மேகம் 13

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Sathya Karunya

Well-known member
May 5, 2026
130
281
63
Sri Lanka 🇱🇰
MTN 13

கடந்த வாரத்தின் அந்த ரணமான சந்திப்பு மேகலாவை நிலை குலையச் செய்திருந்தாலும், காலம் தன் காயங்களுக்கு மருந்திடத் தொடங்கியது. அடுத்த வாரப் பயிற்சிகள் அவளைப் பரபரப்பாக இயங்க வைத்தன. மெல்ல மெல்லத் தன் இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தாள் மேகலா.

அந்த வாரத்தின் ஒரு நாள், மேகலாவையும் சுபாவையும் பார்ப்பதற்காக சரவணனும் முரளியும் பயிற்சி மையத்திற்கு வந்து, வரவேற்பறையில் காத்திருந்தனர்.

"வாருங்கள் மச்சானே... மற்றும் மகனே...!" என்ற கம்பீரமான குரலில் திடுக்கிட்டு இருவரும் திரும்பிப் பார்த்தார்கள்.

அங்கே, ஒரு கையை அருள்பாலிக்கும் விதமாக உயர்த்திப் பிடித்து, முகத்தில் ஒருவிதப் போலிப் பரவசத்துடன் நின்று கொண்டிருந்தான் சிவா.

சரவணனும் முரளியும் இவன் யாரென்று புரியாமல் புருவம் சுருக்கிப் பார்க்க, அவனுக்குப் பின்னால் சிரிப்பை அடக்கிக் கொண்டு மேகலாவும் சுபாவும் வந்து கொண்டிருந்தார்கள்

இவன் மேகலா அடிக்கடிச் சொல்லும் அந்த 'அலப்பறை' சிவாவாகத்தான் இருக்கும் என்று முரளி யூகித்துக் கொண்டான்.

"சிவா தானே நீ...?" முரளி புன்னகையுடன் கேட்டான்.

அவனைப் பற்றி மேகலா சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறான், இன்றுதான் நேரில் பார்க்கிறான்.

"அவனே தான்... சந்தேகமே வேணாம்..." என்று சுபா அலுத்துக் கொண்டே கூறினாள்.

"இருக்கட்டும்... அதென்ன திடீர் எண்டு சம்மந்தமே இல்லாம 'மச்சானே...' 'மகனே...' எண்டு கூப்பிட்டனீ...?" என்று சரவணன் குழப்பத்துடன் கேட்டான்.

சிவா ஒரு தத்துவஞானியைப் போல முகத்தை வைத்துக் கொண்டு,

"ஏனடா... நான் யார்...? சிவசங்கரன்... அதாவது சிவா... நீங்கள் யார்...? முரளியும் சரவணனும்... அதாவது எண்ட மச்சானும் மகனும்... நீர் என்னவென்றால் மாமன் என்ற மரியாதையே இல்லாமல் கதைக்கிறீர்.." என்று முரளியைப் பார்த்துக் கூறிவிட்டு,

" நீ என்னடா எண்டால்... அப்பாவைக் கண்டதும் ஆசிர்வாதம் வாங்காமல் கேள்வி கேட்கிறாயேடா மகனே..." என்று சரவணனைப் பார்த்து அவன் முடிப்பதற்குள், சரவணனிடம் ஒரு பலமான கொட்டு வாங்கினான் சிவா.

"சரி சரி... வாங்க போகலாம்..." என்று சிவா உற்சாகமாகக் கூறினான்.

"எங்க வாரனீ...? நாங்க போறம் நீ இஞ்சயே இரு..." என்று மேகலா அவனை வம்புக்கு இழுத்தாள்.

சிவா சளைக்காமல் தன் இல்லாத சட்டை காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டு,

"உங்க ரெண்டு பேரையும் விட்டுட்டுப் போவாங்களே தவிர என்னை விட்டுட்டு போக மாட்டாங்க... ஏன் எண்டு சொன்னா, நான் இல்லாம உங்களுக்குப் பொழுது போகாது.." என்று ‘பில்டப்’ கொடுக்க, சரவணனும் முரளியும் சிரித்துக்கொண்டே அவனைத் தோளோடு அணைத்துக்கொண்டனர்.

ஐவரும் வெளியே சென்று கலகலப்பாகப் பேசிச் சிரித்தபடி மதிய உணவை முடித்துவிட்டு, விடுதியில் இருக்கும் மற்ற நண்பிகளுக்காகவும் பார்சல் வாங்கிக்கொண்டு விடுதிக்குத் திரும்பினர்.

அங்கே நின்றிருந்த மற்ற மூவரிடமும், முரளியையும் சரவணனையும் அறிமுகம் செய்துவைத்தாள் மேகலா.

முரளியைப் பெருமையோடு காட்டி, "இவர்தான் என்ர அண்ணா..." என்றவள், அடுத்து சரவணனைச் சுட்டிக்காட்டினாள்.

"இவர் சரவணன் அண்ணா... அண்ணாவின்ர பிரென்ட்... இவரும் அண்ணாவைப் போல டொக்டர் தான்..." என்று அறிமுகப்படுத்தியவள், சட்டென்று கண்களில் ஒரு குறும்பு மின்ன சுபாவைத் திரும்பிப் பார்த்தாள்.

"பிறகு ஒரு முக்கியமான விஷயம்... இந்தச் சரவணன் அண்ணா வேற ஆரும் இல்ல... எங்கட சுபாவின்ர அவர்..." என்று மேகலா குண்டைத் தூக்கிப் போட, சுபாவின் முகம் ஒரு நொடியில் தக்காளிப் பழமாய் சிவந்து போனது.

"அடி கள்ளி... சொல்லவே இல்ல... எங்கட்ட இவ்வளவு காலமும் மறைச்சிட்ட என...? அப்ப அண்டைக்கு நித்திரை மயக்கத்தில இவங்கட பெயரைச் சொல்லித் தான் வாய் உளறினியா..." என்று பாத்திமா இடைபுகுந்து கொளுத்திப் போட்டாள்.

"எத்த கதாவ...(உண்மை கதை) கனவுல இவரோட டூயட் பாடியிருப்பா போல..." என்று நிம்மியும் சேர்ந்து சீண்ட, விடுதி அறையே சிரிப்பொலியில் நிறைந்தது.

சுபா வெட்கத்தில் நெளிந்தபடி மேகலாவை முறைத்துக் கொண்டிருந்தாள். சிறிது நேரம் சகஜமாகப் பேசிக்கொண்டிருந்த பிறகு, முரளியும் சரவணனும் விடைபெறுவதற்காக எழுந்தனர்.

"சரி.. நாங்க வெளிக்கிடுறம்... சிவா... இவேயளை நீ தான் பத்திரமாப் பார்த்துக் கொள்ளோணும்..." என்று முரளி ஒரு அண்ணனுக்கே உரிய பொறுப்புடன் கூறினான்.

சிவா தன் பாணியில் கையை உயர்த்தி, "கவலையே படாதீங்க அண்ணா... 'சிவாவை நம்பினார் கைவிடப்படார்' என்பது ஐதீகம். நான் இருக்கும் போது இவங்களுக்கு என்ன குறை...?" என்று உறுதி அளித்தான்.

கிளம்பும்போது சரவணன் சுபாவுக்கு மட்டும் ஒரு பிரத்தியேகமான தலையசைப்பையும், அர்த்தமுள்ள பார்வையையும் பரிசாகத் தந்துவிட்டுத் திரும்பினான்.

அதைச் சட்டென்று கவனித்துவிட்ட நண்பிகள் அனைவரும் ஏககாலத்தில் "ஓஹோ...!" என்று ராகம் பாட, சரவணனும் முரளியும் சிரித்தபடியே விடைபெற்றுச் சென்றனர்.

அன்றிரவு, விடுதி அறையில் வழக்கம் போலப் பெண்கள் அரட்டை ஆரம்பமானது. அந்த அமைதியான பொழுதில் கேலியும் கிண்டலும் களைகட்டியது.

“மேகி… உன்னட்ட ஒண்டு கேட்கணும்… உண்மையச் சொல்லோணும்…” என்று காஞ்சனா பீடிகை போட்டாள்.

எப்பொழுதுமே தன்னுடன் ஒரு சிறு ஒதுக்கத்தோடும், ஒருவிதமான போட்டி மனப்பான்மையோடும் பழகும் காஞ்சனா, இன்று தானாக முன்வந்து இவ்வளவு உரிமையோடு கதைக்கத் தொடங்கியதும் மேகலாவுக்கு ஆச்சரியமாக இருந்தது.

"கேளு காஞ்சனா... என்ன விஷயம்?" என்று மேகலா வினவினாள்.

"இல்ல... அது... நீ தரிந்துவை லவ் பண்ணுறியா..???" என்று எந்தவொரு முன்னறிவிப்புமின்றி நேரடியாகக் கேட்டாள் காஞ்சனா.

அவளது கண்கள் மேகலாவின் முகத்தில் ஏதோ ஒரு உண்மையைத் தேடி நிலைகுத்தி நின்றன. அந்தக் கேள்வியை மேகலா சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவளது இதயம் ஒரு கணம் தாளம் தப்பியது. தரிந்துவின் உருவம் மனக்கண்ணில் வந்து போக, அவளது உதடுகள் உண்மையைச் சொல்லத் துடித்தன.

சற்றுத் தயங்கி, தன் உணர்ச்சிகளை மறைத்துக் கொண்டு, "இல்லை..." என்று மிக மெதுவாகத் தலையசைத்தாள் மேகலா.

அவளது பதிலைச் செவிமடுத்த சுபா கடும் அதிர்ச்சியடைந்தாள். மேகலாவின் மனதிற்குள் தரிந்து எத்தகைய இடத்தைப் பிடித்திருக்கிறான் என்பது சுபாவுக்கு மட்டுமே தெரியும். அப்படிப்பட்டவள், இன்று காஞ்சனாவிடம் இப்படி ஒரு பொய்யைச் சொன்னது சுபாவால் நம்ப முடியாத ஒன்றாக இருந்தது.

சுபாவுக்குச் சுறுசுறுவெனக் கோபம் தலைக்கேறியது. மேகலாவின் மனது தெரிந்தவள் என்பதால் அவளால் இதை ஜீரணிக்கவே முடியவில்லை.

"ஏன்... அவள் இல்லையெண்டா... நீ லவ் பண்ண போறீயோ..." என்று சூடாகக் கேட்டாள்.

காஞ்சனா சற்றும் குறையாமல், "வை நொட்... ஏன் நான் அவனை லவ் பண்ணக் கூடாதா..." என்று சவாலாகப் புருவம் உயர்த்தினாள்.

அங்கே ஒரு நக்கலான சிரிப்பை உதிர்த்த பாத்திமா, "அதுக்கு முதல்ல அவன் உன்ன லவ் பண்ணோனுமே... அவன் பார்வையெல்லாம் எங்கட மேகி நூடுல்ஸ் மேல தானே இருக்கு..." என்று இடக்காகக் கேட்டாள்.

காஞ்சனாவின் முகம் ஒரு கணம் இறுகியது, பின் ஒரு வறட்டுப் புன்னகையுடன், "அதை எப்படி எண்ட பக்கம் திருப்பவேணும் எண்டு எனக்கு தெரியும்... இந்த ஒரு கிழம பயிற்சியில நான் அவனை வளைச்சுக் காட்டுறன்..." என்று இல்லாத சட்டைக் காலரைத் தூக்கிவிட்டுப் பெருமையாகச் சொன்னாள்.

அதைக் கேட்ட மேகலாவுக்குள் ஏதோ ஒன்று சில்லு சில்லாய்ச் சிதறி உடைந்தது போலிருந்தது.

'அவன் யாருக்கும் சொந்தமாகலாம், ஆனால் தனக்குச் சொந்தமாக முடியாது' என்ற கசப்பான உண்மை அவளைச் சுட்டது. அதே சமயம், வேறொருத்தி அவனை உரிமை கொண்டாடுவதை நினைக்கும்போது இதயம் அனலில் இட்ட புழுவாய் துடித்தது

காஞ்சனாவின் இந்த அநாகரிகமான பேச்சை மற்றவர்கள் ரசிக்கவில்லை.

அந்த இறுக்கமான சூழ்நிலையை மாற்ற நினைத்த பாத்திமா பேச்சைத் திசை திருப்பினாள்.

"மேகி... சும்மா சொல்லக் கூடாது... உண்ட அண்ணன் நல்ல வடிவு... அதுவும் அந்த புருவத்துக்கிட்ட இருக்கிற அந்த மார்க்... நான் லைட்டா சைட் அடிச்சன்..." என்று கூறி குறும்பாக கண் சிமிட்டினாள் அவள்.

"அது மட்டுமா...? அந்த எத தத்... (தெற்றுப் பல்) பார்க்கவே ஹேன்ஸ்சமா இருக்கிறார்..." என்று நிம்மியும் சேர்ந்து கொண்டு ஒற்றைக் கண்ணை அடித்துச் சிரித்தாள்.

சுபா உடனே குறுக்கிட்டு,
"அடப்பாவிங்களா... அண்ணன் டி அவர்... பிரெண்டிட அண்ணன் எங்களுக்கும் அண்ணன் தான்... கொஞ்சமாவது மரியாதையாப் பேசுங்கோடி..." என்று போலி ஆத்திரத்துடன் கூறினாள்.

"ஆஹாஹா... இது நல்ல கதையா ஈக்கே... அப்ப அண்ணனோட பிரெண்டும் எங்களுக்கு அண்ணனா தானே இருக்கோணும்... அம்மணிக்கு அது அண்ணனா தெரியாம மன்னனா இல்ல தெரியுறார்..." என்று சுபாவை சீண்டினாள் பாத்திமா.

பாத்திமாவின் இந்த நையாண்டிக்குத் தப்பிக்க வழியில்லாமல் சுபா வெட்கத்தில் விழித்தாள்.

"மேகி... அது என்ன உண்ட அண்ணனின்ட புருவத்துக்கிட்ட வெட்டுக் காயம்... வீரத் தழும்போ..." என்று நிம்மி கேட்டாள்.

அதுவரை தோழிகளின் கிண்டலில் மெல்லிய புன்னகையுடன் இருந்த மேகலாவின் முகம், அந்தத் தழும்பைப் பற்றிய பேச்சில் சட்டென்று வாடியது. விழிகளில் இருந்த வெளிச்சம் மறைந்து, ஒருவிதக் கவலை அங்கே குடியேறியது. அந்தத் தழும்பு ஒரு சாதாரணக் காயத்தின் அடையாளம் அல்ல. அது அவளது குடும்பம் சுமந்து நிற்கும் ஒரு கசப்பான வரலாற்றின் சாட்சி. அதன் பின்னாலிருக்கும் வலியும் ரத்தச் சரித்திரமும் தெரிந்த சுபாவுக்குக் கூட கண்கள் கலங்கின.

"அது... அது சும்மா விளையாட்டுல வந்த தழும்பு இல்ல நிம்மி..." என்று மேகலா மெதுவான குரலில் இழுக்க, அங்கிருந்தவர்கள் ஆர்வமுடனும் மெல்லிய பதற்றத்துடனும் அவளையே பார்த்தனர்.

"அது... அண்ணா ஏலெவெல் படிச்சுக்கொண்டு இருக்கேக்க... சிங்கள ராணுவத்தினர் அண்ணாவ சந்தேகத்தின் பேரில பிடிச்சுக்கொண்டு போனவே... இராணுவ முகாமில வெச்சு அண்ணாவ சொல்லொணாச் சித்திரவதை செய்தாங்க... ஒரு மாசமாகியும் விடவே இல்ல... வீட்டுல அம்மாவும் அப்பாவும் செத்துப் பிழைச்சவே… கடைசியில அண்ணாவில எந்த பிழையும் இல்ல எண்டு தெரிஞ்ச பிறகு தான் விட்டவே...” மேகலாவின் குரல் தழுதழுத்தது. பெருமூச்செறிந்துவிட்டுத் தொடர்ந்தாள்.

"அப்ப அண்ணாவ அவே இரும்புச் சங்கிலியாலயும் கம்பியாலயும் அடிக்கேக்க, அந்த இரும்பு முனை பட்டுப் புருவத்துக்கிட்ட சதையைப் பிச்சுக் கொண்டு வந்த காயம் தான் அது... ஆஸ்பத்திரியில காட்டி தையல் போட்டாலும், அந்தத் தழும்பு ஆறவே இல்ல. அண்ணாவின்ர முகத்தைப் பார்க்கேக்க எல்லாம், அந்த ஒரு மாசமும் அவர் பட்ட நரக வேதனை தான் எங்க எல்லாருக்கும் ஞாபகம் வரும்..."
என்று மேகலா கண்ணீர் மல்கக் கூறினாள்.

அதுவரை கிண்டலாகவும் கேலியாகவும் பேசிக்கொண்டிருந்த அனைவருக்கும் கண்கள் கலங்கின. இனப் போரின் வடுக்கள் ஒரு குடும்பத்தை எந்தளவுக்குச் சிதைத்திருக்கிறது என்பதை உணர்ந்தபோது அவர்களுக்குப் பேச்சு வரவில்லை.

நிம்மி கலங்கிய கண்களுடன் ஓடிச் சென்று மேகலாவை இறுகக் கட்டியணைத்துக் கொண்டாள். "சமாவென்ன(மன்னித்துவிடு) மேகி... ஏதோ விளையாட்டுக்குக் கேட்டுட்டன்... உண்ட மனசுல இவ்வளவு பெரிய வலி இருக்கும் எண்டு நான் நினைக்கவே இல்ல… இதுக்கு எங்கட இனமும் ஒரு காரணம் எண்டு நினைக்கும்போது, கவலையா இருக்கு…" என்று நிம்மி வருத்தம் தெரிவித்தாள்.

"சொறியடி மேகி... நான் சும்மா பன்னுக்கு தான் கேட்டன்... அதுக்கு பின்னுக்கு இப்படி ஒண்டு ஈக்கும் எண்டு நான் நினைச்சுக் கூட பாக்கல..." என்று கூறினாள் பாத்திமா.

பழைய நினைவுகளில் அழுது கரைந்த மேகலாவை தேற்றி, அவர்கள் படுக்கைக்குச் செல்ல நல்லிரவாகி இருந்தது.

இன்று அண்ணனைப் பற்றி கூறிய விடயங்கள், பிரிதொரு நாளில் தனக்கெதிராய் திரும்பும் என்று கனவில் கூட நினைத்திருக்கமாட்டாள் மேகலா.




 

Author: Sathya Karunya
Article Title: மேகம் 13
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,290
384
83
Chennai
அடி சண்டாளி..,.இப்படியே திரியுதிகள் சிலதுகள் 🤦🤦🤦🤦
அழகா இருக்கற எல்லாம் தனக்கே வேணும்னு....
அது போல தான் இருக்கு இந்த கஞ்சி நிலையும்.....
சும்மா சைட்லா ஆரமிச்சது இப்ப அவனை வலைக்கரத்தில் வந்து நின்னு இருக்கு.....
இது எங்க போய் முடியுமோ🤔🤔🤔🤔
ஆன தரு - மேகி காதலுக்கு ஆப்பு அடிச்சிட்டு தான் முடியும் போலவே.....

முரளி விஷயம் பேசும் போது அந்த கஞ்சியும் அங்க தானே இருந்தது????

அப்ப அவ வீட்டில் பத்தா வெசிறிச்சா பரட்ட 😳😳😳😳😳
 
  • Like
Reactions: Sathya Karunya

Sathya Karunya

Well-known member
May 5, 2026
130
281
63
Sri Lanka 🇱🇰
அடி சண்டாளி..,.இப்படியே திரியுதிகள் சிலதுகள் 🤦🤦🤦🤦
அழகா இருக்கற எல்லாம் தனக்கே வேணும்னு....
அது போல தான் இருக்கு இந்த கஞ்சி நிலையும்.....
சும்மா சைட்லா ஆரமிச்சது இப்ப அவனை வலைக்கரத்தில் வந்து நின்னு இருக்கு.....
இது எங்க போய் முடியுமோ🤔🤔🤔🤔
ஆன தரு - மேகி காதலுக்கு ஆப்பு அடிச்சிட்டு தான் முடியும் போலவே.....

முரளி விஷயம் பேசும் போது அந்த கஞ்சியும் அங்க தானே இருந்தது????

அப்ப அவ வீட்டில் பத்தா வெசிறிச்சா பரட்ட 😳😳😳😳😳
பெரிய ஆப்பா சொருகிட்டா...