• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மகேந்திரனின் மதிவதனியிவள் - 12

நிதனிபிரபு

Administrator
Staff member
MMI 12


நள்ளிரவு இரண்டு மணிக்கு தன்னை அழைத்து அழகான கனவினை கலைத்ததோடு, அவன் சொன்ன திட்டத்திற்கு ஒப்புக்கொள்ள வைத்த நண்பனை நினைத்து எரிச்சலில் அமர்ந்திருந்த தீரன் ஒரு முடிவோடு எழுந்து மெதுவாக பால்கனிக்கு வந்து நின்றான்...

இன்னும் சற்று நேரத்தில் விடைபெற போகின்ற நிலையிலும் தன்னொளி வீசி ஜொலித்துக் கொண்டிருந்தாள் அந்நிலவு மகள்..!

"இப்போ வரைக்கும் கனவு நல்லா தானே இருக்கு... அப்புறம் ஏன் இந்த ஜென்மத்துலயாவது நீ காதல்ல ஜெயிக்கிறியானு பார்ப்போம்னு மகேன் நக்கல் பண்ணான்? ஒருவேள இதுக்கப்புறம் ரெண்டு பேரும் சண்ட போட்டுப் பிரிஞ்சுட்டோமா? எரும மாடு..! நல்ல நேரத்துல கால் பண்ணி கனவுக்கு பிரேக் போட்டுட்டான்.." நண்பனைத் திட்டிக்கொண்டே வான்நிலவைக் கண்டவனுக்கு அவளுக்கும் தங்களின் முன்ஜென்ம நிகழ்வுகள் சீக்கிரமாக நினைவுக்கு வரவேண்டும் என்ற ஆவல் அதிகரித்தது...

"பேசாம நாமளே எல்லாத்தையும் அவகிட்ட சொல்லிடலாமா..!" என்று யோசிக்கும்போதே அது சாத்தியமில்லை என்பது புரிந்தது...

அவனாக எதை சொன்னாலும் அவள் நம்புவது கடினம் என்பதைவிட அதற்கு முதலில் அவள் அவனோடு அமர்ந்துப் பேச வேண்டுமே..!

அத்தோடு கனவில் கண்ட நிகழ்வுகளை அவனாலேயே நம்ப முடியாதபோது மதிவதனியிடம் எப்படி சொல்லிப் புரியவைப்பது?

ஆரம்பத்தில் அவனுக்கே இம்மாதிரியான முன்ஜென்ம கதைகளில் நம்பிக்கை இல்லை...

அங்கொன்றும் இங்கொன்றுமாக செய்திகளிலோ, சமூக வலைத்தளங்களிலோ காண நேரும்போது சுத்த பைத்தியக்காரத்தனம் என்று கடந்துச் சென்றிருக்கிறான்...

ஆனால் முதன்முதலில் மதியை தொட்ட அன்று அவன் உடலில் பாய்ந்தோடிய சிலிர்ப்பும், இரவு காதில் கேட்ட குதிரையின் குளம்பொலியும் அவனை நிம்மதியாக இருக்க விடவில்லை...

அதனால் எழுந்த கோபத்தில் தான் அன்று வேண்டுமென்றே அவளிடம் அந்த வடிவமைப்பை மீண்டும் வரைய வைத்து எரிச்சல் படுத்தினான்...

அதிலும் இந்த ஒரு வாரமாக அவளைக் காணும்போதெல்லாம் அவனுள் பேயாட்டம் போடும் இளமை உணர்வுகளை அடக்க அவன் படும்பாட்டினை அவனையன்றி யார் அறிவார்?

அது ஒன்று தான் அவனுக்கு நம்பிக்கை வந்ததற்கு முக்கியக் காரணமே..!

வாலிபம் அடைந்த நாளிலிருந்து தன்னோடு பழகிய பெண்களை சாதாரணமாக நட்பாகத் தொடுவது, அணைப்பது என்பதைத் தாண்டி யார் மீதும் அவனுக்கு மனதின் அடியாழத்தில் இருந்து எந்தவொரு காதல் உணர்வும் எழுந்ததில்லை...

அந்த வயதில் தன்னிடம் ஏதோ குறையிருப்பதாக நினைத்து மருத்தவரைச் சந்தித்து பரிசோதனை செய்ய, அதில் திருப்தியடைந்து திருமணம் செய்தால் சரியாகிவிடும் என்று நம்பியிருந்தவனுக்கு, மதிவதனியைத் தொட்டதில் இருந்தே அடங்காத உணர்வுகளின் ஆர்ப்பரிப்பு..!

அதிலும் இந்த இரண்டு நாட்களாக அவளை அணைத்து இதழோடு இதழ் சேர்க்க அவனது உடலின் ஒவ்வொரு அணுவும் துடிக்கையில், எங்கே அவள் தன்னைத் தவறாக நினைத்து ஒதுக்கிவிடுவாளோ என்ற பயம் மட்டுமே அவனை கண்ணியமாக நடக்க வைத்தது...

இப்படி தனக்குள் ஏதோதோ நினைத்துக்கொண்டே அலைபேசியில் இருந்த அவளின் புகைப்படத்தை வருடியபடி, "உனக்காக தான் இத்தன வருஷமா காத்திருந்தேன்னு தெரியாம உன்ன ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்ல வதும்மா..! ஐம் ரியல்லி சாரி..!

என்னோட டெரர் அவதாரத்தப் பார்த்துட்டு திடீர்னு இப்படி லவ்வர் மாதிரி பேசுனத நம்ப முடியாம நீ முழிச்சப்போ ரொம்ப க்யூட்டா இருந்த பேபி..." அவளுடன் மானசீகமாக உரையாடியவன் அதில் இதழொற்றிவிட்டு நிமிர்ந்தபோது வாசல் கதவைத் திறந்துகொண்டு வெளியேறிய தம்பியைக் கண்டான்...

"ப்ச் இந்த யுகிக்கு இதான் வேல... பேய் மாதிரி கண்ட நேரத்துல வர்றதும் போறதும்..!" என அதிருப்தியாக நினைக்கும்போதே ஞாபகம் வந்தவனாக,

"ஓ..! என் வதுவோட இவன் நல்லா பேசுவான்ல... அவளோட பேச சொல்லலாமா?" நினைவே கசந்ததில் இடவலமாக தலையசைத்தபடி உள்ளே சென்று உறக்கத்தைத் தொடர்ந்தான்...

அவள் தன்னைத்தவிர வேறு யாருடன் பேசுவதையும் ஏற்க முடியாதவன் தம்பியுடன் பேசினால் மட்டும் ரசிக்கவா போகிறான்?

தங்கள் காதல் நினைவுகளின் தாக்கத்தில் புன்சிரிப்புடன் ஆழ்ந்து உறங்கியவனை அதிர்ஷ்டவசமாக கனவும் விட்ட இடத்திலிருந்துத் தொடர்ந்தது..!

_____

அன்று அந்த மூலிகை வனத்தில் இளந்தீரன் சோர்வாக மரத்தடியில் அமர்ந்திருக்க, மதிவதனி அவனை திகைப்புடன் நோக்கியபடி நின்றிருந்தாள்...

"நீ வனதேவதை தான் என்பதை யான் அறிவேன் தேவி..!" என்றவனை பொருள் விளங்கா பார்வையால் அளந்துவிட்டு,

"அல்ல வீரனே..! தாங்கள் எண்ணுவது தவறு... யான் இங்கு குருவிடம் வித்தைக் கற்க வந்தவள்..." என்றதும் தம் விழிகளில் நேசம் வழிய,

"இருக்கட்டும் பெண்ணே..! எமக்கு இருமுறை உயிர் தந்தவள் நீ..! எம் கண்களுக்கு தேவதையாக தெரிவதில் தவறேது?" என்றான்...

குழப்பம் சூழ்ந்த முகத்துடன் அவனை நோக்கி, "இருமுறையா? யான் தங்களை இப்பொழுது தான் முதன்முறையாக காண்கிறேன் வீரனே..!" என்க,

"வீரன் அல்ல தேவி..! தீரன்..! மகேந்திரன் இளந்தீரன்..! இனிவரும் பிறவி முழுவதும் உம்முடைய தீரனாகவே பயணிக்க ஆசைக்கொள்கிறேன்.." என்றான் தாம் திக்விஜயம் செய்வதற்காக வருகைப் புரிந்த முடி இளவரசன் என்பதை மறந்து...

அவன் இவ்வாறு பட்டென்று மனதை உரைத்ததில் மனம் படபடக்க, விழிகள் நாற்புறமும் சுற்றி சுழல, "ஓ..! தீரன்..! தங்களின் பெயர் அழகாக இருக்கின்றது..." தன்னை மறந்து உரைத்துவிட்டு கீழ்அதரங்களை கடித்தவள், 'மகேந்திரன்..! மகி..! என்றும் அழைக்கலாம்' என்று மனதில் எண்ணிக்கொண்டாள்...

அவள் படும்பாட்டில் மனம் துள்ள, "உமது பவளச்செவ்வாய் திறந்து எம் பெயரை அழைக்கும்பொழுது கூடுதல் அழகு தான் தேவியே..! அது போகட்டும்... முன்பு எம்மை காப்பாற்றிய கதையைக் கேட்கிறாயா?"

"ஓ..! கூறுங்கள்..!"

"இரு தினங்களுக்கு முன்னர் ஏதோ சிந்தனையில் கவனமின்றி சென்று மரக்கிளையில் கூடு கட்டியிருந்த விஷ வண்டுகளின் மீது மோத இருந்தேன்... அப்பொழுது கடைசி வினாடியில் ஓர் இளம் மங்கையின் நகையொலிக் கேட்கவே எமது புரவியைத் திருப்பியதால் எம் உயிர் பிழைத்தது..!

அந்த நகையொலிக்கு உரிமைக்காரியைக் காண்போம் எனத் தேடி வந்தால் ஓர் ஜோடி கிளிகளின் கொஞ்சல் மொழியைப் பார்த்து நகைத்துக் கொண்டிருந்த உம்மை கண்டேன் தேவியே..! அன்று விஷ வண்டுகளிடம் இருந்து காத்த நீயே இன்று தாகத்தில் இருந்தும் எம்மை காத்துள்ளாய்..!" என்றதில்,

"ஓ..! தா..தாகத்தில் இருந்து தங்களைக் காத்தது ம..மனிதாபிமானத்துடன் புரிந்த உதவி வீரனே..!"

"அப்படியா..! வேறு யாராயினும் இவ்வாறு உம் மடியில் சாய்த்து உதவியிருப்பாயா தேவி?"

"அ..அது.." என்று தயங்கவளின் மனம் அதைக் கற்பனையில் கூட ஒப்பவில்லை...

தம் நெஞ்சறிய பொய்யுரைக்க முடியாது அவள் திருதிருக்க,

அதில் எழுந்த புன்னகையை அடக்கியபடி, "விட்டுவிடு..! உம் மனதை எம்மால் உணர முடிகிறது..! ஆதலால் இருமுறை எமக்கு உயிரளித்த உம்மிடமே எம்மை ஒப்படைக்கலாம் என்று யான் முடிவு செய்துவிட்டேன் தங்கமே..!" என்று தம் மனதை உரைத்தவன் நின்றிருந்த மதிவதனியின் கரத்தை மென்மையாகப் பற்ற, வினாடியில் மின்சாரம் தீண்டியதைப் போல் திகைத்து பனிச்சிற்பமாய் உறைந்துபோனாள்...

அகவை பதினெட்டின் தொடக்கத்தில் இருந்த இளமங்கைக்கு இத்தனை நெருக்கத்தில் கம்பீரம் நிறைந்த ஆண்மகனைக் கண்டதும், அவன் வெளிப்படுத்திய காதல் மொழியும் சேர அதுவரையில் தெளிந்த நீரோடையாகப் பயணித்த அவளின் மனதில் கல்லெறிந்ததைப் போலாகியது..!

ஒருவழியாக சில வினாடிகளில் ஓர் அந்நியன் தம்மை தீண்டியுள்ளான் என்பதை உணர்ந்து அவனிடமிருந்து தம் கரத்தை விலக்கிக்கொண்டவள், "இருமுறைக் கண்ட பெண்ணின் மீது காதலா? நம்ப இயலவில்லை வீரனே..!" என்றபடி செவ்வானமாய் சிவந்திருந்த வதனத்தை அவனிடம் காட்டாமல் மறைப்பதற்காகத் திரும்பி நின்றாள்...

"ஓர் பார்வையில் காதல் மலர்ந்த வரலாற்று நிகழ்வுகள் இந்த தேசத்தில் அநேகம் உள்ளது தேவி..!"

"அப்படி எமக்கும் தோன்ற வேண்டும் அல்லவா..!"

"உமது வதனம் வேறு கதை சொல்கின்றதே தங்கமே..!"

"யான் வருகின்றேன் வீரனே..!" என்று ஓட முயன்றவளின் முன்பாக வந்து நின்றவன், "எமக்கு மறுமொழி உரைத்துவிட்டுச் செல் தேவி..!" என்றான் தீர்க்கமாக...

தமக்கு முன்னால் நின்றிருந்த அவ்வீரனின் திண்மையும் வனப்பும் பருவமங்கையான அவளை ஈர்க்காமல் போனால் தான் அதிசயம்..!

எனினும் தம்மை நம்பி போர்வித்தைகள் பயில அனுப்பிய தந்தையின் முகம் நினைவில் மின்னி மறைய, "எம் மனதில் உறுதியில்லை வீரனே..! யான் சென்று வருகின்றேன்.." என்றதோடு அவ்விடம் விட்டு நகர்ந்தாள்...

ஏமாற்றம் சூழ நின்ற தீரனும் அதன் பின்னர் ஆங்காங்கே அவள் தோழியுடன் வெளிவரும் வேளைகளில் அமைதியாக அவளை பின்தொடர்வதோடு நிறுத்திக்கொண்டான்...

இவ்வாறே பத்து தினங்கள் கடந்திருந்தன...

அன்று மாலைவேளையில் ஆர்ப்பரித்துக் கொட்டும் மலையருவியின் அழகை ரசித்தபடி நடந்துச்சென்ற மதிவதனி தவறுதலாக திசைமாறி அடர்ந்த வனப்பகுதிக்குள் நுழைந்திருந்தாள்..!

இன்னும் சில நாழிகையில் இருட்டிவிடுவேன் என மிரட்டிய வானை நிமிர்ந்து நோக்கியவள் வெளியேற வழியேதும் கிட்டுமா என்று அங்குமிங்கும் அலைந்ததில் சோர்ந்து ஓர் இடத்தில் மடங்கி அமர்ந்தாள்..!

அவள் இருட்டைக் கண்டு அஞ்சவில்லை..! எனினும் இந்த பரந்த விரிந்த கானகத்தில் கொடிய மிருகங்களுக்கு இரையாகி விடுவோமா என்ற ஐயம் எழ அவளது பூந்தேகம் சிலிர்த்தடங்கியது..!

அங்கேயே சில கணங்கள் ஓய்வெடுத்துவிட்டு எழுந்தவள் மிக அருகாமையில் கேட்ட வேங்கையின் உறுமலில் மிரண்டு, கால்இடறி கீழே விழுந்து தம்மை சமாளித்து எழுந்தபொழுது அவளுக்கு நூறு அடிகள் முன்பாக ஓர் ஆண் வேங்கை நின்றிருந்தது..!

"நன்றாக மாட்டிக்கொண்டாய் மதி..! எப்படியேனும் தப்பித்து ஓடி விடடி.." என்று தமக்குத் தாமே தைரியம் கூறிக்கொண்டு ஓடத் திரும்பியவள், அவளுக்கு பின்னால் நின்ற தீரனின் மார்பில் மோதிய அச்சத்தில் வீரிட முயல, அவளின் மென்னதரங்களில் கரம் வைத்து மூடியவன்,

"உஷ்..! யான்‌ தான் வதனி..! அச்சம் வேண்டாம்... சற்று பொறு.." என்றபடி அவளை பாதுகாப்பாக ஓர் மரத்தின் பின்னால் நிற்க வைத்துவிட்டு அவன் திரும்புவதற்கும், அவ்வேங்கை அவர்களை நெருங்குவதற்கும் சரியாக இருந்தது...

சில கணங்கள் அக்கானகத்தில் தீரன் வேங்கையோடு மோதிக்கொண்டதில் எழுந்த ஆக்ரோஷமான ஒலி மட்டுமே..!

தம் மனம் கவர்ந்த மங்கையின் விழிகளில் ஓடி மறைந்த உணர்வுகளைக் கிரகித்தவன் வேண்டுமென்றே அதனிடம் தோற்பதுப் போல் நடித்து அவளை தவிப்பில் ஆழ்த்தித் துடிக்க வைத்தான்...

இளந்தீரன் வேங்கையிடம் பெற்ற சில தாக்குதல்களில் அவளின் உயிர்த் துடித்தடங்கி, இதயத்தை யாரோ கசக்கிப் பிழிவதைப் போல் வலியெடுத்ததில், தமக்காக ஒருவன் அடிபடுகிறான் என்ற மனிதாபிமானத்தைத் தாண்டி, தம் மனதில் அவன் நீக்கமற நிறைந்துள்ளதை அவளுக்குப் பட்டவர்த்தனமாக வெளிச்சம் போட்டுக்காட்டியிருந்தது..!

அதுவரையில் வேடிக்கைப் பார்த்த தம் மதியீனத்தை நொந்தபடி விழிகளில் வழிந்த நீரோடு கவனமாகத் தேடி ஓர் வலுவான மரக்கிளையை எடுத்து வந்தவள் அவ்வேங்கையை அடித்து விரட்டியவுடன் கரத்திலிருந்த அதைத் தூக்கி வீசிவிட்டு புஜங்களில் குருதி வழிய நின்றவனை நெருங்கி, "எம் தீரனே..!" என்று அணைத்துக் கொண்டாள்...

அவளின் விழிநீர் அவனது மேலாடையைத் தாண்டி மார்பை நனைக்க, வதனத்தில் வெற்றிநகை விரிய தன் மதிவதனியை அணைத்து நின்றான் மகேந்திரன் இளந்தீரன்..!

"கலங்காதே வதனி..! எமக்கு எந்த அனர்த்தமும் நேரவில்லை..!" என்று ஆற்றுப்படுத்த,

"பிறகு?" என்று வினவியவளின் விழிகள் அவனை கண்டுகொண்டதில் விரிய,

"ஆம்..! அவ்வேங்கையிடம் தோற்பதைப் போல் நடித்தேன் தேவியே..!"

"ஏன் அப்படி செய்தீர்கள்?.." என்று சினந்ததில்,

"ஹாஹா..! அப்படி நான் வேண்டுமென்றே நடித்ததை நீ நம்பியதால் தானே இங்கு சாய்ந்திருக்கிறாய் கள்ளி..! இல்லையென்றால் உம் மனதைத் திறந்திருப்பாயா?" என்று வான் அதிர நகைத்தவன், அவள் அவனை விட்டு விலகி நின்று முறைத்ததில் விளையாட்டைக் கைவிட்டு,

"கவனம் தேவி..! இதற்கு மேல் நாம் தாமதிப்பது உசிதமல்ல... எந்நேரமும் வனவிலங்குகள் நம்மை தாக்கக்கூடும்... இப்பொழுது இங்கிருந்து வெளியேறுவதும் சாத்தியமன்று..." என்று எச்சரித்தான்...

"அப்படியென்றால் நாம் எங்கே செல்வது?.."

"நாம் அந்த மலையருவிக்குச் செல்வோம்..! இரவு அங்கே தங்கிவிட்டு விடிந்ததும் வழித் தேடலாம் வா.." என்றதற்கு சம்மதித்து உடன் நடந்தவள், "தீரனே..! தங்கள் காயம்?" என்றாள் கவலையாக..

"அங்கு செல்லும் வழியில் மூலிகைப் பறித்துக் கொண்டால் சரி..! நீ வா வதும்மா..!" என்றபடி அவளின் கரம் பற்ற, அப்பொழுது தான் அவனை கவனித்து,

"எமது பெயரை தாங்கள் எவ்வாறு அறிந்தீர்கள்?" என்று வினவ,

"இந்த பத்து தினங்களில் மனம் விரும்பும் கன்னியின் பெயரைக்கூட எம்மால் அறிய முடியாதா தேவி..!" காதலாக உரைத்தவன் அவளை மலையருவிக்கு வழிநடத்தி அழைத்துச்சென்றான்...

தூரமாக நின்றுக் கண்டுகளித்த அருவியை அருகில் காண்கையில் பிரமிப்பூட்டினாலும் சந்தியா வேளையின் குளிர்க்காற்று உடலை ஊடுருவியதில் அவளின் முத்துப்பற்கள் தந்தியடித்தது...

தம் இடையில் கட்டியிருந்த தலைப்பாகையை உருவி அவளுக்குப் போர்த்திவிட்டவன், "ஒளி முற்றிலுமாக நீங்குவதற்குள் சுள்ளிகள் எடுத்து வரலாம் வதனி..! இந்த குளிரில் இரவைக் கடக்க நெருப்பு அவசியம்..!" என்றபடி அவளுடன் சேர்ந்து காய்ந்த சிறு சிறு மரக்குச்சிகளையும், சருகுகளையும் பொருக்கி எடுத்து வந்ததோடு அவற்றை அவ்விரவு முழுவதும் எரியும் வகையில் தயார் செய்தான்...

கரத்தில் நீர்க்குடுவையை ஏந்தியபடி தம் மன்னவனின் அருகில் அமர்ந்தவள், அவனின் மேலாடையை நீக்க முயன்றதில், "என்ன செய்கிறாய் தேவி?" என்றவன் தடுக்க,

"அமைதியாக அமருங்கள் தீரனே..!" என்றபடி அவனது புஜத்தில் பட்டிருந்தக் காயத்தை நீர் வைத்துக் கழுவியவள் வழியில் பறித்து வந்த பச்சிலைகளைப் பிழிந்து அதில் அழுத்திக் கட்டினாள்...

வதனத்தில் கவலை வழிய தம்மை அக்கறையாகக் கவனித்துக் கொண்டிருந்த பெண்ணவளின் பூங்கன்னத்தை வருடியவன், "இது அத்தனைப் பெரிய காயமில்லை வதனி..! எமக்கு வலிக்கவுமில்லை..!" என்க,

ஈரவிழிகளால் அவனை ஏறிட்டு, "எனினும் எமக்கு வலிக்கின்றது தீரனே..!" என்றாள் வருத்தம் தொனிக்கும் குரலில்...

அதில் மனம் நெகிழ, "எம் வதனி..!" என்று அணைத்துக்கொண்டவன் இரவு முழுவதும் அவளை மார்பில் சுமந்தபடி கண்ணயர்ந்தான்...

கீழ்வானில் மெல்ல மெல்ல அந்த ஆதவன் உதயமாக பறவைகளின் இனிமையான ரீங்காரத்துடன் அக்கானகத்தில் காலைவேளை அழகாகப் புலர்ந்தது..!

தம் கைவளைவில் உறங்கிக் கொண்டிருந்த மதிவனியின் உறக்கம் கலையாதபடி அவளைப் பாறையில் மெதுவாக சயனிக்க வைத்துவிட்டு எழுந்தவன் நீர்த்தேக்கத்தில் முகம் அலம்பி வந்தான்...

இதற்குள் இரவில் அவன் மூட்டிய நெருப்பு அணைந்திருக்க, சுற்றிலும் நிறைந்த சோலையை ரசித்தபடி அவன் பழங்களை சேகரித்து வருவதற்குள் அவனின் வதனியும் எழுந்திருந்தாள்...

அவனைக் கண்டு நெருங்கி நின்றவள் காயத்தை ஆராய்ந்து திருப்தியுற்றவளாக, "நாம் இப்பொழுதுத் திரும்பலாமா தீரனே..! எமக்குப் பசிக்கின்றது" என்று வயிற்றைத் தடவ,

"உமக்காக தான் இவற்றைக் கொண்டு வந்தேன் தேவி..!" அவன் சேகரித்த பழங்களை அவளிடம் வழங்க, தாமும் உண்டு தம் அன்பனுக்கும் நடுநடுவே கொடுத்தபடி அவள் நடக்க, இருவரும் அவளின் இருப்பிடத்தை நோக்கிப் பயணித்தனர்...

அவ்வப்போது தம் மன்னவனை ஓர‌விழிப்பார்வையால் களவாடியபடி நடந்து வந்த மதிவதனியின் உள்ளம் நெகிழ்ச்சியில் ததும்பியது..!

நேற்று ஓரிரவு முழுவதும் அவனின் கைவளைவில் அவள் இளகியிருந்தும் கண்ணியம் தவறாத அவனின் பேராண்மை அவளை அடியோடு அவன் வசம் சேர்த்ததோடு, எத்தனை எதிர்ப்புகள் எழுந்தாலும் அவனை கரம்பிடிக்கும் வைராக்கியமும் அவள் மனதில் ஆழமாக வேரூன்றியிருந்தது..!

மூன்று நாழிகையாகத் தொடர்ந்த நடைப்பயணத்தின் முடிவில் ஊர் எல்லையை எட்டியதும், அவள் பயிலும் குருக்குலத்தை நெருங்குவதை அறிந்து, "இனி நாம் எப்பொழுது சந்திப்பது?.." அவனின் விழிப்பார்த்து கவலையுடன் வினவியதில்,

"வரவிருக்கும் பன்னிரெண்டு திங்களில் நீ எப்பொழுது விரும்பினாலும் நாம் சந்திக்கலாம்..! யான் இங்கு தான் இருப்பேன் வதனி..!" என்று உறுதியளிக்க,

மன்னவனை தம் மீன்விழிகளால் அளந்தவள், "ஆமாம் தாங்கள் யார் தீரனே?.." என்று வினவியதில் புன்னகையில் முகம் விகசிக்க, "காலம் வரும்பொழுது அறிந்து கொள்வாய் தேவி..! எனினும் இப்பொழுது உமக்கு ஓர் வாக்களிக்கின்றேன்..!" என்க,

"வாக்கு?.."

"ஆம் வதனி..! இந்த மகேந்திரன் இளந்தீரனின் உயிருள்ளவரை உம்மைத் தவிர வேறெந்த மங்கையையும் மனதால் கூட தீண்ட மாட்டான் என்று சத்தியம் செய்கின்றேன்..!" எனக் காதலாக உரைத்தவன் அருகே நின்ற தம் மகாராணியை மார்போடு சேர்த்தணைத்தான்...

சற்று தூரத்தில் நின்று இவர்களின் பிணைப்பை வெறித்துக் கொண்டிருந்தான் மகேந்திரராஜன்..!


தொடரும்......
 
Last edited by a moderator:
Top Bottom