• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

புனர்ஜென்ம பந்தமடி நீ - 5

நிதனிபிரபு

Administrator
Staff member
புனர்ஜென்மம் 5


“உன் தம்பி ரூமுக்குள்ள ரொம்ப நேரமா இருக்கான். அங்க இருந்து புகை மூட்டமா வருது. இந்தப் பழக்கம் நல்லது இல்லன்னு எத்தனை வாட்டி சொன்னாலும் கேட்கல. கதவை தட்டினாலும் திறக்க மாட்டேங்குறான்; குரல் கொடுக்க மாட்டேங்குறான், எனக்கு ரொம்ப பயமா இருக்கு டி. கொஞ்சம் நீ வாயேன்” என்று அழைத்தார் லீலா.


ஆழ்ந்த பெருமூச்சை எடுத்து விட்டவள். சலித்துக் கொண்டே, தன் இரு சக்கர வாகனச் சாவியை எடுத்துக்கொண்டு, இரண்டு தெரு தள்ளியிருந்த தன் தாயின் வீட்டிற்கு புறப்பட்டாள் ஆராதனா.


“எங்க அவன்?” என்று கேட்டுக் கொண்டே நுழைந்தாள்.


லீலா மேல் நோக்கி ஒரு விரலை காட்டினார்.


வேகமாக படிகளில் தடதடவென்று ஏறும் போதே சிகரெட் நெடி அவள் நாசியை துளைத்தது.


கோபம் அளவுக்கு அதிகமாக வந்தது ஆராதனாவிற்கு. முதல் நாள் தான் படித்து படித்து அறிவுரை கூறி, அவனை சமாதானப்படுத்திவிட்டு சென்றாள். நேற்று தண்ணீர் வண்டியாக இருந்தான் என்றால், இன்று புகை வண்டியாக இருக்கிறான். கதவை ஓங்கித் தட்டினாள்.


கதவே உடைந்து விடும் அளவிற்கு தடதட என்ற சத்தத்தில், தன் வாய்க்கு முன்பாக விசிறிக்கொண்டே கதவை திறந்தான் அர்ஜுன்.


அவன் அறை முழுவதும் புகை மண்டலமாக, கிட்டத்தட்ட ஊட்டி போல காட்சி அளித்தது.


“வெறும் வாய் கிட்ட இருக்க புகையை ஊதிட்டா சரியாச்சா?? அதுதான் நீ புகை விட்ட கதை உன் ரூமை தாண்டி, வீட்டை தாண்டி, வாசலையும் தாண்டி, இரண்டு தெரு தாண்டி, என் வீடு வரைக்கும் அடிக்குதே?” என்று காட்டமாக கேட்டாள்.


அவன் முகத்தை தொங்க வைத்துக் கொண்டு நின்றான்.


“இப்படி பச்சைப் பிள்ளை மாதிரி மூஞ்ச வெச்சிட்டு இருக்காத? உன் முகத்தை பார்த்து உருகி போறது எல்லாம் அந்த காலம். நேத்துல இருந்து உன்னை பார்த்தா எனக்கு செம காண்டா இருக்கு. கொஞ்சமாச்சும் அம்மாவை பத்தி யோசிச்சியா?? பாவம் இல்லையா அவங்க?? என் பொண்ண பத்தி யோசிச்சியா?? அவள் தாய் மாமா இல்லாம எவ்வளவு கஷ்டப்படுவானு யோசிச்சியா?? என்னை, என்ன பத்தியாவது யோசிச்சிருக்கணுமில்லயா?? எனக்கு இருக்கிறது ஒரேயொரு தம்பி. நீ பாட்டுக்கு புகைய விட்டு சீக்கிரமா பரலோகம் போய் சேர்ந்துட்டேனா அப்புறம் நான் என்ன பண்றதாம்??” என்று இடுப்பில் கையை வைத்துக் கொண்டு கேட்டாள்.


அவன் தொங்கிய நடையுடன் அறையின் உள்ளே செல்ல. அவளும் உள்ளே சென்று ஜன்னல்களையெல்லாம் திறந்து விட்டு கதவையும் திறந்து வைத்துவிட்டு அவன் கையைப் பிடித்தபடி தரதர என்று இழுத்துச் சென்றவள். அவளுடைய அறைக்குள் புகுந்து கதவை தாழிட்டாள்.


அவன் சோர்வாக சென்று அவளுடைய கட்டிலில் அமர்ந்தான்.


“நான் நேத்து அவ்வளவு சொன்னேனேடா எல்லாத்துக்கும் பூம்பூம் மாடு மாதிரி நல்லா தலையாட்டுனீயே?? இன்னைக்கு திரும்பவும் அதையே பண்ணிட்டு வந்து நிக்கிறியேடா??” என்று அவன் முன்னால் மண்டியிட்டு பாவமாக கேட்டாள் ஆராதனா .


“நேத்து பண்ணத பண்ணல அக்கா. அவளுக்கு பிடிக்காத சிகரெட்டை இன்னைக்கு ஊதி தள்ளனும் போல ஒரு வெறி எழுந்துச்சு. அதுதான் ஆன்லைன்ல ஆர்டர் பண்ணி பிடிச்சுட்டிருக்கேன்” என்றான் அர்ஜுன்.


“அப்ப நேத்தே பிளான் போட்டிருக்க?” என்று இடுப்பில் கையை வைத்துக் கொண்டு முறைத்தபடி கேட்டாள்.


“ரொம்ப மனசு வலிக்குது அக்கா. எவ்வளவு ஈசியா ஏமாத்திட்டாள்?? அப்படி நினைக்க நினைக்க அவளை கொல்லணும் போல இருக்கு. அவள் வீட்டுக்கு போய் கத்தவும் கூடாதுன்னு சத்தியம் வாங்கிட்டீங்க. சரி குடிச்சு அவள் நினைவுகளை மறக்கலாம்னு பார்த்தா, அதுக்கும் சத்தியம் வாங்கிட்டீங்க. இப்படி எல்லாத்துக்கும் சத்தியம் வாங்கிட்டே போனா, நான் என்னதான் பண்றது?? அவளை மறக்கணும் அக்கா நான். அதுக்கு வழி தெரியாம தேடுறேன்?? என்னை ஏமாத்திட்டு நான் கஷ்டப்படும்போது அவள் மட்டும் சந்தோஷமா இருக்காள்?? கல்யாணம் பண்ணிட்டு நல்லா லக்சரியான லைஃபை வாழப்போறாள். அப்படி நினைக்கும்போதே, மனசு ஃபுல்லா தகதகன்னு எரியுது” அவன் பாவம் போல கூறினான்.


அவன் கன்னத்தை வருடிக் கொடுத்தாள் அந்த தமக்கை.


“உன்னோட கோபம் நியாயமானது தான். உன்னோட வருத்தத்தை என்னால புரிஞ்சுக்க முடியுது. ஆனா அவளைக் கொன்னுட்டு நீ ஜெயிலுக்கு போய் கம்பி எண்ணப் போறியா?? திரும்பி வரும்போது உனக்கு என்ன தியாகி பட்டமா கொடுக்க போறாங்க??. அவள் முன்னாடியே நல்லா வாழ்ந்து காட்டணும்னு உனக்கு தோணலையா?? பணத்துக்காக தானே உன்னை விட்டுட்டு போனானு சொல்ற?? அந்த பணத்தை சம்பாதிக்கணும் அவள் முன்னாடி தலை நிமிர்ந்து வாழ்ந்து காட்டணும்னு உனக்கு தோணலையா? அவள் கேள்விகளை அடுக்கிக் கொண்டிருந்தாள்.


“தோணுதுக்கா, நீ சொல்ற எல்லாமே தோணுது. ஆனா இதுல இருந்து மீள்றதுக்கு எனக்கு ஒரு வழியை சொல்லு?” என்று கேட்டான் அவன்.


“இங்கேயே இருந்தா இப்படிதாண்டா இருப்ப. அவள் ரொம்ப பிளான் பண்ணி தான் எக்ஸிக்யூட் பண்ணி இருக்காள்.. இங்கே இருந்தா சரிப்பட்டு வராது. நாம எங்கேயாவது டூர் போகலாமா??” என்று கண்கள் விரிய கேட்டாள் ஆராதனா.


“போனா மட்டும் மனசு மாறிடுமா?? இல்ல அவளோட நினைப்பு மறைஞ்சிடுமா??” அவன் கண்கள் கலங்கக் கேட்டான்.


“அப்படி நான் சொல்ல வரல. ஆனா கொஞ்சமே கொஞ்சம் மாற்றம் ஏற்படும் டா. ஒன்னு டூருக்கு போகலாம். இல்லனா மாமா ஊர்ல திருவிழானு சொன்னாங்க. மாமா ஊருக்கு போகலாம். அங்க போயி ரொம்ப வருஷம் ஆகுது. என்ன சொல்ற?” என்று ஆர்வமாக கேட்டாள் ஆராதனா.


“என்னால அவளை மறக்க முடியும்னு தோணல. ஆனா நீங்க எல்லாம் ஏதாவது பிளான் பண்றீங்கனா, எனக்கு ஆட்சேபணை இல்ல” என்று அவன் கீழ் உதட்டை மடித்து கடித்த படி பேசினான்.


“இதுதான் என் தம்பி. ரொம்ப க்யூட், செல்ல குட்டி. என் பொண்ணு மட்டும் கொஞ்சம் பெருசா இருந்தா, நான் கண்டிப்பா உனக்கே கட்டி வச்சிருப்பேன் டா” என்றாள் ஆராதனா.


“ச்சீ, என்ன பேசுற அக்கா?? அவள் என்னோட குழந்தை. விளையாட்டுக்கு கூட அப்படி பேசாத. தாய் மாமன்னா கல்யாணம் பண்ணிக்கணுமா என்ன?? தாயாவும் இருக்கலாம். நான் அவளுக்கு தாய் போல தான் இருப்பேன்” என்று பேசிய தன் தம்பியை பெருமை பொங்க பார்த்தாள் ஆராதனா.


“சரி நீ என்ன பண்ற? இப்ப என் கூட சேர்ந்து வீட்டுக்கு வா. மாமா வந்ததுக்கப்புறம் எல்லாரும் சேர்ந்து பிளான் போடலாம். ஓகேவா?” என்று கேட்டாள்.


அவன் சரி என்று தலையாட்டியதும். அவன் சாப்பிடாததை அறிந்து, அவனை குளிக்க வைத்து. அதன் பிறகு அவனோடு சேர்ந்து சாப்பிட்டு. அவனைத் தன் இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தாள். சற்று நேரத்தில் பள்ளி வாகனம் வரும் சத்தம் கேட்டது.


“ஹாய் மாமா” என்று குதித்தபடி அவனை பார்த்ததும் பேகை ஒரு பக்கம், ஷூவை ஒரு பக்கம் என்று கிடாசிவிட்டு தன் மாமனை நோக்கி ஓடிவந்தவள்.


அவன் தூக்கி கொண்டதும் எம்பி அவன் கன்னம் முழுவதும் எச்சில் பதித்தாள்.


“என் செல்ல டாலு குட்டி” அவனும் அவள் முகம் முழுவதும் முத்தம் பதித்தான்.


“என் ஆரு குட்டி” என்று அர்ஜுனை சுருக்கி செல்லமாக அழைத்தவள். மீண்டும் அவன் முகம் முழுவதும் முத்தம் கொடுத்தாள்.


“போதும் நீங்க ரெண்டு பேரும் கொஞ்சினது. நீ போய் ஃப்ரெஷாகிட்டு வா. நானும் உன் ஆரு மாமாவும் சேர்ந்து ஏதாவது உனக்கு ரெடி பண்றோம்” என்று தாய் கூறியதும் தட்டாமல் செய்ய அறைக்குச் சென்று விட்டாள் அந்த சின்ன வாண்டு.


தன் தமக்கையோடு சமையல் அறைக்குள் நுழைந்து. அங்கிருந்த மேடையின் மீது ஏறி அமர்ந்து கொண்டான் அர்ஜுன் .


“இந்தா, இந்த வெங்காயத்தையும் உருளைக்கிழங்கையும் வெட்டி குடு. நான் பக்கோடா பண்றேன்” என்று கூறியவள்.


மடமடவென்று செயலில் இறங்க ஆரம்பித்து விட்டாள். அவனும் தமக்கை சொன்னதை செய்தான்.


அழகான பிங்க் நிற ஃப்ராக்கை அணிந்து கொண்டு வந்தவள். தன் மாமனை தூக்கச் சொல்லி அவன் முதுகுக்கு பின்னால் நின்றபடி அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டாள் தானியதா.


“இதுக்கு மேல ஏறி நிக்காத தானீ அடிபடும்னு அம்மா எத்தனை வாட்டி சொல்றேன்?” என்று ஆராதனா அரற்றியதற்கு எல்லாம் சிறியவள் சட்டை செய்யாமல் இருந்தாள்.


“என் மாமு இருக்கும்போது எனக்கு அடியே படாது. என் செல்ல மாமு என்னை பத்திரமா பிடிச்சுட்டிருக்காரு. அப்புறம் நான் எதுக்கு கவலைப்படணும்?” என்று கேட்டு வைத்தாள் சிறுமி.


அந்த வார்த்தைக்கு ஆராதனா, தன் தம்பியை அர்த்தம் பொதிந்த பார்வையுடன் பார்க்க. அவன் கண்கள் கலங்கிவிட்டது. தன் கழுத்தில் மாலையாக இருந்த தன் மருமகளின் கையில் முத்தம் கொடுத்தான் அர்ஜுன்.


“கண்டிப்பா இந்த மாமா உனக்காகவாவது இருப்பேன் டாலு குட்டி” என்று கூறினான். தன் மீது மாறாத அன்பு பொழிந்து கொண்டிருக்கும் இந்த உறவுகளை விட்டு விட்டு, தன்னை சட்டை செய்யாத எவளோ ஒருத்திக்காக தன்னை அழித்துக் கொள்வதா?? அவன் மூளை கேள்வி கேட்டது.


“தனா, உன் தம்பி வந்து இருக்கிறானா என்ன? என்று கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தான் ராகேஷ்.


“அது எப்படி அக்கா, மாமா கரெக்டா கண்டு பிடிக்கிறாரு?” என்று தன் தமக்கையிடம் சிறு குரலில் கேட்டான் அர்ஜுன்.


அதற்கான பதிலை சமையலறை வாசலில் கைகளை கட்டிக்கொண்டு சாய்ந்து நின்றபடி கூறியது ராகேஷ் தான்.


“அதுவா, நேத்து ஃபுல்லா உன் அக்கா உன்னை பத்தியே புலம்பிட்டிருந்தாள். இன்னைக்கு வண்டி கரெக்டா நிக்க வேண்டிய இடத்துல நிக்காம, ஏடாகூடமா நிக்குது. பத்தாததற்கு செருப்பும் இங்க ஒன்னு அங்க ஒன்னுன்னு இருக்கு. மத்த நேரத்துல சரியா கழட்டி வைக்குற என் பொண்ணும் இன்னைக்கு செருப்பை அங்கே இங்கேன்னு கிடாசிட்டு வந்திருக்காள். அதுலயே தெரிஞ்சுச்சு, நீ தான் வந்து இருக்கேன்னு” என்றான் ராகேஷ்.


“ப்பா, ஜீனியஸ் மாமா. நீங்க எல்லாம் எங்கேயோ இருக்க வேண்டியவரு. எங்கேயோ என்ன எங்கேயோ?? (ISRO) இஸ்ரோல சயின்டிஸ்டா இருக்க வேண்டியவர எல்லாம் கூட்டிட்டு வந்து இங்க வச்சிருக்காங்க” அவனும் நக்கலாகவே கூறினான்.


“எகத்தாளம் தாண்டா உனக்கு. பாவம் மச்சான் ரொம்ப வருத்தத்துல இருக்கானே, அவனை சமாதானப்படுத்தலாமேன்னு பார்த்தா?? என்னைய நக்கல் அடிக்கிறியா?” என்று கேட்டு வைக்க.


அவன் மனம் சுருங்கியது. ஆராதனா இடுப்பில் கையும், கரண்டியுமாக அவனை நோக்கி திரும்பி, பார்வையால் கண்டித்தாள்.


அவன் நாக்கை கடித்துக் கொண்டு, “சாரி” என்று மனைவியிடம் ஒரு காதை பிடித்துக் கொண்டு கேட்டவன். நைசாக பேச்சை மாற்றினான்.


“சரி, அப்புறம் அக்காவும் தம்பியும் என்ன பிளான் பண்ணி இருக்கீங்க, அதை சொல்லுங்க?” என்று கேட்டான் ராகேஷ்.


“ஒரு பிளானும் இல்ல, இப்போதைக்கு பக்கோடா சாப்பிடுறது மட்டும்தான் பிளான். நீங்க வந்தா ஏதோ பேசலாம்னு அக்கா சொன்னாங்க” என்று முகத்தை தொங்க வைத்துக் கொண்டு கூறினான் அர்ஜுன்.


அவனை நோக்கி நடந்து வந்தவன். அவன் கன்னத்தைப் பிடித்து ஆட்டி தன்னை பார்க்க வைத்து.


“ஒரு நிஷா போனா இன்னொரு உஷா டா. லைஃபை ஈஸியா மூவ் ஆன் பண்ணிட்டு போயிட்டே இருக்கணும்” என்று கூறினான் ராகேஷ்.


அதற்கும் கரண்டியை தோளில் பிடித்தபடி, முறைத்துக் கொண்டு மனைவி திரும்ப.


நாக்கை மீண்டும் கடித்துக் கொண்டவன். “சும்மா மா, இவனை சமாதானப்படுத்துறதுக்காக ஏதோ சொல்லிட்டேன்” என்று ஜகா வாங்கினான்.


“அப்படியெல்லாம் நிஷா போனா உஷான்னு இருக்கிற அளவுக்கு நான் ஃவர்ஸ்ட் இல்ல மாமா. ரொம்ப சின்சியரா லவ் பண்ணேன். உங்கள மாதிரி, ஒரே பொண்ண காதலிச்சு ஒரே பொண்ண கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைச்சேன்” என்றான் அர்ஜுன் .


“நீ நினைச்சா மட்டும் போதுமாடா?? அவளும் நினைக்கணும் இல்லையா??” என்று ராகேஷ் கேட்ட நொடி. அர்ஜுனின் முகம் கசங்கி விட்டது.


‘எத்தனை ஆழமான அர்த்தம் பொதிந்த வார்த்தைகள்? ஆனால் தான் தோற்று விட்டு நிற்கிறேனே?’.


“போதும் இந்த பேச்சை நிறுத்துங்க. முதல்ல பக்கோடா சாப்பிடுங்க” என்று அங்கிருந்த பக்கோடாவை எடுத்து இரண்டு பேர் வாயிலும் இரண்டு கைகளால் திணித்துவிட்டாள் ஆராதனா.


“செவிக்கு உணவு இல்லாத பொழுது சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும்னு வள்ளுவர் சொல்லி இருக்காரு. ஆனா நாம வாய்க்கு வேலைய குறைச்சுட்டு, வயித்தை நிரப்பலாம் வாங்க. நமக்கு சோறு தான் முக்கியம்” என்றான் ராகேஷ்.


தன் மாமனின் பேச்சில் அனைத்தையும் மறந்து அவன் முகம் புன்னகையால் விகாசித்தது.
 
Top Bottom