முகவுரை

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Kavithillai

New member
Staff member
Apr 13, 2026
1
1
3
India
பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்:

அடர்ந்த காட்டின் நடுவே கும்மிருட்டில் எதிரில் என்ன இருக்கின்றது என்று உணரமுடியாத மனநிலையில் தங்கள் உயிரை காத்துக் கொள்ள கண்மண் தெரியாமல் ஓடிக் கொண்டிருந்தது காதல் ஜோடி ஒன்று. ஒரு கையில் தீப்பந்தமும் மறுகையில் கூர்மையான ஆயுதத்துடன் சிறு கூட்டம் ஒன்று அவர்களை வெறிக் கொண்டு விரட்டியது.

நீண்ட தூரம் ஓடியதால் களைத்துப் போன பெண்ணவளின் வேகம் குறைந்தது. கரடுமுரடான பாதையில் ஓடியதால் பாதங்கள் கிழிந்து ரத்தம் கக்கிக் கொண்டிருந்தது. சோர்ந்துப் போனவள் அருகிலிருந்த மரத்தடியில் தலைசாய்த்து அமர்ந்துவிட்டாள். மேலே என்ன செய்வது என்று புரியாமல் தவிப்புடன் தன்னை பார்த்தவனை கண்டு விழிகளில் நீர் தளும்ப இதழ் விரித்து புன்னகைத்தாள்.

"தவறிழைத்து விட்டேன் ... உன் மனதை கலைத்து, உன் குடும்பத்திடமிருந்து பிரித்து இந்த நிலைக்கு தள்ளிவிட்டு பெரிய பாவியாகி விட்டேன் ..." என்று அவளைக் கட்டிக் கண்டு கதறியவனின் முதுகை தன் கரங்களால் மெல்ல வருடியவளின் கண்களில் இருந்து கண்ணீர் நீர்விழ்ச்சியாய் கன்னங்களில் வழிந்தோடியாது.

"உன்னை கண்டுக் கொண்டது ... உன் மீது காதல் கொண்டது ... உறவை எதிர்த்து உன்னுடன் வந்தது எதையும் நான் துருதிஷ்டமாக நினைக்கவில்லை. இவை அனைத்தும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத இன்பமான நாட்கள் ... எந்த வித குற்றவுணர்வும் இல்லாமல் என் முடிவை ஏற்றுக் கொள்ள முழுமனதுடன் தயாராகிவிட்டேன்" என்று புன்னகைத்தவளை கண்டு, பதில் பேச வாய திறந்தவனை பேசவிடாமல்,

"என் மீது நீ வைத்த அன்பு உண்மை என்றால், இங்கிருந்து சென்றுவிடு ... இவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன் ... எனக்கான வாழ்க்கையும் சேர்த்து நீ வாழ வேண்டும் ..." என்று அவன் முகத்தை ஆசையாய் வருடியபடி தீர்க்கமான குரலில் கட்டளையிட்டாள்.

அவள் முகத்தையே சில நொடிகள் வெறித்து பார்த்தவன், பின் தன் முகத்தை இரு கரங்களால் அழுந்த துடைத்துக் கொண்டான். அவள் கரங்களை பற்றி நெஞ்சில் அழுந்திக் கொண்டே மண்டியிட்டு அமர்ந்தவன்,

"இந்த உலகில் வாழ்வதற்கு உயிர் முக்கியம் ... என் உயிர் என்னைவிட்டு பிரிந்த பின், உயிரில்லாத ஜடமாக வாழும் வரத்தை எனக்கு தராதே ..." என்றவனின் முகத்தில் மனதின் வலி அப்பட்டமாக தெரிந்தது.

மனதாலும் உடலாலும் சோர்ந்து போனவர்கள், விதியின் கைகளில் தங்களின் முடிவை ஒப்படைத்துவிட்டு, ஒருவரை ஒருவர் அணைத்தபடி கண்களை மூடி மரத்தடியில் சாய்ந்தனர்.

இவர்களை விரட்டிக் கொண்டு வந்த கூட்டம் இருவர் இருந்த நிலையை கண்டு பெரும் கோபம் கொண்டது.

"துரோகி ... நம் குலத்தை நாசம் செய்ய பிறந்தவளின் உயிரை எடுத்து காளிக்கு படையல் இடுகிறேன் ..." என்று ஆவேசமாக உரைத்துக் கொண்டே ஓங்கிய வேலுடன் அப்பெண்ணை நோக்கி பாய்ந்தான் அக்கூட்டத்தில் இருந்த ஒருவன்.

அதற்குள் தங்களை நெருங்கிவிட்டவர்களை கண்டு திடுக்கிட்டு போன காதலன், சடுதியில் சுதாரித்து இடுப்பில் சொருகியிருந்த வளரியை மின்னல் வேகத்தில் பற்றி அப்பெண்ணின் கழுத்தை பதம்பார்க்க துடித்த வேலினை தடுத்திருந்தான்.

கண்களில் அப்பட்டமான மரண பயம் தெரிய, முகம் வெளிறிப் போய் தன்னை தாக்க வந்தவனை அதிர்ந்து போய் பார்த்தாள் அப்பெண். அதற்குள் தங்கள் தாக்குதலை தடுத்தவனை கண்டு கடுங்கோபம் கொண்டவர்கள் அவனை நோக்கி பாய, எங்கிருந்தோ சரக் சரக் என்று சீறி பாய்ந்து வந்த கூர்மையான அம்புகள் அவர்களை மேலே செல்ல விடாமல் தடுத்தது.

அங்கிருந்தவர்கள் அனைவரும் அதிர்ந்து போய் அம்பு வந்த திசையை பார்க்க, ராஜ கம்பீரத்துடன் முகத்தில் சிறு கடுமை குடிக் கொண்டிருக்க, முறுக்கேறிய கைகளின் ஒன்றில் வில்லும் மற்றொன்றில் குதிரையின் கடிவாளத்தை பற்றி அதை லாவகமாக மெல்ல செலுத்தி அவர்களை நோக்கி வந்தான் ஒருவன்.

அந்நியன் ஒருவன் தங்கள் பிரச்சனையில் தலையிடுவதை கண்டு கொதித்து போன அக்கூட்டம்,

"அந்நியனே! எம்குடி வழக்கில் தலையிட நீ யார்? எம் முதுவர் மன்றத்தின் தீர்ப்பை எதிர்க்க உனக்கு எத்துணிவு?" என்று சீற, தலைசாய்த்து இடியென்ன சிரித்த புதியவன்,

"உம் மன்றமா ... ஹாஹாஹா ... எங்கே வந்து என்ன பேசுகிறாய்? எறும்புகள் கூடிப் பேசும் இந்தச் சிற்றூர்ச் சட்டங்கள் எல்லாம், என் காற் தூசிக்குச் சமம்! காதலித்து கரம் பிடித்தவர்களை, உமது குலப் பெருமைக்காகக் குருதி குடிக்கத் துரத்தி வரும் கோழைகளே! இதோ, இந்த நொடி முதல் இந்த ஆணும் பெண்ணும் என் நிழலில் இருக்கிறார்கள்! எவனாவது ஒரு அடி எடுத்து வைத்தால், இந்த மண் உங்கள் உதிரத்தைக் குடிக்கும்! என் வாள்முனையைச் சந்திக்கும் துணிவிருந்தால் நேரே வாருங்கள்!" என்று அவன் சிங்கமென முழங்க, அந்த மாவீரனின் ஆக்ரோஷத்தைக் கண்டு அக்கூட்டம் அச்சத்தில் உறைந்து பின்வாங்கியது.

அவனால் காக்கப்பட்ட அந்த இளம் ஜோடி, கண்ணீருடன் அவன் காலடியில் விழுந்து, தங்கள் உள்ளங்கையைக் கத்தியால் கீறி உதிரம் சொட்டச் சொட்ட ஒரு புனிதமான சபதத்தை எடுத்தனர்:

"ஐயா! குலப் பகையிடமிருந்து எங்களைக் காத்த எங்கள் குலதெய்வமே! இதோ இந்த உதிரத்தின் சாட்சியாகச் சபதம் செய்கிறோம். இன்று முதல் எங்கள் உயிரும் உடலும் உங்களுக்கே அடியீடு! எங்களுக்குப் பிறக்கும் பிள்ளைகளும், அவர்களுக்குப் பின் வரும் தலைமுறைகளும், உமது வம்சத்திற்கு மட்டுமே ஆயுள் வரை விசுவாசமாக இருப்பார்கள்! உமது வம்சத்தைக் காக்க எங்கள் தலைமுறையின் கடைசித் துளிக் குருதி வரை சிந்துவோம்! இது முப்பாட்டன் முருகன் மீது ஆணை!"

அவர்களின் குருதிச் சபதத்தை ஏற்றுக் கொண்ட அந்தப் புதியவன், தன் கணீரென்ற குரலில் அவர்களுக்குக் கட்டளையிட்டான்:

"உதிரத்தின் மேல் ஆணையிட்டவர்களே, எழுந்திருங்கள்! இன்று முதல் இந்த அடர்ந்த காட்டுப் பகுதியின் காவல் உங்களுடையது. இந்த மாபெரும் காட்டை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வாருங்கள். காட்டின் இயற்கை அரண்களைப் பலப்படுத்தி, என் எதிர்காலத் தலைமுறைக்கு எந்நாளும் அரணாக நின்று காக்க வேண்டியது உங்கள் பொறுப்பு!"

பின்பு, தன்னைச் சுற்றி பயந்து நடுங்கி நின்ற அந்தக் கூட்டத்தை நோக்கித் திரும்பி, தன் கையில் இருந்த வாளை வான் நோக்கி உயர்த்தி இடியென எச்சரித்தான்:"கேட்டுக் கொள்ளுங்கள் இன்று முதல் இந்தக் காடும், இந்தக் காதலர்களும் என் ஆளுகைக்கு உட்பட்டவர்கள். என் ஆணைக்குக் கட்டுப்பட்டு நடக்கும் இந்தத் தம்பதியருக்கு ஏதேனும் ஒரு சிறு தீங்கு இழைக்கத் துணிந்தால், உமது முதுவர் மன்றமும் மிஞ்சாது, உங்கள் குலத்தின் பெயரைக் சொல்ல இந்த மண்ணில் ஒரு உயிர் கூட எஞ்சாது! உங்கள் ஒட்டுமொத்தக் குடியையும் வேரோடு அழித்து சாம்பலாக்கிவிடுவேன், ஜாக்கிரதை!" என்று சிம்மமெனக் கர்ச்சித்துவிட்டு, அங்கிருந்து தன் குதிரையில் ஏறி மின்னலெனப் பறந்து சென்றான்.

******************************

மீண்டும் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு:

சற்றுமுன் பிறந்த வாரிசின் வருகை சேரப் பேரரசின் அரண்மனையில் பெரும் புயலை உருவாக்கியிருந்தது. சேர மன்னனின் இளவளுக்கு ஒரு அழகான குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் அரண்மையே விழாக்கோலம் பூண்டிருக்க வேண்டிய அந்த நள்ளிரவு வேளையில், தலைமை அரச குருவின் கணிப்பு ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் உரைய வைத்தது. மன்னனின் முன்னால் நின்றிருந்த அரச குரு நடுங்கும் குரலில்,

"மன்னா! இந்தச் சிசுவின் பிறப்பு மாபெரும் பேரழிவின் அறிகுறி! இக்குழந்தை வளர வளர சேரப் பேரரசில் குழப்பங்களும், உள்நாட்டுக் கலவரங்களும் வெடிக்கும் … தங்கள் உயிருக்கும் ஆபத்து ... சேர மன்னனின் வரலாற்றில் தீரா அவப்பெயர் உண்டாகும் … வம்சமே முற்றிலும் வீழ்ந்து சாம்பலாகும்!" என்று மரண சாசனம் வாசித்தார்.

அதிர்ந்து போன சேர மன்னன் தன் உயிரைக் காக்க இரக்கமின்றி முடிவெடுத்தான்.

"வாரிசைக் கொல்லுங்கள்!" என்று இறுக்கத்துடன் கூற சபையே உறைந்து நின்றது. அதிர்ச்சியடைந்த இளவல், தன் பச்சிளம் குழந்தையைக் காக்க தமையனின் காலடியில் விழுந்து கதறினான்.

"அண்ணா! என் குருதி மீது ஆணையிட்டுச் சொல்கிறேன், என் பிள்ளையோ அல்லது நானோ இந்தச் சேர அரியணையைக் கைப்பற்ற ஒருபோதும் நினைக்க மாட்டோம்! என் பிள்ளையின் உயிருக்காக என் உயிரையே தருகிறேன்!" என்று முழங்கி, மன்னன் தடுத்து நிறுத்துவதற்குள் தன் உடைவாளை எடுத்துத் தன் நெஞ்சில் பாய்ச்சிக் கொண்டு அங்கேயே மரணமடைந்தான்.

தன் தம்பியின் தியாகத்தைக் கண்டு கண்கள் கலங்கிய சேர மன்னன், குழந்தையைக் கொல்லும் எண்ணத்தைக் கைவிட்டான். ஆனால், தீர்க்கதரிசனத்தின் பயத்தால் அவனால் அந்தக் குழந்தையை அரண்மனையில் வைத்திருக்க முடியவில்லை.

"இந்தக் குழந்தை இந்த நொடியே அரண்மனையை விட்டு வெளியேறட்டும்! இதன் நிழல் கூட இனி இந்தச் சேர மண்ணில் விழக்கூடாது!" என்று உறைந்த குரலில் அறிவித்தான். இருப்பினும், பேரரசின் பாதுகாப்பு குறித்து இன்னும் பயம் கொண்ட மன்னன், தன் நம்பிக்கைக்குரிய வீரர்களைத் தனியாக அழைத்து ரகசியமாக,

"அந்தச் சிசுவை யாருக்கும் தெரியாமல் அந்தகார இருளில் ஆற்றங்கரையில் கைவிட்டு வந்துவிடுங்கள்" என்று இரக்கமின்றிக் கட்டளையிட்டான்.

**************

மேலும் சில ஆண்டுகள் கடந்து.

அடர்ந்த காட்டு பகுதியில் அமைந்திருந்த அந்த பாழடைந்த கோட்டையில் ஒரு சாம்ராஜ்யத்தை கவிழ்க்கும் சதி ஆலோசனை நடந்தது.

"இன்றே இந்தச் சிறை மாளிகைக்குத் தீ வையுங்கள்! விபத்தினால் ஏற்பட்ட தீயில் அவன் இறந்துவிட்டதாக உலகம் நம்பட்டும். விடியற்காலைக்குள் அவனுடைய சாம்பல் மட்டுமே மிஞ்ச வேண்டும். அதன் பின் இந்த அரியணை நமதே!" என்று ஆட்சிவேறி பிடித்தவன் தன் வீரர்களுக்கு ரகசியக் கட்டளையிட்டான்.

அந்த கோட்டையை காவல் காத்த வீரர்களுக்கு எடுபிடி வேலை பார்த்துக் கொண்டிருந்த அந்த சிறுவனின் காதுகளில் இது விழ பயத்தில் நடுங்கிக் போனான். எப்பொழுதாவது அந்த சிறையில் அடைபட்டு இருப்பவனுக்கு உணவு கொடுக்கும் வாய்ப்பு கிடைக்கும். அப்பொழுதெல்லாம் அவனிடம் பேச முயற்சி செய்து தோல்வியில் முடிய வாடிப் போன முகத்துடன் திரும்பி செல்வான்.

ஏனோ அங்கிருப்பவனை கண்டு ஒருவிதான பரிதாபம் உண்டு. சிறு வயது என்றாலும் சிறையில் இருப்பவனுக்கு ஏற்பட போகும் ஆபத்தை உணர்ந்தவன், எதை பற்றியும் யோசிக்காமல் சிறை வைக்க பட்டிருந்த அறையின் பின்புற சுவற்றை நோக்கி ஓடினான்.

மரக்கிளைகளை பற்றி மேலே ஏறி அறையின் சாளரம் வழியே உள்ளே எட்டி பார்த்தவனின் கண்களுக்கு, கைகளை தலைக்கு முட்டு கொடுத்து மல்லாக்க படுத்து விட்டத்தை வெறித்து பார்த்திருந்தவனின் மேல் சிறு கல்லை விட்டெறிந்தான். கல் பட்டும் எழுந்திருக்காமல் பார்வையை மட்டும் திருப்பி சாளரத்தை பார்த்தவனுக்கு, தீப்பந்தத்தின் ஒளியில் அந்த எடுபிடி சிறுவன் எட்டி பார்ப்பது தெரிந்தது.

அந்த கோட்டையில் இருப்பவர்களின் மேல் எந்தவித நல்ல அபிப்பிராயமும் இல்லாதவனுக்கு, அந்த சிறுவனையும் பிடிக்காது. மனதில் கனன்று கொண்டிருந்த கோபத்தை கண்களை மூடி அடக்கிக் கொண்டவன் அச்சிறுவனை உதாசீனப்படுத்தினான்.

அவன் தன்னை உதாசீனப்படுத்தியதை அந்த எடுபிடிச் சிறுவன் பொருட்படுத்தவில்லை. சாளரத்தின் வழியே தன் தலையை இன்னும் கொஞ்சம் உள்ளே நுழைத்து,

"இங்கிருந்து உடனே தப்பித்து விடு! சதிகாரர்கள் இந்தக் கோட்டைக்குத் தீ வைக்கப் போகிறார்கள்!" என்று பதற்றத்துடன் அவசர அவசரமாகக் கூறினான்.

சிறையில் இருந்தவன் அதை நம்பவில்லை. ஆனால் அடுத்த சில நிமிடங்களில், கோட்டையின் முன்பக்க வாசல்களில் வைக்கோல் போர்கள் தீப்பற்றி எரியத் தொடங்கின. கரும்புகை அந்தச் சிறை அறைக்குள் வேகமாகப் பரவியது. புகையினால் மூச்சுத் திணறி உள்ளே இருந்தவன் மெல்ல மயக்கமடையத் தொடங்கினான்.

அதைக் கண்டு பதறிய இந்த எடுபிடிச் சிறுவன், தான் மரத்தில் ஏறுவதற்காகக் கொண்டு வந்திருந்த தடிமனான கயிற்றை சாளரத்தின் மரக் கம்பிகளில் கட்டினான். சாளரத்தின் வழியே தன் சிறு உடலை நுழைத்து அறைக்குள் குதித்திருந்தான். பூட்டப்பட்ட இரும்புத் துவாரக் கதவை ஒரு பையனால் உடைக்க முடியாது என்பதை அவன் அறிவான். எனவே, மயக்க நிலைக்குச் சென்று கொண்டிருந்தவனின் இடுப்பில் கயிற்றின் மறுமுனையை இறுக்கிக் கட்டினான்.

மீண்டும் சாளரத்தின் வழியே வெளியே ஏறிய அச்சிறுவன், மரக்கிளையில் அமர்ந்து கொண்டு தன் முழு பலத்தையும் திரட்டி, கயிற்றை மேல்நோக்கி இழுத்தான். உள்ளே இருந்தவனும் புகையின் நடுக்கத்திலும் தன் கைகளால் சுவரைப் பற்றிக் கொண்டு, மேலே ஏறி சாளரத்தின் வழியே வெளியே வர முயன்றான். இருவரின் கூட்டு முயற்சியால், எரியும் அறைக்குள் இருந்து சாளரத்தின் வழியே அவன் வெளியே இழுக்கப்பட்டான்.

ஆனால், அவர்கள் மரத்திலிருந்து கீழே இறங்குவதற்குள், கோட்டையின் எரியும் மரத்தூண் ஒன்று முறிந்து சாளரத்தின் வழியே வெளியே சரிந்தது. தப்பிக்கும் அவசரத்தில், அந்த எரியும் தணல் துண்டு தப்பியோடிய சிறையிலிருந்து தப்பியவனின் காலில் பட்டு பலத்த தீக்காயத்தை ஏற்படுத்தியது. வலியால் துடித்த அவனைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு, அந்த எடுபிடிச் சிறுவன் அடர்ந்த இருட்டுக்குள் தப்பி ஓடினான்.

உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு எரியும் பாழடைந்த கோட்டையிலிருந்து தப்பிய அந்த இருவரும், நள்ளிரவு வானத்தின் கீழ் மூச்சிரைக்க நின்றனர். தான் உதாசீனப்படுத்தியும் தன் உயிரைக் காக்க நெருப்பில் குதித்தவன் என்பதை உணர்ந்த கணத்தில், அவ்விருவருக்கும் இடையே பிரிக்க முடியாத, ஆழமான ஒரு நட்பின் தொடக்கமாக அது அமைந்தது. இரு பெரும் பேரரசுகளின் வரலாற்றையும் மாற்றியமைக்கப் போகும் ஒரு மாபெரும் காவியத்திற்கு இதுவே முகவுரையானது.
 

Author: Kavithillai
Article Title: முகவுரை
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: ஷமீம்

ஷமீம்

Well-known member
Nov 24, 2025
635
498
63
Pondicherry
அருமையான முகவுரை.. வரலாற்று கதையாக இருக்கிறது..ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ..💚💙