பூவிழி வாசம் - 35

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,634
6,876
113
பாகம் 35

"என்ன செழியா இது,...ஏன் இந்த திடீர் முடிவு?" தந்தையார் ஆதங்கத்தோடு கேட்க,
"அப்பா, இது திடீர் முடிவு இல்லை, உங்களுக்கு வருத்தம் எண்டதும் உடனே வெளிக்கிட்டு வந்திட்டன், ஒரு கிழமை விடுமுறை தானே எடுத்துக்கொண்டு வந்தனான், நான் உடனே போகவேணும் அப்பா, ரெண்டு மாசத்தில திரும்ப வருவன், இந்த முறை வந்து, எனக்கு சரியான மகிழ்ச்சி அப்பா, குறையாக கிடந்த ஏதோ ஒன்றை நிறைவா ஆக்கின திருப்தி எனக்கு. நீங்கள் எல்லாரும் ஒண்டா, இருக்கிறது எனக்கு எவ்வளவு ஆனந்தம் தெரியுமே, நான் அங்க அப்பிடி அப்பிடியே எல்லாம் போட்டது போட்டபடி வந்திட்டன், இப்ப போய் எல்லாம் ஒழுங்குபடுத்திப்போட்டு திரும்ப வருவன், வந்து அண்ணான்ர கலியாணம், இளாவுக்கு பொம்பிளை பாக்கிறது எல்லாம் முடிச்சிட்டு தான் போவன், அப்பா..."

"அது சரி, உன்னோட இளாவும் வண்ணமதியும் கொழும்புக்கு வருகினமாம்...."

" ஓமப்பா, வரட்டும்... ஊர் பாக்க ஆசையாக இருக்காம், அதுதான் கூட்டிக்கொண்டு போறன், மூண்டு நாளைக்கு அங்க பாத்திட்டு, அவையளை அனுப்பி போட்டுத்தான் நான் போகப்போறன், அதுக்கு முதல் உங்கள் எல்லாரட்டையும் நான் ஒரு விசயம் சொல்ல வேணும், கொஞ்ச நேரத்தில தோட்டத்துக்கு வாங்கோ அப்பா.... எல்லாரையும் கூட்டிக்கொண்டு, பூவிழி வேண்டாம் " என்றான்.
எதேச்சையாக சமையல் அறையில் இருந்து வெளிப்பட்ட பூவியும் பத்மினி அம்மாவும் பொற்செழியன் சொன்னதைக்கேட்டு சிலையாக நின்றுவிட்டனர். ஒருவரை ஒருவர் சங்கடத்தோடு பார்த்து விட்டு, வந்த சுவடு தெரியாமல் மீண்டும் உள்ளே போய்விட இதைக் கவனிக்காத பொற்செழியனும் மாடி ஏறி தன் அறைக்கச் சென்றுவிட்டான்.
. பூவிழி வேண்டாம் என்று மகன் சொன்னது சிறு வருத்தம் என்றாலும் காரணம் இல்லாமல் மகன் அப்படிச் சொல்லமாட்டான் என்பதில் பரமானந்தருக்கு முழு நம்பிக்கை இருந்தது. சில நாட்களாக மகனின் நடவடிக்கைகளை அவரும் கவனிக்காமல் இல்லையே, ஏதோ ஒரு முக்கியமான விடயத்தை கூறப்போகிறான் என்பது அவருக்கு விளங்கியது, அதனால் மௌனமான தலை அசைப்புடன் இளஞ்செழயனைக் கூப்பிட்டு விபரம் சொல்லிவிட்டு தோட்டப்பக்கமாக நடக்கத்தொடங்கியவர், அப்போதுதான் பார்த்தார், பூவிழி விறுவிறுவென நடந்து சென்று படலை திறந்து வெளியே செல்வதை.
மகன் சொன்னதை பூவிழி கேட்டிருக்கவேண்டும் என்பது உறுதியாகியது அவருக்கு.
'சரி.. என்ன தான் சொல்கிறான் என்று பார்ப்போமே ' என நினைத்தவர், ரயரால் செய்த நாற்காலி ஒன்றில் சாவகாசமாக அமர்ந்து கொண்டார்.

நேரம் பதினொன்று என்றது கடிகாரம், வெயில் கொஞ்சம் மோசமாகத்தான் எறித்துக்கொண்டிருந்தது. அன்று விடுமுறை நாள் என்பதால் எல்லோரும் வீட்டில் தான் நின்றனர், அன்று மாலை பயணம் வேறு , அந்த ஆயத்தங்களும் செய்து கொண்டிருந்தனர். பரமானந்தரின் சிந்தனை பலவிதமாக ஓடியது, மகன் சொல்லப்போகிற விடயம் என்னவாக இருக்கும், ஏன் பூவிழி வேண்டாம் என்றான், இப்படி எல்லாம் எண்ணங்கள் அவரை ஆக்கிரமித்து நின்றது.

சிறிது நேரத்தில், பரிபூரணன் அங்கு வந்து விட, தான் இருந்த இருக்கைக்கு அருகில் இருந்த இருக்கையைக் காட்டி, "இதில இரப்பா பூரணன்" என்றார்.
பரிபூரணனின் முகத்திலும் யோசனைக் கோடுகள் கோலமிட்டிருந்தன.
" என்னப்பா.... செழியன் ஏதோ கதைக்க வேணும் எண்டு சொன்னவராம்.... " பொற்செழியன் எவ்வளவோ சொல்லியும் பரிபூரணன் தம்பியை மரியாதையாக கதைப்பதை மட்டும் நிறுத்தவே இல்லை.

"ஓமையா... வரட்டும்.... மேல அறைக்குப் போனவன், " என்றார்.
கதைத்துக்கொண்டிருக்கும் போதே, வண்ணமதியும் இளஞ்செழியனும் வந்து விட்டனர். பின்னாலேயே பொற்செழியனும் வந்து சேர்ந்துவிட,
"மதியம்மா, அம்மாவைக் கூட்டிக்கொண்டு வா..." என்றான் பொற்செழியன். அந்த வீட்டில், வீட்டுத்தலைவி என்கிற முறையில் பத்மினி அம்மாவுக்கு உரிய மரியாதையைக் கொடுக்க வேண்டும் என்பது பொற்செழியனின் எண்ணமாக இருந்தது.

விரைந்து சென்ற வண்ணமதி, "அம்மா, அண்ணா கொண்டு போறதுக்கு சாப்பாட்டுப் பொருட்கள் செய்யிறா, எங்களைக் கதைக்கட்டாம், வாறாவாம்..." என்றபடி வந்து நின்றதும்,

" சரிசரி... நீ சொல்லப்பா "என்றார் தகப்பனார்.
தொண்டையைச் சற்றே செருமியபடி,
"அப்பா, நான் சொல்லப்போற விசயம் உங்களுக்கு எல்லாம் ஆச்சரியமாக, கொஞ்சம் அதிர்ச்சியாக கூட இருக்கும், ஆனால் இப்பவாவது இதைச் சொல்ல வேணும் என்று நினைக்கிறன்... " என்றுவிட்டு தகப்பனாரைப் பார்த்தான்.

தலையை ஆட்டி , 'மேலே சொல்லு' என்பது போல பார்த்த தகப்பனாரிடம் இருந்து பார்வையைத் திருப்பியவன்,
" இந்த வீட்டுக்கு, விருந்தாளியா இல்லாமல் உங்களுக்கு மகள் மாதிரி என்று வந்திருக்கிற பூவிழியை எனக்கு ஏற்கனவே தெரியும் அப்பா, அவவை 'சுரபி'யாக எனக்குத் தெரியும், முதல் முதலா நான் வன்னிக்கு, பயிற்சிக்காகப் போன போது, கருநாட்டுக்கேணியிலை சந்திச்சனான், காதலிச்சனான்,.... ஆனால் பயிற்சி முடிச்சிட்டு இங்க வர, அம்மா சொன்ன விசயம் எனக்கு பேரதிர்ச்சியா போட்டுது, எனக்கு, என்ரை காதலைவிட, உங்கள் மூண்டு பேரின்ரையும் நிம்மதி முக்கியம், அதனாலை தான் பிறகு அவா சொன்ன மாதிரி கலியாணம் செய்து அமெரிக்கா போனனான். ஆனால் நானும் சந்தனாவும் ஒருநாள் கூட கணவன் மனைவியாக நினைச்சதோ இருந்ததோ கிடையாது, சந்தனாவுக்கு மனநலப் பிரச்சனை இருக்கு, அவள் அங்க ஒருத்தரை விரும்பி கலியாணம் செய்திட்டாள், அவள் என்னை சாதாரண நண்பனாக கூட ஏற்க விரும்பேல்ல, போன உடனேயே தன்னுடைய நண்பிகளிட்ட போட்டாள், நாங்கள் வேற வேற இடத்தில் தான் இருந்தனாங்கள், சந்திக்கிறது கூட சரியான குறைவு, எனக்கும் படிக்கிறதில கவனம் இருந்ததே தவிர, அனு விசயம் பற்றிய எந்த எதிர்பார்ப்பும் இருக்கேல்ல, போன உடனேயே நாங்கள் விவாகரத்து எடுத்திட்டம், ஆனால் அவளுக்கு வருத்தம் வந்த பிறகு, நான் தான் சிகிச்சை எல்லாம் செய்து, அனுப்பினனான். கணவரும் கூட வந்தவர், வெள்ளை இனத்தைச் சேர்ந்தவர், நல்ல மனிதர்.
அப்பா, சுரபி என்னை நினைச்சுக்கொண்டுதான் இவ்வளவு வருசமும் கலியாணம் கட்டேல்ல, நானும் அவளை நினைச்சபடிதான் இன்னொரு வாழ்க்கை பற்றி யோசிக்கேல்ல,
இஞ்ச, எங்கட வீட்ட சுரபியைக் கண்ட உடனே, எனக்கு ஏற்பட்ட குதூகலம் வார்த்தைகளிலை சொல்ல ஏலாது, நான் குடும்பத்தோட வாழுறதா நினைச்சுத்தான் அவளும் எதையும் உங்களிட்ட சொல்லேல்ல, போனமுறை வந்த நேரம் சொல்லுவம் எண்டுதான் நினைச்சன், ஆனால், சுரபியின்ரை மனநிலை தெரியாமல், உங்களுக்குச் சொல்லவும் எனக்கு தயக்கமாக இருந்திச்சிது, இப்ப அவாட எண்ணம் வடிவா விளங்கிட்டுது, நான் இல்லாமல் வேற ஒருத்தரை சுரபி ஒருநாளும் கலியாணம் செய்ய மாட்டா,
அப்பா, சுரபியை கலியாணம் செய்ய ஆசைப்படுறன்... " என்ற பொற்செழியனை எல்லோரும் வியப்புடன் பார்த்தனர்.
பெருமூச்சு ஒன்றை வெளிவிட்ட தகப்பனார், " ஐயா, நீ பயிற்சி முடிச்சிட்டு வந்த உடனேயே, நீ ஆரையோ காதலிக்கிறாய் என்டுறதை நான் விளங்கிக்கொண்டனான், ஆனால் அம்மாவை எதிர்த்து நீ ஒண்டும் சொலாலாததால, நானும் பேசாமல் சுயநலமா இருந்திட்டன்.... " என்றார்.
உடனே, இளஞ்செழியன், "அண்ணா, எனக்கு விளங்கிது, நீங்கள் எங்களுக்காக உங்கட காதலை, ஆசைகளை, விருப்புவெறுப்புகளை எல்லாம் தியாகம் செய்திருக்கிறியள்...." என்றான் துயரத்தோடு.
"சேச்சே... இளா, நான் அப்பிடிச் சொல்லேல்ல, நீ ஒண்டும் யோசிக்காதை...." என்ற பொற்செழியனிடம்,

" எனக்கு தெரியும் அண்ணா, அம்மா உங்களை எதுவும் செய்ய வைக்கவேணும் எண்டால், எங்களைச் சொல்லித்தானே வெருட்டுறவா, " என்றான்.

"அண்ணாக்குட்டீ..." என்றபடி, ஓடிவந்து தமையனை அணைத்துக்கொண்ட வண்ணமதி, "எனக்கு தெரியும், உங்களைக் கண்டதிலை இருந்து பூவிழியம்மா வித்தியாசமாத்தான் இருக்கிறா, நான் யோசிச்சனான்...."என்றாள் புன்னகையுடன்.
உதடுகளை நிறைத்த புன்னகை நிறைந்து வழிந்தது பொற்செழியனுக்கு.
இருக்கையை விட்டு எழுந்து வந்த பரிபூரணன், பொற்செழியனின் கரங்களை இறுகப்பற்றிக்கொண்டான். அந்த பற்றுதலில் அதீத வார்த்தைகள் புதைந்துகிடந்தன.
"பிறகென்ன செழியா, உடனே பதிவுத்திருமணத்தைச் செய்ய வேண்டியதுதானே," என்றார் தகப்பனார்.
"நான் போய்விட்டு, ரெண்டு மாசத்திலை திரும்ப வாறன், வந்த உடனே அண்ணாக்கு கலியாணம் செய்வம், பிறகு எங்கட அலுவல் பாப்பம் "என்றான்.
"உனக்கு என்ன இன்னும் வயசு கிடக்கோ, ரெண்டு பேருக்கும் ஒண்டாவே செய்வம்...." என்ற தகப்பனார்,
"ஏனையா, ரெண்டு மாசம், இப்ப நிண்டு முடிச்சுக்கொண்டு போக ஏலாதோ?" என்றார்.
"ஓமப்பா...நீங்கள் சொல்லுறது தான் சரி," என்ற பரிபூரணனின் பக்கமாகத் திரும்பிய பொற்செழியன்,
நான் எவ்வளவு விரைவா முடியுமோ, அவ்வளவு விரைவா வாறன், வந்து மூண்டு மாசம் நிப்பன், சுரபியையும் கூடவே கூட்டிக்கொண்டு போறமாதிரி வருவன், இப்ப நான் உடனே போகவேணும் " என்றான்.
மகனின் அருகில் வந்த தகப்பனார், "செழியா, எங்களுக்காக யோசிச்சு யோசிச்சு உன்ரை வாழ்க்கையையே விட்டிருக்கிறாய், எனக்கு என்ன சொல்லுறது எண்டே தெரியேல்ல, ஆனால், இப்ப ஆகப்பெரிய மகிழ்ச்சி என்ன தெரியுமா?
நான் இந்த வீட்டுக்கு மருமகளா வரேல்லயே என்று ஏங்கின, பூவிழியம்மாவையே நீ இந்த வீட்டுக்கு உறவா, உரிமையா கொண்டு வரப்போறாய், அதுபோதும் எனக்கு, இதைவிட வேற என்ன வேணும், என்ர கடைசி காலத்தில மனமகிழ்ச்சி தாற மாதிரி நிறைய விசயங்களைத் தந்திட்டாய்... இது போதுமையா எனக்கு..." என்ற தகப்பனாரை இறுக்கமாக அணைத்துக்கொண்ட பொற்செழியன், எல்லோரையும் நிமிர்ந்து பார்த்து, "இந்த விசயம் தெரியும் எண்டுறதை ஒருதரும் சுரபிக்குச் சொல்லவேண்டாம்" என்றான்.
சிரித்தபடி, எல்லோரும் தலையை ஆட்டினர்.
 

Author: Vishakini
Article Title: பூவிழி வாசம் - 35
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.