பூவிழி வாசம் - 31

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,634
6,876
113
பாகம் 31
அதிகாலையிலேயே விழித்துவிட்ட பத்மினியம்மா, அவசரமாக எழுந்து வந்து, பரமானந்தரைத்தான் பார்த்தார். மூச்சு சீராக இருந்தது.
மனம் நிறைந்துவிட, தன்னை ஆசுவாசப்படுத்தியவராய், குளியல் அறைக்குள் புகுந்துகொண்டார்.
கடமைக்கு வந்த தாதியின் வரவு. பூவிழியையும் எழுப்பிவிட, திடுக்குற்று விழித்த பூவிழி, மன்னிப்பு கோரலுடனான புன்னகையுடன் எழுந்து அமர்ந்தாள்.
~பரவாயில்லை மிஸ், நீங்கள் படுங்கோ..நான் பாத்திட்டுப்போறன்..| தாதி கூறவும்,
~நீங்கள் பாருங்கோ..நான் வெளியிலை இருக்கிறன்| என்றபடி, கதவு திறந்து வெளியே வந்தாள்.
அதிகாலைக்காற்று சில்லென்று வீசி முகத்தில் வந்து மோதியது. தோளிலே போட்டிருந்த துப்பட்டாவை எடுத்து, முதுகைச்சுற்றிப் போர்த்துக்கொண்டாள்.
கையிலிருந்த அலைபேசியில் வீட்டு எண்களைத் தட்டியவள், பதில் இன்றிப்போகவும், இளஞ்செழியனுக்கு அழைப்பை எடுத்தாள்.
சிறிது நேரம், அழைப்பு, ஓடி, அவனுடனான இணைப்பு ஏற்பட்டது.
~இளா..|
~நான் வந்துகொண்டிருக்கிறன் பூவிழியம்மா...|
~இசையும் வண்ணமதியும் எழும்பேல்லைப்போல...|
~இசை எழும்பித்தான் தேநீர் போட்டுத்தந்தா..அதோடை உங்கள் ரெண்டு பேருக்கும் உடுப்பும் தந்துவிட்டா..| சொல்லும்போது அவனுடைய குரல் சற்று நெகிழ்ந்து ஒலித்ததோ...
உண்மையில் அதிகாலையில் அவள் எழுவதற்கு முன்னரே எழுந்துவிட்டிருந்த, இசைநிலா, தேநீரோடு சென்றுதான் அவனுடைய அறைக்கதவைத் தட்டினாள்,
அவன் தேநீர் குடிக்கும் வரையிலும் வாசலில் நின்றவள், பிறகுதான், வெளியே சென்றாள்.
அவன் அறையை விட்டு வெளியே வரும்வரை பார்த்துக்கொண்டிருந்து பூவிழிக்கும் பத்மினியம்மாவுக்குமான ஆடைகள்,தேநீர், அப்பாவுக்கான கொழுப்பு இல்லாத மாவில் கலந்த பால் என் அனைத்தையும் தயாராக எடுத்துவைத்தபடி நின்றாள்.
அவளுடைய அந்தப் பண்பை வியந்தவனாகவேதான் அவன், வைத்தியசாலைக்கு வெளிக்கிட்டு வந்ததே,
இந்த வீட்டுக்குப் பொருத்தமான மருமகள்தான்..தன்குள்ளே சொல்லிக்கொண்டான்.
தன் எண்ணங்களை ஒதுக்கிவிட்டு,
~பூவிழியம்மா..அப்பா எப்பிடி இருக்கிறார்...?| என்று கேட்டான்.
~அப்பா நல்லா இருக்கிறார், நான் வெளியிலை நிக்கிறன், தாதி பாத்துக்கொண்டு இருக்கிறா| என்ற பூவிழி, மீண்டும் அறைக்கு வரவும் தாதிப்பெண் வெளியேறவும் சரியாக இருந்தது.
பத்மினியம்மாவும் குளித்து முடித்துவிட்டு, அதே உடையுடன் வெளியே வரவும் உள்ளே வந்த பூவிழி,
~இசை, உடுப்பு குடுத்துவிட்டிருக்கிறா, இளா வந்த உடனே மாத்துங்கோ பூவழியம்மா...| என்றாள்.
தலைஆட்டிய பத்மினியம்மா, பரமானந்தரையே பார்த்துக்கொண்டு நின்றார். அவருடைய பார்வையின் ஏக்கத்தில் கலையாத அவர்களின் காதல்தான் பூவிழிக்குத் தெரிந்தது.
மெல்ல கண் விழித்த பரமானந்தரின் அருகில் சென்ற இருவரும் அவருக்கு பல் துலக்கி, உடம்பு துடைத்து ஆடையை மாற்றினர்.
பத்து நிமிடங்கள் கழிந்துவிட, இளஞ்செழியனும் வந்து சேர்ந்தான்.
கண்ணாடிக் கதவைத் திறந்து உள்ளே வந்தவன், உடுப்பு பையை பூவிழியிடம் கொடுத்துவிட்டு, தந்தையின் அருகில் சென்றான் இளஞ்செழியன். தேநீர் நிறைந்திருந்த சுடுநீர்ப்போத்தல்களை எடுத்து மேசையில் வைத்த பூவிழி, பத்மினியம்மாவிடம் உடுப்புப் பையைக் கொடுத்து, குளியல் அறையில் வைக்கும்படி சொல்லிவிட்டு.
பரமானந்தருக்கு பால்தேநீரை நிறைத்துக்கொடுத்தாள்.
குறைவாகத் தரும்படி கேட்டவரை, இளஞ்செழியன், தன் மீது சாய்த்து அமரவைக்க, பூவிழி மெல்ல மெல்ல இளஞ்சூடான தேநீரைப் பருக்கினாள்.
வெளியே வந்த பத்மினியம்மா, இளஞ்செழியனிடம் சிறு முறுவல் ஒன்றை வெளிப்படுத்திவிட்டு கதவைத்திறந்து வெளியே சென்றுவிட்டார்.
அப்போது, வெள்ளை நிறத்திலான கடமைக்கான சீருடையுடன் உள்ளே வந்த பருதி,
பரமானந்தரின் அருகில் வந்து ~அப்பா..இப்ப எப்பிடி இருக்கு?| என்றாள்.
~இப்ப பரவாயில்லையம்மா...| சிறு சிரிப்புடனே பதில் சொன்னார் அவர்.
எல்லோருமாக சிறிது நேரம் கதைத்தபடி இருந்தனர்.
~இளா, வண்ணமதிக்கு ஏதோ பரீட்சை இருக்கெண்டு சொன்னவா, வேளையோடை போகச்சொல்லுங்கோ..சாப்பாடு என்ன மாதிரி, ?| என பூவிழி கேட்கவும்,
~நான் வரும்போதே, இசை சாப்பாடு செய்யத்தொடங்கிவிட்டா..நான் வீட்ட போய் எடுத்துக்கொண்டு வாறன்| இளஞ்செழியன் சொல்லவும்
தான் கையில் வைத்திருந்த பையைத் தூக்கிக் காட்டிய பருதி, ~இதிலை அப்பாவுக்கு குரக்கன்மா கஞ்சியும் பத்மினியம்மாவுக்கும் பூவிழிக்கும் தோசையும் சம்பலும் இருக்கு| எனவும்
~அட..பிறகென்ன, பூவிழியம்மா..உங்கட நண்பியும் உங்களை மாதிரித்தான் போல, உண்மையாவே பாக்க மகிழ்ச்சியாக இருக்கு| என்ற இளஞ்செழியன்,
~எனக்கும் பசிக்கிறமாதிரித்தான் கிடக்கு| என்றான்.
~அதுக்கென்ன இளா, தோசை நிறையத்தான் இருக்கு, சாப்பிடுங்கோ| என்ற பருதியிடம்
~நான் சாப்பிட்டால் பிறகு, பத்மினியம்மாவும் பூவிழியம்மாவும்...| என இழுக்கவும்
~அதுக்கென்ன, நாங்கள் ஏதும் வாங்கியும் சாப்பிடுவம் இளா, நீங்கள் சாப்பிடுங்கோ| என்று பூவிழி சொல்ல, இவர்களின் உரையாடலைக் கேட்டபடியே உள்ளே வந்த பத்மினியம்மா,
பருதியிடம் பையை வாங்கி, உள்ளே இருந்த பீங்கானில் இரண்டு தோசைகளை வைத்து சம்பலையும் போட்டு எடுத்து வந்து இளஞ்செழியனிடம் கொடுத்தார்.
மறுக்க வழியின்றியும் வயிற்றுப்பசி மறுக்கவிடாது தடுக்கவும் பேசாமல் சாப்பிடத்தொடங்கினான் இளஞ்செழியன்.
~இளாத்தம்பி; பசி பொறுக்காது, குழந்தைப்பிள்ளை மாதிரி..| மெல்லச் சொன்ன பத்மினியம்மாவை நன்றியுடன் பார்த்தான் இளஞ்செழியன்.
பருதியும் பூவிழியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.
இவர்கள் எல்லோரும் பத்மினியம்மாவையும் பரிபூரணனையும் ஏற்கவேண்டுமே என்ற எண்ணமே இருவருக்கும் மனதில் ஓடியது.
மதியம் இசைநிலாவும் மாலையில் வண்ணமதியுமாக பரமானந்தரை வந்து பார்த்துவிட்டுச் சென்றனர்.
அன்றைய பொழுது ஒருவாறாக ஓடி முடிந்தது.
மறுநாள், அதிகாலையில் வந்திறங்கிய பொற்செழியன் நேரேயே வைத்தியசாலைக்கு வந்துவிட்டான். கூடவே வானகனும் அண்ணனும் வந்திருந்தனர்.
அவனைக்கண்டதும் எவ்வளவோ முயற்சித்தும்; பூவிழியால் மனப்படபடப்பைக் கட்டுப்படுத்தமுடியவில்லை.
தந்தையைப் பார்த்துவிட்டு, பூவிழியைப் பார்த்தவன், மற்றவர்கள் அறியாதவாறு தலையை ஆட்டி, அவளுடைய மனதிற்கு அமைதி தந்தான்.
அவளுடைய ஏக்கம் அவனுக்குப் புரியாதா...அப்பாவுக்கு ஏதும் ஒன்றென்றால், ~அந்த வீட்டில் அவள் வாழமுடியாதே என்ற ஏக்கம்,| ~அவனுடைய.....என்கிற ஒரு ஆழமான உணர்வை இழந்து விடுவேனோ என்கிற ஏக்கம்...| தன்மீது எத்தகையதொரு அன்பை வைத்திருந்தால் இப்படி ஒரு வாழ்க்கையை வாழ நினைப்பாள். அவளுடைய அந்த அன்பிற்கு அவன் என்ன செய்யப்போகிறான்? அவள் இப்படி மனம் கலங்குவதற்கு அவன் விடலாமா?
அவளுடைய மனக்கலக்கத்திற்கு முடிவு கட்டவேண்டும் என்ற எண்ணத்தில் தானே அவனும் வந்திருக்கிறான்...
வானகனும் தமையனும் சிறிது நேரம் பரமானந்தரிடமும் பொற்செழியனிடமும் பொதுவாக கதைத்துக்கொண்டிருந்துவிட்டு, பூவிழியிடமும் பத்மினியம்மாவிடமும் சொல்லிக்கொண்டு புறப்பட்டுவிட்டனர்.
மகனைக்கண்டதும், பரமானந்தருக்கு கண்கள் கலங்கி கண்ணீர் வந்துவிட்டது. என்ன இருந்தாலும் அவருடைய மகன் என்கிற ஆழ்மனத்துடிப்போடு, பொற்செழியனுக்கு அவர் மீது இருக்கும் பாசமும் தான் காரணம்.
தகப்பனாரின் கைகள் இரண்டையும் பற்றிக்கொண்டவன், ~அப்பா...பெரிய பிரச்சினை ஒண்டும் இல்லை, நீங்கள் எதையும் பற்றி யோசிக்காமல் இருந்தால் சரி, உங்களுக்கு என்ன யோசனை எண்டாலும் என்னட்டைச் சொல்லுங்கோ, சில மாதங்களுக்கு இங்கதான் நிக்கப்போறன், நான் எல்லாத்தையும் பாத்துக்கொள்ளுவன், வண்ணமதி, பூவிழி, இளா எல்லாருக்கும் நான் கெதியிலை நல்ல எதிர்கால வாழ்க்கையை ஏற்படுத்திக் குடுப்பன், அதையெல்லாம் பாத்து நீங்கள் மகிழ்ச்சியடையவேணும், சரியா| என்றான்.
அவர் அரைகுறையாக தலையை ஆட்டியது புரிந்தது. ஏதோ ஒரு மனக்கலக்கம் அவரிடம் இருக்கிறது என்பது புரிந்தவனாக ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தான்.
முதலில் தாங்கள் மூவரும், பிறகு, தங்களுடன் பூவிழியும்தான் அவருடைய உலகம் என்பது அவனுக்குத் தெரியும்..
இப்போது தங்களைவிட, பூவிழி மீது அன்பும் அக்கறையும் சற்று அதிகம் என நினைத்துக்கொண்டான். அவளுக்கு நல்லதொரு வாழ்க்கையை ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும் என்ற துயரம் அவருடைய மனதை அலைக்கழிக்கிறதோ எனவும் யோசித்தவன், தான் நினைத்தவற்றை விரைந்து செயற்படுத்தவேண்டும் என்றும் எண்ணினான்.
தனக்குத் தெரியாத பெரிய விசயம் ஒன்று உள்ளதென்பது அவனுக்குத் தெரியாதே,
கதைத்துக்கொண்டிருக்கும் போதே இளஞ்செழியனும் வண்ணமதியும் இசைநிலாவும் வைத்தியசாலைக்கு வந்துவிட்டிருந்தனர்.
அன்று ஞாயிற்றுக்கிழமை, காலையிலேயே பத்மினியம்மா பரிபூரணனிடம் சென்றுவிட, இவர்கள் எல்லோருமாக தகப்பனாருடன் கதைத்துக்கொண்டிரந்துவிட்டு, மதிய வேளையில்தான் அங்கிருந்து புறப்பட்டனர்.
வழமை போல பருதி, பரமானந்தருக்கான உணவைக்கொண்டு வந்துவிட, பருதியையே அவரைப் பார்த்துக்கொள்ளுமாறு சொல்லிவிட்டு, இவர்களுடனே தானும் வீட்டிற்கு வந்தாள் பூவிழி.
~நான் வைத்தியசாலையில் நிற்கிறேன|; என்று பொற்செழியன் சொன்னபோதும் பூவிழிதான்
~பருதி பார்த்துக்கொள்ளட்டும்..|என்றுகூறி அழைத்து வந்திருந்தாள்.
பரிபூரணன் விசயத்தை மூவருக்கும் சொல்லவேண்டிய பாரிய பொறுப்பு பூவிழியிடமே இருந்தது. அதை அன்றே முடித்துவிட வேண்டும் என நினைத்துத்தான் அவளும் வீட்டுக்கு வந்தாள். சொல்லவேண்டும் என்று முடிவெடுத்து வந்துவிட்டாளே தவிர, எப்படிச் சொல்வது என்றுதான் அவளுக்குப் புரியவில்லை.
பூவிழி கூடவே வந்ததுடன், தன்னையும் நிற்கவிடாமல் அழைத்து வந்ததில் இருந்தே ~ஏதோ விசயம் இருக்கிறது| என்பது பொற்செழியனுக்குப் புரிந்தே இருந்தது.
பூவிழியே விசயத்தைச் சொல்லட்டும் என நினைத்துவிட்டு எதையும் கேட்காமலே வீடு வந்து சேர்ந்தான்.
வண்ணமதிதான் ஓயாமல் தமையனிடம் கதைத்தபடி வந்துகொண்டிருந்தாள்.
 

Author: Vishakini
Article Title: பூவிழி வாசம் - 31
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,290
384
83
Chennai
என்ன முடிவோட வந்து இருக்கான் செழியன்?????
நல்லது நடந்தா சரி தான்.....
பத்மினி அம்மாவை ஏத்துப்பாங்கணு தான் தோணுது