• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மகேந்திரனின் மதிவதனியவள் - 26

Vishakini

Moderator
Staff member
MMI 26


இளவரசி மதிவதனிக்கு நடந்த அனர்த்தத்தைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்த அதியன், "யாரங்கே? வைத்தியரை அழைத்து வாருங்கள்..!" என உத்தரவிட்டதோடு தம் இளையளை நெருங்க, நயனத்தேனருவியும் பதற்றமாக அவளிடம் விரைந்தார்...


மதிவதனியோடு தரையில் சரிந்திருந்த மகேந்திரனை வெஞ்சினத்துடன் நோக்கினான் காவல் வீரர்களிடம் பிடிப்பட்டிருந்த தருமன் இளம்பரிதி...


தம் மகாராணியை அரவணைத்துப் பிடித்திருந்தவனின் உலகம் எப்பொழுதோ தம் இயக்கத்தை நிறுத்தியிருக்க, அக்கயவனிற்கு எதிர்வினையாற்றும் நிலையிலா அவன் இருக்கின்றான்?


"வ..வதும்மா..! எம்மைப் பாரடி..! உமக்கு ஒன்றும் நேராது..!" அவளின் பூங்கன்னங்களை மென்மையாகத் தட்டியதில் மிகுந்த சிரமப்பட்டு விழி மலர்த்திய மதிவதனி,


"அ..அல்ல ம..மகி..! யா..யான் பி..பிழை..பிழைப்பதுக் க..கடினம்.! தா..தாங்கள் அ..அந்த கா..காஞ் காஞ்சனையை ம..மணந்து..!" எனும்போதே உயிர்மூச்சு பலமாக வாங்கியதில் வலியுடன் புன்னகைத்து மன்னவனின் நாடியை வருட,


"வேண்டாம் தங்கமே..! உம் பவளச்செவ்வாயால் எமக்கு பெரும் தண்டனை வழங்காதே..!" என்றபடி அவளை நெஞ்சோடு அணைத்தவன் தாம் ஓர் ஆண்மகன் என்பதை மறந்துக் கதறியழுதான்...


"ஹாஹா..! சபாஷ் மதிவதனி..! நீ பிழைக்கமாட்டாய் என்பதை மிகச்சரியாகக் கண்டுகொண்டாயே..! ஆம்..! உம் மீது பாய்ந்தது விஷம் தடவிய வாள்..!


யான் அடைய விரும்பிய உம்மை அபகரித்ததோடு, இராஜசிங்காபுரி ராஜ்ஜியத்தையும் அதன் மன்னனிடம் சேர்ப்பித்த இந்த நயவஞ்சகனைக் குறிவைத்து வீசிய வாளை துரதிர்ஷ்டவசமாக நீ பெற்றுக் கொண்டாய்..! அத்தனை நேசமோ? அடடா என்னே உமது பதி பக்தி..!" என்று கொக்கரித்த தருமன் பெண்ணவளின் வலியையும், மன்னவனின் வேதனையையும் உளமார ரசித்தான்...


ஆம்..! அவன் இந்நாட்டிற்கு வருகைப் புரிந்தது ராஜ்ஜியத்தைக் கைப்பற்றுவற்காக மட்டுமன்று..!


மதிவதனியை முதலில் விரும்பியவன் அவனே..!


தம் மனதை அவளிடம் உரைத்தப்பொழுது, எமக்கு விருப்பமில்லை எனக் கூறியிருந்த மங்கை அவனை விடுத்து தீரனை விரும்பியதை அக்கயவனால் ஏற்க முடியவில்லை..!


"இக்கயவனின் சிரத்தை இக்கணமே கொய்து விடுகிறேன்..!" எனப் பாய்ந்த அதியனைத் தடுத்துப் பிடித்த மகேந்திரராஜன், "சற்றுப்பொறு அதியா..! முதலில் மதிவதனியின் உயிரைக் காப்போம்..!" என்க,


அவளின் நாடியை சோதித்த வைத்தியர், "எ..எம்மை மன்னித்து விடுங்கள் மன்னா..! நம் இளவரசியின் உயிர்க்காக்கும் மூலிகைகள் நம்மிடம் இல்லை..! அதைப் பெறுவதற்கு பல மலைகள் கடந்துப் பயணிக்க வேண்டும்... அதுவரையில் அவர் உயிரோடிருப்பது சாத்தியமன்று..!" என்றதில் அரண்மனையே மயான அமைதியில் மூழ்கியது...


அதைக் கேட்டதும் விருட்டென்று நிமிர்ந்த மகேந்திரன் தம் வதனியின் வயிற்றில் பாய்ந்திருந்த வாளை உருவியதில் அங்கிருந்து மேலும் குருதிப் பொங்கி வழிய, "ம..மகி..!" என்றுத் துடித்தாள் அவள்...


மன்னவன் சர்வ நிச்சயமாக தருமனின் உயிரைப் பறிக்கப் போவதாக சபையோர் எண்ணியிருக்க, அவனின் மனதறிந்த மதிவதனி விரைவாக அவனது வலக்கரத்தைத் தடுத்துப் பிடித்தாள்...


கரத்தை விலக்காமல் தம் தர்மபத்தினியின் விழிகளை அவன் ஊடுருவியதில், "வே..வே..வேண்டாம்..!" என்றவள் சிரமசைக்க,


"எம்மை நீ அறிவாய் வதும்மா..!" என்று மறுதலித்தவன், ஒரு வினாடி தம் விழிகளை இறுக்கி மூடித் திறந்ததோடு பற்றியிருந்த வாளை தம் வயிற்றில் இறக்கியிருந்தான்...


"ஆஆ... ம..மகி..!" என்றவள் கதற, இறக்கிய வாளை உருவியெடுத்து வெளியே வீசியவன் தம் குருதி தோய்ந்த கரத்தால் அவளின் கன்னங்களைப் பற்றி,


"எ..எம் ச..சத்தியத்தை மற..மறந்துவிட்டாயா தேவி? எப்..எப்பிறவியிலும் எம் வ..வதனி இல்லா உ..உலகில் எம்..எம்மால் சு..சுவாசிக்க இயலாது..!" என்றவாறே அவளது சங்குக்கழுத்தின் வளைவில் மெதுவாகப் புதைந்தான்...


சடுதியில் நடந்து முடிந்த அனர்த்தத்தில் கூடி நின்றவர்களின் விழிகளில் வழிந்த வெந்நீர் ஊற்று மேலும் பெருகியது..!


"பிற..பிறவி? ம..மகி..! நாம் இ..இருவரும் மீ..மீண்டும் ஜ..ஜனனம் எடு..எடுக்க வே..வேண்டும்..! தா..தாங்கள் வ..வருவீர்க..ளா? இ..இதேபோல் எம்..எம்மை நே..நேசிப்பீர்களா?" என வினவியபடி பெண்ணவள் கண்ணீர் உகுக்க, கழுத்து வளைவில் புதைந்திருந்தவனும் அழுதான்...


வைத்தியர் எதிர்மறையாகக் கூறியிருந்தும் முயலாமல் விட மனமின்றி உயிர்க்காக்கும் அம்மூலிகைகளைப் பறித்து வரும்படி வீரர்களை அனுப்பிவிட்டு உள்ளே நுழைந்த அதியன் நெடுமாறனின் விழிகளும் கசிந்தன...


"சர்..சர்வ நிச்சயமாக..! உம்..உம்மைத் தீ..தீண்டியே உயிர் வா..வாழ்பவன் யான்..! உ..உமக்காக எதுவும் செய்..செய்வேன் வ..வதும்மா..! நீ எம் வ..வதுவாக, யான் உம் ம..மகியாக நாம் மீண்..மீண்டும் ஜனி..ஜனிப்போம்..!" என்ற மன்னவன் வேதனையான நகையுடன் தம் மகாராணியின் பிறைநுதலில் இதழொற்ற, மங்கையும் தம் மணாளனின் கன்னத்தில் அழுத்தமாகப் பதிந்தாள்...


"அத்..அத்துடன் இ..இந்த அப..அபலைத்தாயின் க..கருவறையிலேயே கரை..கரைந்துபோன நம் பு..புதல்வனும் வர வே..வேண்டும் ம..மகி..!" என்றதில் திடுக்கிட்டு விழித்தவன்,


"தாம் உரைத்தது சத்..சத்தியமா தங்..தங்கமே?" என்றபடி தம் வதனியின் மணிவயிற்றைத் தடவினான்...


"ஆ..ஆம் ம..மகி..! நம் நா..நாடுத் திரு..திரும்பியதும் தங்..தங்களிடம் கூ..கூற எண்..எண்ணி இருந்தேன்..! அ..அதற்குள்..!" என்றவள் கலங்க, அவளை தம் தோளில் தாங்கியிருந்த மன்னவன் அவளது விழிநீரைத் துடைத்துவிட்டான்...


"நல்லது..! தாங்கள் இன்னும் எத்தனைப் பிறவியெடுத்தாலும் எம் கரங்களாலேயே காவு வாங்கப் படுவீர்கள் மூடர்களே..!" காவல் வீரர்களின் பிடியில் நின்றும் அடங்காமல் பரிகசித்தான் தருமன் இளம்பரிதி...


அதற்கு மேலும் அக்கயவனின் பிதற்றல்களை செவிமடுக்கும் பொறுமையின்றி அவனது சிரத்தை வெட்டி வீசுவதற்காக இருவர் அவனை நெருங்குவதற்கு முன்பே, கவுதமன் தம் வாளால் அதை செய்து முடித்திருக்க,


மகேந்திரராஜனும், தீரனின் அன்னையார் கவிமொழியும் உடலின்றிக் கிடந்த அவன் சிரத்தை வெஞ்சினத்துடன் நோக்கினர்...


அதன் பின்னர் "ம..மகி..!" என்ற மதிவதனியின் பலவீனமான குரலுக்கு பதிலாக, "வ..வதும்மா..!" என்று ஆண்மையாக ஒலித்த மன்னவனின் குரலும் மெல்ல மெல்ல தேய்ந்து மறைய, ஒருவரையொருவர் அணைத்தபடியே உயிர் துறந்திருந்தனர்...


இறுதியாக உயிர்ப்பிரியும் சமயத்தில் மகேந்திரன் தம் மனதில் உயிர்க்காதலை மட்டும் சுமந்திருக்க, மதிவதனியின் மனதிலோ காதலோடு தாய்மையை இழந்த வலி..!


தம் இளையள் ஜனித்த தினத்திலேயே அவள் மணாளனுடன் மாண்டுபோனதை எண்ணி கண்ணீர் சிந்திய மன்னனோடு, மற்றவர்களின் அழுகுரலும் இணைய அரண்மனையே பெரும் துக்கத்தில் ஆழ்ந்தது...


ஆம்..! அன்று மதிவதனிக்கு அகவை இருபத்தியொன்று துவங்கும் தினம்...


ஒருவேளை அரண்மனை ஜோதிடரின் எச்சரிக்கையை மீறி அகவை இருபத்தியொன்று துவங்குவதற்கு முன்பே திருமணம் நடைபெற்றதால் அனர்த்தம் நேர்ந்ததோ என்றெண்ணிக் கலங்கினான் மன்னன்...


மன்னவனும் அவனது மகாராணியும் மீண்டும் ஜனிப்பார்கள் என்ற நிச்சயத்தில் அவர்களின் திருமண ஆடைகளுடன் மதிவதனிக்காக மன்னவன் வடிவமைத்த வைர மாலையையும், இருவரின் ஓவியங்களையும் உயர்தர தேக்குமரத்தாலான பெட்டியில் பத்திரப்படுத்தியதோடு,


"மகேந்திரன் - மதிவதனியின் உயிர்நேசத்தை மீண்டும் ஒருமுறைக் காண்பதற்காக இத்தேசம் காத்திருக்கும்..!"


என தாமே ஓர் ஓலைச்சுவடியில் செதுக்கியதுடன், அதனை அதே பெட்டியிலிட்டு மூடியிருந்தான் அதியன்...


அதன்பிறகு மன்னனின் நல்லாட்சியில் நாடு செழித்து வளர்ந்ததையும், மகேந்திரராஜன் வான்மதியை மணந்ததையும், ஆதினியும் வடிவாம்பாளும் சிறையிலேயே கிடந்து மடிந்ததையும் தவிர்த்து முக்கியமாக கருதுமளவுக்கு எதுவும் நிகழவில்லை...


தாம் எண்ணியிருந்தால் அவர்களின் நேசத்தின் அளவை அறிந்தபின்பு, தாமே முன்னின்று பேசி இருவரையும் இணைத்திருக்கலாம்..!


அதைவிடுத்து தம் தோழனிற்கு முன்பிருந்த எளிதான வழிகளையும் அடைத்து, அவனைக் கடினமானப் பாதையில் தள்ளிய குற்றவுணர்ச்சியைத் தாங்க இயலாமல் இப்பிறவியில் அவர்களுக்கு உதவுவதற்காகவே மகேந்திரராஜன் மீண்டும் ஜனித்திருக்க, அதியனோ தம் இளையளின் காதல் நிறைவேறுவதைக் காண்பதற்காக வந்திருந்தான்...

__________


தங்கள் முன்ஜென்ம வலிகளை நினைத்து பெண்ணவள் கதறியழ, அவளின் கரம் பற்றியபடி தரையில் மண்டியிட்டு அமர்ந்த மகேந்திரன், "அழாத வதும்மா..!" என்றபடி அவள் மடி சாய்ந்தான்...


அன்று தன்னை முறையாக அடைவதற்காக தன் ராஜ்ஜியத்தைத் துறந்து மணம் புரிய வந்ததோடு தன்னுடன் இறந்தும்போன மன்னவன், இன்றும் தனக்காகவே வாழ்வதை நினைத்த நொடியில் அழுகை நின்று காதலின் கர்வம் முகிழ்க்க, தன் மகியின் அடர்க்கேசத்தைப் பாசமாகக் கோதிவிட்டாள் அவள்..!


"வ..வதும்மா..!"


"ம்ம்?"


"என் மேல கோபமா?" என்றதில் லேசாகக் குனிந்து அவனின் கன்னங்களைப் பற்றி, "அது என்னால முடியுமா மகி?" என்றாள் அவள் காதலாக...


"ஆமா என் வதுவால அது எப்பவுமே முடியாது..!" என்றவனின் நெற்றியில் அழுத்தமாக தன் மென்னிதழ்களை ஒற்றியெடுத்தவள்,


"எனக்காக உயிரையே விட்ட உங்கள போய் பழிவாங்க கல்யாணம் பண்ணதா நினைச்சுருக்கேன் பாருங்க மகி..!" என்று வருந்த,


"ப்ச் அது என் தப்பு பேபி..! வாய வச்சுகிட்டு சும்மா இல்லாம உன்ன தப்பா பேசிட்டேன்ல..! சா.." எனும்போதே கணவனின் வார்த்தைகளை தன் இதழ் வழியாக விழுங்கியிருந்தாள் மதிவதனி...


சில நிமிடங்களில் பெண்ணவள் மூச்சுக்காற்றுக்காக விலக, "வாவ் வாட் எ ஸ்வீட் கிஸ்..! நீயா எனக்குத் தந்த ஃபர்ஸ்ட் கிஸ் வதும்மா..!" எனக் குறும்பாக கண்சிமிட்டியவன், அங்கு மீண்டும் ஒருமுறை அழுத்தமாகப் பதிந்து விலகினான்...


அப்போது திடீரென,


"உம்மருகே மலராகிய இணையள் நிறைக்குடமாகி, வற்றாத பேரமுதாகி தாம் அளிக்கும் உயிரை உணர்ந்துப் புறந்தரும்பொழுது தம்மை மீட்டெடுப்பாள் மன்னா..!"


என வனத்தில் சந்தித்த அப்பெரியவரின் குரல் காதில் கேட்க,


(புறந்தரும் - பாதுகாக்கும்)


தன்னைக் காதலாகப் பார்த்துக் கொண்டிருந்தவளின் மணிவயிற்றில் தன் வலக்கரத்தைப் பதித்து, "நம்ம பையன் நம்மகிட்டயே வந்துட்டான்ல டி..!" என்றவனின் விழிகளில் ஈரம் துளிர்க்க,


அதை மென்மையாகத் துடைத்தவள், "எப்..எப்படி மகி?" என ஆச்சரியமாகக் கேட்டதில் வனத்தில் நடந்ததைப் பகிர்ந்தான் அவன்...


தன்னவளுக்கு மட்டும் நினைவுகள் வராமல் இருப்பதைப் பற்றி அவரிடம் கேட்டதற்கு அவர் மேற்சொன்ன பதிலோடு,


"யானை முதலா எறும்பு ஈறாய


ஊனம் இல் யோனியின் உள்வினை பிழைத்தும்


மானுடப் பிறப்பினுள் மாதா உதிரத்து


ஈனம் இல் கிருமிச் செருவினில் பிழைத்தும்


ஒரு மதித் தான்றியின் இருமையில் பிழைத்தும்


......"


என உயிர்கள் உருவெடுக்கும் பல நிலைகளின் ஊடாகத் தாய்மையின் மேன்மையை விளக்கும் வகையில் மாணிக்கவாசகர் அருளிய திருவாசகப்பாடலைப் பாடியதை வைத்துக் கண்டுபிடித்ததையும் சொன்னவன்,


"தங்களை விரைவில் ஆபத்து சூழலாம், எந்நிலையிலும் சத்ருவை வெல்லவிடாதே மகேந்திரா..!" என எச்சரித்ததை மட்டும் மறைத்துவிட்டான்...


சில கணங்கள் மனைவியின் மணிவயிற்றை மென்மையிலும் மென்மையாக மன்னவன் வருடியதில் தன் தளிர்மேனி சிலிர்க்க, "ஸ்ஸ் ஆஆ கூசுது..! கொஞ்ச நேரம் சும்மா இருங்க மகி..!" என சிணுங்கினாள் அவள்..!


முகம் நிறைந்த சிரிப்போடு அவளைக் கண்டவன், "நா..நாம இந்த நாட்ட விட்டுப் போயிடலாமா வதும்மா?" என வேகமாக வினவியிருந்தான்...


கணவனைப் புரியாமல் பார்த்தபடி, "எங்க?" என பதிலுக்கு அவளும் கேட்க,


"நமக்கு சிங்கப்பூர்ல ஒரு பிரான்ச் இருக்குல டி..! அங்கப் போகலாம்... நீ என்ன சொல்ற?" என்றான் அவன் மிகுந்த எதிர்பார்ப்புடன்...


ஆனால் அதற்கு அவள் சொன்ன பதிலில் மன்னவனுக்கு வருத்தமும் மகிழ்ச்சியும் ஒருங்கே எழுந்தன..!



தொடரும்......
 
Last edited by a moderator:
Top Bottom