• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மகுடம் சூட்டும் காதல் - 4

அத்தியாயம் - 4



விடிந்தும் விடியாத அதிகாலைப் பொழுது. திருமணத்தின் சடங்குகள் முடிந்து இரண்டு நாட்கள் ஆகியிருந்த நிலையிலும், அந்த மாளிகைக்குள் இருந்த பதற்றமான அரசியல் நிசப்தம் இன்னும் குறையவில்லை.

அர்ஜுன் பங்களாவின் வரவேற்பறையில் இருந்த சோபாவில் அமர்ந்து, கைகளில் ஒரு செய்தித்தாளை வைத்திருந்தான். ஆனால் அவனது கவனம் அதில் இல்லை.

விருசாலியின் திருமணம் முடிந்து விட்டாலும், அவனது மனதிற்குள் இருந்த ஏதோ ஒரு இனம் புரியாத பாரம் அவனைக் குடைந்து கொண்டே இருந்தது.

விஸ்வநாதன் மற்றும் ஆகாஷின் குணங்கள் அவனுக்கு நன்றாகத் தெரியும். அந்த நரியின் கோட்டைக்குள் தன் அக்கா சிக்கியிருப்பதை நினைக்கும் போதெல்லாம், அவனது நெஞ்சுக்கூடு பயத்திலும் ஆத்திரத்திலும் ஏறி இறங்கியது.

'அரசியல் சாக்கடை சொந்தக் குடும்பத்தையே பகடைக்காயா மாத்திருச்சு..' என்று தனக்குள் முணுமுணுத்தபடி எழுந்தான் அர்ஜுன்.

தன் அப்பாவை பார்த்து விட்டு இந்த ஊரை விட்டு வெளியேறும் முடிவைச் சொல்லலாம் என்று அவரது பிரத்தியேக ஆலோசனை அறையை நோக்கி நடந்தான்.

பங்களாவின் நீண்ட காரிடாரில் அவனது காலடிகள் மெதுவாக விழுந்தன.
தலைவரின் அறைக்கு அருகில் நெருங்கிய போது, அங்கே ஒரு மூடிய ஜன்னலின் திரைக்குப் பின்னாலிருந்து இரண்டு பேர் ரகசியமாகப் பேசும் குரல் கேட்டது.

குரல்கள் மிகவும் பரிச்சயமானவை.. ஒன்னு தன் தந்தையின் வலது கரம் போன்ற முக்கிய நிர்வாகி.. இன்னொன்று விஸ்வநாதனின் மகன் ஆகாஷ்!

அர்ஜுன் சட்டென ஒரு தூணின் மறைவில் நின்ற தன் காதுகளைக் கூர்மையாக்கினான்.

"ஆகாஷ் தம்பி.. அண்ணன் விஸ்வநாதன் இப்போதைக்குச் சென்னை அரசியல் பக்கமே தலை காட்ட வேணாம்னு சொல்லியிருக்காரு..

தலைவரோட கொலைச் சதி வீடியோ அந்த விருசாலி கைல இருக்கற வரைக்கும் நாம ரொம்ப அடங்கித் தான் போகணும்" என்றான் அந்த நிர்வாகி கவலையான குரலில்.

ஆகாஷ் கைகளை மேஜை மீது ஓங்கி அடித்து "எவ்வளவு நாளைக்கு இவங்களுக்கு பயந்து கைகட்டி வாழ்றது.? என் அப்பாவோட முதல்வர் நாற்காலி கனவையே அந்தச் சிறுக்கி கெடுத்துட்டா.. சரி சென்னை அரசியல் தான் இப்போதைக்கு வேணாம்னு அப்பா சொல்றாரு..

ஆனா நம்ம சொந்தக் கிராமமான நெல்வயல் பகுதில இருக்கற அந்த ரசாயன ஆலை வேலைகளாவது கச்சிதமா நடக்குதா.? இல்லை அங்கயும் எதாவது பிரச்சனை இருக்கா.?" என்று ஆத்திரத்துடன் கேட்டான் ஆகாஷ்.

"அங்க எந்தப் பிரச்சனையும் இல்லை தம்பி.. ஆலைல இருந்து வெளியேறுற ரசாயனக் கழிவுகளை யாருக்கும் தெரியாம நிலத்தடி நீர்லயும், ஆற்று நீர்லயும் ரகசியமா கலந்து விட்டுட்டு இருக்கு.. ஊருக்குள்ள இருக்கற நிலங்களையெல்லாம் நம்ம ஆளுங்க மிரட்டிப் பறிச்சுட்டாங்க..

அந்த ஊர் மக்களுக்குத் தண்ணியால ஏதோ பெரிய நோய் பரவுதுன்னு லோக்கல் மீடியாக்கள்ல சின்னதா பேச்சு கிளம்புச்சு.. அதையும் நம்ம ஆளுங்க பணத்தை வீசி எல்லாத்தையும் மூடி மறைச்சுட்டாங்க..

இப்போதைக்கு நெல்வயல் கிராமம் முழுக்க நம்ம விஸ்வநாதன் அண்ணனோட முழு கன்ட்ரோல்ல தான் இருக்கு.. அங்கிருந்து வர்ற கள்ளப்பணம் தான் இப்போ நமக்கு முக்கிய ஆதாரம்.." என்று அந்த நிர்வாகி மிகவும் தெளிவாகக் கூறினான்.

தூணின் மறைவில் நின்றிருந்த அர்ஜுனின் உடலில் ஒரு மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது. அவனது கண்கள் கோபத்தில் சிவந்தன.

'நெல்வயல் கிராமமா.? அங்க விஸ்வநாதனுக்குச் சொந்தமான ரசாயன ஆலையா.? நிலத்தடி நீரில் நச்சைக் கலந்து ஒரு ஒட்டுமொத்தக் கிராமத்தையே அழித்துக் கொண்டிருக்கிறார்களா.?' என்ற உண்மையை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை.

விஸ்வநாதன் இவ்வளவு கொடூரமான துரோகியா.? இவ்வளவு பெரிய குற்றத்தைச் செய்து விட்டுத் தான் சென்னையில் பெரிய மனிதன் போல் வலம் வருகிறானா.? அவனது இந்த மாபெரும் நிழல் உலகக் குற்றங்கள் அத்தனையும் தெரியாமல், தன் அக்காவும் அதே குடும்பத்தின் மருமகளாகச் சென்று நரகத்தில் வாழப் போகிறாளே என்று அர்ஜுனின் இதயம் துடித்தது.

'இவனுங்களை சும்மா விடக்கூடாது.. இவங்க பண்ற அநியாயத்துக்கு ஆதாரத்தோட இவனுங்களை நடுத்தெருவுல நிறுத்தணும்' என்று அர்ஜுன் மனதிற்குள் சபதம் எடுத்தான்.

அவனால் உடனடியாகத் தன் அக்காவிடமோ அப்பாவிடமோ இதைச் சொல்ல முடியாது.. ஏனென்றால், அவனிடம் வெறும் பேச்சு மட்டுமே இருக்கிறது..

எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. அறிவியல் பட்டதாரியான அவனுக்கு நன்றாகத் தெரியும்.. சட்டத்தின் முன்பும் மக்கள் முன்பும் குற்றத்தை நிரூபிக்க வலுவான ஆதாரங்கள் தேவை.

அப்பாவிடம் பேச வந்ததை மறந்து விட்டு அப்படியே மெல்ல நடந்தான்.


விஸ்வநாதனின் பங்களா வாசல்.. அர்ஜுன் தன் காரிலிருந்து இறங்கி, நேராக அந்தப் பிரம்மாண்ட பங்களாவின் வரவேற்பறைக்குள் நுழைந்தான்.

அவனது முகத்தில் எந்தப் பயமும் இல்லை.
வரவேற்பறையில் விஸ்வநாதனும் ஆகாஷூம் அமர்ந்திருந்தனர்.

அர்ஜுன் உள்ளே நுழைவதைப் பார்த்ததும் ஆகாஷ் நிமிர்ந்து அமர்ந்தான். விஸ்வநாதன் தன் முகத்தில் ஒரு போலிப் புன்னகையை வரவழைத்துக் கொண்டு "என்ன தம்பி அர்ஜுன்... கல்யாணம் முடிஞ்சு ரெண்டு நாள்ல அக்காவைப் பார்க்க வந்துட்டியா.? வாங்க..." என்று வரவேற்றார்.

அர்ஜுன் விஸ்வநாதனை ஒரு அலட்சியப் பார்வையோடு பார்த்தான். நேற்று அவன் கேட்ட அந்த ரசாயன ஆலை சதித் திட்டம் அவனது நினைவுக்கு வந்தது.

இருந்தாலும், அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் "ஆமாம் அண்ணே... என் அக்கா எப்படி இருக்கான்னு பார்க்க வேணாமா.? அவளைப் பார்க்கறதுக்கு நான் யார்கிட்டயாவது அனுமதி கேட்கணுமா என்ன.? என்று நேரடியாக கேட்டான்.

தன் மகன் ஏதாவது எடக்குமடக்காக பேசி விடுவான் என்று பயந்து "அனுமதி எல்லாம் எதுக்கு தம்பி.? நீ எப்ப வேணாலும் வரலாம்.. உன் அக்கா மேல இருக்கற ரூம்ல தான் இருக்கா.. போய் பாரு" என்று அவனை அனுப்பி விட்டார் விஸ்வநாதன்.

"தேங்க்ஸ் அண்ணே.." என்றவனின் இதழ்கள் ஒரு எள்ளல் புன்னகையை வீசியது.

அர்ஜுன் படிக்கட்டுகளில் ஏறி நேராக முதல் தளத்தில் இருந்த விருசாலியின் அறைக்குச் சென்றான்.

கதவைத் திறந்து உள்ளே நுழைந்த அர்ஜுனைப் பார்த்ததும் விருசாலிக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

"வாடா அர்ஜுன்... என்ன இந்த நேரத்துல.?" என்று கேட்டாள்.

அவளின் கேள்விக்கு பதிலுரைக்காமல் அறையின் கதவைச் சாத்தியவன் நேற்று வீட்டில் கேட்ட விஸ்வநாதனின் மகன் ஆகாஷின் ரகசிய உரையாடலை ஒட்டுமொத்தமாக அவளிடம் கொட்டினான். அதன் பின்பு தான் இவனுக்கு பெரிய பாரமே இறங்கியது போலிருந்தது.

"அக்கா... இந்த விஸ்வநாதன் குடும்பம் எவ்வளவு கொடூரமானது தெரியுமா.? அவங்களோட நெல்வயல் கிராமத்து ரசாயன ஆலைல இருந்து வர்ற நச்சுக் கழிவுகளை நிலத்தடி நீர்ல கலந்து ஒட்டுமொத்த ஊரையே அழிச்சிட்டு இருக்காங்கக்கா..

இதைய கேட்டதுல இருந்து என் மனசு எல்லாம் படபடனு இருக்கு.. இதைய நாம சும்மா விடக்கூடாது.. நான் அங்கே போக போறேன்கா.." என்றான் நிதானமாக.

விருசாலி அதிர்ச்சியில் உறைந்து போனாள். விஸ்வநாதன் தன் பெரியப்பாவைக் கொல்லத் திட்டம் தீட்டியதை விட, ஒட்டு மொத்தக் கிராமத்தையே நச்சு நீரைக் குடிக்க வைத்து அழித்துக் கொண்டிருக்கிறார் என்பது அவளின் மூளையை உலுக்கியது.

"அர்ஜுன்... நீ சொல்றது ரொம்ப பெரிய விஷயம்.. நீ சாதாரணமா அங்கே போனா விஸ்வநாதனோட ஆளுங்க உன்னைய அடையாளம் கண்டுபிடிச்சுருவாங்க.. அப்பறம் உனக்கு ஆபத்து வந்துரும்" என்று கூறினாள்.

"எனக்குத் தெரியும் அக்கா.. அதனால தான் நான் அங்கே என்னோட உண்மையான அடையாளத்தை மறைச்சுக்கிட்டு, ஒரு சாதாரண அரசுப் பள்ளி தற்காலிக அறிவியல் ஆசிரியரா போகலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்.. பகல்ல பாடம் நடத்துவேன்..

மாலை நேரத்துல யாருக்கும் தெரியாம அந்த ஆலையோட ரசாயனக் கழிவுகளையும், தண்ணீரையும் சாம்பிள் எடுத்து லேப் டெஸ்ட் பண்ணி ஆதாரங்களைத் திரட்டுவேன்கா.." என்று இரவு முழுவதும் தான் யோசித்து எடுத்த முடிவை கூறினான்.

தம்பியின் கண்களில் இருந்த அந்த அழுத்தத்தை உணர்ந்து அவளுக்குப் பெருமையாக இருந்தது.

கர்ணனின் அண்ணன் செய்யும் இந்த மாபெரும் துரோகத்தை உலகிற்கு காட்ட அர்ஜுனின் இந்தத் திட்டம் தான் கச்சிதமானது என்று அவளது அரசியல் மூளை கணக்கு போட்டது.

"நீ சொல்றது சரி தான்டா அர்ஜுன்.. அந்த நெல்வயல் அரசுப் பள்ளியில தற்காலிக ஆசிரியர் வேலை வாங்கறது சாதாரணம் இல்லை.. நீயா போனா சந்தேகம் வரும்.. அதைய உனக்கு நான் செஞ்சு தர்றேன்.." என்று விருசாலி தன் அறை மேஜையில் இருந்த மொபைலை எடுத்தாள்.

விஸ்வநாதனின் வீட்டு மருமகளாக இருந்தாலும், அவளுக்குப் பின்னால் அவளது பெரியப்பாவின் கட்சியின் செல்வாக்கு இன்னும் அப்படியே இருந்தது.

கல்வித் துறையின் உயர் அதிகாரியை ரகசியமாகத் தொடர்பு கொண்டாள் விருசாலி.

"சார்... நான் விருசாலி பேசுறேன்.. நெல்வயல் கிராமத்து அரசு உயர்நிலைப் பள்ளில காலியா இருக்கற தற்காலிக அறிவியல் ஆசிரியர் பணிக்கு எனக்குத் தெரிஞ்ச ஒரு பையனோட விபரங்களை அனுப்பறேன்.. அவனுக்கு யாருக்கும் சந்தேகம் வராதபடி இன்னைக்கே அரசு தற்காலிக பணி ஆணை ரெடி பண்ணி என் கைக்கு வரணும்.. விஷயம் ரொம்ப ரகசியமா இருக்கணும்.." என்று அதிகாரமாக கட்டளையிட்டாள்.

விருசாலியின் அரசியல் செல்வாக்கிற்கு முன்னால் அந்த அதிகாரி மறுவார்த்தை பேசவில்லை. அடுத்த இரண்டே மணி நேரத்தில் அர்ஜுனின் மொபைலுக்கு அந்த அரசுப் பள்ளி ஆசிரியர் பணிக்கான ரகசிய ஆணை டிஜிட்டல் ஆவணமாக வந்து சேர்ந்தது.

அர்ஜுன் அந்தப் ஃபைலைப் பார்த்து
விட்டு ஆச்சரியத்தோடு அக்காவைப் பார்த்தான்.

"தேங்க்ஸ்கா.. இனி மேல் நான் யாருக்கும் தெரியாம அந்த ஊருக்குள்ள சாதாரண வாத்தியாரா நுழைஞ்சரலாம்" என்றான்.

"பார்த்துடா அர்ஜுன்... அங்க இருக்கறது விஸ்வநாதனோட ஆளுங்க.. உன்னோட அடையாளம் வெளிய தெரிஞ்சா அவனுங்க எதையும் செய்யத் துணிவாங்க.. ஆதாரங்களை விறுவிறுப்பா திரட்டு.. உனக்கு இங்க இருந்து நான் எல்லா சப்போர்ட்டும் தர்றேன்.. விஸ்வநாதனா.? நம்மளானு ஒரு கை பார்த்தரலாம்.." என்று தம்பியின் கையை இறுக்கப் பற்றினாள்.

அதன் பிறகு பொதுவாக இருவரும் பேசி கொண்டு அமர்ந்திருக்க, மங்களம் பரிமாறிய உணவையும் முடித்து கொண்டு விருசாலியிடம் இருந்து விடைப்பெற்றான் அர்ஜூன்.

அவளின் வாழ்வை பற்றி கேட்க நினைத்தான். ஆனால் அக்காவின் முகத்தில் தெரிந்த பொழிவே அவனுக்கு உண்மை என்னவென்று பறைசாற்றிட, மனதிற்குள் புன்னகைத்து கொண்டு அதோடு அந்நினைப்பையும் விட்டு விட்டான்.

கைகளை இறுக்கமாகக் கட்டிக் கொண்டு வாசலில் நின்றிருந்தான் கர்ணன்.
அர்ஜுனின் காலடிச் சத்தம் கேட்டு அவன் திரும்பிட, அவனை கண்டும் காணாததுமாக அவன் செல்ல முயன்றான்.. ஆனால் கர்ணன் விடவில்லை.

"என்ன தம்பி.. உன் அக்காவை பார்த்துப் பேசி முடிச்சாச்சா.? திருப்தியா.?" என்று லேசான ஏளனத்துடன் கேட்டான்.

அசராமல் அர்ஜூனும் "திருப்திக்கு என்ன குறைச்சல் கர்ணா.? என் அக்கா எந்தக் கோட்டைக்குள்ள நுழைஞ்சாலும் அவ மகாராணி தான்.. ஆனா ஒன்னு இந்த பங்களாவோட அஸ்திவாரமே ரொம்பப் பலவீனமா இருக்கற மாதிரி எனக்குத் தோணுது..

வெளிய பார்க்கத் தான் பிரம்மாண்டம்.. ஆனா உள்ளுக்குள்ள ஏகப்பட்ட கறுப்புப் பக்கங்கள் மறைஞ்சுருக்கு.. சீக்கிரமே ஒரு பெரிய புயல் அடிச்சு இந்த மொத்தக் கோட்டையும் சரிஞ்சு விழப் போகுது, பார்த்து இருங்க" என்றான் அமைதாயாக.

"புயலா.? தம்பி புயல் அடிச்சா சாதாரண மரங்கள் தான் வேரோட சாயும்.. பாறாங்கல் மாதிரி நிற்கற இந்தக் கர்ணனோட கவசத்தை எந்தப் புயலாலும் அசைக்கக் கூட முடியாது..

நீங்க சயின்ஸ் படிச்சுட்டு வந்து என்கிட்ட பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேச வேணாம்.. உங்க அக்கா ஏதோ தில்லாலங்கடி வேலை பார்த்து, என் அண்ணனை மிரட்டி இந்தக் கல்யாணத்தைச் செஞ்சுருக்கலாம்.

அவளோட ஆட்டம் இந்த வீட்டு வாசலோட முடிஞ்சு போச்சு.. உள்ளுக்குள்ள அவளை எப்படி அடக்கணும்னு எனக்கு நல்லாவே தெரியும்.. மகாபாரதத்துல அர்ஜுனன் அம்பு விட்டா, அதுக்குக் பதிலடி கொடுக்கக் கர்ணன்கிட்டயும் அம்பு இருந்ததுங்கிறதை மறந்துடாதீங்க.." என்று கிண்டலாக சிரித்தபடியே கூறினான்.

அர்ஜுன் சற்றும் அசரவில்லை. அவனது உதட்டோரம் ஒரு சாணக்கியப் புன்னகை விரிந்தது.

"அன்னைக்கு மகாபாரதத்துல கர்ணன்கிட்ட அம்பு இருந்தது நிஜம் தான்.. ஆனா அவனோட தேர்க்கால் பூமியில மாட்டிக்கிட்டு நின்னப்போ... அவனோட அத்தனை அம்பு வித்தையும், கர்வமும் நடுத்தெருவுல தான் சாய்ஞ்சுது.. இந்த நிஜ வாழ்க்கையிலயும் உங்க தேர்க்கால் பூமில மாட்டுற நாள் ரொம்ப தூரத்துல இல்லை..

அன்னைக்கு உங்க அண்ணன் விஸ்வநாதனோட சேர்த்து நீங்களும் நடுத்தெருவுல தான் நிற்பீங்க.. அப்போ இந்த அர்ஜுனனோட அம்பு எவ்வளவு கூர்மையானதுனு உங்களுக்குப் புரியும்.." என்று சவாலாகப் பேசினான்.

"ஏய்! வார்த்தையை அளந்து பேசுடா... என் அண்ணனைப் பத்தி ஏதாவது தப்பா..." என்று கர்ணனின் கண்கள் சிவக்க, அவன் அர்ஜுனை நோக்கி ஒரு அடி முன்னேறினான்.

"நிறுத்துங்க ரெண்டு பேரும்.." என்ற விருசாலியின் அதிகாரக் குரல் ஒலித்தது. இருவருமே சட்டெனத் திரும்பிப் பார்த்தனர். அவளது பார்வையில் இருந்த அழுத்தம் இருவரையுமே ஒரு நொடி கட்டுப்படுத்தியது.

"அர்ஜுன் உனக்கு நேரமாச்சுல.? கிளம்புடா" என்று விருசாலி தன் தம்பியை அனுப்பி விட்டாள். அவனும் கர்ணனை முறைத்தபடி வெளியேறிட, "என் தம்பிகிட்ட உன் வீரத்தைக் காட்டிட்டு இருக்காத.." என்று கணவனையும் எச்சரிக்க, கர்ணனோ "ஏய் போடி அங்குட்டு.." என்று மனைவியை தள்ளி விட்டு நகர்ந்தான்.

பங்களாவின் பின் பக்கமிருந்த விஸ்வநாதனின் ரகசிய ஆலோசனைக் கூடம். விருசாலி அங்கே அமைதியாக வந்து அமர்ந்தாள்.

அவள் தனியாக இருப்பதை கண்டு அவளுக்கு முன்னால் விஸ்வநாதன் கைகளில் சிகரெட்டுடன் உலவிக் கொண்டிருந்தான். அவனது முகத்தில் இருந்த போலிப் புன்னகை இப்போது மறைந்து இருந்தது. கர்ணன் வீட்டில் இல்லை.. அவன் மங்களத்தை கோவிலுக்கு அழைத்து சென்றிருந்தான்.

சிகரெட் புகையை ஊதியபடி விருசாலியின் அருகில் வந்த விஸ்வநாதன் "ஏய் நீ ரொம்ப புத்திசாலினு நினைச்சுட்டு இருக்கல்ல.? ஒரு வீடியோவை வச்சு என்னைர மிரட்டி அந்த அனாதை பயலை கல்யாணம் பண்ணிட்டு இங்க வந்துட்டல.? ஆனா ஒன்னு நினைப்பு வச்சுக்கோ இது விஸ்வநாதனோட கோட்டை..

இங்க சட்டம், போலீஸ், அதிகாரம் எல்லாமே என் விரலசைவுல தான் நடக்கும்.. இந்த வீட்டுக்குள்ள நீ உயிரோட வாழப் போற ஒவ்வொரு நாளும் உனக்கு நரகமா இருக்கும்.. அந்த வீடியோ பென்டிரைவை இப்போவே என்கிட்ட ஒப்படைச்சுட்டு அமைதியா இருந்தா உன் பெரியப்பாவும் நீயும் கொஞ்ச நாள் உயிரோட இருக்கலாம்.. இல்லைனா..." என்று மிரட்டினார்.

ஆஹான்.. என்று ஏளனத்துடன் சிரித்த பெண்ணவள் "விஸ்வநாதன் அண்ணே... நீங்க இன்னும் என்னைச் சாதாரணப் பொண்ணா நினைச்சுட்டு இருக்கீங்க போல.?

அந்த வீடியோ இருக்கற ஒரிஜினல் பென்டிரைவ் இப்போ இந்த பங்களாவுக்குள்ள இல்ல.. அதைச் சென்னையோட மிக முக்கியமான ஒரு ரகசிய இடத்துல, எனக்கு மிகவும் நம்பிக்கையான ஒருத்தர்கிட்ட கொடுத்து வச்சிருக்கேன்..

அதுமட்டுமில்ல அந்த வீடியோவோட இன்னும் அஞ்சு கூகுள் டிரைவ் பேக்-அப் லிங்க் என் கன்ட்ரோல்ல இருக்கு.. நான் தினமும் காலைல ஒன்பது மணிக்கு ஒரு ரகசிய பாஸ்வேர்டை என் மொபைல்ல என்டர் பண்ணனும்..

அப்படி நான் பண்ணலனா அந்த வீடியோ லிங்க் நேரா உங்க கட்சித் தலைவருக்கும் தமிழகத்தோட டாப் 5 நியூஸ் சேனல்களுக்கும் ஆட்டோமேட்டிக்கா பார்வர்ட் ஆகிரும்.." என்றதை கேட்டு விஸ்வநாதனுக்குத் தலை சுற்றியது.

அவரது நெற்றியில் வியர்வை அரும்பியது. பேச முடியாமல் நாவும் தழுதழுத்தது.

"நீ... நீ இவ்வளவு பெரிய கில்லாடியா இருப்பேனு நான் நினைக்கல" என்று ஆத்திரத்தில் கத்தினார் விஸ்வநாதன்.

"உங்கள மாதிரி துரோகிகள் கூட வாழணும்னா இந்த அளவிற்கு யோசிச்சு தான் ஆகணும் அண்ணே.. அதனால இந்த வீட்டுக்குள்ள எனக்கு எதாவது ஒரு சின்ன ஆபத்து வந்தாலும் அதுக்கு பின்னாடி நீங்க தான் இருப்பீங்கனு அந்த வீடியோ வெளியாகிரும்.. இப்போ சொல்லுங்க கத்தி உங்க கழுத்துல இருக்கா.? இல்ல என் கழுத்துல இருக்கா.?

என்ன சொன்னீங்க.? என் புருசன் அனாதையா.? சரி அப்படியே இருக்கட்டும்.. அப்படிப்பட்டவனோட பாதுகாப்புல தானே நீங்களும் உன் பையனும் வாழ்ந்துட்டு இருக்கீங்க.? இன்னும் கொஞ்ச மாசத்துல என் புருஷன் பின்னாடி மொத்த தமிழ்நாடும் இருக்கும்..

அதைய பார்க்க நீங்க இருப்பீங்களா.? இல்லையானு தான் எனக்கு தெரியல.. ப்ச் பாவம் தான்.. என்னோட புருசன் தேர்தல்ல ஜெயிக்கறதை பார்க்க நீங்க இருந்தே ஆகணும்னு இன்னைல இருந்து நான் கடவுள் கிட்ட வேண்டிக்கறேன்.." என்று பாவமாக இச் கொட்டி கூறினாள்.

பின்பு அவரது முகத்தில் அப்பியிருந்த அதிர்ச்சியை ரசித்தபடி அங்கிருந்து சென்றாள் விருசாலி.

விஸ்வநாதனோ கையில் இருந்த சிகரெட்டை இறுக்கமாக நசுக்கினார். அவளது கை
களைக் கட்டுவதற்கு இப்போதைக்கு அவருக்கு வேறு எந்த வழியும் தெரியவில்லை. ஆனால் அவளை ஏதாவது செய்தே தீர வேண்டும் என்ற வெறி மட்டும் அவருள் ஆழமாக வேரூன்றியது.



தொடரும்..

 
Top Bottom