• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மன்னிப்பாயா காதலே - 13

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம் 13

மயூரன் காரணமாக இருப்பானோ என்கிற கேள்வியை எழுப்பியது பிரேமாதான். இருந்தாலும் அவன்தான் என்று உறுதியானபோது அவருக்கே அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அதுவும் மகனின் கைப்பேசியைக் கூட எடுத்து மறைத்து வைத்து, கடிதங்களைக் கிழித்தெறிந்திருக்கிறான் என்றால் இது எத்தனை பெரிய துரோகம்? இதனால்தான் சாரதா வந்து இந்தப் பேச்சையே எடுத்தாரா?

இத்தனை காலமும் நட்பாகவும் உறவாகவும் எண்ணி வாழ்ந்தவர்களின் இன்னொரு முகம் பிரேமாவைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அதைவிட அந்தச் சின்ன பெண் அந்த நாள்களில் என்ன பாடெல்லாம் பட்டிருப்பாள்? இன்றுவரை இன்னொரு வாழ்வினுள் நுழைய முடியாமல் அல்லாடுகிறாள் என்றால் அவள் மனத்தில் அவர் மகன் மீதான நேசமும் பாசமும் எத்தனை ஆழமானதாக இருந்திருக்கும்?

ஏனோ அவரைக் கணவர் விட்டுவிட்டுப் போனதும், அந்த நாள்களில் வெளியில் சொல்லாமல் அவர் அழுத அழுகைகளும் நினைவில் வந்துபோயின. அன்றைய நாள்களில் தகப்பனாரும் தமையனாரும் இன்னொரு திருமணத்திற்கு எவ்வளவோ வற்புறுத்தியும் அவர் சம்மதிக்கவில்லை.

அவர் கணவருக்கு அவரைப் பிடிக்குமோ இல்லையோ அவருக்குத் தெரியாது. அவருக்கு அவர் கணவரை மிகவுமே பிடிக்கும். அந்தப் பிடிப்புத்தான் இன்றுவரையில் ஒற்றை மனுசியாக அவரை நிறுத்திவிட்டிருப்பது.

அவரைப் போலவே அவளும் இருந்துவிடுவாளோ என்று நினைத்த மாத்திரத்தில் கண்ணீர் கொட்டிற்று. அவராவது கொஞ்சக் காலமேனும் வாழ்ந்தார். ஒரு பிடிப்பிற்கு மகன் இருந்தான். ஒரு சில கெடுபிடிகள் இருந்தாலும் பாதுகாப்பாக வாழ அவருக்கென்று ஒரு குடும்பம் இருந்தது.

அவளுக்கு இதில் எதுவுமே இல்லையே.

அறைக்குள் அமர்ந்திருந்த கேசிகனின் நிலையும் மகா மோசமாகத்தான் இருந்தது. அவன் கையில் அவள் கொடுத்த ஃபிரேமும், அவன் தொலைந்துவிட்டதாக எண்ணியிருந்த பழைய கைப்பேசியும்.

எந்த முகத்தை வைத்துக்கொண்டு நேரில் வந்து தருவது என்று எண்ணியாக்கும் முகிலன் மூலம் கொடுத்துவிட்டிருந்தான் மயூரன்.

ஃபிரேமைத்தான் முதலில் பிரித்தான். பிரித்தவன் பிரமித்துப் போனான். அதை எப்போது வரைந்தான் என்று அவனுக்கு நினைவே இல்லை. ஒவ்வொரு பெட்டிகளின் உள்ளும் பெரிய அறை, சின்ன அறை, கிட்சன், விறாந்தை என்று குறித்திருந்ததைப் பார்க்க பார்க்க கண்ணீர் அரும்பிற்று.

அவன் தூக்கிப்போட்ட ஒன்றை அங்குவரை பொக்கிசமாகச் சுமந்து சென்று, புதையலாகப் பாதுகாத்து எடுத்துக்கொண்டு வந்திருக்கிறாள். அப்படியானவளைப் போய் என்னவெல்லாமோ நினைத்து வெறுத்து ஒதுக்கினான்?

அங்கே ஒரு துண்டில் கவிதை எழுதிச் செருகியிருந்தாள். விரல்கள் இலேசாக நடுங்க எடுத்துப் பிரித்தான்.

ஓடிக்கொண்டேயிருக்கும் அருவியைப் போல்
சுழன்றுகொண்டேயிருக்கும் காலத்தைப் போல்
வாழ்க்கையும் வாழ்வதற்கே!
கருத்தொருமித்த காதல் வாழ்க்கை
காலம் முழுக்க அமைய
உங்கள் இருவருக்கும்
என் மனம் நிறைந்த வாழ்த்துகள் என்று எழுதி, நாவினி நாகரத்தினம் என்று கையொப்பமிட்டிருந்தாள்.

அந்த நாவினி நாகரத்தினத்தைத் தன்னை மீறி வருடினான் கேசிகன்.

தன்னை முழுமையாக அவனிலிருந்து பிரித்து, மறைமுகமாக நாகரத்தினத்தின் மகளாக அவனிடம் காட்ட முயன்றிருக்கிறாள். சந்தோசமாக இரு, இடையூறாக வரமாட்டேன் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறாள்.

இப்படியான ஒருத்திக்குத்தான் காலத்தோடு சேர்ந்து அவனும் பெரும் அநீதியை இழைத்துவிட்டான்.

இப்போது அவனுக்குத் தன் கைப்பேசியை இயக்கிப் பார்ப்பதை நினைக்கவே நெஞ்சு உலர்ந்துபோனது.

இத்தனை வருடங்களும் மின்னேற்றி வைத்திருந்ததால் சிம்மும் கைப்பேசியும் இன்னுமே பயன்படுத்தும் நிலையில்தான் இருந்தன. கைகளும் நெஞ்சும் நடுங்க உள்ளே சென்று பார்த்தான். கடைசியாக வந்திருந்த அழைப்புகள் அத்தனையும் அவளிடமிருந்துதான் வந்திருந்தன. போதாக்குறைக்குப் பல குறுந்தகவல்கள்.

‘கேசி, இதுதான் என்ர நம்பர். ஃபோன் பண்ணாதீங்க. மெசேஜ் மட்டும் அனுப்புங்க.’ இதுதான் அவள் அனுப்பியிருந்த முதல் குறுந்தகவல்.

‘அது அம்மா தனக்குச் சொல்லாம எதுவும் செய்யக் கூடாது எண்டு சொல்லியிருக்கிறா. நாளைக்கு ஒரு கெட்ட பெயர் வந்திட்டா, பெத்த பிள்ளையா இருந்தா இப்பிடி விட்டிருப்பாளா எண்டு ஊர்ச்சனம் சொல்லிப்போடும் எண்டு பயப்பிடுறா. அதுவும் சரிதானே. அப்பவே மாமாக்கள் என்ன கதைச்சவே எண்டு உங்களுக்கும் தெரியும்தானே.’ இது அடுத்தது.

‘ஆனாலும் என்னால அப்பிடி இருக்கேலாம இருக்கு. நீங்களும் என்ர ஒரு கடிதத்துக்கும் பதில் போடுறீங்களே இல்ல. மயூரன் அண்ணாக்கும் என்ன நடந்தது எண்டு கேட்டு எழுதினானான். அவரும் ஒரு பதிலும் சொல்லேல்ல.’

எத்தனை தூரத்துக்கு அவர்கள் இருவரையும் நம்பி இருந்தால் இப்படி எழுதியிருப்பாள்?

‘எப்பிடி இருக்கிறீங்க? உங்கட கடிதம் ஒண்டும் வரவே இல்லையே. ஏன் கேசி? அங்க எல்லாரும் சுகம்தானே? ஃபோன் பண்ணினாலும் எடுக்கிறீங்களே இல்ல. எனக்குப் பயமா இருக்கு. நல்லாருக்கிறன் எண்டாவது ஒரு மெசேஜ் போடுங்க ப்ளீஸ்.’

‘கேசி?’

‘ஏன் இப்பிடி ஒண்டுமே சொல்லாம இருக்கிறீங்க?’

‘அம்மா சொன்னதையும் மீறி உங்களுக்கு எத்தினையோ தரம் எடுத்திட்டன் கேசி. ப்ளீஸ் ஆன்சர் பண்ணுங்க. என்னால இஞ்ச நிம்மதியா இருக்கேலாம இருக்கு. இப்பிடி நீங்க சத்தமே இல்லாம இருக்கிறதப் பாக்கப் பயமா இருக்கு.’

‘என்னைப் பிடிக்கேல்லையா? ஓம் எண்டால் அதக் கூடச் சொல்லிப்போட்டு விலகுங்கோ கேசி. இப்பிடிக் கதைக்காம இருந்து வதைக்காதீங்க.’

‘நான் ஏதாவது பிழை செய்திட்டனா? அந்தக் கோவமா? அப்பிடி என்ன செய்தனான் எண்டாவது சொல்லுங்கோவன்.’

‘நீங்க இப்பிடி நடப்பீங்க எண்டு எதிர்பாக்கவே இல்ல.’

‘ப்ளீஸ் கேசி, கதையுங்கோ என்னோட.’

‘உங்கட வீட்டு ஆக்களோட அம்மா கதைச்சவாவாம், நீங்க நல்லாருக்கிறீங்களாம் எண்டு அம்மா சொன்னா. பிறகும் ஏன் ஒரு கடிதம் கூடப் போடுறீங்க இல்ல?’

‘இன்னும் என்ன கேக்கிறது எண்டு எனக்கு விளங்கவே இல்லை.’

‘என்னைப் பிடிக்கேல்லையா உங்களுக்கு?’

“நான் வேணாமா?’

‘இல்ல, நான் நினைச்சது எதுவும் உண்மை இல்லையா?’

‘ப்ளீஸ் கேசி, ஒரு மெசேஜாவது போடுங்க ப்ளீஸ்!’

‘மயூரன் அண்ணாட்ட இருந்து கடிதம் வந்தது கேசி. எவ்வளவு ஆசையா பிரிச்சனான் தெரியுமா. ஆனா அவர், என்ர எதிர்காலத்தை இஞ்ச பாக்கட்டாம். அவர் டுபாய் போறாராம். இதுக்கு என்ன அர்த்தம் கேசி?’

‘பழகினது நானும் நீங்களும். இப்ப இன்னொருத்தர வச்சு எனக்கான பதிலச் சொல்லுறீங்களா?’

‘இல்ல… பழகவே இல்லையா நாங்க?’

‘நான் பெருமையா பாத்து வளந்த ஒருத்தர், எனக்கு எல்லாமா இருப்பார் எண்டு நினைச்ச ஒருத்தர் இப்பிடி நடப்பார் எண்டு கனவில கூட நினைக்கேல்ல.’

‘ஏன் கேசி இவ்வளவு பெரிய மௌனம்? உங்கட பெட்டச்சிய மறந்திட்டீங்களா? என்னட்டயே வந்திடோணும் எண்டு சொன்னீங்க?’

‘கேசி?’

‘அப்பம்மா மோசம் போய்ட்டா கேசி. அப்பா என்னையும் கூட்டிக்கொண்டு வாறார். உங்களப் பாக்க வருவன். அப்பயாவது கதைங்க ப்ளீஸ். நீங்க என்ன முடிவில இருக்கிறீங்க எண்டாவது சொல்லுங்க.’

அதுதான் அவள் கடைசியாக அவனுக்கு அனுப்பிய குறுந்தகவல். அதன் பிறகு அழைக்கவும் இல்லை, எதுவும் அனுப்பவும் இல்லை. அதுதான் நேரிலேயே வந்து பார்த்துவிட்டாளே! அவன் முடிவு என்ன என்று அவனும் வாயால் சொல்லாமல் காட்சியாகக் காட்டியிருந்தானே.

வாயைக் குவித்து நெஞ்சின் அழுத்தத்தைக் காற்றாக வெளியேற்றியபடி நிமிர்ந்தபோதுதான் இவ்வளவு நேரமாகத் தான் அழுதிருக்கிறோம் என்பதே அவனுக்குத் தெரிந்தது.

இங்கு வந்து அவனைப் பார்க்கிற நொடி வரையில் அவள் அவனை மறக்கவேயில்லை. அவன்தான்… அவன்தான் அவனையே நம்பியிருந்த பெண்ணைக் கைவிட்டுவிட்டான். இரண்டு கைகளாலும் முகத்தைப் பொத்திக்கொண்டவனின் உடல் சத்தமில்லாத அழுகையில் குலுங்கிற்று. ஐயோ ஐயோ என்று உள்ளத்தில் பெரும் இரைச்சல்.

“தம்பி!” அன்னையின் குரல் வாசலில் கேட்கவும் கண்களைத் துடைத்துக்கொண்டு திரும்பிப் பார்த்தான்.

மகனின் அழுத விழிகளைக் கண்டு பிரேமா துணுக்குற்றுப் போனார். “என்னய்யா?” என்றுகொண்டு உள்ளே விரைந்து வந்தார்.

ஒன்றுமில்லை என்று தலையை அசைத்துவிட்டு, “போன முறை இஞ்ச வந்து என்னைப் பாக்கிற வரைக்கும் அவள் என்னை மறக்கவே இல்ல அம்மா.” என்றான் அவரைப் பாராமல்.

அவர் ஊகித்ததுதானே. என்றாலும் சின்னதாகவேனும் அவனைக் குற்றம் சாட்டாமல், வெறுத்து ஒதுக்காமல், சுடு சொற்களை வீசாமல் இந்த முறை கூட அவர்களின் வீடு வரை வந்தாளே. உண்டு, குடித்து மகிழ்ந்துவிட்டுப் போனாளே.

நிறைமொழியும் அவனுமாக இருக்கும் புகைப்படங்களைப் பார்த்துவிட்டுப் பொருத்தமான சோடி என்று பாராட்டு வேறு. சட்டென்று துளிர்த்துவிட்ட கண்ணீருடன் மகன் தலையைக் கோதிவிட்டார் பிரேமா.

ஆதரவுக்குத் தவிக்கும் குழந்தையாக அவர் முகம் பார்த்தவனை நோக்கி, “நடந்துகள மாத்திற சக்தி எங்களுக்கு இல்லையப்பு. ஆனா செய்த பிழைகளை முடிஞ்சவரைக்கும் நேராக்கலாம். அதுக்கு என்ன செய்யலாம் எண்டு யோசி.” என்று அவனுக்கு எடுத்துச் சொன்னார்.

கசப்புடன் எழுந்து ஆழ்ந்த மூச்சுகளாக இழுத்துவிட்டான் கேசிகன். இவனாக நேரில் சென்று அனுப்பிய ஒன்றிரண்டு கடிதங்களையும் அபிராமி அவள் கை சேரவிடாமல் செய்திருக்க வேண்டும். இல்லாமல் அவனது புதுக் கைப்பேசி இலக்கம் அவளுக்குத் தெரியவராமல் இருக்கச் சாத்தியமே இல்லை.

பழைய கைப்பேசி இலக்கத்துக்கு அந்த மூன்று வருடங்களும் விடாமல் அழைத்து, குறுந்தகவல் அனுப்பியவள் புதிது கிடைத்திருந்தால் சும்மா விட்டிருப்பாளா?

அன்னை சொன்னது போன்று அவரைக் கொண்டு அபிராமியுடன் பேசியிருக்க வேண்டுமோ? ஆனால், அன்றைய கேசிகனுக்கு இன்றைய முதிர்ச்சியும் பக்குவமும் இல்லையே. அவன் அவநம்பிக்கைகளாலும் சுயபச்சாதாபத்தாலும் மூழ்கடிக்கப்பட்டிருந்தானே.

மயூரன் மூலம் அனைத்தும் கேசிகனுக்குத் தெரிந்துவிட்டதை அறிந்த சாரதாவுக்கு அவர்கள் இருவரையும் எதிர்கொள்ளவே தயக்கமாக இருந்தது. பிரேமா அன்போடு அரவணைத்துப் போகிறவர் என்றால், மாமி என்பதற்கு அடுத்த சொல் சொல்லாத அன்பான மருமகனாயிற்றே கேசிகன். நெஞ்சு அடித்துக்கொண்டாலும், தயக்கம் இழுத்துப்பிடித்தாலும் வந்து பிரேமாவிடம் மன்னிப்பைக் கேட்டார்.

பிரேமாவின் மனத்தில் அவர் மீதும், அவர் மகன் மீதும் மிகுந்த வெறுப்பு. மொழியின் அன்னை என்பதனால் மட்டுமே அவரை வீட்டுக்குள் எடுத்தார். பேரனும் இருக்கிறானே. இல்லையா நிச்சயமாகக் கடுமையாக எதையாவது சொல்லித் துரத்தியடித்திருப்பார்.

“பிரேமாக்கா, சத்தியமா முதல் எனக்கு எதுவும் தெரியாது. பேரன் வயித்தில இருக்கேக்கதான் தெரியும். முடிஞ்சதப் பேசி நல்லா வாழுற குடும்பத்தைக் கெடுக்க வேணாம் எண்டுதான் சொல்லேல்ல. ஆனாலும் நாங்க செய்தது பிழை எண்டு தெரிஞ்சபடியாத்தான் நானாவே வந்து நாவினியைப் பற்றிச் சொன்னனான்.”

சொன்னால் செய்தவை இல்லை என்று ஆகிவிடுமா?

“எனக்கு என்ன சொல்லுறது எண்டே தெரியேல்ல சாரதா. ஆத்திரம் ஆத்திரமா வருது. ஆனா வார்த்தைகளை விட்டுச் சண்டை சச்சரவுகள் வர வேண்டாம் எண்டு பாக்கிறன். அதுவும் அந்தப் பிள்ளை… மயூரனிட்ட இத நான் கொஞ்சமும் எதிர்பாக்கேல்ல. ஆனா நாங்க ஆரை நம்புறோமோ அவேதானே துரோகம் செய்வினம் என்ன?” என்றதும் சாரதாவுக்கு முகம் கன்றிச் சிவந்து போயிற்று.

“அது தங்கச்சியாருக்கு மருமகனைப் பிடிக்கும் எண்டு…” பிரேமா பார்த்த பார்வையில் சாரதாவின் வாய் பூட்டிக்கொண்டது.

“பிழை எண்டு எனக்கும் தெரியும் அக்கா. மயூரனைப் பேசினனான்தான். அவா வெளிநாடு போய்ட்டா, நல்லாருப்பா எண்டு நினைச்சவனாம்.”

இதையெல்லாம் எந்த வகையில் நியாயம் என்று எண்ணிச் சொல்கிறார்கள் என்று பிரேமாவுக்குப் புரியவே இல்லை. அதுவும் கைப்பேசியை எல்லாம் எடுத்து மறைத்து வைத்துவிட்டு இத்தனை காலமும் இவர்களோடு பழகுவதற்கு எவ்வளவு தைரியம் இருந்திருக்க வேண்டும்?

செய்தது அப்பட்டமான துரோகம். அதற்கு அவர்கள் என்ன விளக்கம் சொன்னாலும் அது இல்லை என்று ஆகப்போவதில்லை. அதே போல் என்றைக்குமே அவர்கள் மீது நல்லபிப்பிராயம் தனக்கு வரும் என்கிற நம்பிக்கையும் பிரேமாவுக்கு இல்லை.

“மொழிக்கு இதெல்லாம் தெரியுமா?” என்றார் அவரையே நேராகப் பார்த்து.

“ஐயோ! கடவுள் சத்தியமா இல்ல. இந்த நிறைஞ்ச வீட்டில இருந்து சொல்லுறன், மொழிக்குத் தெரியாது.” பதறிப்போய்ச் சொன்னார் சாரதா.

அவ்வளவு நேரமாக அறைக்குள் நெஞ்சடைக்க அமர்ந்திருந்த கேசிகன் அப்போதுதான் மூச்சை இழுத்துவிட்டான்.
 

Kalai Karthi

Active member
கேசி இப்போது பீல் பண்ணி என்ன செய்ய?. சாரதா மயூரன் இரண்டு பேருக்கும் மொழி இருந்தால் பேசியிருக்கமாட்டாங்க சுயநலவாதிகள்.
 
ம்ம்ம்!!! என்ன செய்ய? எங்கட நவி இனி யாரைக் கட்டினாலும் சந்தோஷமாக இருப்பாளா? தெரியாது பின்ன என்ன ஹீரோயின் Army நம்ம கேசியை மன்னித்து பெரிய மனுசர்களாகி அவனுக்கு ஒரு வாழ்க்கை கொடுப்போம் என்ன?
 

Chitra ganesan

Active member
மொழி பொய்த்துவிடக்கூடாதுன்னு நினைக்கிறான் கேசி ஆனா ஈஸியா நாவினியை குற்றம் சொல்லிட்டான் ஈனப்பிறவி கேசி😡
 

aymaan

New member
ம்ம்ம்!!! என்ன செய்ய? எங்கட நவி இனி யாரைக் கட்டினாலும் சந்தோஷமாக இருப்பாளா? தெரியாது பின்ன என்ன ஹீரோயின் Army நம்ம கேசியை மன்னித்து பெரிய மனுசர்களாகி அவனுக்கு ஒரு வாழ்க்கை கொடுப்போம் என்ன?
At the end idhu daan nadaka poguthu sis, irundaalum oru nerudal adhuvum namakku daan Naavini happy ya daan avanoda serva,😔
 
Top Bottom