• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மகேந்திரனின் மதிவதனியவள் - 25

Vishakini

Moderator
Staff member
மகேந்திரனின் மதிவதனியிவள் - 25


மனைவி யுகேந்திரனைப் பற்றி சரியாகக் கண்டுபிடித்தது, மன்னவன் வெகு நாட்களாக எதிர்ப்பார்த்தது தான் என்றாலும் மனம் வலிக்கவே செய்தது..!

அதைவிட இப்பொழுது தங்களின் முன்ஜென்ம நினைவுகள் மீண்டதே பெரிதாகத் தெரிய, "உ..உனக்கு எப்போடா ஞாபகம் வந்துச்சு? நீ இப்..இப்போ ஓகேவா வதும்மா?" என்றான் அது தான் முக்கியமென்பதைப் போல...

"ம்ம்..!" என்றவள் தன் சோர்ந்த முகத்தை அவனிடம் காட்டாமல் மறைத்தபடி நேற்றிரவு நடந்ததை நினைத்துப் பார்த்தாள்...

சமீபத்திய வழக்கமாக மாமியார் வீட்டில் இரவுணவை உண்பதற்காக அவள் கணவன் அமர்ந்திருக்க, அவளைப் பெற்றவர்களும் உடன்பிறந்தவனும் சேர்ந்து அவன் மறுக்க மறுக்க ராஜ உபசாரம் செய்ததைக் கண்டும் காணாமல் உண்டுவிட்டு தன் அறைக்குத் திரும்பிய மதிவதனி படுக்கையில் சுருண்டு படுத்தாள்...

சற்று முன்னர் கைக்கழுவச் சென்றபோது அம்பிகா, "நாளைக்குக் கோவிலுக்குப் போகலாமா மதிம்மா?" என்றதற்கு சம்மதம் சொல்லிவிட்டு வந்தவளுக்கு, மனக்கணக்கில் எதையோ நினைத்து விழிகள் கலங்கியது...

வீட்டிற்குச் செல்வதற்கு முன்பாக மனைவியைத் தேடிவந்தவன் அவள் அப்படிப் படுத்திருந்ததில் துணுக்குற்று, "வதும்மா..! என்னாச்சு டி?" என்றவாறே நெற்றியிலும் கழுத்தடியிலும் கரம் வைத்து சோதிக்க,

"ஒன்னுமில்ல..!" என முணுமுணுத்துவிட்டு அவள் கண்களை மூடிக்கொள்ள,

"எதுவா இருந்தாலும் உனக்கு நான் இருக்கேன் பேபி..! அத மட்டும் மறந்துடாத..!" என்றுவிட்டு அவளை அணைத்து முத்தமிட்டதும் கிளம்பியிருந்தான் அவன்...

மன்னவனின் அணைப்பிலும் முத்தத்திலும் பெண்ணவளின் ஒவ்வொரு அணுவும் இன்று ஏனோ அதிகமாக சிலிர்த்தடங்க, பரவசத்துடன் உறக்கம் தழுவியவளை சற்று நேரத்தில் ஆக்கிரமித்தன அவர்களின் முன்ஜென்ம நினைவுகள்..!

அன்று இராஜசிங்காபுரி அரண்மனையில் தமையனின் மறைவைக் கேள்விப்பட்டு மயங்கியவளை ஆடவர்கள் இருவரும் தாங்கியதில் தொடங்கி, அவளுக்கும் மன்னவனுக்கும் இடையிலான உயிர்நேசமும் அவர்களுக்குள் நடைபெற்ற கந்தர்வ மணமும், அவர்களின் உரையாடல்களும், அதன் பின்னர் அதியனைக் கண்டுவிட்டதாக கவுதமன் இளந்தீரனிடம் தெரிவித்ததில் இருந்து கனவு மேலும் தொடர்ந்தது...

__________

இராஜசிங்காபுரி அரண்மனை...


சிவபூஜையில் ஆழ்ந்திருந்த அந்நாட்டு மன்னனான தம் தோழன் இளந்தீரனை நெருங்கிய கவுதமன், அதியன் நெடுமாறனும் அவனுடன் ஒரு இளம்பெண்ணும் இருப்பதைக் கண்டதாகத் தெரிவித்தான்...

விழிகளில் உவகையைத் தேக்கி, "கவுதமா..! நீ உரைத்தது சத்தியமா?" என்றவன் வினவ,

"ஆம் மன்.." எனத் துவங்கியவன் தோழனின் முகம் மாறியதைக் கவனித்து, "ஆம் தீரனே..! யான் உரைத்தது சத்தியமே..!" என்றான் தீர்மானமாக...

"மிக்க மகிழ்ச்சி..! அவர்களை எங்கே கண்டாய்?"

"நம் தானியக்களஞ்சியத்தைத் தாண்டி அமைந்திருக்கும் ஒரு பாதாள அறையில் அவர்கள் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள்..! எனினும் இருவரும் நல்ல தேக வலிமையோடு தான் உள்ளார்கள்" என்றான் அவன் அதைப்பற்றி வினவுவதற்கு முன்பாகவே...

"நல்லது கவுதமா..! அவ்வறையை அடையும் வழியை நீ அறிவாயா?"

"அதில் எமக்கு நிச்சயமில்லை தீரனே..! களஞ்சியத்தின் கடைக்கோடியில் அமைந்திருக்கும் சாளரத்தின் வழியாக அவர்களைக் கண்டேன்..! அங்கு நுழையும் வழியை இனிமேல் தான் அறிய வேண்டும்..." என்ற கவுதமன், தருமன் அவர்களைத் தேடி நிச்சயமாக வருவான் என்பதால் அதிகப்படியானப் படைவீரர்களை பணியமர்த்தியுள்ள தகவலையும் தெரிவித்தான்.‌‌..

"ஆகட்டும் கவுதமா..! நீ சென்று வா..! யான் பின்னால் தொடர்கிறேன்..." என்றபடி தம் மகாராணியைத் தேடி வந்தவன் நடந்ததை விவரித்து அவளிடம் உபாயம் கேட்க,

"யான் அறிவேன் மகி..!" என்றவள் மன்னவனைக் கருவூலத்தின் வழியாக அழைத்துச் சென்றாள்...

விழிகளைக் கூச செய்த பொன்னொளியைக் கடந்து ஒரு சுரங்கப்பாதை வழியாக இறங்கிய இருவரும், அதன் முடிவில் அதியனை சிறை வைத்திருக்கும் அறையைக் கண்டு கொண்டனர்...

தமையனை அன்புடன் அணைத்த மதிவதனி அவனருகில் தளர்வாக நின்ற தம் தோழியும், அதியனின் காதலியுமான நயனயாழினியை அணைத்துக்கொண்டாள்...

நயனயாழினி..!

அவள் அதியனின் காதலி மட்டுமல்ல, மகேந்திரராஜனின் இளவளும் ஆவாள்..!

இரு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தினம் செண்பக மலர்களைப் பறிக்கச் சென்றவள் அக்கயவர்களின் பிடியில் சிக்கியிருக்க, எங்குத் தேடியும் கிடைக்காதவள் எங்கோ தொலைந்துவிட்டதாக எண்ணியிருந்தனர்...

அதன் பின்னர் அவர்கள் இருவரையும் அரண்மனையின் புதிய வைத்தியரிடம் காட்டி நலமாக இருப்பதை உறுதிப்படுத்தியதும் ராணியாரிடம் அழைத்துச் செல்ல, இருவரையும் ஒருசேர அணைத்துக்கொண்டார் அவர்...

தாம் பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்தவர்களைக் கண்காணிப்பதற்காக ஒளிவுமறைவாக நடந்து வந்த தருமன் இளம்பரிதி வீரர்களிடம் அகப்பட்டுக்கொள்ள, அவனையும் சிறையில் அடைத்தனர்...

அடுத்த மூன்று தினங்களில் அதியன்-யாழினியின் திருமண விழாவும், அவனை இராஜசிங்காபுரியின் அரசனாக அரியணையில் அமர்த்தும் நிகழ்வும் நடக்கவிருந்ததால் நிற்க நேரமின்றி அலைந்தான் மகேந்திரன் இளந்தீரன்...

ஒருவழியாக அதியனின் மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடைபெற்று முடிந்ததும், முன்னிரவில் தம் மகாராணியைக் கொஞ்சிவிட்டு வெளியே வந்தவன் கீழ்மாடத்தில் நின்றிருந்த அதியனிடம்,

"உம் ராஜ்ஜியத்தை உம்மிடமே ஒப்படைத்துவிட்டேன் அதியனே..! இனி யானும் எம் மகாராணியும் நாடுத் திரும்ப வேண்டும்..!" என்க, அதற்கு ஒப்புதல் அளித்தான் அவன்...

அப்பொழுது அங்கு வந்த மகேந்திரராஜன், "இந்நாட்டின் இளவரசியை அப்படியெல்லாம் அனுப்ப இயலாது தீரனே..! மதிவதனியை முறைப்படி மணந்ததும் கூட்டிச் செல்..!" என்றான்...

"மகேந்திரன் உரைப்பது சரியாகத் தோன்றுகிறது அத்தான்..! எனினும் அதற்கு முன்பாக தருமனின் மரணதண்டனையை நிறைவேற்றிவிடலாம் அல்லவா?" என்று அதியன் கேள்வியெழுப்ப,

"அல்ல அதியா..! மங்கள நிகழ்வை முதலில் முடித்துவிட்டு அக்கயவனின் தண்டனையை நிறைவேற்றலாம்..." என்றான் மகேந்திரராஜன்...

இருவரையும் தம் கூர்விழிகளால் அளந்த இளந்தீரன், "தாங்கள் எம் மகாராணியை எவ்வாறு அனுப்பி வைத்தாலும் எமக்கு சம்மதமே..! எமக்கு எம் வதனியுடன் விரைவாக இந்திரபுரி திரும்ப வேண்டும் என்பதே எம் அவா..!" என்றதுடன் மீண்டும் தம் தேவியைத் தேடிச் செல்ல, அதற்குள் மங்கையவள் அசந்து உறங்கியிருந்தாள்...

அவளின் பிறைநுதலில் இதழொற்றிவிட்டு அருகில் சரிந்தவனின் சிந்தை முழுவதும் தேவியுடன் தாம் வாழப்போகும் வாழ்வின் இனிய கற்பனைகளே..!

அதற்கடுத்த ஐந்து தினங்களில் இளவரசி மதிவதனியின் திருமணம் நிகழுமென்ற அறிவிப்போடு நாட்டு மக்களுக்கு புத்தாடைகளும் இனிப்புகளும் வழங்கப்பட்டன...

அடுத்த தினம் இரவு வானில் தோன்றியிருந்த தூமகேது (வால் நட்சத்திரம்) பலரைக் கவலையில் ஆழ்த்தியபோதிலும், தருமனின் மரணதண்டனை நிறைவேறவிருப்பதால் இவ்வாறுத் தோன்றுவதாக தங்களை சமாதானம் செய்ததோடு இளவரசியின் மங்கள நிகழ்வில் பங்கேற்கத் தயாராகினர்...

திருமணம் நடைபெறுவதற்கு முன்பாக சபையோரிடம் தம் இளவளின் வீரத்தைப் பற்றித் தெரிவிக்க விரும்பிய அதியன் நெடுமாறன், அவள் கற்றுத் தேர்ந்தப் போர்க்கலைகளையும், அவளின் உதவியால் வெற்றிப்பெற்ற போர்களைப் பற்றியும் கர்வமாகப் பகிர்ந்ததோடு, நாட்டு மக்களிடம் அவற்றை தண்டோரா மூலம் சேர்ப்பிக்கும் பணியை விரைந்து முடிக்குமாறும் உத்தரவிட்டான்...

இத்தனை ஆண்டுகளாக உணவுப்பிரியையாக மட்டுமே அறியப்பட்ட தங்கள் இளவரசியின் தீரத்தைக் கேள்விப்பட்ட மக்கள் அது சம்பந்தமான உரையாடல்களில் ஈடுபட்டு அவளை வானளாவப் புகழ்ந்தனர்...

அழகிய பெண்கள் யானையில் ஊர்வலமாக நாட்டிற்குள் சென்று திருமண விழாவிற்கு மக்களை அழைக்க, அரண்மனை முழுவதும் பூந்தோரணங்களின் அலங்காரமும், இனிப்புப் பண்டங்கள் தயாரிக்கும் பணியும் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்க, தம் இளவளை அவள் மன்னவனோடு வழியனுப்பும் உவகையில் மூழ்கியிருந்தான் அந்நாட்டு மன்னன்...

முறைப்படி மகேந்திரன் இளந்தீரனின் மகாராணியாக மதிவதனி இணையப்போகும் நன்னாளும் மிக அழகாகவேப் புலர்ந்தது..!

அரண்மனையின் மங்கள வாத்தியங்கள் முழங்க மாங்கல்ய தாரணம் நிகழ்ந்து முடிய, மன்னவனும் அவன் வதனியும் தங்கள் உயிர்நேசம் நிறைவேறிய பேருவகையுடன் மாலை மாற்றிக் கொண்டனர்...

கால அவகாசமின்றி நடக்கும் நிகழ்வென்பதால் அந்நாட்டு மக்களோடு, மிக அருகாமையில் வசித்த சிற்றரசர்களும், மகேந்திரன் இளந்தீரனின் பெற்றோர்களும் பங்கேற்று இந்திரபுரியின் மன்னனையும் மகாராணியையும் வாழ்த்தியப்பிறகு அறுசுவையில் தயாரான திருமண விருந்தும் நடைபெற நாடு விழாக்கோலம் பூண்டிருந்தது...

எனினும் திருமண வைபோகம் கண்ட தம்பதி நடந்துக் கொண்டிருந்த எந்த ஆரவாரத்திலும் பங்கேற்காமல் தங்கள் அறையின் மஞ்சத்தில் அமைதியாக வீற்றிருந்தனர்...

தம் கரங்களில் அடங்கியிருந்த இணையளின் வதனத்தை நிமிர்த்திய தீரன், "உமக்கு ஓர் பரிசு கொண்டு வந்துள்ளேன் வதும்மா..!" என்றபடி தாம் வரைந்த பெண்ணவளின் ஓவியத்தைப் பரிசளிக்க, விழிகளில் ஆனந்த ஊற்றுடன் மன்னவனை நோக்கி,

"தங்களை மணாளனாக அடைவதற்கு எப்பிறவியில் புண்ணியம் செய்தேனோ? யான் அறியேன் தீரனே..!" என்ற மதிவதனி, அவ்வோவியனிடம் பெற்று தாம் பாதுகாக்கும் அவனின் ஓவியத்தைக் காட்டினாள்...

தம் மகாராணியின் மதிவதனத்தைக் கரங்களில் அள்ளியபடி, "அல்ல தங்கமே..! உம்மைப் போன்ற கற்பரசியை தேவியாக அடைவதற்கு யான் தான் புண்ணியம் செய்திருக்க வேண்டும்..." என்று அவள் மாம்பழக் கன்னங்களில் பதிய,

"ம..மகி..!" என்றவளின் வதனம் நாணமிகுதியில் செவ்வானமாக சிவந்தது...

அதில் மயங்கிய மன்னவன், "உம் வதனத்தின் யௌவனம் எம்மை வெகுவாக ஈர்க்கின்றது வதும்மா..! எப்பொழுது நம் நாட்டை அடைவோம் என்ற அவாவும் கூடுகின்றது..!" என்று மேலும் ரகசியமாக உரைக்க, களிப்புடன் அம்மாவீரனின் கேடய மார்பில் சாய்ந்தாள் அவள்..!

நாளைய காலைப்பொழுதில் தம் மதிவதனியுடன் இந்திரபுரி திரும்பவுள்ள மகேந்திரன், அங்கு மன்னனாக முடிசூட்டிக் கொள்ளவிருப்பதால் படை பரிவாரங்களுடன் அவர்களை வழியனுப்பும் பணிகள் முடுக்கி விடப்பட்டிருந்தன...

கவுதமனோடு இணைந்து அவற்றைக் கண்காணித்துக் கொண்டிருந்த மகேந்திரராஜனின் மனம் திடீரெனக் காரணமின்றி படபடக்க, சுற்றிலும் தம் பார்வையால் அளந்தான்...

அங்கு வித்தியாசமாக எதுவும் படாமல் போகவே கவுதமனுடன் தம் உரையாடலைத் தொடர, அவன் ஐயம் கொண்டதே சரியாக தூணிற்குப் பின்னால் மறைந்திருந்து அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தான் தருமன் இளம்பரிதி...

சிறையில் காவலுக்கிருந்த அதிகப்படியான வீரர்களை ராஜகுரு வேறு பணிகளுக்கு அழைத்திருக்க, வாயிலில் நின்ற சொற்ப வீரர்களை எளிதாகத் தாக்கிவிட்டு அங்கிருந்துத் தப்பியிருந்தான் அவன்...

அவ்வாறுத் தப்பி வந்தவன் யார் கண்ணிலும் அகப்படாமல் தம் மறைவிடத்தை அடைந்துத் தக்க ஏற்பாடுகளுடன் காத்திருக்க, அக்கயவன் எதிர்ப்பார்த்த வேளையும் நெருங்கியது...

இதுவரையில் போர்க்கலைப் பயில்வதற்காக சில காலம் வெளியிடத்தில் தங்கியதைத் தவிர்த்து, அரண்மனையில் புள்ளிமானாய் வலம் வந்த இளவரசியைப் பிரியும் வருத்தத்தில் இருந்தனர் மதிவதனியின் உற்றார் உறவினர்கள்...

ஒவ்வொரிடமும் தனித்தனியாக விடைபெற்றவள் இறுதியாக தமையனிடம் வந்து நிற்க, தம் இளவளை அன்போடு அரவணைத்த அதியன் அவளின் விழிநீரை மென்மையாகத் துடைத்துவிட்டான்...

தாம் பிறந்து வளர்ந்த அரண்மனையை மீண்டும் ஒருமுறை நீளவிழிகளால் வருடிய மதிவதனி, தம்மை புன்னகையுடன் கவனித்துக் கொண்டிருந்த மன்னவனைத் திரும்பிப் பார்த்தாள்...

"நாம் விடைபெறும் காலம் நெருங்கியது தேவி..!" என்றவனுக்கு ஆமோதிப்பாகத் தலையசைத்தவள் தாம் கண்ட காட்சியில் திகைத்து,

"நகருங்கள் தீரனே..!" என்றபடி விரைவாக ஓடிவந்து தம் மணாளனிற்கு முன்பாக நின்ற அடுத்த வினாடியே தருமன் வீசிய வாள் அவளின் ஆலிலை வயிற்றில் பாய்ந்ததில் செங்குருதிப் பெருகி வழிந்தது..!

"வ..வதும்மா..!" என்ற கதறலுடன் தம் மகாராணியை ஏந்தியபடி மன்னவன் தரையில் சரிந்தமர, அக்கயவனின் வெற்றிச்சிரிப்பால் இராஜசிங்காபுரி அரண்மனையே கிடுகிடுத்தது..‌.


தொடரும்......
 
Top Bottom