பூவிழி வாசம் - 23

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,634
6,876
113
பாகம் 23.
நீ வானவில்
உன் வண்ணங்களால்
நானும் ஓவியம்
ஆகிறேன்..

தன்னுடைய குறிப்பேட்டில் இந்த வரிகளைக் கிறுக்கிவைத்தான் பரிபூரணன். அவனது உதட்டில் அழகான புன்னகை அரும்பியது.
அந்த தங்ககத்தின் முன்புறமாக இருந்த முல்லைப்பந்தலின் கீழே அமர்ந்திருந்தவன், வெட்டை வெளியாகத் தெரிந்த வானத்தையே வைத்த கண் வாங்காது பார்த்தான்.
நேரம் காலை பத்து மணியிருக்கும், மினுமினுப்பாக இருந்த சூரியன், தன் வெள்ளிக் கதிர்களை அள்ளி இறைத்துக்கொண்டிருந்தான். அசைந்து நகர்ந்துகொண்டிருந்த மேகத்திரள்களில் அவளுருவம் தெரிவது போல, ஒரு கற்பனை அவனை நிறைத்தது.
~அண்ணா...நீங்கள் வரவர வடிவா வாறியள்,| அன்று காலையில் சின்னவன் சொன்னது இவனுக்கு நினைவில் வந்தது.
~நான் வடிவா வரேல்லையடா..அவதான் வரவைக்கிறா,| மனதிற்குள் பேசியபடி, அந்தக் கவிதைக் குறிப்பேட்டை மீண்டும் திறந்தான்,

~ஆதிக்கப்பெண்ணா நீ
என் மனதை இவ்வளவுக்கு
ஆக்கிரமிப்பு செய்தது
என்ன நியாயம் பெண்ணே?|

என்று எழுதியிருந்தான்.
ஒரே ஒரு நாள் மட்டும் அவனுக்கு தரிசனம் தந்து, அவனுடைய முழு இதயத்தையும் எடுத்துச் சென்றுவிட்டாளே,
வெறுமையும் விரக்தியுமாய் கிடந்த அவனுடைய எண்ணங்களை இப்படி ஒரு பூவின் மென்மையாகவும் பல நிற வர்ணங்களின் வசிப்பிடமாகவும் அவள் செய்துவிட்ட மாயத்தை எண்ணி எண்ணி அவன் வியக்காத நாளில்லை.
~இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறாளோ?| இவன் நினைத்த கணத்தில் பூவிழியும் அவளுமாகச் அந்த வாசலைத்தாண்டி சிரித்தபடி வந்துகொண்டிருந்தனர்.
சடாரென்று எழுந்துவிட்டான், உடம்பெல்லாம் இன்பக்;;கோடுகள் ஊர்ந்தன அவனுக்கு. அவளைக்கண்டு கிட்டத்தட்ட ஒரு மாதமாகியிருந்தது, கட்டிய மனைவியை நீணட நாட்களின் பின்பு காண்பது போல ஒருவகை வேதனை ஆட்கொண்டது அவனை. அதேமாதிரி, அவளுடைய முகத்தில் ஒரு சிறுவலி இருப்பது போலவும் இவனுக்குத் தோன்றியது.
மாம்பழ வண்ணத்தில் சிறு பூக்கள் ஓடியிருந்த சேலை அணிந்திருந்தாள். செம்மஞ்சள் நிறத்தில் மேற்சட்டை, கறுப்பு நிறத்தில் சப்பட்டைச் செருப்பு, கறுப்பு நிற பட்டிவைத்த சிறிய வட்ட வடிவ முகப்புடன் கூடிய மணிக்கூடு, சின்னப்பொட்டு, சிரித்த கண்கள், அதையும் மீறி எட்டிப்பார்த்த சோகம் என, ஒருவித நளினமாக இருந்தவளை வைத்த கண் வாங்காது பார்த்தான்.
அவர்கள் இருவரும் அருகே வந்ததும் இவன் தெரியாத மாதிரி தலையை வேறு புறம் திருப்பியபடி நின்றான்,
பூவிழிதான் அருகில் வந்து,
~பூரணன்...| என்றாள்.
இவன் சட்டென்று திரும்பி,
~ஓ..நீங்களா...வாங்கோ...வாங்கோ...| என்றான்.
அருகில் நின்ற பருதியைப் பார்க்கவில்லை, ஏதோ ஒரு சங்கடம் அவனைக் கட்டிப்போட்டிருந்தது. அவளும் வேறு ஏதோ யோசனையில் இருந்தாள் போல..அவனைப் பார்க்கவில்லை...
~எப்பிடி இருக்கிறீங்கள் பூரணன்?| பூவிழி கேட்டதும்
~ம்...நான் நல்லா இருக்கிறன்...நீங்கள்..| என்றான்.
தலையை ஆட்டிவிட்டு, அவனுக்காக வாங்கிவந்த உணவுப்பொருட்களை அவனிடம் கொடுத்தாள்.
அப்போதுதான் நிமிர்ந்து அவனை நன்றாகப் பார்த்த பருதி, சின்னதாகப் புன்னகைத்தாள்.
பதிலுக்கு புன்னகைக்க கூட அவனுக்குத் தோன்றவில்லை...பார்த்தது பார்த்தபடி நின்றுவிட்டான். சங்கடமாக அவனையே பார்த்த பருதி,
~அக்கா...எப்பக்கா வந்தீங்கள்?| என்று ஓடிவந்த சின்னவனின் குரலில் கலைந்து திரும்பினர் இருவரும்.
~இப்பதான்டா...நீ எப்பிடி இருக்கிறாய்,?|
~எனக்கென்னக்கா...அண்ணா இருக்கிறார்...அவர் நல்லா பாத்துக்கொள்ளுறார்...| என்றான் சிரிப்புடன்...
~சரி..சரி..சந்தோசம்..இந்த வாழ்க்கை உனக்குப் பிடிச்சிருக்கிகேடா?| என்ற பூவிழியிடம்,
~ஓமக்கா...இப்ப எனக்கு வெளியிலை இருக்கிற வாழ்க்கையை நினைச்சால் பயமாக்கிடக்கு| என்றான்.
~அதொண்டும் இல்லை..கொஞ்ச நாளைக்கு உனக்கு அங்க கஸ்டமா இருக்கும், பிறகு பழகிப்போயிடும், நல்ல இடத்திலை வேலைக்குப் போனாய் எண்டால் சரி, சமூகம் அவ்வளவு மோசமானது இல்லையடா, நல்ல மனிதர்கள் நிறையப்பேர் இருக்கினம், தேடிக்கண்டுபிடிச்சு அப்பிடியான மனிதர்களோடை பழகிறது எங்கட சாமர்த்தியம்.....தேவையற்ற மனிதர்களைத் தவிர்க்கவேணும்..அதிலை நீ எப்பவும் கவனமா இரு, எங்களுக்கு கிடைச்சிருக்கிற இந்த ஒரு வாழ்க்கையை மற்றவர்களுக்கு ஒருவித கரைச்சலும் குடுக்காமல் நாங்களும் சந்தோசமாக இருந்து அழகா, எளிமையா வாழ்ந்து முடிக்கவேணும், வாழுற வாழ்க்கை மிகச்சொற்பம், அதை யஅமைதியா ஆனந்தமா வாழுவம்..என்னடா..நான் சொல்லுறது விளங்குதே| என்ற பருதியை நன்றாகப் பார்த்த பரிபூரணன் விரிந்த சிரிப்பொன்றைப் படரவிட்டான்.
ஒரு காலத்தில் அவன் எப்படியான வாழ்க்கைத்துணை பற்றிய கனவுகளை வைத்திருந்தானோ அப்படியே பருதி இருந்ததில் ஆச்சரியம் அதிகரித்தது.
~காலம் எதையும் காரணமின்றிச் செய்வதில்லை| அம்மாவின் வார்த்தைகள் அவை.
~சரி..பூரணன்..இருங்கோ...நாங்கள் மற்றவர்களைப் பாத்துக்கொண்டு வாறம், உங்களுக்கு மனநல ஆலோசனை தேவையில்லை...நீங்கள் மற்றவைக்கு குடுக்கலாம்..அவ்வளவு தெளிவும் அறிவும் உங்களுக்கு இருக்கிறது| என்ற பூவிழிக்கு சிரிப்பை மட்டுமே பதிலாக்கினான் பரிபூரணன்.
அவனைக்கடந்து நடந்து சென்றனர் இருவரும். அம்மாவுக்கு அடுத்து அவன் அதிகம் நேசிக்கும் மதிக்கும் பெண்கள் இவர்கள்...பருதியை நேசிக்கிறேன்..பூவிழி?
ஏனோ அவளைப் பார்த்த நொடியே இனிய அன்பொன்று அவள் மீது சுரந்து, அன்னைக்கு நிகரானதொரு அன்பினை அவனுடைய மனதில் வரவைத்துவிட்டதே...அவள் முதல்முதலாக அவனிடம் பேசிய வார்த்தைகள்...
தாயின் வார்த்தைகளுக்காகத்தான் முதல்முதலில் பூவிழி அவனைப் பார்க்க வந்ததே, அவன் மீதான அவளுடைய கரிசனை...அவனால் மறக்கமுடியாத ஒன்று.
அம்மாவை நினைத்ததும் அவனுக்குள் தாயைப் பார்க்கவேண்டும் என்ற ஏக்கம் தோன்றியது, ஊருக்குப் போய் வரப்போவதாக அம்மா சொன்னது நினைவில் வந்தது, இங்கு வந்த பிறகு, இதுவரை அவன் ஊரைப்பற்றியோ, அல்லது உறவுகளைப்பற்றியோ நினைக்கவே இல்லை.
இப்போது தோன்றியது, ஊருக்குப்போகவேண்டும், மாமாவைப் பார்க்கவேண்டும், மாமாவின் பிள்ளைகள் எப்படியிருக்கிறார்களோ? என்ற எண்ணமெல்லாம் ஓடியது,
குட்டிப்பெண்ணாக இருந்த நிலா வளர்ந்திருப்பாளே..
மதிய உணவு நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது.
எல்லோரையும் சந்தித்துவிட்டு அந்த மரத்தடிக்கு வந்து சேர்ந்தனர் பூவிழியும் பருதியும்...
இவனும் சின்னவனும் இருக்க, களைப்பும் சோர்வுமாக வந்த இருவரையும் கண்டவன், சற்றுத்தள்ளிச் சென்று இரண்டு இருக்கைகளை எடுத்துவந்து வைத்தான்.
அசதியுடன் அமர்ந்தனர் இருவரும்.
~தண்ணீர் கொண்டுவந்து தரவா அக்கா?| என்றுகேட்டான் சின்னவன்.
~இல்லை..வேண்டாம்..தண்ணீர் இருக்கு ஐயா...இயல்பாகச் சொன்ன பூவிழி, தண்ணீர்ப் போத்தலை எடுத்துக்குடித்துவிட்டு, பருதியிடம் நீட்டினாள்.
~சரியா களைச்சுப்போனியள் போல...| என்ற பரிபூரணனிடம்,
~அப்பிடி இல்லை...வெயில் கூடத்தானே, அந்தக் களைப்புத்தான்...| என்றனர் இருவரும்.
~அதுசரி..பூரணன், நீங்கள் எப்ப வெளியிலை வாற யோசனை, இப்பிடியே இஞ்ச இருந்தால் என்ன மாதிரி, விரிந்த உலகம் வெளியிலை இருக்கு, உங்களை எதிர்பார்க்கிற உறவுகளும் இருக்கு...யோசியுங்கோ| என்றாள்.
நீங்கள் சொல்லுறது சரிதான் பூவிழி, நானும் அதைத்தான் நினைக்கிறன், கெதியிலை வெளியிலை வந்திடுவன், பொருத்தமான வேலைதான் தேடவேணும்..பாப்பம்..| என்றான்.
~அதெல்லாம் நாங்கள் ஒழுங்குபடுத்தி தாறம், எங்கட வைத்தியசாலை வைத்தியர் மற்றது அம்மா ரெண்டு பேரும் தங்கமானவர்கள்...எங்கள் ரெண்டுபேருக்கும் பெற்றவர்கள் மாதிரி....ஒரேமாதிரி அன்பை எல்லோரின் மீதும் காட்டுவது அவர்களின் வழமை. அவையளிட்டைக் கேட்டு வேலை ஏற்பாடு செய்து தாறம்..| பூவிழி சொல்லச் சொல்ல பருதி பேசாமல் இருந்தாள்.
~சீச்சீ..உங்களுக்கு ஏன் சிரமம்?|
~இதிலை என்ன சிரமம் இருக்கு? ஒருத்தருக்கு ஒருத்தர் உதவியும் ஒத்தாசையும் செய்யத்தானே உறவுகள்...| என்றாள் பருதி.
அவளை நன்றி கலந்த நேசத்துடன் பார்த்தான் பரிபூரணன்.
~புத்தகம் வாசிச்சு முடிச்சிட்டியளே?| என்றாள்.
~ஓமோம்...அது..அப்பவே படிச்சிட்டன்.. தந்துவிடுவம் எண்டுதான் எடுத்துக்கொண்டுவந்து வைச்சிருக்கிறன்| என்றவனிடம்,
~அதைத்தாங்கோ...இது ரெண்டையும் வாசியுங்கோ| என்றபடி வெண்ணிற இரவுகள், மஞ்சள் வெயில் இரண்டையும் கொடுத்தாள்,
~வாசிச்ச புத்தகம் எப்பிடி பூரணன்?| என்ற பூவிழியிடம்,
~நல்லதொரு குடும்ப நாவல், காதலும் வலியும் சேர்ந்து நல்ல விறுவிறுப்பா, கவிதை நயத்தோடை எதுகை மோனை இணைஞ்சு வாசிக்கவே நல்லா இருந்தது| என்றான்.
~அண்ணா நான் போய் சாப்பாடு எடுத்திட்டு வாறன|; என்றபடி சின்வன் சென்றுவிட, இவர்கள் மூவரும் கதைத்துக்கொண்டிருந்தனர்.
~காதல் எண்டுறது ஒரு அருமையான உணர்வு, ஆனால் அது சரியான நேரத்தில் சரியானவர்களிடம் ஏற்பட்டால் கொண்டாட்டமானதுதான்..அந்த வாழ்க்கை முழுமையாக இருக்கும, அர்த்தம் ;| என்றான்.
~சில காதல்கள், வெளிப்பட்டுவிடும், சில காதல்கள் மனசிற்குள்ளேயே தங்கிவிடும்...| என்றாள் பருதி.
~மகாபாரத்திலை சொல்லப்படுற ஒவ்வொரு காதலும் ஒவ்வொரு விதம்..அதிலையும் கர்ணன் - திரௌபதியின் காதல்தான் ஆகச்சிறந்தது,| பரிபூரணன் சொல்ல,
~கர்ணன் - திரௌபதி காதலோ, எதைப்பற்றிச் சொல்லுறியள் பூரணன்,| என்றாள் பூவிழி.
~ஏன்..திரௌபதி முதல் முதல் பார்த்ததும் காதல் கொண்டதும் கர்ணன் மீது தானாம், ஆனால் திரௌபதி ஐந்து பாண்டவர்களின் மனைவியாகவேண்டும் என்பதுதான் இயற்கையின் தீர்மானம், அதனால் கண்ணன்தான் கர்ணனின் குலத்தினைச்சொல்லி அந்தக் காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்,|
~இல்லையே..இது ஏற்றுக்கொள்ளமுடியாதே..கர்ணன் எத்தனை இடங்களில் திரௌபதியை கேவலமாக எல்லாம் கதைப்பார்?| என்றாள் பருதி.
~அது அந்தந்தச் சந்தர்ப்பங்கள், மற்றவர்கள் அவளைக் கேவலப்படுத்திவிடக்கூடாதே என்பதற்காக தானே முந்திக்கொண்டு வார்த்தைகளால் மட்டுமே அவளை குற்றப்படுத்துகிற அன்பின் சான்று, ஒரு இடத்தில் துச்சாதனன், பாஞ்சாலியை அசிங்கப்படுத்துவதற்காக வாயைத்திறக்க, அவனை முந்திக்கொண்டு கர்ணன் வேசி என்று சொல்லிவிடுவார், தன்னைத்தவிர வேறு யாரும் அவளை குற்றப்படுத்தவோ கேவலப்படுத்தவோ கூடாது என்கிற ஆழமான அன்பின் வெளிப்பாடு அது. கடைசியில் கர்ணன் மரணப்படுக்கையில் இருக்கிற போதும் கூட, அவருடைய கண்கள் பாஞ்சாலியைத்தான் தேடிக்களைப்படையும், அது ஒரு உன்னதமான காதல்..ஆனால் இயற்கையின் விதிப்பை மீறமுடியாத துயரம், எங்களுக்குள் கூட எத்தனையோ காதலர்கள் அப்படி இருக்கிறார்கள்தானே...| என்றான்.
யவனராணி நாவலில், தளபதி இளஞ்செழியனுக்கும் யவனநாட்டு இளவரசிக்குமான காதல் கூட அப்படிப்பட்டதுதான்..அங்கே காதல் சொல்லப்பட்டாலும் அந்தக் காதலுக்காகவே உயிரைவிட்ட யவனராணியின் மாண்பும், உயர்ந்த காதலும் போற்றுதலுக்குரியது, அதுதான் அந்த நாவலின் வெற்றிக்கான கரு என்பேன் நான்..| நிறுத்தாமல் சொன்ன பரிபூரணனை ஆழமாகப் பார்த்தனர் பெண்கள் இருவரும்.
~அப்ப நீங்களும் புத்தகப்பிரியர்தான் போல..| என்றாள் பருதி.
~ஓமோம்..ஒரு காலத்திலை எனக்கு புத்தகம் எண்டால் அப்பிடி ஒரு விருப்பம்...|என்றவன்,
பூவிழியைப் பார்க்க,
அப்போது சின்னவனும் சாப்பாட்டுத் தட்டுடன் வந்து சேர்ந்தான்.
~ஒரே மாதிரியான ஆக்கள்தான் சேர்ந்திருக்கிறம்..| என்றாள் பருதி.
~இயற்கை அப்படித்தான் இணைக்கும்| என்றான் பரிபூரணன்.
~காதல் கதைகள் நல்லா வாசிப்பீங்களோ?| என்று கேட்டாள் பூவிழி.
~எல்லாமே வாசிப்பன், ஆனால் புரட்சிப்புத்தகங்கள்தான் எனக்கு நிறையப்பிடிக்கும், லெனின், கார்ல்மார்க்ஸ், சேகுவேவரா, பிடல்காஸ்ரோ, மாசேதுங் என்று பலருடைய வரலாறுகளையும் வாசித்திருக்கிறேன். காதல் கதைகள் எண்டாலும் எல்லாம் வாசிக்கலாம் எண்டு இல்லை, சில எழுத்தாளர்கள் கதையை ஒரே மாதிரி எழுதுவினம் அது எனக்கு பிடிக்கிறேல்லை....வித்தியாசமான மொழி நடையிலை வித்தியாசமாக எழுதிறவையும் இருக்கினம்..அவையின்ரை முந்தி தேடித்தேடி வாசிப்பன்| என்றான்.
~ரோசி கஜன், நிதனி பிரபு. யாழ். சத்யா, காஞ்சனா ஜெயதிலகர், இவையளின்ரை புத்தகங்கள் வாசிக்கிறனான், வித்தியாசமா இருக்கும்...| என்ற பருதியிடம்
~இனியென்ன, வாசிச்சு முடிக்கவேண்டியதுதான்..| என்றான்.
~ஆனால் வெளியிலை இப்ப நீங்கள் நினைக்கிற மாதிரி ஆக்கள் வாசிக்கிறதில்லை, நிறையப்பேர் அலைபேசிக்குள்ளதான் அமிழ்ந்து கிடக்கினம்,| என்ற பூவிழிக்கு,
~அதாலைதான் உவ்வளவு வருத்தங்கள்...|என்றான் பரிபூரணன். ~அதுசரிதான், இளையவர்களிடம் சிந்தனைத்திறன் மழுங்கி, கேட்டல் தன்மை குறைந்து, ஞாபக சக்தியும் குன்றிப்போய்விட்டது| என்றாள் பூவிழி.
~அலைபேசி நல்ல விசயம்தான் அதைப்பயன்படுத்திற முறையிலைதான் நன்மை தீமை இருக்கு, அது கனபேருக்கு புரியிறேல்லை..| என்று பருதி சொன்னதும்
~சரிதான் அக்கா..சரியாச் சொன்னீங்கள்..| என்றான் சின்னவன்.
~சாப்பாடு இருக்கு, சாப்பிட்டுப்போங்கோவன்,| என்ற பரிபூரணனிடம்,
~இல்லை பூரணன்...நீங்கள் சாப்பிடுங்கோ, நாங்கள் போட்டுவாறம், உங்களோடை கதைச்சதிலை மகிழ்ச்சி, அடுத்தகிழமை கட்டாயம் வருவம், அதுக்கிடையிலை வெளியிலை வாறதுக்கு கடிதம் எல்லாம் குடுங்கோ என்ன, நாங்களும் வேலை அலுவலைப் பாத்திட்டு வாறம், நீங்கள் வெளியிலை வந்த உடனேயே வேலைக்குப் போகவேணும்..அப்பதான் ஒரு யோசினையும் இல்லாமல் இருப்பீங்கள்..அதுக்கு நாங்கள் ஏற்பாடு செய்யிறம்..|என்ற பூவிழிக்கு தலையை ஆட்டி சம்மதம் தெரிவித்தான் பரிபூரணன்.
~அக்கா..அண்ணா வந்திட்டால் நான் தனிச்சுப்போகப்போறன்..அதுக்காக அண்ணா இஞ்ச நிக்கவேண்டாம்..அவர் பாவம்..நீங்கள் கூட்டிக்கொண்டு போங்கோ..| என்றான்.
~இல்லையடா..உன்னையும்..| ஆரம்பித்த பருதி, பூவிழியின் பார்வையில் சற்றே நிறுத்தினாள்.
~தம்பி..உனக்கு வெளியிலை வர விருப்பம் எண்டால், அதுக்கு உன்னை முழுசா மாற்றிக்கொள், இப்ப நீ மாறிவிட்டாய் எண்டு தெரியும்தான் எண்டாலும், முழு மனதோடை சம்மதம் எண்டால் மற்ற அலுவல்களைப் பாப்பம்| என்றுவிட்டு சின்னவனை நன்றாகப் பார்த்தாள் பூவிழி.
~ஓமக்கா..எனக்கு விளங்குது, எனக்கு வர விருப்பம்தான்..|
~சரி..நாங்கள் போட்டுவாறம|; என்ற பருதி, தன்னுடைய கைப்பையில் இருந்த உணவுப்பொட்டலத்தை எடுத்து சின்னவனிடம் கொடுத்து ~சாப்பிடு| என்றாள்.
பூவிழியும் தலையை ஆட்ட,
அதனை வாங்கிய அவன், ~நன்றி அக்கா| என்றான்.
இருவரும் சிரிப்புடன் புறப்பட்டனர்.
இருவரையும் ஆழந்த பார்வை ஒன்றைப்பார்த்துக்கொண்டிருந்தான் பரிபூரணன்.
இருவருமே அவனுடைய வாழ்வில் மிக முக்கியமானவர்கள் என்ற எண்ணம் மனதில் ஆழமாகப் பதிந்துகொண்டது.

 

Author: Vishakini
Article Title: பூவிழி வாசம் - 23
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.