• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மகேந்திரனின் மதிவதனியிவள் - 3

நிதனிபிரபு

Administrator
Staff member
மகேந்திரனின் மதிவதனியிவள் - 3

"அண்ணா.." என்று அலறியபடி படுக்கையில் இருந்து எழுந்துக் கொண்ட மதிவதனிக்கு சில நிமிடங்கள் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே புரியவில்லை..!


சட்டென்று பரபரப்பாக மணியைத் தெரிந்துக் கொள்வதற்காக நிமிர்ந்ததில் சுவர் கடிகாரம் மணி நான்கரை என்றது...


தன்னுடைய அறையை ஒருமுறை கவனித்துவிட்டு, "ஓ க.. கனவா..! அதிகாலைல கனவு வந்தா ப.. பலிக்கும்னு சொல்வாங்களே..! ஆனா எப்படி இவ்ளோ தத்ரூபமா கனவு வரும்? ஒருவேள நேத்து நைட்டு தூங்காம பாகுபலி படத்தோட ரெண்டு பார்ட்டையும் சேர்ந்துப் பார்த்ததால வந்திருக்குமோ?..." என்ற சிந்தனையில் சில நொடிகள் கழிந்ததும்,



"ஆமா அப்படி தான் இருக்கும்... ஸ்மார்ட்டா இருக்க மகேந்திரன் சார் கனவுல வந்தது கூட நியாயம் தான், ஆனா நம்ம முசுட்டு முனீஸ்வரன் எப்படி வந்தாரு? மாமாப்பையன், படைத்தளபதினு ரெண்டு பேர் வந்தாங்களே..! இதுல யாரு என்னவா வந்தாங்கனு வேறத் தெரியலையே? ச்சு கனவுல கூட வேற நல்ல முகங்கள் வரக்கூடாதா? பார்த்து சலிச்சு பயந்த மூஞ்சியே திரும்பி வந்து பயமுறுத்துது..." என்று புலம்பியவளுக்கு தன் உடன்பிறப்பைப் பார்க்காது அதற்கு மேல் உறக்கம் வருமென்றுத் தோன்றவில்லை...



எனவே அறையில் இருந்து வெளியேறி பக்கத்தில் இருந்த அதியனின் அறைக்குள் நுழைந்தவள், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அண்ணனைக் கண்டு நிம்மதி பெருமூச்சு விட்டபடி அங்கிருந்த நீள்விருக்கையில் படுத்துக் கொண்டாள்...



கண்மூடி உறங்க முயன்றவளை கனவில் கண்ட காட்சிகள் நிழல் உருவங்களாக வந்து அச்சப்படுத்தினாலும் சில நிமிடங்களில் தன்னை மீறி உறங்கியிருந்தாள்..!



காலையில் கண்விழித்த அதியமான் தன் அறையில் படுத்திருந்த தங்கையைக் கண்டு வியந்து, "என்ன மதிக்குட்டி இங்க வந்து படுத்திருக்கா..! உடம்பு சரியில்லையோ?.." என்றபடி அவளின் நெற்றியில் கைவைத்துப் பார்த்தவன், அது இயல்பான சூட்டில் இருந்ததில் நிம்மதியாக தன் வழக்கமான வேலைகளை முடித்துவிட்டு வந்தான்...



அப்போதும் அவள் எழாததில், "என்ன இந்த அராத்து இன்னும் தூங்குது? ஒருவேள நைட் பேய் படம் எதுவும் பார்த்துப் பயந்துருச்சோ?.." என்று தனக்குள் பேசி சிரித்தபடி வெளியேறினான்...



அவன் தங்கை அவர்கள் வீட்டில் நடமாடும் வாலில்லா வானரம் என்று அவனுக்குத் தெரியாதா..!



கீழ் தளத்திற்குச் சென்று தாய் அம்பிகா கொடுத்த காஃபியைப் பருகியபடி செய்தித்தாளைப் படித்தவன், மணி ஏழாகவும் தன் அறைக்குத் திரும்பி வந்தான்...



அப்போது அதியனின் கண்களில் விழுந்தாள், நீள்விருக்கையில் தலைவிரிக்கோலமாக அமர்ந்திருந்த அவன் தங்கை மதிவதனி..!



அதில் பக்கென்று சிரித்தவன், "என்னடா பாப்பா, இப்படி பேய் வேஷம் போட்ட மாதிரி உட்கார்ந்துருக்க?" என்றபடி அவளருகில் அமர்ந்து தலையில் கைவைத்து செல்லமாக ஆட்டினான்...



வழக்கமாக தமையன் இவ்வாறு பரிகாசம் செய்யும்போது பொங்கியெழும் மதி, இன்று அமைதியாக அவனின் உடல்நலத்தை விழிகளால் ஆராய்ந்து கொண்டிருந்தாள்...



அவளின் அமைதியில், "ஓய் என்னடா, ஏன் இப்படி இருக்க?.." எனக் கேட்க,



"ப்ச் ஒன்னுல்ல அதிண்ணா... மணி என்ன?..." என்றாள் பெரிதாக கொட்டாவி விட்டபடி...



அவளை வித்தியாசமாகப் பார்த்தாலும், "மணி ஏழுக்கு மேலாச்சு மதி..." என்றதில் துள்ளி எழுந்தவள், "அச்சோ அண்ணா இன்னைக்கு நான் ஒன்பது மணிக்கு ஆஃபீஸ்ல இருக்கணுமே... லேட்டானா அந்த முசுட்டு முனீஸ் கேள்விக் கேட்டே ஒரு வழி பண்ணிடுவானே..." என்று பதறினாள்...



தங்கையின் பதற்றத்தைக் கண்டு சிரித்த அந்த பாசமிகு தமையன், "இருடா நானே உன்னைய ட்ராப் பண்றேன்.. இன்னைக்கு எனக்கு ஆஃப் தான்..." என்றதும் உவகை பொங்க அண்ணனை அணைத்து விடுவித்தவள், அலுவலகம் செல்ல தயாராவதற்காக தன் அறைக்கு ஓடியிருந்தாள்...



அரைமணி நேரத்தில் வேகமாக குளித்துத் தயாரான மதிவதனி, பக்கத்து அறையில் இருந்து வெளிப்பட்ட அண்ணனோடு வம்பளத்தபடியே மாடியில் இருந்து இறங்கி வந்தாள்...



முழு வெண்மையில் அங்கங்கே லாவண்டர் வண்ண பூக்கள் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட சுடிதாரில் அழகாக நடந்த வந்த மகளின் எழில் கொஞ்சும் தோற்றத்தைக் கீழிருந்தே ரசித்துப் பார்த்த அம்பிகா மனதில் திருஷ்டி சுழித்துக் கொண்டார்...



ஈரோட்டைப் பூர்வீகமாகக் கொண்ட சக்திவடிவேலன் - அம்பிகா தம்பதியருக்கு இந்திரஜித் அதியமான், மதிவதனி என ஆண் ஒன்றும் பெண் ஒன்றுமாக இரு பிள்ளைகள் மட்டுமே...



அம்பிகாவிற்கு இதிகாச கதைகளில் மிகுந்த ஆர்வம்..‌. அதனால் தன் மனம் கவர்ந்த கதாபாத்திரங்களின் பெயர்களையே பிள்ளைகளுக்கு சூட்டியிருந்தார்...



அதியமான் மத்திய கலால் அலுவலகத்தில் கூடுதல் ஆணையராகப் பணிபுரியும் இருபத்தெட்டு வயது வாலிபன்... அவன் வயதுக்கு அது கூடுதலான பதவி தான்... இந்திய குடிமைப்பணி தேர்வில் ஐ.ஆர்.எஸ் ஆக தேர்ச்சிப் பெற்றவன்... மூன்று மாதத்திற்கு முன்பாக தான் குஜராத்தில் இருந்து மாற்றலாகி ஈரோட்டிற்கு வந்துள்ளான்...



மதிவதனிக்கு இருபத்தி நான்கு வயதாகிறது... குஜராத் மாநிலம் காந்திநகரில் அமைந்துள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைன் (NID) கேம்பஸில் நகை வடிவமைப்பில் முதுகலைப் பட்டம் பெற்றவள் (M.Des in Jewellery Designing)


இப்போது ஒரு வருடமாக சக்திவடிவேலனின் நண்பர் ராமச்சந்திரனின் நிறுவனத்தில் முதன்மை வடிவமைப்பாளர்களில் ஒருவளாகப் பணிபுரிகிறாள்...



ஷீன் அன்ட் ஸ்பார்க் (Sheen & Sparkle) என்ற அந்நிறுவனத்தின் தலைமையகம் ஈரோட்டில் இயங்கினாலும், அது இந்திய அளவில் வைரம் மற்றும் நவரத்தினங்கள் பதிக்கப்பட்டு உருவாகும் நகைகள் வடிவமைப்பில் புகழ்பெற்ற ஒரு நிறுவனமாகும்... அங்கு வடிவமைக்கப்படும் நகைகளுக்கென்றே பெரிதான வாடிக்கையாளர் வட்டமிருக்கிறது...




மாடியில் இருந்து சலசலத்தபடி இறங்கி வந்த அண்ணனும் தங்கையும் காலை உணவிற்காக உணவு மேஜையில் அமர்ந்தனர்...



அங்கு இவர்களுக்கு முன்பே வந்து அமர்ந்திருந்த சக்திவடிவேலன், "ரெண்டு பேரும் சாப்பிட்டு முடிச்சோன வெயிட் பண்ணுங்கப்பா, கொஞ்சம் பேசணும்.." என்றார்..



"சரிப்பா.." என்று சம்மதமாக தலையசைத்த இருவரும் அம்பிகா பரிமாறிய இடியாப்பம் மற்றும் கத்தரிக்காய் கொத்சுவை ரசித்து உண்டனர்...



"ஏன்டா அண்ணா, நம்ம வடிவு பேபி இவ்ளோ சீரியஸா சொல்றாரே... ஒருவேள எனக்கு அண்ணி எதுவும் பார்த்துட்டாரோ?.." என்றாள் பக்கத்திலிருந்த அதியனுக்கு மட்டும் கேட்கும்படி...



தங்கைக் கேட்ட கேள்வியில் திடுக்கிட்டு விழித்தவனுக்கு சட்டென்று உண்ட இடியாப்பம் தொண்டையில் சிக்கிப் புரையேறியது...



"பார்த்துடா கண்ணா..." என்றபடி மகனின் தலையில் மெதுவாக தட்டிய அம்பிகா அவன் அருந்துவதற்கு நீரையும் எடுத்துக் கொடுத்தார்..‌.



அதைக் குடித்து தன்னை சமாளித்துக் கொண்ட அதியன், "ஏன்டா பாப்பா, இப்படி பயமுறுத்திட்ட? நான் உனக்கு என்ன தீங்கு செய்தேன் தங்கையே?..." என்றான் அவளைப் போல மெல்லிய குரலில்...



"ஹிஹி.. சும்மாண்ணா... ஏன் அண்ணி வர்றதுல உனக்கென்ன பிரச்சன?.." என சந்தேகமாகக் கேட்டாள்...



"அது... நான் அப்புறமா சொல்றேன்டா... இப்போ சாப்டுவோம்... காட்டன் சட்ட நம்மள முறைக்கிற மாதிரி இருக்கு..." என்றதும் அங்கு சில நிமிடங்கள் உண்ணும் சத்தத்தைத் தவிர வேறெந்த ஓசையும் எழவில்லை..!



காலை உணவை முடித்தக் கையோடு தன் முன்னே அமைதியாக அமர்ந்திருந்த பிள்ளைகளைப் பார்த்த வடிவேலனிற்கு தன்னையறியாமல் புன்னகை எழுந்தது...



நல்ல பதவியில் இருந்தாலும் அதற்கு சற்றும் பொருந்தாது அண்ணனும் தங்கையும் சேர்ந்து செய்யும் சேட்டைகளையும், அவர்களின் பாசப்பிணைப்பையும் பற்றி அவருக்குத் தெரியாதா..!



"க்ம்.." என தொண்டையை செருமியவர், தன்னை நிமிர்ந்துப் பார்த்த மகனிடம் "நம்ம மதிக்கு மாப்ள பார்த்துருக்கேன் தம்பி... மாப்ள ரொம்ப நல்லப்பையன்... நான் நல்லா விசாரிச்சுட்டேன், நீயும் உன் பங்குக்கு விசாரிச்சிட்டு சொல்லு.." என்றார்...



"சரிப்பா... மாப்ளையோட டீடெய்ல்ஸ்?..." என்ற அதியன், தனக்கருகே யாருக்கு வந்த விருந்தோ என்பதாக அமர்ந்திருந்த தங்கையைத் திரும்பிப் பார்த்தான்...



"எல்லாம் அவளுக்குத் தெரிஞ்ச பையன் தான் தம்பி... அவ வேல செய்ற கம்பெனில அவங்களும் பார்ட்னர்ஸ் தான்..." என்றதும்,



'ஆத்தாடி அந்த முசுட்டு முனீஸ் குடும்பமும் அதுல பார்ட்னர்ஸ் தானே..! அச்சோ அவன் மட்டும் வேணாம் கடவுளே...' என்று மனதோடு புலம்பியவள், 'என் வேண்டுதல நிறைவேத்திட்டா எங்கண்ணன உனக்கு பால் காவடி எடுக்க வைக்கிறேன் முருகா..' என்று அவசரமாக ஒரு வேண்டுதலையும் வைத்தாள்...



தங்கையைப் பார்த்துப் பாசமாக சிரித்தவன், "ஓ அப்படினா நம்ம பாப்பாக்கு பிரச்சனயில்ல... பேர் என்னப்பா?.." என்றான் ஆவலாக..



"மகேந்திரன் தம்பி... நம்ம மதி கூட அவர்ட்ட தான் டெய்லி ரிப்போர்ட் சப்மிட் பண்ணுனும்னு சொன்னதா ஞாபகம்... சரியா பாப்பா?.." என்றார் மகளிடம்..



'அப்பாடி தல தப்பிச்சதுடா சாமி... நன்றி முருகா..' என்று அந்த சிவமைந்தனுக்கு ஒரு பெரிய நன்றியை நவிழ்ந்து விட்டு, "ஆமாப்பா மகேந்திரன் சார்ட்ட தான் ரிப்போர்ட் பண்ணுவேன்..." என்றாள்...



"மாப்ள உனக்கு ஓகேவாடா?.." என்றவரிடம், "நீங்க யார சொன்னாலும் சரி தான்ப்பா... எனக்கு சம்மதம்..." என சொல்லிவிட்டு, "நான் வெளிய வெயிட் பண்றேன் ண்ணா, நீ பேசிட்டு வா.." என்றவாறு எழுந்துச் சென்றிருந்தாள்...



தினமும் காலையில் அவளைக் கண்டதும் மலர்ச்சியான புன்னகையுடன் காலை வணக்கம் சொல்லும் மகேந்திரனை அவளுக்கு மிகவும் பிடிக்கும்..! அதற்காக காதல், கல்யாணம் எனும் அளவிற்கெல்லாம் யோசித்ததில்லை..!



எங்கே அந்த தீரன் அபர்ஜித்திடம் மாட்டிக் கொள்ளப் போகிறோமோ என்று பயந்தவளுக்கு மகேந்திரன் என்றவுடன் சற்று நிம்மதியாக இருந்தது...



"நல்லவேள எங்கப்பா அந்த கரும்பு மிஷின் கிட்ட என்னையக் கோர்த்து விடல.." என்று சிரித்தவளுக்குத் தெரியாது அவள் தந்தை தன் நெருங்கிய நண்பனின் மகனான அவனுக்கு அவளைத் திருமணம் செய்து வைக்கத்தான் ஆசைப்பட்டார் என்பது...



தீரனின் தந்தைக்கும் மதி தனக்கு மருமகளாக வருவதில் மிகுந்த விருப்பமே..! ஆனால் அந்த அகம்பாவி இவளைத் திருமணம் செய்ய மறுத்துவிட்டான்...



தீரனின் தந்தை ராமச்சந்திரனும், மகேந்திரனின் தந்தை தர்மராஜ்ம் சக்திவடிவேலனின் கல்லூரிக்கால நண்பர்கள்... இதில் வடிவேலனைத் தவிர்த்து மற்ற இருவருக்கும் இரண்டு மகன்கள் மட்டுமே...



சக்திவடிவேலன் மத்திய அரசு வங்கியில் பணிபுரிந்ததால் முன்பு எப்போதாவது சந்தித்துக் கொள்ளும் நண்பர்கள் மூவரும், இரண்டு வருடங்களுக்கு முன்பாக அவர் விருப்ப ஓய்வு எடுத்துக் கொண்டு ஈரோட்டிற்குத் திரும்பி வந்தப்பிறகு நினைத்த நேரத்தில் சந்தித்துக் கொண்டனர்...



அப்போதுப் பேசியதை வைத்து தான் மதிவதனிக்கு நண்பர்கள் இருவரும் இணைந்து நடத்தும் நகை வடிவமைப்பு நிறுவனத்தில் சேர்த்துக் கொண்டனர்...



அதற்காக நண்பரின் மகள் என்ற சிபாரிசின் மூலமாக மட்டும் அவளை அவர்கள் தேர்ந்தெடுக்கவில்லை.. பெரியவர்கள் இருவரும் அவளுக்கு நேர்முகத் தேர்வு நடத்தி, அவளின் வடிவமைப்புகளைப் பார்த்து வியந்து தான் பணியில் அமர்த்தியிருந்தனர்...



ஆனால் இந்த ஒற்றைக் காரணத்திற்காகவே தீரன் அபர்ஜித்திற்கு மதிவதனியைப் பிடிக்காமல் போனது...



ராமச்சந்திரன் அவனிடம் திருமணத்திற்காகக் கேட்டபோது, "உங்க சிபாரிச கம்பெனியோட நிறுத்திக்கோங்கப்பா... என் வாழ்க்கைக்குள்ள கொண்டு வராதீங்க ப்ளீஸ்... என் டேஸ்ட்க்கு அவ சரியா வரமாட்டா..." என்றிருந்தான்...



அதன் பின்னர் தான் தர்மராஜ் தன் மகனுக்காக அவளைப் பெண் கேட்டு இதுவரை வந்துள்ளது..!



அதியன் தன் இருசக்கர வாகனத்தை அவள் பணிபுரியும் அலுவலகத்திற்கு முன்பாக நிறுத்தியதும் அவனின் தோளைப் பிடித்து இறங்கிய மதிவதனி, "தேங்க்ஸ் ண்ணா... மறக்காம ஈவ்னிங் வந்துடு..." என்று சிரித்தபடியே உள்ளே நுழைந்தாள்...



அவர்களை முதல் மாடியில் இருந்து கவனித்தத் தீரன், "இவன் யாரு புதுசா? இந்த லூசுக்கு பாய் ஃப்ரெண்டா? வாய்ப்பில்லையே.." என யோசித்தபடி தன் தாடையைத் தடவியவன், மின்தூக்கியை நோக்கி நடந்தான்...



தன்‌ பள்ளிப்படிப்பை ஊட்டிக் கான்வென்டில் படித்த தீரன் அபர்ஜித், மேல்படிப்பிற்காக வெளிநாடு சென்றுவிட்டு, ஆறு வருடங்களுக்கு முன்னர் தனது இருபத்தைந்தாவது வயதில் தான் தாயகம் திரும்பியிருந்தான்...



அதனால் அவனுக்கு பெரியவர்களின் நட்பைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது.. அப்படியே தெரிந்திருந்தாலும் தங்கள் தகுதிக்குக் கீழானவர்களை மதிக்கப் போவதில்லை என்பது வேறு விஷயம்...



ஆணவத்தையும், அகங்காரத்தையும் கவசக்குண்டலமாகக் கொண்டுப் பிறந்தவனுக்கு ராஜாவும் அவனே, மந்திரியும் அவனே..!



'ப்ச் எதுக்கு இப்போ அவளப் பத்தி யோசிக்கிறேன்... சச் எ யூஸ்லெஸ் கேர்ள்..!' என தன் தலையை உலுக்கியபடி நடந்து வந்தவனின் கண்களில் விழுந்தாள், மகேந்திரனோடு சிரித்துப் பேசிக் கொண்டிருந்த மதிவதனி...!!!



அதில் தன்னையறியாமல் எழுந்த கோபத்தோடு அவர்களை வெறித்தவன், ஒரு சிற்றூழியனை நிறுத்தி அவளைத் தன்னறைக்கு அழைத்து வரும்படி பணித்துவிட்டுச் சென்றான்...




தொடரும்...
 
Top Bottom