• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மன்னிப்பாயா காதலே - 4

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம் 4

டுபாயில் இறங்கி, இரண்டரை மணிநேரம் காத்திருந்து, அடுத்த விமானத்தில் பயணித்துக் கொழும்பு வந்து இறங்கினாள் நாவினி.

எங்குத் திரும்பினும் அன்னை சகோதரர்கள் முகங்களே மின்னி மறைந்தன. அழக் கூடாது, தைரியமாக இருக்க வேண்டும் என்று எவ்வளவுதான் நினைத்தாலும் முடியவில்லை.

தாயகமும் தாய்க்கு ஒப்பானதாயிற்றே. தாய் மண்ணில் காலை வைத்த கணமே தாய் சகோதரர்களோடு வந்த நாள் நினைவில் வந்து கண்ணீர் சொரிய வைத்தது.

நம் வாழ்வில் பெரும் மகிழ்வான நாள் ஒன்றை அனுபவித்துக்கொண்டிருக்கிறோம் என்று தெரியாமலேயே பல நாள்களைச் சர்வசாதாரணமாகக் கடந்துவிடுகிறோம். என்றைக்கு அது இனித் திரும்பவே கிடைக்காது என்று தெரிய வருகிறதோ, அன்றைக்குக் கடந்துபோன அந்த நாளை எண்ணியே கண்ணீர் சொரிகிறோம். அப்படி ஒரு நிலையில் இருந்தாள் நாவினி.

அன்று, அவள் சிந்தை எல்லாம் இவர்கள் வாகனத்தில் புறப்பட்டபோது வாகனத்துடனேயே நடந்து வந்தவனும், அவன் முகத்தில் தெரிந்த தவிப்பும் மட்டுமே நிறைந்திருந்தன. ஆனால் இன்று?

ஒரு வழியாகத் தன் பயணப் பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள்.

மாதவன் இலங்கை காவல்துறையில் காவல்துறை உதவிக் கண்காணிப்பாளராகப்(Assistant Superintendent Of Police) பணியாற்றுகிறார். நேர்மை தவறாத, கண்டிப்பான காவல் அதிகாரி.

அவரை அவள் முன்பின் பார்த்ததில்லை. ஆனால், மேனகா அவரின் புகைப்படம் காட்டியிருந்தார். கூடவே புறப்பட முதல் அவரோடு இவளைக் காணொளி அழைப்பில் பேசவைத்திருந்தார்.

ஆனாலும் மெல்லிய மிரட்சியோடு வந்தவளை மேனகாவுக்கு இணையான பாசத்தோடு அரவணைத்துக்கொண்டனர் மாதவனும் அவர் மனைவி வைதேகியும்.

மாதவன், வைதேகிக்கு அவள்பற்றி அனைத்தும் தெரியும். மேனகா சொல்லியிருந்தார். ஆனால், அதைப் பற்றிப் பேசி அவளைக் காயப்படுத்த விரும்பாமல், தெரியாததுபோலவே காட்டிக்கொண்டார்கள்.

நாவினிக்கும் அது புரிந்தது. அந்தப் புரிந்துணர்வுடன் கூடிய அன்பில் நெகிழ்ந்தாள்.

கொழும்பிலிருந்து ஊரை நோக்கிய அவர்களின் பயணம் ஆரம்பித்தது. அவளால் கலங்கும் மனத்தையும் கண்களையும் கட்டுப்படுத்த முடியவில்லை. பொறுத்து பொறுத்துப் பார்த்த வைதேகி, “என்னம்மா?” என்று ஒரு கேள்விதான் கேட்டார்.

ஒன்றுமில்லை என்பதுபோல் தலையை ஆட்டியவள் கையில் இருந்த டிஷ்யூ பேப்பரில் முகத்தைப் புதைத்துக் கண்ணீர் உகுத்தாள்.

“தைரியமா இருக்கோணும் பிள்ளை. ஒண்டுமில்லையம்மா.” அப்போதும் அவள் இழப்பைப் பற்றிப் பேசாமல், அவள் தலையை வருடித் தைரியம் கொடுத்தார் வைதேகி.

மாதவன், மேனகாவின் சொந்த இடம் பருத்தித்துறை. அதில் மாதவன் அவளை முதலில் பருத்தித்துறைக்குத்தான் அழைத்துச் சென்றார்.

திரும்பவும் எட்டுத் தொடக்கம் ஒன்பது மணி நேரப் பயணம். அவர்களின் வீடு சென்று சேர்ந்தபோது மனத்தின் போராட்டம், கட்டுப்படுத்த நினைத்தாலும் முடியாமல் கசிந்த கண்ணீர், நீண்ட நெடிய பயணத்தினால் உண்டான களைப்பு என்று முற்றிலுமாகச் சோர்ந்துபோனாள் நாவினி.

காவல்துறையினருக்காக ஒதுக்கியிருந்த குவார்டசில்தான் தங்கியிருந்தார் மாதவன். அவருக்கு வளர்ந்த பிள்ளைகள் மூவர். மூவருமே திருமணமாகித் தனித்தனியாகப் போயிருந்தார்கள்.

அதில் தற்போது கணவன் மனைவி மட்டுமே வசித்து வந்தனர். அவர்களுக்கு அவள் வந்ததில் மிகுந்த மகிழ்ச்சி. கொழும்புக்குப் புறப்பட முதலே அவளுக்கென்று ஒரு அறையைத் தயார் செய்துவிட்டுத்தான் வந்தார் வைதேகி.

அங்கே தன் உடைமைகளை வைத்துவிட்டு, குளித்து உடை மாற்றிக்கொண்டு வந்தவளுக்கு ஏற்கனவே குழைத்துப் புளிக்க வைத்திருந்த தோசை மாவில் புதுவிதமான மசாலா தோசை செய்துகொடுத்தார் வைதேகி.

நல்லெண்ணெய் விட்ட முறுகல் தோசையினுள் உருளைக்கிழங்குப் பிரட்டலோடு தேங்காய்ச் சம்பலும் வைத்து, அதற்கு மேலே பருப்புச் சாம்பார் ஊற்றியிருந்தார்.

வித்தியாசமாக இருக்கிறதே என்று தோன்றினாலும் சொல்லவில்லை அவள். இலேசாக ஒரு வாய் பிய்த்து வாயில் வைத்தவள் விழிகள் வியப்பில் விரிந்தன.

நல்லெண்ணெய் வாசம், அதில் இலேசாக முறுக்கியிருந்த தோசை சாம்பாரில் நனைந்து, தேங்காய்ச் சம்பலின் காரத்தைச் சுமந்து, அது இரண்டையும் சமப்படுத்துவது போன்று உருளைக்கிழங்கு மசியல் என்று அற்புதச் சுவையோடு இருந்தது.

“நல்லாருக்காம்மா?” அவள் முகத்தையே கவனித்திருந்த வைதேகி சின்ன முறுவலுடன் வினவினார்.

“அருமையா இருக்கு அன்ட்ரி. என்னடா இது ஒரு தோசைக்க எல்லாத்தையும் போட்டுத் தாறீங்களே எண்டு நினைச்சன்.” என்றவளைக் கண்டு மாதவன் நகைத்தார்.

“அதுதான் என்ர மனுசின்ர கைப்பக்குவம். என்ர வண்டிய(வயிறு) பாத்தோன்னயே இத நீங்க யோசிச்சிருக்கோணும்.” என்றார் தன் வயிற்றைத் தடவிக்காட்டி.

உண்மைதான். கிட்டத்தட்டப் பன்னிரண்டு மாத வயிற்றைச் சுமந்திருந்தார் மனிதர். அதைக் கண்டு சிரிப்பை அடக்க முயன்றும் முடியாமல் சிரித்துவிட்டாள் நாவினி. அந்தச் சிரிப்பினோடே அவளை இன்னும் இரண்டு மசாலாத் தோசைகளைச் சாப்பிட வைத்திருந்தார் வைதேகி.

அன்றிரவு நன்றாக உறங்கி எழுந்து வந்தவளிடம் வீட்டுப் பத்திரங்களை வாங்கினார் மாதவன். முதலே அங்கிருந்து ஸ்கான் பண்ணி அனுப்பியிருந்தாள்தான். என்றாலும் ஒரிஜினல் உறுதியை வாங்கி ஆராய்ந்துவிட்டு, அத்தனையையும் தானே கைப்பேசி மூலம் ஸ்கான் பண்ணி, ‘பிடிஎஃப்’ வடிவத்தில் யாரோ ஒருவருக்கு அனுப்பிவைத்தார்.

அப்படியே அவருக்கு அழைத்து, “அண்டைக்குச் சொன்ன விசயம் இது ராஜன். தாயின்ர சீதனக் காணி. இவா ஏழு வயதா இருக்கேக்கையே தாய் இறந்திட்டா. அப்பவே தகப்பன் இவான்ர பெயருக்கு மாத்தி இருக்கிறார். ஆனா, பதினெட்டு வயதாகி, அத முறையா மாத்தி எடுக்கிற காலத்தில இவா இஞ்ச இல்ல. இப்ப நாங்க இத இவான்ர பெயருக்கு முறையா மாத்தோணும். அவாட ஐடென்ட்ரி கார்ட், பிறப்புச் சான்றிதழ் எல்லாம் அனுப்பி இருக்கிறன். தேவை எண்டு வந்தா விதானையின்ர(கிராம சேவையாளர்) கடிதமும் வாங்கலாம். அதெல்லாம் பிரச்சினை இல்ல. எல்லா வேலையையும் கெதியா முடிச்சுப்போட்டுச் சொல்லுங்கோ, அவாவைக் கூட்டிக்கொண்டு வாறன். அவான்ர பெயருக்கு மாத்தி விடுவம். அப்பிடியே அவவின்ர மாமா இதே காணிக்குப் பொய் உறுதி முடிச்சு, வீட்டை விக்கப்போறாராம் எண்டு கேள்வி. அதையும் ஒருக்கா விசாரிச்சுச் சொல்லுங்கோ.” என்று சொல்லி, பரமேஸ்வரனின் விபரங்களையும் கொடுத்துவிட்டு வைத்தார் மாதவன்.

அதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தவள் உள்ளம் கலங்கிப்போயிற்று. என்ன இருந்தாலும் மாமா. அவரே அவளுக்கு இப்படியெல்லாம் செய்கிறாரே என்று அழுவாளா? இல்லை, அவருக்கு எதிராக நிற்கும் நிலையில் அவள் இருக்கிறாளே என்று அழுவாளா?

அவளுக்கு அந்த வீடு பெரிதில்லை. அந்த வீட்டில் வாழ்ந்த நினைவுகள்தான் இன்று பொக்கிசமாகிப்போயின. அவரே வைத்திருந்திருந்தால் கூட இருக்கும் வரை இருக்கட்டும் என்று விட்டிருக்கலாம். அவர் விற்கப்போகிறாராம் என்றதும்தான் தன்னுடையதைத் தானே எடுத்துக்கொள்ளும் முடிவுக்கு வந்திருந்தாள்.

அதைவிட அந்த வீட்டுக்காகத் தந்தை பட்ட அல்லல்களைப் பக்கத்திலேயே இருந்து பார்த்தவள் எப்படி விடுவாள்?

அன்று இவர்கள் ஜெர்மன் புறப்பட முதல் அவர்களின் வீட்டில் நாகரத்தினத்தின் தூரத்து உறவினர்களை அமர்த்தியிருந்தார் அபிராமி. வாடகை வேண்டாம், வீட்டையும் காணியையும் காணிக்குள் இருக்கிற மரங்களையும் பராமரித்தால் போதும் என்பதுதான் பேச்சு.

ஆனால், இவர்கள் வெளிநாடு சென்றுவிட்ட கொஞ்ச நாள்களிலேயே அவர்களோடு மல்லுக்கு நிற்க ஆரம்பித்திருந்தார் பரமேஸ்வரன். பரிமளாவைத் திருமணம் செய்து கொடுத்த காலத்திலேயே பெரிய காணியில் இரண்டு மாடிகள் கொண்ட வீட்டின் பெறுமதி பெரிது. அப்படியிருக்க அந்த நேரம் சில கோடிகள் வந்தது. அதை இழக்க பரமேஸ்வரன் தயாராக இல்லை.

கடைசியில் இவர்களின் தூரத்து உறவினர்களால் பரமேஸ்வரனோடு மல்லுக்கட்ட முடியவில்லை. நாகரத்தினமோ அபிராமியோ இருந்திருந்தால் வேறு. இவர்களே அவர்களின் வீட்டில் சும்மா இருக்கிறவர்கள்.

அப்படியிருக்க வெட்கமே இல்லாமல் அடுத்தவன் வீட்டுச் சொத்தில் வந்து சுகமாகக் குந்திக்கொண்டு அனுபவிக்கிறீர்களே, ரோச மானம் இல்லையா, சோற்றில் உப்புப் போட்டுத் தின்பதில்லையா போன்ற பரமேஸ்வரனின் மோசமான கேள்விகளை எதிர்கொள்ளவும் சமாளிக்கவும் முடியாமல், அங்கிருந்து எழுந்திருந்தார்கள் அவர்கள்.

அடுத்த சில நாள்களிலேயே பரமேஸ்வரன் அங்கே குடிவந்தார். இதை அறிந்த நாகரத்தினத்துக்கு மிகுந்த ஆத்திரம். தொலைபேசியில் என்ன பேசியும் அவரை வெளியேற்ற முடியவில்லை. ஒரு கட்டத்துக்கு மேல் பரமேஸ்வரன் அழைப்பை ஏற்க மறுத்தார்.

ஊரிலிருக்கும் யார் மூலம் பேசியும் பிரயோசனம் இல்லை. கேசிகன் குடும்பம் உட்பட நாகரத்தினத்துக்குச் சார்பாகக் கதைக்க எல்லோருமே தயங்கினர். அப்படியே கதைத்தாலும் பரமேஸ்வரன் அதைக் கேட்க வேண்டுமே. அதைவிட ஒரு சிலருக்கு இவர்கள் வெளிநாட்டில் இருப்பதால் நொடிந்துபோயிருக்கும் பரமேஸ்வரனுக்கு அதைக் கொடுத்தால்தான் என்ன என்கிற எண்ணம்.

கடைசியில் உறுதி தன்னிடம்தானே உண்டு, பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டார் நாகரத்தினம்.

அதே நேரத்தில் ஜெர்மன் வந்து கொஞ்ச நாள்களிலேயே கேசிகனின் நண்பன் மயூரன் வீட்டு விலாசத்திற்கு ஜெர்மனியில் தங்கள் வீட்டு விலாசத்தையும், தந்தையின் கைப்பேசி இலக்கத்தையும் எழுதி அனுப்பினாள் நாவினி.

அவனிடம் இருந்தும் பதில் வந்தது. இன்னுமே இன்னது என்று வரையறுக்காத உறவு அவர்களது. கூடவே எதையும் வெளிப்படையாகச் சொல்லிக்கொள்ளவும் இல்லை. அன்று பிரியும் நாளில் தம்மை மீறி வெளிப்படுத்திய அன்பு, இருவர் உள்ளங்களிலும் ஆழமாக இருந்தாலும், அப்படியே மனத்திலேயே வைத்திருந்தார்கள்.

எல்லாவற்றையும் விடத் தாம் இன்னுமே அதற்குரிய வயதிற்கு வரவில்லை என்கிற எண்ணம் கேசிகனை உடைத்துப் பேச விடவில்லை. அதைவிட இன்னுமே கடிதப் போக்குவரத்துத்தான். அவனிடம் கைப்பேசி இருந்தாலும் அவளிடம் இல்லை. அவளின் தந்தைக்கு அழைத்து அவளோடு பேசப்போகிறேன் என்று சொல்ல முடியாதே.

அதில் எழுதுகிற கடிதங்களில் என்ன செய்கிறாய், எப்படி இருக்கிறாய், மொழி படிக்க ஆரம்பித்துவிட்டாயா, நாடு பிடித்திருக்கிறதா, முடிந்தால் புகைப்படம் அனுப்பு போன்றவைதான் இடம்பெற்றன. அவள் இன்னுமே சின்ன பெண் என்கிற எண்ணம் ஒருபுறம் என்றால், தன் கடிதத்தை அவள் தாயோ தந்தையோ பார்த்தால் என்னாகும் என்கிற கவனம் இன்னொரு புறம்
 

Vishakini

Moderator
Staff member
அப்படியேதான் இவளும். அவன் வீட்டு நாய் என்ன செய்கிறது, அடுத்ததாக என்ன செய்யப்போகிறான், அவன் அன்னையின் நலன், ஊரில் நடக்கும் விசேசங்கள் பற்றிய விசாரணை என்று இருக்கும்.

அபிராமிக்கு அவர்களுக்குள் இருக்கும் கடிதப்போக்குவரத்துத் தெரியும். இதில் அவருக்குப் பெரிய உடன்பாடு இல்லாதபோதும் கூடாது என்று தடுக்கவில்லை. ஆனால், அவனுடையதானாலும் சரிதான் அவளுடையதானாலும் சரிதான் வாசிக்காமல் விடமாட்டார்.

வீடு விசயத்தில் அவன் வீட்டினர் இவர்களுக்குச் சார்பாக ஒரு வார்த்தை பேசவில்லை என்பது நாகரத்தினத்துக்கும் அபிராமிக்கும் பெரும் மனக்குறைதான். இருந்தாலும் அதைக் கேசிகன் விடயத்தில் காட்ட முனையவில்லை.

தகப்பன் இல்லா பிள்ளை அவன். அவனுக்கும் அவன் அன்னைக்கும் அந்த வீட்டில் என்ன நிலை என்று தெரியும். இதில் எதிலும் தலையிட்டுச் செய்கிற அளவில் அவன் பெரியவனும் இல்லையே.

அவளுடைய பதினெட்டாவது பிறந்தநாளுக்குத்தான் முதல் முதல் கைப்பேசி வாங்கிக் கொடுத்தார் நாகரத்தினம். அந்த நிமிடமே கேசிகனுக்கு அழைத்துவிடத் துடித்தாள் நாவினி. அதற்கு அபிராமி அனுமதிக்கவில்லை.

அவனுக்கு என்று குறிப்பிட்டுச் சொல்லாமல் இது அவளின் பாதுகாப்புக்கும், தம்மோடு கதைப்பதற்கும் மட்டுமே தரப்பட்டிருக்கிறது என்று சொன்னவர், வேறு யாருக்கும் தன்னிடம் சொல்லாமல் கைப்பேசி இலக்கம் கொடுக்கக் கூடாது என்று கண்டிப்பாய்ச் சொல்லியிருந்தார்.

கூடவே வீட்டில் இருந்தால் மட்டுமே நெட் பாவிக்கலாம் என்கிற வரையறையும் இருந்தது.

ஆரம்பத்தில் இவர்களின் கடிதப் போக்குவரத்தை இயல்பாக எடுத்துக்கொண்ட அபிராமியால் அது மாதத்திற்கு இரண்டு முறை என்று விடாமல் தொடர்ந்ததை அப்படி எடுக்க முடியவில்லை. அந்தளவில் என்ன என்று யோசிக்க ஆரம்பித்திருந்தார். தெரிந்தவர்கள்தான். சிறு வயதிலிருந்து பழகியவர்கள்தான். என்றாலும் இது அதிகமாயிற்றே.

அதைவிட பரமேஸ்வரனின் மகளுக்கும் அவன் மாமனின் மகனுக்கும் இந்த இடைப்பட்ட காலத்தில் திருமணம் நடந்திருந்தது. இப்போது கேசிகன் குடும்பம் பரமேஸ்வரனின் உறவுக்காரர்கள்.

தப்பித்தவறி இவர்களின் இந்தப் பழக்கம், காதல் என்று வந்து நின்றுவிட்டால் மகள் வாழ்க்கை அங்கு அமைந்துவிடுமோ என்கிற பயமும் வர ஆரம்பித்தது.

முக்கியமாக அவன் இவளைத் தங்கை என்று சொன்னதும் இல்லை, இவள் அவனை அண்ணா என்று விழித்ததும் இல்லை. அதையும் தாண்டி இப்போதெல்லாம் ஊடுபாடாக அவர்களின் கடிதங்களில் ஓடிய ஏதோ ஒன்று அவரைச் சுதாரிப்பாக இருக்கச் சொல்லிற்று.

அதில் அவள் கைப்பேசி எப்போதும் அவர் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. நாவினியும் வீட்டுக்குத் தெரியாமல் எதையும் செய்கிறவள் இல்லை. அது அவளுக்கு வராது. அவள் தன் இருபதாவது வயதை நெருங்குகையில் அவனிடமிருந்து கடிதங்கள் வருவது நின்றுபோயிற்று.

என்னவோ சுவாசிக்கக் காற்றில்லாதவள் போல் தவித்துப்போனாள். அதன் பிறகு பல கடிதங்கள் இவள் அனுப்பியும் பதிலே இல்லை.

விடயத்தைச் சொல்லி அவர்கள் வீட்டுக்கு அழைத்து விசாரிப்போமா என்று அபிராமியிடம் வந்து கேட்டாள். அபிராமி மறுத்துவிட்டார். “அந்தளவுக்கு ஏன் பிள்ளை அவரோட கதச்சே ஆகோணும் எண்டு நிக்கிறீங்க?” என்கிற அவரின் நேரடிக் கேள்வி அவளைத் திக்குமுக்காட வைத்தது.

“இல்லையம்மா. இப்பிடிக் கடிதம் போடாம இருக்கமாட்டார். அதான் அவர் நல்லாருக்கிறாரா எண்டு…” எனும்போதே அவள் விழிகள் கலங்கிப்போயின. ஆனாலும் அன்னையை மீறும் தைரியம் இல்லாமல் பேசாமல் இருந்துவிட்டாள்.

ஆனால், அடுத்த நாள் கல்லூரி சென்று வந்தவளிடம், “கேசி அங்கதான் இருக்கிறாராம். சுப்பர் மார்க்கெட் மாதிரி ஒண்டு திறக்கிற வேலைல ஓடுப்பட்டுத் திரியிறாராம்.” என்று சொன்னார் அபிராமி.

அவள் அகமும் முகமும் நொடியில் மலர்ந்துபோயிற்று. கடை திறக்கிறானா, இது அவன் கனவின் முதற்படியாயிற்றே என்று குதூகலித்துப்போனாள்.

ஆனால். நாளாக நாளாக அதை ஏன் அவன் அவளிடம் சொல்லவில்லை என்கிற யோசனை. ஒரு கடிதம் எழுத முடியாத அளவிலா இருக்கிறான் என்று கவலையுற்றாள்.

அதைக் கவனித்துவிட்டு, “அவருக்கு இருபத்தி அஞ்சு வயசாகப்போகுதம்மா. வளந்த ஆம்பிளப் பிள்ளை. இன்னும் உன்னோட சின்ன பிள்ளை மாதிரிக் கடிதம் எழுதிக்கொண்டா இருப்பார்? அவர் அவரின்ர வாழ்க்கையைப் பாக்க ஆரம்பிச்சிட்டார். அதே மாதிரி நீங்களும் உங்கட எதிர்காலத்தைக் கவனிக்கோணும் குஞ்சு.” என்று அபிராமி இதமும் கண்டிப்பும் கலந்து சொன்னபோது, விழிகள் பனிக்க சரி என்று தலையை அசைத்தாள் நாவினி.

அவளையே பார்த்த அபிராமிக்கு நெஞ்சில் பாரம் ஏறாமல் இல்லை. ஆனால், இதுதானே சரி. “அம்மாச்சி இஞ்ச பாருங்கோ, நீங்க என்ர பிள்ளைதான். ஆனா நான் பெத்த பிள்ளை இல்லை. அதாலயே சின்னதா ஒரு பிழை நடந்தாலும் அதப் பெருசா கதைப்பினம். உங்களை நான் பாக்க மாட்டன், சாப்பாடு தரமாட்டன், உங்களோட பாசமா இருக்க மாட்டன் எண்டு அப்பவே உங்கட மாமா வீட்டாக்கள் சொன்னவையா, இல்லையா? அப்பிடியிருக்க நீங்களும் கேசியும் கடிதம் எழுதுறது தெரிய வந்தா என்ன எல்லாம் கதைப்பினம் எண்டு யோசியம்மா. ‘அவள் பெத்த பிள்ளையா இருந்தா இப்பிடி விட்டிருப்பாளா’ எண்டு கேப்பினம். இன்னும் நிறையக் கதைச்சு உன்ர பெயரைக் கெடுத்துப்போடுவினம் குஞ்சு. அம்மாக்கு நீங்க நல்லாருக்கோணும் செல்லம். இதெல்லாம் எங்களுக்கு வேண்டாம்.” என்று அவர் கலங்கிய விழிகளோடு சொன்னபோது, அவர் இடுப்பைக் கட்டிக்கொண்டு மன்னிப்புக் கேட்டிருந்தாள் நாவினி.

அன்னையின் சொல்லை மீறத் தைரியம் இல்லை. அதோடு பரமேஸ்வரன் வீட்டு ஆட்கள் பக்கமிருந்து அபிராமியை எப்படியெல்லாம் கதைத்தார்கள், அவளிடமே என்னவெல்லாம் சொல்லிப் பயமுறுத்தப் பார்த்தார்கள் என்று அவளுக்கே தெரியும்.

அப்படியிருக்கையில் தான் செய்யும் ஒரு காரியத்தினால் கெட்ட பெயரோ, ‘நாம் சொன்னது போலவே நடந்துவிட்டது பார்த்தீர்களா’ என்கிற பேச்சோ அவருக்கு வந்துவிடக் கூடாது என்கிற பயம் அவளைக் கட்டிப்போட்டது.

கூடவே, ‘என்னை மறக்கக் கூடாது, காத்திருப்பேன். என்னிடமே வந்துவிட வேண்டும்.’ என்று சொன்னவன் நிச்சயம் அவளுக்காகக் காத்திருப்பான் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை அவளிடம் இருந்தது. அவளும் மாறிவிடக் கூடாது என்கிற முடிவுடன் இருந்தாள்.

ஆனால், இரண்டு மாதங்களுக்குத்தான் அவளால் அப்படி இருக்க முடிந்தது. அவளுக்குத்தான் அபிராமியால் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது. அவனுக்கு என்ன? ஏன் அவனிடமிருந்து ஒரு கடிதமும் வரவில்லை? அவனுக்கு ஏதுமோ என்கிற பயம் அன்னையின் சொல்லையே மீற வைத்தது.

மூன்று மாதங்கள் கடந்த நிலையில் அவனுக்கு அனுப்பாமல், ‘To Mayuran’ என்று எழுதி மயூரனுக்கு நேரடியாக ஒரு கடிதம் எழுதினாள்.

அதில் கேசிகனைக் குறித்து அவள் கவலையுறுவதைச் சொல்லி, அவனுக்கு என்னாயிற்று, ஏன் தனக்குக் கடிதமே அனுப்புகிறான் இல்லை என்று விசாரித்திருந்தாள்.

மயூரனிடமிருந்தும் பதில் இல்லை. தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அன்னைக்குத் தெரியாமல் ஒருமுறை கேசிகனுக்கு அழைத்துப்பார்த்தாள். அந்த இலக்கம் புழக்கத்திலேயே இல்லை என்று அறிந்து முற்றிலுமாகத் துவண்டுபோனாள்.

முகப்புத்தகம், இன்ஸ்டா என்று எங்குத் தேடியும் அவனைக் கண்டடைய முடியவில்லை.

வேறு யார் மூலமும் அவளால் அவனைத் தொடர்புகொள்ள இயலாது. அவன் வீட்டினரின் இலக்கங்கள் அவளுக்குத் தெரியாது. அதை எடுப்பதாயின் அன்னை தந்தையின் கைப்பேசிகளில் இருந்துதான் எடுக்க வேண்டும். அப்படி எடுத்து அவர்களோடு பேசினாலும் என்ன கேட்பாள்? தப்பித்தவறி அது அன்னை தந்தை காதுக்கு வந்துவிட்டால்?
பரமேஸ்வரன் காதுக்குப் போனால்? யோசிக்கவே நடுங்கியது.

கேசிகன் கூட அவன் வீட்டினருக்குத் தெரியக் கூடாது என்றுதானே மயூரன் வீட்டுக்குக் கடிதம் போடச் சொன்னான்.

ஆக அவளிடம் இருக்கும் ஒரேயொருவன் மயூரன் மட்டுமே. அதில் விடாமல் மயூரனுக்கே கடிதம் எழுதிக்கொண்டிருந்தாள். இல்லையா தயவுபண்ணிக் கேசிகனிடம் சேர்த்துவிடுங்கள் என்று சொல்லிக் கேசிகனுக்கான கடிதம் அவன் பெயரில் பறந்தது.

இப்படி இருக்கையில்தான் ஒரு நாள் பிரித்துப் படிக்கப்பட்டிருந்த ஒரு கடிதத்தைக் கொண்டுவந்து நீட்டினார் அபிராமி. கூடவே, “அவ்வளவு சொல்லியும் கேக்காமக் கேசிக்குக் கடிதம் அனுப்பிக்கொண்டே இருந்திருக்கிறீங்க என்னம்மா?” என்கிற கேள்வியும் அவரிடமிருந்து வந்தது.

அவரை நிமிர்ந்து பார்க்க முடியாமல் தலையைக் குனிந்துகொண்டாள் நாவினி.

அந்தக் கடிதத்தை அனுப்பியது மயூரன். அவள் நலன் விசாரித்தவன் அங்கு எல்லோருமே நலமாக இருப்பதாக எழுதியிருந்தான். கடைசியில் தான் டுபாய்க்கு வேலைக்குப் போவதாகவும், இனித் தனக்குக் கடிதம் எதுவும் அனுப்ப வேண்டாம் என்றும் சொல்லி அவள் தலையில் இடியை இறக்கியிருந்தான்.

அதைவிட, ‘நல்லா படியும். நல்ல வேலைக்குப் போம். அங்கேயே உமக்கான எதிர்காலத்தைப் பாரும். அதுதான் எல்லாருக்கும் நல்லது.’ என்று வேறு எழுதியிருந்தான். பரிதவித்துப்போனாள் நாவினி.

கேசிகனைப் பற்றி ஒரு வார்த்தை இல்லையே. ஏன் இப்படி? அவனுக்கு என்னாயிற்று? அவள் நெஞ்சில் நீறு பூத்த நெருப்பாகப் படர்ந்தே கிடக்கும் இந்த நேசத்தை என்ன செய்யப்போகிறாள்?

ஒரு கட்டத்துக்கு மேல் முடியாமல், “அம்மா ப்ளீஸ்! அவரே எனக்கு நேரமில்லை, வேலையா இருக்கிறன் எண்டு சொல்லிப்போட்டுக் கடிதம் போடாம விட்டிருந்தா வேற. இது… இத எப்பிடி எடுக்கிறது எண்டே தெரியேல்ல. அவர் எப்பிடி இருக்கிறார் எண்டாவது கேட்டுச் சொல்ல மாட்டீங்களா? எனக்குப் பயமா இருக்கே.” என்று அழுதாள்.

அடுத்தநாள் அவன் நன்றாக இருக்கிறானாம் என்று விசாரித்துச் சொன்னார் அபிராமி.

அது ஒன்றுதான் அவளுக்குக் கிடைத்த ஆறுதல்.
 
Top Bottom