• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மகுடம் சூட்டும் காதல் - 12

அத்தியாயம் - 12



"கர்ணா.." என்று முணுமுணுத்தவள், தன் இரண்டு கரங்களாலும் தன் வயிற்றை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள். ஒரு பெண்ணாக, பிறக்கப்போகும் குழந்தையைத் தன் கணவனே உலகிற்கு முன்னால் 'இது என் குழந்தை இல்லை' என்று கேவலப்படுத்திய அந்த அதிர்ச்சியையும் அவமானத்தையும் அவளால் தாங்கவே முடியவில்லை.

அவளது ஒட்டுமொத்த உலகமே அந்த ஒரு நொடியில் சுக்குநூறாக உடைந்து சிதறியது. கணவனை பார்வையாலே பொசுக்க தொடங்கினாள். அவனை திட்டவும் அவளுக்கு வார்த்தைகள் வரவில்லை.

இந்த செய்தியை பார்த்துக் கொண்டிருந்த அவளது பெரியப்பாவுக்கும் அதிர்ச்சி தான். ஒட்டுமொத்தத் குடும்பமும் ஸ்தம்பித்து நின்றது.

'என்னடா இது.? ஒரு மனுஷன் இந்தளவுக்க கொடூரமா மாறுவானா.? பிறக்கப் போற குழந்தையையே அசிங்கப்படுத்த விஸ்வநாதன் அவனுக்குப் புத்தி சொல்லியிருக்கானே..சாது மிரண்டால் காடு கொள்ளாதுனு நினைச்சேன்..

ஆனா இந்த கர்ணனோட விசுவாசம் ஒரு தாயோட கருவறையையே அழிச்சுருச்சே..' என்று நினைத்து மிகுந்த வேதனையோடும் அதிர்ச்சியோடும் பெருமூச்சு விட்டார்.

ஊடகங்களுக்கு முன்னால் கர்ணன் கொடுத்த அந்த அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம் தமிழகத்தையே உலுக்கிக் கொண்டிருந்த வேளையில், விஸ்வநாதன் பங்களாவின் வரவேற்பறையில் ஒரு அசுரத்தனமான கொண்டாட்டம் நிலவியது.

விஸ்வநாதன் சோபாவில் அமர்ந்து "பார்த்தீயா... அந்த அனாதை பயலை வெச்சே அந்த விருசாலியோட கருவறைச் சவாலை எப்படிச் சுக்குநூறாக உடைச்சேனு!" என்று வக்கிரமாகச் சிரித்துக் கொண்டிருந்தார்.

தான் பலவீனமாகி விட கூடாது என்பதற்காகவே அவள் அவ்விடத்தை விட்டு நகர்ந்து வேகமாக தன் வீட்டிற்கு கிளம்பினாள். அவளையும் பத்திரிகையாளர்கள் சூழ்ந்துக் கொள்ள, 'உங்களுக்கு எல்லாம் வேற வேலையே இல்லையா.?' என்று அவர்களிடம் எறிந்து விழுந்து விட்டு சென்றாள். இதுவும் பேசுபொருளாக மாறியது.

விருசாலியின் கண்களில் ஒரு துளிக் கண்ணீர் கூட வரவில்லை.. அவளது முகம் இரும்பைப் போலக் கடினமாக மாறியது.

தன் பிறக்கப்போகும் குழந்தையையே உலகிற்கு முன்னால் 'என் குழந்தை இல்லை' என்று சொன்ன கர்ணனின் அந்த முட்டாள்தனமான விசுவாச வெறிக்கும், பின்னணியில் இருந்து காய் நகர்த்திய விஸ்வநாதனுக்கும் சட்டத்தின் முன்னால் சாட்டையடி கொடுக்க முடிவெடுத்தாள்.

அவள் நேராகத் தன் பெரியப்பாவின் முன்னால் சென்று நிற்க, "விசு என்ன நடக்குது.? கர்ணன் இப்படி பண்ணுவானு நான் நினைக்கவே இல்லை.." என்றவரின் முகம் வருத்தத்தை வெளியிட்டது.

அவரை ஏறிட்டு பார்த்து "பெரியப்பா உங்க மகளை அந்த விஸ்வநாதன் கூட்டமும், அவரோட தம்பியும் சேர்ந்து இவ்வளவு கேவலமா பேசியிருக்காங்க.. இதுக்கு நான் அழுதுட்டு உட்கார மாட்டேன்.. இப்போவே நம்ம கட்சியின் உச்சக்கட்ட குற்றவியல் வக்கீல்களைக் கூப்பிடுங்க.. அந்த கஞ்சா வழக்கோட அசல் ஆவணங்களை வச்சு, கர்ணனை இப்போவே நான் ஜாமீன்ல (Bail) வெளிய எடுக்கப் போறேன்.." என்றாள் முடிவாக.

"விசு.. உன்னை இவ்வளவு அசிங்கப்படுத்தியவனுக்கா நீ ஜாமீன் எடுக்கப் போற.?" என்று பெரியப்பா அதிர்ச்சியாகக் கேட்டார்.

விருசாலியின் உதடுகளில் ஒரு மர்மமான புன்னகை முளைத்தது.

"அவரை ஜெயில்ல வச்சுருந்தா விஸ்வநாதன் வெளிய இருந்துட்டு இன்னும் பெரிய சதி பண்ணுவான் பெரியப்பா.. கர்ணனை நான் வெளிய கொண்டு வந்து, என் கண் முன்னாடியே அவரோட அந்த கண்மூடித்தனமான விசுவாசத்தை உடைப்பேன்.. நான் தான் அவரை வெளிய எடுத்தேனு தெரியும் போது கர்ணனோட குற்றவுணர்ச்சியே அவனை கொல்லும்.. அது தான் அவனுக்கு தேவை.." என்று தீர்க்கமாகச் சொன்னாள்.

அடுத்த சில மணி நேரங்களில், விருசாலி திரட்டிய அசைக்க முடியாத சட்ட ஆதாரங்களின் அடிப்படையிலும் தண்ணீராய் செலவழித்த பணத்தாலும் நீதிமன்றம் கர்ணனுக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

சென்னை மத்திய சிறைச்சாலையின் இரும்பு வாயில் திறக்கப்பட, கைகளில் ஜாமீன் உத்தரவுக் கடிதத்துடன் கம்பீரமாக வந்து நின்றாள் விருசாலி.

சிறைக்குள் இருந்து சாதாரண உடையில் வெளியே வந்த கர்ணன், வாசலில் தனக்காகக் காத்திருந்த தன் மனைவி விருசாலியைக் கண்டு அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றான்.

தன் அண்ணன் தான் தன்னை ஜாமீனில் எடுக்க வக்கீல்களுடன் வருவான் என்று அவன் எதிர்பார்த்து இருந்தான். ஆனால் அங்கே கைகளில் ஜாமீன் பேப்பருடன் நின்ற விருசாலியை அவனால் நம்பவே முடியவில்லை.

விருசாலி மெதுவாக அவனருகே நடந்து வந்தாள். அவளது கண்களில் கோபமோ, அழுகையோ இல்லை...மாறாக ஒரு தீர்க்கமான பார்வை மட்டுமே இருந்தது.

அவளது கைகளில் இருந்த ஜாமீன் பேப்பரை அவனது முகத்திற்கு நேரே நீட்டினாள்.

"என்ன மிஸ்டர். கர்ணா.. உங்க அண்ணன் விஸ்வநாதன் வக்கீலோட வந்து உங்களை மாஸா வெளிய கூட்டிட்டுப் போவாருனு பார்த்தீங்களா.? ப்ச் பாவம்.. அவரு இப்ப என்னைய அசிங்கப்படுத்திட்டேனு சந்தோஷத்துல என்ஜாய் பண்ணிட்டு இருக்காரு.." என்று விருசாலி எள்ளலாகக் கூறினாள்.

"டிவில உலகமே பார்க்க விருசாலி வயித்துல வளர்றது என் குழந்தை இல்லைனு நீங்க கொடுத்த வாக்குமூலத்தைக் கேட்டு உங்க அண்ணன் பங்களாவுல பார்ட்டி வெச்சு என்ஜாய் பண்ணிட்டு இருக்காரு கர்ணா..

ஆனா கஞ்சா கடத்துன குற்றவாளினு சென்னை முழுக்க உங்களைத் தப்பா பேசின அந்தப் பழியிலிருந்து உங்களைய இப்போ சொந்தப் பொறுப்புல ஜாமீன் எடுத்து வெளிய கூட்டிட்டு வந்துருக்கறது இதே விருசாலி தான்.. நான் சொல்றதை நம்பலனா போய் உங்க அண்ணன் வீட்டுல என்ன நடக்குதுனு போய் பாருங்க.." என்று நெத்தியடியாகப் பேசினாள்.

கர்ணனுக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் நின்றான். உலகமே அவளைப் பழித்து கொண்டிருந்த போதும், தன் பிறக்க போகும் வாரிசையே அவன் அசிங்கப்படுத்திய போதும்.. தனக்காக போராடித் தன்னை ஜாமீனில் எடுத்திருக்கும் விருசாலியின் இந்த அசாத்தியமான துணிச்சலைக் கண்ட போது, அவனது நெஞ்சிற்குள் குற்ற உணர்ச்ச ஈட்டியாய் குத்தியது.

இதையை தான் இவளும் எதிர்பார்த்தாள்.. தன்னை அவமானப்படுத்தியவனை இவள் மன்னிக்கலாம்.. ஆனால் எதை வைத்து அவமானப்படுத்தினானோ அதைய அவளால் மறக்க முடியுமா என்ன.?

அண்ணன் சொன்னால் உயிரையே குடுப்பேன் என்றான்.. உயிரை குடுத்து விட்டு செல்லட்டும்.. ஆனால் இவனையே உயிராக நினைத்து அனைவரையும் எதிர்த்து திருமணம் செய்து, தங்களின் காதல் பரிசாக உருவான உதிரத்தை அவமானப்படுத்தியதை மட்டும் இவளால் மறக்க முடியாது.

அவனை அடித்து உதைத்தால் கூட அந்தளவிற்கு வருந்த மாட்டான்.. இவனை எந்த வழியில் வருந்த வைக்க வேண்டும் என்பதை இவளும் அறிவாளே..? அந்த வழியை தான் தேர்ந்தெடுத்து அதில் பயணித்தும் கொண்டிருக்கிறாள்.

"விருசா..." என்று கர்ணன் சொல்ல வந்ததை கேட்க விரும்பாதவள் "இல்லை விருசாலி" என்று திருத்தி முழுபெயரையும் கூற சொன்னாள். அதிலே அவளின் கோவம் அப்பாட்டமாக தெரிந்தது.

"உங்க விசுவாசப் பேச்சை இங்க வச்சுக்காதீங்க கர்ணா.. உங்களைய நான் இப்போ வெளிய எடுத்தது என் புருஷன் மேல இருக்கற பாசத்தால இல்லை.. என் வயித்துல வளர்ற என் குழந்தையோட கௌரவத்தைக் காப்பாத்த..

உங்க அண்ணன் விஸ்வநாதனோட அசல் கறுப்பு முகத்தை நான் இன்னும் சில நாட்கள்ல உங்க கண் முன்னாடியே கொண்டு வந்து நிறுத்துவேன்.. அன்னைக்கு நீங்க சுக்குநூறாக உடைஞ்சு நிற்பீங்க.. அப்ப புரியும் இந்த விருசாலியோட அருமை.." என்றவள் கிளம்பினாள்.

செய்தியை பார்த்ததும் போனில் பேசுவதை விட நேரில் பேசுவது தான் நல்லது என்று அர்ஜூன் விடுமுறை எடுத்துக் கொண்டு சென்னைக்கு வந்திருந்தான். அவனுக்கு கர்ணன் விடுதலையாகிய செய்தி கிடைத்திட, நேராக அவனிடம் தான் கிளம்பினான்.

அர்ஜூனைக் கண்டதும் அவன் அப்படியே நிற்க, விரக்தியாக "அன்னைக்கு மகாபாரதத்துல வாழ்ந்தானே ஒரு கர்ணன்.. அவனுக்கும் உன்னைய மாதிரி ஒரு கண்மூடித்தனமான விசுவாசம் இருந்ததுடா...

துரியோதனன் செஞ்ச அத்தனை அக்கிரமங்களுக்கும், திரௌபதியைச் சபை நடுவுல அசிங்கப்படுத்திய அநீதிக்கும் அவனோட விசுவாசமே அவனைக் கண்ணை மூடி ஆதரிக்க வச்சது.. கடைசியில அந்த விசுவாசமே அவனுக்கு எமனா மாறி, அவனைப் பாவியா வரலாற்றுல நிறுத்துச்சு..

இன்னைக்கு நீயும் அதே தப்பத் தான்டா பண்ணிட்டு இருக்க.. உன்னை அநாதையா நின்னப்போ தூக்கி வளர்த்தானு நீ கும்பிடற அந்த விசுவாசத் துரியோதனன் விஸ்வநாதன்...ஒரு கொடூரமான அரக்கன்டா" என்று அர்ஜுன் வார்த்தைகளால் அடித்தான்.

கர்ணனிடம் பதிலில்லை.. "அன்னைக்கு மகாபாரதக் கர்ணன் பாண்டவர்களோட தர்மத்தை எதிர்க்கத் தன் வில்லைத் தூக்கினான்.. இன்னைக்கு நீயும் அதே மாதிரி, நெல்வயல் கிராமத்து ஜனங்களோட வாழ்க்கையை அழிக்கற விஸ்வநாதனோட நச்சுப் பாவங்களுக்கெல்லாம் கவசமா வந்து நிக்கற.. எனக்கு தெரிஞ்சு ஒரு கிராமம்.. எனக்கு தெரியாம இன்னும் எத்தனை கிராமமோ.?

விஸ்வநாதனோட அந்த கெமிக்கல் ஃபேக்டரி கழிவுகளால இந்த ஊர் மண்ணும் தண்ணியும் விஷமாகி, இங்க இருக்குற எத்தனையோ புதுமணத் தம்பதிகளுக்குத் தீவிரமான மலட்டுத்தன்மை (Infertility) ஏற்படுதுடா.. அங்க பல குடும்பங்கள் அதனால அழுதுட்டு இருக்கு..

ஜனங்களோட கருப்பையையே அழிக்கிற ஒரு பாவியையா நீ விசுவாசத்துக்காகத் தெய்வம்னு கும்பிடற.? அன்னைக்கு மகாபாரதக் கர்ணன் செஞ்ச அதே துரோகத்தைத்தான்... இன்னைக்கு நீயும் உன் அண்ணன் விசுவாசத்துக்காக அந்த மண்ணுக்கும், பிறக்கப்போற உன் குழந்தைக்கும் செஞ்சுருக்க..

உன்னோட இந்த விசுவாச வெறி.. உன்னைய ஒரு உத்தமனா காட்டலடா, ஒரு அநீதியின் சின்னமாத் தான் காட்டுது.. இதுக்கு எல்லாம் நீ அனுபவிப்ப பாரு.." என்று அர்ஜுன் அவனைத் திட்டித் தீர்த்தான்.









அர்ஜுன் சொன்ன அந்த மகாபாரதக் கதையும், விஸ்வநாதனின் தொழிற்சாலையால் ஊர் மக்களுக்கு ஏற்படும் அந்த மலட்டுத்தன்மை கொடூரமும் கர்ணனின் நெஞ்சில் ஒரு பெரிய சம்மட்டி அடியாக விழுந்தது..

இதே வேற நேரமாக இருந்திருந்தால் இத்தனை அமைதியாக இருந்துருக்க மாட்டான்.. அர்ஜூன் சொல்வதை அவனால் நம்பாமலும் இருக்க முடியவில்லை.

இத்தனை காலம் தான் தெய்வமாக மதித்த அண்ணன், ஆயிரக்கணக்கான உயிர்களோடும், பிறக்கப்போகும் தன் வாரிசோடும் விளையாடிய ஒரு கொடூரமான துரோகி என்பதை அவனது உள்மனம் முதன்முறையாக அப்பட்டமாக உணர்ந்தது.

விருசாலியின் செயலும் அர்ஜூனின் வார்த்தைகளும் அவனைக் குற்ற உணர்ச்சியில் தவிக்க வைத்தது.

இருப்பினும் பழக்க தோஷத்திலும் தன் அண்ணன் மீதிருந்த நன்றிக் கடனாலும், கர்ணன் எப்போவும் போல மீண்டும் விஸ்வநாதனின் பங்களாவிற்கே திரும்பிச் சென்றான்.

பங்களாவின் வரவேற்பறையில் விஸ்வநாதன் சோபாவில் அமர்ந்து போனில் யாருடனோ ஆவேசமாகப் பேசிக் கொண்டிருந்தான்.

அவரது முகம் பயத்திலும் ஆத்திரத்திலும் கறுத்துப் போயிருந்தது. கர்ணன் உள்ளே நுழைவதைக் கண்டதும் விஸ்வநாதன் போனை அணைத்துவிட்டுப் பதற்றத்துடன் எழுந்து வந்தான்.

"வாடா கர்ணா.. நல்ல வேளை நீ வந்த.. இப்போ தான் நெல்வயல் ஃபேக்டரி மேனேஜர் எனக்குப் போன் பண்ணி ஒரு ரகசியத் தகவல் சொன்னான்டா.." என்ற விஸ்வநாதன் அவனது கைகளைப் பற்றிக் கொண்டான்.

'நீ எப்படி வந்த.? உன்னைய யாரு ஜெயில்ல இருந்து எடுத்தது.?' என்று எதுவும் கேட்கவில்லை. அதிலே கர்ணனுக்கு ஒரு மாதிரியாகி விட்டது.

"நம்ம கெமிக்கல் ஃபேக்டரி நைட்டு எல்லாம் யாரோ சுத்தி சுத்தி வந்துட்டு இருக்காங்களாமாடா.. அவங்க எதுக்கு வர்றாங்கனு தெரியல.. ஒரு வேளை எதாவது ஆதாரம் திரட்ட வந்தா என்ன பண்றது.?

அந்த ஆதாரங்கள் மட்டும் வெளிய போனா... நம்ம குடும்பமே நடுத்தெருவுக்கு வந்துரும்.. என் முதலமைச்சர் நாற்காலி கனவு எல்லாமே சுக்குநூறாகிரும்டா.." என்று பதறி கூறினார்.

கர்ணன் அமைதியாக அவனது முகத்தைப் பார்த்தான். அவனது மனதில் விருசாலியின் முகமும், அர்ஜுன் சொன்ன மகாபாரதச் சாட்டையடியும் தான் விடாமல் ஓடிக் கொண்டிருந்தது.

'நானே அங்க போய் என்ன நடக்குதுனு தெரிஞ்சுக்கறேன்..' என்ற முடிவில் விஸ்வநாதனின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு செல்வதை போல் அவன் தலையை மட்டும் அசைத்து வைத்தான்.

"நீ உடனே இப்போவே நம்ம நெல்வயல் ஃபேக்டரிக்குக் கிளம்பிப் போடா கர்ணா.. அங்கே யாரு உள்ள புகுந்து ஆதாரம் திரட்டப் பார்க்கறாங்களோ.. அவங்களைத் தடுத்து நிறுத்தி அந்த அத்தனை ஆதாரங்களையும் அழிச்சுருடா.. இல்லைனா அவங்கள முடிச்சும் தள்ளிருடா.. மத்ததை நான் பார்த்துக்கறேன்..

நம்ம குடும்பக் கௌரவத்தைக் காப்பாத்த வேண்டிய பொறுப்பு இப்போ உன்கிட்ட தான் இருக்கு.." என்று விஸ்வநாதன் மீண்டும் தன் சுயநலப நாடகத்தை அரங்கேற்றி அவனுக்குக் கட்டளையிட்டான்.

அண்ணனின் பேச்சை விட, தன் சொந்த மண்ணில் என்னதான் நடக்கிறது என்பதைத் தன் கண்களால் பார்க்க வேண்டும் என்றும், தன் மனபாரத்தைக் குறைத்துக் கொள்ளவும் அவன் முடிவெடுத்தான்.

"சரிங்க.. நான் இப்போவே நெல்வயல் கிராமத்துக்குக் கிளம்பறேன்" என்று கூறினான்.. முக்கியமாக அண்ணன் என்ற வார்த்தையை தவித்து விட்டான்.

அவன் பங்களாவை விட்டு வெளியேறி, தன் சொந்த ஊரான நெல்வயல் கிராமத்தை நோக்கித் தன் பயணத்தை தொடங்கினான். ஆனால் இந்த முறை அவனது பயணம் விஸ்வநாதனின் பாவங்களை மறைப்பதற்காக அல்ல.. அவனுள் ஏற்பட்ட அந்தப் புதிய மனமாற்றத்திற்காகவும், நீதியைத் தேடியும் தான்..

அந்தப் பயணம் நவீன மகாபாரதத்தின் இறுதிப் போர்க்களத்தை நோக்கி விறுவிறுப்பாக நகர காத்திருந்தது.

இவன் கிளம்பியதும் விருசாலியும் தன் புதிய ஆட்டத்தை துவங்கி இருந்தாள் தன் பெரியப்பாவின் உதவியோடு.!

கர்ணன் கிளம்பிய அதே வேளையில் சென்னையில் ஒரு பயங்கரமான அரசியல் பூகம்பம் வெடிக்கத் தொடங்கியது.

விஸ்வநாதன் ஆகாஷ் வெளிய வந்த நிம்மதியிலும், அடுத்த முதலமைச்சர் நாற்காலி தனக்குத் தான் என்ற மகா திமிரிலும் வலம் வந்து கொண்டிருந்தார்.

அப்போது தான் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து ஒரு அவசர அறிவிப்பு வெளியானது.

கட்சியின் தலைவரான விருசாலியின் பெரியப்பா கட்சியின் அனைத்து முக்கிய நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் விஸ்வநாதனையும் உள்ளடக்கிய ஒரு அவசரப் பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்டினார்.

ஆனால் 'யார் அடுத்த முதல்வர் வேட்பாளர்.? யார் அடுத்த கட்சித் தலைவர்.?' என்ற நிஜமான உண்மையை அவர் யாருக்குமே சொல்லவில்லை.

கட்சியின் எதிர்கால நலன் கருதி, ஒரு கூட்டம் கூட்டி அடுத்த தலைவரை ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப் போகிறோம்.. என்று மட்டும் தான் ரகசியமாகத் தகவல் அனுப்பியிருந்தார்.

விஸ்வநாதனும், "இன்னைக்கு இந்தக் கூட்டத்துல எப்படியும் என் பேரைத் தான் எல்லாரும் சொல்லுவாங்க.. தலைவரும் வேறு வழியில்லாம தலையை ஆட்டுவாரு" என்ற திமிரோடு மேடையில் இருந்த முக்கிய நாற்காலியில் அமர்ந்தான்.


மேடையில் வைக்கப்பட்டிருந்த மைக், அவரது கணத்த குரலை அந்தப் பகுதி முழுக்க எதிரொலிக்கச் செய்தது.

சுற்றியிருந்த விளக்குகளின் வெளிச்சத்தில் பெரியப்பாவின் முகம் வழக்கத்தை விட அதிக தீர்க்கத்துடனும், ஒருவித அமைதியான ரௌத்திரத்துடனும் காணப்பட்டது.

கூட்டத்தின் சலசலப்பை அடக்க அவர் கையை உயர்த்திய உடனே, அங்கிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களின் குரல் அடங்கி, மைதானமே நிசப்தமானது.

"என் அருமை உடன்பிறப்புகளே..." என்று பெரியப்பா பேசத் தொடங்கினார். அந்த முதல் வரியிலேயே காற்றில் ஒருவித காந்த சக்தி பரவியது போல, தொண்டர்கள் அனைவரும் மேடையை நோக்கி நகர்ந்தனர்.

"தமிழக அரசியல்ல பண பலம், ரவுடி பலம்னு எத்தனையோ சதிவலைகள் பின்னப்பட்டு வருது.. நேர்மையா அரசியல் செய்ய நினைக்கிறவங்களை முடக்கிப் போட, அதிகார வர்க்கமும், சில சுயநலக் கூட்டமும் நாலா பக்கமும் வலை விரிச்சுக்கிட்டு காத்துக்கிட்டு இருக்காங்க..

கொள்கையும் லட்சியமும் இல்லாதவங்க பணத்தை வாரி இறைச்சு, மக்களை ஏமாத்தலாம்னு கணக்கு போடுறாங்க.." என்று அவர் சொல்லும் போது குரலில் அனல் பறந்தது.

அவர் ஒரு நிமிடம் நிறுத்தி, கூட்டத்தை ஆழமாகப் பார்த்தார். பிறகு இன்னும் உறுதியான குரலில் தொடர்ந்தார்

"இந்த நேரத்துல நம்ம கட்சியை வழி நடத்தவும், வர்ற தேர்தல்ல முதலமைச்சர் நாற்காலியைக் கைப்பற்றவும்.. சும்மா ஒரு ஆள் போதாது.. எதிரிகளின் சதிவலைகளை அறுத்தெறியக்கூடிய துணிச்சலும், அதே நேரத்துல மக்களோட தேவையை உணர்ந்த கனிவும் வேணும்..

ஒரு நேர்மையான, சாணக்கியத் தனம் மிக்க புதிய தலைமை நமக்குத் தேவை.. அதை இந்த மேடையில இப்போ நான் அறிவிக்கறேன்.." என்றார் தீர்க்கமாக.

அவர் பேசி முடித்ததும், மேடையின் பின்வரிசையில் அமர்ந்திருந்த முக்கிய நிர்வாகிகள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். தொண்டர்களின் இதயத்துடிப்பு எகிறியது. அந்தப் புதிய தலைமை யார் என்ற எதிர்பார்ப்பில், மொத்த மைதானமே மூச்சடக்கிக் காத்திருந்தது. பெரியப்பாவின் கைகள் மெதுவாக அடுத்த அறிவிப்பிற்கான கோப்பை நோக்கி நகர்ந்தன.

விஸ்வநாதன் தன் சட்டைக் காலரைச் சரி செய்து கொண்டு, மேடையில் எழுந்து நிற்கத் தயாரானான். அவரது ஆதரவாளர்கள் கோஷமிடத் தொடங்கினர்.

ஆனால் தலைவர் விஸ்வநாதனைத் திரும்பிப் பார்க்கக் கூட இல்லை. அவர் கையை நீட்டி, மேடையின் பக்கவாட்டு அறையைக் காட்டி அறிவித்தார்.

"நம்ம கட்சியின் அடுத்த மாநிலத் தலைவி மற்றும் முதலமைச்சர் வேட்பாளர் என் மகள் விருசாலி.." என்றதும் ஹால் முழுக்கத் நிரம்பி இருந்த தொண்டர்களின் ஆரவாரமும், கோஷங்களும் இடி முழக்கமாக எதிரொலித்தன.

அடுத்த நொடி கறுப்பு நிறப் பட்டுப் புடவையில், கண்களில் அசாத்தியமான துணிச்சலோடு ஒரு பெண் சிங்கமென மேடைக்கு நடுவே வந்து நின்றாள் விருசாலி.

விஸ்வநாதனுக்குத் தன் தலையிலயே இடி விழுந்தது போல இருந்தது. அவரது முகம் வினாடிப் பொழுதில் வெளிறிப் போனது.

கையில் இருந்த கோப்பு கீழே விழ, அதிர்ச்சியில் அப்படியே நாற்காலியில் சரிந்தார்.

பெரியப்பாவின் அந்த அதிரடி அறிவிப்பு, மைதானத்தில் இருந்த லட்சக்கணக்கான தொண்டர்களை உறைந்து போகச் செய்தது.

மேடையில் இருந்த மூத்த நிர்வாகிகள் பலரது முகங்கள் அப்படியே வெளுத்துப் போயின.

கட்சியின் பொருளாளரும், முப்பது வருட அரசியல் பலம் கொண்டவருமான விஸ்வநாதன், நாற்காலியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு ஆக்ரோஷமாக எழுந்து நின்றார்.

அவமானம், ஏமாற்றம், கோபம் அனைத்தும் ஒன்றுசேர அவரது முகம் அப்படியே தக்காளிப் பழம் போல் சிவந்து போயிருந்தது.

அவர் நேராக தலைவரை நோக்கி அடியெடுத்து வைத்து வந்து, மைக் முன்னால் நின்றார்.

அந்த அதிர்ச்சியில், "ஏய்.. என்ன காரியம் பண்றீங்க தலைவர்.? ஒரு பொம்பளயை போய் கட்சித் தலைவியா அறிவிக்கிறீங்களா.?" என்று ஆத்திரத்தில் கத்தினார்.

அவரது கரகரப்பான குரல் அரங்கத்தின் ஸ்பீக்கர்களில் கிழிப்பது போல் ஒலித்தது.

அங்கிருந்த அனைவரும் செய்வதறியாது திகைத்தனர். மேடைக் கட்டுப்பாட்டையும் மீறி, விஸ்வநாதன் தலைவரின் முகத்திற்கு நேராகத் தன் ஆள்காட்டி விரலை நீட்டி எச்சரிப்பது போலப் பேசினார்.

"தலைமுறை தலைமுறையா இந்த இயக்கத்துக்காக ரத்தம் சிந்தி, பணத்தை வாரி இறைச்சு, கட்சியை வளர்த்த விஸ்வநாதன் இங்க உயிரோட தான் இருக்கேன்..

இந்த விஸ்வநாதனை மீறி இங்க யாருக்கு மகுடம் சூட்டப் பார்க்கறீங்க.? நாங்க எல்லாம் இங்க எதுக்கு இருக்கோம்? வேடிக்கை பார்க்கவா.?" என்று மேடையில் இருந்த மற்ற தலைவர்களைப் பார்த்துக் கத்தினார்.

அவரது ஆத்திரக் குரல் கேட்டு மொத்த அரங்கமும் அப்படியே ஸ்தம்பித்தது. பெரியப்பாவோ எந்தச் சலனமும் இல்லாமல், விஸ்வநாதனின் கோபத்தை அமைதியாக, ஆனால் தீர்க்கமான பார்வையில் எதிர்கொண்டார். மேடையில் ஒரு பெரும் அரசியல் புயல் வீசத் தொடங்கியிருந்தது.

விருசாலி மெதுவாக முன்னால் வந்து நின்றாள். அவளது கண்கள் நேராக விஸ்வநாதனை உற்று நோக்கின. அவளது உதடுகளில் ஒரு வக்கிரமான புன்னகை முளைத்தது.

"விஸ்வநாதன்.. அதிகாரம் உங்க சொத்து இல்லை.." என்று அவை அதிர கூறிட, "தன் மகனைக் காப்பாத்த, அடுத்தவனை கஞ்சா கேஸ்ல பலிகடா ஆக்குன உங்கள மாதிரி ஒரு நரிக்கு.. இந்த நேர்மையான கட்சித் தலைமை நாற்காலி எப்பவுமே கிடைக்காது..

இதோ தமிழ்நாட்டோட அடுத்த அரசியல் ஆட்டத்தை இந்த விருசாலி இப்போ தொடங்கப் போறா.. உங்க அக்கிரமங்களுக்குச் சட்டம் சாட்டையடி கொடுக்கற நாள் ரொம்பப் பக்கத்துல இருக்கு.." என்று அனைவரின் முன்பே விஸ்வநாதனை சாடினாள்!

விஸ்வநாதன் அவமானத்திலும் ஆத்திரத்திலும் பற்களை நறநறவெனக் கடித்தபடி அங்கிருந்து வெளியேற முற்பட, பொதுக்குழு மேடையில் மகுடம் சூடிய புதிய தலைவி விருசாலியின் சாணக்கிய ஆட்டம் அத்தோடு நிற்கவில்லை.

"நில்லுங்க விஸ்வநாதன்.. இன்னும் ஒரு முக்கிய அறிவிப்பை கேட்டுட்டு போங்க.." என்று அவரை நிறுத்தினாள்.


"தலைவர் பதவி மற்றும் முதல்வர் வேட்பாளர் அறிவிப்புங்கிறது இந்த விருசாலியோட முதல் நகர்வு மட்டும் தான்.." என்று அவளது குரலில் அசாத்தியமான கம்பீரம் எதிரொலித்தது.

"கேட்க யாருமில்லைனு கர்ணனை கஞ்சா கேஸ்ல பலிகடா ஆக்குன ஒரு சுயநலவாதி, இந்த நேர்மையான கட்சியில இருக்கவே தகுதியில்லை.. கட்சியின் புதிய தலைவியா என் முதல் அதிகாரத்தைப் பயன்படுத்தி, விஸ்வநாதனைக் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்குகிறேன்.." என்று அதிரடியாக பேரிடியை இறக்கினாள்.

அடுத்த நொடி ஹாலில் இருந்த விஸ்வநாதனின் ஆதரவு நிர்வாகிகள் அனைவரும் ஆத்திரத்தில் நாற்காலிகளை விட்டு எழுந்து நின்றனர். மேடையை நோக்கி வந்து கூச்சல் போடத் தொடங்கினர்.

"என்னம்மா இது.? விஸ்வநாதன் அண்ணன் இந்தத் தமிழ்நாட்டோட மூத்த அரசியல்வாதி.. அவரோட பண பலமும், மாவட்டச் செயலாளர்களோட ஆதரவும் இல்லாம இந்தக் கட்சி ஒரு அடி கூட முன்னாடி நகர முடியாது.. ஒரு பொம்பளை நேத்து வந்துட்டு, இவ்வளவு பெரிய தலைவரை எப்படிக் கட்சியை விட்டுத் தூக்கலாம்.? நாங்க இதை வன்மையா எதிர்க்கிறோம்.." என்று ஆதரவு நிர்வாகிகள் ஆவேசமாக எதிர்த்தனர்.

"பார்த்தீயா விருசாலி... இந்த விஸ்வநாதனை அசைக்க இந்தத் தமிழ்நாட்டுல எவனுக்கும் தகுதியில்லை.." என்று கத்தினார்.

ஆனாலும் விருசாலி எள்ளளவும் அஞ்சவில்லை.. அவளது சாணக்கியக் கண்கள் அவரையே சுட்டெரித்தன.

மேஜையை ஓங்கித் தட்டி "அமைதியாக உட்காருங்க.." என்று சிங்கப் பெண்ணாகக் கர்ஜித்தாள்.

அவளின் கத்தலில் அனைவரும் சற்று பயந்திட, "கட்சியோட பண பலத்தை விட, ஏழை ஜனங்களோட தர்மம் தான் பெருசு.. விஸ்வநாதனோட பணத்துக்காக வக்காலத்து வாங்கற அத்தனை நிர்வாகிகளுக்கும் நான் ஒன்னு சொல்லிக்கறேன்...அவரோட சேர்ந்து நீங்களும் கட்சியை விட்டுப் போகத் தயாரா இருங்க..

என்ன பொண்ணு தான் இவனு நினைச்சு ஆட நினைக்காதீங்க.. அப்பறம் பின்விளைவு ரொம்ப மோசமா இருக்கும்.. இந்த விருசாலி எடுத்த முடிவுல இருந்து ஒரு மில்லிமீட்டர் கூடப் பின்வாங்க மாட்டா.. துரோகிகளுக்கு இந்தக் கட்சில இடமில்லை.." என்று விருசாலி தன் முடிவில்
உறுதியாக நின்றாள்.

அவளின் துணிச்சலைக் கண்டு ஆதரவு நிர்வாகிகள் அனைவரும் வாயடைத்துப் போய் அப்படியே பின்வாங்கினர்.

விஸ்வநாதன் அவமானத்தின் உச்சத்துக்கே சென்று பற்களை நறநறவெனக் கடித்தபடி அங்கிருந்து வெளியேறினார்.




தொடரும்..
 

Gowri Karthikeyan

Active member
என்ன சொல்லுங்க .....கர்ணன் செய்தது....மன்னிக்க முடியாத தப்பு....இல்ல இல்ல பாவம்
 
Top Bottom