• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மிருகங்கள் - நிதனிபிரபு

நிதனிபிரபு

Administrator
Staff member
உயிரை மட்டுமாவது விடுங்களேன்! - நிதனிபிரபு

(இன்றைய நிலையில் இந்த தலைப்பில் எனக்கு உடன்பாடு இல்லை . அதுதான் மேலே மிருகங்கள் என்று போட்டேன்.)

மார்கழி மாதத்தின் நட்டநடு இராத்திரி. சில்லிடும் காற்று ஊரெங்கும் சீண்டிச் சிலிர்க்கவைத்துக்கொண்டிருந்தது. புத்தம்புது நாளொன்று தன் முதல் மணித்துளிகளை முத்தமிட்டுக்கொண்டிருந்த வேளையில், ஊளையிடும் நாய்கள் கூட உறங்கிவிட்ட நள்ளிரவின் நிசப்தத்தில், அந்த ஒற்றைப் படுக்கையறை வீடே சுகமான துயிலில் ஆழ்ந்திருந்தது.

பின்னிரவில் வீடு வந்த வித்யா மட்டும் கட்டிலில் அப்படியும் இப்படியுமாக உழன்றுகொண்டிருந்தாள்.

கண்களைச் சொக்கி அழைத்தது உறக்கம். ஆழ்மனமோ விழித்துக்கிடந்து அலைக்கழித்தது. என்னென்னவோ பயங்கரக் கனவுகள், திகிலான நினைவுகள் இரவின் அமைதியில் இன்னும் ஆபத்தாய்த் தோன்றிக் கண்ணை மூடவிடாமல் துரத்தின. தனிமை அச்சுறுத்தியது. இன்னுமொருமுறை புரண்டு படுத்துப்பார்த்தாள்.

‘ப்ச்! எப்பதான் நிம்மதியாப் படுக்கப்போறனோ தெரியா!’ சிறுவயதில் தாயின் மடியில் எந்தக் கவலைகளுமின்றி உறங்கிய நாள்களின் நினைவில் விழிகள் நனைந்தன.

அவளின் அம்மா ஆசிரியை. குளிக்க வார்க்கும்போது, தலை பின்னிவிடும்போது, சாப்பிடும்போது, உறங்கும்போதெல்லாம் புத்திமதிகள் சொல்லித்தருவார்.

“என்ன வேணுமெண்டாலும் அப்புச்சாமியக் கேட்டாத் தருவார்.”

“பொய் சொல்லக் கூடாது செல்லம்; சாமி வந்து கண்ணைக் குத்தும்.”

“ஆருக்கும் அடிக்கக் கூடாது. களவெடுக்கக் கூடாது. வாய் காட்டக் கூடாது. பிழை செய்யக் கூடாது!”

வகுப்புத்தோழி பேய்க்கதை சொல்லிப் பயமுறுத்தியபோது, “பேயெல்லாம் இல்லையம்மா. சும்மா பயப்படக் கூடாது!” என்று தைரியம் தந்திருந்தார்.

“பெரியாக்கள் வேலை சொன்னா செய்யவேணும் அம்மாச்சி! சொல்லுறது கேட்டு நடக்கோணும். அப்பதான் நல்லபிள்ளை எண்டு என்ர செல்லத்தச் சொல்லுவீனம்.” என்றெல்லாம் சொல்லித்தந்தது முழுக்கப் பொய்தானே?

விக்கி விக்கி அழ வேண்டும் போலிருந்தது. ஒற்றைத் தாயாக, பெண் பிள்ளையை வைத்துக்கொண்டு, ஒரு துணை இல்லாமல், ஆண் கழுகுகளுக்குப் பயந்து, சமுதாயத்துக்கு அஞ்சி, ஊர் வாய்க்கு அடங்கி என்று இரவும் பகலும் அவளைக் கட்டிக் காக்கப் போராடியபோதிலும், அவளைத் தன்னம்பிக்கை உள்ள ஒருத்தியாக வளர்க்கமட்டும் தவறவேயில்லை.

அவளுடையதையும் சேர்த்து அவர் தாங்கியதாலோ என்னவோ, அந்த இதயமும் ஒருநாள் கனத்துப்போய்த் தன் துடிப்பை நிறுத்திக்கொண்டது.

தாய்மடிக்காக ஏங்கியவளுக்கு அழுகை பொங்கியது. அழுதால் பாரம் தீருமென்பதும் பொய்தான். எத்தனை இராத்திரிகளாக அழுகிறாள். குறையவேயில்லையே.

‘வேண்டாம்! இதெல்லாம் நினைக்கவே கூடாது!’ கண்களை இறுக்கி மூடிக்கொண்டு புரண்டு புது இடத்தில் படுத்தாள். என்ன செய்தும் உறக்கம் மட்டும் கருணை காட்டவேயில்லை.

உறக்கம்; கொடுத்து வைத்தவர்களுக்குக் கிடைக்கும் பெருங்கொடை. கிடைத்தவனுக்கு அதன் அருமை தெரிவதில்லை. பால்மணம் மாறாக் குழந்தை எந்தச் சிந்தனையும் இல்லாது பூமொட்டு இதழ்கள் விரிய ஆழ்ந்து உறங்குவதுபோல, நாள் முழுக்க வியர்க்க விறுவிறுக்க வேலை செய்துவிட்டு அடித்துப் போட்டதுபோல் உறங்கும் உழைப்பாளியைப் போல உறங்கவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

வித்யா ஒன்றும் வேலை வெட்டி இல்லாதவள் இல்லை. அவளொரு வைத்தியர். இதய சத்திரசிகிச்சை நிபுணி. யாழ்ப்பாணத்தில் பெயர் சொல்லுமளவில் புகழ்பெற்றவள்.

அன்று அவள் பின்னிரவில் வந்ததற்குக் காரணமும் மூச்சுக்காகத் தவித்த ஒரு உயிரைக் காப்பாற்றியதுதான். உண்மையிலேயே மனத்தில் தோன்றிய நிறைவுக்கும், உடலில் இருந்த களைப்புக்கும் படுத்த கணமே உறக்கம் வந்திருக்க வேண்டும்.

இப்படியே என்னை விடேன் என்று கெஞ்சிய உடலைக் கொண்டுவந்து, குளிக்க வைத்துத்தான் உறங்கச்சொல்லி விட்டாள். ஆனாலும், நெருங்கவே நெருங்காத உறக்கத்தின் பிடிவாதம்தான் வென்றது!

புரண்டுகொண்டேயிருந்தாள். திடீரென்று அந்த அமைதியைக் கிழித்துக்கொண்டு எங்கிருந்தோ ஒரு சத்தம். பதறித் துடித்துக்கொண்டு துள்ளி எழுந்தாள்.

இதயம் ஒருமுறை நின்று துடித்தது. நெஞ்சமெல்லாம் உலர்ந்து போயிற்று. கைகால்களில் நடுக்கமெடுக்க, வியர்வையில் தேகம் நனைய, கட்டிலோடு கட்டிலாக ஒன்றிக்கொண்டு காதைக் கொடுத்தபோதுதான் உணர்ந்தாள், சத்தமிடுவது அவளின் கைப்பேசி என்று.

நெடிய மூச்சை இழுத்துவிட்டு ஆசுவாசப்படுத்தினாலும் பதற்றம் நிற்கவில்லை.

நடுங்கிய கையால் எட்டி எடுத்தாள். வைத்தியசாலையிலிருந்துதான் அழைப்பு.

“ஹலோ!”

“டொக்டர்! எமெர்ஜென்சி கேஸ். ரோட் ஆக்சிடென்ட். அதுல ஹார்ட் அட்டாக் வந்து, கொண்டுவந்திருக்கினம். சீஃப் டொக்டர் அவசரமா ஒப்பரேஷன் செய்யோணும் எண்டவர்.” என்றாள் தாதிப்பெண் மேரி.

“ஓகே! எல்லாம் ரெடி பண்ணுங்கோ, உடன வாறன்!”

அழைப்புத் துண்டிக்கப்பட்டதும் மேரியால் வித்யாவை எண்ணி வியக்காமலிருக்க முடியவில்லை.

எந்த நேரத்தில் அழைத்தாலும் உடனே வந்துவிடுவாள். சோர்ந்ததுமில்லை; சோம்பியதுமில்லை. அவளும் ஒரு கடவுள்தான். எத்தனையோ உயிர்களைக் காத்த கடவுள்.

எத்தனையோ குழந்தைகளுக்கு அம்மாவையோ அப்பாவையோ முழுமையாக மீட்டுக் கொடுத்திருக்கிறாள். எத்தனையோ தாய் தந்தையருக்கு அவர்களின் பிள்ளைகளைக் காப்பாற்றிக் கொடுத்திருக்கிறாள்.

ஒரு வயதான அம்மா, தன் ஒற்றை மகனைக் காப்பாற்றித் தந்ததற்காக அவளின் காலிலேயே விழுந்து நன்றி சொன்னதைக் கண்டு, வித்யாவோடு சேர்ந்து மேரியும் அழுத சம்பவமெல்லாம் நடந்திருக்கிறது. முப்பத்திமூன்று வயதாகிறது. திருமணமே செய்யாமல், வேலையையே உயிராக மதித்து வாழும் அவளை மேரிக்கு மிகவுமே பிடிக்கும்.

“ஒரு கலியாணத்தைக் கட்டலாமேம்மா.” பரிவோடு எத்தனையோ முறைகள் சொல்லியிருக்கிறார்.

“விருப்பம் இல்லையக்கா; இதே எனக்குச் சந்தோசம்.” என்றுவிடுவாள் வித்யா.

எண்ணிப் பத்தே நிமிடங்களில் வைத்தியசாலையின் அந்த நீண்ட கொரிடோரில் வேக நடையில் வந்துகொண்டிருந்தாள் வித்யா. அளவான உயரம். மெல்லிய மேனி. களையான முகம். நேர்த்தியாக அணிந்திருக்கும் சேலை, நிமிர்ந்த பார்வை என்று பார்ப்பவர்களிடம் இனிமையைத் தோற்றுவிக்கும் அழகி. நல்ல வேலையும்.

இவளுக்கு என்ன குறை என்று திருமணத்தை மறுக்கிறாள்? மேரிக்கு அப்போதும் கவலைதான்.

“எல்லாம் ரெடியா மேரியக்கா?” கேட்டுக்கொண்டே, அவரிடமிருந்த கோப்பை வாங்கிப் பார்த்தாள்.

ஜெயராமன், வயது அறுபத்தியொன்று, முதலே இதயத்தின் வால்வில் அடைப்பு இருந்திருக்கிறது. வாகனம் மோதிய அதிர்ச்சியில் மூச்சுக்குழாய்கள் அடைத்து, மாரடைப்பு உருவாகியிருக்கிறது. முதலே அடைப்பிருந்ததைத் தெரிந்துகொள்ளாமல் விட்டதில் இப்போது ஆபத்திலிருக்கிறார் என்று விளங்கிக்கொண்டாள்.

அப்படியே இவளுக்காகக் காத்திருந்த தலைமை மருத்துவரிடமும் என்னென்ன எப்படிச் செய்ய வேண்டும் என்று கலந்தாலோசித்துவிட்டு வேகமாகத் தியேட்டருக்குள் நுழைந்தாள்.

தன் பச்சை நிறக் கோட்டினை அணிய, பின் பட்டியை ஒரு தாதி கட்டிவிட்டார். கையுறைகளையும் அணிந்துகொண்டாள். அங்கிருந்த தாதிகள் அவளுக்குத் தேவையானவற்றைக் கொடுக்க, பெற்றுக்கொண்டு நோயாளியின் அருகே நெருங்கியவளின் பாதம் ஒரு திடுக்கிடலோடு வேரோடியது. அதிர்ச்சியில் இதயம் தாறுமாறாகத் துடித்தது. கைகால்களில் நடுக்கம். நிற்கமுடியாமல் தடுமாறிக் கட்டிலைப் பற்றினாள்.

“செல்லம்மா, களைப்பா இருக்கு, ஒரு செம்புத் தண்ணி தாறீங்களா?” கனிவோடு நோக்கிப் பாசமாய்க் கேட்ட ஒரு குரல், காதுக்குள் ஈயக்குண்டுகளைப் பாய்ச்சியது.

ஆத்திரம், ஆவேசம், அழுகை, அகங்காரம் எல்லாம் பெருக்கெடுத்து வர, பத்ரகாளியாக மாறி அவனைத் துவம்சம் செய்யச் சொல்லி ஆழ்மனம் உந்தித்தள்ளியது.

உயிர்ப்பிச்சை கேட்டுத் துடிக்கும் அந்த இதயத்தைக் கீறிக் கிழித்து வெளியே இழுக்கவா? உன்னைக் கொல்லவா? கொன்று பசி தீர்க்கவா? அவளுக்குள்ளிருந்த பத்திரகாளி உறுமினாள்.

முகமெங்கும் வியர்வை முத்துகள். ஆத்திரம் கொடுத்த ஆவேசத்தில் தேகம் நடுங்கியது. ஆழ்நெஞ்சு கத்தியது. விடாதே! உயிரை எடு! விட்டுவிடாதே!

சமநிலை குழம்பிப்போன மனநிலையில் தேகம் நடுங்க அப்படியே ஆணியறைந்ததுபோல் நின்றவளைக் கலவரத்தோடு பார்த்தனர் தாதிப்பெண்கள்.

இது அவள் இயல்பில்லை. நிதானமாகவும் வெகு கவனமாகவும் கண்ணும் கருத்துமாகவும் இரும்புப் பெண்மணியாக நின்று ஒவ்வொரு சத்திரசிகிச்சையையும் செய்து முடிப்பவளுக்கு இன்று என்னானது?

“டொக்டர்!”

எதையும் உணரமுடியாத அதிர்வுக்குள் அகப்பட்டுக்கொண்டிருந்தாள் வித்யா.

“டொக்டர்!” அழுத்தி அழைத்து அவளின் கரத்தைப் பற்றினாள் தாதி.

“ஆ! என்ன என்ன?” பதறி விழித்தவளுக்குக் கைகால்களின் நடுக்கம் நின்றபாடில்லை.

“ஏதாவது வேணுமா?” தாதியின் விழிகளிலும் பெரும் குழப்பம்.

சூழ்நிலை மெல்லப் புரிந்தது. வித்யா மெல்லக் கட்டுக்குள் வந்தாள். அவனையே வெறித்தாள். ஆழ்மனத்தின் ஆழிப்பேரலையை அடக்கினாள். ஐம்புலனையும் நிதானத்துக்குக் கொண்டுவந்தாள்.

திடமனதோடு அவள் ஆயத்தமாக, சத்திரசிகிச்சையும் ஆரம்பித்தது. கடுமையான போராட்டம். கற்ற கல்விக்கும் அத்தனை வருட அனுபவத்துக்குமான சவாலாகத்தான் அமைந்தது அந்தச் சத்திரசிகிச்சை.

போராடவேண்டிய நபர் மயக்கத்திலிருக்க, அவருக்காகக் கடுமையாக அவள் போராடினாள். ஒரு வழியாகப் புறப்படத் துடித்த உயிரை மீண்டும் அந்த உடல் கூட்டுக்குள் அடைத்துவிட்டு, இனி ஆபத்து வராது என்கிற முழு நம்பிக்கையோடு, அந்த அறையைவிட்டு வெளியே வந்தாள்.
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
மனம், உடல், மூளை அத்தனையாலும் போராடியவள் முற்றிலுமாகக் களைத்துப்போய்த் தனக்கான அறைக்குள் சென்று முடங்கிக்கொண்டாள்.

சரியாக இரண்டு மணிநேரம் கழித்துப் போய்ப் பார்த்தாள். அவரின் நாடித்துடிப்புச் சீராகியிருந்தது. இனி ஆபத்தில்லை. அமைதியான ஆழ்ந்த மயக்கத்திலிருந்தவரை அவள் விழிகள் வெறித்தன!

‘நியாயப்படி உன்னைக் காப்பாற்றியிருக்கக் கூடாது. தர்மப்படியும்தான். ஆனால், இன்னொரு உயிர் வதைபடுகையில் அதை ரசிக்கும் வக்கிர நெஞ்சம் எனக்கில்லையே!’ அந்த முகத்தைக் கூடப் பார்க்கப் பிடிக்காமல் வெளியேறினாள்.

செய்தியறிந்து ஓடிவந்த அவன் மனைவி, “என்ர குடும்பத்துக்கே நீதானம்மா கடவுள்!” என்று கைகூப்பித் தொழுதாள்.

மகள், அவள் கரத்தைப் பற்றிக்கொண்டு, “அப்பா எண்டால் எங்களுக்கு உயிர். அவரைக் காப்பாத்தி தந்தத்துக்கு நன்றி டொக்டர்.” என்று அழுதாள்.

ஆண்பிள்ளைக்கு வாய் வார்த்தைகள் கைகொடுக்கவில்லை போலும், கலங்கிக்கிடந்த கண்களாலேயே காணும்போதெல்லாம் நன்றி சொன்னான்.

இறுகிப்போய் எந்த உணர்வையும் காட்டாமல் கல்லாக நின்றாள் வித்யா.

நாட்கள் நகர்ந்தன. அந்த மனிதரும் நலமடைந்தார். “என்ர கண்ணுக்குக் கடவுளாத்தான் தெரியுறீங்க டொக்டர்! நான் இல்லாம என்ர குடும்பமே நடுத்தெருவுக்கு வந்திருக்கும்!” கையெடுத்துக் கும்பிட்டு, நெஞ்சார நன்றி சொன்னவரின் முகமே பாராமல் சட்டென்று அங்கிருந்து வெளியேறினாள் வித்யா.

அன்று இரவு, வேலையை முடித்துவிட்டுப் புலர்ந்தும் புலராத அதிகாலையில் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தாள். சாலையோரத்துப் பற்றையில் ஏதோ அசைவு. ஒரு சலசலப்பு. சட்டென்று அடங்கியும் போனது. சந்தேகத்தில் நின்று பார்த்தாள்.

மீண்டும் பற்றைகள் நசியும் சத்தம். என்ன அது? இறங்கிப் போனவள் கண்ட காட்சி இதயத்துடிப்பை ஒருமுறை நிறுத்தியது. மொட்டு விரியாத சின்னப்பூ ஒன்றைக் கசக்கி முகர்ந்திருந்தன, அந்த ஓநாய்க் கூட்டங்கள்.

மூச்சுப் பேச்சு இல்லாமல் சிதைந்துபோய்க் கிடந்தாள் ஒரு சிறுமி.

“ஐயோ!” நெஞ்சு துடிக்க அந்த மிருகங்களைத் தள்ளிவிட்டுவிட்டு மூச்சிருக்கிறதா என்று சோதித்தாள். கற்ற எந்த அறிவினாலும் பிரித்தறிய முடியாமல் தடுமாறி, உயிரில்லை என்று உணர்ந்த கணம், ஆவி துடித்துப்போயிற்று!

உடலைத் தின்ற தாகமடங்க உயிரையும் குடித்திருந்தன வல்லூறுகள்!

பெண்புலியாக ஆக்ரோசம் கொண்டு அந்த மனித மிருகங்களை வேட்டையாடத் தொடங்கினாள். “நாய்களே! என்ன பாவமடா செய்தவள் அந்தக் குழந்தை. சின்ன பூவடா, கசக்கி எறிஞ்சிட்டீங்களே!” கையில் அகப்பட்ட கட்டையை எடுத்து அடித்துத் துவம்சம் செய்தாள்.

“உயிரக் கூடவா விட்டு வைக்க மனம் வரேல்ல. நாளைக்கு அவளே உங்களைக் காப்பாத்துற தெய்வமா வந்து நிண்டிருப்பாளேடா!” மதுவின் ஆதிக்கத்தில் மயங்கிக்கிடந்த பதர்களால் அந்தப் பெண் சிங்கத்தை எதிர்க்க முடியவில்லை.

“என்ன அழிச்சவனின்ர உயிரைக் கூடக் காப்பாத்திப்போட்டுத்தானேடா நான் வந்து நிக்கிறன். உங்களால் மட்டும் எப்பிடி உயிரையும் குடிக்க முடியுது? அந்தளவுக்கு என்னடா வக்கிரம்?” பத்திரகாளியாக மாறித் துவம்சம் செய்தவளிடமிருந்து தப்பி, தட்டுத் தடுமாறி விழுந்து எழுந்து, உடலெங்கும் இரத்தம் வடிய அந்த நாய்கள் ஓடிவிட, அவளைத் தூக்கி மடியில் கிடத்தியவளுக்கு நெஞ்சு பொறுக்கவேயில்லை.

“‘மாமாக்கள்’ எண்டு இந்த நாயலை நீயும் நம்பினியா செல்லம்? மனித உருவில இருக்கிற மிருகங்களை அனுபவமுள்ள மனுசராலேயே கண்டு பிடிக்கிறது கஷ்டம். நீ எப்படிக் கண்டு பிடிப்ப? கடவுளே! உனக்குக் கண்ணே இல்லையா?” என்னவோ தான் பெற்ற பெண்ணுக்கே நடந்துவிட்டதுபோல் அவளைக் கட்டிக்கொண்டு கதறினாள்.

“ஐயோ செல்லமே! நீயும் பேய்களைப் பாத்தியா? நீ கூப்பிட்டுமா கடவுள் வரேல்ல?”

அவளும் பேயைக் கண்டாளே! தண்ணீர் கேட்டுக்கொண்டு வந்த பேய், அவள் வீட்டுக்குள் சென்றதும் தானும் வந்து கதவடைத்துவிட்டு அவளை நெருங்கியதே.

பயந்து கதறியும் விடவில்லை. கெஞ்சியும் விடவில்லை. கையெடுத்துக் கும்பிட்டும் இரக்கம் காட்டவில்லையே!

“பொய் சொன்னாலே சாமி வந்து கண்ணைக் குத்தும் எண்டு அம்மா சொன்னா. எனக்கு உடம்பெல்லாம் வலிச்சுதே. ரெத்தம் வந்ததே. அப்பவும் சாமி அவனுக்கு ஒண்டுமே செய்யேல்லையே! பயமா இருக்கு மாமா எண்டு கெஞ்சியும் விடேல்ல. போராடி போராடியே மயங்கிப்போனேனே.” தன்னை நினைத்து அழுதாளா. இல்லை தன் கைகளுக்குள் மூச்சுப் பேச்சில்லாமல் கிடக்கும் அந்தச் சிறுமியை எண்ணி அழுதாளா என்று தெரியாமலேயே துடித்தாள்.

அப்போதுதான் அது நடந்தது. அவள் கைகளுக்குள் இருந்த அந்தச் சின்ன உடம்பு ஒருமுறை தூக்கிப்போட்டது. நெடிய மூச்சொன்று அடிவயிற்றிலிருந்து பெரும் ஓசையுடன் வெளியேற, அசைவுகள் அத்தனையும் நிற்கச் சட்டென்று பார்த்தாள்.

‘உயிர் இருக்கா?’ அவசரமாக மீண்டும் நாடித் துடிப்பைப் ஆராய்ந்தாள். ‘ஐயோ துடிக்குது!’ அடுத்தகணமே மின்னலென அவளைக் காவிக்கொண்டு வைத்தியசாலைக்கு ஓடினாள் வித்யா.

முற்றும்.
 
Last edited:

sathiyags

New member
மிருகங்கள் என்பதுதான் சரியான தலைப்பு. இது போன்ற ஆட்கள் இருக்குமிடத்தில் வித்யா போன்ற கடவுள்கள் கொஞ்சம் இருக்கிறார்கள் என்பதை காட்டியதற்கு நன்றி நிதா சகோதரி.
 
காலையில் படித்து நெஞ்சு கனத்து போயிற்று.. இந்த மிருகங்களுக்கு அழிவென்பது இல்லையா? இந்த மிருகங்களை படைத்த இறைவனின் குற்றமா, ஒழுக்கமாக வளர்க்காத பெற்றவர்கள் குற்றமா, சமூகத்தின் குற்றமா? யார் மீது குற்றம்?
 

Gaya Naga

New member
இதயத்தை நொறுக்கும்
பாலியல் வன்கொடுமைக்கு (Rape) எதிரான செயல்களுக்கு அனுதாபத்தை
மட்டுமே வெளிப்படுத்த முடிகிறது.பெண்களுக்கு எதிரான இந்த மிருகத்தனமான வன்முறை ஏற்றுக்கொள்ள முடியாதது.
அதனால் தலைப்பு மிருகங்கள் மிக சரியே.அசுர மிருகங்கள் தாம் அவர்கள்.

இந்தக் கொடூரமான குற்றத்தைக் அனுபவித்த வித்யா அதிலுருந்து மீண்டு ஒரு பண்பட்ட மருத்துவராய் உயர்ந்திருப்பது அருமை.

மனபாரத்தை கொடுத்த சிறுகதை, ஆனாலும் திரும்பவும் தங்கள் முத்திரையை ஆழ்ந்த கருத்துக்களால் பதித்து விட்டீர்கள். SUPER 👌
 

Ananthi.C

Well-known member
😪😪😪😪😪.... எத்தனை தலைமுறை ஆனால் என்ன... எத்தனை படித்து முன்னேறினாலும் என்ன... இத்தகைய மிருகங்களிடம் இருந்து மட்டும் நமக்கு விடுதலையே கிடையாதோ...
 
மனசே கனத்துப் போச்சு 😭😭😭 இந்தப் பதிவப் படிச்சு. ஒன்னுமே தெரியாத பிஞ்சுகளோட நிலைமை இன்னுமே மனச கனக்க செய்யுது. இந்த மாதிரியான நாய்ங்களுக்கெல்லாம் பெத்த தாய்க்கும், தான் பெத்த மகளுக்கும் கூட வித்தியாசம் தெரியாது😡😡😡😡😡 இந்த போதைய ஒழிக்கிற வரைக்கும் பெண்களுக்கு(பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை) பாதுகாப்பு என்பதே இல்லை. இத வாசிக்கிற நமக்கே இப்படினா அது அனுபவிச்சவங்களோட நிலை😭😭😭😭😭.....💔💔💔💔💔💔
 
Top Bottom