• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

பூவிழி வாசம் - 2

Vishakini

Moderator
Staff member
2.
வெள்ளைப்பஞ்சு கொட்டிக்கிடந்தது போன்ற அழகான ஒரு பனி மலை அது, அவன் மட்டும் அதில் ஆடிக்கொண்டிருக்கிறான், பனிச்சாரலில் தனிமை, ஏக்கமாய் பார்க்கிறது அவன் விழிகள், யாருமற்ற அந்த இடம் பீதியைக் கொடுத்தாலும் பனிமலையின் அழகோ, அவனை வசீகரித்து வைத்திருந்தது. நிற்கவும் முடியாமல், போகவும் விரும்பாமல் அவன் தவித்தபடி நிற்க, தூரத்தில் அழகு ஓவியமாய் வருகிறாள் அந்தப் பெண்.
ஓடிச்சென்று அவளது கரம் பற்றுகிறான், மலைச்சாரலில் அவளோடு நடனம் ஆடுகிறான், அவள் விழுந்துவிடப் பார்க்கிறாள், அவன் அவள் கரத்தினை இறுகப் பற்றிக் கொள்கிறான், இருவரும் அதிக நேரமாய் பனிமலையில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவன் போகவேண்டும் என்பது போல எழுந்துகொள்ள முயற்சிக்கிறான், அவளோ, 'போகாதே,' என யாசிப்பது போல அவனையே பார்க்கிறாள், 'அம்மா தேடுவாரே,' என்ற எண்ணம் வரவும், அவளது கையை உதறிவிட்டு ஓடிவந்துவிடுகிறான். அவள், அவனைக் கூப்பிட்டபடியே மயங்கிவிடுகிறாள்,
"ஏய்........என்னாச்சு......." பதறிப்போய் கத்தியபடி அவளிடம் ஓடுகிறான்.........ஓடுகிறான் .......ஓடுகிறான்........
"டேய்....வானு...என்னடா...என்ன...ஏண்டா........"அம்மாதான் உலுக்கி எழுப்பிக்கொண்டிருந்தார்.
திடுக்கிட்டு எழுந்தவன், "அம்மா.......அம்மா....அது கனவு...."இழுத்தான்.
அப்போதுதான் என்னவோ ஏதோ என்று, உள்ளே வந்த தங்கை, "குரங்கு....குரங்கு......கனவு கண்டு இப்பிடியா பேய் மாதிரி கத்துவாங்க, அதுவும் விடிஞ்சு வர்ற நேரத்தில...... நித்திரையைக் கெடுக்கிறதுக்கெண்டே கத்துவாய் போல" என்றாள்.
"சும்மா இருடி, அவனே ஏதோ கெட்ட கனவு கண்டு கத்துறான், நீ என்னடா எண்டா,..."
"இரவிரவா, நித்திரை முழிச்சு, பேய் படம் பாத்தா, இப்பிடித்தான் கண்ட கனவும் வரத்தான் செய்யும், முதல்ல அதை நிப்பாட்டுங்கோ அவனுக்கு"
"ம்ம் ...இந்தா தண்ணியைக் குடி, அதுவும் சரிதான், இனிமேல் இரவிரவா, படம் பார், லப்பையே உடைச்சுப் போடுறன், என்றபடி எழுந்து நடந்த தாயாரைப் பார்த்தபடி, இருந்தான்.
"என்னடா?" திரும்பிய தாயிடம்,
"கனவில கூட என்னை விடமாட்டீங்க போல," என்றான் முகத்தை கோபமாய் வைத்துக்கொண்டு.
"என்னடா?" உரத்துக் கேட்ட தாயிடம், "ஒ..ஒண்டும் இல்லை, போய் ரீயைப்போட்டு கொண்டுவாங்கோ" என்றுவிட்டு புரண்டு படுத்தான், அவன் எவ்வளவுதான் முயற்சித்தாலும் அந்தக் கனவு திரும்ப வரவேமாட்டேன் என அடம்பிடித்தது.
காலையில் விளையாடப் போவதற்காய் எழுந்த வானகன் "அம்மா.....என், ஸ்போட்ஸ் சூ எங்க,?" உரக்க கத்தினான்.
"என்னடா நீ, ஏழு கழுதை வயசாகுது, இன்னும் உனக்கு இதெல்லாம் நான் தான் எடுத்து தரணுமா?" என்றார்.
"அம்மா, சத்தியமா எனக்கு ஒரு பெரிய டவுட்," என்றான் வானகன்.
"அடடா...என்ர மகனுக்கு டவுட் எல்லாம் வருது, என்னடா அது, ?" என்ற தாயாரிடம்,
"இந்த...ஏழு கழுதை வயசெண்டா, எத்தினை வயசு?" என்றான்.
"அதானே பாத்தன், உனக்கு உருப்படியா ஏதாவது டவுட் வந்திட்டாலும்........" நொடித்த தாயாரிடம்,
"பாருங்கம்மா, கதையை மாத்தக்கூடாது, ஏழுகழுதை வயசெண்டா எத்தினை வயசு? " அதிலேயே நின்றான் அவன்.
"அது....பேச்சு வழக்கில எல்லாரும் சொல்லுறது அதைப் போய்,....." அம்மா இழுக்க,
"அண்ணா....எனக்குத் தெரியும்," ஓடிவந்தாள் வழுதி
சொல்லு.....சொல்லு...எத்தனை வயசு? அவன் பரபரக்க,
"கழுதைக்கு எத்தினை பல் இருக்கோ, அதை ஏழால பெருக்கிப் பாத்தா இந்த மற்றர் தெரிஞ்சிடும்". என்றபடி சிரித்தாள்.
"கழுதை....கழுதைக்கு எத்தினை வயசெண்டு சொல்லன்?" இது அவன்.
"இது நல்லா இருக்கே, எல்லாத்தையும் நாங்களே சொன்னா,......நீங்களே போய் கண்டுபிடியுங்கோ......" என்றாள் தங்கை.
"அது சரி, உனக்கு தெரியாது எண்டதுக்கு, இது ஒரு சாட்டு? போ...போ......" என்று கேலியாய் சிரித்தவன்,
உனக்கு எத்தினை பல் எண்டு பாத்தா கழுதையின்ர பல் எண்ணிக்கை தெரிஞ்சிடப்போது" என்றான்.
வெவ்வ்வெவ்வே..." பழித்துக் காட்டியபடி ஓடியவளைத் துரத்திக் கொண்டே ஓடினான் வானகன்.
........................................................................................................................
பரந்து விரிந்து நின்றது அந்த வேம்பு மரம்.
வேப்பம் பூவின் வாசனை எங்கும் பரவிக்கிடந்தது. அந்த வாசனையை ஆழமாக உள்ளிழுத்தபடி நிலத்தை நிறைத்துக்கிடந்த வெள்ளைநிற வேப்பம் பூக்களை கைகளால் வழித்து கூடையில் நிரப்பிக்கொண்டிருந்தாள் இசைநிலா. அது வேம்பின் பூ கொட்டுகிற காலம் என்பதால் அப்போதும் அவளுக்கு மேலேயும் பூக்கள் கொட்டிக்கொண்டிருந்தன. மங்கையின் மீது பூமழை பொழிவது போல இருந்தது அந்தக்காட்சி.
பனை நாரில் பின்னப்பட்ட அந்தக்கூடை, நீண்டு, பழுப்பும் பச்சையுமான நிறத்தில் அழகாகவும் நேர்த்தியாகவும் பின்னப்பட்டிருந்தது.
தோட்டத்தில், கத்தரி, வெண்டி, மிளகாய், கத்தரி போன்ற செடிகளுக்கு இயற்கை மருந்து தயாரிப்பதற்காகவே அந்தப் பூக்களை அள்ளிக் குவித்துக்கொண்டிருந்தாள் அவள்.
காற்று கலைத்துப்போட்ட இலைகளின் சலசலப்பு, சற்றே ஆடி மகிழ்ந்துகொண்டிருந்த இலைகளின் ஒய்யாரம், அப்பப்போ அவள் மீது விழுந்த பூக்களின் மெல்லிய ரீங்காரம் இவற்றோடு ஏதோ ஒரு மொழியில் பேசிக்கொண்டிருந்தாள்.
அவளிலிருந்து சற்றுத்தள்ளி ஆட்டுப்பட்டி இருந்தது. இரண்டு பெரிய கிடாய் ஆடுகளும் இரண்டு மறி ஆடுகளும் நின்றன. அவற்றில் ஒரு மறி ஆடு சில நாட்களுக்கு முன்னர்தான் குட்டி ஈன்றிருந்தது.
வெள்ளையும் மண்ணிறமுமாகநின்ற ஆட்டுக்குட்டி, துள்ளிக்கொண்டு அவளருகே வந்து நின்றதும் சட்டென்று எழுந்து தாவி அணைத்துத் தூக்கினாள்.
அவளது கைமொழியும் உடல்சூடும் புரிந்ததாலேயோ என்னவோ அவளது கைளுக்குள் குழந்தைபோல அடங்கியது அந்த ஆட்டுக்குட்டி.
அதன் மேனியை தன் விரல்களால் வருடியவள், தன்னுடைய கன்னத்தோடு வைத்து அழகு பார்த்தாள். அவளுடைய செல்ல மிழற்றல்களில் தானும் சேர்ந்துகொண்டு பேசாமல் கிடந்த ஆட்டுக்குட்டியை, தாயின் அருகில் கொண்டு சென்றுவிட்டுவிட்டு வந்து, மீண்டும் வேப்பம்பூவை அள்ளியவளுக்கு மனதில் ஏதோ யோசனை ஓடியது.
அப்போதான் முன்பள்ளி முடிந்து வந்த கடைசித்தம்பி, ஓடிவந்து அவளது முதுகில் சாய்ந்துகொள்கிறான். ஒட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட விசேட தேவையுடைய பிள்ளை அவன். ஆனால் திறமைசாலி.
கைகளை வளைத்து அவனை முன்பக்கமாக இழுக்க முனைந்தாள். அவனோ அடம்பிடித்தபடி அவளின் முதுகில் சாய்ந்தபடி ஊஞ்சலாட, புறங்கையால் தம்பியின் தலையைத் தடவி, அவனை அப்படியே விட்டுவிட்டு தன்பாட்டில் இவள் தன்னுடைய வேலையில் கவனமானாள்.
கடைசித்தம்பியை பெற்றதுதான,; தாயே தவிர வளர்த்தது இசைநிலாதான். அவளைவிட பதினைந்து ஆண்டுகளுக்குப்பிறகு பிறந்தவன் என்பதாலும் தாயார் எப்போதும் தோட்டத்திற்குள் வேலையாகவே நிற்பதாலும் கடைசித்தம்பியை வளர்க்கிற பொறுப்பை தாயாக ஏற்றுக்கொண்டவள் அவள்.
தாயின் மடியில் இருந்ததைவிட இவளது இடுப்பில் அவன் இருந்த நேரங்கள் தான் அதிகம்.
அந்த ஏழை வீட்டின் ராஜகுமாரி அவளென்றால் தம்பியர் இருவரும் அவளுடைய வீட்டு ராஜகுமாரர்கள்தான்.
தூரத்தில் வேலை செய்தபடியே அவளையே பார்த்துக்கொண்டிருந்த பெற்றவர்களின் முகங்களில் ஒரு பெருமித புன்னகை தோன்றியது.
வாய் பேச வராதே தவிர, அவர்களுடைய செல்ல மகளான இசைநிலா, ஒரு தேவதைக்கு இணையானவள், படிப்பில் படு கெட்டிக்காரி, எந்த வேலையையும் நுணுக்கமாகவும் அழகாகவும் செய்வதில் அவளை மிஞ்சிவிட முடியாது. அன்பு காட்டுவதிலும் அவள் அப்படித்தான். ஒருநேரம் கூட சோர்ந்து இருந்துவிடாது, எப்போதும் சுறுசுறுப்பாக ஓடிக்கொண்டே இருக்கும் அவள் தான், அந்த வீட்டின் நம்பிக்கை.
படிப்பை முடித்துவிட்டு, வேலைக்காக விண்ணப்பித்து காத்திருக்கும் அவளை நம்பித்தான் அந்தக்குடும்பம் இருக்கிறது. முன்னரைப்போல இப்போது தோட்டத்தில் பெரியளவில் வருமானம் கிடையாது, ஏதோ கடனில்லாமல் சாப்பிடுகிற அளவில்தான் இருந்தது அந்த வீட்டின் நிலைமை. அப்பப்போ அவளுடைய அப்பாவின் சகோதரியான அத்தை பத்மினிதான் அவர்களின் குடும்பத்துக்கும் பணம் தந்து உதவிக்கொண்டிருந்தார். பொய்க்காலோடு வாழும் தந்தையால் பெரிய வேலைகள் எதையும் செய்யமுடியாது. எறிகணைச்சிதறல் துண்டித்துவிட்டிருந்த கால் ஒன்றுக்கு பதிலாக பொய்க்கால் போட்டிருந்தார் அவளுடைய தந்தை. வீட்டை ஒட்டியிருந்த நிலத்தில் அவர்கள் சிந்தும் வியர்வைதான் அந்தக்குடும்பத்தின் வாழ்வாதாரம்.
ஒருமாதிரி அத்தையின் தயவில் இசைநிலாவின் படிப்பு முடிந்துவிட்டது. அவளுக்குப் பிறகு பிறந்த இரண்டு தம்பிமாரையும் படிக்கவைக்கவேண்டும் என்பதுதான் அவளுடைய ஒரே இலட்சியம்.
வாய் பேசமுடியாது என்றாலும் அதை ஒரு குறையாக அவள் என்றைக்குமே நினைத்ததில்லை. தன்னுடைய தன்னம்பிக்கையை அவள் எப்போதும் குறைத்துக்கொண்டதும் கிடையாது.
தையல் வேலை, பூவேலைப்பாடு செய்வது என்றால் அவளுக்கு கைவந்த கலை, அதே அளவுக்கு கணனியிலும் அவளுக்கு ஈடுபாடும் திறமையும் உண்டு.
தன்னுடைய திறமையை நம்பித்தான் வேலைக்கு விண்ணப்பித்துவிட்டு காத்திருந்தாள் அவள்.
தான் வேலைக்குப்போய் நிறைய உழைத்து பெற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கவேண்டும,; என்ற அவளுடைய பொறுப்பு, தம்பிமார் பற்றிய கனவு, இவற்றுக்கிடையே ஒரு காதல் குறுக்கிட்டால்...
காலம் அவளுக்காக வத்திருக்கும் பாதையை எப்படி கையாளப்போகிறாள்...?
 

Gowri Karthikeyan

Well-known member
இசை நிலா.....பத்தி பத்தியா இருக்கு....படிக்கவும் கஷ்டமா இருக்கு ரைட்டர்
 
Top Bottom