• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மகேந்திரனின் மதிவதனியவள் - 1

Vishakini

Moderator
Staff member
MMI 1


அன்று ஓர் பவுர்ணமி இரவு...


பகல் முழுவதும் தீயாக சுட்டெரித்த பங்குனி மாத வெயிலுக்கு இதமாக சிலுசிலுவென்று வீசிய தென்றல் காற்றினையும், வழி நெடுக இயற்கை அன்னை அள்ளித் தெளித்திருந்த மலைகளின் எழில் கொஞ்சும் வளங்களையும், சலசலத்து ஓடிய நீரோடைகளில் பிரதிபலித்த நிலவு மகளின் ரம்மியமான ஒளிச்சிதறல்களையும், தன் மிதமான வேகத்தால் கடந்தவாறு ஓடிக் கொண்டிருந்தது அந்த குதிரை..!

நீண்ட தூரம் பிரயாணம் செய்திருந்தும் அக்குதிரையின் கால்கள் களைப்படையாமல், இன்னும் பல மைல்களைக் கடக்கவும் தயாராக இருந்தது...

ஏனெனில் அது பல வெற்றிகரமான போர்களங்களைக் கண்ட இராஜசிங்காபுரி நாட்டுப் படைத்தளபதியின் குதிரை சிங்கா அன்றோ...!!!

முழு வெள்ளை நிறத்தில் ஆங்காங்கே அரக்கு நிறத்தை அள்ளித் தெளித்தாற் போன்ற நிறத்தில், நல்ல போர்த்திறன்களை கொண்ட அம்சமான போர்க்குதிரை அது...

இராஜசிங்காபுரி - தனக்கு கீழே அறுபது குறுநில மன்னர்களைக் கொண்ட ஒரு பெருநில நாடு மட்டுமன்றி பல நூற்றாண்டுகளாக ராஜ்ஜியத்தை தன்னகத்தே தக்க வைத்துக் கொண்ட பேரரசாகும்...
அப்பெரிய சாம்ராஜ்யத்தை ஆளும் மன்னர்கள் நெடுமாறன் என்ற பெயர் நாமம் கொண்டவர்கள்...

மூன்று மாதங்களுக்கு முன்பு வரை அந்நாட்டை ஆண்ட மன்னர் தான் அருமன் நெடுமாறன்... இவருடைய மனைவியார் ராணி நயனத்தேனருவி...

அரண்மனையின் அந்தப்புரத்தில் பல பெண்களை சேர்த்து கொண்டாலும் ராணி என்ற பட்டம் என்னவோ கட்டிய மனைவி ஒருவருக்கு தானே சொந்தம்...!!!

இவர்களுக்கு அதியன் நெடுமாறன் என்ற மகனும், மதிவதனி வேங்குழலி என்ற மகளும் உள்ளனர்...

அதியன் நெடுமாறனிற்கு ஆதினியோடுத் திருமணம் முடிந்து ஒரு வயதில் அமுதன் நெடுமாறன் என்ற மகன் இருக்கின்றான்...

தந்தை அளித்த வாக்கைக் காப்பதற்காக ஆதினியை மணந்த அவனுக்கு, தான் விரும்பிய மங்கையை மணக்க முடியாமல் போன வருத்தம் மனதின் ஓரத்தில் நீங்காத வடுவாக தேங்கியுள்ளது...

அதனால் அவன் வாழ்வது தாமரை இலைத் தண்ணீரை போன்றதொரு வாழ்க்கை...!!!

மதிவதனிக்கு இருபத்தொரு வயதில் தான் திருமணம் செய்ய வேண்டும் என அரண்மனை ஜோதிடர்கள் கூறியிருந்ததால் அவளுக்கு அடுத்த ஆண்டு தான் சுயம்வரம் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தனர்...

அதுவரையில் அவள் தந்தையின் நாட்டில் தன் மனம்போன போக்கில் இளவரசியாக வளம் வந்துக் கொண்டிருந்தாள்...

நாளை அதியன் நெடுமாறனுக்கு அந்நாட்டு மன்னராகப் பட்டம் கட்டி முடிசூட்டும் திருநாள்..!

அதற்காக நாடு முழுவதும் செய்திருந்த ஏற்பாடுகளை சரிபார்க்கக் கிளம்பியிருந்த படைத்தளபதி இளந்தீரன், அப்பணியை முடித்துவிட்டு தங்கள் அரண்மனைக்குத் திரும்பிக் கொண்டிருந்தான்...

மேலும் பதினைந்து நிமிடங்கள் பயணித்த அவனது குதிரை, பயணத்தின் முடிவில் அந்த பிரமாண்டமான அரண்மனையின் நுழைவு வாயிலை அடைந்திருந்தது...

நாளை தங்கள் முடி இளவரசர் ராஜாவாக பட்டம் சூடிக்கொள்ளப் போவதையொட்டி, மிக உயரமான கோட்டை மதில் சுவர்களுக்கு நடுவே கலைநயத்துடன் பளிங்கில் செதுக்கப்பட்டிருந்த இராஜசிங்காபுரி அரண்மனையே விழாக்கோலம் பூண்டதைப் போல் ஆங்காங்கே ஏற்றியிருந்த அகல் விளக்கின் ஒளியினாலும், அழகழகாய் அடுக்கி வைத்திருந்த தீப்பந்தத்தின் ஒளியினாலும் தேவலோகமாக மின்னிக் கொண்டிருந்தது...

அரண்மனை பணியாளர்கள் விழாவிற்கு வருகை தரும் முக்கிய விருந்தினர்களை வரவேற்கும் விதமாக பல வண்ண மலர்களும், வாழையிலை தோரணங்களும் கொண்டு அலங்காரம் செய்திருந்ததைக் காண்பதற்கே கோடிக்கண்கள் வேண்டும்...

தீரன் அரண்மனையின் உள்ளே நுழைந்தபோது, அதன் உள்மாடங்களில் வெளியே தென்பட்ட பரபரப்பிற்கும் ஆர்பாட்டத்திற்கும் சற்றும் பொருந்தாத பேரமைதி நிழவியது...

ராஜாவாக முடி சூடிக்கொள்ளப் போகும் இளவரசன் அதியன் நெடுமாறன், மேல்மாடத்தில் இருந்த தனது அறையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்...

அவனுக்கு அருகில் படுத்திருந்த அவன் மனைவி ஆதினியை தான் அத்தனை எளிதில் நித்திராதேவி ஆட்கொள்வதாகத் தெரியவில்லை...

அதனால் தன் படுக்கையை விட்டு எழுந்தவள், நாளைய விழாவிற்காக வதனத்தில் பூசியிருந்த சந்தனக்கலவையைக் கழுவிவிட்டு கண்ணாடி முன்பு நின்று, விளக்கொளியில் மின்னிய தம் அழகை ரசித்துக் கொண்டிருந்தாள்...

அப்பொழுது யாரோ தங்கள் அறைக்கதவைத் தட்டும் மெல்லிய ஓசைக் கேட்டதில், "இந்நேரத்தில் யாரது?.." என்று எண்ணியவாறு, தாழை நீக்குவதற்காக அங்கு விரைந்தாள்...

வாயில் காவலர்களைத் தாண்டி வரவேண்டுமென்றால் தன் அன்னையாக தான் இருக்க வேண்டும் என்பதை அறிந்தவளாக கதவின் தாழை நீக்கினாள்...

அவள் நினைத்ததே சரியாக கதவிற்கு வெளிப்புறமாக நின்றிருந்தது அவளது தாய் வடிவாம்பாளே தான்...

தன் மகளின் கரத்தைப் பற்றி வெளியே இழுத்தவர், "உம்மிடம் பேசுவதற்காக வெகு நேரமாகக் காத்துக் கொண்டிருக்கிறேன் ஆது..! முதலில் நீயும் உறங்கி விட்டாயோ என்று நினைத்துத் திரும்பியபோது, தங்கள் அறையின் விளக்கு எரிவதைக் கண்டு கதவைத் தட்டினேன்..." என்றுக் கூறிவிட்டு அவளை அவர் தங்கியிருந்த அறைக்கு அழைத்துச் சென்றார்...


இங்கு அந்த மாளிகையில் இருந்த தனது இருப்பிடத்திற்கு வந்து சேர்ந்த தீரன், அவனைப் பார்த்து ஸ்நேக புன்னகைப் புரிந்த நண்பன் கவுதமனைக் கூர்மையாக நோக்கிவிட்டு, தன் வாலினை அதற்கான தாங்கியில் மாட்டினான்...

"தாம் சென்ற காரியம் என்னவானது தீரா?...". என்றுக் கேட்டவனிற்கு, நண்பனின் தோளில் பதிந்திருந்த நகக்கீரலைக் கண்டு சந்தேகம் எழுந்தது...

நண்பனின் விழிகளில் தெரிந்த சந்தேகத்தைக் கண்டும் காணாமல் தவிர்த்த தீரன், "எல்லாம் சரியாக உள்ளது கவுதமா..! நாளை இளவரசருக்கு அரசப்பட்டம் கட்டுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்தன... இனிமேல் நாம் வந்த வேலையைத் துவங்க வேண்டியது தான்..." என்றுக் கூறிவிட்டு தனது இடத்தில் சரிய,

"ஓகோ தாம் கூறினால் சரியாகவே இருக்கும் தோழனே..! என்றவன், ஆமாம் இதென்ன உம் தோளில் நகக்கீரல் போல் உள்ளதே... இன்று யாரிடமாவது சண்டையிட நேர்ந்ததா?.." என்று தம் மனதிலிருந்த சந்தேகத்தை வினவியிருந்தான் அவன்...

கவுதமனின் விழிகளை நேராக சந்திக்க இயலாதவனாக ஒருக்களித்துப் படுத்த தீரன், "இல்லை கவுதமா..! நாளை சிவபூஜை செய்வதற்காக குவளை மலர்கள் பறிக்கச் சென்ற இடத்தில் முட்கள் குத்தியிருக்கும் என நினைக்கின்றேன்..." என்றுக் கூறிவிட்டு, "சரியடா எமக்கு உறக்கம் வருகிறது..." என்றபடி மறுபுறம் திரும்பிப் படுத்துக் கொண்டான்...

இதற்கு மேல் தோழனிடம் பேச முயல்வது வீண் நேரவிரயம் என்பதை நன்கறிந்த கவுதமன், தானும் தன் இடத்தில் சயனித்து உறக்கத்தைத் தழுவியிருந்தான்...

நேரம் பின்னிரவு மூன்று மணியை நெருங்கிக் கொண்டிருந்தது...

இளந்தீரனை நித்திராதேவி மிக விரைவில் ஆட்கொண்டிருந்தாலும் அவனால் முழுமையாக உறங்க முடியவில்லை... ஆழ்மனதில் பதிந்து போயிருந்த ஐயங்கள் கெட்ட கனவுகளாக மேலெழுந்து அவன் உறக்கத்தைக் களைத்ததில் துள்ளியெழுந்தவன், தன் மேலங்கியை அணிந்ததோடு இடையில் சிறிய கத்தி ஒன்றையும் பதுக்கிக் கொண்டான்...

அன்றிரவு ஏதோ அசம்பாவிதம் நடைபெறப் போகிறது என்ற எண்ணம், அவனது மனதில் பல தினங்களுக்கு முன்னரே தோன்றியிருந்ததால் யாரையும் கவராத வண்ணம் அந்த மேல்மாடத்தில் ஓசை எழுப்பாமல் மெதுவாக நோட்டமிட்டவாறு நடந்தான்...

சிறிது தூரம் நடந்த பின்னர், அந்நாட்டு இளவரசி மதிவதனியின் அறை வாயிலில் வந்து நின்றவனுக்கு அங்கு காவலுக்கு நின்ற பணியாளர்கள் இருவரும் நல்ல உறக்கத்தில் இருந்ததைக் கண்டு எரிச்சல் மூண்டது...

"இவர்களும், இவர்கள் காவல் காக்கும் அழகும்..." என மனதில் வசைபாடிவிட்டு, உள்ளே சென்றுப் பார்ப்போமா, வேண்டாமா என்று சிந்தித்துக் கொண்டிருந்தான்...

அந்த கதவைத் திறப்பதற்கு அவனிடம் அனுமதி இல்லை தான், எனினும் தன் மனதில் எழுந்த ஐயம் தீர்வதற்காக சாளரத்தின் வழியாக அவளது படுக்கையை எட்டிப்பார்த்தான்...

அங்கு பவுர்ணமி நிலவைப் போன்ற வட்ட முகத்தில், பிரம்மன் வரைந்த மீன் விழிகள் இரண்டையும் மூடி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் மதிவதனி..!

மதிவதனி - பெயருக்கு ஏற்றாற்போல் அந்த முழு வெண்மதியைப் போன்ற அழகோடு, இளவரசி என்ற கர்வம் சிறிதுமின்றி நன்றாகப் பழகக் கூடிய பண்பானவள்..!

ஆனால் அவளிடம் ஒரு குறை உண்டு...

நினைத்ததை நினைத்த நேரத்தில் உண்ணும் பழக்கம் உடையவள்... அதே.! அதே.!! அவள் சரியான உணவுப்பிரியை...!!!

அதனாலேயே அந்நாட்டு மக்களில் சிலருக்கு அவளைப் பற்றிய பெரிதான நல்அபிப்பிராயம் இல்லை...

மதிவதனி ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதைக் கண்ட தீரன், "எம் மனதில் எழும் ஐயம் கூட இவள் மனதில் எழவில்லையா? நாட்டின் இளவரசியாக இருந்து கொண்டு எவ்வாறு இப்படி உறங்க முடிகிறது?.." என்று தனக்குள் முணுமுணுத்தவாறு, அடுத்ததாக முடி இளவரசனின் அறையை நோக்கி நடந்தவன், கண்ட காட்சியில் சற்று திகைத்து நின்றுவிட்டான்...

ஏனெனில் அவனுக்கு முன்பாக ஒரு பெண் அந்த அறையை நோக்கி தள்ளாடியபடி விரைந்துக் கொண்டிருந்தாள்...

"இந்நேரத்தில் யார்?..." என்று நினைத்த தீரன், சற்று இடைவெளிவிட்டு அவளைப் பின்தொடர, அது ஆதினி என்பது, அந்த அறைக்கதவை அவள் திறந்ததை வைத்துத் தெரிந்து கொண்டான்...

இங்கும் வாயிலுக்கு எதிரில் நின்றுகொண்டே தூங்கி வழிந்த வாயில் காவலர்களைக் கண்டவனுக்கு அதிருப்தியே எழுந்தது... இவர்களை விடிந்த பின்னர் எச்சரிப்போம் என்று நினைத்துக் கொண்டவன்,

"ஓ இளவரசரின் மனைவியா?.." என்று எண்ணமிட்டவாறு, அந்த அறையிலிருந்த சாளரத்தின் திரையை விலக்கிப் பார்த்தான்..

அங்கு பட்டுப்போர்வையால் தனது உடல் முழுவதையும் போர்த்தியபடி ஆழ்ந்து உறங்கிய அதியனைக் கண்டு நிம்மதி பெருமூச்சு விட்டவனாக,

"எல்லாம் யான் எண்ணியபடி தானே உள்ளது..! பின்பு எதற்காக என் மனதில் இப்படி ஓர் ஐயம்?..." என்று நினைத்துக்கொண்டே தன் நடையைத் தொடர்ந்தான்...

எனினும் அவன் மனதில் எழுந்த சந்தேகம் மட்டும் மறைவேனா என்று சண்டித்தனம் செய்ததில், பார்வையை நாலாப்புறமும் செலுத்தி தன் நடையை எட்டிப் போட்டவன், "இந்நேரத்தில் இவர்கள் என்ன செய்கின்றார்கள்?..." என்றவாறு கீழ்மாடத்திலிருந்த நடு முற்றத்தைக் கடந்து, நடந்து வந்த இருவரைக் கூர்ந்தான்...

அவர்கள் ஆதினியின் தாய் வடிவாம்பாளும், அவரது தமையன் மகன் தருமன் இளம்பரிதியும் ஆவர்...

அவர்களிடம் தீரன் எண்ணியதற்கு மாறாக எவ்விதப் பதற்றமும் தென்படாது, இயல்பாக நடந்து சென்று தத்தமது அறைக்குள் நுழைந்துகொள்ள,

"இதற்கு மேல் விழித்திருப்பதில் பயனில்லை..! நாம் அறைக்கு திரும்புவோம்..." என்று தனக்குள் ஒரு முடிவுக்கு வந்த தீரன், அரண்மனையை மீண்டும் ஒருமுறை நன்றாக நோட்டமிட்டதும், தம் மனதில் எழுந்தது தேவையற்ற ஐயம் என்றுத் தெளிந்தவனாக, தனது இருப்பிடத்திற்குத் திரும்பினான்...

அங்கு உறங்கிக் கொண்டிருந்த தோழனைப் பார்த்தபடியே சில கணங்கள் நடைபயின்றுவிட்டு தன் படுக்கையில் சரிந்தவன், நொடிகளில் ஆழ்ந்து உறங்கியிருந்தான்...

எனினும் அவன் எதை எண்ணி ஐயம் கொண்டானோ அந்நிகழ்வு இரண்டு நாழிகைக்கு முன்னரே நிகழ்ந்து முடிந்துவிட்டது என்பது அவனுக்குத் தெரியாமல் போனது தான் விதியின் விளையாட்டோ?

நாளை‌ய விடியல் அந்த அரண்மனைவாசிகளுக்கும் சரி, அந்நாட்டு மக்களுக்கும் சரி நன்றாக விடியப் போவதில்லை...!!!


தொடரும்…...
 
Last edited:

Gowri Karthikeyan

Active member
சூப்பர் ஸ்டார்ட் 🤩🤩🤩🤩
Long awaiting story❤❤❤❤❤
தீரன் தான் ஹீரோவா🤩🤩🤩....
அப்ப obviously மதி ஹீரோயின்.....
Aww அதி லவ் பண்ண பெண் யார்????
ஆதினி & வடிவு.....something wrong....
அதி படுத்து இருந்த விதமும் சரி இல்லையே.....
போட்டு தள்ளிட்டாங்களா🥺🥺🥺🥺🥺
 
சூப்பர் ஸ்டார்ட் 🤩🤩🤩🤩
Long awaiting story❤❤❤❤❤
தீரன் தான் ஹீரோவா🤩🤩🤩....
அப்ப obviously மதி ஹீரோயின்.....
Aww அதி லவ் பண்ண பெண் யார்????
ஆதினி & வடிவு.....something wrong....
அதி படுத்து இருந்த விதமும் சரி இல்லையே.....
போட்டு தள்ளிட்டாங்களா🥺🥺🥺🥺🥺
வாங்க சிஸ் உங்களுக்காக தான் வெயிட்டிங்😍😍😍😍😍😍
 

Umayal K

New member
எதார்த்தமா கண்ல பட்ட கதை🥰 Wonderful and Suspenseful Start😍 தீரன் தான் ஹீரோவா ரைட்டரே🤔
 
Top Bottom