• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மறுத்தாலும் உன்னை மறப்பேனா - 12

Vishakini

Moderator
Staff member

Episode 12

ருத்ரன் வீட்டு வாசலில் இரண்டு ரவுடி கும்பல் சண்டை போட்டுக் கொண்டிருக்க, தோட்டத்தில் நின்று கூர்மையாய் கவனித்து கொண்டிருந்தான். பத்து அடிக்கு மேல் மதில் சுவர் இருப்பதனால் அவ்வளவு எளிதாய் வெளியே நடக்கும் பிரச்சனை வீட்டின் உள்ளே வர முடியாது. அதுவும் இல்லாமல் வாசலுக்கு வீட்டின் முகப்பிற்கும் அரை கிலோ மீட்டர் தூரம் இருக்கும்.

அந்த தோட்டா இரும்பு கதவுகளுக்கு மேல் தாண்டி தான் அவன் வீட்டின் சுவற்றை துளைத்திருந்தது. அது வந்த திசையை கூர்மையாய் ருத்ரன் பார்க்க, எதிர் திசையில் கண்ணுக்கே தெரியாத ஓர் மறைவிடத்தில் பைனாகுலர் வழியாக பார்த்தவனுக்கு அவன் பார்வை சில்லிட்டது.

“சீக்கிரம் இடத்த காலி பண்ணு.. அவனுக்கு தெரிஞ்சிடுச்சுன்னு நினைக்குறேன்” பதட்டத்துடன் கூறிட, கையில் ஸ்னைப்பர் துப்பாக்கியை வைத்திருந்தவனும் உடனே கட்டளைக்கு கட்டுப்பட்டான்.

பல்லை கடித்த ருத்ரன் உடனே வாசலை நோக்கி செல்ல அவனின் ஆட்கள் கதவை திறந்து விட்டார்கள். வெளியே இன்னும் வேறு குழுவை சேர்ந்தவர்கள் சண்டை போட்டுக்கொண்டிருக்க, உடனே முதுகில் சொருகி இருந்த துப்பாக்கியை எடுத்து அவர்களை நோக்கி தரையிலே 'படபட' வென சுட ஆரம்பித்தான். தம் மீது பட்டு விடுமோ என்ற அச்சத்தில் அனைவரும் துள்ளி குதித்து அங்கிருந்து ஓடினார்கள்.

அவர்கள் ஓடியது சிரிப்புடன் பார்த்த இளங்கோ ருத்ரனிடம், “இவங்கள எல்லாம் இப்படி தான் ஓட விடணும்.. காலையிலே வந்து சும்மா நச நசன்னு.. இவனுங்களுக்கு சண்டை போட வேற இடமே கிடைக்கலையா?” சலிப்பாக கூறியவன் அப்பொழுது தான் இறுகி போய் இருக்கும் ருத்ரன் முகத்தை கண்டான்.

“என்ன ஆச்சு அண்ணா?” என்று கேட்டவனை பயங்கரமாய் முறைத்தான் ருத்ரன்.

“என்ன பண்ணிட்டு இருக்க? அவனுங்க சண்டை போட்டா நீ துரத்தி விட மாட்டியா? வீட்ட பாத்துக்க தானே சொன்னேன்?” கோபமாய் எரிந்து விழ, இளங்கோ பாவமாய் முகத்தை சுருக்கினான்.

“இல்ல அண்ணா நம்ம கிட்ட பிரச்சனை பண்ணாத வரைக்கும் தலையிட கூடாதுன்னு சொல்லி இருக்கீங்கல அதான்.. அவங்களுக்கும் நமக்கும் சம்பந்தமே இல்ல.. அதுவும் இல்லாம எத்தன தடவை நம்ம ஏரியால இப்படி சண்டை போட்டு இருக்கானுங்க.. இந்த சில்ர பசங்க பிரச்சனையில போக வேணாம் தான் விட்டேன்”

“என்னத்த கவனிக்குற? நம்ம வீட்டுலயே ஒருத்தன் சுட்டு இருக்கான்” ருத்ரன் வார்த்தைகளை கடித்து துப்ப, இளங்கோ அதிர்ந்தான். வெளியே நடந்த கூத்தில் அவனுக்கு உள்ளே நடந்தது தெரியவில்லை.

விறுவிறுவென்று ருத்ரன் உள்ளே செல்ல, அவன் பின்னே சென்றான் இளங்கோ. தோட்டா சுவற்றில் துளைத்திருப்பதை பார்க்க அதனை கண்ட இளங்கோ மேலும் திகைத்தான்.

“அண்ணா எப்படி இது நடந்துச்சு.. அவனுங்க வெளிய தானே சண்டை போட்டாங்க” என குழம்ப ருத்ரன் கடுப்பானான்.

“இளங்கோ.. வெளிய நடந்தது சண்டை இல்ல.. எவனோ நம்மள திசை திருப்ப இப்படி பண்ணி இருக்கானுங்க. அங்க பார்.. அந்த ரெசார்ட் டேரெஸ்ல இருந்து தான் எவனோ பண்ணி இருக்கான்.. அதுவும் இல்லாம இந்த புல்லட் பாரு..” என்று கூர்மையாய் கூற இளங்கோ உற்று கவனித்தான்.

“அண்ணா இது ஸ்னைபர் புல்லட்.. அது எப்படி நம்ம ஊருல?”

“காலையிலே வேந்தன் போன் பண்ணான்.. ஏதோ சரி இல்லன்னு சொன்னான் அதே போல நடந்துருச்சு.. நீ உடனே அங்க போய் யார் இருந்தா என்ன ஏதுன்னு கண்டுபுடி..”

“அண்ணா எனக்கு என்னமோ அவனுங்க மேல தான் சந்தேகமா இருக்கு”

“கண்டிப்பா அவனே தான்.. ஆனா ஸ்னைபர் யூஸ் பண்ற அளவு அவனுக்கும் அவன் புள்ளைக்கும் திறமை இல்ல.. அதனால நல்லா விசாரி.. நம்ப எல்லாம் உறுதி படுத்திட்டு அப்பறம் கமிஷனர் கிட்ட சொல்லலாம்.. கூடவே வேந்தன் கிட்ட சொல்லி அவனுங்க கண்டெய்னர் செக் பண்ண சொல்லு. கஸ்டம் ஆபீசர் கிட்ட இன்போர்ம் பண்ணு” என்று வரிசையாய் கட்டளையை கொடுக்க, இளங்கோ சம்மதித்தான்.

வீட்டில் பிள்ளைகள் மட்டும் இல்லை என்றால் இந்நேரம் அவனே சென்று சுட்ட ஆளை பிடித்திருப்பான். ஆனால் அவன் வீட்டை விட்டு சென்றால் நிச்சயம் அவன் எதிரி வீட்டை தான் தாக்குவான் என தெரிந்து தான் தன் குடும்பத்திற்கு காவலாய் அங்கேயே இருந்தான்.

சொன்ன வேலையை செய்ய இளங்கோ செல்ல ருத்ரன் வீட்டின் உள்ளே நுழைந்தான். கையில் துப்பாக்கி உடன் வருபவனை கண்டு தீர்த்தி திகைக்க, அவனோ அவளை கண்டதும் துப்பாக்கியை மறைத்தான்.

“பசங்க பயந்துட்டாங்களா?” என பதட்டத்துடன் கேக்க, அதிர்ச்சியில் இருந்து வெளி வராதவள் லேசாய் தலை அசைத்தாள்.

பிள்ளைகள் இருவரும் என்ன சத்தம் என பயத்துடன் இவ்வளவு நேரமாய் தீர்த்தியை கட்டிக்கொண்டு கேட்டுக் கொண்டிருந்தார்கள். சத்தம் நின்றதும் தான் அவள் சமாதானம் கூறி வெளியே வந்தாள். இப்பொழுது இருவரும் பிரயுவை கட்டிக் கொண்டு அமர்ந்திருக்க, அறை உள்ளே வந்த ருத்ரன் குற்ற உணர்வுடன் பார்த்தான்.

“அங்கிள் என்ன சத்தம் அது?” சூர்யா தான் ருத்ரனை கண்டதும் உடனே கேட்டான்.

அவனருகில் சென்றவன், “ஒன்னும் இல்ல குட்டி.. வெளிய மூவி ஷூட்டிங் நடக்குது.. அதான் வேற ஒன்னும் இல்ல.. நீங்க ரெண்டு பேரும் பிக் பாய் தானே.. ஏன் இவ்வளவு பயம்? அங்கிள் இருக்கேன்ல ஒன்னும் ஆகாது சரியா.. நான் அவங்களை இன்னொரு நாள் ஷூட்டிங் பண்ண சொல்லிட்டேன்.. சோ அவங்க கிளம்பி போயிட்டாங்க.”

ருத்ரன் கூற்றில் தான் இருவரும் இயல்பு நிலைக்கு திரும்பினார்கள். பிரயு கை வளைவில் இருந்து வெளியே வந்த சூர்யா ருத்ரனை தூக்குமாறு கை காட்டினான். அதில் மகிழ்ந்த ருத்ரன் உடனே தூக்கிக் கொண்டு, “என்ன சூர்யா?”

“நெக்ஸ்ட் டைம் ஷூட்டிங் நடக்குறப்போ என்னையும் கூட்டிட்டு போறீங்களா? அம்மா கூட நாங்க ரெண்டு பேரும் இதுக்கு முன்ன போய் இருக்கோம்” என்க ருத்ரன் மெலிதாக புன்னகைத்தான்.

தீர்த்தி அவள் பிராண்ட் மாடல் ஷூட்டிங்கிற்கு இவர்களை அவ்வபோது அழைத்து செல்வாள். பிள்ளைகளை பெரிதாய் வெளியே அழைத்து செல்ல அவளுக்கு நேரம் இல்லாததனால் வேலை செய்யும் இடத்திற்கு செல்வதுண்டு. ருத்ரன் சொன்னதை பிள்ளைகள் இருவரும் நம்பிட, தீர்த்தி பதட்டத்துடன் வெளியே நின்று இருந்தாள்.

அவளுக்கு தெரியாதா இது நிஜமான துப்பாக்கி சூடு என்று. உள்ளே மீண்டும் நுழைந்தவள், “சூர்யா அருள் கூடவும் சித்தி கூடவும் விளையாடு அம்மா அங்கிள் கிட்ட பேசிட்டு வரேன்” ருத்ரனை பார்க்காமலே அழைப்பு விடுக்க, உடனே சூர்யா தலையில் முத்தம் கொடுத்து விட்டு அவனை மெத்தையில் இறக்கி விட்டான்.

இதனை கண்ட அருள் முறைத்தான். எப்பொழுதும் யார் கொஞ்சினாலும் இருவரையும் தான் கொஞ்சுவார்கள். ஆனால் ருத்ரன் சூர்யாவை மட்டும் கொஞ்சுவது அவனுக்கு கோவத்தை தந்தது. பாசமா? ஏக்கமா? என்றெல்லாம் தெரியவில்லை. பிள்ளைகளுக்கே இருக்கும் ஒரு போட்டி மனப்பான்மை.

அவன் முறைப்பதற்கு காரணம் புரியாமல் ருத்ரன் குழப்பத்துடனே வெளியே சென்றான். ஹாலில் ஒரு ஓரத்தில் தீர்த்தி கைகளை கட்டிக் கொண்டு நிற்க ருத்ரன் அவள் என்ன கேக்க போகிறாள் என தெரிந்தும் அமைதியாய் இருந்தான்.

அவனை முறைத்தவள், “என்ன நடக்குதுன்னு சொல்ல மாட்டியா?”

“ஏன் உனக்கு தெரியலையா?” அவளை போலவே பேசினான்.

“கடுப்ப கிளப்பாத.. நான் இங்க இருந்த வரைக்கும் இந்த மாதிரி வீட்டுல நடந்ததே இல்ல.. இப்போ என்ன இப்படி நடக்குது.. வீட்டுல பசங்க இருக்காங்க.. இவ்வளவு பிரச்சனை உன்ன சுத்தி இருக்குன்னு தெரிஞ்சி தான் பசங்களை இங்க கூட்டிட்டு வந்தியா?”

“இவ்வளவு பிரச்சனை இருக்குன்னு தெரிஞ்சி தான் கூட்டிட்டு வந்தேன்.. நான் தான் அப்போவே சொன்னேன்ல? என் பசங்களை எப்படி பாதுகாக்கணும்னு எனக்கு நல்லாவே தெரியும்..”

“இங்க பாரு ருத்ரன்.. இங்க இருக்குறது சேஃப் இல்ல.. எங்களை விட்டுடு.. நான் பசங்களை கூட்டிட்டு சென்னைக்கே போறேன்.. என் பசங்களுக்கு நிம்மதியான வாழ்க்கைய தரணும் நினைக்கிறேன்.. இங்க இருக்குற சூழல பார்த்தாலே தெரியுது அது சாத்தியமே இல்லாத ஒன்னுன்னு. பசங்க வாழ்க்கையில விளையாடாத.. எல்லாத்துலயும் உன் பிடிவாததில்லையே இருக்கணும்னு நினைக்காத..” என அவனுக்கு புரிய வைக்கும் நோக்கத்தில் நிதானமாய் பேசிட அவனுக்கு அது மேலும் எரிச்சலை அதிகரித்தது.

“என்னடி நெனச்சிட்டு இருக்குற நானும் வந்ததுல இருந்து பாத்துட்டு இருக்கேன் என்னமோ உனக்கு மட்டும் தான் பசங்க மேல அக்கறை இருக்குங்கற மாதிரி பேசிட்டு இருக்க.. எனக்கும் அக்கறை இருக்கு.. தேவை இல்லாம பேசி என்ன கடுப்பு ஏத்தாத. என்னமோ என்னால அவங்க வாழ்க்கையே நிம்மதி இல்லாம போகு மாதிரி பேசுற.. நீ ஆசைப்பட்ட மாதிரி நிம்மதியான வாழ்க்கையை என்னாலையும் என் பசங்களுக்கு கொடுக்க முடியும் இன்னொரு தடவை அவங்களை என்கிட்ட இருந்து பிரிச்சிட்டு போறத பத்தி பேசாத.. அப்புறம் நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்”

“நீ உன்ன பத்தி மட்டும் தான் ருத்ரன் யோசிக்கிற.. பசங்கள பத்தியும் யோசி அவங்களுக்கு இதெல்லாம் புதுசு.. உன்ன சுத்தி இவ்வளவு பிரச்சனை இருக்கும் போது பசங்களை எதுக்காக அதுல இன்வால் பண்ணனும்னு நினைக்கிற? அவங்களுக்கு ஏதாவது ஆனா?” தாயுக்கே உரிய ஆதங்கத்துடன் கேட்டாள் தீர்த்தி.

“இவ்ளோ பிரச்சனை இருக்கும்னு தெரிஞ்சு தானே என்ன கல்யாணம் பண்ண.. நான் என்ன எனக்கு எதிரியே இல்லன்னு சொல்லியா உன்ன கல்யாணம் பண்ணேன்? ஒருவேளை நமக்கு எந்த பிரச்சனையும் இல்லாம இருந்திருந்து இதே மாதிரி ஒரு நிலைமையில இருந்தா என்ன விட்டு போகணும் தான் நினைப்பியா?” ருத்ரன் கேட்ட கேள்வியில் தடுமாறி போனாள் தீர்த்தி.

“இப்ப சொல்லு யாரு சுயநலமா யோசிக்குறாங்கன்னு” என்று அவன் கேக்க, அவளுக்கு சுருக்கென்று இருந்தது. எதையாவது காரணம் காட்டி அங்கிருந்து செல்ல வேண்டும் என்று தான் அவள் மனம் இன்னும் நினைத்துக் கொண்டிருக்கிறது.

“சரி நான் தான் பிரிக்க பாக்குறேன்னு சொல்ற இன்னைக்கு அருள் என்கிட்ட வீட்டுக்கு போகணும்னு சொல்லி அழுதான்.. பசங்களோட லைஃப் அங்க பாதில அப்படியே இருக்கு அதெல்லாம் விட்டுட்டு எப்படி அவங்களால இங்க இருக்க முடியும்? நீ உன்னோட இஷ்டத்துக்கு இங்க கூட்டிட்டு வந்துட்ட அவங்க ஸ்கூல், ஃப்ரெண்ட்ஸ், அக்கம் பக்கத்துல இருந்தவங்க இதை எதையுமே நீ யோசிக்கலையா? பசங்களுக்கு அங்க ஒரு சோசியல் லைஃப் இருந்துச்சு அந்த ஒரு நல்ல என்விரான்மென்டை நீ பிரேக் பண்ணி புதுசா தெரியாத ஒரு இடத்துக்கு கூட்டிட்டு வந்திருக்க. அவங்க வீடா பார்க்கிறது அதுதான்.” என பிள்ளைகளின் நிலையை எடுத்துரைக்க, அது அவனுக்கும் புரிந்தது. இருந்தும் இதற்காய் அவர்களை பிரிய மாட்டான்.

“அவங்க இன்னமும் கே ஜி ஸ்டூடண்ட் தானே கொஞ்ச நாள்ல அவங்களே இதுக்கு பழகிடுவாங்க. இங்கேயே ஒரு நல்ல ஸ்கூலா பார்த்து பசங்கள சேர்த்து விடலாம் அப்படி இருந்தா அவங்களுக்கும் ஒரு நல்ல சேஞ்ச் கிடைக்கும்.. இங்க பாரு நீ என்ன சொன்னாலும் என்ன காரணம் காட்டினாலும் இங்கே இருந்து உங்கள அங்க அனுப்ப மாட்டேன்.. சும்மா பசங்களுக்கு பாதுகாப்பு இல்லைன்னு சொல்லாத உனக்கே நல்லா தெரியும் இத விட்டா வேற எங்கேயும் உங்களால பாதுகாப்பா இருக்க முடியாதுன்னு.. இப்பன்னு இல்ல நீ எப்போ என் வாழ்க்கையில வந்தியோ அப்போ இருந்து என் பிரச்சனை உன் பிரச்சனையா ஆயிடுச்சு.. அதனால நம்ம பசங்களோட சேப்டிய மனசுல நினைச்சு உன்னோட புத்தியை மாத்திக்கோ” என அழுத்தமாய் கூற அவனை ஏகத்துக்கும் முறைத்தாள்.

அவளால் இதற்கு மறுப்பு கூற முடியவில்லையே.. அவளுக்கு அதீத நம்பிக்கை உண்டு. ருத்ரன் எதிரிகளை அவர்கள் நிழலை கூட நெருங்க விட மாட்டான் என்று. அவள் கடுப்புடன் நிற்க, ருத்ரன் மனம் அருள் அழுத்தி யோசித்தது.

“அருள் எதுக்கு அழுதான் அவனுக்கு இங்க இருக்க பிடிக்கலயா?” வருத்தம் கலந்த குரலில் கேக்க, அந்த குரல் அவளை ஏதோ செய்தது.

“பிடிக்கலைன்னு இல்ல நீ எப்போவும் அவனை முறைச்சிட்டே இருக்கியாம் அது அவனுக்கு புடிக்கல” என்றிட, ருத்ரன் லேசாய் அதிர்ந்தான்.

“என்ன நான் முறைக்குறேனா? அவன் தான் வந்ததுல இருந்து என்ன வில்லனை பாக்குற மாதிரி பாத்துட்டே இருக்கான்.”

“உன் பார்வையே அப்படிதான்னு நான் எப்படி அவனுக்கு புரிய வைப்பேன்? சூர்யா கிட்ட பேசுற மாதிரி அவன்கிட்டயும் பேசு.. பசங்க ரெண்டு பேரையும் ஒரே மாதிரி நடத்து இல்லன்னா அவங்களுக்கு ஒரு மாதிரி பீல் ஆகும்.. சூர்யா டக்குன்னு கேட்டிடுவான் ஆனா அருள் அப்படி இல்ல.. அவன் மனசுலையே வச்சிப்பான்.”

தீர்த்தி கூறியதை கேட்டு மனதில் குறித்துக் கொண்டான் ருத்ரன். தீர்த்தி மனதில் பல யோசனை ஓடியது. இங்கிருந்து செல்ல முடியாது என்ற உண்மை அவளுக்கு தெளிவாய் புரிய, இங்கு இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்தாள்.

“நீ பசங்க கிட்ட நான் தான் அவங்க அப்பான்னு சொல்லு.. அவங்க புரிஞ்சிப்பாங்கல” என தயக்கம் கலந்த ஏக்கத்துடன் ருத்ரன் கேக்க, அவனை அதிர்வோடு பார்த்தாள் தீர்த்தி. உண்மையை காலம் முழுக்க மறைக்க வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு இல்லை. ஆனால் நடந்த நிகழ்வுகள் எல்லாம் அவளை சொல்ல விடாமல் தடுத்தது. அது மட்டுமா அவளை சென்னையில் இருந்து இங்கு அழக்கடித்து மீண்டும் திருமணம் செய்து கொண்டேனே.. அவளை அவ்வளவு கெஞ்ச விட்டு அழுக விட்டு வேடிக்கை பார்த்தான். அதனை எல்லாம் நினைத்து பார்த்தவள் அவனை ஏகத்துக்கும் முறைத்தாள்.

“நான் ஏன் சொல்லணும்? நீ தான் வார்த்தைக்கு வார்த்தை சொல்றில்ல.. நான் இல்லாம கூட பசங்களை வளர்ப்பேன் சொல்றல அப்போ இதையும் நீயே சொல்லு. அருள்கிட்டயும் சூர்யாகிட்டயும் நான்தான் உங்க அப்பான்னு சொல்லு.. இத்தனை வருஷமா எங்க போனீங்கன்னு கேட்டா நீயே பதில் சொல்லிக்க..” என கடுப்படித்தாள்.

அவளுக்கு தெரியும் அவன் வீராப்பு எல்லாம் இப்பொழுது எடுபடாது என்று.. அதுவும் இல்லாமல் அவளுக்கே பிள்ளைகள் கேக்க போகும் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.

அவள் கூற்றில் சற்று தடுமாறிய ருத்ரன் யோசித்தான். பிள்ளைகளை இப்படி எதிர்கொள்ள அவனுக்கு தைரியம் இல்லை.

“என்ன நான் சொல்ல மாட்டேன்னு நினைக்குரியா?” என வீம்பாக கேக்க, “சொல்லி தான் பாருன்னு சொல்றேன்..” என்றாள்.

இம்முறை இந்த விஷயத்தில் அவள் கை தான் ஓங்கி இருந்தது. ஆனாலும் ஒரு பக்கம் ருத்ரன் சொல்லிவிடுவானோ என்ற யோசனை அவள் மனதை அரித்தது. பிள்ளைகள் வாழ்க்கையில் அவன் இருக்க வேண்டாம் என்றும் அவளுக்கு தோன்றியது. கடந்த காலத்தில் நடந்த நிகழ்வுகளால் அவள் மனம் அவனுடன் வாழ ஒப்பவில்லை. அப்படி இருக்கையில் பிள்ளைகளுக்கு உண்மை தெரிந்தால் அதனால் வாழ வேண்டுமோ என அச்சமும் எழுந்தது.

“ருத்ரா பசங்க வாழ்க்கை அங்க தான் இருக்கு.. எனக்கு உன்னோட இங்க வாழவே புடிக்கல.. என்னையும் வற்புறுதாத.. உனக்கு வேணும்ன்னா எப்போ வேணும்னாலும் வந்து பசங்களை பாரு.. பசங்க வாழ்க்கையில நீ வேணாம்னு சொல்லல.. ஆனா பசங்களை காரணமா காட்டி என்ன உன் கூட வாழ வைக்க பாக்காத.. நான் கோபத்துல பேசல. பசங்க கொஞ்சம் வளரட்டும் அப்பறம் உண்மைய சொல்லிக்கலாம்.. எனக்காகவும் பசங்களுக்காகவும் எங்களை விட்டுடு..” என்று சொன்னவள் மேலே அவளின் அறைக்கு கண்ணீரோடு சென்றாள்.

இத்தனை வருடம் அவன் மேல் வளர்த்த வெறுப்பு அவன் நெருக்கத்தில் அவளை அறியாமல் தணிய அது அவளுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. வலுக்கட்டாயமாய் பழசை நினைத்து வெறுப்பை அதிகரிக்க பார்த்தாள்.

கீழே ருத்ரன் அதே இடத்தில் சிலை போல் நின்றான். என்ன ஆனாலும் தன்னை இந்த அளவிற்கு வெறுக்க மாட்டாள் என ஏதோ ஒரு நம்பிக்கையில் இருந்தான். ஆனால் பிள்ளைகள் உடன் அவனுடன் வாழவே விரும்பவில்லை என்று அவள் சொன்னதில் மொத்தமாய் உடைந்தான். திகட்ட திகட்ட காதலித்தவளா இப்படி பேசினால் என நினைத்தவன் விழிகளில் இருந்து இரு துளி கண்ணீர் கசிந்தது.
 
Top Bottom