• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மகுடம் சூட்டும் காதல் - 2

அத்தியாயம் - 2



சென்னையின் அந்தப் பிரம்மாண்ட பங்களாவின் மொட்டை மாடி நள்ளிரவிலும் நிசப்தமாக இல்லை. கீழ் தளத்தில் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் அரசியல் கோஷங்களும், அவசர அவசரமாக வந்து போகும் கார்களின் சத்தமும் அந்த நள்ளிரவிலும் கேட்டுக் கொண்டே தான் இருந்தன.

அர்ஜுன் மாடிச் சுவரில் கைகளை ஊன்றி, தூரத்தில் தெரியும் சென்னை நகரத்தின் விளக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது கண்கள் அந்த வெளிச்சத்தைப் பார்க்கவில்லை.. மாறாக, இந்த வீட்டின் சுவர்களுக்குள் மறைந்திருக்கும் அதிகார வெறியையும், சதிகளையும் நினைத்துச் சலிப்படைந்திருந்தன.

அவனது தோள்களை யாரோ மென்மையாகத் தொட்டனர். திரும்பிப் பார்த்தான். அக்கா விருசாலி. கையில் ஆவி பறக்கும் இரண்டு காபி மக்குகளுடன் நின்று கொண்டிருந்தாள்.

"என்னடா அர்ஜுன்... தனியா நின்னு காத்து வாங்கிட்டு இருக்க.? வழக்கம் போல கீழே பெரியப்பாவைப் பார்க்க வந்த கூட்டத்தைப் பார்த்துட்டு கடுப்பாகிட்டியா.?" என்று தன் சோர்வை மறைத்து, லேசான புன்னகையோடு காபி மக்கை அவனிடம் நீட்டினாள் விருசாலி.

காபியை வாங்கிக் கொண்ட அர்ஜுன், ஒரு மடக்கு குடித்து பெருமூச்சு விட்டு "ஆமாக்கா.. எனக்கு இந்த அரசியலே பிடிக்கலக்கா.. இந்த பங்களா, அதிகாரக் கர்வத்தோட திரியுற கார்கள், பதவிக்காகக் காலைப் பிடிக்கற ஆட்கள்... இது எதுலயுமே எனக்கு நிம்மதி இல்லைக்கா..

அப்பாவுக்கு என்னவோ இந்த முதல்வர் நாற்காலிதான் உலகம்.. ஆனா அதுக்காகப் பின்னாடி நடக்கற சதிகளும், துரோகங்களும் எனக்கு மூச்சு முட்டுதுக்கா.." என்றான் தன் மனதில் இருந்த ஒட்டுமொத்த ஆதங்கத்தையும் கொட்டி.

அர்ஜூனின் தந்தை அன்புமணி தான் கட்சியின் தலைவர்.. இவரின் தம்பி மகள் தான் விருசாலி.. தம்பியும் அவனின் மனைவியும் விபத்து ஒன்றில் காலமாகி விட, இவருக்கு மகளாகி போனாள் விருசாலி.

இவருக்கு திருமணமாகி குழந்தை இல்லாமல் இருந்ததில் இவரின் மனைவியும் விருசாலியை தன் மகளாக ஏற்றுக் கொண்டார். அதன் பின்பு தான் இவர்களுக்கு அர்ஜூன் பிறந்தான். அப்போதும் இவளின் மீதான அவர்களின் பாசம் குறையவில்லை.

அதற்காக எப்போதும் கொஞ்சி கொண்டிருப்பார்கள் என்றில்லை.. தவறு செய்தால் கண்டிப்பார்கள்.. நல்லது செய்தால் தட்டி குடுப்பார்கள்.. அன்புமணியை இவள் பெரியப்பா என்று தான் அழைப்பாள்.. ஆனால் அவரின் மனைவியை மட்டும் அம்மா என்றழைப்பாள்.

விருசாலி தம்பியின் முகத்தையே உற்றுப் பார்த்து "நீ சொல்றதும் சரி தான்டா.. ஆனா நாம இந்த வாழ்க்கைல இருந்து அவ்ளோ சீக்கிரம் தப்பி போக முடியாதே.." என்று மெதுவாக இழுத்தாள்.

"ஏன் முடியாதுக்கா.? நீ நினைச்சா முடியும்" என்ற அர்ஜுன் சட்டென அவளது முகத்தைப் பார்த்தான். அவனது குரல் இப்போ தீவிரமாக மாறி இருந்தது.

"அக்கா... நீ இன்னும் அந்த கர்ணனைக் காதலிச்சிட்டு இருக்கீயா.? எனக்கு அவனையோ அவனோட அண்ணன் விஸ்வநாதனையோ கொஞ்சம் கூடப் பிடிக்கலக்கா.. அரசியல் ரீதியா அவங்க எப்படினு நமக்கு தெரியும்..

அந்த விஸ்வநாதன் எவ்வளவு பெரிய சுயநலவாதி தெரியுமா.? அவனோட நிழலா திரியுறவன் தான் இந்த கர்ணன்.. அந்த வீட்டுக்கு மருமகளா போறது உன்னோட நிம்மதியை நீயே அழிச்சுக்கிறதுக்குச் சமம் அக்கா.. இந்த கல்யாண முடிவை நீ மாத்திக்கக் கூடாதா?." என்று தன் அக்காவின் மீதான பாசத்தில் ஆதங்கமாகக் கேட்டான்.

உதட்டோரம் ஒரு மெல்லிய புன்னகையை வரவழைத்துக் கொண்டு தம்பியின் கைகளைத் தன் கைகளுக்குள் புதைத்து
"டேய் அர்ஜுன்.. நீ காலேஜ்ல சயின்ஸ் படிச்சாலும், நம்ம மகாபாரதக் கதையை மறந்துட்டியா.?

மகாபாரதத்துல கர்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் எப்பவுமே ஆகாது.. ரெண்டு பேரும் எதிரெதிரா நின்னு வில்லையும் அம்பையும் வச்சு பெரிய போரே நடத்துனாங்க.. அது ஏன்னா... அங்க அவங்க ரெண்டு பேரையும் ஒண்ணா சேர்க்க ஒரு விருசாலி இல்லை.." என்று கூறி அவனது கன்னத்தைக் கிள்ளினாள்.

அர்ஜுன் புரியாமல் அவளைப் பார்க்க,
விருசாலி தொடர்ந்தாள்.

"உனக்குத் தெரியுமாடா... மகாபாரதத்துல கர்ணனோட மனைவி பேரும் விருசாலி தான்.. இதனால கூட எனக்கு கர்ணன் மீது காதல் வந்துருக்கலாம்.. அவன் மீதான லவ் எப்படி வந்துச்சுனு இப்ப வரைக்கும் எனக்கு தெரியல.. அங்க அவங்க எதிரெதிரா நின்னு சண்டை போட்டு அழிஞ்சாங்க..

ஆனா இந்த நிஜ வாழ்க்கைல என் தம்பி அர்ஜுனனுக்கும், என் கணவன் கர்ணனுக்கும் நடுவுல இந்த விருசாலி ஒரு பாலமா இருப்பாடா.. உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல எந்த வில்லும் அம்பும் வராது.. என் அன்பே உங்க ரெண்டு பேரையும் ஒண்ணா சேர்க்கும்..

நான் கர்ணனைத் தான் கட்டுவேன்.. இதுல பெரியப்பாக்கும் ரொம்ப சந்தோஷம்.. அவருக்கு விஸ்வநாதனை பிடிக்கலனாலும் கர்ணனை ரொம்ப பிடிக்கும்.. பேசிக்கலி கர்ணன் நல்லவன் தான்.. என்ன சேர்ந்த இடம் தான் சரியில்லாம போய்ருச்சு.. இப்ப ஒன்னும் கெட்டு போகல நம்ம கூட சேர்ந்தா அவனும் நல்லவனா மாறிருவான்.. இதுக்காக போய் கர்ணனை வேணாம்னு தூக்கியெறிய முடியுமா என்ன.?" என்று கேலி புன்னகையுடன் வினவினாள்.

அர்ஜுன் அவளது பிடிவாதத்தைப் பார்த்து சிரித்து "உன்கிட்ட பேசி ஜெயிக்கவே முடியாதுக்கா.. விஸ்வநாதனும் அவன் தம்பியும் இந்தக் கல்யாணத்துக்கு எப்படிச் சம்மதிச்சாங்கன்னே எனக்கு இன்னும் ஆச்சரியமாத் தான் இருக்கு.. முதல்ல உன்னைய கல்யாணம் பண்ணவே கூடாதுனு சொன்னா அந்த விஸ்வநாதன் இப்ப எப்படி இவ்வளவு சீக்கிரம் இறங்கி வந்து ஊரைக் கூட்டிப் பிரம்மாண்டமா கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்டாங்க..

அதுக்கு பின்னாடி ஏதோ பெரிய சதி இருக்கும்னு என் மனசு சொல்லுதுக்கா. எனக்கு இன்னமும் அந்த விஸ்வநாதன் குடும்பத்து மேல கொஞ்சம் கூட நம்பிக்கை வரல.." என்று கவலை கலந்த குரலில் கூறினான்.

'அவங்களா சம்மதிக்கலடா அர்ஜுன்.. பெரியப்பாவை கொல்ல நினைச்சா நான் சும்மா இருப்பனா.? என் பெரியப்பாவை காப்பாத்த நான் அவங்க கழுத்துல கத்தியை வச்சுச் சம்மதிக்க வச்சுருக்கேன்.. இனியும் அவங்க தப்பியோட முடியாதபடி செக் வெப்பேன்..' என்ற ரகசியத்தை அவனிடம் சொல்லாமல் தன் மனதுக்குள்ளயே பூட்டி வைத்தாள்.

இந்த அரசியல் ஆபத்தில் தன் தம்பி இப்போது மாட்டுவதை அவள் விரும்பவில்லை.

"அட அதெல்லாம் ஒன்னும் இல்லடா தம்பி... எல்லாம் இந்த அக்காவோட லவ்வுக்கு கிடைச்ச வெற்றி!" என்று அர்ஜுனின் கவலைகளை மாற்றும் விதமாக விளையாட்டுத் தனமாகப் பேசினாள்.

"சரி உன் இஷ்டம்.. நீ நல்லா இருந்தா அதுவே எனக்கு போதும்.. ஆனா ஒன்னுக்கா... இந்தக் கல்யாணம் முடிஞ்சதும் நான் இங்கிருந்து கிளம்புறதுல எந்த மாற்றமும் இல்லை..

சீக்கிரமே எதாவது ஒரு கிராமத்துப் பக்கமா போய் அங்க இருக்கற அரசுப் பள்ளில சாதாரண ஸ்கூல் டீச்சரா வேலை பார்த்துட்டு நிம்மதியா வாழப் போறேன்.. இந்தச் சென்னை அரசியல் சாக்கடையும் விஸ்வநாதன் கூட்டமும் எனக்கு செட் ஆகாது.." என்றான் தீர்க்கமாக.

"தேங்க்ஸ்டா அர்ஜுன்.. அக்காவுக்காக நீ இவ்வளவு தூரம் இறங்கி வந்ததே போதும்" என்று கூறி அவனின் கையை பற்றினாள்.

விருசாலியின் அதிரடி மிரட்டலுக்குப் பிறகு, விஸ்வநாதன் வேறு வழியின்றி திருமணத்திற்குச் சம்மதித்திருந்தார். இருதரப்பு அரசியல் பலத்தையும் உலகிற்கு காட்ட, சென்னையின் மிகப்பிரபலமான பிரம்மாண்ட திருமண மண்டபத்தில் திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தன.

திருமணத்திற்கு இன்னும் இரண்டு நாட்களே இருந்த நிலையில், மண்டபத்தின் முன்பதிவு மற்றும் விஐபி பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பார்வையிட கர்ணன் தன் ஆட்களுடன் அங்கு வந்திருந்தான்.

கர்ணன் சாதாரணமாக விஸ்வநாதனுக்கு அடிபணிந்து போகவில்லை. அதற்குப் பின்னால் பதினைந்து வருடப் பாசமும், நன்றிக்கடனும் கலந்த ஒரு பெரிய பின்னணி இருந்தது.

ஆம் கர்ணன் விஸ்வநாதனின் சொந்தத் தம்பி கிடையாது.. கர்ணனின் தந்தை, விஸ்வநாதனின் குடும்பத்திற்கும் அவர்களது அரசியல் வளர்ச்சிக்கும் தன் வாழ்நாள் முழுவதும் விசுவாசமாக உழைத்த ஒரு சாதாரண ஏழைத் தொண்டன்.

கர்ணனுக்கு பதினைந்து வயதாக இருக்கும் போது ஒரு விபத்தில் அவனது தந்தை திடீரென இறந்து போனார். அனாதையாக நின்ற கர்ணனை தன்னோடு அழைத்து வந்து வைத்துக் கொண்டு தன் தம்பியாக உலகிற்கு அடையாளம் காட்டியவர் விஸ்வநாதன்.

'உங்க அப்பா எனக்கு விசுவாசமா இருந்தான் கர்ணா... இப்போ நீ எனக்குத் தம்பியா என் நிழலா இருக்கணும்' என்று அன்று விஸ்வநாதன் சொன்ன வார்த்தைதான் கர்ணனின் மனதில் ஆழமாகப் பதிந்தது.

அன்று முதல் அவனுக்கு அண்ணன் விஸ்வநாதன் தான் உலகம்.. விஸ்வநாதனின் வலது கையும் இவனே.. அவர் ஒரு வார்த்தை சொன்னால் போதும் அது தவறாக இருந்தாலும் மறுவார்த்தையின்றி செய்து விடுவான்.

அவர் சொல்லே வேதம். அண்ணனுக்காக உயிரைக் கொடுக்கவும் அவன் துணிந்திருந்தான். விஸ்வநாதன் அவனது இந்த விசுவாசத்தை தன் சுயநல அரசியலுக்கு பகடைக்காயாக தான் பயன்படுத்துகிறார்.. அது கர்ணனுக்கும் தெரியும்.. அப்போதும் அவன் அவரை விட்டு விலகவில்லை.

அரசியலில் விஸ்வநாதனை விட கர்ணனுக்கு தான் மக்கள் ஆதரவு அதிகம். எங்கு தவறு நடந்தாலும் முன்னால் சென்று கேட்டு விடுவான்.. அதற்காக அவன் ஜெயிலில் கிடந்த நாட்களும் ஏராளம். இவனுக்காக மட்டும் தான் மக்கள் விஸ்வநாதனுக்கு வாக்களிக்கிறார்கள் என்பது விஸ்வநாதனே அறியாத ஒன்று.

உண்மையில் விஸ்வநாதனின் மனதில் எரியும் நெருப்பு வேறொன்று. அவருக்கு ஆகாஷ் என்ற ஒரு பையன் இருக்கிறான். கட்சியின் தலைவர் மகளான விருசாலியை தன் பையன் ஆகாஷுக்குக் கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்பது தான் விஸ்வநாதனின் மாஸ்டர் பிளான்..

அப்படி நடந்தால் தலைவருக்குப் பிறகு ஒட்டுமொத்தக் கட்சியும், தமிழகத்தின் அந்த முதன்மை நாற்காலியும்தன் சொந்தக் குடும்பத்தின் கைக்கே வந்துவிடும் என்று அவர் பகற்கனவு கண்டார்.

ஆனால் சில மாதங்களுக்கு முன்பு விஸ்வநாதன் இந்தத் திருமணப் பேச்சை எடுத்த போது, தலைவர் அதை அடியோடு மறுத்து "உன் பையன் ஆகாஷ் அரசியல் தகுதி இல்லாதவன் விஸ்வநாதா.. என் பொண்ணு விருசாலிக்கு உன்னோட தம்பி கர்ணனைத் தான் மாப்பிள்ளையா கேட்கறேன்.. அவன் தான் விசுவாசமானவன்.. தகுதியானவன்.." என்று தலைவர் கறாராகக் கூறி விட்டார்.

தன் சொந்தப் மகனுக்குக் கிடைக்க வேண்டிய அந்தப் பிரம்மாண்ட அரசியல் அந்தஸ்தும், முதல்வர் நாற்காலிக்குச் செல்லும் பாதையும், வெறும் வளர்ப்புத் தம்பியான கர்ணனுக்கு போகிறதே என்ற ஆத்திரமும், பொறாமையும் விஸ்வநாதனைப் பித்துப் பிடிக்க வைத்தது.

'ஒரு சாதாரண தொண்டனோட பையன் என் பையனோட வாழ்க்கையைத் தட்டிப் பறிப்பதா.?' என்ற வன்மம் அவருள் கனன்றது.

இந்தக் கோபமும், எப்படியாவது முதல்வர் நாற்காலியில் அமர வேண்டும் என்ற வெறியும் தான் தலைவரையே கொலை செய்யத் தூண்டும் அளவிற்கு அவரை கொடூரமாக மாற்றியது.

இப்போது விருசாலி அந்த வீடியோவை வைத்துக் கர்ணனை கல்யாணம் செய்ய மிரட்டியதில், விஸ்வநாதனின் ஒட்டுமொத்தத் திட்டமும் தலைகீழாக மாறி விட்டிருந்தது.

மண்டபத்தில் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்த கர்ணன் கடுகடுப்பான முகத்துடன் தன் ஆட்களுக்குக் கட்டளையிட்டுக் கொண்டிருந்தான்.

அப்போது தன் தந்தையின் கட்டாயத்தினால் திருமணப் பத்திரிகைகளின் இறுதிப் பட்டியலை மேலாளரிடம் கொடுக்க அர்ஜுனும் அங்கு வந்திருந்தான்.

மேலாளர் அறையிலிருந்து வெளியே வந்த அர்ஜுன் அங்கே நின்றிருந்த கர்ணனைப் பார்த்தான். அர்ஜுனின் கண்கள் சிவந்தன. தன் அக்கா இந்த அரசியல் சாக்கடைக்குள் விழுவதற்குக் காரணமானவனை அவனுக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை.

நேராக கர்ணனை நோக்கி நடந்தான். அவனது நிழல் தன் மீது விழுந்ததை உணர்ந்து கர்ணனும் திரும்பினான். இருவரின் கண்களும் நேருக்கு நேராக சந்தித்து கொண்டன.

கர்ணன் தன் ஆட்களைச் சைகையால் தள்ளிப் போக கூறிட, "என்ன தம்பி... பத்திரிகை லிஸ்ட் கொடுக்க வந்தீங்களா.? உங்க அப்பா ஆளுக இங்கையும் வந்து அதிகாரம் பண்ண ஆரம்பிச்சுட்டாங்களா.?" என்று லேசான ஏளனத்துடன் கேட்டான்.

அதில் கோவமுற்ற அர்ஜூன் கைகளை இறுக்கிக் கொண்டு கர்ணனுக்கு மிக அருகில் சென்று "யார் யாருக்கு அதிகாரம் பண்றாங்கனு இன்னும் ரெண்டு நாள்ல தெரிஞ்சுரும் கர்ணா.. கொஞ்ச நாள் வரைக்கும் என் அக்காவை வேணாம்னு சொன்ன உங்க அண்ணன் விஸ்வநாதன், இப்போ திடீர்னு வால் ஆட்டிக்கிட்டு வந்து பிரம்மாண்டமா கல்யாணம் பண்ண சம்மதிச்சுருக்காருனா அதுக்கு பின்னாடி ஏதோ பெரிய சதி இருக்கு..

உங்க அண்ணனோட அரசியல் சுயநலத்துக்காக என் அக்காவோட வாழ்க்கையை பகடைக்காயா யூஸ் பண்ணலாம்னு நினைச்சீங்க.உங்க மொத்த குடும்பத்தையும் நடுத்தெருவுல நிறுத்திருவேன்.." என்று எச்சரித்தான்.

கர்ணன் அசரவில்லை.. அவனது பற்கள் இறுகின. தன் தந்தையின் காலத்திலிருந்து விஸ்வநாதன் குடும்பத்திற்காக உழைக்கும் விசுவாசம் அவனுக்குள் கோபக் கனலை உருவாக்கியது. தன் அண்ணன் தவறே செய்தாலும் அவரைப் பற்றி யாரும் தவறாக பேசி விட கூடாது.. அப்படியும் யாராவது பேசி விட்டால் அவர்களின் கன்னம் பழுப்பதும் உறுதி.

இப்போது பேசியது அர்ஜூன் என்பதால் கையை முறுக்கிக் கொண்டு அமைதியாக நிற்க வேண்டிய சூழ்நிலை. இந்த அமைதி கூட விருசாலிக்காக தான்..

"பகடைக்காயா.? அது சரி.. தம்பி உங்க அக்கா என்ன சாதாரணமான பொண்ணா என்ன.? அவ என்ன பண்ணி இருக்கானு அவகிட்டயே போய் முதல்ல கேளுங்க.. இந்த கல்யாணத்துல என் அண்ணன் இறங்கி வரல.. உங்க அக்கா தான் ஏதோ தில்லாலங்கடி வேலை பார்த்து எங்க அண்ணன் கழுத்துல கத்தியை வச்சுருக்கா..

ஆனா ஒன்னு நினைப்பு வச்சுக்கோ தாலி கட்டற வரைக்கும் தான் உங்க அக்காவுக்கு பின்னாடி உங்க அப்பாவோட அரசியல் பலம் இருக்கும்.. தாலி கட்டுன அடுத்த நிமிஷம் அவ எங்க வீட்டு பொண்ணு.. அவளை எப்படி நடத்தணும், அவளோட திமிரை எப்படி அடக்கணும்னு எனக்கு நல்லாவே தெரியும்.." என்று ஏட்டிக்குப் போட்டியாகப் பேசினான்.

"ஏய் வார்த்தையை அளந்து பேசு.. என் அக்காவைப் பத்தி எதாவது தப்பா பேசின..." என்று அர்ஜுன் ஆத்திரத்தில் கர்ணனின் சட்டையைப் பிடிக்க போய் பின்பு கையை உதறினான்.

"சட்டை மேல கை வைக்கற பழக்கத்தை எல்லாம் வேற ஆள்கிட்ட வெச்சுக்கோ தம்பி.. என்கிட்ட வச்சுக்கிட்டா கையே இருக்காது.. கல்யாணத்துக்கு முன்னாடியே இவ்வளவு ஆக்ரோஷம் ஆகாது.. போய் உன் வேலையை பாரு.." என்று அலட்சியமாக அவனைக் கடந்து சென்றான் கர்ணன்.

அடுத்த இரண்டு நாட்களில் தமிழக அரசியலே வியக்கும் வண்ணம் கர்ணன் - விருசாலி திருமணம் மண்டபத்தில் பிரம்மாண்டமாக நடந்தது.

மேடையில் விஸ்வநாதன் தன் முகத்தில் போலிப் புன்னகையை மாட்டிக் கொண்டு, விருசாலியின் பெரியப்பாவிடம் குனிந்து குனிந்து பேசிக் கொண்டிருந்தார்.

கட்சியின் தலைவர்.. அவரே தன் பெண்ணிற்கு கர்ணனை கேட்க, விஸ்வநாதனுக்கு விருப்பமில்லை தான்.. அதுவே தன் மகனுக்கு கேட்டிருந்தால் மொத்த பல்லையும் காட்டி சம்மதம் என்றிருப்பார்.. கேட்டதோ கர்ணனுக்கு ஆயிற்றே.. அதில் விருப்பமில்லை என்றாலும் விருசாலியின் மிரட்டலுக்கு பயந்து அனைத்து வேலைகளையும் துரிதப்படுத்தினார்.

இப்போது கூட கர்ணனுக்கு வந்த வாழ்வை நினைத்து அவருக்குள் ஏகப்போக கடுப்பு தான்.

'இந்த அனாதைக்கு வந்த வாழ்வை பாரு.. அப்படி எனத்தை காட்டி அவளை மயக்குனானு தெரியல..' என்று கர்ணனை வசை பாடினார் மனதினுள்.

கர்ணன் பட்டு வேட்டி சட்டையில் மணமகனாக அமர்ந்திருந்தான். அவனது முகம் எரியும் எரிமலையை போல் இருந்தது. மங்கள வாத்தியங்கள் முழங்க, கெட்டிமேளம் கொட்ட, கர்ணன் விருசாலியின் கழுத்தில் மங்கல நாணை அணிவித்தான்.

தாலியைக் கட்டி முடித்ததும் விருசாலியின் காதருகே குனிந்து, "ஊரைக் கூட்டி தாலி கட்டியாச்சு விருசா.. இனி தான் உனக்கு நரகம் ஆரம்பம்.. எல்லாத்துக்கும் ரெடியா இருந்துக்கோ.." என்றான் ஆத்திரத்துடன்.

விருசாலி கலங்கவில்லை. "பார்க்கலாம் கர்ணா... அந்த நரகத்தை நான் எப்படி சொர்க்கமா மாத்தறேனு மட்டும் பாரு.." என்று கூறி விருசாலியும் கண் சிமிட்டினாள்.

மேடையில் உறவினர்கள் வரிசையாக வந்து வாழ்த்தி கொண்டிருந்தனர். அப்போது கூட்ட நெரிசலைக் கடந்து மேடைக்கு மேலே ஏறினான் அர்ஜுன். அவனைக் கண்டதும் விருசாலியின் முகம் மலர்ந்தது. ஆனால் கர்ணன் அவனைக் கூர்மையாகப் பார்த்தான்.

அர்ஜுன் நேராக வந்து அக்காவின் கையை பிடித்து "நல்லா இரு அக்கா" என்று பாசத்தோடு வாழ்த்தினான்.

பின்னர் மெதுவாகக் கர்ணனின் பக்கம் திரும்பினான்.. ஒரு நொடி அமைதி நிலவியது.

"வாழ்த்துக்கள் கர்ணா.. மகாபாரதத்துல அர்ஜுனன் விட்ட அம்பு கர்ணனோட தேரை மட்டுமில்ல அவனோட கர்வத்தையே சாய்ச்சுது.. என் அக்கா விஷயத்துல எதாவது தப்பா நடக்கட்டும்.. அதை மனசுல வச்சுக்கோங்க.." என்று மெல்லிய குரலில் எச்சரிக்கை விடுத்தான்.

கர்ணன் அசரவில்லை. அவனது பற்கள் இறுகின. அர்ஜுனின் கண்களை நேராகப் பார்த்து "மகாபாரதக் கதையை அரைகுறையா படிச்சுருக்கீங்க தம்பி.. அன்னைக்குக் கர்ணன் தோத்ததுக்குக் காரணம் அவனோட வில் வித்தை குறைவு இல்லை அது அவனோட விதி.. ஆனா இந்த நிஜ வாழ்க்கைல விதியை எழுதுறதே நாங்க தான்..

அர்ஜுனன் எவ்வளவு பெரிய வில்லாளனா இருந்தாலும், கர்ணனோட கவச குண்டலத்தைக் கூட அவனால நெருங்க முடியலங்கிறதை மறந்துடாதீங்க.." என்று பதிலடி தந்தான்.

இருவருக்கும் இடையே வார்த்தை அம்புப் போர் பலமாக ஓடியது. நடுவில் நின்றிருந்த விருசாலிக்கு இவர்களின் பேச்சு புரிந்தது.

அவள் லேசாக அர்ஜுனின் கையைப் பற்றி "டேய் அர்ஜுன்.. அமைதியா இருடா" என்று அவனைக் கட்டுப்படுத்தினாள்.

கர்ணனை முறைத்து விட்டு அவன் செல்ல, "உன்னோட சே
ர்ந்து உன் தம்பியையும் நான் சமாளிக்கணுமா என்ன.?" என்று குறைப்பட்ட கணவனைக் கண்டு தாராளமாக உதட்டை விரித்து சிரிப்பை மலர விட்டாள் பெண்ணவள்.



தொடரும்..
 
Top Bottom