பூவிழி வாசம் - 36 ( இறுதி அத்தியாயம் )

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,634
6,876
113
பாகம் 36
தந்தை,தமையன்,தாய் என்று வீட்டு உறவுகளிடம் விடைபெற்றுக்கொண்ட பொற்செழியன், சற்று தள்ளி நின்று பூவிழியோடு உரையாடிக்கொண்டிருந்த பருதியின் அருகில் வந்து,
"அண்ணி, போய்ட்டு வாறன்" என்ற போது,
அதிர்ச்சியும் ஆனந்தமுமாக அவனை நிமிர்ந்து பார்த்த பருதி,
சங்கடத்துடன்,
"அது.... வந்து.. நீங்கள்..." தட்டுத்தடுமாறி ஏதோ சொல்ல முற்பட,

"பதற்றப்படாதேங்கோ, கெதியிலை, அண்ணாவைக் கலியாணம் செய்து, இந்த வீட்டுக்கு வரப்போறீங்கள், அதனால 'அண்ணி' எண்டு சொல்லுறதிலை ஒரு பிரச்சனையும் இல்லை,"
என்றுவிட்டு,
"அப்பிடித்தானே, அண்ணா......" என்றான் பரிபூரணனிடம் திரும்பி.
தலையை ஆட்டிய பரிபூரணன், கண்களில் துளிர்த்த கண்ணீரைத் துடைத்துக் கொண்ட போது, அருகில் வந்து இறுக்கமாக அணைத்துக்கொண்டான் பொற்செழியன்.

பரிதிக்கு பொற்செழியனைப்பார்க்க ஆச்சரியமாக இருந்தது.
"எவ்வளவு பெரிய உயரத்தில் இருப்பவர், எவ்வளவு எளிமையாகக் கதைக்கிறார்...." என்றாள் பூவிழியிடம்.

தங்கள் பயணப்பைகளுடன் வந்து நின்ற வண்ணமதியையும் பூவிழியையும் நன்றாகப் பார்த்தான்.

தார்ச்சாலையில் உருண்டு கொண்டிருந்தது அந்த வெள்ளைநிற மகிழுந்து. தம்பி, தங்கையோடு தன் மனதுக்கு இனியவளையும் சுமந்து சென்ற மகிழுந்தை தானே ஓடிக்கொண்டிருந்தான் பொற்செழியன். கண்ணாடியைச் சற்றே சரித்துவிட்டு, பின் இருக்கையில் இருந்த பூவிழியை அவ்வப்போது இரசித்துக் கொண்டிருந்தவன்,

"ஓ.. சோனா.. ஓ சோனா... ஐலவ்யூ லவ்யூதான்...."என்ற துள்ளிசைப்பாட்டு ஒலி வடிவில் கசிந்து கொண்டிருந்தது.

பாடலின் இசைக்கேற்ப, கைகளால் தாளமிட்டபடி மகிழுந்தை ஓடிக்கொண்டிருந்தவனின் மகிழ்ச்சிக்கான காரணம், சகோதரர்கள் இருவருக்கும் தெரியும் என்றாலும், பூவிழிக்கு அவனின் இந்த மாற்றம் வியப்பாகவே இருந்தது.

"மனைவியைப் பாக்கப்போகிற ஆனந்தத்தில் ஐயா குஷியாக இருக்கிறாராக்கும் " மனதில் ஒரு சின்ன பொறாமைத் தீ பற்றி எரிந்தது பூவிழிக்கு.

"சே... என்ன எண்ணம் இது, அவருடைய மனைவியை அவர் பாக்கப் போகிறார், நமக்கென்ன....., இது என்ன சிந்தனை..." தன்னைத்தானே மானசீகமாக குட்டிக்கொண்டாள்.

கண்ணாடி வழியாக பூவிழியைப் பார்த்த பொற்செழியனுக்கு அவளுடைய வாடிய முகம் கவலையைக்கொடுத்தது. அந்தக்கணமே அவளை அணைத்துக்கொண்டு, எல்லாம் சொல்லவேணும் போல தோன்றினாலும் அவர்கள் இருவருமாக இருக்கிற அழகான ஒரு பொழுதில் தான் அதைச்சொல்லவேண்டும் என நினைத்து, கொழும்பில் அவன் திட்டமிட்டிருந்தவை நினைவுக்கு வரவும் அமைதியாக அவளையே பார்த்தபடி காரை ஓடினான்.
"அண்ணா, நான் ஒடுறன், தாங்கோவன்," என்ற பொற்செழியனின் வார்த்தைகளில் நடப்புக்கு வந்தான்.
"இன்னும் கொஞ்சம் ஓடுறன் பிறகு நீ ஓடு..." என்று விட்டு, உடனேயே,
"சரி வா வந்து ஓடு, அதில இறங்கி இஞ்சி தேத்தண்ணி குடிப்பம் " என்றபடி காரை நிறுத்தினான்.

நால்வருமாக இறங்கிக் கொண்டனர்.
பொற்செழியன் முன்னால் நடக்க, பின்னால் பூவிழியும் வணாணமதியும் கடைசியாக இளஞ்செழியனுமாக உள்ளே சென்றனர்.
பூவிழியின் அருகில் அமர்ந்து கொண்டு, சற்றே நெருங்கி அமர்ந்தபடி, அவளுக்கு பிடித்த சிற்றுண்டியும் இஞ்சி தேநீரும் ஓடர் செய்தான். அருகில் அவனிருக்க, அவஸ்தையாய் சகித்தவள், தேநீரை மட்டும் விரைவாக அருந்தி விட்டு,
"நான் வெளிய நிக்கிறன் வாங்கோ" என பொதுவாக கூறியபடி, விறுவிறுவென வெளியே சென்று விட, இளஞ்செழியனும் வண்ணமதியும் அண்ணனை நன்றாக முறைத்தனர்.
"கொஞ்சம் பொறுக்க முடியாம, எல்லாத்தையும் சொதப்பிடாதேங்கோ அண்ணா " என்றாள் வண்ணமதி.
"இதுக்கு பேசாமல் வீட்டிலயே எல்லாத்தையும் சொல்லி இருக்கலாம்" என்றான் இளஞ்செழியன்.
தம்பி, தங்கை இருவரையும் சோகமாகப் பார்த்தவன், ஏதும் பேசாமல் சிறு பையன் போன்று உதடுகளைச் சுழித்தான்.
"செய்யிறதெல்லாம் செய்து, அண்ணியை கடுப்பாக்கிவிட்டு, குழந்தப் பிள்ளை மாதிரி முகத்தை வைச்சிருக்கிறதில அண்ணா கெட்டிக்காரன்,,...போங்கோ அண்ணா...."என்ற வண்ணமதி,
"நான் பூவிழிஅம்மாட்டப்போறன், ரெண்டு பேரும் வாங்கோ" என்றுவிட்டு விரைந்து நடந்து விட்டாள் பூவிழியிடம்.
ஒருவரையொருவர் பார்த்துக்கொண்ட அண்ணன்தம்பி இருவரும் வாங்கிய சிற்றுண்டியை பொதி செய்யச் சொல்லிவிட்டு தேநீரை மட்டும் அருந்திவிட்டு தங்கையைப் பின்தொடர்ந்து ஓடி வந்தனர்.
அங்கே இனிய ஆச்சரியம் ஒன்று அவர்களுக்காக காத்திருந்தது.
ஆம்!
வானகனின் அண்ணன், அண்ணி உட்பட குடும்பம் மொத்தமாக ஊரிலிருந்து கொழும்புக்குச் சென்று கொண்டிருந்தனர். பூவிழிக்கும் வண்ணமதிக்கும் ஆச்சரியமும் சிறு அதிர்ச்சியும்தான்,
எப்படி....
ஏதேச்சையாகவா, திட்டமிட்டா இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது என்பதை நினைத்து இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
தனது உண்மையான பிறப்பு தெரிந்த நொடியில் இருந்து வண்ணமதி வானகனை நினைப்பதையே விட்டு விட்டாள்.
யாரிடமோ அலைபேசி இலக்கம் வாங்கி, கதைத்துவிட்டான். அதன் பிறகு, அக்கறையான விசாரிப்புகளிலும் அன்பான வார்த்தைகளிலும் மட்டும் அவர்களின் காதல் வளர்ந்து ஙொண்டிருந்ததே தவிர, ஓருவரிடம் ஒருவர் சொல்லிக்கொள்ளவில்லை,
காலத்தின் கையில் தன் காதலை ஒப்படைத்திருந்தாள் வண்ணமதி, ஆனால் வானகன் அப்படி விடுகிறவன் இல்லையே, சொல்வதற்கு பலமுறை முயற்சி செய்தான், ஆனால் அதற்கு சந்தர்ப்பம் வாய்க்கவே இல்லை, அவன் தன் காதலைச் சொல்வதற்கு தருணம் பார்த்து காத்திருக்க, அந்த இடைப்பட்ட நாட்களில்தான் பரமானந்தரால் எடுத்து வளர்க்கப்பட்ட விசயமும் வண்ணமதிக்கு தெரியவந்தது.
அவளுக்கு வானகனின் குடும்பத்தைப் பற்றித்தெரியும், உயர்ந்த கௌரவத்தில் இருக்கிற அவர்கள், பெயர்,ஊர் தெரியாத ஒரு அநாதைப்பெண்ணை மருமகளாக ஏற்பார்களா, தன்னால் அண்ணன்களுக்கோ, தன் குடும்பத்திற்கோ எந்த இழுக்கும் வந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள். அதன் காரணமாகவே தன்னைப்பற்றிய விசங்களைச் சொல்லிவிட்டு, சில நாட்களாக வானகனிடம் கதைப்பதையே தவிர்த்து விட்டிருந்தாள்.
அப்படியான ஒரு சூழலில் வானகன் குடும்பத்தார் எதிரில் வந்து நிற்பதைக் காணும் போது, இவளுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. சிறு புன்னகையோடு, சற்றே விலகி நின்றுகொண்டாள்.
சிற்றுந்தில் இருந்து இறங்கி, தமையனுடன் கைபற்றி, வானகன் சிரிப்போடு கதைப்பதைக்காண இவளுக்கு மனதை எதுவோ பிசைவது போல இருந்தது. பூவிக்கும் அவர்களை ஓரளவு தெரியும் என்பதால் அவர்கள் எல்லோரும் வீதியை விட்டு சிறிது இறங்கி நின்று கதைத்துக்கொண்டிருந்தனர். ஏதோ முக்கிய விசயம் பார்ப்பது போல, அலைபேசியைப் பார்த்துக்கொண்டிருந்த வண்ணமதி, அதிலிருந்து கண்களை எடுக்கவே இல்லை. எல்லோரும் அறிமுகமாகி கதைத்து முடிக்க, வண்ணமதியின் அருகில் வந்த வானகனின் தாய்,
"என்னம்மா வண்ணமதி, கதைக்கமாட்டியா? " என்று கேட்டதும் திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.
"இல்லை... அப்பிடி இல்லை...." மென்று விழுங்கினாள்.
என்னை உங்களுக்கு....எப்படி தெரியும்?" என்று கேட்கவும்
வானுதான் சொன்னவன்,
"ஓ...." என்றவள்,
ஒரு பெரிய மேசைமைச் சுற்றி எல்லோரும் அமர்ந்திருந்தனர்.

வானகனின் பார்வை, அவ்வப்போது தன்னை அளந்து நகர்கிறது என்பது புரிந்தாலும் நிமிர்ந்து பார்க்காமல், அவன் பக்கமே திரும்பாமல், அப்படியே இருந்தாள் வண்ணமதி.
பொற்செழியன் தான் எல்லோருடனும் கலகலப்பாக உரையாடியபடி இருந்தான். இப்படி, கலகலவென அவன் கதைப்பது பூவிழிக்கும் ஆச்சரியமாக இருந்தது.
அவள் பார்த்த நாளில் இருந்து, மனதில் ஏதோ ஒன்றைத் தூக்கிச் சுமந்து கொண்டு, இருப்பதைப் போல, கனமாகவே இருப்பவன், இப்போது, அதுவும் இந்த முறை வந்து தான் நல்ல மகிழ்ச்சி ஆக, கலகலப்பாக இருக்கிறார் என தனக்குள்ளே நினைத்துக்கொண்டாள்.
மனதில் ஒரு பேரமைதி தோன்றியது . 'பொற்செழியன் எப்போதும் இப்படி மகிழ்ச்சியா, இருந்தால் போதும்....' என நினைத்துக் கொண்டாள்.
சந்தோசமான இரண்டு குடுபத்தினருக்குமான உரையாடலை முடித்துக் கொண்டு இரண்டு வாகனங்களும் கொழும்பு நோக்கிப் புறப்பட்டன.
--------------------------------------------------------------------------------------------------------
அந்த இரவுப் பொழுது கருமையைப் பூசிக்கொண்டு உலகை தன்வசப்படுத்தியிருந்தது. வீதி விளககுகளின் ஒளி பாதைகளை அழகு படுத்திக் காட்டிக்கொணண்டிருந்தது.
வடை வண்டிகளும், தும்பு மிட்டாய் விற்பவர்களும் கரஞ்சுண்டல் வண்டியும் அங்கங்கே நின்று கொண்டிருந்தன.
பரிபூரணன் தகப்பனாரை ஏற்றிக்கொண்டு ஈருருளியை மெல்ல ஓடிக்கொண்டிருந்தான். பின்னால் இருந்த பரமானந்தருக்கோ கட்டுக்கடங்காத மகிழ்ச்சி, அவருடைய முதல் மகன், அவருடைய வாரிசு, தொட்டுத்தூக்கி அவர் வளர்க்காத மைந்தன், இப்போது தன்னிடம் வந்து சேர்நாதுவிட்டான் என்கிற எண்ணமே அவரை பலமடங்கு உவகை கொள்ள வைத்தது
மகன் கோபத்தை விட்டு தன்னை ஏற்றுக்கொண்டு விட்டான் என்பதில் மனம் நிறைந்து கிடந்தது அவருக்கு.
"பூர்ணா, என்னை மன்னிச்சுக்கொள்ளப்பா, எனக்கு உன்னையும் அம்மாவையும் பற்றின விபரம் எதுவுமே தெரியாது, தெரிஞ்சிருந்தால் உங்களை இப்பிடி தவிக்க விடாடிருக்கவே மாட்டன்" மூன்றாவது தடவையாக இதைச் சொன்னவரை, எப்படி ஆறுதல் படுத்துவது என்று தெரியாமல் உந்துருளியை ஓரமாக நிறுத்தினான்.
“அப்பா, நான் உங்களைப் புரிஞ்சுகொண்டன், எனக்கு இப்ப எந்த கோபமோ வருத்தமோ இல்லை ,
அப்பா, நான் சொன்னது விளங்கினது தானே, வீட்ட போன உடனே வெளிக்கிடுவம், எனக்கு உடனே, அவையள் எல்லாரையும் பாக்கவேணும் போல இருக்கு‘
சரியப்பா வெளிக்கிடுவம்...
--------------------------------------------------------------------------------------------------------
பூவிழியம்மா.... வெளிக்கிடுங்கோ, வெளியில போய் வருவம்...
உறக்கம் தெளிந்து விழிக்கும் போதே, பூவிழியை வந்தடைந்த வண்ணமதியின் வார்த்தைகள் இவை.
கண்களை மெல்ல கசக்கியபடி, தலையணையை இறுக்கி கழுத்துக்கு அணையிட்டுக்கொண்டே
"எங்க வெளியில போறது, நீங்கள் போய் வாங்கோவன் வண்ணமதி" என்ற பூவிழியிடம்
"அதெல்லாம் இல்லை, நாங்கள் வாறதே உங்களுக்காகத்தான்... " என்றுவிட்டு கண்களை விரித்து உதட்டைச் சுருக்கினாள் வண்ணமதி.

"ஏன்... நான் எப்ப வெளியில போக எண்டு கேட்டனான்,.... "
பூவிழி கேட்கவும்

"அது எல்லாம் கிடக்கட்டும், வெளிக்கிடுங்கோ போய் வருவம், கொழும்புக்கு வந்து, அறையில படுத்து நித்திரை கொள்ளுறதே, நாலு இடம் பாத்திட்டு போறதுதானே மகிழ்ச்சி...." வண்ணமதி நீட்டி முழக்கி, சொல்ல ஆரம்பிக்கவும்
" சரி.... சரி.... போவம்.... " என்று சிரித்த பூவிழி சோம்பல் முறித்தபடி எழுந்து அமரவும் வண்ணமதியின் அலைபேசி ஒலி எழுப்பவும் சரியாக இருந்தது.

" ஓம் அண்ணா, சொல்லுங்கோ"
" இந்தா, இப்ப வெளிக்கிட்டிடுவம்"
"ஓமோம்.... பூவிழியம்மா வெளிக்கிடுறா"
வண்ணமதி சொன்னவைகளைக் கேட்டுக்கொண்டு படுத்திருந்த பூவிழி, பார்வையால் வினா தொடுக்கவும், 'சின்ன அண்ணா தான், அவனுக்கு எப்பவும் அவசரம் தான்....' என்றாள் வண்ணமதி.
கேட்டுக்கொண்டே எழுந்த வண்ணமதி, குளியலறைக்குள் புகுந்து சற்று நேரத்தில் வெளியே வந்து சேரவும் வண்ணமதி, கையில் ஒரு பையோடு வந்து சேரவும் சரியாக இருந்தது.

வெங்காய நிறத்தில் சுரிதார் போட்டிருந்த வண்ணமதி, " இந்தாங்கோ பூவிழியம்மா, இந்தச் சாறியைக் கட்டுங்கோ " என்றபடி ஒரு பார்சலை நீட்டவும்
" ஏன்... நான்... இதென்ன வண்ணமதி, இருக்கிற ஏதாவது ஒரு உடுப்பை போடுறனே" என்றாள்.

" பூவிழியம்மா, எங்கட உடுப்புக்கு ஏற்ற நிறத்தில நீங்கள் இந்த உடுப்பு தான் போட வேணும் சரியோ, இல்லாட்டி நான் கதைக்கவே மாட்டன்" சிறுமி போல உதட்டைச் சுழித்தபடி நின்ற வண்ணமதியை, ஒரு சின்னச் சிரிப்போடு பார்த்த பூவிழி, அந்த உடுப்பு பையை வாங்கிக்கொண்டு செல்லவும் பின்னால் வந்து கட்டி அணைத்த வண்ணமதி,
" நன்றி பூவிழியம்மா வெளிக்கிட்டு கீழ வாங்கோ" என்று விட்டு கதவைத்திறந்து கொண்டு வெளியே ஓடினாள்,
பையைப்பிரித்த பூவிழி இனிய ஆச்சரியத்துடன் அதனுள் இருந்த சாறியை திருப்பித் திருப்பி பார்த்தாள். அது ஒரு காலத்தின் நினைவுப் பொக்கிஷமாக இருந்தது. பொற்செழியன் வைத்திய பயிற்சிக்காக வந்து, ஒரு வருடம் நிறைவுற்று, அவருடைய தொழில் திறனைப் பாராட்டியும் பிரிவபசார விழாவாகவும் நடந்த நிகழ்வு நாளில் அவள் ஒரு நாவல் நிற சாறியைத்தான் கட்டிக்கொண்டு சென்றிருந்தாள். அதே மாதிரியான சாறிதான் இப்போது அவளுடைய கையில் இருந்தது.

அன்றுதான் அவர்கள் இருவரும் சந்தித்த கடைசி நாளும். பொற்செழியன் பூவிழியின் கழுத்தில் கறுப்பு கயிறு கட்டிய போது அவள் அந்த சாறிதான் அணிந்திருந்தாள்.

அது அன்றைய நாள்தான். அவனுக்கு எதுவும் நினைவில் இல்லை என்கிற எண்ணம் கொடுத்த மனவேதனைதான் இவ்வளவு நேரமும் அவள் தலையிடியோடு போராடியதற்கான காரணம்.
அந்த சாறியைப் பார்த்த கணத்தில் அவளுக்கு ஏற்பட்ட ஆனந்தத்திற்கு அளவே இருக்கவில்லை, அதை இறுக்கமாக அணைத்துக்கொண்டு நின்றவள், மளமளவென அதோடு வைக்கப்பட்டிருந்த மேற்சட்டையைப் போட்டுப்பார்த்தாள். அவளுடைய அளவுக்கு கச்சிதமாகப் பொருந்தியது.

' இந்த வண்ணமதி என்னவெல்லாம் செய்திருக்கிறா....' என்று நினைத்துக்கொண்டே சாறியைக்கட்டி முடித்து, தலையை இழுத்து கிளிப் போட்டாள். சின்னதான ஒரு அலங்காரத்துடன் அடுக்குகள் அற்று ஒரு பக்கமாக வழிந்து கொண்டிருந்த சாறித்தலைப்பை சுத்தி கையில் எடுத்துக்கொண்டே படிகளில் இறங்கி கீழே வந்தாள்.
அவள் படிகளில் திரும்பவும் பொற்செழியன் கீழ் நிலத்தில் நிற்பதைக்கண்டு, கொஞ்சம் வெட்கம் கொண்டவளாக விறுவிறுவென்று படிகளில் இறங்கினாள்.
கீழே நின்ற அவளுடைய நேசகன், தன்னை காணொளி பதிவு செய்கிறான் என்பதை அவள் அறியவில்லை.
மெல்லிய மாலைப்பொழுது, இளாவும் வண்ணமதியும் கைகளை அசைத்துக்கொண்டு முன்னால் போக, பின்னால் திரும்பி பார்த்தாள். பொற்செழியன் போனில் எதையோ ஆர்வமாகப் பார்த்தபடி நடந்து வருவது தெரிந்தது.

நீர்கொழும்பு கடற்கரையில் நால்வருமாக நடந்து சென்று கொண்டிருந்தனர்.
மனமெல்லாம் மத்தாப்பு பொழிய, பழைய நினைவுகளில் நடந்த பூவிழி, வண்ணமதியும் இளஞ்செழியனும் ஒருபக்கம் போனதைக் கவனிக்கவில்லை.
கையோடு கை உரசும் நெருக்கத்தில் வந்த பொற்செழியன்,
"சுரபி...." என்றதும் விருட்டென்று திரும்பினாள் பூவிழி.

"அந்த அழைப்பும் அது கொடுத்த சுகமும் தொலைஞ்சு எட்டு வருசமாச்சு.... அதை எல்லாம் கதைச்சு என்ன பிரயோசனம்??
தயவுசெய்து இனிமேல் அதை எனக்கு நினைவுபடுத்தாதேங்கோ...அது என்ர வாழ்க்கையின்ர கடந்த காலம்..... "
ஆண்டாண்டு காலமாக துயரப்பட்டு வெறுமையும் வேதனையும் மட்டுமே சுமந்து வந்தது அந்தக் குரல். அந்தக் குரலுக்குள் இருந்த துக்கமும் வேதனையும் பொற்செழியனுக்கு அவளுடைய நிராதனவான மனநிலையை அப்படியே படம் பிடித்துக் காட்டியது.
தன் கை அருகில் உரசிய அவளுடைய கையை தன் இரு கரங்களாலும் அள்ளி எடுத்த பொற்செழியன்,
" எட்டாவது வருச திருமண நல்வாழ்த்து சுரபியம்மா " என்றான்.
விக்கித்துப் போய் நிமிர்ந்து பார்த்தாள் பூவிழி.
" நான் எதையும் மறக்கேல்ல, என்ர நினைப்பில இருந்து உன்னை விலக்கவும் இல்லை, நீயும் நானும் எண்றது கடவுள் அமைச்ச உறவு, அது ஒரு நாளும் விட்டு பிரியாது" என்றான்.

ஆச்சரியமும் அதிர்ச்சியுமாக விழிகளை விரித்தபடி அவள் சிலையாக நிற்க, தன் நெஞ்சில் ஒரு புறமாக அவளை அணைத்தபடி, பக்கத்தில் இருந்த மரக்கதிரை ஒன்றில் அவளை இருத்திவிட்டு தானும் அருகில் அமர்ந்த பொற்செழியன்,
" சுரபி நான் சொல்லுறதை கவனமா கேளம்மா, ஒருநாளும் உனக்கு நான் துரோகம் செய்யேல்ல, உன்னை விலக்கி வைக்கவும் இல்லை, உன்னை மறக்கவும் இல்லை.... " என்று சொல்லிவிட்டு நடந்த அத்தனை விசயங்களையும் ஒன்றும் விடாமல் சொல்லி முடித்தான்.

அவன் எப்பவுமே தன்னுடைய பொற்செழியனாகத்தான் இருந்திருக்கிறான் என்கிற உண்மை, அவளை இனிமையான ஆச்சரியத்திற்குள் இறக்கியது.
தொடர்ந்து வந்த அவனுடைய குரல் சொன்ன மொழிகளில் ஒரு மோனத்தடாகத்தில் மூழ்கிக்கொண்டிருந்தாள் பூவிழி.
அப்போது பொற்செழியனின் அலைபேசி ஒலி எழுப்பி, இன்பச்சாரலை சற்றே தள்ளி வைத்தது.
அதை எடுத்து காதிலே பொருத்திய பொற்செழியன்,
எதிர்ப்பக்கம் வந்த பரிபூரணனின் குரலில் கொஞ்சம் வெட்கம் கொண்டவனாக,
"என்ன அண்ணா நீங்கள் " என்றான்.
பூவிழி கேள்வியாய் பார்க்கவும் அவளுக்கும் விளங்குமாறு செய்துவிட்டு, சிரிப்போடு பார்த்தான்.
இளஞ்செழியன், வண்ணமதி, பரிபூரணன், பருதி, வானகன், எல்லோரும் குழு அழைப்பில் இணைந்திருப்பதைக் கண்ட போது, இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை,
கலகலவெனக் கதைத்தபடி, திருமண வாழ்த்தினைக் கூறிவிட்டு, அவர்கள் அனைவரும் அழைப்பை துண்டித்து விட,
பொற்செழியனின் கைகளை இறுகப் பற்றிய பூவிழி, அந்தக் கைகளை தன் கண்ணில் ஒற்றியபடி குலுங்கி அழத்தொடங்கினாள்.

"இந்த நிமிசமே என்ர உயிர் போனாலும் கூட எனக்கு மகிழ்ச்சி தான்...." என்றாள்.
ஆதுரமாக அவளை அணைத்துக் கொண்டவன்,
" நாங்கள் இன்னும் வாழவே தொடங்கவில்லை, அதுக்குள்ள என்ன கதை இது சுரபியம்மா.... " என்றான்.
பூவிழியும் பொற்செழியனும் விடுதிக்கு வரவும் குடும்பம் மொத்தமும் ஒன்றாக நின்று இவர்களை வரவேற்றனர்.

பரிபூரணன், பருதி, தகப்பனார், பத்மினி அம்மாஇ இசை குடும்பம் என்று எல்லோரையும் ஒன்றாகப் பார்த்த இவர்கள் இருவருக்கும் கட்டுக்கடங்காத மகிழ்ச்சி பொங்கிப் பிரவாகித்தது.
"என்னப்பா, நீங்களும் வந்திட்டீங்களா?" என்ற பொற்செழியனிடம்
தலையை ஆட்டினார் பரமானந்தர்.
“செழியா, நான் அப்பாவோட இருக்கவேணும் எண்டுதானே நீ திடீரெண்டு வந்தனி, எனக்கு விளங்கும், எனக்கு உங்கள் எல்லாரோடையும் சேர்ந்து இருக்கிறதுதான் மகிழ்ச்சி.
அண்ணனின் வார்த்தைகளில் மகிழ்ந்துபோனான் பொற்செழியன்.
இசைவிழி, பூவிழியின் அருகில் வந்து அவளை இறுக கட்டிக்கொண்டு, விக்கிவிக்கி அழத்தொடங்கினாள்.
எல்லோரையும் பார்த்தபூவிழி கேள்வியாய், பத்மினியம்மாவைப் பார்க்க,
அவர் தான், இசைக்கு இளஞ்செழியனைப் பிடித்திருந்தது என்றாலும் பரிபூரணனைத் தான,; அவள் திருமணம் செய்யவேண்டும் என்றுஇசைநிலாவின் அப்பா சொல்லிச் சொல்லி பதியவைத்த காரணத்தினால் இளஞ்செழியனை வெறுத்தது போல நடித்ததையும் பரிபூரணனின் மனதில் ஒரு சகோதரத்துவமான அன்புதான் இருந்தது என்பதை தம்பியாருக்கு புரியவைத்ததையும் விளக்கமாகச் சொன்னார்.
பூவிழியின் அருகில் வந்து, தலையை ஆட்டிவிட்டு, இசை நிலாவைத் தன் கரங்களுக்குள் அணைத்துக்கொண்ட இளஞ்செழியன், மெதுவாக கூட்டிச் செல்வது கண்டு இவர்கள் அனைவரும் ஆனந்தப் பெருமூச்சு விட்டனர்.

காதலின் பொன்னூஞ்சலில் ஆடுறது மகிழ்ச்சி தானே....
 

Author: Vishakini
Article Title: பூவிழி வாசம் - 36 ( இறுதி அத்தியாயம் )
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.