பூவிழி வாசம் - 34

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,634
6,876
113
பாகம் 34.
அது ஒரு பின் மாலைப்பொழுது. சூரியன் தன் இருப்பிடம் நோக்கி நகர்ந்து கொண்டிருந்தான். கடற்காற்று இதமாக வீசிக்கொண்டிருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஓரிரு குடும்பங்கள் உணவு உண்டபடியும் கதைத்துக்கொண்டும் இருந்தனர். சிறுவர்களின் குழந்தை மொழி அதிகமாக அந்த இடத்தை ஆக்கிரமித்திருந்தது. நீல அலைகளின் நளினத்தை ரசித்தபடி, நிற்கும் காதலர்கள் இருவர் தூரத்தில் தெரிந்தனர். அவர்களின் வெட்கம் கசிந்த பார்வைகள் இவர்களுக்கும் தெளிவாகத் தெரிந்தது.

கடற்கரை ஓரமாக அமைந்திருந்த அந்த அழகான உணவகத்தில் வெளியே காற்று மென்மையாக வீசிக்கொண்டிருந்தது. இயற்கைச் சூழலோடு இணைந்தவாறாக விரித்துப் போடப்பட்டிருந்த பெரிய மேசை, அதை ஒட்டிய கதிரைகளில் பெரிய குடும்பமாக ஒன்றுகூடி அமர்ந்திருந்தனர் சாம்பசிவத்தாரின் குடும்பத்தினர். சுற்றிலும் வரிசையாக சாடிகளில் தளிர்த்து நின்ற பூமரங்களில் இருந்து வெளிப்பட்ட வாசனை மனதை இதமாக்கியது.

"முதல், அண்ணாவுக்கு கேக் வெட்டுவம், பிறகுதான் சாப்பாடு...." வண்ணமதி சொல்லிவிட,

"இல்லை... அதெல்லாம் வேண்டாம்... எனக்கு உதெல்லாம் சரிவராது... நான் என்ன சின்னப்பிள்ளையே...நீங்கள் எல்லாரும் ஆசைப்பட்டதாலைதான் இப்பிடி வெளியில சாப்பிடவே நான் வந்தனான்..."
அவசரமாக பரிபூரணன் சொல்லிவிட,

"அண்ணா...இண்டைக்கு உங்கட பிறந்தநாள் மட்டும் இல்லை, எங்களுக்கு நீங்கள் கிடைச்ச நாளும்தானே, அதனால இந்த நாளை நாங்கள் மகிழ்ச்சியாகத்தான் கொண்டாட வேணும், உங்களுக்கு கேக் வெட்ட விருப்பம் இல்லை எண்டால் எல்லாரும் சேர்ந்து கேக் வெட்டுவம்... சரிதானே..... அதோடு அப்பாவும் அம்மாவும் இணைஞ்ச நாளும்தானே ." என்ற இளஞ்செழியனை, தந்தையார் மெச்சுதலோடு பார்க்க, மகிழ்ச்சியோடு பார்த்த பூவிழிக்கு, விழிகளை மூடித்திறந்து தன்னுடைய மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினான்.

மெல்லிய புன்னகை ஒன்றை வெளிப்படுத்தினாள் பூவிழி. இவர்களின் இந்த பார்வைப் பரிமாற்றத்தில் ஏதோ புகைந்தது பொற்செழியனுக்கு.
'மற்றவர்களோடு மட்டும் நல்லா கரிசனையா கதைக்கிறா, நடக்கிறா... என்னோடு மட்டும் தான்... ம்ம்... எவ்வளவு நாட்கள் இது போகுது எண்டு பாக்கிறன்... " தனக்குத்தானே கூறிக்கொண்டான் பொற்செழியன். அவனுடைய மனநிலை தெரிந்தாலும் தெரியாத மாதிரி அமர்ந்திருந்தாள் பூவிழி.

சிறிது நேரத்தில் பெரிய கேக் ஒன்று அவர்களுடைய மேசையை அலங்கரித்தது. எல்லோரும் வட்டமாக நிற்க, பூவிழி மட்டும் பின்னால் சென்று நின்றுகொண்டாள். தோழியைப் பார்த்து விட்டு தானும் எழுந்து பின்னால் சென்ற பருதியைக் கவனித்த பரிபூரணன்,

"செழியன்...இந்த சந்தோசத்துக்கு எல்லாம் காரணம், பூவிழிதான்... மற்றது
பருதியும். அவையள் அப்பா அம்மாவோட வந்து நிண்டு வெட்டட்டும்..." என்று சொல்ல,
" என்ன... வேண்டாம் ...வேண்டாம்... நீங்கள் எல்லாரும் வெட்டுங்கோ... பருதி நீயும் போ, நான் படங்கள் எடுக்கிறன்" என்றபடி பூவிழி எழுந்து விட,
பொற்செழியன் ஆழமான ஒரு பார்வை பார்த்து விட்டு,
தூரத்தில் வந்து கொண்டிருந்த பரிமாறும் பையனை அழைத்து,

" தம்பி, கொஞ்சம் படங்கள் எடுத்து விடுறீங்களோ? " என்று கேட்கவும் அந்த இளைஞனும் மகிழ்ச்சியோடு வந்து படங்களை எடுக்கத் தொடங்கினான்.
பருதியை பரிபூரணனுக்கு அருகில் நிற்குமாறு எல்லோரும் சொல்ல, வெட்கப்பட்டபடியே தயங்கித்தயங்கி அவனருகில் சென்ற பருதியை எல்லோரும் சேர்ந்து கேலி செய்தனர்.

என்றும் இல்லாமல் வாய்விட்டுச் சிரித்த பரிபூரணன் தானும் வெட்கத்தில் நெளிந்தான். அந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொண்ட பொற்செழியன் ஒருவாறாக பூவிழியின் அருகில் சென்று நின்று கொண்டான். நின்றதோடு மட்டுமல்லாது, தன்னுடைய கைகள் அவளுடைய கைகளில் பட்டும் படாமலும் இருக்குமாறும் பார்த்துக்கொண்டான். பொற்செழியனின் கைபட்டதால் சட்டென்று நிமிர்ந்த பூவிழிக்கு விழிகளை மலர்த்தி, புன் சிரிப்பொன்றை வெளிப்படுத்தினான். அவனுடைய நளினமும் குதூகலமும் இணைந்த அந்தச்சிரிப்பு இவளுக்கு என்னவோ செய்தது.

தனக்கு மிக அருகில் பொற்செழியனைக் கண்டதும் பூவிழிக்கு சொல்ல முடியாத உணர்வுகள் ஏற்பட்டன. அச்சமும் ஆனந்தமுமாக இருந்த அந்த உணர்வை அவளால் விபரிக்கவோ, விலக்கவோ முடியவில்லை. 'தள்ளிப் போகமாட்டானா' என்றும்
'அவன் அப்படியே நிற்கவேண்டும் போலவும்', இரு நிலைகளில் அவள் தவித்துக்கொண்டிருக்க, இரண்டு விழிகள் மட்டும் இந்தக் காட்சியை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தன. அது வேறு யாருமல்ல, பரிபூரணன் தான்.

கலகலப்பாக அந்த நிமிடங்கள் கழிய, ஓடிச்சென்று முதலில் தன்னுடைய அலைபேசியை வாங்கிய பொற்செழியனைப் பார்த்த போது, பரிபூரணனுக்கு மனதில் குழப்பமே தோன்றியது.
மனைவி வெளிநாட்டில் இருக்க, பூவிழியை நேசிக்கின்ற பொற்செழியனின் மனநிலையை அவனால் ஏற்க முடியவில்லை.

சே... பூவிழியின் விழிகளில் தெரிந்த அந்த பயத்திற்கும் படபடப்பிற்கும் பொற்செழியனின் நடவடிக்கைகளுக்கும் என்ன சம்பந்தம்... குழப்பத்தில் உறைந்திருந்தவனை,
"என்ன அண்ணா கடுமையான யோசனை" எனக்கேட்ட இளஞ்செழியனின் குரல் நடப்பிற்கு கொண்டு வந்தது.
"இ... இல்லை... ஒண்டும் இல்லை..." வாயால் மறுத்துரைத்தவனை சிரிப்போடு பார்த்து விட்டு,
"இருங்கோ... சாப்பிடுவம் " என்றான்.

தம்பியின் வார்த்தையைத் தட்டாதவனாக அமர்ந்து கொண்டவனுக்குள் எண்ண அலைகள் பலவாறாக ஓடியது.
'அம்மா விவரித்துக்கூறிய பொற்செழியன், அப்பாவின் நல் வளர்ப்பில் உருவான பொற்செழியன், குணக்கேடானவனாக எப்படி இருக்க முடியும். கட்டிய மனைவி இருக்க, இன்னொரு பெண்ணை நேசிக்கிறவனாக இருக்க முடியுமா,

கண்ட நொடி முதல் 'அண்ணா... அண்ணா ' என்று அவனைப் பாசத்தோடு அழைக்கிற பொற்செழியனுக்குள் இப்படி ஒரு அவதூறான குணம் இருக்கும் என்று அவனால் நம்ப முடியவில்லை. ஆனால் தற்போது தான் காண்பது உண்மை தானே, பூவிழியை வைத்த கண் வாங்காமல் பொற்செழியன் பார்ப்பதும் அவளுடனான நெருக்கத்தை விரும்புவதும் கண்முன்னால் தெரிகிறதே.
நிச்சயமக, அவனுடைய செயல்கள் ஒரு பெண் பித்தனுக்குரியவை அல்ல, அது ஒரு ஆழமான நேசத்தின் அடையாளமாகவே அவனுக்குத் தோன்றியது.

மண்டைக்குள் குடைந்துகொண்டிருந்த தன்னுடைய யோசனை மற்றவர்கள் காணும்படியாக மாறிவிடக்கூடாது என நினைத்தவன் தன்னைத் தானே சமாதானம் செய்தபடி, மற்றவர்களோடு சிரித்தபடி கதைக்கத் தொடங்கினான்.

எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். பொற்செழியனுக்கு எதிரில் தான் பூவிழி அமர்ந்திருந்தாள். மற்றவர்களோடு சகஜமாக கதைத்து உரையாடிய பூவிழி, பொற்செழியனிடம் மட்டும் விலகி இருப்பதும் பரிபூரணனின் பார்வைக்குத் தப்பவில்லை. இவர்கள் இருவருக்கும் ஏதோ தொடர்பு இருக்க வேண்டும் என்கிற எண்ணம் வலுவாக பரிபூரணனுக்குள் உருவானது.
தோற்றத்திலும் செயல்களிலும் கம்பீரமும் கண்ணியமும் கொண்டவனாக இருக்கிற பொற்செழியன் ஒருபோதும் தவறான எண்ணம் கொண்டிருக்க முடியாது. அதிலும் அவனால் இவ்வாறு நேசிக்கப்படுகிற பூவிழி...

கறந்த பாலைப்போல, சுத்தமான மனம் கொண்ட பூவிழி...

"பூவிழியம்மா ஒரு தேவதை மாதிரி, தன்னைவிட இந்தக் குடும்பத்தைப் பற்றியே எப்போதும் யோசிக்கிற பாசக்காரப்பெண்"
இப்படி அம்மா சொல்லி அவன் அடிக்கடி கேட்டிருக்கிறான்.
இவர்கள் இருவரையும் பற்றி ஆராய வேண்டும், என்ற எண்ணம் பரிபூரணனுக்கு வலுக்கத் தொடங்கியது. உதட்டில் புன்னகையைச் சுமந்து கொண்டிருக்கிற பொற்செழியனுக்குள் ஏதோ ஒரு வலி மறைந்திருப்பதை அவனுடைய இத்தனை வருட அனுபவ மூளை சொல்லாமல் சொன்னது.
யோசனையோடு திரும்பியவன், சற்றே அதிர்ந்து போனான்.
காரணம், அருகில் இருந்த பொற்செழியனின் அலைபேசி, எதிரில் அமர்ந்திருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த பூவிழியை காணொளியாகப் படம் பிடித்துக் கொண்டிருந்தது.
பொற்செழியனுக்கு மட்டும் திருமணமாகாமல் இருந்திருந்தால்.... பூவிழியைத் திருமணம் செய்து வைத்து மைத்துனியாக்கி, அவர்கள் எல்லோருக்கும் நெருங்கிய உறவாக்கிவிட்டிருக்கலாம், ஆனால், அவனுக்குத்தான் திருமணம் ஆயிற்றே....
ஏதேதோ சிந்தனைகள் எண்ணத்தை நிறைத்திருக்க, வண்ணமதி கேட்ட கேள்வி பரிபூரணனின் செவிகளில் விழவில்லை.
"அண்ணா...." சற்றே உரத்து அவள் அழைக்கவும் தான்,
"என்னடாம்மா...?" என்றான் திடுக்கிட்டு.
"பருதி அண்ணியை எப்பதான் வீட்டுக்கு கூட்டிட்டு வாறது?" என்றாள் மறுமுறையும்.
பருதி, வெட்கத்தில் தலை கவிழ்ந்து கொள்ள, பருதியை நன்றாகப் பார்த்த பரிபூரணன்,
"அது, அப்பா, அம்மா, செழியன் எல்லாரும் தீர்மானிக்கிற விசயம், " என்றான்.
உடனே, பரமானந்தத்தாரிடம் திரும்பிய வண்ணமதி,
" அப்பா... அப்பா... பருதி அண்ணியும் வீட்டுக்கு வந்திட்டா, நல்லா இருக்கும், கெதியில அண்ணாக்கு கலியாணம் செய்யுங்கோ " என்றாள்.
பரமானந்தத்தார் மகிழ்ச்சி யோடு தலையை ஆட்ட,
"அவருக்கு கீழ நாங்களும் காத்திட்டிருக்கிறமாக்கும்..." இளஞ்செழியன் சொல்ல, பெரிதான ஒரு சிரிப்பலை அந்த இடத்தை நிறைத்தது.
 

Author: Vishakini
Article Title: பூவிழி வாசம் - 34
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.