• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

பூவிழி வாசம் - 17

Vishakini

Moderator
Staff member
பாகம் 17.
அந்தப்பேருந்து, பல்கலை மாணவர்களாலும் விரிவுரையாளர்களாலும் நிறைந்து வழிந்தது. அது, அந்த தனியார் பல்கலைக்கழகத்திற்கென ஓடும் பிரத்தியேக பேருந்து. குறிப்பிட்ட தரிப்பிடத்தில் இருந்து புறப்படும் பேருந்து, காலையில் பல்கலைக்கழகத்தில் இறக்கிவிட்டு, மாலையில் அதேபோல ஏற்றிச்சென்று அவரவர் இறங்கவேண்டிய நிறுத்தத்தில் இறக்கிவிடும்.
வண்ணமதியும் அந்தப் பேருந்தில்தான் பல்கலைக்கழகம் செல்வாள். சின்ன அண்ணன் ஏற்றிச்சென்று விடுவதாகச் சொன்னபோதும், அவளும் பூவிழியும்தான் மறுத்துவிட்டனர். ஏனைய மாணவர்களுடன் கலந்து பழகவும் இனிமையான தருணங்களை அனுபவிக்கவும் பேருந்துப் பயணம் ஏற்றது என்பதால் இருவருமே பேருந்தில் செல்வதுதான் சரி என்று முடிவு செய்தனர்.
தந்தையும் சம்மதித்துவிட்டதால் இளஞ்செழியனும் ஏதும் சொல்லவில்லை.
பல்கலைக்கழக வளாகம் வந்ததும் தோழிகள் சூழ இறங்கிய வண்ணமதிக்கு, ஏதோ ஒன்று பின் முதுகில் உறுத்துவது போல தோன்றியது. யாரோ தன்னையே உற்றுக் கவனிப்பது போன்ற அந்த நிலை இதுவரை ஒருபோதும் அவளுக்கு ஏற்பட்டது இல்லையே., ஏன் இப்படி தோன்றுகிறது, மனதில் உதித்த கேள்வியோடு எதேச்சையாகத் திரும்பியவள், தனக்கு பின்னால் கம்பீரமாக நடந்துவந்து கொண்டிருந்தவனைக் கண்டதும் ஆச்சரியமானாள். நேற்றைய தினம் வீட்டில் விருந்துக்கு வந்த அவனேதான். நேற்று அவளுடைய வீட்டில் கண்டதால் தெரிந்தவள் எனப் பார்த்திருக்கிறான் போல என நினைத்தாள் வண்ணமதி.
இனிமையாய் ஒரு சின்னப் புன்னகையை உதிர்த்தவன், கைகளை ஆட்டி, அடையாளப்படுத்திக்கொண்டான். தோழிகள் பார்ப்பதற்குள் தலையை ஆட்டி மெலிதாகச் சிரித்துவிட்டு அவசரமாய் மறுபுறம் திரும்பிக்கொண்டாள் வண்ணமதி. அவனைத் திரும்பிப் பார்த்தபோது, பெயர் சொல்லமுடியாது ஒரு உணர்வு சட்டென அவளிடம் உண்டாகி மறைந்தது. அவனுடைய பார்வையில் ஏதோ ஒரு வித்தியாசம் தோன்றியது அவளுக்கு.
சற்று தூரம் நடந்தவளுக்கு திரும்பி மீண்டும் பார்க்கவேண்டும் போல ஒரு உந்துதல் ஏற்பட்டது.
பல்கலைக்கழக வாழ்க்கை வரை, இதுவரை யாரைப்பார்த்தும் அலட்டிக்கொள்ளாத அவளது மனம், இவனைப் பார்த்ததும் ஏன் குதியாட்டம் போடுகிறது?????
யாரிவன்??
விருந்து அன்று வீட்டிற்கு வந்திருந்தானே...அப்படியென்றால் பெரியண்ணாவிற்கு தெரிந்தவன் ஆயிற்றே, மனம் தன் போக்கில் பலதையும் எண்ணிக்கொண்டது.
பின்னுக்குத் திரும்பாமலே நடந்தவள், வாசலில் நுழையும் போதுதான் பார்த்தாள் அவனும், நுழைந்துகொண்டிருந்தான்.
~புதிதாக படிப்பதற்குச் சேர்ந்திருக்கிறான் போல|, என்றுதான் அவள் நினைத்துக்கொண்டாள்.
உள்ளே சென்று வகுப்பில் அமர்ந்துவிட்டபோதும், உள்ளம் அவனைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தது. எண்ணத்தில் அவன் நிறைந்திருந்ததாலோ என்னவோ, எங்கே பார்த்தாலும் அவனுடைய உருவமே தெரிவதுபோல ஒரு பிரமை கூட உண்டானது அவளுக்கு.
அவள் அந்த தனியார் கல்லூரியில் உயிரியல் பிரிவில் படித்துக்கொண்டிருந்தாள், அவனும் அவளுடைய துறையில் படித்தால் எப்படி இருக்கும்??
ஆசை கொண்ட மனம், எதை எதையோ நினைத்தது. அவள் நினைத்ததற்கு மாறாய் அவளோடு படிக்க அல்லாது, படிப்பு சொல்லிகொடுப்பதற்காய் வந்தான் அந்த அவன்.....வானகன்.
ஆமாம்.....அங்கு வருகை விரிவுரையாளராய் வந்திருந்தவன், வகுப்பிற்குள் நுழைந்ததுமே இவளை விழிகளால் தேடுவதை உணர்ந்து தோழிகளுக்கிடையில் மறைந்துகொண்டாள் அவள்.
அதற்கிடையில், அவள் படிக்கிற பிரிவு வரை அறிந்திருக்கிறானே...
சில நொடிகள்தான் அவனுடைய விழித்தேடல்......அதன் பின்னர் இயல்பிற்கு வந்தவனாய் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான்.
"வணக்கம்......நண்பர்களே....."
அவனது வார்த்தையில் ~ஓ.....|என்ற ஒலி அந்த வகுப்பை நிறைத்தது.
மாணவர்களை எப்படி அணுகவேண்டும் என்கிற வித்தையை நன்கு தெரிந்துவைத்திருந்தான்.
அந்த ஆரவாரம் அடங்கும் வரை பொறுமை காத்தவன்,
~என்னை நீங்கள் எல்லோருமே ஒரு நண்பனா பாக்கலாம், அதுக்காகத்தான் அப்பிடிச் சொன்னன், நட்பு ரீதியான கற்றல் முறை மிகவும் நல்லது மட்டுமில்லை மகிழ்ச்சியதனதும் கூட. நான் அப்பிடித்தான் நினைக்கிறன்... அதாவது, என்ன விளக்கம் வேணுமெண்டாலும் என்னட்ட கேட்டு படிக்கலாம், ஒரு தயக்கமும் தேவையில்லை,| என்றுவிட்டு,
"என்ர பெயர் வானகன்.......நிமலதாஸ் வானகன், என்னுடைய படிப்பை முடிச்சு ரெண்டு வருசமாச்சு, இப்பவும் படிச்சுக்கொண்டுதான் இருக்கிறன், அதாவது உயிரியல் சம்பந்தமான சில ஆராய்ச்சிகளைச் செய்துகொண்டிருக்கிறன், விரைவில என்னுடைய கண்டுபிடிப்புகள் வெளிநாட்டு கல்லூரிகளில ஏற்றுக்கொள்ளப்படும், அதுக்கான முயற்சிகளில தீவிரமா செயற்பட்டுக்கொண்டிருக்கிறன். வாழ்க்கை ஒரு தடவைதான் கிடைக்கும், அந்த வாழ்க்கையில எங்களால முடிஞ்ச ஏதோ ஒண்டை நாங்கள் செய்து முடிச்சிட்டுத்தான் போகவேணும்......அதாவது இந்த உலகத்தில எங்கட பெயரை பதிச்சிட்டு போகவேணும் எண்டு சொல்லுறன், என்னடா இவன் வந்த உடன ஆரம்பிச்சிட்டான் எண்டு நினைக்கிறீங்களோ தெரியேல்ல, அப்பிடி இல்லை, எனக்கு தெரிஞ்சதை உங்களுக்கும் சொல்லியிருக்கிறன்.....அவ்வளவுதான்," என்றவன்,
"சரி......இண்டைக்கு நாங்கள் ஒண்டும் படிக்கப்போறதில்லை, அறிமுகம், மட்டும்தான், என்னைப்பற்றி நான் சொல்லியாச்சு, இனி நீங்கள் ஒவ்வொருத்தரா சொல்லுங்கோ, ஆனா யாரும் எழுந்து நிக்க வேண்டாம், இருந்தபடியே சொன்னால்போதும்" என்றான்.
ஒவ்வொருத்தராக தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டனர். தோழிகளுக்கிடையே மறைந்துகொண்ட வண்ணமதி, ஒரு தோழியின் மறைவில் இருந்தபடியே ~வண்ணமதி பரமானந்தம்...| என்றாள்,
குரலி அவளை அடையாளம் கண்டுகொண்டவன், நாக்கை வளைத்தபடி, சிரித்து "சரியா கேக்கவேயில்லை, தயவுசெய்து நீங்கள் எழும்பி நிண்டு சொல்லுங்களேன்....." என்றதும், கோபத்தில் கொதித்தது வண்ணமதியின் மனம்.....
"எழுந்திருடி..."பக்கத்தில் இருந்த தோழி, கைபிடித்து எழுப்பிவிட, எள்ளும் கொள்ளும் முகத்தில் வெடிக்க எழுந்து நின்றாள் அவள்.
'அவள் ஒளிந்துகொண்டதைக்கூட கண்டுவிட்டானோ...அதனால்தான் அவளைமட்டும் எழுந்துநிற்கச் சொல்லுகிறானோ......'
முகத்தை சாதாரணமாக வைத்துக்கொண்டாலும் அவனுடைய கண்கள் சிரிப்பதை அவள் காணாமல் இல்லை, 'என்ன கொழுப்பு......'
அவள் முணுமுணுத்தது புரிந்தது போல
'என்ன?' என்றான் கண்களால்......அவளுக்கு மட்டுமே புரியும்படியாக.....
தலையை மட்டும் அங்கும் இங்குமாய் ஆட்டியவள்,
"வண்ணமதி பரமானந்தம்" ......என்றாள்.
"ஓ......வண்ணமதியா......நல்ல பெயர்....." என்றவன், 'என்ன படிக்க பிடிக்கும், என்ன சாதிக்க நினைக்கிறீங்கள்,' என ஒவ்வொன்றாய் கேட்டான்,
அவளும் கோபத்தோடு பதில் சொல்லிக்கொண்டிருந்தாள். அவளுடைய கோபம் அவனுக்கு சிரிப்பாக இருந்தது போலும்.....வேண்டுமென்றே அவளைச் சீண்டி விளையாடிக்கொண்டிருந்தான்.
மற்றவர்கள் பார்க்கிறார்களே என்ற எண்ணம் அவளுக்கு வெட்கத்தையும் அவன் மீதான கோபத்தையும் ஒன்றாக கொடுத்தது. சற்று நேரம் அவளை பேசவிட்டு வேடிக்கை பார்த்தவன், பின்னர் அமருமாறு கையால் iகை செய்தான். அவளும் சட்டென்று அமர்ந்துகொண்டாள்.
அதன் பின்னர், தான் சென்று வந்த வெளிநாட்டு பயணங்கள், அங்கே கண்ட விடயங்கள், கற்றுக்கொண்ட பாடங்கள் என பலதையும் பற்றி அவர்களுடன் கதைத்துக்கொண்டிருந்துவிட்டு இரண்டு மணிநேரத்தின் பின்னர் போக ஆயத்தமானவன், அவசரமாய் திரும்பி வண்ணமதியை ஒரு பார்வை பார்த்துவைக்க, எதேச்சையாய் அப்போது பார்த்து அவளும் அவனையே பார்த்துவிட்டாள்.
சொல்லவா வேண்டும், அவனுக்குள் குதூகலம் தாண்டவம் ஆடியது. இவளுக்கோ, என்ன செய்வதெனப் புரியாத நிலை, இனிமேல் ஆத்திர அவசரத்துக்கு கூட அவனைப் பார்த்து தொலைத்துவிடக்கூடாதென எண்ணிக்கொண்டாள்.
அவளுடைய எண்ணம் புரிந்ததுபோல மீண்டும் நாக்கை வளைத்து சிரித்துவிட்டு நகர்ந்தான் அவன்.
இதுவரை எத்தனையோ ஆண்களை கடந்து வந்தாயிற்று, அண்ணன்களை தவிர வேறு யாரும் அவளிடம் நெருங்கி பழகியதில்லையே, அதுவும் அவள் அப்படி நெருங்க யாரையும் விட்டதும் இல்லை. வேற்று ஆண்கள் கூட இப்படி நடந்துகொண்டதில்லையே.....இவன் மட்டும் ஏன்......அதுவும் அவனைப் பார்க்கும் போது மட்டும் உள்ளத்தில் அப்படி ஒரு சலனம், இதமான தென்றல் வீசுவது போல சுகமாகவல்லவா இருக்கிறது, பார்த்தால் சங்கடமாகவும் பார்க்காவிட்டால் சிறு வலியோடும்........
மனமந்தி தாவித்தாவிக் குதித்தது. தனக்குள் புகுந்து, தன்னையே அவன் ஆட்டுவிப்பது போல, தோன்றியது அவளுக்கு.
~நிச்சயமாக பூவிழியம்மாவிடம் சொல்லவேண்டும்....அப்ப தான் நிம்மதி|, நினைத்தவள், திடுக்கிட்டாள், அவன் அண்ணாவின் நண்பருடைய தம்பி, பூவிழியம்மாவிடம் சொல்ல, அது அண்ணாவின் மூலம் அவனது அண்ணனுக்குச் சென்றுவிட்டால்......
அது அவனுக்கு ஏதாவது பிரச்சனையாகிவிட்டால்....
ஐயோ...வேறு வினையே வேண்டாம், பாவம்...அப்படி ஒரு தர்மசங்கடமான நிலையை அவனுக்கு கொடுக்கவேண்டாம்......மனதில் நினைத்தபடி நடக்கத் தொடங்கினாள்.
தன்னை மறந்து அவள் நடந்துசெல்லவும் ~வண்ணமதி.....வண்ணமதி...| என அழைத்தபடி ஓடிவந்தாள் தேன்மொழி. வண்ணமதியின் தோழி.
"ஏய்...என்னடி .....நான் கூப்பிட கூப்பிட விளங்காத மாதிரியே போறாய்......அவ்வளவு கொழுப்பாடி உனக்கு" என்று சண்டைக்கு வந்தாள்.
வேறு நேரமாக இருந்தால் இவளும் மல்லுக்கட்டியிருப்பாள்.....ஆனால் அப்போது அவளுக்கு இருந்த மனநிலையில் விளையாட்டுக்குகூட யாருடனும் சண்டைபோடத் தோன்றவில்லை. மௌனமாகவே நடந்தாள்.
தோழியை விசித்திரமாய் பார்த்த தேன்மொழி, "என்னாடி.....புயல் மாதிரி சீறுவாய் என்று பார்த்தால், பூ மாதிரி அமைதியா போறாய்? "என்றாள் வியப்பாய்.
~ஒண்டுமே இல்லை...பேசாமல் வாறியா?| என்றுவிட்டு, வா..ஏதாவது சாப்பிடுவம் என்றபடி தோழியையும் அழைத்துக்கொண்டு சிற்றுண்டிச்சாலைக்குச் செல்ல,
குரங்கை நினைக்காமல் மருந்து குடித்த கதையாக, அவளுடைய வாத்தியும் அங்கேயே இருப்பதைக் கண்டதும், உள்ளே போவதா, வேண்டாமா என்ற நிலையில் வெளியேயே நின்றாள்.
நிமிர்ந்து பார்த்து இவர்களைக் கண்ட வானகன், வண்ணமதியின் சங்கடம் புரிந்தவனாக, தானே, அலைபேசியை எடுத்து காதில் வைத்தபடி, யாருடனோ உரையாடுவது போன்ற பாவனையில் வெளியே சென்றுவிட்டான்.
அதன் பிறகு தான், வண்ணமதி தோழியோடு உள்ளே சென்றாள்.
அவனது மன எண்ணங்களை அவளால் புரிந்துகொள்ளவே முடியவில்லை, பார்க்காத போது பார்க்கிறார், பார்க்கிற போது பார்ப்பதில்லை...
~நினைவுகளில் இந்த வாத்தி அடிக்கடி வரக்காரணம் என்ன....|தன்னைத்தானே கேட்டபடி, கப்பில் இருந்த தேநீரை உறிஞ்சினாள்.
 
Top Bottom