• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மன்னிப்பாயா காதலே - 8

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம் 8

‘மொழி சுப்பர் மார்க்கெட்’ல் தன் அலுவலக அறையில் அமர்ந்திருந்தான் கேசிகன். முதலில் மினி மார்க்கெட் என்று சின்னதாக ஆரம்பித்து, அது வளர ஆரம்பித்த நேரத்தில் இந்தக் கடையை எடுத்துக்கொண்டு வந்திருந்தான். அப்போது இதற்கும் மனைவியின் பெயரையே வைத்திருந்தான்.

இப்போது யாழ்ப்பாண டவுனில் இரண்டு மாடிகள் கொண்ட கடை ஒன்றினை எடுத்து வேலைகள் நடந்துகொண்டிருந்தன. அது இதைப் போன்று நான்கு மடங்கு பெரியது.

இது அத்தனையும் அவன் உழைப்பு. எப்போதும் இதற்குள் வந்தால் பெருமிதமாகவும் நிறைவாகவும் உணர்வான். ஆனால் இன்று, காலையில் நாவினியைப் பார்த்துவிட்டு வந்ததிலிருந்து மனத்தின் அலைப்புறுதல்கள் மீண்டும் மேலெழும்பி வந்திருந்தன.

உண்மை. இந்த அலைப்புறுதல்கள் அவனுக்கு இன்று நேற்று உருவானவையன்று. சரியாகச் சொல்லப்போனால் போனமுறை இலங்கை வந்த நாவினி, இவனைப் பார்ப்பதற்காக சைக்கிளில் வந்து நின்ற நாளிலிருந்து தொடங்கியது.

அவனுடைய மாமா வீட்டில் அவனுக்கென்று தனியாக அறை இல்லை. இரண்டு அறை, விறாந்தை, சமையற்கட்டு என்று அடக்கமான பழைய காலத்து வீடு அது. ஒன்று சுவாமி அறை. அங்குப் பெரிதாகப் புழங்கமாட்டார்கள். மற்ற அறையில் மாமா குடும்பம் இருப்பார்கள். இவன் விறாந்தையில் இருந்துதான் படிப்பான். அம்மம்மா, தாத்தா, அன்னை எல்லோரோடும் சேர்ந்து உறங்குவதும் அங்கேதான்.

அங்கே வைத்துக் கடிதங்கள் எழுத முடியாது. இவன் மச்சான் படிப்பில் மிகவுமே பின்தங்கியவன். அதில் எப்போதுமே இவனோடு அவனை ஒப்பிட்டே பேச்சு விழும். அதனாலேயே இவன் ஏதாவது தவறு செய்கிறானா என்று கண்கொத்திப் பாம்பாக அவன் இவனைக் கவனிப்பான். அதேபோல்தான் இவன் அத்தையும். இவனைக் கவனிப்பது அவரின் நாளாந்தக் கடமைகளில் ஒன்று.

அதில்தான் மயூரன் வீட்டுக்குப் படிக்கப் போகிறேன் என்று அங்குப் போய்க் கடிதங்கள் எழுதி அவளுக்கு அனுப்புவான். பிரேமாவுமே இவன் அங்கிருந்தால் ஏதாவது ஒரு வேலையைச் சொல்லிப் படிக்க விடமாட்டார்கள் என்று மயூரன் வீட்டுக்கு விரட்டிவிடுவார்.

பெரும்பாலும் கடிதத்தை எழுதி மயூரனிடமே அனுப்பும்படி கொடுத்துவிட்டு வருவான். இவனுக்கு டவுன் செல்லும் அலுவல்கள் இருந்தால் இவனே அனுப்புவான்.

அந்தக் கடிதங்களில் கூட அவனால் மனத்தை வெளிப்படுத்த முடிந்ததில்லை. அவள் சின்ன பெண் என்பது ஒரு புறமென்றால், அபிராமியோ நாகரத்தினமோ பிரித்துப் படித்தால் என்னாகும் என்கிற பயம் மறுபுறம் இருந்தது. கூடவே அபிராமியை அவனுக்குத் தெரியும். அவர் பெறாத பெண் அவள் என்பதனாலேயே நாவினியில் இரண்டு மடங்கு கவனமாக இருப்பார்.

அவளின் கைப்பேசி இலக்கத்தை இவன் கேட்டு எழுதியபோது கூட, அவர் யாருக்கும் கொடுக்கக் கூடாது என்று சொல்லியிருக்கிறார் என்று எழுதி அனுப்பியிருந்தாள்.

இப்படி இருக்கையில்தான் அவள் கடிதங்கள் வருவது நின்றிருந்தது. பார்த்து பார்த்து இருந்துவிட்டு ஒரு முறை அபிராமிக்கு நேராகவே அழைத்திருந்தான். நல்ல மாதிரித்தான் கதைத்தார். ஆனாலும் அவன் அப்படி அழைத்தது பிடிக்கவில்லையோ என்கிற எண்ணத்தை அவனுக்குள் தோற்றுவித்திருந்தார்.

அதுவே இன்னொரு முறை அழைக்கும் தைரியத்தைத் தரவில்லை. அப்படியே அழைத்தாலும் என்ன காரணம் சொல்லுவான், எப்படி அவளிடம் கொடுக்கச் சொல்லுவான்? முதல் முறை கேட்டபோதே அவள் வீட்டில் இல்லை என்றிருந்தார்.

கூடவே, “இனியெல்லாம் அங்க வந்து இருக்கிற ஐடியா எங்களுக்கு இல்லையப்பு. பிள்ளைகள் மூண்டு பேரின்ர வாழ்க்கையும் இஞ்சதான் எண்டேக்க நாங்களும் இஞ்சதானே.” என்று அவர் நாசுக்காகச் சொன்னது, பல பொருள்களில் அவனுக்கு வந்து சேர்ந்திருந்தது.

கிட்டத்தட்ட ஒரு வருடமாக அவளுக்குக் கடிதங்களாகப் போட்டு ஓய்ந்துபோனான். அந்த நேரத்தில்தான் மயூரனின் தங்கை நிறைமொழியைப் பேசினார்கள். திகைத்துப்போனான். அவன் கவனம் முழுக்க நாவினி மீதே இருந்ததில் நிறைமொழி என்று ஒருத்தி இருப்பது அவன் கருத்தில் பதிந்ததே இல்லை. இன்றானால்… யோசிக்கவே முடியவில்லை.

மயூரனின் தாத்தா தொண்ணூற்றி ஏழு வயதுவரை இருந்து இறந்தவர். அவர் இருந்த காலத்தில் அவர்களின் காணிக்குள்ளேயே ஒரு கொட்டில் வீடு மாதிரிப் போட்டு, அங்கு வைத்துத்தான் அவரைக் கவனித்துக்கொண்டனர். அவர் இறந்த பிறகு அந்தக் கொட்டில் மயூரன், கேசிகன் இருவரினதும் கூடாரமாகிற்று.

தொந்தரவுகள் இல்லாமல் அங்கிருந்துதான் படிப்பது, தொலைக்காட்சி பார்ப்பது எல்லாம். அதனாலேயே அங்கு வந்து கேசிகன் எழுதுகிற கடிதம் குறித்தும் யாருக்கும் தெரியாமல் போயிற்று. தபால்காரரும் அந்த ஊர் மனிதராக இருந்துவிட்டதில் மயூரனின் பெயருக்கு வருகிற கடிதங்களை வீதியில் நின்றே எட்டி அந்தக் கொட்டில் வீட்டினுள் போட்டுவிட்டுப் போய்விடுவார்.

இப்படி, தன் காதலை மறைத்து வைக்க அத்தனையும் வசதியாக அமைந்துபோயிற்று என்று அவன் நினைத்திருக்க, அப்படி மறைத்து வைத்ததே ஒரு திருமணப் பேச்சு எழுந்தபோது எதுவும் செய்ய முடியாமல் போயிற்று.

“மச்சான், உனக்கே தெரியும் என்ர விருப்பம் என்ன எண்டு. எதையாவது சொல்லி இந்தப் பேச்ச நிப்பாட்டடா.” என்று மயூரனிடம் சொல்லி, அப்போதைக்கு நிறுத்தியிருந்தான் கேசிகன்.

ஆனால், காலங்கள் போனதே தவிர நாவினியிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. அங்குப் போனதும் அவள் தன்னை மறந்துவிட்டாளோ, அவன் இப்போது தனக்குப் பொருத்தமில்லை என்று எண்ணிவிட்டாளோ, அவனை மணந்தால் இலங்கையில் வாழவேண்டி வந்துவிடும் என்று யோசிக்கிறாளோ என்கிற யோசனைகளை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வர ஆரம்பித்திருந்தன. அபிராமி வேறு பிள்ளைகளின் எதிர்காலம் இனி அங்கேதான் என்று குறிப்புக் கொடுத்திருந்தாரே.

அந்த நேரத்தில் அவளுக்கு இருபத்தி ஒன்று முடிந்திருந்தது. பெரிய பெண். அவன் வேண்டும் என்கிற முடிவில் அவள் உறுதியாக இருந்தால் நிச்சயமாக அவனைத் தொடர்புகொண்டிருக்க முடியும். அவளுக்கு அங்கே ஏதாவது பிரச்சனைகள் என்றால் கூட அவனைத் தொடர்புகொண்டு அதைப் பகிர்ந்திருக்கவும் முடியும். அப்படிச் செய்யாமல் இருக்கிறாள் என்றால் அவள் அவனை வேண்டாம் என்று நினைக்கிறாள் என்றுதானே பொருளாகிறது.

இந்தக் கேள்விகளும் குழப்பங்களும் யோசனைகளும் கொஞ்சம் கொஞ்சமாக அவனை அவளிடமிருந்து மனத்தளவில் விலக்கி நிறுத்த ஆரம்பித்திருந்தன. வருடக்கணக்கில் காத்திருந்து காத்திருந்து ஏமாற்றத்தை மட்டுமே பெற்றுக்கொண்டிருந்த மனத்தில் ஒருவிதமான கசப்பும் வெறுப்பும் படர ஆரம்பித்தது. அப்போதெல்லாம், ‘ஏதாவது கடிதம் வந்ததாடா?’ என்று மயூரனிடம் கேட்கக் கூட வெட்கினான்.

அதே நேரத்தில் திருமணத்திற்கான அழுத்தங்கள் அவனுக்கு எல்லா பக்கங்களில் இருந்தும் வர ஆரம்பித்தன.

இக்கட்டான நிலையில் அவன் இருந்த பொழுதுகளில் எல்லாம் அவனைத் தாங்கியவன் மயூரன். அந்த மயூரன் ஆரம்பத்தில் இவன் பக்கம் நின்று திருமணப் பேச்சைத் தடுத்திருந்தாலும் நாளடைவில் அவனுக்கும் அந்த ஆசை வந்திருப்பது இவனுக்குத் தெரிந்தது.

வாய் திறந்து அவனாகக் கேட்காதபோதிலும் தன் பதிலுக்காக, அதுவும் நல்ல பதிலுக்காகக் காத்திருக்கிறான் என்பதை உணர்த்தியபடியே இருந்தான் மயூரன்.

இத்தனை பிடிவாதமாக நின்று ஏன் மறுக்கிறாய், நிறைமொழிக்கு என்ன குறை என்கிற பிரேமாவின் கேள்விகளுக்கு வேறு அவனால் சரியான பதில்களைச் சொல்ல இயலவில்லை.

இன்னும் தொழிலில் கால் ஊன்றாமல், முக்கியமாக நாவினியோடு மனம் விட்டுக் கதைக்காமல், அவள் வீட்டினரோடு பேசாமல் அவனால் அவன் காதலை அவன் வீட்டிலோ மயூரன் வீட்டிலோ சொல்ல முடியவில்லை.

குறைந்தபட்சமாக அவனைப் போலவே நாவினியும் அவர்கள் நேசத்தில் உறுதியாக இருக்கிறாள் என்று தெரிந்திருந்தாலாவது துணிந்து வெளிப்படுத்தியிருப்பான். இது என்னை நேசிக்கிறாள் என்று எண்ணிக்கொண்டிருந்த பெண் இன்று சொல்லாமல் கொள்ளாமல் கைவிட்டுவிட்டாள் என்று சொல்வதை அவமானமாக உணர்ந்தான். அதைவிட அவனை முற்றிலுமாக ஒதுக்கிவைத்திருக்கும் ஒருத்தியை மறக்க முடியாமல் திருமணத்திற்கு மறுக்கிறேன் என்று சொல்வதை அவமானமாக உணர்ந்தான்.

உண்மையில் நாவினியின் இந்தப் புறக்கணிப்பைத் தன் தன்மானத்திற்கும் சுயமரியாதைக்கும் விழுந்த மிகப்பெரிய அடியாக நினைத்தான் கேசிகன்.

ஆனால், அவனை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு வாழ்ந்த பிரேமாவுக்கு நிறைமொழியைக் கட்டிவைத்தால் மகன் இதே ஊரிலேயே இருந்துவிடுவான் என்கிற எண்ணம். அதில் அவரும் விடாமல் அவளைக் கட்டு என்று அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருந்தார்.

இது எல்லாவற்றையும் விட மயூரன் வீட்டினரை எதிர்கொள்வதுதான் அவனுக்குப் பெரும் பிரச்சனையாக இருந்தது. இரு தரப்பும் வேறு வேறு ஊராக இருந்திருந்தால் கூட வேறு. ஒரே ஊர். மிக நன்றாகப் பழகுகிற இரண்டு குடும்பங்கள். அடிக்கடி மயூரன் வீட்டினரைச் சந்திக்கும் நிலையைத் தவிர்க்க முடியாது. அவர்களின் எதிர்பார்ப்பான பார்வைகளை ஒரு அளவு தாண்டி ஒதுக்கவும் முடியவில்லை.

அப்போதெல்லாம் அவர்கள் முகம் பார்க்கவே பெரும் சங்கடப்பட்டுப்போவான். முறையான காரணங்களைச் சொல்லி மறுத்திருந்தால் கூட வேறாயிற்றே. “என்ர மகளைப் பிடிக்கேல்லையா ஐயா? எங்களுக்குப் பெரிய வசதி இல்லையப்பு. நீங்க எண்டா பயப்பிடாம தரலாம். மகளும் நல்லாருப்பா எண்டு நினைச்சம்.” என்று அவன் முகம் பார்த்து மயூரனின் தந்தை சொன்னது அவனைப் பெரும் சங்கடத்தில் ஆழ்த்திற்று.

அவ்வளவு காலமும் கருத்திலேயே படாமல் இருந்த நிறைமொழி வேறு கண்களில் பட ஆரம்பித்தாள். அப்படிப் படுகிற பொழுதுகளில் எல்லாம் ஒருவிதமான எதிர்பார்ப்புடனும், வார்த்தைகளில் வடிக்க முடியா ஏக்கத்துடனும் அவள் பார்க்கும் பார்வைகள் அவளை நேருக்கு நேர் அவனைப் பார்க்க விடாமல் செய்தன.

இவன் தொடர் மௌனம் காக்கிறானே என்று மயூரன் வீட்டினர் அவளுக்கு வேறு திருமணத்திற்குப் பார்க்கவும் இல்லை.

இவை எல்லாம் நிறைமொழியோடான திருமணத்தை நோக்கி அவனை நகரத்தின. கடைசியாக என்று எண்ணி அபிராமிக்கு அழைத்தான். அவமானத்தில் முகம் கன்றியபோதும், போதும் நிப்பாட்டு என்று அறிவு அதட்டிச் சொன்னபோதும் அவளை இழந்துவிடக் கூடாது என்கிற ஏக்கம் திரும்ப திரும்ப முயற்சிக்க வைத்தது.

அத்தனை முயற்சியும் தோல்வியில் முடிந்ததுதான் வேதனை. அவர் எடுக்கவே இல்லை. கடைசியில், “அன்ட்ரி, உங்களோட ஒருக்கா கதைக்கோணும். எடுங்க ப்ளீஸ்.” என்று அனுப்பிய குறுந்தகவலுக்கும் பதில் இல்லை.

அதன் பிறகும் முயற்சி எடுக்கும் தைரியம் அவனுக்கு வரவில்லை. அவனுக்குள் நடந்துகொண்டிருக்கும் இந்தப் போராட்டங்களுக்கு எல்லாம் ஒரு முடிவு வேண்டுமாகவும் இருந்தது. கசப்பு, வெறுப்பு, விரக்தி, அவமானம் என்று என்னென்னவோ உணர்வுகள் எல்லாம் எழுந்து கொஞ்சம் கொஞ்சமாக அவனையே எரிப்பது போலிருக்கவும் எதைப் பற்றியும் யோசிக்காமல் திருமணத்திற்குச் சம்மதம் சொன்னான்
 

Vishakini

Moderator
Staff member
நிறைமொழியைக் கரம் பிடிக்கையில் இனி நாவினி தன் வாழ்க்கையில் இல்லை என்கிற உறுதியான முடிவுடன்தான் கரம்பிடித்தான். ஆனால், பழைய வாழ்க்கையை, பிறந்ததில் இருந்தே கூட வளர்ந்த ஒருத்தியை முற்றிலுமாகத் தன் நினைவுகளிலிருந்து அகற்றுவது அவனுக்கு இலகுவாக இல்லை.

அவள் மீதிருந்த ஈர்ப்பையும் நேசத்தையும் தாண்டி ஒரே தெருவில், நான்கைந்து வீடுகளின் இடைவெளியில் வசித்து, ஓடியாடி விளையாடி ஒன்றாக வளர்ந்தவர்கள். அவள் வெளிநாடு போன பிறகாக இருந்தாலும் சரி, அவன் நிறைமொழியை மணந்த பிறகாயிருந்தாலும் சரி அதே ஊரிலேயே அதே தெருவிலேயே வாசித்துக்கொண்டு இருப்பவன். அவளை முற்றிலுமாக மறக்க மிகவுமே சிரமப்பட்டான்.

ஆனாலும் அவனை முழு மனத்துடன் வாழ வைத்தவள் நிறைமொழி. அத்தனை புரிந்துணர்வுடன் கூடிய பெண். தனக்கு இளம் வயதில் ஒரு பெண்ணின் மீது நேசம் இருந்ததை அவன் அவளிடம் மறைக்கவில்லை. அது யார், என்ன என்கிற விபரங்களை மட்டும் சொல்லவில்லை. மயூரனிடமும் சொல்ல வேண்டாம் என்றுவிட்டான்.

அதைக் கூடப் புரிந்து நடந்தவளை எப்படி நேசிக்காமல் இருப்பான்? அந்நியோன்யமான, அழகான, அமைதியான, ஆத்மார்த்தமான வாழ்க்கை அவன் வாழ்ந்தது. அந்த நாள்களில் இப்படி ஒரு வாழ்க்கை அவனுக்கு அமைய வேண்டும் என்பதால்தான் நாவினியின் வெளிநாட்டுப் பயணம் அமைந்து, அவளாகவே விலகினாளோ என்று கூட நினைத்திருக்கிறான்.

ஆனால் அன்று, அவன் வீட்டின் முன்னால் கலங்கிய முகமும், கண்ணீர் நிரம்பிய விழிகளுமாக வந்து நின்ற நாவினி, அவள் குறித்து அவன் எடுத்திருந்த முடிவுகளை எல்லாம் பொய்யாக்கியிருந்தாள். அவன் மனநிலையைத் தலைகீழாக மாற்றி, அவனுக்குள் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணியிருந்தாள்.

அவன் எண்ணியதுபோல் வெளிநாட்டு வாழ்க்கையை எண்ணி அவனைத் தவிர்த்திருந்தால் இப்படி அவனைத் தேடி வந்து கண்ணீருடன் நின்றிருக்க மாட்டாளே!

தவறு ஏதும் செய்துவிட்டோமோ என்று பதறினான். நெஞ்சில் ஒரு துடிப்பு. பழைய நிகழ்வுகள் எல்லாம் மேலெழும்பி வந்தன. நிறைமொழியின் முகம் பார்க்கவே தயங்கினான். ஒரு தடுமாற்றம். செய்வதறியா நிலை.

ஆனால், இதெல்லாம் ஆரம்பத்திற்குத்தான். மெல்ல மெல்லத் தெளிந்தான். நிதானமாகச் சிந்தித்தான். அப்படியே தவறு நடந்திருந்தாலும் முடிந்தவை முடிந்தவைதான். யாரில் சரியோ பிழையோ அவன் வாழ்க்கை இனி அவன் மொழியோடு. நாவினியின் வாழ்க்கை அவளுக்கு ஏற்ற ஒருவனோடு என்கிற முடிவுக்கு வந்தான்.

அன்றைய நிலையில் இறந்த காலத்தினுள் புதைந்துபோன எதையும் அகழ்வாராய்ச்சி செய்து ஆராய்வதில் அவனுக்கு உடன்பாடில்லை. அதில்தான் போனமுறை முற்றிலுமாக அவளைத் தவிர்த்தான்.

இப்படி அறிவினால் சிந்தித்துச் சரியான முடிவு எடுத்து, அதன்படி நடந்தாலும் யாருமறியா உள்ளத்தின் அலைப்புறுதல் ஒன்று அவனிடம் இருந்துகொண்டேதான் இருந்தது.

கிட்டத்தட்ட சஜிதன் பிறக்கிற வரை அந்த நிலையில்தான் இருந்தான். ஆனால், இரண்டு நாள் பிள்ளைப் பேற்று வலியில் அவதியுற்று, இனி என்னால் முடியவே முடியாது என்று கதறித் தீர்த்து, குழந்தையைப் பெற்று எடுத்த நிறைமொழியைப் பார்த்த பிறகு, முற்றிலுமாக நாவினியின் நினைவுகளைப் புறம் தள்ளியிருந்தான். மனைவி, மகன் மட்டுமே அவன் வாழ்க்கையாகிப்போயினர்.

இதற்கு முதல் என்ன நடந்திருந்தாலும் அவன் இன்னொரு வாழ்விற்குள் போய்விட்டதை நேரிலேயே பார்த்துவிட்டுப் போயிருக்கிறாள். இனி அவளும் தன் வாழ்க்கையைப் பார்த்துக்கொள்வாள் என்று தெளிந்து, தன் வாழ்க்கையைப் பார்க்கையில்தான் மொழியின் மறைவு.

மொத்தமாக இடிந்துபோனான். அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீள்கையில் நாவினியின் குடும்பத்தின் மறைவு. துக்கம் பகிர எண்ணி மேனகாவோடு பேசியபோதுதான் அவளுக்கு இன்னும் திருமணமாகவில்லை என்பது தெரிய வந்திருந்தது.

அன்றிலிருந்து திரும்பவும் அதே அலைப்புறுதல். இந்தப் பெண் ஏன் இன்னும் தன் வாழ்க்கையைப் பார்க்காமல் இருக்கிறாள், அப்படியே அவன் பக்கம்தான் தவறு என்றாலும் இப்படித் தேங்கி நின்று என்ன காணப்போகிறாள், ஒரு வாழ்க்கைக்குள் போயிருக்க இன்றைக்கு அந்தக் கணவன் இருந்திருப்பானே என்று அவன் நிம்மதி மறுபடியும் பறிபோயிற்று.

நேற்று நேரில் கண்டதிலிருந்து இந்த அலைப்புறுதல்கள் அதிகமாயிற்று.

அப்போது கதவைத் திறந்துகொண்டு வந்தான் மயூரன். திருமணமாகி இரண்டு குழந்தைகள். கொக்குவிலில் வசிக்கிறான். அதனால்தான் யாழ்ப்பாணக் கடையின் பொறுப்பை அவனிடம் கொடுத்திருந்தான்.

“என்ன மச்சான், ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய்?” இவனைப் பார்த்ததும் விசாரித்தான் மயூரன்.

“நவி… அது நாவினி வந்திருக்கிறாள்.”

“ஓ!” என்ற மயூரனின் முகம் இலேசாக மாறிற்று. எழுந்துபோய் இருவருக்கும் அருந்துவதற்குத் தேநீர் வாங்கிக்கொண்டு வந்தான். மௌனமாகவே பருகிமுடித்தனர்.

ஆனால், மயூரனின் விழிகள் நண்பனையே கூர்ந்தன.

அந்தப் பார்வை தன்னைக் குற்றம் சாட்டுவது போலிருக்க, “என்னை ஏனடா பாக்கிறாய்?” என்றான் கேசிகன்.

ஒன்றுமில்லை என்பதுபோல் இலேசாகத் தலையசைத்தான் மயூரன். இவன் மீதே பார்வை இருக்க அப்படி அவன் அசைத்த விதம், உன் நடவடிக்கை சரியில்லை என்று சொல்வது போலிருந்தது கேசிகனுக்கு.

“பிழை ஏதும் விட்டுட்டனோ எண்டு இருக்கு மச்சான்.” என்றான் அவனைப் பாராமல்.

“மொழியைக் கட்டினதையா?” மயூரன் கேட்டு முடிக்க முதலே, “லூசா நீ?” என்று சீறியிருந்தான் அவன்.

“அவள் என்ர மனுசி. அவளும் நானும் வாழ்ந்த வாழ்க்கை எப்பிடியானது எண்டு எனக்குத்தான் தெரியும். நான் அதச் சொல்லேல்ல. நாவினி… அவள் இன்னும் தனியாவே நிக்கிறது உறுத்துது மச்சான்.” என்றுவிட்டு எழுந்துபோய் ஜன்னலோரம் நின்றான்.

“நான் சும்மா இருந்திருந்தா கூட அந்தப் பிள்ளை தன்ர வாழ்க்கையைப் பாத்துக்கொண்டு போயிருப்பா. இவ்வளவு காலத்துக்க கட்டி, ரெண்டு பிள்ளை கூட இருந்திருக்கலாம். இது… ஆசை காட்டி அவளின்ர வாழ்க்கையை மோசம் செய்திட்டனோ, இப்பிடி அவள் தனியா நிக்க நானும் ஒரு காரணமோ எண்டு என்னென்னவோ எல்லாம் மண்டைக்க ஓடுதடா.” என்றான் இப்போதும் அவனைப் பாராமல்.

“அதைவிட ஆளைப் பாக்க மாட்டாய். நாவினியா எண்டு இருக்கு. அந்தளவுக்கு மெலிஞ்சு, ஆளே உருக்குலைஞ்சு…” என்றவனுக்கு மேலே என்ன பேசுவது என்று கூடத் தெரியவில்லை.

“இனி என்ன செய்யாலாம் எண்டு இருக்கிறாய்?”

“நான் என்ன செய்ய இருக்கு?” புருவங்கள் சுருங்க இவனைத் திரும்பிப் பார்த்து வினவினான் அவன்.

“அந்தத் தெளிவு இருந்தா இந்தக் குழப்பம் உனக்கு வராது.”

அப்படி இல்லை என்று தலையைக் குறுக்காக அசைத்தான் கேசிகன். “ரெண்டு பேரும் கதைச்சுப் பேசி, இது சரிவராது எண்டு முடிவெடுத்துப் பிரிஞ்சு, அதுக்குப் பிறகு நான் என்ர வாழ்க்கையப் பாத்திருந்தா அது வேற. இது என்ன நடந்தது எண்டு தெரியாமயே நான் நகர்ந்து வந்திட்டன். என்னால முடிஞ்ச அத்தனை முயற்சியையும் எடுத்தனான்தான். எண்டாலும் ஏதும் பிழை விட்டுட்டனோ எண்டுற எண்ணம் என்னை விட்டுப் போகுதே இல்ல. அவள் ஒரு வாழ்க்கைக்க போய்ட்டாள் எண்டா எனக்கு நிம்மதியா இருக்கும் எண்டு பாத்தா அதுவும் நடக்குது இல்ல.”

“அப்ப நீ?”

“எனக்கு என்ன?”

“உனக்கும் ஒரு வாழ்க்கை வேணும் மச்சான்.”

“எனக்கு என்ர மொழியே காணும்.” என்றவனின் மனம் நிறைமொழியைத் தேடிற்று.

இந்த விபத்துகள் எல்லாம் நடக்காமல் இருந்திருக்கக் கூடாதா? அவன் இங்கே அவன் மனைவியோடும், அவள் அங்கே அவள் குடும்பத்தினரோடும் நிம்மதியாக இருந்திருப்பார்கள். யார் யாரோ எல்லாம் செய்கிற தவறுகளுக்கு வாழ் நாள் தண்டனை இவர்களுக்கு.

“மச்சான்… நீயே ஏன் அவளை…” என்றவனை இந்த முறையும், “மயூரன் நிப்பாட்டு!” என்று அதட்டி நிறுத்தியிருந்தான் கேசிகன்.

மயூரன் சொல்ல வந்ததை முழுமையாகச் சொல்ல முடியாமல் நின்றான்.

“எனக்காக ஒரேயொரு உதவி மட்டும் செய்.”

“என்ன?”

“நீ எப்பிடியும் அவளைப் பாக்கப் போவாய்தானே?”

“போகத்தான் வேணும்.” என்றான் மயூரன்.

“இனி என்ன பிளான்ல இருக்கிறாள் எண்டு சும்மா விசாரிச்சுப் பார். கலியாணம் ஒண்டைக் கட்டச் சொல்லு. எனக்கு… எனக்கு இதையெல்லாம் அவளின்ர முகம் பாத்துக் கதைக்கேலும் மாதிரி இல்ல.” என்றவனுக்கு ஏன் இந்த உறுத்தல் நெருஞ்சி முள்ளாக அவனைக் குத்துகிறது என்று விளங்கவேயில்லை.

அன்று பார்த்த அவள் கண்ணீரா, இன்றுவரை ஏன் இப்படி நடந்தாய் என்று ஒரு வார்த்தை கூடக் கேளாமல் அவள் விலகி நிற்பதா என்ன என்று ஒன்றும் புரியவில்லை.

“எவ்வளவு யோசிச்சும் என்ர பக்கத்தில இருந்து நான் எந்தப் பிழையும் செய்த மாதிரி எனக்குத் தெரியேல்ல மச்சான். உனக்கே தெரியும், அவளா எனக்குக் கடிதம் போடுறதை விட்ட பிறகுதான்… அதுவும் கிட்டத்தட்ட ரெண்டு வருசத்துக்கும் மேல எந்தப் பேச்சு வார்த்தையும் இல்லை எண்ட பிறகுதான் மூவ் ஆகினனான். ஆனா இப்ப…” என்று ஆழ்ந்த மூச்சு ஒன்றை இழுத்துவிட்டான்.

“இதையெல்லாம் இப்ப யோசிக்கிறதால ஒரு பிரயோசனமும் இல்லை எண்டும் தெரியுது. அதே நேரம் என்ர பக்கம் பிழை இல்லை எண்டு உறுதியா தெரிஞ்சிட்டா கொஞ்சம் நிம்மதியா இருக்கும் மாதிரியும் இருக்கு.” மயூரனிடம் மட்டுமே தன் மனக்கிலேசங்களைக் கொட்ட முடியும் என்பதில் கொட்டினான்.

எழுந்து வந்து ஆறுதலாக அவன் தோளைத் தட்டினான் மயூரன்.

“விசாரி மச்சான் ப்ளீஸ்.” என்றான் அப்போதும் அலைப்புற்ற மனத்தோடு.

“நான் கதைக்கிறன். அத விடு. ஆனா நீ இப்பிடி இருக்காத. அப்பிடியே உன்னில பிழை இருந்தாலும் என்னதான் செய்யேலும்? தெரிஞ்சோ, வேணுமெண்டோ நீ அவாவை ஏமாத்தியிருந்தாத்தான் பிழை. உன்னோடயே இருந்தவன் நான். நான் சொல்லுறன், நீ எந்தப் பிழையும் செய்யேல்ல. அப்பிடியே ஏதாவது நடந்திருந்தா அது உன்னை மீறி நடந்ததாத்தான் இருக்கும். அதால இதையெல்லாம் யோசிச்சுக் குழம்பாத. இல்ல, அந்தப் பிள்ளையைக் கட்டுற பிளான் இருந்தா…” என்றவனை வேகமாக இடையிட்டு,

“ப்ளீஸ் மச்சான்! திரும்ப திரும்ப அதையே கதைக்காத. அதக் கேக்கவே மொழிக்குத் துரோகம் செய்ற மாதிரி இருக்கு. ஏற்கனவே நாவினிக்குப் பிழை செய்திட்டனோ எண்டு என்னை அறுக்கிற இந்தத் துன்பமே போதும்.” என்று அந்தப் பேச்சுக்கே முற்றுப்புள்ளி வைத்தான் கேசிகன்.
 

vidhya s

Member
நாவினிய விட மொழி மேல தா கேசிகனுக்கு லவ் அதிகமா இருக்கும் போல அதனால நாவினிய கல்யாணம் பண்ணாம நீ மொழிய நெனச்சிட்டே வாழ்ந்திரு
 

Chitra ganesan

Active member
கேசிகன் உனக்கு துரோகம் புதுசா என்ன?ஒரு சின்ன பொண்ணை நம்ப வச்சி ஏமாத்தி ரொம்ப சந்தோஷமா,குற்ற உணர்வே இல்லாம வாழ்ந்து குழந்தை பெற்று இருக்கிறாயே.
 
ரஞ்சனையே தூக்கி சாப்ட்ருவான் போல...இதுல பேச்சுக்கு ஒண்ணும் குறையில்ல 😡😡
 
கடிதம் வரவில்லை என்று இரண்டு பேரும் கவலை கொண்டு உள்ளனர்.. மயூரன் ரெண்டுபகமும் விளையாடிவிட்டார் போல.. தன் தங்கை மற்றும் குடும்பத்திற்காக.. சந்தர்ப்பவாத மனிதர்கள்.. தெய்வம் நின்று கொள்ளும் என்பது உண்மை தான். மொழி சூழ்நிலைகளால் இப்போது இல்லை.
 
நாவினிய விட மொழி மேல தா கேசிகனுக்கு லவ் அதிகமா இருக்கும் போல அதனால நாவினிய கல்யாணம் பண்ணாம நீ மொழிய நெனச்சிட்டே வாழ்ந்திரு
Correct. Ne thaniyave irunthuru KC.
 
Top Bottom