• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மாதொரு பாகம் கொண்டான் - 5

Vishakini

Moderator
Staff member
MPK 05

“பளையில இறங்கிற ஆக்கள் எல்லாம் இறங்குங்கோ.” நடத்துநரின் உரத்த குரலில் பேருந்து ஜன்னலின் திரையை இழுத்து விட்டு வெளியே பார்த்தவள், இன்னும் இருபது இருபத்தைந்து நிமிடத்தில் தான் இறங்க வேண்டிய இடம் வந்து விடும் என்று எண்ணிக் கொண்டே தன் நெஞ்சில் சாய்ந்து உறங்கும் மகனைப் பார்த்தாள்.

பார்த்த மாத்திரம், அன்று அவனை மறைத்து விட்டிருந்த பற்றைக்குள் இருந்து தவழ்ந்து வந்து, “அம்மா!” என்று அழைத்த காட்சி கண்ணில் தோன்றிட, அவள் உடல் இப்போதும்

வெட்டி இழுத்தது.

கொஞ்ச நேரம் தாமதித்திருந்தாலும் அவன் இன்று தனக்கு இல்லையே! இந்த ஒரு மாதத்தில் எத்தனை லட்சமாவதோ முறையாக நினைத்து வெடவெடத்தவள், அவனை அணைத்திருந்த கைகளை இறுக்கி, அவன் உச்சியில் முத்தமிட்டாள்.

அருகில் மூன்றாவது சீட்டில் அமர்ந்திருந்த பெண்மணி, இவள் செய்கையைப் பார்த்திருந்தவர்,

“சரியான செல்லம் போல ஆளுக்கு! இவர் ஒரு பிள்ளை மட்டும் தானோ?” என்று விடுப்புக் கேட்க, புன்னகையோடு முடித்துக் கொண்டாள் அவள்.

மகனாக மட்டும் இல்லை. அவள் மொத்த வாழ்க்கைக்கும் ஆதாரமே

அவன் ஒருவன் மட்டும் தான் என்று அவருக்கு சொல்லவா முடியும்?

விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருக்கும் போது, வினோதன் எங்கே பிள்ளையைக் கேட்டு விடுவானோ என்று எத்தனை நாள் பயந்து பயந்து செத்திருப்பாள்?

அவன் அப்படிக் கேட்டு விடக் கூடாது என்பதற்காகத்தானே சட்டத்தரணியும் சுற்றத்தாரும் சொன்ன, எதையும் கேட்காமல், பிள்ளையை உரிமை கோராவிட்டால் மாதம் மாதம் கட்ட வேண்டிய படிக்காசு கேட்க மாட்டேன் என்று வினோதனிடம் டீல் பேசினாள்.

அப்படிப் போராடித் தனக்கே தனக்கென்று உரிமையாக்கிக் கொண்ட
பிள்ளையைக் காலன் உரிமை கோரினால் தூக்கிக் கொடுத்து

விடுவாளா, என்ன?

அன்று இவர்கள் நித்திலன் தான் கோபித்துக் கொண்டு எங்கோ சென்றுவிட்டான் என்ற பின்னணியில் தேடிக் கொண்டிருக்க, நடந்ததோ வேறாக இருந்தது.

முதல் நாள் பள்ளியில் பிரச்சனை செய்த அந்தப் பிள்ளையின் தகப்பனின் கண்களில் தனியாக நடந்து வந்து கொண்டிருந்த நித்திலன் பட்டுவிட்டான்.

தன் பிள்ளையைப் போல் தான் இவனும் சிறுவன் என்று யோசிக்கும் அறிவு எல்லாம் இல்லாதவன் அவன்.

அவன் இந்த ஏரியாவில் சட்டவிரோதமாக போதைப் பொருள் கை மாற்றும் ஆள் வேறு! அவனிடம்

இரக்கத்தையோ, பகுத்தறிவையோ எதிர்பார்க்க முடியுமா?

அவன் இப்படி என்று சாதனாவுக்குத் தெரியாது. தெரிந்திருந்தால் இவ்வளவு கவனமில்லாமல் மகனை விட்டிருக்கமாட்டாள்.

தன்னை அவன் துரத்தும் நோக்கம் அறிந்த நித்திலன், தார் ரோட்டில் வேகமெடுத்து ஓட ஆரம்பித்தவன், மெயின் ரோட்டில் இருந்து பிரியும் கிளைப்பாதையில் நுழைந்து ஓட,
அந்தப்பாதை போகப் போக ஒடுங்கி ஒரு பனைக்காட்டில் சென்று முடிந்திருந்தது.

பின்னால் வருபவன் கையில் சிக்கிவிடக் கூடாது என்பது மட்டுமே அப்போதைய குறிக்கோளாகத் தெரிய, ஒற்றையடி பாதை கூட இல்லாத மிகவும் அடர்ந்த

பற்றைக்குள் இருந்த ஒரு சிறு கட்டட இடிபாட்டின் பின்னே சென்று ஒளிந்திருக்கிறான்.

தேடி வந்த கனத்த சரீரத்தானால் அவனைப் போல் எல்லாம் புகுந்து தேட முடியாததால், ‘எப்படியும் பாம்பு கடித்து சனியன் ஒழியும்… இல்லையென்று தப்பித்தாலும் நாளையும் இதே பள்ளிக்கூடத்துக்கு தானே வருவான். பார்த்துக் கொள்ளலாம்’ என்று சட்டைப் பொக்கற்றில் இருந்த பொடியை சரியான நேரத்துக்குக் கை மாற்ற வேண்டிய கடமை அழைத்ததில் அங்கிருந்து செல்ல முடிவெடுத்தான்.

ஆனாலும் அவனை சும்மா விட மனம் இல்லாமல், “நான் போட்டன் எண்டு நினைச்சு வெளில வர நினைக்காத. அங்க பாதையில தான் நிப்பன். வந்தியோ கையைக் காலை

முறிச்சித்தான் அனுப்புவன்.” என்று அவன் எந்தத் திசையில் இருக்கிறான் என்று தெரியாமல் உரக்கக் கத்தி விட்டுப் போக, நித்திலனுக்கு அது கேட்டு விட்டது.

இங்கிருந்து அசைந்தால் அவன் கையில் அடிபட வேண்டும் என்று விளங்கிப் போக, கடக்கும் மணித்தியாலங்களைக் கருத்தில் கொள்ளாது, அங்கேயே ஒடுங்கி அமர்ந்து விட்டான்.

இறுதியாக ஆறரை மணி போல் பனைக்காட்டுக்கு கொஞ்சம் முன்னாக விழுந்திருந்த நித்திலனின் புத்தகப்பை வழி காட்ட, பொலிஸார் அவனை மீட்டெடுத்தனர்.

அதுவரை அவனை எந்த விஷ ஜந்துகளும் தீண்டாமல் இருந்தது, சாதனாவின் புண்ணியமே!


அரை மயக்க நிலையில் மகனைக் கண்ட சாதனா துடித்த துடிப்பு!

மருத்துவமனையில் இருந்த இருநாட்களும் மகனைக் கையில் இருந்து இறக்கவில்லை அவள்.

பொலிஸ் வரை சென்றதால், மேற்கொண்டு அந்த நபரின் மேல் எதுவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமா என்று கேட்டவர்கள், அந்தக் கயவனின் பின்புலத்தையும் சொல்லி, அவனோடு மேலும் மேலும் பிரச்சனைப்பட்டால் உங்கள் வாழ்க்கை தான் நிம்மதியின்றிப் போகும் என்றும் கோடிட்டுக் காட்ட, சாதனா கையெடுத்துக் கும்பிட்டாள்.

எனக்கு என் மகன் கிடைத்ததே போதும். இனி இந்த ஊரே வேண்டாம் எனக்கு. என் மகன்

அவனாக சென்று தான் பற்றைக்குள் ஒளிந்து கொண்டான் என்று முடித்து விடுங்கள் என்று கேட்டுக் கொண்டாள்.

உண்மைக்குமே இனி சாவகச்சேரியில் இருப்பதே இல்லை என்றுதான் முடிவெடுத்திருந்தாள்.

இவர்கள் சொல்வதையெல்லாம் வைத்துப் பார்த்தால், அந்தக் கயவன் இதன் பின் தன் மகனை அப்படியே விட்டு விடுவான் என்று அவளுக்கு நம்பிக்கை இல்லை. இன்று ஏதோ கடவுள் புண்ணியத்தில் திரும்பக் கிடைத்தான். மறுமுறை கிடைக்காமலே போனால்????

நினைத்த நொடி கருவறையின் உட்சுவரை அமிலம் ஊற்றி சிதைத்தது போல் வலி கண்டாள்.

அவனை சென்று தட்டிக் கேட்கவோ,

நீ இங்கேயே இரு, நீங்கள் இருவரும் என் பொறுப்பு என்று சொல்லவோ அவளுக்கென்று யார் தான் இருக்கிறார்கள்.

இவள் பாட்டை இவள் பார்த்துக் கொண்டால் மட்டுமே தாய்க்குக் கூட இவள் மகளாகத் தெரிவாள்.

யாருக்கும் இவளைப் பற்றிய அக்கறை இல்லை. அது போல் தான் இவளுக்கும் தன் மகனைத் தவிர யாரும் எதுவும் பெரிதல்ல.

அதுதான் முடிவெடுத்து விட்டாள், மகனுக்கு தீங்கான இந்த ஊர் வேண்டவே வேண்டாம் என்று! கூடவே ஒரு பேராசை, இடம் மாறினாலாவது மகனிடம் மாற்றம் வருமா என்று!

எண்ணம் உதித்ததும் அவள் உதவி

தேடி ஓடிப் போனது, ராணி அம்மாவிடம்தான்.

அவருக்கு இவளைப்போன்ற பழக்கமான ஒரு வேலையாள் தங்கள் கையை விட்டுப் போவது குறித்த வருத்தம் இருந்தாலும் அவளின் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு மரியாதை கொடுத்தார். கணவனிடம் பேசினார்.

மனோரஞ்சனும் தனக்குத் தெரிந்த பிரைவேட் ஆஸ்பத்திரிகளில் சொல்லி வைப்பதாகவும் காத்திருக்கும்படியும் கூற, அவளோ ஹொஸ்பிட்டல் வேலை மட்டும் என்றில்லை, பாதுகாப்பான வேலை எதுவாக இருந்தாலும் சமைக்கும் வேலையென்றால் கூட பரவாயில்லை என்று கேட்டிருந்தவள்,

இன்னும் ஒரு கிழமையில் உயர்தரப் பரீட்சைக்காகப் பள்ளிக்கூடம் விடுமுறை விட்டுவிடும். அதுவரை சுகயீனம் என்று சொல்லி பள்ளிக்கூடம் அனுப்பாமல் சமாளித்து விடலாம். அதன் பின் ஒரு மாதம் கழித்துதான் பாடசாலைகள் ஆரம்பமாகும். அதற்குள் வேலை கிடைத்தால் நல்லது என்று நல்லூரானிடம் வேண்டுதல் வைக்க, இந்த இடத்தில் அவளிடம் கொஞ்சமாக இரங்கினாரோ, அலங்காரக் கந்தன்!

மனோரஞ்சனுக்குத் தெரிந்த மருத்துவர் ஒருவரின் மாணவனாக இருந்து தற்போது கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் எலும்பு முறிவு நிபுணராகப் பணியாற்றும் ஆதித்யன் என்பவனிடம் வேலை கிடைத்திருந்தது சாதனாவுக்கு.

ஆனால் வேலை மருத்துவமனையில் இல்லை. அவனுக்கும் சொந்தமாக தனியார் மருத்துவ கிளினிக் ஒன்று உண்டு என்றாலும் அங்கே போதுமான அளவு பணியாளர்கள் இருக்கின்றனர்.

அவனுக்குத் தேவைப்பட்டதெல்லாம், அவனின் இரண்டு தேவதைகளைப் பார்த்துக்கொள்ள ஒரு செவிலித் தாய்.

மிகவும் நம்பிக்கையும் பொறுமையும் கடமையுணர்வும் தவறாத ஒரு பெண்ணைப் பணியமர்த்த வேண்டும் என்ற தேடுதல் வேட்டையில் இருந்தவனுக்கு சாவகச்சேரிக்காரியின் விபரங்கள் கையில் கிடைத்தது.

சாதனா மேல் இருந்த நம்பிக்கை மனோரஞ்சனை அந்த மருத்துவரிடம்

ஏதேனும் வேலை இருந்தால் சொல்லுமாறு கேட்க வைக்க, மனோரஞ்சன் மேல் இருந்த நம்பிக்கை அந்த மருத்துவரை ஆதித்யனிடம் எடுத்து சொல்ல வைக்க, ஆதித்யனுக்கு தன் ஆசான் மேல் இருந்த நம்பிக்கை, சாதனாவை சாவகச்சேரியில் இருந்து கிளிநொச்சி வரை கொண்டு வந்து விட்டிருந்தது, அந்த நம்பிக்கை அவள் மேல் வரும் வரை, அவளின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் அனைத்தும் அவன் வசம் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு!

பின்னே அவன் ஒப்படைக்கப் போவது அவன் உயிரினும் மேலான இரு பொக்கிஷங்களை ஆயிற்றே! இந்தளவில் கூட முன்னெச்சரிக்கையோடு இருக்கவில்லையென்றால்?

சாதனாவுக்கு அந்த நிபந்தனை ஒன்று இடித்தாலும், மனோரஞ்சன் சொன்ன, அவள் வேலை பார்க்கப் போகும் இடம் மற்றும் பாதுகாப்பு, மோட்டார் சைக்கிளில் பயணித்தால் பத்து நிமிடங்களுக்குள் அடைந்து விடக்கூடிய நித்திலனுக்கான பள்ளியின் தூரம் என்று இன்னும் பல சாதகங்களைக் கணக்கிட்டுப் பார்த்து முடிவில் சரியென்றது.

பார்க்கலாம்… அவள் எதிர்பார்த்த மாற்றங்கள் மகனுக்கு மட்டும் நடக்கின்றதா? இல்லை அவளுக்குமா என்று!
 
Top Bottom