• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மரகத மாமன் - 4

நிதனிபிரபு

Administrator
Staff member
மரகத மாமன் 4

"உம்ம தங்கச்சியை எனக்குக் கட்டிக் கொடுப்பியலா?" என மணிவாசகம் கேட்டதும் அவனைக் கூர்ந்து பார்த்தான் கதிர்மாறன்.

மணிவாசகம் அவ்வாறு கேட்டதில் அவனுக்குப் பெரும் அதிர்ச்சி தான். ஆனால் எது அவனை அவ்வாறு கேட்கத் தூண்டியது என்று தான் முதலில் தோன்றியது கதிர்மாறனுக்கு.

"எதனால இப்படிக் கேட்கனும்னு தோணுச்சு உங்களுக்கு?" எனக் கேட்டான் கதிர்மாறன்.

"அவியலப் பார்த்ததும் பிடிச்சி போய்த் தான் கேட்குதேன் தம்பி! கட்டிக் கொடுப்பியலா?" என மீண்டுமாய்க் கேட்டான் மணிவாசகம்.

காலையில் கோவிலில் நடந்தவைகளை நினைத்துப் பார்த்தான் கதிர்மாறன்.

மணிவாசகம் வலியச் சென்று தனது தங்கையிடம் பேசியதை இயல்பாய்ப் பேசுவதாகத் தான் நினைத்திருக்க, இவன் மனத்தில் ஆசையை வைத்துக் கொண்டு பேசியிருக்கிறானோ என்று நினைத்த கதிர்மாறன், "அவளைத் தாவணில பார்த்ததும் பட்டிக்காட்டுப் பொண்ணுன்னு நினைச்சிட்டீங்களா? அவ வாழ்க்கைலயே மொத மொறையா தாவணி கட்டினது இன்னிக்குத் தான். உங்களுக்குலாம் அவ செட் ஆக மாட்டா மாமா" என்றான்.

இதழ் விரிய மென்னகைப் புரிந்தான் மணிவாசகம்.

"நான் அவியலுக்குப் பொருந்த மாட்டேன்னு சொல்லாம, எனக்கு அவிய பொருந்த மாட்டாவனு என்னோட தன்மானம் அடிப்படக் கூடாதுனு எப்டி நேக்கா பேசுதிய" என்று சிரித்தான் மணிவாசகம்.

மென்னகையுடன் மணிவாசகத்தைப் பார்த்த கதிர்மாறன், "யார் மனசையும் சங்கடப்படுத்தாம வாழனும்னு அம்மா சொல்லிக் கொடுத்திருக்காங்க" என்றான்.

"ஆனா அப்படி இருக்கவியல தானே அம்பிட்டு பேரும் கஷ்டப்படுத்துவாவ" என்றான் மணிவாசகம் வேதனைக் குரலில்.

"அதெல்லாம் எக்கசக்கமா அடி வாங்கியாச்சு மாமா. ஆனாலும் பிடிக்கலைனாலும் ஒதுங்கிப் போகத் தான் மனசு சொல்லுதே தவிரச் சண்டைப் போட முடியுறது இல்ல" என்று பெருமூச்சு விட்டான் கதிர்மாறன்.

அவனது பேச்சில் அத்தனை ஆற்றாமையும் வலியையும் உணர்ந்த மணிவாசகம்,

"அன்னக்கிளியக்கா மாதிரியே பேசுறியலே! பிள்ளயலை நல்லா வளர்த்திருக்காவ அக்கா" அவனை ஆற்றுப்படுத்த உரைத்தான்.

அதற்கும் மென்னகைப் புரிந்தான் கதிர்மாறன்.

"நானும் அப்புவும் மலேசியா சிங்கப்பூர்ல வேலைப் பார்த்துட்டு இருக்கோம். எங்களோட லைஃப் ஸ்டைல் வேற மாமா" என்றான் கதிர்மாறன்.

அவனது பதிலிலேயே தனக்கு அவளை மணம் முடித்து வைப்பதில் அவனுக்கு விருப்பமில்லை என்பது தெளிவாய் புரிந்த போதும்,

"எனக்குத் தெரியும் உம்ம தகுதிக்கு நான் பொருந்த மாட்டேன் தான். ஆனா கட்டிக்குறவளை மனம் கோணாம ராசாத்தியாட்டம் பாத்துக்கிடுற வசதியும் திடமும் எனக்கு இருக்கு தம்பி" என்றான்.

சட்டென வேண்டாம் என்று சொல்ல மனம் வரவில்லை கதிர்மாறனுக்கு.

"சரி நீங்க ஏன் இவ்வளோ நாளா கல்யாணம் செஞ்சிக்கலை" எனக் கேட்டான் கதிர்மாறன்.

சட்டென அவன் முகம் சுருங்கிப் போனது.

"தம்பி தப்பா நினைச்சிக்கிடக் கூடாது" என்று இழுத்தான் மணிவாசகம்.

"இல்ல சொல்லுங்க மாமா" என்றான்.

"வாலிப வயசுல ஒரு பொண்ணைக் காதலிச்சேன் தம்பி. ஆனா அந்தப் பொண்ணுக்கு என்னியப் பிடிக்கல. அவளைத் தவிர வேற யாரையும் கல்யாணம் செஞ்சிக்க மனசு ஒப்பாம அப்படியே கிடந்துட்டேன் தம்பி" என்றான்.

"இதுல தப்பா நினைக்க என்ன இருக்கு மாமா? ஆனா என் தங்கச்சியைப் பார்த்ததும் எப்படி உங்க முடிவை மாத்திக்கிட்டீங்க?" என ஆச்சரியத்துடன் கேட்டான்.

"நான் காதலிச்ச பொண்ணு பேரு மரகதம்" என்றான் மணிவாசகம்.

"ஓஹோ! கதை அப்படிப் போகுதா?" என்று சிரித்த கதிர்மாறன்,

"மரகதம் எங்க அப்பாவைப் பெத்த அம்மாவோட பேரு! அப்புவுக்கு அவளோட பேரே அவளுக்குப் பிடிக்காது. நீங்க அந்தப் பேருனால அவளைப் பிடிக்குதுனு சொல்றீங்களே" என்று வாய்விட்டுச் சிரித்தான்.

"அடக் கடவுளே! எம்பிட்டு நல்ல பேரு! அதைப் போய்ப் பிடிக்கலனு யாராவது சொல்லுவாவலா" என்றான் மணிவாசகம்.

"அவ சொல்லுவாளே" என்று சிரித்த கதிர்மாறன், "மலேசியால அவ வேலை செய்ற இடத்துல அவளை எல்லாரும் மேகினு தான் கூப்பிடுவாங்க" என்றான்.

"என்னது மேகியா? அது நூடுல்ஸ் பேரு தானே" என்று முகத்தை அஷ்டகோணலாக்கி மணிவாசகம் கேட்டதில் சிரித்தவனாய், "ஆமா பஞ்ச தந்திரம் படத்துல மரகதவல்லி அலைஸ் மேகினு ரம்யா கிருஷ்ணன் சொல்லுவாங்களே. அதைப் பார்த்து அப்படி மாத்திக்கிட்டா" என்றான்.

"சரி நல்லது. நானும் மேகினு கூப்பிட்டுக்கிடுதேன்" என்று சிரித்தான் மணிவாசகம்.

"ஹ்ம்ம் எப்படியும் அவளைக் கட்டியே தீருவேன்னு இருக்கீங்களோ?" எனச் சிரித்தவாறு கேட்டான்.

"கட்டிக்கிட்டா நல்லா இருக்கும்னு தோணுது தம்பி. நாம ஒரே குடும்பமா ஆகிடுவோம்ல" என்றான் மணிவாசகம்.

"நான் யோசிச்சு சொல்லுவா? ஆனா நான் நோ சொன்னா நீங்க வருத்தப்படக் கூடாது. அதோட வேற கல்யாணமும் செஞ்சிக்கனும். மரகதம்ன்ற பேருல தமிழ்நாட்டுல பொண்ணுங்களுக்கா பஞ்சம்" என்றான்.

"ஆமா தம்பி! பஞ்சம் தான்! இப்ப மரகதம்ன்ற பேருல பொண்ணுங்களே இல்லயாம். புரோக்கர் மூலமா அலசிப் பார்த்துட்டேன். ஒன்னும் அகப்படலை. இப்பல்லாம் யாரும் இந்தப் பெயரை வச்சிக்கிடுறதில்லையாம்" என்ற மணிவாசகம்,

"எவ்ளோ நாள் வேணும்னாலும் யோசிச்சுப் பொறுமையா சொல்லுங்க. என்னைப் பத்தி வேணும்னாலும் நல்லா விசாரிச்சுக்கோங்க" என்று கூறிவிட்டுக் கிளம்பிச் சென்றான்.

பெருமூச்சுடன் அறையை நோக்கி நடந்த கதிர்மாறனுக்கு, மணிவாசகத்தை எண்ணிக் குழப்பமாய் இருந்தது.

'இவர் திடீர்னு இப்படிக் கேட்குறதுக்கான மோட்டிவோஷன் என்னவா இருக்கும்? இவருக்குப் பொண்ணு கொடுக்கிறோமோ இல்லயோ ஆனா இவரைப் பத்தி விசாரிக்கனும். இவர் பழைய லவ்னு சொன்னதுலாம் உண்மையானு விசாரிக்கனும். வேற எதுவும் கல்யாணம் செஞ்சிட்டு ஏமாத்துற கும்பல் தான் இப்ப நிறையச் சுத்துதே' என்று மனத்தோடு நினைத்துக் கொண்டவனாய் அறையினுள் நுழைந்தவன்,

அரை டவுசரும் டீ சர்ட்டும் அணிந்தவளாய் சோஃபாவில் சாய்ந்து அமர்ந்து கைப்பேசியைப் பார்த்துக் கொண்டிருந்த மரகதத்தைப் பார்த்ததும், 'இப்ப மட்டும் இவளை அந்த மணி மாமா பார்க்கனும். எனக்கு இந்தப் பொண்ணே வேணாம்னு ஓடியே போயிடுவாரு' என்று மனத்திற்குள் தோன்ற வாய்விட்டுச் சிரித்தான்.

"என்ன ப்ரோ சிரிக்கிற? எனி குட் நியூஸ்? உன்னோட தாவணி போட்ட தீபாவளி பத்தி எதுவும் நியூஸ் கிடைச்சிதா?" என ஆர்வத்துடன் கேட்டாள்.

இல்லை எனத் தலையசைத்தவன், மணிவாசகம் பெண் கேட்டதை உரைக்கலாமா வேண்டாமா என்று மனத்திற்குள் பட்டி மன்றம் நடத்தினான்.

"அப்பு உனக்கு இந்த ஊருலேயே இருக்கிற மாதிரி படிக்காத ஆனா நல்லா சம்பாதிக்கிற மாப்பிள்ளை பார்த்தா ஓகேவா?" எனக் கேட்டான்.

"ஏன்? மாமா எனக்குப் பையனே கிடைக்காதுனு சொன்னதும் வத்தல் தொத்தல்னு யாரு கிடைச்சாலும் கட்டி வச்சிடலாம்னு நீயும் முடிவு பண்ணிட்டியா?" என முறைத்தவாறு கேட்டாள் மரகதம்.

"ம்ப்ச் அப்படி இல்லடா அப்பு" என்றவாறு அவளருகில் அமர்ந்தவன், "உன்னை நல்லா வச்சி பார்த்துக்கிற ஆளா இருந்தா படிக்கலைனாலும் பரவாயில்லனு நினைச்சேன்" என்றான் கதிர்மாறன்.

"நீ கனவுல கூட என்னைக் கிணத்துல பிடிச்சு தள்ள மாட்டடா மாறா. அதனால நீ யாரைப் பார்த்து வச்சாலும் நான் கட்டிப்பேன். ஆனா இந்த மாமா அப்படி யாரைப் பார்த்து வச்சாலும் நான் கட்டிக்க மாட்டேன் சொல்லிட்டேன்" என்றவளாய் அறைக்குள் சென்றாள்.

மனத்திற்குள் சில பல கணக்குள் போட்டவனாய் யோசனையுடன் அமர்ந்திருந்த கதிர்மாறன் தனது மாமா வித்யாதரனுக்கு அழைத்து, "அப்பு பேசினதை மனசுல வச்சிக்காதீங்க மாமா" என்று சமாதானம் செய்து சில நிமிடங்கள் பேசி விட்டு,

"மாமா எனக்கு இங்கே ஒருத்தரைப் பத்தி பேக்ரவுண்ட் விசாரிக்கனும். உங்களுக்குத் தெரிஞ்ச யாராவது இருக்காங்களா?" எனக் கேட்டான்.

"அந்த ஊரு புரோக்கர் தான் எனக்குத் தெரியும். ஆனா எந்தப் புரோக்கர் உண்மையைப் பேசுறாங்க" என்ற வித்யாதரன்,

"ஊருல பல வருஷமா தலைமுறையா அங்கேயே இருக்கிறவங்க யாராவது இருந்தா அவங்ககிட்ட விசாரிக்கலாம். ஆமா யாரைப் பத்தி விசாரிக்கப் போற?" என்று கேட்டார்.

"இங்கே பூக்கடைக்காரர் ஒருத்தரைப் பத்தி விசாரிக்கனும். நான் விசாரிச்சிட்டு சொல்றேன் மாமா" என்று இணைப்பைத் துண்டித்தவன், மாலை ஊருக்குள் சென்று விசாரிக்க வேண்டுமென எண்ணிக் கொண்டான்.

அதே நேரம் அப்பொழுது தான் தனது பூக்கடைக்குள் சென்ற மணிவாசகத்தின் கைப்பேசி ஒலிக்க, "ஏலே பாண்டி போய் டீ வாங்கியாலே" என்று அவனை அங்கிருந்து அனுப்பி விட்டு கைப்பேசி அழைப்பையேற்றான்.

"சொல்லுங்கண்ணே" என்று கைப்பேசியில் இவன் தொடங்கவும்,

"அந்தக் கதிருக்கிட்ட போய் என்னடா சொல்லி வச்ச? உன்னைப் பத்தி விசாரிக்கனும்னு என்கிட்டேயே ஆளைக் கேட்கான். உன்னைப் பத்தி விசாரிச்சா நாம போட்டிருக்கப் பிளான்லாம் என்னாகுறது?" என்று கைப்பேசியில் கடுப்பாய் கத்தினார் வித்யாதரன்.

"அதுக்குள்ள உம்ம மருமவரு நியூஸ் சொல்லிட்டாரா?" என்று சிரித்த மணிவாசகம்,

"ஒன்னுமில்லண்ணே! உம்ம மருமவளை எனக்குக் கட்டிக் கொடுக்கச் சொல்லிக் கேட்டுப்புட்டேன். அதேன் என்னிய பத்தி விசாரிக்கிறாவ" என்றான் மணிவாசகம்.

"என்னது கல்யாணமா? உன்னை என்ன பண்ண சொன்னா? என்ன செஞ்சிட்டு இருக்க நீ?" என்று கோபமாய்க் கேட்டார் வித்யாதரன்.

"என்ன சொன்னிய? எப்படியாவது அந்த முத்துராமனை உங்க அப்புவுக்குக் கட்டி வைக்கனும்னு சமாதானம் செஞ்சி பேச சொன்னிய! அதே அந்தப் பொண்ணை நான் கட்டிக்கிட்டா என்னனு நானே பொண்ணு கேட்டுட்டு வந்துபுட்டேன்" அசால்ட்டாய் உரைத்த மணிவாசகம்,

"அன்னிக்கிளியக்காக்கு எம்பிட்டு சொத்து இருக்குனு எனக்கும் தெரியும். அம்பிட்டையும் அந்தப் பொட்ட பிள்ளையக் கட்டிக்கிட்டு அந்த முத்துராமன் கொண்டு போறதுக்கு நான் கட்டிக்க்கிட்டா என்ன?" என்று கேட்டான்.

"அடேய் படிச்ச பையனையே வேணாம்னு சொல்ற அந்தச் சிறுக்கி உன்னையவா கட்டிக்கப் போறா? ஆசைப்படுறதுக்கும் தகுதி வேணும்டா" அவனை அவமதிக்கவே அவ்வாறு சீண்டலாய் உரைத்தார் வித்யாதரன்.

"ஆமாண்ணே எனக்குத் தகுதி இல்ல தான். ஆனா உம்ம தங்கச்சி மவளை வச்சியே அந்தத் தகுதிக்கு நான் வந்து காட்டுதேன்! எவ என்னைக் கட்டிக்கிட மாட்டானு சொல்லுதியலோ அவளையே கட்டிக்கிட்டு, 'இவரை நான் கட்டிக்கிட்டது தான் என் வாழ்க்கைலயே எடுத்த சரியான முடிவுனு சொல்ல வைக்குதேன்" என்று அழுத்தமான குரலில் கர்ஜனையாய் அவன் உரைக்கவும்,

"அட போடா போக்கத்தப் பயலே! அந்த முத்துராமனை கட்டிக்க அவளைச் சம்மதிக்க வச்சிருந்தா, உனக்கு கொஞ்சமாச்சும் பணம் சொத்துனு கொடுத்திருப்பேன். இப்படிக் காரியத்தைக் கெடுத்துட்டு வந்து நிக்கிறியே! உன்னை நம்பினேன் பாரு! என்னைச் சொல்லனும்" என்றவராய் இணைப்பைத் துண்டித்தார் வித்யாதரன்.

அவர் கூறியதை எதையும் காதில் வாங்காதவனாய், எப்படி அவளைத் தன்னை நோக்கி இழுப்பது என்று திட்டமிடத் தொடங்கினான் மணிவாசகம்.

மாலை ஆறு மணியளவில் மரகதமணீஸ்வரர் ஆலயத்திற்குச் சென்றனர் மரகதமும் கதிர்மாறனும்.

மறுநாள் காலை இருவரும் சென்னைக்குக் கிளம்புவதாகத் திட்டமிட்டிருந்ததால், அன்று மாலை ஊர்ச் சுற்றிப் பார்க்கக் கிளம்பியவர்கள் அப்படியே கோவிலுக்குச் சென்றிருந்தனர்.

கதிர்மாறன் மகிழுந்தை தரிப்பிடத்தில் நிறுத்திக் கொண்டிருக்க, பூ வாங்கவென மணிவாசகத்தின் கடைக்குச் சென்றாள் மரகதம்.

"வாங்க தாயி" என்று வாய் நிறையப் புன்னகையுடன் அழைத்த மணிவாசகத்தைக் கண்டு கொள்ளவேயில்லை மரகதம்.

அங்கிருந்த பாண்டியிடம், "தம்பி அந்தப் பிச்சிப்பூ தாப்பா" என்று கேட்டாள்.

"ஏலேய் பாண்டி நீ போய் டீ தண்ணி வாங்கியாலே" என்று அவனை அனுப்பிய மணிவாசகம் தானே அவளுக்குப் பூவை எடுத்துக் கொடுத்தான்.

இம்முறை சல்வாரில் வந்திருந்தவளைப் பார்த்து, "தாவணியை விட உங்களுக்கு இந்த உடுப்பு நல்லா இருக்கு தாயி" என்றான் மணிவாசகம்.

இவளுக்குச் சுள்ளெனக் கோபம் எழ, "மைண்ட் யுவர் பிசினஸ்" என்றவளாய் பூவிற்கான பணத்தைக் கொடுத்து விட்டு விருட்டெனக் கோவிலுக்குள் சென்று விட்டாள்.

'எனக்கு எது நல்லாயிருக்கு நல்லா இல்லைனு சொல்ல இந்தாளு யாரு' என்று மனத்திற்குள்ளேயே திட்டிக் கொண்டு அவள் கோவிலுக்குள் செல்ல, மகிழுந்தை நிறுத்தி விட்டு அவள் பின்னேயே ஓடி வந்தான் கதிர்மாறன்.

அவள் அருகில் அவன் வந்து நின்றதும், "எனக்கு இந்தாளைக் கண்டாலே பிடிக்கலை மாறா! ஓவர் அட்வாண்டேஜ் எடுத்துக்கிறாரு" என்றாள்.

"என்னாச்சு?" புரியாது அவன் கேட்க, பூக்கடையில் நடந்ததை உரைத்தாள்.

"ஹே நீ ஏன் அப்படி நினைக்கிற! இதே நீ வேலை செய்ற இடத்துல இப்படிச் சொன்னா, அப்ரிசியேஷனா நினைச்சு தேங்க்ஸ்னு சொல்லிட்டு போயிடுவ தானே! இவருக்கிட்ட மட்டும் ஏன் இப்படிக் கோவப்படுற?" எனக் கேட்டான்.

"என்னமோ இவரைப் பார்த்தாலே பிடிக்கலை எனக்கு" என்றாள்.

'சரி தான்! நான் விசாரிச்சுக் கல்யாணம் செஞ்சிக்கோனு சொன்னாலும் இவ செய்ய மாட்டா போலயே! அப்புறம் எதுக்கு இவரைப் பத்தி நாம விசாரிக்கனும்' என்று மனத்தோடு நினைத்தவாறு அவளுடன் நடந்தவன் கருவறைக்கு அருகே செல்லவும் அங்கே நின்றிருந்தவளைக் கண்டு இன்பமாய் அதிர்ந்து போனான்.

"டேய் மாறா தாவணி போட்ட தீபாவளி" என்று சட்டெனக் கோபத்தை விடுத்து சிரிப்புடன் உரைத்தாள் மரகதம்.

"ஆமா அப்பு ஆமா" என்ற கதிர்மாறனின் முகத்தில் சுவாரஸ்யம் குடி கொள்ள அப்பெண்ணையே கண்ணெடுக்காமல் பார்த்தான்.

அப்பெண் சாமி கும்பிட்டு விட்டுப் பிரகாரத்தைச் சுற்றச் செல்லவும், "டேய் மாறா போடா! போய்ப் பேசு" என்று அவனைத் தள்ளினாள் மரகதம்.

"என்ன பேசடி?" என்று அவன் தயங்க,

"என்னத்தையாவது பேசி தொலைடா! போடா" என்று அவனை அப்பெண்ணின் பின்னே நிறுத்திய மரகதம், அங்கிருந்து விலகிச் சென்றாள்.

"ஹாய் ஹலோ" என்றவாறு அப்பெண்ணை மறித்து நின்றான் கதிர்மாறன்.

அது வரை தரையைப் பார்த்தே நடந்திருந்தவள் நிமிர்ந்து அவனைப் பார்த்தவளாய், "ஹாய் யாரு நீங்க?" எனக் கேட்டாள்.

"நான்.. நான்.." என்னவென்று சொல்லி அறிமுகம் செய்து கொள்ள என்று தெரியாமல் விழித்தவன் நினைவு வந்தவனாய்,

"ஹான் நான் தான் இன்னிக்கு உங்க வீட்டுக்கு மாப்ளை பார்க்க வந்திருந்தேன்" சற்றுத் திக்கித் திணறியவனாய் உரைத்தான்.

அவன் அவ்வாறு கூறியதும் தன்னைத் திட்டத் தான் வந்திருக்கிறானோ என்று எண்ணிய அப்பெண், "அச்சோ சாரிங்க எங்க வீட்டாளுங்க செஞ்ச தப்புக்கு நான் மன்னிப்புக் கேட்டுக்கிறேன்" என்றாள்.

அவளின் மன்னிப்பு வேண்டலில் அவனது படபடப்பு குறைந்து நெஞ்சம் லேசாக, "மன்னிப்புலாம் வேண்டாங்க. அதுக்குப் பதிலா பிரயாச்சித்தமா ஒன்னு செய்றீங்களா?" என்று சிரிப்புடன் கேட்டான்.

"பிராயச்சித்தமா?" குழம்பிய பாவனையில் கேட்டவள்,

"என்ன செய்யனும்?" என்றாள்.

"என்னைக் கல்யாணம் செஞ்சிக்கோங்க" கண்களில் காதல் மின்ன, இதழ் விரிந்த புன்னகையுடன் உரைத்தான்.

"என்னது?" பெரிய விழி மேலும் விரிய அதிர்வுடன் அவள் கேட்ட நொடி, "அடியே மரகதம் எம்பிட்டு நேரமா சுத்துறவா! வாரியா இல்ல நான் போவா?" என்று கோவிலின் வாசலில் இருந்து வந்த தோழியின் சத்தத்தில்,

"நில்லுடி! இதோ வரேன்" என்றவளாய் அங்கிருந்து ஓடியே சென்றிருந்தாள்.

'என்னது? இந்தப் பொண்ணு பேரும் மரததமா?' என்று அதிர்வுடன் எண்ணிய கதிர்மாறன்,

"மரகதம்" என்று சத்தமாய் அழைத்தான்.

விறுவிறுவென ஓடியவள் சட்டென நின்று அவனைத் திரும்பிப் பார்த்து விட்டு மீண்டுமாய் ஓட்டமெடுத்து கோவிலின் வாசல் வழியாக வெளியே சென்று மறைந்தாள்.

அவள் செல்லும் திசையையே பார்த்திருந்த கதிர்மாறன், "இந்தப் பொண்ணு பேரும் மரகதம்னா, மணி மாமா காதலிச்ச பொண்ணு இவளா இருக்குமோ?" என்று எண்ணிய நொடி திக்கென அதிர்ந்து போனான்.
 
Top Bottom