• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மகேந்திரனின் மதிவதனியிவள் - 5

நிதனிபிரபு

Administrator
Staff member
மகேந்திரனின் மதிவதனியிவள் - 5

மதிவதனி தனக்கு வேண்டாம் என்று திட்டவட்டமாக முடிவெடுத்தப் பின்னர் தான் தந்தையிடம் அவளைத் திருமணம் செய்ய மறுத்திருந்தான் தீரன் அபர்ஜித்...



ஆனால் அதிலிருந்து அவள் எந்த ஆணோடு பேசினாலும் இவனுக்கு தேகம் எரிந்தது..!



கல்லூரிக் காலத்தில் தொடங்கி இன்று அவனின் இந்த முப்பத்தொன்றாவது வயது வரை அவன் பார்க்காத பெண்களா..! இல்லை அவனிடம் மயங்காத பெண்களா..!



அதிலும் இளங்கலை படித்தப்போது அக்கல்லூரியே இளவரசியாகக் கொண்டாடிய 'ஷிவானி சிங்' என்ற இளம்பெண் இவனைக் காதலிப்பதாகப் பின்னால் அலைந்தும் தனக்கு விருப்பமில்லை என்று மறுத்தவன் அவன்..!



ஏனோ எந்த பெண்ணும் அவனை ஈர்க்கவில்லை...



ஆனாலும் இப்போது ஒரு பத்து நாட்களாக மதியை ரசிக்கிறானோ என்ற ஒரு எண்ணம்..! அவள் யாரிடம் பேசினாலும் அவனுக்குக் கோபம் வருகிறது..!



சரியாக சொல்லப்போனால் அவளை வேண்டாமென்று அவன் மறுத்ததில் இருந்து தான் இந்த தடுமாற்றம்..!



அதுவும் ஏனென்று அவனுக்குப் புரியவில்லை..!



'இல்ல நான் இப்படி நினைக்கிறது தப்பு..! அவளோட கேரக்டர் எனக்கு செட்டாகாது... எல்லாத்துலயும் பெஸ்ட் எதிர்ப்பாக்குற எனக்கு மனைவியும் பெஸ்ட்டா தான் வரணும்..' என மனதோடு சிந்தித்தபடி அந்த நடைபாதையில் தேங்கி நின்றவன், "இந்த மகேன் அவளோட இவ்ளோ நேரமா என்னப் பேசிட்டு இருக்கான்?.." என்றபடி அவன் எண்ணிற்கு அழைப்பு விடுத்தான்...



அந்த அழைப்பு முழுதாக சென்று நிற்பதற்கு முன்பே மதியின் அறையிலிருந்து வெளியே வந்த மகேந்திரன் அங்கு நின்ற நண்பனைக் கண்டு வியந்து, "ஹேய் தீரா, நீ என்னடா கான்ஃபரன்ஸ் ஹாலுக்குப் போகாம இங்க நின்னுட்டு இருக்க?.." என்று வினவ,



"அது ஒரு ஃபைல என் ரூம்ல மறந்து வச்சிட்டு போயிட்டேன் மச்சி, அத எடுக்க தான் வந்தேன்... வாயேன் என்னோட, ஃபைல எடுத்துட்டு ரெண்டு பேரும் சேர்ந்தே அங்கப் போவோம்.." என்றான் வேகமாக...



எங்கே அவனை விட்டால் மதிவதனியோடு ஒன்றாக அங்கு வந்து விடுவானோ என்ற பயம்..!



ஆனால் அவன் மனம் ஏன் இப்படி பதறுகிறது? நண்பனிடம் ஏன் பொய் சொல்கிறான்? என்பதை சற்று ஆராய்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்..!



பிறந்ததில் இருந்து அவன் ரத்தத்தில் ஊறிப் போயிருந்த அகம்பாவம் மதியிடம் அவன் மனம் சாய்வதை ஏற்றுக்கொள்ள மறுத்தது...



அதை அவன் உணரும்போது காலம் கடந்திருக்கலாம்..!




இதில் சில நாட்களாக அவன் ஆழ்ந்து உறங்கும் சமயங்களில் குதிரைகள் ஓடும் போது எழும் குளம்பொலி வேறு காதில் கேட்கிறது...



அதிலும் நேற்றிரவு அந்த ஒலியோடு, "மகனே தீரா, இம்முறை வெற்றி வாகை சூடப்போவது நீயா? இல்லை உன் எதிரியா? என்று யாரோ கேள்விக் கேட்பது போலவும் வந்தது...



நான் யார்? என் எதிரி யார்? தனக்கு எதற்காக இப்படியான கனவுகள் வருகிறது? தன்னிடம் என்ன சொல்ல நினைக்கிறது? என்று சிந்திப்பதிலேயே அவனின் ஓய்வு நேரங்கள் வீணானது..!



இப்படி தன் மனநிம்மதியைக் கெடுக்கும் இந்த கனவுகளில் இருந்து எப்படித் தற்காத்துக்கொள்வது என்று யோசித்தவன், அடுத்த வாரம் மனநல மருத்துவரிடம் செல்லலாம் என்ற முடிவிற்கும் வந்திருந்தான்...



இப்படி மனதில் பலவற்றை சிந்தித்தபடியே நண்பனோடு தன்னுடைய அலுவலக அறைக்கு வந்த தீரன் அவனிடம் சொன்னதற்காக கையில் கிடைத்த ஒரு ஃபைலை எடுத்துக்கொண்டு அன்றைய சந்திப்பு நடக்கவிருந்த இடத்திற்குச் சென்றான்...



அங்கு இவர்கள் இருவரைத் தவிர யாரும் வந்திருக்கவில்லை...!



அதனால் சாதாரணமாக பேச்சு கொடுப்பதைப் போல், மகேன் எதற்காக மதிவதினியைத் தேடிச் சென்றான் என்பதைக் கேட்க,



"ஓ உனக்கு தெரியாதா மச்சான்? கம்மிங் ஃப்ரைடே எனக்கும் மதிக்கும் என்கேஜ்மென்ட்..." என்றதில் திகைப்பூண்டை மிதித்தாற் போல் அதிர்ந்து நின்றுவிட்டான்...



தீரனின் அதிர்ச்சியை கவனிக்காமல், "இதுக்கு உனக்கு தான்டா நான் நன்றி சொல்லணும்... வடிவேல் மாமாவுக்கு மதிவதனிய உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறதுல தான் விருப்பமே... நீ தான் இப்போ கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டியாமே...! தேங்க் காட் அதனால தான் அவள மாதிரி ஒரு நல்ல பொண்ணு எனக்குக் கிடைக்கப்போறா..!" என்றவனின் முகம் லேசாக சிவந்திருந்தது...



நண்பனின் வெட்கத்தை ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு, "ஓ காதலா மகேன்?.." எனக் கேட்டான் இன்னதென பிரித்தறிய முடியாத ஒரு குரலில்...



மகேந்திரனின் வெட்கமும் மகிழ்வும் அவன் தொண்டையில் கசப்பாக இறங்கியது.‌‌..



'ச்சு யார் யாரக் கல்யாணம் பண்ணா உனக்கென்னடா? நீ உன் வேலைய மட்டும் பாரு...' என்று தனக்குத்தானே அறிவுறுத்தியபடி தலையை உலுக்கிக் கொண்டவன் நண்பன் பேசுவதை கவனித்தான்...



"ச்ச ச்ச அதெல்லாம் இல்லடா... அவள் எனக்குப் பிடிக்கும்.. அதுக்காக காதலானு கேட்டீனா எனக்கு பதில் தெரியல.. ஆனா இனிமே காதலிப்பேன்னு தோணுது... ஷி இஸ் சச் எ பியூட்டிஃபுல் அண்ட் பிரில்லியன்ட் கேர்ள் டா... அவளக் கல்யாணம் பண்ணிக்க யாருக்கு தான் கசக்கும்..." என்று சொல்ல,



மதியை நிராகரித்தப்போது தோன்றாத உணர்வு மகேந்திரன் அவளைப் பற்றிக் கூறும்போது எழுந்து காரணமின்றி அவன் நெஞ்சம் தடதடத்தது..!



அதை சாமர்த்தியமாக மறைத்தபடி அவன் வலக்கரம் பற்றிக் குலுக்கியவன், "ஓகே மச்சான் ஆல் தி பெஸ்ட்.." என்று மனமேயின்றி வாழ்த்திவிட்டு அங்கிருந்த ஒரு இருக்கையில் அமர்ந்து அன்றைய சந்திப்பிற்கான குறிப்புகளைப் பார்க்கத் தொடங்கினான்...



அதன் பின்னர் வரிசையாக முக்கிய நபர்கள் வருகைப் புரிய அன்றைய சந்திப்பு அவர்கள் நிறுவனத்திற்கு வெற்றிகரமாக நடந்து முடிந்தது...



இன்று காட்சிப்படுத்திய வடிவமைப்புகள் யாவும் மதியின் கைவண்ணத்தில் உருவானது தெரிந்து வந்திருந்த பலரும் அவளைப் பாராட்டினர்...



அதிலும் பல தலைமுறைகளாக இந்த துறையில் காலூன்றி இருக்கும் யாத்ரா நகை ஸ்தாபனத்தில் இருந்து வந்திருந்த மூத்த நிர்வாக இயக்குனர் அவளை வெகுவாகப் பாராட்டிவிட்டுச் சென்றார்...



அவர் சென்றதும், "ஹேய் கங்கிராட்ஸ்டா மதி.." என்று மகேந்திரன் அவள் கரம் பற்றிப் பாராட்டியதை வெறித்த தீரன், 'இவன் எப்படி அவளுக்கு கை கொடுக்கலாம்? அந்தக் கையப் பிடிச்சு உடைச்சுட்டா..!' என்று தன் மனதில் தோன்றிய கொடூர சிந்தனையில் அதிர்ந்து வேறுபுறமாக முகம் திருப்பிக் கொண்டான்...



தங்கள் நிறுவனத்தின் அன்றைய வெற்றியைக் கொண்டாடுவதற்காக நகரில் புகழ்பெற்ற ஏழு நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இரவுநேர பார்ட்டியும் ஏற்பாடாகியிருக்கவே அது தொடர்பான வேலைகளைக் கவனிக்கும்படி தனது அலுவலக உதவியாளரைப் பணித்தவன், அதற்கு மேல் அவர்களைப் பார்க்கும் திடமின்றி அங்கிருந்து வெளியேறியிருந்தான்...



இந்த வெற்றிக்காக மதிவதனியோடு சேர்ந்து கடந்த ஒரு மாதமாக இரவு பகல் பாராது உழைத்த துணை வடிவமைப்பாளர்கள் அனைவரையும் அப்போதே வீட்டிற்குச் சென்று ஓய்வெடுக்கும்படி சொல்லிய மகேந்திரன், அப்படியே இரவு ஏழு மணிக்குப் பார்ட்டி நடைபெறும் இடத்திற்கு வந்தால் போதுமென்றும் கூறி அனுப்பிவிட்டு நண்பனைத் தேடிச் சென்றால், அங்கே அவனைக் காணவில்லை..!



அங்கு அமர்ந்திருந்த அவனின் உதவியாளர் கவின் அவன் முக்கிய வேலையாக வெளியே சென்றுள்ளதாக சொல்லவும், தனக்கிருந்த வேலைகளை கவனித்தான்...



தீரனின் நிலையைப் பற்றி அவனுக்கு எப்படித் தெரியும்?



அவன் தான் அந்த சந்திப்பு முடிந்ததும் அலுவலகத்தில் இருந்து வெளியேறி காரை நடுத்தெருவில் நிறுத்திவிட்டு ஸ்டீயரிங் வீலில் தலைசாய்த்துக் கொண்டிருந்தானே..!



சிறிது நேரம் தனிமையில் இருந்து யோசித்ததில் மகேந்திரனின் நிச்சயதார்த்தம் முடிந்ததும் சில மாதங்கள் சிங்கப்பூரில் தங்கிவிடும் முடிவிற்கு வந்தப்பின்னரே அவன் மனம் அமைதியடைந்தது...



ஆனால் அவனின் முடிவு இரவு நடந்த பார்ட்டிக்கு அடர்சிவப்பு நிற டிசைனர் புடவையில் ஒயிலாக கிளம்பிவந்த மதிவதனியைப் பார்க்கும் வரை மட்டுமே நீடித்தது..!



அந்த பார்ட்டி ஹாலில் ஒளிர்ந்த இளம்மஞ்சள் நிறத்திற்கும் அவள் கட்டியிருந்த புடவைக்கும் அவளிடமிருந்து தன் கண்களை எடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தான் தீரன்...



இதற்கிடையில் உணவுவேளை முடிந்ததும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஜோடியாக நடனமாடும் போட்டி ஒன்றை அறிவிக்க அவளிடம் வந்து தன் கரத்தை நீட்டிய மகேந்திரனைக் கண்டு தொண்டைக்குழியில் வந்து துடித்த அவனின் இதயம், அவள் அவனுக்கு மறுப்புக் கூறும் வரையில் நிலையின்றி தவித்தது..‌!



அவளின் மறுப்பில் பெரிதாக வருத்தப்படாத மகேந்திரன் அவனோடு ஆட வந்த வேறு ஒரு பெண்ணோடு இணைந்து கொண்டான்...



அங்கு பலர் ஜோடியாக ஆடினாலும் ஆபாசமான நடன அசைவுகளின்றி ரசிக்கக் கூடிய வகையில் தான் இருந்தது..!



ஆனால் ஏனோ அங்கு இருக்கப் பிடிக்காமல் வெளியேறி அந்த ஹோட்டல் வளாகத்திலேயே இருந்த அழகிய தோட்டத்திற்கு வந்த மதிவதனி, சிலுசிலுவென்று வீசிய மந்தமாருதக் காற்றை ஆழ்ந்து சுவாசித்தபடி நின்றுவிட்டாள்...



ஒரு முக்கிய விருந்தினரோடு பேசிக் கொண்டிருந்த தீரன்‌ அவளைக் காணாது, 'எங்கப் போயிருப்பா?..' என்றபடி கூட்டத்தில் தேடிவிட்டு அவனாகவே தோட்டத்திற்கு வந்திருந்தான்..!



பின்னிருந்துப் பார்க்கும்போது மயிலின் தோகையை நினைவுப்படுத்திய அவளின் கருங்கூந்தலையும், பின்னழகையும் ரசித்தபடியே அவளுக்கு அருகில் வந்து காதருகே குனிந்தவன், "உன்னோட முடி இன்னும் நீளமா இருந்துச்சே... ஹேர்கட் பண்ணிட்டியா?.." என்று வினவ,



எதிர்பாராமல் நிகழ்ந்த அவனின் வருகையும், அவளை ஏக வசனத்தில் கேள்விக் கேட்டதும் என்று ஒரே நேரத்தில் தாக்க நிலைத்தடுமாறிக் கீழே விழுகப் போனாள்...



சட்டென்று சுதாரித்து அவளிடையைப் பிடித்து நிறுத்திவிட்டு, கரங்களை எடுக்காது அவளின் நீள்விழிகளை ஆழ்ந்துப் பார்த்தான்...



கண்களால் தன்னைக் களவாட முயன்றவனின் அந்தப் பார்வையில் மின்சாரம் தாக்கியதைப் போல் அதிர்ந்து அவனிடமிருந்து விலகிய மதி, "சா.. சாரி சார்.. நான் வேணும்னே எதுவும் பண்.. பண்ணல..." என்றதோடு உள்ளே ஓடியிருந்தாள்...



"ஹேய் ஒரு நிமிஷம் நில்லு டி..." என்று தொடங்கிய அவனின் வார்த்தைகள் யாவும் காற்றில் கலந்திருந்தது..!



இங்கு உள்ளே நுழைந்து மகேந்திரனிற்கு அடுத்திருந்த இருக்கையில் அமர்ந்த மதிக்கு, பருவமடைந்த இத்தனை ஆண்டுகளில் எந்த ஆண்மகனும் தீண்டாத பாகத்தில் அவன் விரல்கள் பட்டதில் ஏதோ குறுகுறுத்தது..!



தனக்கு திருமணத்திற்குப் பேசியிருக்கும் ஆணின் அருகில் அமர்ந்து அவன் நண்பனின் தொடுகையைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கும் தன்னையே நொந்தபடி அண்ணனின் வருகைக்காகக் காத்திருந்தாள்...



மதியின் நிலைக்கு சற்றும் குறையாத படபடப்பில் நின்ற தீரன் அபர்ஜித்திற்கும் அவளிடையைத் தொட்டதில் சாப விமோசனம் பெற்றதைப் போன்று ஏதோதோ காட்சிகள் நிழற்படங்களாக சிந்தையில் எழுந்தன..!



அது தந்த தவிப்பைத் தாங்க முடியாதவனாக அங்கிருந்த ஒரு கல்இருக்கையில் பொத்தென்று அமர்ந்தவன், அவனுக்கும் மதிவதனிக்கும் இடையே நடந்த நிகழ்வுகளை வரிசையாக ஓட்டிப் பார்த்தான்...



முதல் நாளிலிருந்தே அவள் மேல் தேவையில்லாத வஞ்சம் வளர்த்து அவளை சந்தித்தபோதெல்லாம் அவமானப்படுத்தி வந்தவனுக்கு, பத்து நாட்களுக்கு முன்பாக அவள் கரம் பற்றியதிலிருந்து மனம் மாறியிருப்பது நன்றாகப் புரிந்தது...



ஆனால் அவளை மணந்து கொள்ள இவை மட்டும் போதுமென்று தோன்றவில்லை..!



"ப்ச் டேமிட்..! அவ மகேன் கல்யாணம் பண்ணிக்கப்போற பொண்ணுனு தெரிஞ்சும், எனக்கு ஏன் அவளப் பார்த்தா இப்படித் தப்புத்தப்பாத் தோணுது... நோ இது சரியில்ல... ஆ.. ஆனாலும்.." என்று நினைத்தவனின் கண்களில் விழுந்தான் தங்கையை அழைக்க வந்த அதியமான்...



"காலைல இவனோட தானே அவ வந்தா..! யார் இவன்?.." என்றவன் யோசித்தபோது வேகமாக வெளியே வந்த மதிவதனி, "வீட்டுக்குக் கிளம்பலாம் ண்ணா..." என்றபடி அவர்களின் ரெனால்ட் டஸ்டர் காரில் ஏறிக்கொண்டாள்...



"ஓ அ.. அண்ணனா..! ச்சு அவளத் தொட்டதுல இருந்து இந்த ஒரு வாரமா என்‌ மனசெல்லாம் வேற எங்கயோ போயிட்டு இருக்கு.. இ.. இது சரியா வராது..! எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் சிங்கப்பூருக்குப் போறது தான் எல்லாருக்கும் நல்லது.." என்று முடிவெடுத்த கையோடு அடுத்த வாரம் அங்கு செல்வதற்கான விமான பயணச்சீட்டையும் முன்பதிவு செய்துவிட்டே ஓய்ந்தான்...



பார்ட்டிக்கு வருகைப் புரிந்த விருந்தினர்கள் கிளம்பி சென்றதும் நண்பர்கள் இருவரும் தங்களின் உதவியாளர்களிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு தத்தமது வீடுகளுக்குத் திரும்பியிருந்தனர்..!



நீண்ட நேரமாக மேகங்களுக்குள் ஒளிந்து மறைந்து விளையாடிக் கொண்டிருந்த முழு நிலவை ரசித்தபடி நின்ற தீரனிற்கு கண்கள் சொக்கவும் அறைக்குள் நுழைந்தவன், பல லட்சங்களை விழுங்கிய அந்த பஞ்சுமெத்தையில் விழுந்து கண்களை மூடிக் கொண்டான்...



சில நிமிடங்களில் ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றவனை அன்று மதிவதனியின் கனவில் தோன்றிய அதே முன்ஜென்ம ஞாபகங்கள் வந்து ஆட்கொண்டது..!



ஆனால் மதிவதனிக்கு அவள் தமையனின் இறப்போடு நின்றுபோன ஞாபகம் தீரனிற்கு அதற்குப் பின்னரும் தொடர்ந்தது...!!!




தொடரும்......
 
Top Bottom