• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மரகத மாமன் - 6

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 6

"ப்ரோ இந்த மணி சார் லவ் பண்ற பொண்ணு உன்னோட தாவணிக் காதலியா இருக்குமோ?" எனக் கேட்டாள் மரகதம்.

அன்று இரவு மகிழங்காட்டில் அவர்கள் தங்கியிருந்த அறையில் அண்ணனும் தங்கையும் எதிரெதிராய் இருந்த கட்டிலில் படுத்திருக்க, தனது கட்டிலில் ஒரு பக்கமாய்ச் சாய்ந்து படுத்து அவன் முகத்தைப் பார்த்தவளாய் கேட்டாள் மரகதம்.

"நானும் மொதல்ல அப்படித் தான் நினைச்சேன் அப்பு. ஆனா அவர் லவ் பண்ண பொண்ணுக்குத் தான் கல்யாணமாகிடுச்சுனு சொன்னாரே. என்னோட மரகதத்துக்குத் தான் இன்னும் கல்யாணமாகலையே" என்றான் கதிர்மாறன்.

"என்னிக்காவது என்னை மரகதம்னு பேரு சொல்லிக் கூப்பிட்டிருப்பியாடா நீ! லவ் பண்ற பொண்ணை மட்டும் என்னோட மரகதம்னு அப்படிக் கொஞ்சுற" என்று பொறாமைப் பொங்கக் கேட்டாள் அவனின் தங்கையான மரகதம்.

"பின்னே காதலிக்கிறவளை கொஞ்சாம போற வரவளையா கொஞ்ச முடியும்?" என்று அவன் மேலும் அவளை வெறுப்பேற்றினான்.

"இருடா இரு! நானும் ஒருத்தரை லவ் பண்ணி அவரை வச்சி உன்னை வெறுப்பேத்தலை என் பேரு மரகதம் இல்லடா" என்று கோபமாய்ச் சபதம் போல் உரைக்க,

"இப்பவும் அதான் நான் சொல்றேன். உன் பேரு மரகதம் இல்ல. அது என் காதலியோட பேரு. உன் பேரு அப்பு அலைஸ் மேகி" என்று கிண்டல் சிரிப்புடன் அவன் கூறவும்,

"போடா குரங்கு" என்று அவனுக்கு முதுகைக் காண்பித்தவாறு படுத்துக் கொண்டாள்.

"போடி குரங்குக் குட்டி" என்று சிரித்தவாறு உரைத்தவனாய் அவனும் திரும்பிப் படுத்துக் கொண்டான்.

சில நிமிடங்கள் அந்த இடத்தில் அமைதியே வியாபித்திருக்க, "டேய் மாறா! எனக்கொரு சந்தேகம்?" என ஆரம்பித்தாள் மரகதம்.

"என்ன சந்தேகம்?" என்றான்.

"ஒரு வேளை அந்தத் தாவணிப் பொண்ணுக்குக் கல்யாணமாகி இருக்குமோ? நம்ம அம்மா இந்தப் பொண்ணைப் பார்த்துச் சொல்லி மூனு வருஷம் மேல ஆகுதேடா! என் வயசு தான் அந்தப் பொண்ணுக்கு இருக்கும். இன்னுமா கல்யாணம் செய்யாம வச்சிருப்பாங்க?" எனக் கேட்டாள்.

"இல்ல அப்பு. நான் கோவில்ல பார்த்தப்ப அந்தப் பொண்ணு கழுத்துல தாலி இல்ல. அதுவுமில்லாம கல்யாணம் ஆகியிருந்தா நான் பிரபோஸ் செஞ்சதும் அந்தப் பொண்ணு மொறைச்சிருக்கும் தானே. இல்ல கல்யாணமாகிடுச்சுனு சொல்லிருக்கும் தானே! ஆனா அந்தப் பொண்ணு அதிர்ச்சியா பார்த்துச்சு" என்றான்.

"ஓ ஒரு வேளை கல்யாணமாகி பிரிஞ்சிடுச்சோ? டிவோர்ஸ் ஆகியிருக்குமோ?" என்றவள் கேட்கவும் கடுப்பானவனாய்,

"உனக்கு ஏன்டி இப்படிலாம் தோணுது?" எனக் கேட்டான்.

"இல்லடா மணி சார் நேர்ல போய்ப் பொண்ணு கேளுங்கனு சொன்னதுல மனசுக்குள்ள என்னமோ பிராண்டுது. சம்திங் ராங்! அந்தப் பையன் விஷயத்திலும் அவர் அப்படித் தானே சொன்னாரு" என்று இவள் கூறவும்,

"ஆத்தா பரதேவதை உன் வாயை வச்சிட்டு சும்மா இருக்கியா? நானே ரொம்ப நாள் தேடின பொண்ணு இப்பவாவது கிடைச்சிதேனு சந்தோஷத்துல இருந்தா உனக்குப் பொறுக்காத! அப்படியே அந்தப் பொண்ணுக்கு விவாகரத்து ஆகியிருந்தாலும் நான் அந்தப் பொண்ணுக்கு ரெண்டாந்தாரமா வாக்கப்பட்டுப்பேன். இதுக்கு மேல என் மனசை உடைக்காம ஒழுங்கு மரியாதையா தூங்கு" என்றவனாய் போர்வையை இழுத்துப் போர்த்திப் படுத்தான்.

மேலும் சில நிமிடங்கள் கழிந்திருக்க, "அப்பு ஆர் யூ ஆல்ரைட்?" எனக் கேட்டான் கதிர்மாறன்.

சட்டெனத் திரும்பி அவனைப் பார்த்தவள், "எனக்கென்ன? நான் நல்லா தானே இருக்கேன். என்ன திடீர்னு கேட்குற?" எனப் புரியாது கேட்டாள்.

"இல்லடா அம்மா இறந்த பிறகு தான் இப்படித் திடீர் திடீர்னு மயங்கிடுற நீ! நாளைக்கு வேணா ஹாஸ்பிட்டலுக்குப் போய் ஃபுல் பாடி செக்கப் செஞ்சிடலாமா?" எனக் கேட்டான்.

"அடப்பாவி உன்னோட தாவணிக் காதலிப் பத்தி கனா காணாம என்னைப் பத்தி யோசிச்சிட்டு இருக்கியா நீ?" என்று சிரித்தவள்,

"ஏற்கனவே தான் எல்லாச் செக்கப்பும் செஞ்சிட்டோமே ப்ரோ. டாக்டர் தான் ஒன்னுமில்லனு சொல்லிட்டாரே! எனக்கு இந்த ஹாஸ்பிட்டல் டாக்டர்னாலே அலர்ஜியா இருக்கு ப்ரோ! திரும்பியும் மயக்கம் வந்தா பார்த்துக்கலாம்" என்றாள்.

"என்னைப் பத்தி யோசிக்காம தாவணிக் கனவுகளோட தூங்குற வழியப் பாருடா எருமை! என் தூக்கத்தையும் வேற கெடுத்துட்டு கிடக்கான்" என்றவளாய் கண்களை மூடியவள் சில நொடிகளில் உறங்கியும் போனாள்.

மேலும் சில நிமிடங்கள் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தவனாய் அப்படியே உறங்கிப் போனான் கதிர்மாறன்.

காலை பத்து மணியளவில் தங்களது மகிழுந்தில் மரகதம் வீட்டை நோக்கிச் சென்றனர் இருவரும்.

கதிர்மாறன் பேண்ட் சட்டை அணிந்திருக்க, மரகதம் சல்வார் அணிந்திருந்தாள்.

அவ்வீட்டின் வாசலை அடைந்ததும், "நம்மளைப் பார்த்ததும் தொறத்தி விட்டுட மாட்டாங்களே?" எனக் கேட்டாள் மரகதம்.

இந்த முறை மகிழுந்தை வாசலின் வெளியிலேயே நிறுத்தியவன், "தொறத்தினாலும் தூசு மாதிரி தட்டி விட்டுட்டு பொண்ணு கேட்கிறோம்" என்றான்.

"உன் காதலுக்காக நீ வெட்கம் மானம் சூடு சொரணையை விட்டுட்டு இரு மேன்! வை மீ? நான் ஏன் இருக்கனும். அவங்க மட்டும் அவமரியாதையா ஏதாவது பேசட்டும், நீயும் வேணாம் உன் பொண்ணும் வேணாம்னு வந்துடுவேன் சொல்லிட்டேன்" என்று ஆவேசமாய் உரைத்தாள் மரகதம்.

"அடியேய் அவங்களே பொண்ணு கொடுக்கிறேன்னு சொன்னாலும் நீ கொடுக்க விடாம செஞ்சிடுவ போலயே! ஏதாவது ஏடாகூடமா வாயைத் தொறந்து வச்ச புளந்துடுவேன் சொல்லிட்டேன்" நாக்கைக் கடித்து விரலை நீட்டி எச்சரிக்கும் தொனியில் கூறினான்.

"அடப்போ டுபாக்கூர் ப்ரோ? வெட்டி சீன் போடாத" என்று அசால்ட்டாய் அவன் விரலைத் தட்டி விட்டவள், மகிழுந்தில் இருந்து இறங்கினாள்.

"சில்வண்டு மாதிரி இருந்துட்டுப் பேச்சைப் பாரு! இவளுக்குலாம் அண்ணனா வாய்க்கனும்னு என் தலைல எழுதியிருக்கு" என்று புலம்பியவாறே மகிழுந்தை ஓரமாய் நிறுத்தி விட்டு இறங்கினான்.

இருவரும் வீட்டின் வாசலை அடைந்து வாயில்மணியை அடித்தனர்.

"யாரது?" என்று கேட்டவராய் வந்தார் சுசீலாம்மா.

இவர்கள் இருவரையும் வாசலில் பார்த்தவரின் கண்கள் ஆச்சரியத்தில் விரிய, "என் புள்ளைய வேணாம்னு சொன்னவிய எதுக்கு இப்ப இங்கன வந்து நிக்குதிய?" என்று முகத்தில் அடித்தாற் போல் கேட்டார்.

இருவருக்குள்ளும் கோபம் பொங்கிக் கொண்டு வந்த போதும், "உள்ளே போய்ப் பேசலாமா?" எனக் கேட்டான் கதிர்மாறன்.

"உள்ளாற வாங்க" வேண்டா வெறுப்பாய் உள்ளே அழைத்தார் சுசீலாம்மா.

இவர்கள் உள்ளே போய் அமரவும், வயல் வேலையை முடித்து விட்டு வீட்டிற்குள் வந்தார் செல்லையா.

இருவரையும் எதிர்பாராது தனது வீட்டில் பார்த்தவருக்குச் சட்டென்று என்ன பேசவென்று தெரியாமல் போக, "வாங்க" என்றதோடு அங்கே இருந்த நாற்காலியில் அமர்ந்தவராய், "என்ன விஷயமா வந்திருக்கிய?" என நேரடியாகக் கேட்டார்.

அச்சமயம், "யாரும்மோ வந்திருக்கிறது?" எனக் கேட்டவாறு சமையலறையில் இருந்து வெளியே வந்த செல்வி, இவர்களைப் பார்த்ததும் இன்பமாய் அதிர்ந்தவளாய், "வாங்க வாங்க! எங்க அண்ணனைக் கட்டிக்கிட சம்மதம் சொல்ல வந்திருக்கியலா?" எனக் கேட்டாள்.

"ஆமா நீங்க சென்னைக்குப் போகலையா? இங்கேயே இருக்கீங்க?" மரகதம் கேட்க,

"என்ன இவ சம்பந்தமில்லாம கேள்வி கேட்குறா?" என்பது போல் அவளைப் பார்த்தான் கதிர்மாறன்.

கதிர்மாறனின் பார்வையில், 'எடுத்ததும் பொண்ணு கொடுங்கனா கேட்க முடியும்' என்று அவனுக்கு மட்டும் கேட்குமாறு உரைத்தாள்.

'அதுவும் சரி தான்' என்று மனத்திற்குள் நினைத்துக் கொண்டான் கதிர்மாறன்.

"சென்னைக்குப் போய்ட்டு நேத்து தான் வந்தேன்ங்க. பிள்ளையலுக்குப் பரிட்சை முடிஞ்சிருச்சு. திரும்ப ஸ்கூல் திறக்கிற வரைக்கும் இங்கே தான் இருப்பேன்" என்றவள்,

"என்ன குடிக்கிறிய? காபியா ஜூஸா?" எனக் கேட்டாள்.

"என்னத்துக்கு வந்திருக்காவனு கேட்காம நம்ம சொக்கரன் கணக்கா உபசரிச்சிட்டு இருக்கிறாவ" என்று கடிந்து கொண்ட சுசீலாம்மா,

"உம்ம தங்கச்சிக்கு என் மவனைக் கட்டிக்கிட சம்மதம்னா எதுனாலும் பேசுங்க கேட்குதேன். இல்லையா கிளம்பிப் போங்க" என்று முகத்தில் அடித்தாற் போல் நேரடியாக உரைத்தார்.

இருவருக்குமே அச்சூழலை எப்படிக் கையாளவெனச் சட்டெனப் புரியவில்லை.

அங்கிருந்து எழுந்து போய்விட மனம் துடித்த போதும் பெண் கேட்டுத் தானே ஆக வேண்டுமெனப் பொறுமையை இழுத்துப் பிடித்து அமர்ந்திருந்தனர் இருவரும்.

அவர்களின் கேள்வியில் அவமரியாதையாக உணர்ந்த போதும் உடனே சுதாரித்துக் கொண்ட மரகதம், "சரி ஆன்டி நான் உங்க பையனைக் கட்டிக்கிறேன்னு வையுங்க. நீங்க உங்க பொண்ணை எங்க அண்ணனுக்குக் கட்டிக் கொடுப்பீங்களா?" எனக் கேட்டாள்.

செல்வியும் சுசீலாம்மாவும் ஒருவரையொருவர் குழப்பத்துடன் பார்த்துக் கொண்டனர்.

"எங்க வீட்டுல கல்யாணம் ஆகாத பொண்ணு யாரும் இல்லையே! நீங்க யாரை சொல்லுதிய?" எனக் கேட்டார் செல்லையா.

"மரகதம் உங்க வீட்டுப் பொண்ணு தானே" புருவம் இடுங்க கேட்டான் கதிர்மாறன்.

"அவளுக்குக் கல்யாணமும் ஆகி விவாகரத்தும் ஆகிப் போச்சு" என்று சட்டென்று உரைத்தாள் செல்வி.

பேரதிர்ச்சியுடன் சட்டென எழுந்து விட்டனர் அண்ணனும் தங்கையும். இருவரும் அதிர்ச்சியுடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

'அதெப்படி அவளுக்குனா மட்டும் எல்லாமும் அவளைத் தேடி வருது' என்று மனத்திற்குள் தனது தங்கையைப் பொருமலுடன் பொரிந்தாள் செல்வி.

'அய்யோ நான் விளையாட்டா சொன்னா மாதிரியே ஆகிப் போச்சே' என்று மனத்திற்குள் வலியுடன் படபடப்பாய் உணர்ந்தாள் மரகதம்.

முந்தைய இரவு அண்ணனிடம் பேசியது எல்லாம் மனத்திற்குள் ஊர்வலம் போக, சட்டென முடிவெடுத்தவளாய்,

"சரி ஏதோ சூழ்நிலைனால உங்க பொண்ணுக்கு டிவோர்ஸ் ஆகிடுச்சு. உங்க பொண்ணை எங்க அண்ணனுக்கு கல்யாணம் செஞ்சி கொடுத்தீங்கனா நான் உங்க பையனைக் கட்டிக்கிறேன்" என்றாள்.

"என்னம்மா பேசுற நீ?" என்று கத்தி விட்டார் செல்லையா.

"பொட்டைப் புள்ளைக்கு ரெண்டாவது கல்யாணமா? எம் புள்ளைய நான் ஒன்னும் அப்படி ஒழுக்கங் கெட்டு வளர்க்கலை" என்று கர்ஜித்திருந்தார்.

"ஏதோ நாம ஒரே சமூவமா இருக்கப் போயி இம்புட்டு நேரம் மருவாதை கொடுத்து அமைதியா இருந்தேன். இனியும் இந்த வீட்டுப் பக்கம் உங்களைப் பார்த்தேன். என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது" என்றவரின் பேச்சில் ரத்தம் கொதி கொதிக்க, "உங்க பொண்ண தான் சார் நான் கட்டிக்கப் போறேன். எப்படித் தடுக்கிறீங்கனு நானும் பார்க்கிறேன்" என்று ஆழ்ந்த திடமான குரலில் உரைத்தவனாய் தங்கையின் கையைப் பற்றிக் கொண்டு வெளியே சென்றான் கதிர்மாறன்.
 
Top Bottom