• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

பூவிழி வாசம் - 4

Vishakini

Moderator
Staff member
பாகம் 4.
வைத்தியசாலை வளாகம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. உயர வளர்ந்திருந்த மின்சார மரங்களின் கீழே அடுக்கப்பட்டிருந்த வாங்கில்களில் ஒரு சில நோயாளிகளும் அவர்களோடு தங்கிநிற்கும் உறவினர்களுமாக அமர்ந்திருந்தனர்.
ஆங்காங்கே செவ்வரத்தை, கடுதாசிப்பூ மரங்கள் பூக்களோடு சிரித்துக்கொண்டிருந்தன.
இடையிடையே காசித்தும்பை பூக்களும் அழகு காட்டின.
சில முகங்களில் சோகமும் சில முகங்களில் மகிழ்ச்சியும் என வெவ்வேறு மனநிலை கொண்டவர்கள் அங்கு இருந்தனர்.
அது தனியார் வைத்தியசாலை என்றாலும் மிகமிக குறைந்த கட்டணத்தில் சேவை நோக்கோடு அதனை நடாத்தி வருவதாலும் கைராசியான வைத்தியசாலை என்ற பெயரும் மருந்தைவிட நம்பிக்கையான வார்த்தைகளும் அன்பான கவனிப்பும் அங்கு அதிகம் என்பதாலும் எப்போதும் மக்கள் கூட்டத்திற்கு குறைவில்லை.
அதனை நிர்வாகம் செய்கிற கணவன் மனைவி இருவருமே வைத்தியர்கள். பிள்ளைச் செல்வம் இல்லாத அவர்கள் ஒரு ஆதரவற்ற சிறுவனைத் தத்தெடுத்து வளர்த்தார்கள், அவன் வளர்ந்து பெரியவனாகி வெளிநாடொன்றில் மருத்துவ உயர் கல்விக்காகச் சென்றிருந்தான்.
தாய்மண்ணில் மருத்துவ சேவை செய்கின்ற பெற்றவர்களைப் போலவே தானும் செவை செய்யவேண்டும் என்பதுதான் அவனுடைய விருப்பமும். ஆனாலும், மருத்துவத் துறையில் அவனுடைய திறமை அபாரமானது என்பதால், அவனுடைய மேற்படிப்பு மக்களுக்கு தேவை என்பதை உணர்த்தி பெற்றோரே அவனை அனுப்பிவைத்திருந்தனர்.
கல்வி கற்கிற காலம் தொடக்கம் பூவிழிக்கு அவர்களைத் தெரியும். சொல்லப்போனால், அருட்சகோதரிகள் விடுதியில் தங்கியிருந்து அவள் கல்வி கற்ற காலம் தொடக்கம் அவளுடைய கல்விச்செலவு அவர்களுடையதுதான்.
அவர்களின் நம்பிக்கையைப் பொய்யாக்காமல் அவளும் தனது கல்வியைச் செவ்வனே கற்றுமுடித்து அவர்களினுடைய வைத்தியசாலையிலேயே பணி செய்கின்றாள்.
மகளைப் போன்ற பாசம் காட்டும் அவர்களிடம் பூவிழிக்கும் நன்றியும் அன்பும் அதிகம். அதனாலேயே நேரம் காலம் பார்க்காமல் அவள் அங்கு பணி செய்வதுண்டு.
காலையில் பணிக்கு வந்ததும் முதலில் அவர்கள் இருவரையும் சந்தித்த பின்னரே தனது பணியை அவள் ஆரம்பிப்பது வழமை. ஆனால் இன்று அவர்கள் இருவரையும் சந்திக்கும் மனநிலை பூவிழிக்கு இல்லை.
தன்னுடைய பணிகளைச் செய்துவிட்டு ஓய்வு அறைக்குத் திரும்பிவிட்டாள்.
அவளுடைய முகவாட்டத்தை வைத்தே அவளுடைய மனநிலையைக் கணித்துவிடுவார்கள்.
மதிய உணவு நேரம் நெருங்கியது.
அவள் போகாவிட்டாலும் அவர்கள் இருவரும் தேடிவந்துவிடுவார்கள் என்பது தெரிந்து, தானே அவர்களிடம் செல்ல நினைத்து எழுந்துகொண்டவள் வாசலில் இருவரையும் கண்டதும் அப்படியே நின்றுவிட்டாள்.
~பூவிழி...ஏன்..காலையில் இருந்து ஆளையே காணேல்லை?| வைத்தியர் அம்மாவின் வார்த்தைகள், சட்டென்று இவளது விழிகளில் ஒருதுளி நீரைப்பிரசவித்தது. அதனை மறைக்கும் நோக்கில் கீழே எதையோ எடுப்பது போல குனிந்து நிமிர்ந்தவள், அதற்குள் தன்னைச் சுதாகரித்துக்கொண்டாள்.
~அம்மா..அது..காலையில கொஞ்சம் வேலையா இருந்தன்..அதுதான் உங்கட அறைக்கு வரேல்லை..இதோ..இப்ப அங்க வரத்தான்..| இவள் சொல்ல,
~சரிசரி..அதுக்கு ஏன் இவ்வளவு பதற்றம்..?| என்ற வைத்தியசாலை முதன்மை நிர்வாகியான கோபிசங்கர் ஐயாவிற்கு
ஒரு மெல்லிய புன்னகையை பதிலாக்கினாள் பூவிழி.
~பூவிழி..பிரச்சனை ஏதும் இல்லையே?| என்ற அன்னையிடம்
~இல்லை அம்மா..என்ன பிரச்சினை..நான் நல்லாத்தான் இருக்கிறன்,| என்றாள்.
~எதுவா இருந்தாலும் உனக்கு நாங்கள் இருக்கிறம்..| சொல்லிவிட்டு, பூவிழியின் கைகளை இறுகப்பற்றிய அந்த தாயன்பில் ஒரு நிமிடம் உறைந்துபோன பூவிழி, தலையை ஆட்டினாள்.
மனிதர்கள் தான் எவ்வளவு அன்பானவர்கள்...இந்த உலகம் இந்த அன்பில்தானே சுற்றுகிறது, என நினைத்த பூவிழி,
தன்னுடைய கரங்களை அந்த அன்னையின் கரங்களுக்குள் வைத்து ஆழமாக ஒரு பெருமூச்சினை வெளிவிட்டாள்.
~சரி...நாங்கள் சாப்பிடப்போறம்...நீ சாப்பிட்டியா பூவிழி..வா சாப்பிடுவோம்| என்றனர்.
~இல்லை..இல்லை..நான் பருதியோடை சாப்பிடுறன்..இப்ப வந்திடுவா| என்றாள்.
~சரி..|என்றபடி இருவரும் விடைபெற்றதும்
ஓய்வு அறையின், மேசையில் தலை கவிழ்ந்து அமர்ந்துகொண்டாள் பூவிழி. சிந்தனை மீண்டும் அலைபாயத்தொடங்கியது. மனதில் இருந்தது பயமா, கலக்கமா, தயக்கமா என அவளுக்குத் தெரியவில்லை.
இத்தனை ஆண்டுகளாய் அவளுடைய மனதின் ஆழத்தில் அவள் புதைத்து வைத்திருந்த அந்த கடந்தகாலம் இப்படி சூறாவழியாக திடுமென தன்னை ஆட்டுவிக்கும் என அவள் நினைத்தே பார்க்கவில்லை.
எட்டுவருடங்கள் கடந்துவிட்டன.
ஏன் நேற்று போல நினைவுகள் இப்படி கூச்சலிடுகிறது. விருப்புக்கும் வெறுப்புக்கும் இடையில் நின்று தள்ளாடி தழும்பும் மனக்குழந்தையை அவளால் அடக்கிவிட முடியவில்லை.
உடல் சார்ந்த வாழ்விற்கு தேவைகள் இருப்பதுபோல மனதிற்கும் தேவைகள் இருக்கிறதுதானே, மனதிற்கு மிகப்பிடித்தவர்களைப் பார்க்கத்துடிப்பதும் அப்படி ஒரு மனதின் தேவைதான் போல என நினைத்தாள்.
மனக்கல்லறைக்குள் மரித்துக்கிடந்த நினைவுகள் உயிர்பெற்றதைப்போல் குதூகலிக்கத்தொடங்கின.
திரும்ப முடியாத அந்த நாட்களை நினைப்பதும் முட்டாள்தனமானதுதான் என்பது புரிந்தாலும் அந்த இரண்டும்கெட்டான் நிலையை அவளால் தவிர்க்க முடியவில்லை.
நினைவுகள் எல்லாம் மூளையில்தானே பதிவாகிறது, பிறகேன் இந்த நெஞ்சு இப்படி தவிக்கிறது என தன்னைத்தானே கேட்டுக்கொண்டாள்.
சட்டென்று இந்த யோசனை தோன்றியது.
~உள்ளத்தின் பலவீனங்களில் மிக நல்ல பலவீனம் காதல|; என மேல்நாட்டு அறிஞர் யாரோ சொன்னதாக வாசித்தது நினைவில் வந்தது.
வழுக்கலான வாழ்க்கை முறைகளை எப்போதுமே வெறுக்கிற அவளுக்கு அவனை நினைப்பதே பாவம் என்ற எண்ணமே தோன்றியது.
ஆனாலும,; பொற்செழியனைப் பார்க்கவேண்டும் போல மனம் தவித்தாலும் அவனைக் காணும் அந்தப் பொழுது, நிச்சயமாக தான் உடைந்து அழதுவிடுவேன் எனவும் வீட்டில் இருப்பவர்கள் அதைப்பற்றிக்கேட்டால் பழையவை எல்லாம் கிளறப்பட்டுவிடுமே, அப்படி ஒரு சம்பவம் நடந்துவிட்டால், வேறு வினையே வேண்டாம், அவளாலேயே அவனது வாழ்க்கை பாழ்பட்டுப் போய்விடுமே, எனவும் பலவாறு யோசித்தவள், எப்படி அப்பாவிடம் சொல்லிவிட்டு, தோழியுடன் தங்கிக்கொள்வது என்ற சிந்தனையில் தவித்துக் கொண்டிருந்தாள்.
மெல்ல கதவு திறந்தது.
எதையும் உணராதவளாய் தலை கவிழ்ந்திருந்த நண்பியை, வியப்பாய் பார்த்தபடி, எதிரில் அமர்ந்தாள் பரிதி. சற்று நேரம், அவளும் எதுவும் பேசவில்லை, பார்த்துக் கொண்டே இருந்தவள், ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து, "பூவிழி.....பூவிழி..." என்றாள்.
எதைப்பற்றிய எண்ணமும் இன்றி, கூப்பிடுவதே காதில் விழாமல் இருந்த தோழியை உலுக்கி, எழுப்பினாள்.
"எ....என்ன..பரிதி?" அவசரமாய் கேட்டவளிடம்,
"ஏய், இது உனக்கே நியாயமா? இல்ல, நான் வந்து எவ்வளவு நேரம், தெரியாத மாதிரியே இருக்கிறாய், " என்றவள், தோழியின் முகத்தில் தெரிந்த கலவரத்தில் மௌனமானாள்.
"ஏய்.....என்னடி?" என்றாள்.
தலையை ஆட்டியபடி, "ஒன்றும் இல்லை" என்றுவிட்டு தலைகவிழ்ந்த பூவிழியிடம்,
"அது சரி, நீ எப்பதான் என்னை உன்ர தோழியா நினைச்சிருக்கிறாய், எப்பவுமே நினைச்சதில்லை தானே, இப்ப மட்டும் அப்பிடி நினைக்கப்போறியோ, அல்லது எதையாவது சொல்லத்தான் போறியோ, நான் போறன், நீ தனிய இரு" என்றபடி எழுந்துகொண்டாள் பரிதி.
சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள் பூவிழி.
"என்ன பரிதி, ஏன் இப்பிடிச் சொல்லுறாய், உன்னைத் தவிர வேற யாரிட்ட நான் என்ர மனக்கஸ்ரங்களைப் பகிர்ந்து கொள்ளுறன், நீதானே எனக்கு ஒரே தோழி" என்றாள்.
"இல்லை இல்லை, தோழமை எண்டால் என்ன, ஒருத்தருக்கொருத்தர் உதவுறதும் மனம்விட்டு கதைக்கிறதும் தானே, நீ எப்பவுமே உன்ர மனசில இருக்கிறதை என்னட்டச் சொல்லவே மாட்டாய், உனக்குள்ளயே தானே வைச்சு அழுவாய், விடு" என்றாள்.
"ஐயோ...பரிதி, ஏன் இப்பிடி எல்லாம் கதைக்கிறாய், எனக்கு கஸ்ரமா இருக்கு" என்றாள்.
"எனக்கு மட்டும் கஸ்ரமா இல்லையா, நீ இப்பிடி நான் வந்தது கூட தெரியாமல், யோசினையா இருக்கிறாய், என்னெண்டு கேட்டால் சொல்லமாட்டன் எண்டிறாய், "
~பரிதி, நான் கஸ்ரங்களை யாரிட்டயும் சொல்லுறது இல்லைத்தான், அதுக்கு காரணம், எதைத்தான் சொல்லுறது, கேக்கிறவைக்கு விசர் வந்திடாதா, எண்டுத்தான்" என்றதும்
"நல்லா சமாளிக்கிறாய், நான்தான் வாய் ஓயாமல் உன்னட்டை எல்லாத்தையும் சொல்லிக்கொண்டிருக்கிறது, நீ அப்பிடி இல்லை, அது எனக்கு தெரியும், அதுக்காக, ஒரு மனக்கனதியையுமா பகிர்ந்துகொள்ளக்கூடாது, ஆக, இப்பவும் உனக்கு என்ன பிரச்சினை எண்டு சொல்லவிருப்பம் இல்லை, அப்பிடித்தானே," என்ற பரிதியிடம்
~வாழ்க்கை எனக்கு அதிக வண்ணங்களையோ பளிங்கு தூவல்களையோ தரவே இல்லை, உனக்கும் தெரியும்தானே, சந்தர்ப்பம் பின்னின மாயவலையிலை சிக்குப்பட்டு ஓடிக்கொண்டிருக்கிறம்...எங்களுக்கு கிடைக்கிற சந்தர்ப்பங்களை எப்பிடி கையாளுகிறம் எண்டுறதுதான் வாழ்க்கையும் அதின்ரை அனுபவமும்...அதை எல்லாருக்கும் சொல்லி, மற்றவர்களையும் கலவரப்படுத்தவேண்டாமே எண்டுறதுதான் என்ரை எண்ணம்..மற்றபடி நீ நினைக்கிறமாதிரி நான் உன்னை தள்ளி நிறுத்தவேணும் எண்டு நினைச்சதே இல்லை| என்றாள்.
~ஏய்..பிறகும் தத்துவமா கதைக்கிறியே தவிர உன்ரை கவலையை பகிர நினைக்கேல்லைதானே?|
"பரிதி, எனக்கு உன்னட்டச் சொல்லக்கூடாது எண்டு இல்லை, அது ஒரு நீண்ட கதை, கதை எண்டு சொல்லுறதைவிட என்ரை கடந்தகால வாழ்க்கை. அதை நான் மறந்து வாழவும் தொடங்கியாச்சு, இப்ப, அமைதியான என்ரை நிகழ்காலத்திலை சின்ன கல் விழுந்தமாதிரி ஒரு நிகழ்வு, அதுதான்..|
~ஏய்..நீ சொல்லுறதைப்பார்த்தால் எனக்கு ஒருமாதிரியா இருக்கு, என்னடி?| என்ற பருதிக்கு,
~இஞ்ச வேண்டாம், வெளியில போவம், அங்க போய் கதைப்பம்" என்றாள் பூவிழி.
~சரி..வேலை முடிஞ்சதும் ரெண்டுபெரும் பக்கத்திலை இருக்கிற கடற்கரைப்பூங்காவிற்கு போவம் என்ற பருதிக்கு தலையை ஆட்டி சம்மதம் தெரிவித்தாள் பூவிழி.
~சரி..வா..சாப்பிடுவம|; என்ற தோழியோடு கூட நடந்தவள் உணவைப் பிரித்துவிட்டு வெறித்தபடி சிறிது நேரம் அமர்ந்திருந்தாள்.
~பூவிழி..சாப்பிடு..|என்றபடி அவளையே பார்த்த பருதி,
~நீ இப்பிடி இருந்து நான் பார்த்ததே இல்லை..யோசிக்காதை, கொஞ்சமாவது சாப்பிடு, பிறகு அம்மா கேள்வியா கேட்பா,| தெரியும்தானே| என்றாள்.
சற்றுமுன்னர் பெரியவர்களிடம் எதையோ சொல்லி சமாளித்தாயிற்று. இன்னொரு தடவை அப்படிச் செய்யமுடியாது என்பதால் இவளும் விருப்பமே இல்லாமல் உணவைக் கொறிக்கத்தொடங்கினாள்.
 
Top Bottom