• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

பூவிழி வாசம் - 24

Vishakini

Moderator
Staff member
பாகம் 24.

நிறைமாத கர்ப்பிணி போல நிறைந்து வழிந்தது அந்தப் பேருந்து. யன்னலோர இருக்கை ஒன்றில் அத்தை பத்மினியை அமரவைத்துவிட்டு தானும் அருகில் அமர்ந்துகொண்டாள் இசைநிலா.
கைப்பையில் இருந்த புத்தகத்தை எடுத்து வாசிக்கலாம் என்றால் சனஅடர்த்தி எதையும் செய்யவிடாமல் தடுத்தது. சற்றுச் சாய்வாக அமர்ந்திருந்தவள், பேருந்துப் பயணத்தை ஆரம்பித்த சில நிமிடத்திலேயே வயதான பாட்டி ஒருவர் தட்டுத்தடுமாறி ஏறிவருவதைக் கண்டாள்.
~இந்தப் பாட்டிக்கு யாராவது ஒரு இருக்கை குடுங்கோ..| நடத்துனர் கத்தினான்.
யாரும் எழுந்திருக்கக்காணோம். கையில் இருந்த கைப்பையை அத்தையிடம் கொடுத்துவிட்டு, தானே எழுந்துகொண்ட இசைநிலா, சற்றுத்தள்ளி நின்ற பாட்டியை, கைகளால் தட்டி அழைத்து, அருகில் வந்ததும் மெதுவாக தான் இருந்த இருக்கையில் அமரவைத்தாள்.
மருமகளைப் பார்த்த பத்மினியம்மாவிற்கு முகத்தில் சிறு புன்னகை படர்ந்தது.
மற்றவர்களின் துயரத்தை தன் துன்பம் போல தாங்குகிற, உடனே உதவுகிற குணம்தான் இசைநிலாவினுடையது என்பது அவருக்குத் தெரியும்.
அவளுக்கு தன் மகன் மூலம் ஒரு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்து மகனையும் மருமகளையும் ஒன்றாகப் பார்க்கவேண்டும் என்று தோன்றியது.
இது அவரும் தம்பியும் தம்பி மனைவியுமாகக் கதைத்து எடுத்த முடிவுதான்....இசைநிலாவிற்கும் பரிபூரணனுக்கும் பன்னிரண்டு வயது வித்தியாசம் இருந்தது.
ஆனால், பரிபூரணைப் புரிந்துகொண்டு வாழ்கையில் அவனுக்குச் சந்தோசத்தைக்கொடுக்க இசையால் தான் முடியும் என்று நம்பித்தான் இந்த முடிவிற்கு வந்திருந்தனர் மூவரும். சிந்தனைகள் ஓடி, மகனில் வந்து நின்றது பத்மினி அம்மாவிற்கு.
மகன் இந்த விடயத்திற்கு என்ன சொல்கிறானோ தெரியவில்லை..எப்படியும் சந்தோசம்தான் படுவான், அவனுக்கும் ஆசாபாசங்கள் இருக்கும்தானே, இப்போது பழைய குணங்களில் இருந்து முற்றிலும் மாறிவிட்ட பிறகு, அவனுக்கு ஒரு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டியது அன்னையாகிய அவருடைய கடமையன்றோ....
அதனால்தான் அவர், அவசரமாக, இசையுடன் தம்பி வீட்டிற்குச் சென்றதும்.
~உனக்கு, எது சரியென்று படுகிறதோ, அதைச்செய்யக்கா..இசையை நீதான் படிக்கவைத்து வளர்த்தாய், அவளுக்காக நான் பெரிதாக எந்தச் செலவும் செய்ததில்லை...
அவள் மீது, உனக்குத்தான் உரிமை அதிகம், இசைக்கும் எல்லாம் விளங்கும், நீ போய், மருமகனிட்டைக் கதை| என்று சொல்லியனுப்பியிருந்தார்.
மகன் மீதான அக்கறையும் தம்பியார் கொடுத்த ஊக்கமுமாகவே இதோ புறப்பட்டிருக்கிறார் மகனைக்காண.
நல்ல விசயங்களைத் தள்ளிப்போடவேண்டாம்..| என எண்ணித்தான் வீட்டிற்குச் செல்ல முதல், பரிபூரணனின் இருப்பிடம் சென்றுவிட்டுப், போக எண்ணினார்.
தன் மகனுக்கும் ஒரு நல்லது நடந்துவிடவேண்டும் என்கிற தவிப்பு அவருடைய மனதில் ஏகமாய் இருந்தது.
மகனுக்கும் இசைக்கும் வயது வித்தியாசம் பன்னிரெண்டுக்கு மேலே இருந்தது அவருக்கு ஒரு யோசனையாகவே இருந்தது என்றாலும் எதற்கும் இருவரிடமும் கதைத்துப்பார்த்தால் சரிதானே என்ற எண்ணம்தான்.
அதற்காகத்தான் முதலில் மகனுடன் கதைத்துவிட்டு பிறகு இசைநிலாவுடன் கதைக்க நினைத்தனர்.
நிமிர்ந்து இசைநிலாவைப் பார்த்தார். மெல்லிசைப் பாடல் ஒன்று பேருந்தில் ஒலிக்க, ஏதோ ஒரு வகையில் அது அவளைத் தீண்டியது போல, கண்களை மூடி, கம்பியோடு சாய்ந்து நின்றுகொண்டிருந்தாள்.
பாவம் குழந்தை..வாழ்க்கையில் இயலாமையோடு எப்போதும் வாழவேண்டிய நிர்ப்பந்தம் இருந்தாலும் அதை ஒரு பொருட்டாக நினைக்காது ஓடிக்கொண்டிருக்கிறாள்.
பெருமூச்சோடு நினைத்துக்கொண்டார் பத்மினியம்மா.
எண்ணங்களின் ஓட்டத்துடன் நகருக்கு வந்து சேர்ந்துவிட்டிருந்தனர்.
~அத்தையுடன் தானும் வருவதாக| இசைநிலா சொன்னபோதும், மகனுடன் கதைக்காமல் அங்கே கூட்டிச்செல்வது முறையல்ல, என்பதுடன் பரிபூரணனுக்கு கோபம் வந்துவிடும் என்பதையும் புரிந்தவராக, அவளை வேலைக்குச் செல்லுமாறும் தான் பைகளைக் கொண்டு செல்வதாகவும் கூறிவிட்டு தான் மட்டும் மகனிடம் செல்ல ஆயத்தமானார்.
முச்சக்கர வண்டி ஒன்றில் அத்தையை அனுப்பிவிட்டு தானும் ஒன்றில் ஏறிக்கொண்டாள் இசைநிலா. அதற்கிடையில் இளஞ்செழியனை அலைபேசியில் அழைத்து விபரம் சொல்லி, முச்சக்கரவண்டிச் சாரதியிடமும் கொடுத்து இடத்தைக் கூறச்செய்திருந்தார் பத்மினியம்மா முன்னேற்பாடாக.
இரண்டு முச்சக்கரவண்டிகளும் எதிரெதிர்த் திசையில் பயணம் செய்தன.
சிறிது நேர ஓட்டத்தில் மகனின் இருப்பிடத்தை அடைந்த பத்மினியம்மா, அருகில் இருந்த கடைக்குச் சென்று தான் மகனுக்காகக் கொண்டு வந்த பொருட்களோடு இன்னும் சில பொருட்களை வாங்கிவிட்டு, உடுப்புகள் அடங்கிய பையை அந்தக்கடையிலேயே கேட்டு வைத்துவிட்டு, மகனைக்காண விரைந்து சென்றார்.

இளம் வெயில் உலகை நிறைத்திருந்தது. வாடைக்காற்று மெலிதாக வீசி வெயிலின் சிறு தகிப்பையும் போக்கிக்கொண்டிருந்தது.
சேகுவேராவின் வாழ்வியல் வரலாற்றைப் படித்துக்கொண்டிருந்த பரிபூரணன், அன்னையின் வருகையை உணராதவனாக புத்தகத்தில் மூழ்கிப்போயிருந்தான்.
சிறு முத்துக்களாகப் பூத்த வியர்வைத்துளிகளை சேலைத்தலைப்பால் ஒற்றித்துடைத்தபடி, தன்னருகே வந்தமர்ந்த தாயைக்கண்ட பரிபூரணன், வியப்பில் விழிகள் விரிய, புத்தகத்தை மூடிவைத்தான்.
~என்னம்மா....களைச்சுப்போய் வந்திருக்கிறியள்?| என்றவன்
~இருங்கோ அம்மா, தண்ணி எடுத்துக்கொண்டு வாறன|; என்று எழும்ப,
~இல்லை அப்பூ..தண்ணி என்னட்டைக் கிடக்கு.....நீ இரு..| என்றவர் பையைத்திறந்து தண்ணீர்ப் போத்தலை எடுத்து, மடமடவென்று குடித்துவிட்டு, மகனிடம் நீட்டினார்.
~எனக்கு வேண்டாம் அம்மா.....நீங்கள் குடியுங்கோ..| என்றவனது முகம் துயரத்தின் சாயலைப் பூசிக்கொண்டது.
~அம்மா, எவ்வளவு பாவம்,| உள்ளம் உருகியது பரிபூரணனுக்கு. ~தனக்காக தன் வாழ்நாளின் இன்பங்களையெல்லாம் தொலைத்துவிட்ட அந்த ஜீவனின் தோற்றம் அவனை ஏதோ செய்தது. உலகத்தில் எத்தனையோ அம்மாமார் இருக்கிறார்கள், ஆனால் எல்லோரும் ஒரே மாதிரி இல்லை, தன்னுடைய தாய் வாழ்க்கையில் எந்த சந்தோசங்களையும் அனுபவிக்காமல் இன்று வரை அவனுக்காகவே ஓடிக்கொண்டிருப்பவர், இனியேனும் அவரை, சந்தோசமாக வைத்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் அவனுக்குள் வியாபித்து எழுந்தது,
இதுவரைக்கும் தன்னுடைய மனநிலையை மட்டுமே பெரிதாக நினைத்து, ஒரு சுயநலவாதியாக வாழ்ந்துவிட்ட தன் மடமைத்தனத்தை வெகுவாக நொந்துகொண்டான்.
மெல்ல தாயாரின் அருகில் நெருங்கி அமர்ந்தவன்,
~அம்மா....| என்றான்.
வித்தியாசமான மகனுடைய நெருக்கம், அவரது கண்களில் கண்ணீரை வரவைத்தது. சட்டென்று திரும்பிப் பார்த்தவர்,
~என்ன ராசா..என்ன..|என்றார் பதற்றமாகி.
தலையை இடம் வலமாக ஆட்டியவன், ~அம்மா...உங்கட மடியிலை படுக்கட்டா| என்றான் காதலால் கனிந்திருந்த மனதோடு.
~படு..அதுக்கென்னத்துக்கு கண்கலங்கி கேக்கிறாய் அப்பூ, நீதான் என் ஒரே மகன், நீதான் என உறவு, நீதான் என் உலகம், நீதான் என் வாழ்க்கை, நீதான் என சாமி..| என்றார் பத்மினியம்மா விம்மிய வார்த்தைகளைக் கோர்த்து.
தாயின் மடியில் சுருண்டு தலையை வைத்தவன்,
~அம்மா..என்னை மன்னிச்சுக்கொள்ளுங்கோ..நான் உங்களைப்பற்றி யோசிக்காமல் விட்டிட்டன்....என்ரை கோபம்தான் பெரிசெண்டு நினைச்சு, உங்களைத் தனிய தவிக்கவைச்சிட்டன்..|
~அதெல்லாம் ஒண்டுமில்லை ராசா...நீ ஒண்டும் யோசிக்காதை...| என்ற தாயை இமைக்காமல் பார்த்தவன்,
~இல்லை அம்மா..அர்த்தமில்லாத என்ரை கோபத்திலை பாவம் நீங்கள் எவ்வளவு கஷ்ரங்களை அனுபவிச்சிட்டியள், ஒரு மகனா நான் உங்களுக்கு ஒண்டுமே செய்யேல்லையே...காலம் ஓடிப்போட்டுது, இந்த தேவையில்லாத பழக்கத்தைப் பழகினதும் உங்களை துயரப்படவைச்சதும் தவிர நான், உருப்படியா வேற என்ன செய்தனான், ஒண்டும் இல்லை..| என்றவன், துயரத்தோடு பெருமூச்சொன்றை வெளிவிட்டான்.
~நீ அப்பிடி எல்லாம் சொல்லக்கூடாது மகன், நீ படிக்கிற காலத்திலை எவ்வளவு கெட்டிக்காரனா இருந்தனி, படிப்பு, விளையாட்டு எண்டு உன்னை யாராலையும் அடிக்கவேமுடியாதபடி அப்பிடி ஒரு சாதனையாளனாக இருந்தாய்,.
இப்ப நீ இப்படிக் கதைக்கிறதே எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி தெரியுமே, அதோடை அம்மா ஒரு விசயம் கேட்கத்தான் வந்தனான்,| என்றார் மெதுவாக.
~என்னம்மா...சொல்லுங்கோ..| என்றான் மடியிலிருந்தே திரும்பியபடி.
~ஐயா...நீயும் கலியாணம் காட்சி, பிள்ளைகுட்டி எண்டு, வாழ்ந்தால்தானே எனக்குச் சந்தோசம்...என்ரை பிள்ளை, கலியாணம் செய்ய..சம்மதிச்சிட்டியெண்டால்..| அவர் முடிக்கு முன்னர்
~சரி அம்மா..| என்றுவிட்டான் புன்னகையுடன்.
பத்மினியம்மாவிற்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை...மகன் ஒன்றும் சொல்லாமல் சம்மதித்துவிட்டானே என்பதில் இனிய ஆச்சரியம் அன்னைக்கு.
~ஐயா....மாமாவின்ரை மகள் இசையைத் தெரியும்தானே..இப்ப நல்லா வளந்திட்டாள், நல்ல பிள்ளை, இஞ்சைதான் ஒரு ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்யிறாள், அவளை உனக்குச் செய்துவைப்பம் எண்டு யோசிக்கிறம்...| என்ற அன்னையை நிமிர்ந்து பார்த்தவன், சட்டென எழுந்து அமர்ந்தான்.
~அம்மா...உங்களுக்கு...| என்று கோபமாக ஆரம்பித்தவன், தாயின் முகம் சுருங்கிப்போனதை உணர்ந்து,
~இசைக்கு எத்தினை வயசம்மா..அவள் சின்னப்பிள்ளை, நான் பார்க்க வளர்ந்தவள், குழந்தை மாதிரி இருப்பாள், அவளைப்போய்..என்னாலை ஏலாதம்மா...| என்றவன், பருதியைப்பற்றிச் சொல்லுவோமா என நினைத்துவிட்டு
அவளிடம் சம்மதம் வாங்காமல் தாயிடம் சொல்வது சரியில்லை என நினைத்து அந்த எண்ணத்தைக் கைவிட்டான்.
மகனின் மறுப்பு ஏமாற்றத்தைக் கொடுத்தாலும் அதிலும் ஒரு நியாயம் இருப்பதைப் பத்மினியம்மா புரிந்துகொண்டார். அதனால் அவர் எதுவும் சொல்லாமல் இருக்க,
~அம்மா..என்ன யோசிக்கிறியள்?| என்று கேட்டான்.
~ஒண்டும் இல்லை ஐயா, நான் கொஞ்சம் யோசிக்கவேணும், உனக்கு மனைவியா வாற பிள்ளை உன்னைப்பற்றித் தெரிஞ்ச பிள்ளையா, உன்னை அனுசரிச்சுப்போற பிள்ளையா இருக்கவேணுமெல்லே, அதுதான்..நான் இசையை உனக்கு கலியாணம் செய்துவைப்பம் எண்டு நினைச்சதுக்கு முழுக்காரணம்...| என்றார்.
~எனக்கு விளங்குதம்மா..ஆனால்...| அவன் இழுக்க,
~இப்ப எனக்கு உன்ரை தயக்கம் புரிஞசுது மகன், நீ விடு, நான் வேற நல்ல பிள்ளையாப் பாக்கிறன் என்ற அன்னையை அன்பு ததும்ப பார்த்தான் பரிபூரணன்.
அதற்குப் பிறகு தாயும் மகனுமாக பல விசயங்களைப் பற்றிக் கதைத்துக்கொண்டிருந்தனர்.
அப்போது,
~அப்பூ...உன்னட்டை இன்னொரு விசயம் சொல்லவேணும்...| என்று ஆரம்பித்த தாயை கேள்வியோடு பார்த்தான் பரிபூரணன்.
~நான் இப்ப, முதியோர் விடுதியிலை வேலை இல்லை,| என்றார்.
~பிறகு?| என்றவனிடம்,
~பரமானந்தம் ஐயா வீட்டிலை, அண்டைக்கு என்னோடை வந்த மகனை நீ பார்த்தாய் தானே..அங்க தான்...| மெல்ல இழுத்தார்.
தாய் எதையோ சொல்ல வந்து தயங்குவதை உணர்ந்தவன்,
~அம்மா...என்ன விசயம்..சொல்லுங்கோ...| என்றான்.
~அவர்தான் உன்ரை அப்பா....| ஒரு கணம் மின்னல் தாக்கிய அதிர்வு அவனிடம்.
பேசாமல் இருந்தான்.
~பூர்ணா....|
~அவரிட்டை ஏனம்மா போனனீங்கள்...இவ்வளவு காலமும் உங்களைப்பற்றி நினைக்காத அந்த மனுசனட்டை இப்ப ஏனம்மா போய் நிண்டனீங்கள்...அங்க வேலை செய்யிறீங்களா..?| என்றான் கோபத்துடன்.
~எனக்கும் அவரிலை கோபம் இருந்ததுதான்..ஆனால் அவரிலை முழுக்க பிழை இல்லையடா..அது தான்...|
~என்ன பிழை இல்லை..ஒரு பெண்ணோடை பழகி, அவளைக் கர்ப்பமாக்கிவிட்டு ஓடிப்போறது பிழையில்லையே| என்று கொதித்தான்.
அவர், திரும்ப அங்க ஊருக்கு வந்திருக்கிறார், அப்ப, ஏற்பட்ட மண்சரிவில, நாங்கள் எல்லாம் ஊர்விட்டு ஊர் போட்டம் எல்லே...அதிலை நான் செத்திட்டன் எண்டுதானே சனம் நினைச்சது, அதையே அவரும் கேள்விப்பட்டு, வேற வழியில்லாமல் இன்னொரு கலியாணம் செய்திட்டார்..|
எதுவும் பேசாமல் தாயைப் பார்த்தான்.
~அவர் இன்னொரு வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார், ஆனால் சந்தோசமா வாழேல்லை...பாவம் அவரின்ரை பிள்ளைகள், தாயிருந்தும் தாய்ப்பாசத்துக்காக ஏங்கி, அதையும் தகப்பனிட்டையே அனுபவிச்சு வளர்ந்திருக்குதுகள்...என்ற அன்னையை அவனால் எதுவும் சொல்ல முடியவில்லை..
மனதின் ஓரத்தில் மெல்லிய குறுகுறுப்பு அவனுக்கு.
அவனுடைய உதிர உறவுகள் இன்னும் எத்தனை பேர் என்று அறிய மனம் துடித்தது. அன்னையிடம் கேட்கவும் தயக்கமாக இருந்தது.
~அண்டைக்கு என்னைக் கூட்டிக்கொண்டு வந்தவர்தான் முதல் பிள்ளை, சாயலிலை நீயும் அவரும் ஒரே மாதிரித்தான்...|
அன்று தானும் அப்படி நினைத்ததை எண்ணிப் பார்த்தான்.
~அவருக்குப்பிறகு இன்னும் ரெண்டுபேர் இருக்கினம், ஒரு ஆணும் ஒரு பெண்ணுமாக...,
இளஞ்செழியன், வண்ணமதி..
கடைசிதான் வண்ணமதி, எல்லாரையும் நேசிக்கிற நல்ல குணம், பாவம்...தாய்ப்பாசம் தெரியாத குழந்தை...
தாய் சொன்னதும், தங்கை என்ற பரிவு அவனுள் தலைதூக்கியது, ஒரு சிறுபெண் தன் கையில் தவழ்வது போல ஒரு கற்பனையில் மனம் பூரித்தது. அவனுக்கு, தங்கை என்றால் உயிர். அவனுக்கும் ஒரு தங்கை இருக்கிறாளே...அவன் தத்தெடுத்த தங்கை.

~வண்ணமதி....|
உதட்டுக்குள் உச்சரித்துப் பார்த்தான்.. தேன் சிந்தியது வாயில். அவனை உரிமையோடு அண்ணா..என்று சொல்லுவாளா?
சட்டென்று கேள்வியும் பிறந்தது அவனுக்குள்.
அவனுக்கு இரண்டு தம்பிமார்...அவன் அண்ணனாகிவிட்டான்...
இனிமையாக நினைவுகள் உருண்டது அவனுக்குள்.
முன்னைய பரிபூரணன் என்றால் இப்போது ஒரு பூகம்பமே வெடித்திருக்கும், இப்போது, அவன் குணத்தால் மாறியிருந்ததால், அதோடு சில விடயங்களை விபரமாக பூவிழி ஏற்கனவே சொல்லியிருந்ததால் மௌனமாகக் கேட்டுக்கொண்டிருந்தான்.
தாயும் மகனுமாக கதைத்துக்கொண்டிருந்தனர். அப்போது அடிக்கடி மகனின் வாயில் இருந்து பூவிழியின் பெயர் வருவதை பத்மினியம்மா கவனிக்காமல் இல்லை,
எல்லாவற்றுக்குமே, ~பூவிழி சொன்னாம்மா...பூவிழி சொன்னவா| என்றுதான் சொல்லிக்கொண்டிருந்தான் பரிபூரணன்.
~பேசாமல் பூவிழியையே இவனுக்கு திருமணம் செய்துவைச்சால் என்ன...| அப்போது தான் அந்த எண்ணம் தோன்றியது பத்மினியம்மாவிற்கு.
மதியம் வரை மகனோடு இருந்து கதைத்துவிட்டு, தான் வாங்கி வந்த உணவுப்பண்டங்கள் சிலவற்றை அவனைச் சாப்பிடவைத்து அழகு பார்த்தவர்,
மதிய உணவை தானே அவருக்கு எடுத்து தீத்திவிட்டார்.
இடையில் ஓடிவந்த சின்னவனுக்கும் எல்லாவற்றிலும் எடுத்துக்கொடுத்துவிட்டு, இருவரிடமும் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டார்.
மகனின் இந்த திடீர் மாற்றம் அவர் எதிர்பார்க்காதது. மகிழ்ச்சியாக இருந்தது.
 
Top Bottom