• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

பூவிழி வாசம் - 14

Vishakini

Moderator
Staff member
பாகம் 14.
ஜன்னலோரமாக நின்ற முல்லைக்கொடியின் வாசம் அறைக்குள் நுழைந்து நாசியை நிறைத்தது. சற்றே விரிந்து கிடந்த ஜன்னல் வழியாக தோட்டத்தின் அழகு சிறிதே தென்பட்டது.
காலையின் புலர்வில், புரண்டு படுத்த இளஞ்செழியன், முதல் நாள், அண்ணனும் பூவிழியும் அடைந்த துயரத்தின் நினைவில் முகம் கசங்க பெருமூச்சொன்றை வெளிவிட்டான்.
~பூவிழி| என்று சொல்லவேண்டாம் என அண்ணா சொன்னதன் பொருள், இப்பொழுது புரிந்தது அவனுக்கு. வெளிநாடு செல்லமாட்டேன் என தமையன் அடம்பிடித்ததும் அன்னை ஆக்ரோசமாக கத்தி, ஆர்ப்பாட்டம் செய்து தங்களின் எதிர்காலத்தை முன்னிறுத்தி கட்டாயப்படுத்தி, அமெரிக்க சீட்டிழுப்பு விசாவில் தெரிவான மைத்துனி சந்தனாவுடன் அனுப்பி வைத்ததையும் விருப்பமே இல்லாமல் அண்ணா சென்றதையும் நினைத்துப் பார்த்தான்.
இதுவரை திருமணம் செய்யாமல் அண்ணனின் காதலுக்காக வாழும் பூவிழியின் அன்பை, அந்த உண்மைக்காதலை நினைத்தபோது, ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் அதே அளவிற்கு வேதனையாகவும் இருந்தது. தான் காதலித்தவனின் குடும்பத்தை தேடிக்கண்டுபிடித்து, அவர்களோடு வாழ்வதை தன் சந்தோசமாக எண்ணிக்கொள்ளும் மிகப்பரந்த காதல் மனம் எத்தனை பேருக்கு இருக்கிறது?
அண்ணி ...என்று உரிமையோடு அழைக்கவேண்டிய உறவை...பூவிழி என்று பெயர் சொல்லி அழைத்துக்கொண்டிருந்திருந்த, துரதிஸ்டத்தை நினைத்தபோது துயரம் பொங்கிக்கொண்டு வந்தது இளஞ்செழியனுக்கு.
இப்போதாவது பரவாயில்லை..பூவிழியம்மா என்று அழைக்கிறான்...
காலமும் அன்னையும் சேர்ந்து தன் அண்ணனின் வாழக்கையில் விளையாடிவிட்டதை நினைத்தபோது அவனால் வேதனைப்பட மட்டுமே முடிந்தது.
புரண்டு படுத்தவனின் நினைவில் முதல்நாள் இரவு சந்தித்த அந்த மௌன மங்கையின் திருமுகம் தோன்றி மறைந்தது.
அருகிலிருந்த தலையணையை எடுத்து நெஞ்சிலே போட்டுக்கொண்டான். அவளைக்கண்ட நேரம் முதல், அவனுக்குள் ஏதோ ஒரு குறுகுறுப்பு. அவளோடு கதைக்கவேண்டும் போல ஒரு துடிப்பு....அவள் பார்க்காமல் சென்றபோது மனதில் ஒரு சிறு வலி வந்துபோனது உண்மை. அவளால் நிராகரிக்கப்படுகிறோம் என்பது அச்சிறு பொழுதிலேயே அவனைப் பாடாய்படுத்திவிட்டதே.
தூரத்தில் கேட்ட அந்த இடைக்காலப்பாடல் அவனுக்குள் நினைவுகளை கிளறிவிட சட்டென்று எழுந்து அமர்ந்து கொண்டவன், ~அவள் போயிருப்பாளா| என நினைத்தபடி அவசரமாய் குளியலறைக்குள் புகுந்தான்.
வழமையாக பாட்டோடு ....இசைக்குளியல் குளிப்பவன், அன்று கடமைக்காக அள்ளி ஊற்றி குளித்துவிட்டு, வெளியே வந்தான். தேடித்தேடி தனக்கு அழகாக இருக்கும் எனத்தோன்றிய ஒரு ரீசேட்டையும் ஜீன்சையும் அணிந்துகொண்டு தலையை கையால் வாரியபடியே படியிறங்கினான்.
படிக்கட்டில் இறங்கிக்கொண்டிருந்தவன் ஏதோ ஒன்று தோன்ற சற்றே தலையைத் திருப்பி, ஜன்னல் வழியாக, தோட்டப்பக்கம் பார்த்தான், உள்ளம் குதியாட்டம் போட்டது, தனியே தோட்டத்தில் உலாத்திக்கொண்டிருந்தாள் அவனுடைய இதய நாயகி.
வாசலைக் கடக்கு முன்னர் சமையலறையை எட்டிப் பார்த்தான், பூவிழியும் பத்மினியம்மாவும் சமைப்பதில் முனைப்பாய் இருந்தனர். சத்தமில்லாமல் வாசலைக் கடக்கமுற்பட்டவனை தடுத்தது அந்தக்குரல்.
"டேய்.....இளா....இவ்வளவு நேரத்துக்கு நீ எழும்பவே மாட்டியே, என்னடா இண்டைக்கு அதிசயமா இருக்கு?" என்றார் தகப்பனார்.
"அ.....அப்பா.....அதொண்டும் இல்லை....சும்மாதான்.....உடம்பு அலுப்பா இருந்ததா...அதான்....." அவன் சமாளிக்க
~அப்பா வேற நேரம ;காலம் தெரியாமல்....| மனதிற்குள் சொல்லிக்கொண்டான்.
"உடம்பு அலுப்பெண்டா படுத்து நித்திரைதானேடா கொள்ளுவாங்கள், நீ என்னண்டா இண்டைக்கு....." அவர் சொல்ல,
"அப்பா...தோட்டத்தில கொஞ்சநேரம் உலாத்திப்போட்டு வரலாம் எண்டு போறன், நீங்கள் ரீயைக்குடியுங்கோ" என்றான்.
"அதெல்லாம் எனக்கு தெரியும், நீ போ....ஏதோ சொல்லுறாய்......உன்ர பார்வையே ஏதோ வித்தியாசமா கிடக்கு, சரி... சரி பாக்கிறன்" என்றார் கேலியாய்.
"ம்.....ம்...பாருங்கோ...பாருங்கோ" சொன்னபடி தோட்டத்தை நோக்கி நடந்தான்.
"என்னப்பா...காலையிலயே இளாவோட மல்லுக்கட்டிறீங்கள்?" கேட்டபடி வந்த பூவிழியைப் பார்த்து புன்னகைத்த பெரியவர்,
"சும்மாதானம்மா " என்றார்.
"அப்பா.....எனக்கு ஒரு விசயம் தோணுது, சொல்லவா?" என்றாள்.
"சொல்லனம்மா" என்றதும்,
"அப்பா...இளாவுக்கும் வயசு வந்திட்டுது தானே, ஏன் அவருக்கு ஒரு கலியாணம் பேசக்கூடாது," எனக்கேட்டாள்.
"ஓமம்மா...... நானும் யோசிச்சனான்தான், பெரியவனட்டையும் சொன்னனான், ஆனால்.....என்னவோ அவன்தான், கொஞ்ச நாள் போகட்டும் எண்டவன்" எனக்கூறினார்.
"ஓ.....அவர் சொன்னால் சரிதான் அப்பா," என்றாள் அவளும்.
"அவன், வண்ணமதிக்கு முடிச்சிட்டு இவனுக்கு பாக்கலாம் எண்டு நினைக்கிறான் போல, வண்ணமதிக்கு இது கடைசி வருசம்தானே, இப்ப பாக்கத் தொடங்கினால் பல்கலைக்கழக படிப்பு முடிய செய்யலாம் எண்டு சொன்னவன்" என்றார்.
"அதுவும் சரிதான் அப்பா....." என்றாள்.
"இளாவும் அதுதான் சரியெண்டுபோட்டான், நானும் ஒண்டும் சொல்லேல்ல, வண்ணமதிக்கு முதலிலை பாக்கத்தொடங்க வேணும், நான் அதை ஒருக்கா பாக்கிறன், அதை முடிச்சிட்டு இவனுக்கு பாப்பம்......" என்றவர்,
"அது சரி...நான் உன்னட்ட ஒரு விசயம் கேப்பன், பதிலைச் சொல்லம்மா" எனக்கேட்டார்.
"சொல்லுங்கோ அப்பா...." அவள் பார்க்க,
"உனக்கும் ஒரு மாப்பிளை பாக்கிறன், உனக்கு ஏற்றவனா, உனக்கு பிடிச்சிருந்தால் மேற்கொண்டு பேசலாமம்மா, நீ என்னம்மா சொல்லுறாய்?" என்றார்.
"அப்பா....." வலியோடு அழைத்தவள்,
"என்ன அப்பிடிப் பாக்கிறாய்?" என்ற அவரது கேள்விக்கு
"நான் உங்களுக்கு பாரமா இருக்கிறனா அப்பா..." எனக்கேட்டாள்.
"என்னம்மா இப்பிடி ஒரு வார்த்தை சொல்லிப்போட்டாய், இந்த வீட்டில, நீ வந்த பிறகுதான் ஒரு புது ஒளியே வந்தது, அதுக்காக உன்னை, எங்கட உதவிக்காக மட்டும் வைச்சிருக்கிறது சரியே, நீ என்னை எப்பிடி நினைக்கிறியோ தெரியேல்லை...ஆனா எனக்கு வண்ணமதி எப்பிடியோ நீயும் அப்பிடித்தான், அவளுக்குச் செய்யிற கடமையை உனக்கும் செய்யத்தானேவேணும், நான் உங்கள் ரெண்டுபேரையும் பிரிச்சு பாக்கேல்லையம்மா...." என்றார்.
தழுதழுத்த அவரது குரலில் தன் மீதே கோபம் கொண்டவளாய்,
"அப்பா, எனக்கு கலியாணம் எல்லாம் வேண்டாம், கடைசி வரைக்கும் இநத வீட்டில உங்களோடயே இருக்கவிட்டா அது போதும், என்ர வேலையையும் பாத்துக்கொண்டு உங்களையும் பாத்துக்கொண்டு இஞ்சயே இருந்திடுவன், அதுதான் எனக்கு விருப்பம், எனக்கு கலியாணம் எல்லாம் வேண்டாம்..."சொல்லிவிட்டு மெல்ல விசும்பியவளை வியப்பாய் பார்த்த பெரியவர், மனதில் ஒரு கணக்கு தோன்றியது.
"சரியம்மா .....அழாதை, நீ கேட்ட மாதிரியே செய்யலாம், ஆனால் என்ர காலத்துக்கு பிறகு???" அவர் இழுக்க,
"அப்பா...கலியாணம் எண்டுறது இரண்டு மனசு ஒத்து நடக்கிற சடங்கு, அதை கடமைக்காகச் செய்யேலாது, அப்பிடிச் செய்துபோட்டு பிறகு, குத்துது, குடையுது எண்டுறதிலை லாபமில்லை, உங்களுக்கு ஒண்டும் நடக்காது, பிறகும், இளாதானே இஞ்ச இருக்கபோறார், அவரின்ர மனைவி விரும்பினா அவையளோட அவையின்ர பிள்ளையளை பாத்துக்கொண்டு இருப்பன், இல்லாட்டி நான் விடுதியிலயே தங்கிறன் அப்பா" என்றாள்.
"அம்மாச்சி.....உன்ர மனசில என்ன இருக்கு எண்டு எனக்கு தெரியேல்ல, ஆனா ஒருவேளை நீ யாரையாவது காதலிச்சு அது நடக்காமல் போயிருந்தால், அதுக்காக உன்ர வாழ்க்கை முழுதையும் வீணாக்கிப்போடாதை, வாழுற காலத்திலதான் வாழவேணும் ....நான் சொல்லுறது உனக்கு புரியுதுதானே டா" என்றதும்,

"புரியுது அப்பா, ஆனால,; என்ர வாழ்க்கையில இனி கலியாணம் எண்ட பேச்சே இல்லை, அத மட்டும் கேக்காதேங்கோ....." என்றுவிட்டு அவரருகில் அமர்ந்துகொண்டாள்.
மாடிப்படிகளில் இறங்கிக்கொண்டிருந்த பொற்செழியனின் காதுகளில் அவர்கள் இருவரும் பேசியது அப்படியே கேட்டது, மனசில் வலியோடு படியிறங்கினான் அவன்.
~அவளுடைய இந்த முடிவிற்கு நான்தான் காரணம் அப்பா.....| என்று கதறவேண்டும் போல இருந்தது. இந்த உண்மை தெரிந்தால் அப்பா அவனை என்ன நினைப்பார், அவரால் அதை தாங்கமுடியுமா, சுரபி மீது இவ்வளவு அன்பு வைத்திருக்கிறாரே....இந்த வீட்டில் உள்ள எல்லோருக்குமே சுரபி என்றால் போதுமே, அப்படி இருக்க அவளுடைய இந்த வெறுமையான மனநிலைக்கு காரணம் இந்த வீட்டு வாரிசுதான் என்பதை தாங்கிக்கொள்வார்களா...| எண்ணங்களினூடே மௌனமாக வந்து தந்தையின் அருகில் அமர்ந்துகொண்டான்.
அவனைக்கண்டதும் அவசரமாய் கண்களைத் துடைத்துக்கொண்ட பூவிழி, "அப்பா..நான் உங்களுக்கு சாப்பாடு ஆயத்தப்படுத்துகிறேன்" என்றுவிட்டுச் சென்றுவிட, அவளை ஆழமாய் பார்த்தபடி மேசையில் இருந்த பேப்பரை எடுத்தான் பொற்செழியன்.
காலம் அவனுக்கு இப்படி ஒரு தண்டனையைக் கொடுத்துவிட்டதே, கடைசிவரை அவன் மனதில் இரணமாக சுரபி பற்றிய நினைவுகள் இருக்கவேபோகிறது, அவளைப் பற்றிய துயரைவிட அவளது வாழ்க்கை இப்படி வெறுமையாகவே இருக்கப்போகிறது என்கின்ற துயரமே அவனை அதிகம் வாட்டி வதைக்கப் போகிறது. அவனும் அவளுமாய் இனியதொரு வாழ்க்கை வாழலாம்தான், அனால் அதற்கு சுரபி சம்மதிப்பாளா என்பதே அவனுக்கு பெரியதொரு இடியாக இருந்தது. அவன் அப்படி கேட்கப்போக அவள், அவனைப்பற்றி என்ன நினைப்பாளோ,
'சீ...இவன் எப்படி இப்படிக்கேட்டான்' என ஒருகணம் தவறாக எண்ணிவிட்டாலும் அவனால் அதனைத் தாங்கிக்கொள்ளமுடியாதே, அதுவும் அவனுடைய சுரபி நினைத்துவிட்டால்...
அதைவிட அவளது மனதில் காலகாலத்திற்கும் அவன் இதே போல பூஜிக்கப்பட்டுக் கொண்டிருப்பதே வரம் அல்லவா, அவளால், தான், மலையளவு நேசிக்கப்படுகிறோம் என்ற அந்த சந்தோசத்திலேயே காலம் இனிமையாய் கரைந்துவிடுமே,
எண்ண எண்ண எண்ணற்ற உணர்வுகள் கலவையாய் அவனுக்குள் புரண்டோடியது.
மனதின் தடுமாற்றமோ என்னவோ, வாசிப்பதற்காய் எடுத்த பேப்பர் கையிலிருந்து தவறி கீழே விழுந்தது.
அதை எடுப்பதற்காக குனிந்தபோதுதான், தோட்டத்தில் நின்ற அந்த ஜோடிக்கிளிகள் அவன் பார்வையில் பட்டனர். எப்போதும் இல்லாமல், ஏன் இப்படி இளா தயங்கி நிற்கிறான்? அவனது பார்வையில் ஏன் இவ்வளவு தடுமாற்றம்?
அருகில் நிற்கும் அந்தப் பெண் யாராக இருக்கும்? வந்ததில் இருந்து அந்தப் பெண்ணைக் கண்டதேயில்லையே, யோசனைகள் மனதிற்குள் ஊடுருவினாலும்,
உற்றுப் பார்த்தான்,
கொஞ்சம் வெட்கம்...கொஞ்சம் தயக்கம் என, இளா நிற்கிற தோரணையே வித்தியாசமாக இருக்கிறதே...எதைப்பற்றியும் யோசனையில்லாமல் நின்ற இளம்பெண்ணையும் அவளருகே பேசத் தயங்கியபடி நின்ற இளஞ்செழியனையும் கண்டதும் மனதில் ஒரு விசயம் உறுதிப்பட்டது,
இப்படி யாரிடமும் பேசத்தயங்காத இளஞ்செழியன் இந்தப்பெண்ணிடம் பேசத் தயங்குகின்றான் என்றால் அவனது மனதில் வேறு ஏதோ எண்ணம் இருக்கிறதோ...இதுவரை அவன் அப்படி ஏதும் சொல்லவும் இல்லையே...
இப்படியெல்லாம் நினைத்ததும் அவனது மனதில் சட்டென்று தோன்றியது, ~ஒருவேளை இளாவின் மனதில் அப்படி ஏதும் இருந்தால், எப்படியும் அவனுடைய காதலையாவது சேர்த்துவைத்துவிடவேண்டும்|
 
Top Bottom