அத்தியாயம் 8
‘மொழி சுப்பர் மார்க்கெட்’ல் தன் அலுவலக அறையில் அமர்ந்திருந்தான் கேசிகன். முதலில் மினி மார்க்கெட் என்று சின்னதாக ஆரம்பித்து, அது வளர ஆரம்பித்த நேரத்தில் இந்தக் கடையை எடுத்துக்கொண்டு வந்திருந்தான். அப்போது இதற்கும் மனைவியின் பெயரையே வைத்திருந்தான்.
இப்போது யாழ்ப்பாண டவுனில் இரண்டு மாடிகள் கொண்ட கடை ஒன்றினை எடுத்து வேலைகள் நடந்துகொண்டிருந்தன. அது இதைப் போன்று நான்கு மடங்கு பெரியது.
இது அத்தனையும் அவன் உழைப்பு. எப்போதும் இதற்குள் வந்தால் பெருமிதமாகவும் நிறைவாகவும் உணர்வான். ஆனால் இன்று, காலையில் நாவினியைப் பார்த்துவிட்டு வந்ததிலிருந்து மனத்தின் அலைப்புறுதல்கள் மீண்டும் மேலெழும்பி வந்திருந்தன.
உண்மை. இந்த அலைப்புறுதல்கள் அவனுக்கு இன்று நேற்று உருவானவையன்று. சரியாகச் சொல்லப்போனால் போனமுறை இலங்கை வந்த நாவினி, இவனைப் பார்ப்பதற்காக சைக்கிளில் வந்து நின்ற நாளிலிருந்து தொடங்கியது.
அவனுடைய மாமா வீட்டில் அவனுக்கென்று தனியாக அறை இல்லை. இரண்டு அறை, விறாந்தை, சமையற்கட்டு என்று அடக்கமான பழைய காலத்து வீடு அது. ஒன்று சுவாமி அறை. அங்குப் பெரிதாகப் புழங்கமாட்டார்கள். மற்ற அறையில் மாமா குடும்பம் இருப்பார்கள். இவன் விறாந்தையில் இருந்துதான் படிப்பான். அம்மம்மா, தாத்தா, அன்னை எல்லோரோடும் சேர்ந்து உறங்குவதும் அங்கேதான்.
அங்கே வைத்துக் கடிதங்கள் எழுத முடியாது. இவன் மச்சான் படிப்பில் மிகவுமே பின்தங்கியவன். அதில் எப்போதுமே இவனோடு அவனை ஒப்பிட்டே பேச்சு விழும். அதனாலேயே இவன் ஏதாவது தவறு செய்கிறானா என்று கண்கொத்திப் பாம்பாக அவன் இவனைக் கவனிப்பான். அதேபோல்தான் இவன் அத்தையும். இவனைக் கவனிப்பது அவரின் நாளாந்தக் கடமைகளில் ஒன்று.
அதில்தான் மயூரன் வீட்டுக்குப் படிக்கப் போகிறேன் என்று அங்குப் போய்க் கடிதங்கள் எழுதி அவளுக்கு அனுப்புவான். பிரேமாவுமே இவன் அங்கிருந்தால் ஏதாவது ஒரு வேலையைச் சொல்லிப் படிக்க விடமாட்டார்கள் என்று மயூரன் வீட்டுக்கு விரட்டிவிடுவார்.
பெரும்பாலும் கடிதத்தை எழுதி மயூரனிடமே அனுப்பும்படி கொடுத்துவிட்டு வருவான். இவனுக்கு டவுன் செல்லும் அலுவல்கள் இருந்தால் இவனே அனுப்புவான்.
அந்தக் கடிதங்களில் கூட அவனால் மனத்தை வெளிப்படுத்த முடிந்ததில்லை. அவள் சின்ன பெண் என்பது ஒரு புறமென்றால், அபிராமியோ நாகரத்தினமோ பிரித்துப் படித்தால் என்னாகும் என்கிற பயம் மறுபுறம் இருந்தது. கூடவே அபிராமியை அவனுக்குத் தெரியும். அவர் பெறாத பெண் அவள் என்பதனாலேயே நாவினியில் இரண்டு மடங்கு கவனமாக இருப்பார்.
அவளின் கைப்பேசி இலக்கத்தை இவன் கேட்டு எழுதியபோது கூட, அவர் யாருக்கும் கொடுக்கக் கூடாது என்று சொல்லியிருக்கிறார் என்று எழுதி அனுப்பியிருந்தாள்.
இப்படி இருக்கையில்தான் அவள் கடிதங்கள் வருவது நின்றிருந்தது. பார்த்து பார்த்து இருந்துவிட்டு ஒரு முறை அபிராமிக்கு நேராகவே அழைத்திருந்தான். நல்ல மாதிரித்தான் கதைத்தார். ஆனாலும் அவன் அப்படி அழைத்தது பிடிக்கவில்லையோ என்கிற எண்ணத்தை அவனுக்குள் தோற்றுவித்திருந்தார்.
அதுவே இன்னொரு முறை அழைக்கும் தைரியத்தைத் தரவில்லை. அப்படியே அழைத்தாலும் என்ன காரணம் சொல்லுவான், எப்படி அவளிடம் கொடுக்கச் சொல்லுவான்? முதல் முறை கேட்டபோதே அவள் வீட்டில் இல்லை என்றிருந்தார்.
கூடவே, “இனியெல்லாம் அங்க வந்து இருக்கிற ஐடியா எங்களுக்கு இல்லையப்பு. பிள்ளைகள் மூண்டு பேரின்ர வாழ்க்கையும் இஞ்சதான் எண்டேக்க நாங்களும் இஞ்சதானே.” என்று அவர் நாசுக்காகச் சொன்னது, பல பொருள்களில் அவனுக்கு வந்து சேர்ந்திருந்தது.
கிட்டத்தட்ட ஒரு வருடமாக அவளுக்குக் கடிதங்களாகப் போட்டு ஓய்ந்துபோனான். அந்த நேரத்தில்தான் மயூரனின் தங்கை நிறைமொழியைப் பேசினார்கள். திகைத்துப்போனான். அவன் கவனம் முழுக்க நாவினி மீதே இருந்ததில் நிறைமொழி என்று ஒருத்தி இருப்பது அவன் கருத்தில் பதிந்ததே இல்லை. இன்றானால்… யோசிக்கவே முடியவில்லை.
மயூரனின் தாத்தா தொண்ணூற்றி ஏழு வயதுவரை இருந்து இறந்தவர். அவர் இருந்த காலத்தில் அவர்களின் காணிக்குள்ளேயே ஒரு கொட்டில் வீடு மாதிரிப் போட்டு, அங்கு வைத்துத்தான் அவரைக் கவனித்துக்கொண்டனர். அவர் இறந்த பிறகு அந்தக் கொட்டில் மயூரன், கேசிகன் இருவரினதும் கூடாரமாகிற்று.
தொந்தரவுகள் இல்லாமல் அங்கிருந்துதான் படிப்பது, தொலைக்காட்சி பார்ப்பது எல்லாம். அதனாலேயே அங்கு வந்து கேசிகன் எழுதுகிற கடிதம் குறித்தும் யாருக்கும் தெரியாமல் போயிற்று. தபால்காரரும் அந்த ஊர் மனிதராக இருந்துவிட்டதில் மயூரனின் பெயருக்கு வருகிற கடிதங்களை வீதியில் நின்றே எட்டி அந்தக் கொட்டில் வீட்டினுள் போட்டுவிட்டுப் போய்விடுவார்.
இப்படி, தன் காதலை மறைத்து வைக்க அத்தனையும் வசதியாக அமைந்துபோயிற்று என்று அவன் நினைத்திருக்க, அப்படி மறைத்து வைத்ததே ஒரு திருமணப் பேச்சு எழுந்தபோது எதுவும் செய்ய முடியாமல் போயிற்று.
“மச்சான், உனக்கே தெரியும் என்ர விருப்பம் என்ன எண்டு. எதையாவது சொல்லி இந்தப் பேச்ச நிப்பாட்டடா.” என்று மயூரனிடம் சொல்லி, அப்போதைக்கு நிறுத்தியிருந்தான் கேசிகன்.
ஆனால், காலங்கள் போனதே தவிர நாவினியிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. அங்குப் போனதும் அவள் தன்னை மறந்துவிட்டாளோ, அவன் இப்போது தனக்குப் பொருத்தமில்லை என்று எண்ணிவிட்டாளோ, அவனை மணந்தால் இலங்கையில் வாழவேண்டி வந்துவிடும் என்று யோசிக்கிறாளோ என்கிற யோசனைகளை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வர ஆரம்பித்திருந்தன. அபிராமி வேறு பிள்ளைகளின் எதிர்காலம் இனி அங்கேதான் என்று குறிப்புக் கொடுத்திருந்தாரே.
அந்த நேரத்தில் அவளுக்கு இருபத்தி ஒன்று முடிந்திருந்தது. பெரிய பெண். அவன் வேண்டும் என்கிற முடிவில் அவள் உறுதியாக இருந்தால் நிச்சயமாக அவனைத் தொடர்புகொண்டிருக்க முடியும். அவளுக்கு அங்கே ஏதாவது பிரச்சனைகள் என்றால் கூட அவனைத் தொடர்புகொண்டு அதைப் பகிர்ந்திருக்கவும் முடியும். அப்படிச் செய்யாமல் இருக்கிறாள் என்றால் அவள் அவனை வேண்டாம் என்று நினைக்கிறாள் என்றுதானே பொருளாகிறது.
இந்தக் கேள்விகளும் குழப்பங்களும் யோசனைகளும் கொஞ்சம் கொஞ்சமாக அவனை அவளிடமிருந்து மனத்தளவில் விலக்கி நிறுத்த ஆரம்பித்திருந்தன. வருடக்கணக்கில் காத்திருந்து காத்திருந்து ஏமாற்றத்தை மட்டுமே பெற்றுக்கொண்டிருந்த மனத்தில் ஒருவிதமான கசப்பும் வெறுப்பும் படர ஆரம்பித்தது. அப்போதெல்லாம், ‘ஏதாவது கடிதம் வந்ததாடா?’ என்று மயூரனிடம் கேட்கக் கூட வெட்கினான்.
அதே நேரத்தில் திருமணத்திற்கான அழுத்தங்கள் அவனுக்கு எல்லா பக்கங்களில் இருந்தும் வர ஆரம்பித்தன.
இக்கட்டான நிலையில் அவன் இருந்த பொழுதுகளில் எல்லாம் அவனைத் தாங்கியவன் மயூரன். அந்த மயூரன் ஆரம்பத்தில் இவன் பக்கம் நின்று திருமணப் பேச்சைத் தடுத்திருந்தாலும் நாளடைவில் அவனுக்கும் அந்த ஆசை வந்திருப்பது இவனுக்குத் தெரிந்தது.
வாய் திறந்து அவனாகக் கேட்காதபோதிலும் தன் பதிலுக்காக, அதுவும் நல்ல பதிலுக்காகக் காத்திருக்கிறான் என்பதை உணர்த்தியபடியே இருந்தான் மயூரன்.
இத்தனை பிடிவாதமாக நின்று ஏன் மறுக்கிறாய், நிறைமொழிக்கு என்ன குறை என்கிற பிரேமாவின் கேள்விகளுக்கு வேறு அவனால் சரியான பதில்களைச் சொல்ல இயலவில்லை.
இன்னும் தொழிலில் கால் ஊன்றாமல், முக்கியமாக நாவினியோடு மனம் விட்டுக் கதைக்காமல், அவள் வீட்டினரோடு பேசாமல் அவனால் அவன் காதலை அவன் வீட்டிலோ மயூரன் வீட்டிலோ சொல்ல முடியவில்லை.
குறைந்தபட்சமாக அவனைப் போலவே நாவினியும் அவர்கள் நேசத்தில் உறுதியாக இருக்கிறாள் என்று தெரிந்திருந்தாலாவது துணிந்து வெளிப்படுத்தியிருப்பான். இது என்னை நேசிக்கிறாள் என்று எண்ணிக்கொண்டிருந்த பெண் இன்று சொல்லாமல் கொள்ளாமல் கைவிட்டுவிட்டாள் என்று சொல்வதை அவமானமாக உணர்ந்தான். அதைவிட அவனை முற்றிலுமாக ஒதுக்கிவைத்திருக்கும் ஒருத்தியை மறக்க முடியாமல் திருமணத்திற்கு மறுக்கிறேன் என்று சொல்வதை அவமானமாக உணர்ந்தான்.
உண்மையில் நாவினியின் இந்தப் புறக்கணிப்பைத் தன் தன்மானத்திற்கும் சுயமரியாதைக்கும் விழுந்த மிகப்பெரிய அடியாக நினைத்தான் கேசிகன்.
ஆனால், அவனை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு வாழ்ந்த பிரேமாவுக்கு நிறைமொழியைக் கட்டிவைத்தால் மகன் இதே ஊரிலேயே இருந்துவிடுவான் என்கிற எண்ணம். அதில் அவரும் விடாமல் அவளைக் கட்டு என்று அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருந்தார்.
இது எல்லாவற்றையும் விட மயூரன் வீட்டினரை எதிர்கொள்வதுதான் அவனுக்குப் பெரும் பிரச்சனையாக இருந்தது. இரு தரப்பும் வேறு வேறு ஊராக இருந்திருந்தால் கூட வேறு. ஒரே ஊர். மிக நன்றாகப் பழகுகிற இரண்டு குடும்பங்கள். அடிக்கடி மயூரன் வீட்டினரைச் சந்திக்கும் நிலையைத் தவிர்க்க முடியாது. அவர்களின் எதிர்பார்ப்பான பார்வைகளை ஒரு அளவு தாண்டி ஒதுக்கவும் முடியவில்லை.
அப்போதெல்லாம் அவர்கள் முகம் பார்க்கவே பெரும் சங்கடப்பட்டுப்போவான். முறையான காரணங்களைச் சொல்லி மறுத்திருந்தால் கூட வேறாயிற்றே. “என்ர மகளைப் பிடிக்கேல்லையா ஐயா? எங்களுக்குப் பெரிய வசதி இல்லையப்பு. நீங்க எண்டா பயப்பிடாம தரலாம். மகளும் நல்லாருப்பா எண்டு நினைச்சம்.” என்று அவன் முகம் பார்த்து மயூரனின் தந்தை சொன்னது அவனைப் பெரும் சங்கடத்தில் ஆழ்த்திற்று.
அவ்வளவு காலமும் கருத்திலேயே படாமல் இருந்த நிறைமொழி வேறு கண்களில் பட ஆரம்பித்தாள். அப்படிப் படுகிற பொழுதுகளில் எல்லாம் ஒருவிதமான எதிர்பார்ப்புடனும், வார்த்தைகளில் வடிக்க முடியா ஏக்கத்துடனும் அவள் பார்க்கும் பார்வைகள் அவளை நேருக்கு நேர் அவனைப் பார்க்க விடாமல் செய்தன.
இவன் தொடர் மௌனம் காக்கிறானே என்று மயூரன் வீட்டினர் அவளுக்கு வேறு திருமணத்திற்குப் பார்க்கவும் இல்லை.
இவை எல்லாம் நிறைமொழியோடான திருமணத்தை நோக்கி அவனை நகரத்தின. கடைசியாக என்று எண்ணி அபிராமிக்கு அழைத்தான். அவமானத்தில் முகம் கன்றியபோதும், போதும் நிப்பாட்டு என்று அறிவு அதட்டிச் சொன்னபோதும் அவளை இழந்துவிடக் கூடாது என்கிற ஏக்கம் திரும்ப திரும்ப முயற்சிக்க வைத்தது.
அத்தனை முயற்சியும் தோல்வியில் முடிந்ததுதான் வேதனை. அவர் எடுக்கவே இல்லை. கடைசியில், “அன்ட்ரி, உங்களோட ஒருக்கா கதைக்கோணும். எடுங்க ப்ளீஸ்.” என்று அனுப்பிய குறுந்தகவலுக்கும் பதில் இல்லை.
அதன் பிறகும் முயற்சி எடுக்கும் தைரியம் அவனுக்கு வரவில்லை. அவனுக்குள் நடந்துகொண்டிருக்கும் இந்தப் போராட்டங்களுக்கு எல்லாம் ஒரு முடிவு வேண்டுமாகவும் இருந்தது. கசப்பு, வெறுப்பு, விரக்தி, அவமானம் என்று என்னென்னவோ உணர்வுகள் எல்லாம் எழுந்து கொஞ்சம் கொஞ்சமாக அவனையே எரிப்பது போலிருக்கவும் எதைப் பற்றியும் யோசிக்காமல் திருமணத்திற்குச் சம்மதம் சொன்னான்