சொன்னாங்க. தங்கச்சி உங்ககிட்ட சொல்லலையா தம்பி?” என்று தயக்கமாக பேசினார்??



அவன் கட்டை விரலை வைத்து நெற்றியை தடவியவன்.

“ஆமா அங்கிள், அம்மா ஏதோ சொன்னாங்க ஆனா எனக்கு தான் சரியா புரியலன்னு நினைக்கிறேன். அவங்கள கூட்டிட்டு போய் வைப்பீங்கன்னு யோசிச்சேன்” என்று தயக்கத்தோடு கூறியவன்.

“ப்ளீஸ் உட்காருங்க அங்கிள்” என்றான்.



“இல்ல தம்பி, அம்மாவை கூப்பிட்டா, என் மனைவியையும் கூட்டிட்டு போகணும். ஆனா அவளுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல. நாள் வேற கம்மியா இருக்கு. அதனாலதான் தங்கச்சி உங்கள கூட்டிட்டு போக சொன்னாங்க. வண்டி எடுத்துட்டு வந்து இருக்கேன் தம்பி. ஒரே வேலையா இன்னைக்கே ரெண்டு வீட்டு சொந்தங்களுக்கும் வச்சிடலாம். பெருசா ஒன்னும் இல்ல தம்பி. நாலஞ்சு சொந்தக்காரங்க வீடு தான் வைக்கணும். உங்க வீட்டு சார்பாவும் தங்கச்சி பெயர், அட்ரஸ் எல்லாம் கொடுத்திருக்காங்க. அவங்களுக்கு வச்சா போதும்னு தான் சொன்னாங்க. சோ மொத்தமா ஒரு எட்டு வீடு இருக்கும் அவ்வளவுதான். அதனாலதான் மதியானமே வந்தேன். நீங்க வந்தா எல்லாத்தையும் முடிச்சிடலாம்” என்று அவர் பேசும்போது தயக்கமாக தான் பேசினார்.



அது அவனுக்கும் புரிந்தது. அவரை அப்படி கேட்டது, அவனுக்கும் தர்ம சங்கடமாகவே இருந்தது. அவர் தங்கை என்று தன் அன்னையை தான் குறிப்பிடுகிறார் என்பது அவனுக்கு புரிந்தது.



“எக்ஸ்கியூஸ் மீ அங்கிள். நான் அம்மாகிட்ட மட்டும் ஒரு வார்த்தை கேட்டுடுறேன். தட் மீன்ஸ், நீங்க சொன்னதுக்கு சந்தேகப்பட்டு கேக்கல. இன்னும் வேற யாராவது அம்மா யோசிச்சி வச்சிருக்காங்களா?? என்ன பண்ணனும்? ஏதுன்னு?? ஐ மீண், அவங்க வீட்டுக்கு வெறும் கையா போகணுமா, இல்ல ஏதாவது பொருள் வாங்கிட்டு போகணுமா?? கொஞ்சம் இந்த டீடைல்ஸ ப்ராப்பரா கேட்டுடுறேன். எனக்கு இந்த ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் தெரியாது” என்று பணிவாகவே கூறினான்.



அவரும் சரி என்று தலையாட்ட, அவன் அப்பொழுதே தன் தாய்க்கு அழைப்பு விடுத்தான்.



“அம்மா, அங்கிள் வந்து இருக்காங்க” என்றான்.



அவரோ, “எந்த அங்கிள் டா” என்று கேட்டு வைத்தார்.



பற்களை கடிக்க போனவன். எதிரில் இருப்பவர் தன்னையே பார்ப்பது தெரிந்து தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான்.



‘பொண்ணோட பேர வேற மறந்துட்டேனே?? இப்ப இவர்கிட்ட கேட்டாலும் சரியா இருக்காது’ என்று மனதினுள் நினைத்தவன்.



“அதான்மா உங்க அண்ணன்” என்றான்.



“அண்ணன் அங்க வர்றதா சொல்லவே இல்லையேடா?” என்றார் வெள்ளந்தியாக.





“நீங்க எனக்கு பார்த்து வச்சிருக்க மருமகளோட அப்பா” புத்திசாலித்தனமாக பேசுவதாக எண்ணி பேசினான்.



“ஐயோ!! ஆமாண்டா, இன்னைக்கு அண்ணன் உன்னை பார்க்க வரேன்னு சொன்னாரு. ரெண்டு பேரும் சேர்ந்து போயி இன்விடேஷன் வச்சிட்டு வந்துருங்க. நான் சொல்ல மறந்துட்டேன். சாரி டா” என்றார்.





அவரைப் பார்த்து சிரித்தவன். “என்னம்மா?? இதெல்லாம் முதல்லயே சொல்றதில்லையா??” அடி குரலில் கேட்டான்.



“கல்யாண பிசில மறந்துட்டேன் டா. எங்க உன் மனசு மாறிட போகுதுன்னு ஒரே மாசத்துல கல்யாணத்தை வெச்சாச்சு. எல்லா வேலையும் நாமே பண்ண வேண்டியதா இருக்கு. எது ஞாபகம் இருக்கு?? எது செஞ்சோம், எதை மறந்தோம்னு எதுவுமே தெரியல. நேத்து போன் பண்ணி சொன்னாரு. நான்தான் உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன். மன்னிச்சிடு டா தயவுசெஞ்சு என் மேல இருக்க கோவத்தை அவர் மேல காட்டிடாத?. ஒரு எட்டு அவர் கூட போயிட்டு வந்துடுடா. அதுதான் நம்ம குடும்பத்துக்கு மரியாதை. அவங்களுக்கும் மரியாதை” என்றார் அஷ்டலட்சுமி.



“சரி, யார் வீட்டுக்கு எல்லாம் போகணும்னு அங்கிள் கிட்ட சொல்லி இருக்கீங்களா?? இன்னும் ஏதாவது பெயர் விடுபட்டிருக்கானு பாருங்க?” என்று அவன் பற்களுக்கிடையே பேசுவது எதிர் முனையில் இருந்தவருக்கும் தெரிந்தது.



எதிரில் இருந்தவருக்கும் தெரிந்தது. நமட்டுச் சிரிப்புடன் தான் அமர்ந்திருந்தார். ஆனால் தன்னிடம் மரியாதையாக பேசிய போதே அவருக்கு மனதில் நிம்மதி பரவியது. எதிர்பாராமல் நிகழும் போது எப்படி எதிர்வினை ஆற்றுவது என்று தெரியவில்லை பாவம். சிறுவயதுதானே? காலம் அதை எல்லாம் கற்றுக் கொடுத்து விடும். தனக்கு கற்றுக் கொடுத்தது போல’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு அமர்ந்திருந்தார்.



அலைபேசியை வைத்தவன். “ஒரு நிமிஷம் அங்கிள்” என்றவன். மேனேஜரை உள்ளே அழைத்தான். அடுத்தடுத்த வேலைகளை சொல்லிவிட்டு. உதவியாளரிடம் அவருக்கு டீயை கொண்டு வரச் சொல்லிவிட்டு, அங்கிருக்கும் அறையில் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்தான்.



அவன் திரும்பி வரும்போது டீயும் அவர் டேபிளில் காத்திருந்தது. “நீங்க சாப்பிடலையா தம்பி?” என்று கேட்டார்.



“இல்ல நான் உங்களுக்கு தான் வர வச்சேன். எல்லா நேரத்துலயும் சாப்பிட மாட்டேன். ஈவினிங் ஒன்னு தான்” என்று தன்னிலை விளக்கம் கொடுத்தான்.



“அப்ப வீட்டுக்கு போயி இன்விடேஷன் எடுத்துட்டு வந்துடலாமா அங்கிள்?? என்கிட்ட கையில இல்லை” என்றான் ராஜ்.



“அவசியம் இல்ல தம்பி. நம்ம வீட்டுக்கு பத்திரிக்கை வைக்க வரும்போது ஒரு பத்து இன்விடேஷனை அம்மா கொடுத்துட்டு தான் போனாங்க. உங்களுக்கு சேர்ந்து நானே எடுத்துட்டு வந்துட்டேன்” என்று கூறினார் சுந்தரம்.





அதன் பிறகு இருவரும் சேர்ந்து சென்றார்கள்.



அவனுடைய வாகனத்தை அலுவலகத்திலேயே விட்டு விட்டு. அவர்கள் சேர்ந்து காரில் தான் புறப்பட்டனர். கார் சாவியை அவனிடம் தான் கொடுத்தார் சுந்தரம்.



“இல்ல அங்கிள், உங்களோட கார் நீங்களே டிரைவ் பண்ணுங்க. அதுதான் கம்ஃபர்டபிலா இருக்கும்” என்றான் அவன்.



“இனிமேல் என்னுடையது உங்களுடையதும் தானே? பிரிச்சு பாக்க வேண்டிய அவசியம் இல்லையே தம்பி. என் பொண்ணையே உங்கள நம்பி கொடுக்கிறேன். நீங்க ஓட்டுங்க தம்பி. நான் ரொம்ப ஸ்லோவா ஓட்டுவேன். உங்களுக்கு அது சரி வராது” என்று அவன் கையை பிடித்து அதில் சாவியை திணித்து விட்டார்.



தன்னை அருகில் இருந்து பார்த்தது போலவே கணித்து கூறுகிறார் என்று மனதிற்குள் நினைத்தவன். கையில் இருந்த சாவியை அவரிடம் திருப்பிக் கொடுக்காமல், வாகனத்தை எடுத்தான்.



காரில் ஏறி அமரும்போதே, யார் யார் எங்கெங்கே இருக்கிறார்கள் என்று இருவரும் பொதுவாக ஒரு குறிப்புகளை எடுத்தனர்.



பிறகு முதலில் ராஜ்குமாரின் தாய் மாமன் வீட்டிற்கு சென்று வைத்தனர். அதன் பிறகு அவனுடைய அத்தை வீட்டிற்கு சென்றனர். அவனுக்கு அதில் விருப்பமில்லை, இருந்தாலும் மரியாதைக்காக சென்றான். தன் தாய் காக அவர் குரல் கொடுக்கவில்லை என்ற கோபம் அவனுக்கு.



பிறகு பெண்ணின் தாய்மாமா வீடு. அத்தை வீடு என்று ஒரு சில சொந்தங்கள் மட்டுமே. ஆனால் இடங்கள் தூரமாக இருந்ததனால், முடிப்பதற்குள் இரவு நெருங்கி விட்டிருந்தது.



“அவ்வளவுதானா அங்கிள்? எல்லாம் முடிஞ்சிருச்சா?” என்று கேட்டான்.



“அவ்வளவு தான். ஹோட்டல்ல லைட்டா டிபன் சாப்பிடலாமாப்பா?” என்று கேட்டார்.



சம்பிரதாயமாக தான் கேட்டார். வீட்டுக்கு கூப்பிட்டால் வரமாட்டான். அவர்கள் வீட்டுக்கு சென்றும் சாப்பிட முடியாது. அதனால் சிறு கைநனைப்பு வெளியில் எங்காவது பொதுப்படையாக வைத்துக் கொள்ளலாம் என்று கேட்டார்.



“இல்லைங்க அங்கிள். அம்மா வெயிட் பண்ணுவாங்க. நான் என்னோட ஆபீஸ்ல இறங்கிக்குறேன்.
அங்கிருந்து தனியா நீங்க போயிடுவீங்களா?? இல்ல நான் உங்களை வீட்டுல டிராப் பண்ணிட்டு, ஆட்டோ பிடிச்சு போயிடவா??” என்று கேட்டான்.



“இல்லப்பா நீங்க சொன்ன மாதிரியே இருக்கட்டும். அட்லீஸ்ட் காபியாவது சாப்பிடலாமா??” என்று கேட்டார்.



“என்ன அங்கிள் இப்படி கேக்குறீங்க? ஒவ்வொரு வீட்டிலேயும் குடிச்சது கழுத்து மட்டும் இருக்கு. வேண்டாம் ப்ளீஸ் இன்னொரு நாள் பாத்துக்கலாம்” என்றவன் புன்னகையோடு கூறினான்.



அந்த புன்னகை வசீகரிக்கும் விதமாகத்தான் இருந்தது. அத்தனை நேரத்தில் அப்போதுதான் முதல் முறையாக அவன் புன்னகையை பார்த்தார்.



“சரிப்பா” என்று கூறினார். பிறகு அவன் சொன்னது போல அவன் அலுவலகத்தில் இறங்கி கொண்டு இரு சக்கர வாகனத்தை எடுத்தவன்.



“தேங்க்ஸ் அங்கிள். அப்புறம் பாக்கலாம். வேற ஏதாவதுனா சொல்லுங்க” என்று மரியாதையாக கூறிவிட்டு அவரை கிளம்பச் சொல்லி, வழியனுப்பி வைத்துவிட்டு, அதன் பிறகு தான் அவன் கிளம்பினான்.
 
Last edited by a moderator:

Author: நிதனிபிரபு
Article Title: புனர்ஜென்ம பந்தமடி நீ எனக்கு - 8
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.