• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மன்னிப்பாயா காதலே - 18

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம் 18


கேசிகன் காட்டும் அவசியமே இல்லாமல், அவர்களின் சுப்பர் மார்க்கெட் தூரத்தில் தெரிய ஆரம்பித்ததுமே, “நவி அன்ட்ரி, அங்க பாருங்கோ. அதுதான் எங்கட சுப்பர் மார்க்கெட். நாங்க யாழ்ப்பாணத்திலயும் ஒண்டு திறக்கப் போறம். அது இவ்வளவு பெருசு.” என்று தகப்பனின் முன்னிருந்தபடியே தன் கைகள் இரண்டையும் தன்னால் முடிந்தவரையில் விரித்துக் காட்டிச் சொன்னான் சஜிதன்.

கேசிகன் முகத்தில் விரிந்த முறுவல். அந்த முறுவலோடே ‘மொழி சுப்பர் மார்கெட்’ முன்னே கொண்டுபோய் பைக்கை நிறுத்தினான்.

“இறங்கு, நான் சொல்லவே தேவையில்லாம பெரிய மனுசன் சொல்லிட்டார். இதான் எங்கட கடை.” என்றபடி தம் இருவடைய ஹெல்மெட்டுகளையும் கழற்றி சீட்டினுள் வைத்துவிட்டு, அவளுடையதற்காகத் திரும்பினான்.

அதற்குள் வேகமாகத் தன்னுடையைதைக் கழற்றிக் கையில் வைத்திருந்தாள் அவள். ‘அவ்வளவு வேகம்’ என்பதுபோல் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு அதைக் கையுடன் எடுத்துக்கொண்டு அவளையும் அழைத்துக்கொண்டு நடந்தான்.

உள்ளே செல்ல முதல் அண்ணாந்து பார்த்தாள் நாவினி. கடையின் பெயர் மொழி என்று இருப்பதால் பார்க்கிறாளோ என்று தயங்கி, “அது அப்ப…” என்று ஆரம்பித்தவன், “‘ழி’ல வாற சுழில இங்கிலிஷ் எழுத்து கே மறைஞ்சு கிடக்கு என்ன?” என்று அவள் சொல்லவும் அதிர்ந்து நின்றுவிட்டான்.

இது அவனே ஆசையாசையாக வடிவமைத்தது. ‘இதில ஒண்டு மறைஞ்சிருக்கு. என்ன எண்டு சொல்லு பாப்பம்?’ என்று இவன் கேட்டும், நிறைமொழி கடைசிவரையிலும் கண்டுபிடிக்கவே இல்லை. அதில் இவனுக்குச் சின்ன மனச்சிணுக்கமும் அந்த நாள்களில் வந்திருந்தது. ஆனால் இன்று, அவன் சொல்லாமலேயே இவள் கண்டுபிடித்திருந்தாள்.

“நவி…”

“இல்ல, பாத்ததும் அதுதான் கண்ணில பட்டது. அதான்.” என்று இலகுவாகச் சொல்லிவிட்டு நடந்தாள். ஆனால், உள்ளே ஒரு வலி. எந்தளவில் நேசித்து வாழ்ந்திருந்தால் இந்தளவில் யோசித்து நடந்திருப்பான்?

அவளிடமிருந்து தகவல் எதுவும் இல்லை என்றதும் காத்து காத்து இருந்தவன் ஒரு கட்டத்தில் தன் காத்திருப்பின் காலத்தை முடித்துக்கொண்டு, வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறான் என்று புரிந்தாலும், என்னை அவனால் தவறாக நினைக்க முடிந்திருக்கிறதே என்கிற எண்ணம் அவள் மென் இதயத்தைக் கசக்கிப் பிழிந்தது.

அவனுடைய ‘பெட்டச்சி’ அப்படி நடப்பாளா என்று கூடவா யோசிக்கவில்லை. அவளுக்கு அந்தச் சந்தேகம் வரவேயில்லையே. காத்திருப்பேன் என்று சொன்னவன் காத்துக்கொண்டே இருப்பான் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையோடு வாழ்ந்தாளே.

“நவி!” என்றவனின் அழுத்தமான அழைப்பில்தான் புறவுலகில் கவனமில்லாது கடைக்குள் நடந்துகொண்டிருந்தவள் சட்டென்று நின்று திரும்பிப் பார்த்தாள். அந்த விழிகளில் தெரிந்த அலைப்புறுதலில் கேசிகனுக்கு ஒரு நொடி சுவாசிக்க இயலாமல் போயிற்று.

“என்ன?” என்றான் தன்னை மீறி.

“என்ன என்ன?” என்றாள் தன்னைச் சமாளித்துக்கொண்டு. அப்போதுதான் அவன் அருகில் இன்னொருவர் நிற்பது கண்டு, கேள்வியோடு அவனை ஏறிட்டாள்.

“இவர்தான் நான் இல்லாத நேரத்தில கடையப் பொறுப்பா பாக்கிறவர். உனக்கு அறிமுகப்படுத்தக் கூப்பிட்டனான்.” என்றான் அவனும் அவர் முன்னே எதையும் காட்டிக்கொள்ளாது.

அவரோடு இன்முகமாக இரண்டு வார்த்தை பேசினாள். அவர் அகன்றதும் அவன் பார்வை தன் மீது கேள்வியுடன் படிவது தெரிந்தாலும் காட்டிக்கொள்ளாமல் கடையைப் பார்வையால் அலசினாள்.

அளவான கடை. வரும் வழியில், ‘இது சின்ன கடைதான்’ என்று அவன் சொன்னதுபோல் அல்லாமல் அடக்கமான, அனைத்துப் பொருள்களும் கிடைக்கக்கூடிய வகையில் மென் பச்சையும் வெள்ளையும் தீமாகக் கொண்டு கடை முழுவதையும் அமைத்திருந்தான்.

கடையின் நேர்த்தியும் சிறு துரும்பு தூசு கூட இல்லாத துப்பரவும்தான் பளிச்சென்று முதல் பார்வையிலேயே பட்டது. அதைப் போலவே மொழி என்று எழுதப்பட்ட மென் பச்சையும் வெள்ளையும் சேர்ந்த டீ ஷேர்ட் அணிந்து பணிபுரிந்தவர்களும் மலர்ந்த முகத்துடன் எல்லோரையும் கவனித்துக்கொண்டிருந்தனர்.

உண்மையைச் சொல்லப்போனால் அவளுக்கு விடவும் சஜிதனுக்குத்தான் அங்கு ராஜ மரியாதை நடந்தது. அவன் வேறு, “நாங்க பிள்ளையாரப்பாட்டப் போய், கலியாணம் செய்து நவி அன்ட்ரிய எங்களோடயே கூட்டிக்கொண்டு வந்திட்டம் தெரியுமா?” என்று அங்குப் பணிபுரிகிறவர்களிடம் கதைகள் சொன்னான்.

எல்லோர் முகத்திலும் முறுவல். “இந்தப் பெரிய மனுசனை விட்டா வீட்டு விசயம் எல்லாத்தையும் போஸ்ட்டர் அடிச்சு ஒட்டுவான்.” என்று அவனைத் தூக்கிக்கொண்டு அலுவலக அறைக்கு அவளை அழைத்துச் சென்றான் கேசிகன்.

அது ஏசி போடப்பட்ட அறை. அங்கே இருந்த மேசையில் நிறைமொழியின் புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது. தகப்பனின் இருக்கையில் ஏறி, மேசையில் கையை ஊன்றி அதை எட்டி எடுத்து, “அம்மா!” என்று முத்தமிட்டுவிட்டுத் தகப்பனிடமும் நீட்டினான் சஜிதன்.

செய்வது அறியாது திகைத்த கேசிகன் நாவினியைத் திரும்பிப் பார்த்தான். இதை நாவினியும் எதிர்பார்க்கவில்லை. எப்படி வினையாற்றுவது என்று தெரியாது திகைத்தாள். அந்தப் புகைப்படத்தைக் கண்டதும் அவன் முகத்தில் அப்பிக்கொண்ட சோகத்தையும், விழிகளில் தெரிந்த அலைப்புறுதலையும் கண்டு மிக ஆழமாக அடிவாங்கினாள்.

இது ஒன்றும் அவள் அறியா உண்மை இல்லையே. அந்தப் பெண்ணோடு வாழ்ந்து, அதன் சாட்சியாக மகனையே கையில் வைத்திருக்கிறவன், புகைப்படத்துக்குக் கொடுக்கப்போகிற ஒரு இதழ் ஒற்றுதலில் என்ன நடந்துவிடப் போகிறது?

ஒன்றுமேயில்லை. ஒன்றுமே இல்லை!

தன் துயரைத் தொண்டைக் குழியால் விழுங்கிவிட்டு, “அவர் குழந்தை. எந்த வழக்கத்தையும் மாத்த வேண்டாம்.” என்று அவனைப் பாராமல் சொல்லிவிட்டு வேறுபுறம் திரும்பிக்கொண்டாள்.

கேசிகனின் உள்ளமும் துடித்தது. அங்கே புகைப்படத்தில் புன்னகைத்துக்கொண்டிருந்தவளைப் பார்த்தான். அவளுக்காக அழுவானா, இங்கே முகம் திருப்பி நிற்கிறவளைப் பார்ப்பானா?

மகன் வேறு பார்த்துக்கொண்டிருக்கிறானே. எப்போதுமே நிறைமொழிக்கு நேரிலேயே கொடுக்கிறவன் போன்று தன் உதடுகளை அழுத்தி எடுக்கிறவன் இன்று மகனுக்காக ஃபிரேமின் விளிம்பில் ஒற்றி எடுத்துவிட்டு அதை மேசையில் கவிழ்த்து வைத்தான்.

அவன் மகன் விட வேண்டுமே. “அப்பா, அப்பிடி வைக்கிறேல்ல. அம்மா எங்களைப் பாக்கிற மாதிரி வைக்கோணும்.” என்றபடி நிமிர்த்தி வைத்தான்.

கேசிகனுக்கு மிகவும் தர்மசங்கடமான நிலை. “என்ன குடிக்கத் தர? ஐஸ்…” சூழ்நிலையைச் சீராக்கவேண்டி குரலைச் செருமிக்கொண்டு வினவினான்.

அவளுக்குத்தான் உள்ளம் போதும் போதும் என்கிற அளவில் குளிர்ந்து கிடக்கிறதே. “சஜுக்குட்டிக்கு என்ன வேணும்?” என்று சின்னவனிடம் வினவினாள்.

“ஐஸ் ஐஸ் ஐஸ்!” என்று தகப்பனின் இருக்கையில் நின்று குதித்தான் அவன்.

“இப்பிடிக் குதிக்கக் கூடாது செல்லம்.” என்று அவனிடம் பேச்சுக் கொடுத்து அவள் தன்னைச் சமாளிக்க முயல, அவனும் தன்னை நிலைப்படுத்த எண்ணி வெளியே சென்றான்.

திரும்பி வரும்போது இருவருக்குமான ஐஸ் அவன் இரு கைகளிலும் இருந்தது.

“உங்களுக்கு?” நாவினியும் சமாளித்து வினவினாள்.

“நான் சோடா ஏதும் குடிக்கிறன். ஒரு பத்து நிமிசம் இரு. அதுக்குப் பிறகு வந்து கடையச் சுத்திக் காட்டுறன்.”

“இல்ல பிரச்சினை இல்ல. நீங்க வேலையப் பாருங்க.”

ஒரு நொடி அவளைப் பார்வையால் அளந்துவிட்டுப் போனான் அவன்.

அதுவரையில் அவன் தந்த ஐஸிலேயே கவனமாக இருந்தவள் பார்வை, அவன் போனதும் நிறைமொழியிடம் ஓடிற்று. இவளுக்கு அவள் ‘மொழி அக்கா’. அமைதியானவள். கூடவே அன்பானவள். இன்று யோசித்துப் பார்க்கையில் அவளும் இவனை நேசித்திருக்க வேண்டும் என்று தோன்றிற்று.

அந்த நாள்களில் இவளைக் கூப்பிட்டுப் பேச்சுக் கொடுத்துக்கொண்டே இவளின் கேசி அண்ணாவைப் பற்றியும் விசாரித்திருக்கிறாள். அன்று இந்தளவு தெளிவு இல்லாதவளும் அவனைப் பற்றிச் சகலதும் சொல்லியிருக்கிறாள்.

நல்ல காலம், தன் காதலில் தோற்று, இவளைப் போன்று உடலிலிருந்து உயிரை உருவி எடுப்பது போன்ற வலிகளை எல்லாம் அவள் அனுபவிக்கவில்லை. ஆசைப்பட்டவனையே மணந்து, ஆசைப்பட்டது போலவே வாழ்ந்துவிட்டுப் போயிருக்கிறாள்.

இல்லாமல் ஒரு புகைப்படமே ஒருவனின் மனத்தையும் முகத்தையும் கசக்கும் வல்லமை கொண்டதாக இருக்குமா என்ன?

அதேயளவு பாதிப்பை அவள் அவனுள் நிகழ்த்தியிருக்கவில்லை. அப்படி இருந்திருந்தால் அவள் பற்றிய தகவல் எதுவும் இல்லை என்றதும் அடுத்து என்று போயிருப்பானா? தான் எதிலோ தோற்றுவிட்ட உணர்வு அடிபட்ட புறாவாக அவள் இதயத்தைத் துடிக்க வைத்தது.

அங்கே இருந்த சிசிடிவிகளில் அவன் ஏதோ லிஸ்ட்டுகள் சரி பார்ப்பதும், பணியாளர்களுடன் என்னவோ பேசுவதும், சில கைப்பேசி அழைப்புகளை மேற்கொள்வதும் தெரிந்தது.

காலம் அவனைப் பொறுப்பும் முதிர்ச்சியும் மிக்கவனாக மாற்றியிருந்தது. அப்போதும் அப்படித்தான். என்றாலும் இன்றைய அவனிடத்தில் தோற்றத்தில் மட்டுமல்லாது குணாதிசயத்திலும் நிறைய மாற்றங்கள். முன்னர் போன்ற இலகுவான பாவம், விளையாட்டுக் குணங்கள் எல்லாமே காணாமல் போயிருந்தன. சஜிதனோடான பொழுதுகள் மட்டுமே முகம் நிறைந்த சிரிப்பைக் காணலாம்.

பத்து நிமிடங்கள் என்றவன் அரை மணி நேரம் சென்றுதான் வந்தான். “கடை பாப்பம் வா!”

“இல்ல, உங்களுக்கு இன்னும் வேலைகள் இருக்குப் போலயே. நீங்க பாருங்கோ. நான் சஜுவோட கடையப் பாக்கிறன்.” சற்று முன்னர் நடந்தவை அவனை நிறைமொழியின் கணவனாகக் காட்டிவிட நாசுக்காக அவனைத் தவிர்த்தாள்.

அவன் பார்வை அவளில் கூர்மையோடு படிவது தெரிந்தாலும் அவன் புறம் பார்வையைத் திருப்பவில்லை அவள்.

அவளைக் காப்பாற்றுகிறவனாக, “நவி அன்ட்ரிக்கு நானே சுத்திக் காட்டுறன். ஆனா, கடைக்க ஓடித் திரிஞ்சு எதையும் தட்டிக் கொட்டக் கூடாது சரியோ?” என்று அவள் கரம் பற்றி அழைத்துக்கொண்டு நடந்தான் அவன் மகன்.

போகவா என்பதுபோல் திரும்பி இவனைப் பார்த்துக்கொண்டே அவள் அவனோடு இழுபட்டாள். ஏதோ ஒரு வகையில் அதற்கு முந்தைய அவள் பேச்சை அவளின் அந்தப் பார்வை ஈடுகட்டிவிட, உதட்டோரம் அரும்பிய சின்ன முறுவலோடு போ என்று தலையை அசைத்துச் சொன்னான் அவன்.

உண்மையில் அவனுக்கு நிறைய வேலைகள் இருந்தன. திருமண அலைச்சல்களால் கடைக்கு ஒழுங்காக வரக் கிடைத்திருக்கவில்லை. தன் இருக்கையில் அமர்ந்து அவற்றைப் பார்க்க ஆரம்பிகையில் நிறைமொழி கண்ணில் பட்டாள்.

அவளையே பார்த்தான். மெல்ல விரல் நீட்டி அவள் கன்னம் வருடப்போனவனால் இன்று ஏனோ முடியவில்லை. நாவினிக்குத் தவறிழைக்கும் உணர்வு. கண்ணோரம் கண்ணீர்ப் பூக்கள் இலேசாகப் பூத்தன. பெரு மூச்சு ஒன்றுடன் அவளைக் கவிழ்த்து வைத்துவிட்டுத் தன் வேலைகளில் ஆழ்ந்தான்.

நேரம் நழுவியதை அவன் உணரவேயில்லை. ஓரளவுக்கு வேலைகள் முடிவுக்கு வருகையில்தான் போன இவர்களைக் காணவில்லையே என்று நிமிர்ந்து சிசிடிவியில் தேடினான்.

தரையை உரசிச் செல்லும் பிங்க் வண்ணச் சுடிதாரில் ஒரு முழு ரோசாவாகவே அவள் நடக்க, அவளிடம் என்னவோ சொல்லிக் காட்டிக்கொண்டிருந்த மகனைக் கண்டு பக்கென்று சிரித்திருந்தான்.

அவளின் நீண்ட கைப்பிடி கொண்ட கைப்பையை மூன்றாகச் சுற்றித் தோளில் குறுக்காகப் போட்டுக்கொண்டு ஓடி ஓடி என்னவெல்லாமோ சொல்லிக்கொண்டிருந்தான் அவன்.

சிசிடிவியிலேயே தன்னிச்சையாய் மகனை வழித்துக் கொஞ்சியவனுக்கு அதற்குமேல் இங்கிருந்து வேலை பார்க்க முடியவில்லை. எழுந்து அவர்களிடம் சென்றான்.

“உனக்கு ஏதும் வேணுமெண்டால் எடு.”

தமக்கு பின்னால் திடீரென்று கேட்ட அவன் குரலில் திரும்பிப் பார்த்துவிட்டு, “நாளைக்கு வெளிக்கிடுற எனக்கு என்ன தேவ இருக்கப் போகுது?” என்று திருப்பிக் கேட்டாள் அவள்.

“ஓம் என்ன?” அதை மறந்திருந்தவன் நெஞ்சில் ஏதோ அடைக்கும் உணர்வு.

“இனி எப்ப வருவாய்?”

“இனி ஏன் நான் வர?” என்று திருப்பிக் கேட்டாள் அவள்.

ஏன், நான் இல்லையா என்று கேட்கமுடியாமல் நின்றான் அவன். ஆனாலும், “வர வசதிப்பட்டா வந்திட்டுப் போ.” என்று மட்டும் சொன்னான்.

சரி என்று தலையை அசைத்தாள் நாவினி.
 

Vishakini

Moderator
Staff member
மேலே அந்தப் பேச்சைத் தொடர முடியாமல் மகனைத் தூக்கி, “என்ன இது?” என்றான் அவன் கழுத்தில் கிடந்த அவள் கைப்பையைக் காட்டி.

“நவி அன்ட்ரி பாவம் அப்பா. பாரமா இருக்காம். நான் பெரிய மனுசன்தானே? எனக்குப் பாரமில்ல. அதான்.” என்று விளக்கம் சொன்னான் அவன்.

“இந்தப் பெரிய மனுசனுக்குப் பாரமா இருக்காதுதான்.” என்று அவன் மூக்கோடு மூக்குரசிச் சிரித்தான் தகப்பன்.

அடுத்ததாக அவளை யாழ்ப்பாண டவுன் கடைக்கு அழைத்துப்போனான். சஜிதன் சொன்னது போன்று இரண்டு மாடியில், அதுவும் மின்படிகள் கொண்ட விசாலமான கடைதான் அது.

இந்தளவில் பெரிதாகத் திட்டமிடுகிறவன் எப்படி இதையெல்லாம் விட்டுவிட்டு அங்கே வந்து இருப்பான்?

“இதையெல்லாம் என்ன செய்யப் போறீங்க?”

அவனிடமும் அந்தக் கேள்விக்குப் பதில் இல்லை. மனத்தில் கனத்துடன்தான் அவளோடு சேர்ந்து அவனும் அந்தக் கடையைச் சுற்றி வந்தான். முதல் எனில் கண்ணை மூடிக்கொண்டு மயூரனிடம் ஒப்படைத்திருப்பான். ஆனால் இப்போது…

“இனித்தான் யோசிக்கோணும்.” என்றான் வேறு ஒன்றும் சொல்லாமல்.

“மயூரன் அண்ணாட்டக் குடுக்கலாமே.”

“அவனைப் பற்றிக் கதைக்காத!” என்றான் சட்டென்று மூண்டுவிட்ட சினத்தோடு.

புரியாமல் பார்த்தாள் அவள். அவன் இறுக்கமாகவே நின்றான். ஒரு மாதிரியான சிரிப்பு ஒன்று அவள் இதழோரம் வந்து போயிற்று.

அது ஏதோ ஒரு வகையில் சீண்ட, “என்ன?” என்றான் கேசிகன்.

“மாறோணும் எண்டுற எண்ணம் எங்களுக்கு வராம இன்னொருத்தரால எங்களை மாத்தேலாது. அவர் ஒரு காரணமா இருக்கலாமே தவிர அவர் மட்டுமே காரணமில்லை.” என்றுவிட்டு அவள் நடக்கவும் அப்படியே நின்றுவிட்டான் அவன்.

பைக் அருகில் சென்று நின்று அவனைத் திரும்பிப் பார்த்தாள். அவன் முகமே மாறி, இறுகித் தெரிந்தது. தேவையில்லாமல் கதைத்துவிட்டோமோ என்று தோன்றினாலும் அவளுக்கு ஏனோ மயூரனை அவன் முற்றிலுமாக விலக்கி நிறுத்துவதில் உடன்பாடு இல்லை.

“அப்பா வாங்கோ!” இவளோடு நின்ற மகன் சத்தமாகக் குரல் கொடுத்தான்.

வந்து அவளது ஹெல்மெட்டை அவள் முகம் பாராமலேயே நீட்டினான் கேசிகன். மகனுக்கும் மாட்டிவிட்டு, தன்னதையும் எடுத்து அணிந்துகொண்டு, பைக்கில் ஏறி அமர்ந்தான். மகனையும் முன்னால தூக்கி அமர்த்திக்கொண்டு அவள் ஏறுவதற்காகக் காத்திருந்தான்.

அவனின் அத்தனை செய்கைகளிலும் கோபம் அப்பட்டமாகத் தெறித்தது. தாடை இறுகி, முகம் கடினப்பட்டு என்று அவளுள் மெல்லிய பயத்தை விதைத்தான்.

வீட்டுக்கு வந்தவர்களின் முகங்களைப் பார்த்ததுமே என்னவோ சரியில்லை என்று கண்டுகொண்டார் பிரேமா. “என்னம்மா?” என்றார் நாவினியிடம்.

இப்படி வெளியில் குடும்பமாகச் சென்று வந்தால் அவர்களுக்குள் ஒரு பிடிப்பு உண்டாகும் என்றெண்ணி அவர் அனுப்பி வைக்க, ஆளுக்கு ஒரு திசையில் முகத்தைத் திருப்பிக்கொண்டு நிற்கிறார்களே என்கிற கவலை அவருக்கு.

சொல்வது அறியாது அவள் தடுமாற, “அது கடைய மயூரனிட்ட குடுக்கச் சொன்னவள். அதான் எனக்குக் கோவம் வந்திட்டுது.” என்று சமாளித்தான் கேசிகன்.

“அவா சொன்னதில என்ன தம்பி பிழை இருக்கு? நீங்க கடையப் பெருசாக்கின நாளில இருந்து பாத்துக்கொண்டிருந்த வேலையையும் விட்டுப்போட்டு வந்து உங்களோட நிக்கிறார். முடிஞ்சதுகளத் தூக்கிப் பிடிக்காதீங்கோ. சாரதா வந்து சொல்லாட்டி எனக்கு ஒண்டுமே தெரிய வந்திருக்காது. இண்டைக்கு உங்கட இந்தக் கலியாணம் நடந்தும் இருக்காது. அப்பிடிப் பாக்கேக்க அண்டைக்கு நீங்க பிரியக் காரணமா இருந்தவேதான் இண்டைக்கு நீங்க சேரவும் காரணமா இருந்திருக்கினம். என்ன செய்றது தம்பி. இதெல்லாம் நடக்கோணும் எண்டு இருந்திருக்குப் போல.” என்று மகன் கோபத்தை ஆற்ற முயன்றார் பிரேமா.

“விடுங்கம்மா பாப்பம்.” என்று முடித்துக்கொண்டான் அவன்.

நேற்றுப் போலவே சின்னவனை பிரேமா வைத்துக்கொள்ள இவளுக்கு நடுக்கம் பிடித்தது. அவன் வர முதலே படுத்துக் கண்களை மூடிக்கொண்டாள். வந்தவனும் அவளோடு பேசும் மனநிலையில் இல்லை.

அதே நேரத்தில் அவள் சொன்னதைக் கடந்து வரவும் முடியவில்லை. படுக்காமல் கட்டிலில் அமர்ந்து, தலையை இரண்டு கைகளாலும் பற்றிக்கொண்டு அமர்ந்துவிட்டான்.

அவன் பிடிவாதமாக நின்றிருந்தால் யாராலும் அவனை அந்தத் திருமணத்திற்குத் தள்ளியிருக்க முடியாதுதான். ஆனால், தனியாய் நின்று வளர்த்த அன்னையின் ஆசையை எப்படி மறுப்பான்? சின்ன வயதில் இருந்தே அவனிடம் பாசம் காட்டிப் பழகிய பெண்மணியின் எதிர்பார்ப்பான பார்வையை எத்தனை முறை புறம் தள்ளுவான்? உற்ற நண்பனின் எதிர்பார்ப்பை என்ன செய்வான்?

எது எப்படியானாலும் அவன் அவளுக்கு நியாயமாக நடக்கவில்லை என்பது உண்மைதான். அதற்கென்று அவளை மறந்து போவதற்கு அவன் தயாராக இருந்தான் என்று எப்படிச் சொல்ல முடிந்தது?

அவன் அப்படி அமர்ந்திருப்பது மனத்தை என்னவே செய்ய, “படுக்கேல்லையா?” என்றாள் மெல்லிய குரலில்.

திரும்பி அவளைப் பார்த்தவனின் விழிகளில் அடிபட்ட வலி.

“என்ன?” என்றாள் எழுந்து அமர்ந்துகொண்டு.

ஒன்றுமில்லை என்று தலையை அசைத்துவிட்டு அவன் படுத்துக்கொண்டான். இப்போது அவளால் படுக்க முடியாது போயிற்று. அவனையே பார்த்தவள், “உங்கள நோகடிக்கோணும் எண்டு நினைச்சுச் சொல்லேல்ல.” என்றாள்.

வெடுக்கென்று அவள் புறம் திரும்பி, “இப்ப நீ சொல்லேக்க எனக்கும் நான் பிடிவாதமா இருந்திருக்கலாம் எண்டுதான் இருக்கு. ஆனா சந்தர்ப்ப சூழ்நிலைகள் உன்னை எப்பிடி, எங்க தள்ளும் எண்டு உன்னால சொல்லவே ஏலாது நவி. அப்பிடி ஒரு போராட்டத்தோடதான் அந்த வாழ்க்கைக்க போனனான். போன பிறகு சந்தோசமா வாழ்ந்தானான்தான். அதை இல்லை எண்டு சொல்லேல்ல. ஆனா, அப்பிடிப் போறது ஈஸியா இருக்கேல்ல நாவினி. அந்த முடிவை நான் சந்தோசமா எடுக்கவும் இல்ல.” என்றுவிட்டுத் திரும்பவும் விழிகளை மூடிக்கொண்டான் அவன்.

அவனையே சிறிது நேரம் பார்த்திருந்த நாவினியும் பெரு மூச்சுடன் கட்டிலில் சரிந்து கண்களை மூடிக்கொண்டாள்.

அடுத்த நாள் காலையிலேயே எழுந்து தன் வீட்டுக்குச் சென்று பெட்டிகளை அடுக்கினாள். அப்போதும் கேசிகன்தான் கொண்டுவந்து இறக்கிவிட்டான். முதல் நாள் நடந்த நிகழ்வினால் அவள் மீது மிகுந்த மனத்தாங்கல் இருந்தபோதும், அவள் புறப்படுகிறாள் என்கிற நினைப்பில் நெஞ்சு முழுக்கப் பாரம்.

இப்படித்தான் ஒரு நாள் அவனை மட்டுமே நம்பிக்கொண்டு ஒரு பயணம் புறப்பட்டாள். திரும்பி வந்தவளுக்கு அவன் கொடுத்தது அப்பட்டமான ஏமாற்றத்தை. அவளை ஏமாற்ற எண்ணி அவன் எதையும் செய்யவில்லை என்றாலும் அவள் ஏமாந்து நின்றது உண்மைதானே.

பிரேமா, சஜிதன் எல்லோருமே புறப்படுவதால் இங்கே வந்து ஜன்னல்கள், கதவுகள் எல்லாவற்றையும் சரியாகப் பார்த்து மூடி, சின்னவனுக்குத் தேவையான மாற்றுடைகள், அருந்துவதற்கு சாப்பிடுவதற்கு என்று எடுத்து வைத்து முடிக்கையில் தானும் தயார் என்று அழைத்துச் சொன்னாள் நாவினி.

திரும்பவும் அவள் வீட்டுக்கு வந்து மேலே வந்தான். அவளும் ஜீன்ஸ், சேர்ட் என்று தயாராக நின்றாள். “வெய்ட் பாக்கோணுமா?” என்று கேட்டபடி பெட்டிகளைத் தூக்கிப் பார்த்தான். அவை பாரமற்றுக் கையோடு வந்தன.

“எனக்குக் கொண்டுபோக ஒண்டும் இல்ல. மேனகா அன்ட்ரிதான் அங்க நிறைய இருக்கு எண்டவா.”

“அப்ப தராசையும் கொண்டு போவம்.” என்றபடி பெட்டிகளை எடுத்து வெளியே வைத்துவிட்டு அவளைப் பார்த்தான்.

இதே அறையில்தான் அன்றும் ஒரு பிரியாவிடை அவர்களுக்குள் நடந்தது. வாய்விட்டுப் பரிமாறிக்கொள்ளாதபோதும் அன்று அவர்கள் இதயங்கள் இரண்டும் இரண்டரக் கலந்திருந்தன. அதனாலேயே பிரிவில் துடித்தன.

இன்றும் இருவரையும் துக்கப் பந்து ஒன்று வந்து தொண்டையை அடைக்காமல் இல்லை. அது அன்றைய நினைவிலா, இன்றைய நிகழ்விலா என்கிற தெளிவு அவர்களுக்கே இல்லை. அவனைப் பாராமலேயே அந்த அறையை விட்டுப் போக முயன்றாள் அவள். அவன் விடவில்லை. அவள் கரம் பற்றி நிறுத்தினான்.

திகைப்புற்றுத் திரும்பிப் பார்த்தாள் நாவினி. பார்வை அவள் முகத்தின் மீதே இருக்க அவளைக் கொண்டுவந்து தன் முன்னே நிறுத்தினான் கேசிகன்.

“கவனம்.” என்றான் பற்றியிருந்த கரத்திற்கு இன்னும் அழுத்தம் கொடுத்து.

‘ம்’ என்று சொல்வதுபோல் தலையை அசைத்தபடி நாசுக்காக அவன் கையிலிருந்து தன் கரத்தை விடுவிக்க முயன்றாள். அவனும் விட்டான்தான். கொஞ்சம் கொஞ்சமாக அவன் கரத்திலிருந்து அவள் கை நழுவுவதுபோல் விட்டான். உள்ளே உள்ளம் உதறல் எடுக்க, விட்டால் போதும் என்று வெளியில் வந்துவிட்டாள் நாவினி.

ஒருமுறை தலையைக் கோதிக்கொடுத்துவிட்டுப் பெட்டிகளோடு தானும் கீழிறங்கி வந்தான் கேசிகன்.

இங்கிருந்து பருத்தித்துறை சென்று, அங்கே மேனகா குடும்பத்தினரோடு அவர்கள் பிடித்திருக்கும் வானில் கொழும்பு செல்வதாக ஏற்பாடு.

திட்டமிட்டது போலவே எல்லோருமாகச் சேர்ந்து புறப்பட்டனர். பயணம் முழுக்க ஒரு பரிதவிப்புடனேயே அந்தக் கணவன் மனைவிக்குக் கழிந்தது. அதுவும் ஓட்டுனரோடு சேர்த்து மொத்தமாகப் பன்னிரண்டு பேர் என்பதில் தோளோடு தோள் உரச அமைந்த பயணம். முடிந்தவரையில் அவளும் சஜிதனைத் தன் மடியிலேயே வைத்துக்கொண்டாள்.
 

Vishakini

Moderator
Staff member
அப்படி மகனோடு அவளைப் பார்க்கும் பொழுதிலெல்லாம் அவனுக்குள் ஒரு தாக்கம். கட்டுநாயக்காவை நெருங்குகையில் அவள் கரத்தைத் தன் கரத்தினுள் பொத்தி வைத்துக்கொண்டான்.

முதலில் விடுவித்துக்கொள்ள முயன்றவள் அதற்கு மறுத்தபடி அவன் பார்த்த பார்வையில் தன் முயற்சியை விட்டுவிட்டாள். மகனைக் கைமாற்றுகிற பொழுதுகளில் கூட அப்போதைக்கு விட்டாலும் பிறகு பற்றிக்கொண்டான்.

அவன் விரல்கள் அவளுடையவைகளை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு சொல்ல முயன்ற ஏதோ ஒரு செய்தி அவளுள் பெரும் பூகம்பத்தைக் கிளப்பிற்று.

தன் மனத்தின் அலைப்புறுதல்களை அவளிடம் சொல்ல முயன்றானா, இல்லை அவள் உள்ளத்தின் அலைபாய்தல்களை ஆற்ற முயன்றானா தெரியாது. அவள் விரல்களுக்கு அவன் தந்த இறுக்கமும், அதன் மூலம் அவளுக்குள் பரவிப் படர்ந்த அவன் கதகதப்பும் அவள் விழிகளைச் சுரக்க வைக்க முயன்றன.

ஜன்னல் புறம் திரும்பித் தன் உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்றாள். அவளை உணர்ந்துகொண்டவனாகப் பற்றியிருந்த அவள் கரத்தை அழுத்திக்கொடுத்தான் கேசிகன். சிறு திகைப்புடன் திரும்பிப் பார்த்தாள் அவள். அவன் பார்வையும் அவளில்தான். மீண்டும் வேகமாகத் திரும்பிக்கொண்டாள். வார்த்தைகளற்ற ஒரு உரையாடல். கரங்கள் வழியே இருவர் உணர்வுகளும் உரையாடியன.

அந்த உரையாடலில் உருகியும் உருகா நிலை அவளுக்கு. அவன் உணர்வுகளோடு ஒன்றவும் முடியவில்லை. முற்றிலுமாக விலகவும் முடியவில்லை. இன்று துடிக்கிறவன் அன்று விட்டுவிட்டானே என்கிற மனத்தின் முணுமுணுப்பு அடங்குவதாக இல்லை.

விமான நிலையம் வந்து இறங்கினார்கள். கண்ணீரும் புன்னகையும் நிறைந்த நெகிழ்வான விடைபெறல்களோடே கொண்டுபோகும் பெட்டிகளை எல்லாம் போட்டு முடித்தனர். அவர்கள் புறப்படும் நேரமும் வந்து சேர்ந்தது.

அடக்கிய கண்ணீருடன் சஜிதனைத் தூக்கியே வைத்திருந்தாள் நாவினி.

“எங்க போறீங்க நவி அன்ட்ரி?” அவனுக்கும் நடப்பவை ஓரளவு புரிந்ததில் அழுகுரலில் விசாரித்தான்.

அவளுக்குக் கண்ணீர்தான் பெருகிற்று. “உங்கட நவி அன்ட்ரி செய்துகொண்டிருந்த வேலை முடியேல்லையாம். அதால ஜெர்மன் போறாப்பு.” மகனுக்குக் கதை சொல்லிக்கொண்டே அவளிடம் வந்து அவனை வாங்கிய கேசிகன், அழாத என்று கண்களால் அவளை அடக்கினான்.

அவளும் அழக் கூடாது என்றுதான் நினைக்கிறாள். முடியவேண்டுமே. அவர்கள் பக்கத்திலேயே நின்று சேலைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக்கொண்டு நின்ற பிரேமா கூட அவளுக்குக் கண்ணீரைத்தான் வரவைத்தார்.

“ஆனாப்பா நவி அன்ட்ரி எங்களோட இருக்கத்தானே நாங்க பிள்ளையாரப்பாக்குப் பூசை செய்து கூட்டிக்கொண்டு வந்தனாங்க?” என்று கேட்டான் மகன்.

“ஓமோம். இனி அவா எங்களோடதான் இருப்பா. ஆனா ஒரு வேலையைச் செய்றன் எண்டு சொன்னா அத முடிச்சுக் குடுக்கோணும்தானே? அத முடிச்சுப்போட்டு வந்த பிறகு போகவே மாட்டா. சரியா?” தாம் அங்குப் போகப்போகிறோம் என்கிற கதையைச் சொன்னால் அவனிடமிருந்து இன்னும் பல கேள்விகள் வரும் என்று கேசிகன் அதைச் சொல்லவில்லை.

அதில், “ஓமா?” என்றான் சின்னவன் அவளிடம் திரும்பி.

ஆம் என்று தலையை அசைத்தாள் அவள்.

“கெதியா வேலைய முடிச்சுப்போட்டுக் கெதியா வாங்கோ.”

சட்டென்று கன்னத்தில் இறங்கிவிட்ட கண்ணீருடன் கேசிகனின் தோள் பற்றி எம்பி, சின்னவன் கன்னத்தில் முத்தமிட்டாள் நாவினி.

“பாத்தீங்களாம்மா, உங்களுக்கு எண்டு ஒருத்தரும் இல்லை எண்டு அண்டைக்குச் சொன்னீங்க. என்ர பேரன் இருக்கிறானம்மா. அதால ஒண்டுக்கும் யோசிக்காம போகோணும் குஞ்சு.” என்று அவள் கன்னம் தடவி அழுதார் பிரேமா.

கலங்கிச் சிவந்திருந்த விழிகளுடன் ஒற்றைத் தலையாட்டலோடு கேசிகனிடமும் விடைபெற்றுக்கொண்டாள் நாவினி.

கேசிகனால் அந்தத் தலையாட்டலைக் கூடக் கொடுக்க முடியவில்லை. இதயத்தின் ஒரு பகுதியை யாரோ வெட்டி எடுத்துக்கொண்டு போவது போலொரு வலி.

“உங்களிட்ட இதச் சொல்லவே கூடாது. எண்டாலும் என்ர ஆறுதலுக்குச் சொல்லுறன். தம்பி அங்க வரும் வரைக்கும் அவாவைக் கொஞ்சம் கவனமா பாத்துக்கொள்ளுங்கோ.” என்று சொல்லி மேனகா குடும்பத்தினருக்கும் விடைகொடுத்தார் பிரேமா.
 

vidhya s

Member
திரும்ப திரும்ப அழ வைக்கறீங்க..நவி அவனோட சேரலனாலும் வலிதான் இப்ப அதவிட வலி
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Members online

Top Bottom